Saturday 31 October 2009

மனித உருவில் மிருகங்களாய் நாம்

பம்பலப்பிட்டிக் கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவண்ணன் சிவகுமார் என்கிற இளைஞன் பலவந்தமாகக் கடலுக்குள் தள்ளப்பட்டு, கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சரியான மொழியில் சொல்வதென்றால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியும் சம்பந்தப்பட்டிருக்கிறார். (இது முழுமையாக காவல்துறை மட்டுமே செய்த சம்பவம் என்பதாக மிக வேகமாகத் திரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).நடந்தது என்ன?
நடந்தது என்ன என்பதைப் பற்றி வருகின்ற செய்திகள் வழமைபோலவே முன்னுக்குப் பின் முரணாக வருகின்றன. மேற்படி இளைஞர் பம்பலப்பிட்டிப் புகையிரத நிலையத்துக்கு அண்மித்த கடற்கரைப் பகுதியில், கடற்கரை வீதியால் போகின்ற வருகின்ற வாகனங்களின் மீது கற்களை வீசி எறிந்திருக்கிறார். அப்படி அவர் எறிந்த கல் பட்ட வாகனங்களில் ஒன்று இராணுவ/காவல்துறை வாகனம் எனவும், அதிலிருந்து இறங்கிய அதிகாரிகளைக் கண்டதும் அவர் புகையிரதப் பாதையைத் தாண்டி கடலை நோக்கி ஓடினார் என்றும் சொல்லப்படுகிறது. ஓடியவர் அப்போது அங்கே வந்த புகையிரதத்தையும் பதம் பார்க்க, புகையிரதம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து இறங்கிய அல்லது அந்த இடத்தில் நின்ற இரு சாதாரணக் குடிமகன்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் இந்த இளைஞனைப் பிடிக்க முயல, இளைஞன் கடலுக்குள் செல்ல, ஆத்திரமுற்ற மற்றவர்கள் இளைஞனை மேலும் மேலும் கடலுக்குள் பலவந்தமாகத் தள்ள, கடல் அலைகள் இளைஞனைக் காவுகொண்டுவிட்டன. இப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுவிட்டார். ‘இலங்கைக் காவல்துறையின் அராஜகம்' என்பதாக செய்தி ஊடகங்கள் அலறவும் ஆரம்பித்தாயிற்று.

என்ன பிரச்சினை?
இங்கு நடந்த சம்பவம், சட்டரீதியாகக் கொலை. அதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதற்கு சிங்கள-தமிழ் இனத் துவேசம் 'மட்டும்' காரணம் என்று மேம்போக்காக வைக்கிற குற்றச்சாட்டுகளை மனித இனத்துக்கே செய்யப்படும் துரோகமாக நான் முன்வைப்பேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரோசா வசந்த் எங்கள் எல்லார் மீதும் வைத்த ‘கொலைகாரக் கும்பல்' குற்றச்சாட்டின் இன்னொரு வடிவம்தான் இது. ‘மாட்டினான் ஒருத்தன்' என்பதாகத் தங்களை பொதுநலன் காப்பவர்களாகக் காட்டிக்கொள்ள ஒரு சிலர் முயன்றதன் விளைவு, மனநிலை பிறழ்ந்த ஒரு இளைஞனின் (அப்படிக் குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது) மரணம். இந்தச் சம்பவத்தில் மனநிலை பிறழ்ந்த ஒரு ஜீவன்தான் இருந்ததா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடித்துக் கொன்ற மூவரையும் (சிலர் ஐவரென்கிறார்கள்) மனநிலை பிறழ்ந்தவர்களாக என்னால் பார்க்கமுடிகிறது. அந்த இடத்தில் 6 காவல்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். மேலும் நான்குபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில திறமைசாலிகள் இந்தச் சம்பவத்தை அற்புதமாக வீடியோ பிடித்திருக்கிறார்கள். சாட்சி சொல்லாமல் இன்னும் எத்தனையோ பேர் ஒளித்துமிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மனநோயாளிகள். மன நிலை பிறழ்ந்த ஒருவனை அடையாளம் காணத்தெரியாமல், அவனுக்குரிய தகுந்த வாழ்வியல் நிலமைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகள் முன்னால், அநியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகக் கண்களின் பார்வையில் அந்த இளைஞன் சாகடிக்கப்பட்டதனால், நீங்கள், நான் உட்பட எல்லோரும் எங்களை மனநோயாளிகள் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறோம்.

இந்தப் பாதகத்தை தமிழ்-சிங்களத் துவேசமாக மட்டும் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ‘மாட்டினாண்டா ஒரு தமிழ் நாய்' என்கிற மாதிரியான ஒரு சிந்தனை ஓட்டம் ஓடியிருக்கலாம். ஒரு சிங்களன் எம்மவர் பகுதியில் இதேபோல் மாட்டியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஆனால் அப்படியான ஒரு சித்தரிப்புமூலம் இதன் அடியாழத்தில் ஒளிந்திருக்கக்கூடிய ஒரு கேவலமான மனித மன இயல்பை நாங்கள் மழுப்ப முயல்கிறோம். இதை வைத்து அரசியல் பண்ணுபவர்கள் பண்ணிவிட்டுப்போங்கள்... எனக்கு ஒன்றுமில்லை. அதற்குமுன் நவம்பர் 16, 2005 என்ற நாளை நான் திரும்ப நினைவூட்டவேண்டி இருக்கிறது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில், யாழ் மாவட்டத்தில் நடந்த சில திருட்டுக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சமூக விரோதி என 'காலாச்சாரம் பேணும் இளைஞர் குழுவால்' சந்தேகத்தின் பேரில் முத்திரை குத்தப்பட்ட 20 வயதான தினேஷ் என்ற இளைஞனை, சுற்ற நின்று கதறிய அவனது தாய்க்கும் சகோதரிக்கும் முன்னால் மூன்று மணித்தியாலங்களாக விக்கெட் கொட்டன்களாலும், பொல்லுகளாலும் அடித்துக் கொன்ற மிலேச்சத் தனத்துக்கு இது இணையே அல்ல. இதுபற்றி ஈழநாதன் வலு காட்டமாக ஒரு பதிவு போட்டார் என்றும் நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க காட்டம் குறைத்து மீள்பதிவிட்டார் என்றும் கேள்விப்பட்டேன். மற்றும்படி இந்தச் சம்பவம் பற்றி யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இன்றைக்கு செத்தவன் தமிழன், கொன்றவன் சிங்களன் என்றதும் உணர்வு பொத்துக்கொண்டு வந்துவிட்டது இவர்களுக்கெல்லாம்.

இப்படியான மிலேச்சத்தனங்கள் அரசியல் அல்ல நண்பர்களே. அதையும் தாண்டி மனிதகுலத்தை வேரோடறுக்கக்கூடிய கேவலமான மனச்சிதைவுகளின் வெளிப்பாடு. என்னைக் கேட்டல், சிவகுமாரைக் கொன்ற சிங்களனும், தினேஷைக் கொன்ற தமிழனும், பெஸ்ட் பேக்கரியில் வைத்து தாண்டவம் ஆடிய காவிகளும், முஸ்லிம் நாடொன்றில் கடையில் பாண் திருடிய ஐந்து வயதுச் சிறுவனின் கைகளை வாகனத்தால் நசுக்கி முடமாக்கிய மதபிதாவும் ஒரே ஜாதி என்றே சொல்வேன். அத்தனை பேரும் மனம் பிறழ்ந்தவர்கள், செத்துப்போன சிவகுமாரைப் போலவே.

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. நான் இப்போது இருக்கிற இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 9-1-1 என்று உங்கள் கையில் இருக்கும் தொலைபேசியில் அழுத்தி சத்தமில்லாமல் விஷயம் சொன்னால் நீங்கள் தொலைபேசி முடிக்கமுன் வந்து நிற்கும் காவல்துறை உள்ள இந்த நாட்டிலேயே, பலர் அடித்தும், வாகனங்களால் ஏற்றியும், சுட்டும், குத்தியும் கொல்லப்படுகிறார்கள், வெட்ட வெளிகளில். மிக இலகுவாக இந்தக் காட்சிகளை செல்ஃபோன் கமராவில் படம் பிடிக்கும் ஒருவருக்குக்கூட 9-1-1 ஐ அழுத்தித் தகவல் சொல்லும் நோக்கம் வருவதில்லை. இங்கேயே இப்படி என்றால், காவல்துறையே சேர்ந்து சாகடிக்கும் ஊரில் இருப்பவர்களின் மனநிலையைச் சொல்லவா வேண்டும்?

எங்கள் ஊரில் திருமணத்துக்கு வெளியேயான தொடர்பொன்றினைச் சாக்காக வைத்து ‘இருட்டடி' கொடுக்கப்பட்ட ஒருவர் இறந்து போனதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை சிலர் நியாயப்படுத்த முயன்றதும் என் மனதில் இப்படிப்பட்ட ‘குழுமப் புத்தி' அல்லது ‘பொதுப் புத்தி' பற்றிய வெறுப்பை விதைத்திருக்கிறது. தண்டனை கொடுக்க நாங்கள் யார் என்கிற ஒரு எண்ணம் வந்தாலே போதும். இப்படியான மிலேச்சத்தனங்கள் நடக்காது. அடுத்தவனை நேசிக்கப்பழகு, உலகம் பூங்காவனமாகும். ஆனால் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இன்றைய சமூகங்கள் எல்லாமே ‘காசுக்கு உழைக்கும்' இயந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன.

சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள் சிங்களக் காவல்துறையின் அராஜகம் என்று. இந்த சிவகுமார் விஷயத்தில் நேரடியான குற்றவாளிகளை விட மறைமுகமான குற்றவாளிகள்தான் அதிகம். அந்த மன நலம் பிறழ்ந்த இளைஞனை இப்படிக் கண்காணிப்பு இல்லாமல் அலையவிட்ட அவன் குடும்பத்தில் இருந்து குற்றம்சாட்டிக்கொண்டு போகலாம். ஆனாலும் இதெல்லாம் அந்த இளைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தரப்போவதில்லை. தினேஷுக்கும் அவன் குடும்பத்துக்கும் நிகழ்ந்த அநீதியும் அங்ஙணமே. இன்னும் கொஞ்ச நாளில் நீங்களோ, நானோகூட இப்படிக் கொல்லப்படலாம். அந்த மரணத்தில் ஏதாவது அரசியல் இருந்தால் கண்டுகொள்ளப்படுவோம். இல்லாவிட்டால் உலகில் நாள்தோறும் நிகழும் மரணக்கணக்கில் ஒன்றாக எழுதிவைக்கப்படுவோம்.

இதை சிங்கள-தமிழ் துவேசப் பிரச்சினையாக நோக்கும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதை வெகுநிச்சயம் வரவேற்கிறேன். ஆனால், பூதாகரமான பிரச்சினை ஒன்றை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கும் மாபெரும் துரோகம் ஒன்றை அறிந்தே செய்கிறீர்கள் தோழர்காள். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

Friday 30 October 2009

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 25-ஒக்ரோபர் 31 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்களுக்கு உறுதிமொழிகளை விடுத்து செயல்வடிவிலான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மனித உரிமை மற்றும் ஊடக அடக்குமுறை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தே பதிலளிக்க வேண்டுமென்றும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றிய தீர்மானங்கள் இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் போக்கில் அமைந்திருப்பதாயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பேர்ட் தெரிவித்திருக்கிறார். அம்மணிக்கு இந்த அறிக்கையில் இருக்கக்கூடிய முரண்நகை தெரியவில்லைப் போலும். இப்படியாக அறிக்கைகளை மட்டும்விடாமல் நீங்களும் செயலில் இறங்கியிருந்தால் முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்கு எப்போதோ தீர்வுகாணப்பட்டிருக்கும். (காகம் அண்டங்காகத்தைப் பார்த்து சீ... நீ அட்டைக் கறுப்பு என்றதாம்)

இதேவேளை இலங்கை அழிவுப்பாதையில் போய்க்கொண்டிருப்பதாகவும் அதைத் தான் மற்றியமைக்கப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய அரசியல்க் கனவை அம்பலமாக்கியிருக்கிறார் முன்னாள் முப்படைகளின் தளபதி சரத் பொன்சேக. ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக இவரைத் தேர்தல் களத்தில் முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் பலத்த முஸ்தீபுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக வரும் செய்திகளை இவரது அறிக்கை இன்னும் பலமாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இவர் ரகசியமாகச் சந்தித்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. என்ன, இந்தத் துணிகரமான அறிக்கையை பொன்சேக எங்கு வைத்து வெளியிட்டிருக்கிறார் தெரியுமா? அமெரிக்கா வோஷிங்டன் நகரில் வைத்து. (என்னே ஜனநாயகத்தின் மகிமை!)

அரசியல்-புகுந்தகம்

ரொரொன்ரோ போக்குவரத்துச் சபை (Toronto Transit Commission) ஒரு மாதத்துக்கு முன் ஏகமனதாக அங்கீகரித்த $548 மில்லியன் மதிப்புள்ள, வருகின்ற ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டிருந்த பல வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்படப்போகின்றன. ரொரொன்ரோ மாநகரசபை கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வேலைத்திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. நகரின் எல்லா துறைசார் அலுவலகங்கள் மற்றும் துணை நிறுவனங்களினதும் செய்பணிச் செலவுகளை 5% ஆல் குறைக்கும்படி நகரசபை அறிவுறுத்தியிருப்பதன் ஒரு அங்கமாகவே போக்குவரத்துச் சபை சம்பந்தமான இந்த நடவடிக்கையையும் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. போக்குவரத்துச் சபையின் இந்தத் திட்டப்பணிகளில் சில நிலையங்களை மாற்றியமைத்தல், வங்கி, கடன் அட்டைகளைப் பிரயோகித்து பயணச்சிட்டை பெறும் வசதிகளை உருவாக்கல், கழிவறைகளைச் சீர்திருத்தல், உயர்த்திகளை நிறுவுதல், மேலதிக விரைவுப் போக்குவரத்துப் பாதைகளை உருவாக்கல் போன்ற சில விடயங்களும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்-உலகம்
பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பொன்றில் 90க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் மேற்படி குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. பீபால் மண்டி என்ற இடத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் சாலையில் இருபுறமும் இருந்த கடைகள் நொறுங்கிவிழ, அவற்றிடையே அப்பாவி மக்களின் சடலங்களும் விழுந்தன. தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமெரிக்க ஆதரவுடன் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிரான தலிபான்களின் பதிலடியாகக் கருதக்கூடிய இதுமாதிரியான தாக்குதல்களில் 150க்கு மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். 'பிள்ளையைக் கிள்ளித் தொட்டிலை ஆட்டும்' அமெரிக்கா ஹிலாரி மூலமாக கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. ‘முஸ்லிம்களை' அழிக்க அவர்களும், 'காஃபிர்களை' அழிக்க இவர்களும் என்று இரு பகுதியும் ஆடும் ஆட்டம்... ஒரேயடியாக உலகம் அழிந்துபோய்விட்டால் பரவாயில்லை.இப்படியாக உள்நாட்டில் புற்றுநோய் இருக்க ‘கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் வாங்கினார்களா இல்லையா?' என்று மும்முரமாக ஆராய்ந்து வருகிறார்கள் பாகிஸ்தான் அரசியல்வாதிகள். அதுவும் காம்ரன் அக்மால் விளையாடிய ஒரு shot தவறான உத்தியுடன் ஆடப்பட்டது என்று சொல்லி அதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு சிந்திக்கும் தன்மை என்று ஏதாவது இருக்கிறதா?

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்

இந்தவாரம் பொருளாதார ரீதியில் ஒரு முக்கியமான வாரம். Wall Street Crash எனப்படும் வட அமெரிக்காவின் பாரிய பொருளாதாரச் சரிவு மற்றும் அதன் பின்னான பொருளாதார நெருக்கடி மற்றும் பொது மக்களின் மனச்சோர்வு நடந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வாரம் இது. அதுவும் ஒக்ரோபர்-24 (கறுத்த வியாழன்), ஒக்ரோபர்-25 (கறுத்த வெள்ளி), ஒக்ரோபர்-28 (கறுத்த திங்கள்), ஒக்ரோபர்-29 (கறுத்த செவ்வாய்) ஆகிய நாட்கள் வட அமெரிக்கப் பொருளாதாரத்தில் மறக்கமுடியாத நாட்கள். 1920 களில் கடனுக்கு பங்குகள் வாங்கிக் குவித்து, பங்குவர்த்தகம் கட்டுக்கடங்காமல் வளர்ந்து, பின்னர் மொத்தமாகச் சரிந்து பங்குகளை விற்கவும், அவற்றை வாங்கவெனப் பட்ட கடனை அடைக்கவும் முடியாமல் பல மக்கள் பெருத்த மனச்சோர்வுக்கு உள்ளாகிய காலகட்டம் இதுதான் (பங்குகளின் போக்கு பற்றி டோ-ஜோன்ஸின் வரைபடத்தைக் கீழே). இந்தக் காலகட்டத்தைக் கடந்துவந்த மக்கள் மற்றும் Baby Boomers எனப்படும் அவர்களின் பிள்ளைகள் இதன் பின்னர் சேமிப்புப் பழக்கம் மிக உள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்பதும், அவர்களிடம் பணம் ‘காசாக' புரண்டது, புரள்கிறது என்பதும் வரலாறு. (தனியே ஒரு பதிவே எழுதலாம்).

விளையாட்டு
இந்திய-அவுஸ்திரேலியத் தொடர் ஆரம்பமாகி விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. மூன்றாவது போட்டி 31/10/2009 டெல்லியில் நடக்கிறது. முதல் போட்டியில் ஹர்பஜன் மற்றும் பிரவீன்குமாரின் அதிரடியால் போராடி 4 ஓட்டங்களால் தோற்ற இந்தியா இரண்டாவதுபோட்டியில் 99 ஓட்டங்களால் பாரிய வெற்றி பெற்றது. அதுவும் தோனியின் அதிரடியில் 354 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியர்களைத் துவைத்து எடுத்திருக்கிறார்கள். தோனி திரும்பவும் ஒரு நாள் போட்டிகளில் தான் ஒரு ‘கில்லி' என்பதை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஐந்து போட்டிகள் இருக்கிறது. இதே ஆட்டம் தோனி, கம்பீர் ரெய்னா போன்றவர்கள் ஆட, தடுமாறும் சச்சினும் அடித்தாட ஆரம்பித்தால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம். ஆனால், பொண்டிங் ஏதாவது பதிலடி வைத்திருப்பார் என்பதுமட்டும் நிச்சயம்.

அதேவேளை முன்னைநாள் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட் காலமாகியிருக்கிறார். Thankless Job என்று வர்ணிக்கப்படும் நடுவர்கள் வேலையை செம்மையாகவும் கலகலப்பாகவும் செய்த ஷெப்பேர்ட் பற்றிய எனது பதிவு இங்கே.

சினிமா-பொழுதுபோக்கு

சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே கேட்கும் வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஆதவன், வேட்டைக்காரன் போன்ற படப்பாடல்கள் பெருத்த ஆர்வாரத்துடன் வெளியிடப்பட்டதால் உடனுக்குடன் தரவிறக்கிக் கேட்டேன். மற்றபடி பேராண்மை பாடல்கள நேற்றுத்தான் கேட்டேன். ரேனிகுண்டாவிலும் ஒரு பாடல் பிடித்திருந்தது. சமீபத்தில் வந்த பாடல்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் கவர்ந்தாலும், மனதில் சட்டென்று ஒட்டவில்லை. (பழசி ராஜா இதில் சேர்த்தியில்லை). முக்கியமாக ‘கண்டேன் காதலை' படத்தில் திப்பு, பென்னி தயாளின் குரலைப் பின்னுக்குத் தள்ளி ‘ஒரு நாள் இரவில்' பாடலில் இரைச்சலை மட்டுமே தந்திருக்கிறார் வித்யாசாகர். வித்தியாசமான வரிகளைக் கொன்றுவிட்டார். 'ரேனிகுண்டா'வில் வரும் இந்தப் பாடல் காரணமில்லாமல் பிடித்திருக்கிறது. பிறந்து ஐந்து மாதங்களில் இருந்து கனடாவில் வளர்கிற அக்காவின் பையன் காருக்குள் இருக்கும் MP3 Playerல் repeat செய்து கேட்கும் பாடல் இங்கே.

திருந்தவே மாட்டார்களா?

திருவண்ணாமலை, ராமேசுவரம் உட்பட்ட கோவில்களில் விளக்குகள் அணைந்ததாகவும், கொடிமரம் சாய்ந்ததாகவும், கோபுரங்களில் சேதங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படப்போவதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன. இது என்ன வகையான ‘லொஜிக்' என்பது எனக்குப் புரியவில்லை. அவை வதந்திகள் என ஆலய அறங்காவலர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனக்கென்னவோ நீண்டகாலம் வருமானம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு ஜோதிடசிகாமணியின் சந்தைப்படுத்தல் தந்திரமாகவே இது தெரிகிறது. அவர்கள் வீட்டு வாசல்களில் மந்தைக் கூட்டம் நிச்சயம் பரிகாரங்களுக்காக ஓடோடிப் போய் நின்றுகொண்டிருக்கும். விளக்கு அணைவதிலும், சரியாகப் பராமரிக்கப்படாத கட்டிடங்கள் உடைவதிலும் அப்படி என்ன மாய மந்திரம் இருக்கப்போகிறது என்று யோசிக்கவே மாட்டார்களா?

வாழ்த்துகிறோம்

அருண்மொழிவர்மன் என்று பதிவுல்கத்தில் அறியப்பட்ட, சுதன் என்று நண்பர்கள் வட்டத்தில் அழைக்கப்படும் சகோதரன் சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் அவர்கள், நிகழும் விரோதிவருடம் ஐப்பசித்திங்கள் 16ம் நாள் (02/11/2009) திங்கட்கிழமை சதுர்த்தசி திதியும், அச்சுவினி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய 11:15 முதல் 12:45 (கனேடிய நேரப்படி 02/11/2009 01:45-03:15) வரையான மகரலக்கின சுபமுகூர்த்த வேளையில் அவர் உள்ளம் திருடிய சகோதரி மதனிகாவுடன் இல்லற பந்தத்தில், கொழும்பு மயூராபதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் இணைகிறார். இணைகின்ற காதல் கிளிகளை நேரில் வாழ்த்த முடியாதவர்கள் இங்கே வாழ்த்துங்கள் அல்லது சுதர்ஷனின் மின்னஞ்சலில் (sutharshan@hotmail.com) அல்லது facebook இல் நேரடியாக வாழ்த்துங்கள்.

நான் வாழ்ந்து காட்டிய தம்பதிகளைச் சுட்டி அவர்களைப் போல் வாழ்க என்றெல்லாம் வாழ்த்தப்போவதில்லை. ஒரு காலத்தில் ‘சுதர்ஷன்-மதனிகா போல் வாழ்க' என்று இன்னொரு தம்பதியை நாங்கள் வாழ்த்தும் வண்ணம் வாழ்ந்து காட்ட வாழ்த்துகிறேன்.


என்றென்றும் அன்புடன் (அவரது பாணிதான்...)
கிருத்திகன்

Thursday 29 October 2009

பசுக் கொட்டாய்


பத்தாயிரம் பொன்னுக்கு
கொட்டாய் வாங்கி
இருபது பசு அடுக்கி
இருபதடி நிலம் ஒதுக்கி
அழகாகக் கொண்டாட

பண்ணையார் பரமசிவம் வந்து
பரிசாகக் கிடைத்த ஒரு பசுவை
இழுத்து நீ கொட்டாயில் விடு
அதுவாகும் இருபதென்று
உவப்புடனே சொல்லிச் சென்றான்

கொட்டாயும் வாங்கி,
கெஞ்சிக் கெஞ்சிப் பரிசாகப்
பசுவும் வாங்கி,
வாகாக இழுத்து வந்து
கொட்டாயில் விட்டேன்

ஐயகோ என் சொல்வேன்
ஐடியா சொன்னவன்
'நாமக்கல்' சிபி அல்ல,
'மாநக்கல்' சிபி என்று, அக்கணமே
உறைக்கலையே ஏன் எனக்கு?

Wednesday 28 October 2009

குட் ஷெப்பேர்ட்

இந்திய-அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியின் நிலவரம் அறிய இன்று காலை cricinfo பக்கம் போனவன் கண்ணில் தேடிவந்து பட்டது முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட் அவர்களின் மரணச் செய்தி. கிரிக்கெட்டை ரசிக்கும் எவரும் ஷெப்பேர்ட்டை மறக்க முடியாது. இன்றைய பில்லி பௌடனின் கோமாளித்தனம் எதுவுமே இல்லாமல், மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்களையும், நண்பர்களையும் பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல், வீரர்கள், நிர்வாகிகள், விமர்சகர்கள் ஏன் ரசிகர்களால் மதிக்கவும் நேசிக்கவும் பட்ட இரண்டு சர்வதேச நடுவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தி, கிரிக்கெட் ரசிகன் ஒருவனின் கண்ணில் இயல்பாய்ப் பட்டதில் ஆச்சர்யமில்லை. (மற்றவர் டிக்கி பேர்ட்)

படம்-1: மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வசீகரப் புன்னகையோடு ஷெப்பேர்ட்.
படம்-2: நெடுநாள் நண்பர் டிக்கி பேர்ட்டுடன் ஷெப்பேர்ட். இருவரும் திறமையான நடுவர்கள், நகைச்சுவைக்கும் கண்டிப்புக்கும் பெயர்போனவர்கள்

ஷெப்பேர்ட்டுக்கும் எனக்குமான தொடர்பும், கிரிக்கெட்டுக்கும் எனக்குமான காதலுக்கும் ஒரே வயதுதான். ஆம், 1996ம் வருடம் எந்தப் போட்டியில் சச்சின் என்னை வசீகரித்து இந்த விளையாட்டில் மூழ்கடித்தாரோ, அதே போட்டியில் (இந்தியா எதிர் கென்யா, மாசி 18, 1996) ‘இந்தாளைப் பார். பகிடியாய் இருக்கும்' என்று அப்பாவால் காட்டப்பட்டு அறிமுகமாகி, பின்னர் கிரிக்கெட்டின் நெளிவு சுளிவுகளையும், நடுவராகப் பணியாற்றுவதில் இருக்கக்கூடிய சிக்கல்களையும் உணர்ந்துகொண்டபோது, வீரர்களில் சச்சின் எப்படி ஆதர்ச நாயகனோ, அப்படி ஆதர்சமானவர் ஷெப்பேர்ட். அந்தப் போட்டியிலும் 111 என்ற ஸ்கோர் வந்ததும், ஷெப்பேர்ட் தன்னுடைய துள்ளலைச் செய்ததும் இன்றுங்கூட மனதில் இருக்கிறது.

டேவிட் ரொபேர்ட் ஷெப்பேர்ட், 1940ம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் திகதி, இங்கிலாந்தின் டெவொன் (Devon County) மாநிலத்தின் துறைமுக நகரான பைட்ஃபோர்ட் (Bideford) என்ற இடத்தில் பிறந்தார். குளோசெஸ்டர் அணிக்காக 1965 தொடக்கம் 1979 வரை முதல்தரப் போட்டிகளில் ஆடினார். 282 நான்கு நாள் போட்டிகளிலும், 183 ஒருநாள் போட்டிகளிலும் அந்த அணியின் மத்திய வரிசையில் ஆடிய ஷெப்பேர்ட்டின் உருண்டு திரண்ட உடல்வாகு காரணமாகவும், அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வு காரணமாகவும் அப்போதே எல்லாராலும் விரும்பப்பட்டார். ஆனால் ஷெப்பேர்ட் புகழின் உச்சத்தை அடைந்தது, ஒரு நடுவராக.

படம்-3: களத்தில் வீரராக ஷெப்பேர்ட்.

1981 ல் முதல்தரக் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றத் தொடங்கிய ஷெப்பேர்ட், 1983 உலகக் கோப்பையில் சர்வதேசக் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1985ல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த ஒரு டெஸ்ட் ஆட்டத்தின்பின் இவர் மேலும் புகழ் பெற்றார். விளையாடும் அணி எண்ணிக்கையோ அல்லது ஒரு தனிநபர் எண்ணிக்கையோ 111 என்ற எண்ணையோ அல்லது அதன் மடங்குகளையோ தொட்டால் அது துரதிர்ஷ்டம் என்று நம்பிய ஷெப்பேர்ட், அப்படியான எண்ணிக்கை எட்டப்படும்போதெல்லாம் சின்னதாக ஒரு துள்ளல் துள்ளுவார். சில நண்பர்கள் சேர்ந்து 1985 ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் போட்டியில் பெரிதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு அதன்பின் அவரது அந்தத் துள்ளலுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

படம்-4: ஷெப்பின் அந்தப் புகழ் பெற்ற நெல்சன் துள்ளல்.

ஷெப்பேர்ட்டின் நகைச்சுவை உணர்வு பலரையும் கவர்ந்த ஒன்று. ஷெப்பேர்ட் தன் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உதவினார் என்று அவருக்கான அஞ்சலிக் கட்டுரையில் கூறியிருக்கும், ஐந்து முறை தலைசிறந்த நடுவராக வாக்களிக்கப்பட்ட சைமன் ரோஃபுல் அதே அஞ்சலிக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ஷெப்பேர்ட்டும் நானும் ஒருங்கிணைந்து பணியாற்றிய வெளிநாட்டுத் தொடர்களை மறக்கமுடியாது. அந்தத் தொடர்களில் ஷெப்பேர்ட் என்னிடம் அடிக்கடி ‘எனக்காக ஒரு சுற்று அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய், நான் உனக்காக ஒரு ஐஸ்கிரீம் அதிகமாகச் சாப்பிடுகிறேன்' என்று. இனிமேல் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஐஸ்கிரீம் சாப்பிடும்போதோ நன்றி நண்பா என்று சொல்லி ஷெப்பை நினைத்துக் கலங்கத்தான் முடியும்'.

ஷெப்பேர்ட்டிடம் என்னைக் கவர்ந்த விஷயமாக நான் பார்ப்பது, அவர் தன்னுடைய உள்ளுணர்வையும், கிரிக்கெட் அறிவையும் அற்புதமாக ஒருங்கிணைத்து, வேகமாக தன்னுடைய முடிவுகளை எடுப்பார். அதிலும் எல்.பி.டபிள்யூ கொடுப்பதில் நேரம் தாழ்த்தவே மாட்டார். சாதாரண மென்பந்துக் கிரிக்கெட்டில் நடுவராகப் பணியாற்றுவதே கடினம். அப்படியான போட்டிகளில் இதே உள்ளுணர்வை வைத்து எடுக்கும் முடிவுகளை வீரர்கள் ஏற்பது அதைவிடக் கடினம். இந்நிலையில் சர்வதேசப் போட்டிகளில் ஷெப் அப்படியான முடிவுகளை எடுத்தது உண்மையிலேயே மிகவும் துணிகரச் செயல்.

படம்-5: நடுவராக ஷெப்பேர்ட். வலப்பக்கம் ஒரு ரன்-அவுட்டை முடிவு செய்ய அவர் நிற்கும் இடத்தைப் பாருங்கள். அதுதான் ஷெப்.
படம்-6: தேவையான நேரங்களில் ஷெப் கண்டிப்பாக இருக்கத் தவறியதில்லை. இரண்டு பீமர் வீசிய வக்கார் யூனுசைப் பந்து வீசவிடாமல் தடுப்பதிலாகட்டும், உலகின் மிகவும் செல்வாக்கான வீரர்களான ஸ்டீவ் வோ மற்றும் லாராவைக் கூப்பிட்டுக் கண்டிப்பதிலாகட்டும், ஷெப் கடமை தவறவில்லை.

ஷெப்பின் இதே முறையில் உள்ளுணர்வைக் கேட்டு, பக்னோர் போன்றெல்லாம் ஆராய்ந்து குழம்பாமல் எடுக்கப்பட்ட முடிவுகளில் சில தவறுகள் நேர்ந்தாலும் மிக மிக மோசமான முடிவுகளாக அவை ஒருபோதும் இருப்பதில்லை. இதை சொந்த அனுபவத்திலும், ஷெப்பை தொலைக்காட்சியில் பார்த்த அனுபவத்திலும் என்னால் உறுதிப்படுத்தமுடியும். ஒரு முடிவுக்கு எடுக்கப்படும் நேரம் அதிகமாக அதிகமாக, முடிவில் சர்ச்சை இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும் என்பது என்னுடைய கருத்து. அத்துடன் அவரே ஒரு வீரராகவும் இருந்த காரணத்தால், உள்ளுணர்வு அநேகமான சந்தர்ப்பங்களில் அவருக்கு சரியாகவே வழிகாட்டியிருக்கிறது. எனக்கு அவர் விட்ட பிழைகள் இரண்டுதான் ஞாபகத்தில் இருக்கின்றன. (பக்னோர்-சச்சின் இணையை நினைத்தாலே என்னிடம் நான்கைந்து பிழையான முடிவுகள் உதாரணமாக இருக்கின்றன)
 1. 1999 உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இன்சமாமை ஆட்டமிழந்ததாக அறிவித்தது.
 2. 2001ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து மான்செஸ்டர் டெஸ்டில் தோற்றபோது விழுந்த கடைசி நான்கு விக்கெட்டுகளில் மூன்று No-balls. அவற்றில் இரண்டைக் கணிக்காமல் விட்டது ஷெப்.
படம்-7: ஷெப்பின் இறுதி டெஸ்ட் போட்டியில் லாராவும், இறுதி ஒரு நாள் போட்டியில் டரன் கௌஃபும் தம் அன்பைப் பரிமாறுகிறார்கள்.

ஜூன் 3-5, 2005, மேற்கிந்தியா-பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கிங்ஸ்ரனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இறுதித் தடவையாக டெஸ்ட் போட்டிகளிலும், ஜுலை 12, 2005 ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டியில் இறுதித்தடவையாக ஒரு நாள் போட்டிகளிலும் கடமையாற்றினார் ஷெப்பேர்ட். 1996, 1999, 2003 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதியாட்டங்களிலும், (1987, 92 இல் இங்கிலாந்து இறுதியாட்டத்துக்கு வந்ததால் இவர் நடுவராக முடியவில்லை) மொத்தமாக 92 டெஸ்ட் போட்டிகளிலும் (பக்னோர் 128, கோர்ஸ்டன் 107), 172 ஒருநாள் போட்டிகளிலும் (கோர்ஸ்டன் 201, பக்னோர் 181) கடமையாற்றிய ஷெப்பேர்ட், 2008ம் வருடம் அவரின் நீண்டகால சிநேகிதியான ஜென்னியை மணமுடித்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஷெப் இன்று (27/10/2009) மரணமெய்தினார். தன் மனச்சாட்சிக்குப் பிறழ்வாக எந்த ஒரு முடிவையும் தான் எடுக்கவேயில்லை என்று கூறிய ஷெப் அடிக்கடி சொல்லும் வாசனத்தால் அவருக்குப் பிரியாவிடை கொடுத்திருக்கிறது cricinfo.... 'Good luck mate and may your god go with you'. May his soul Rest In Peace. Good bye Shep.

Saturday 24 October 2009

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 18-ஒக்ரோபர் 24 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 12 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 அகதிகளை விடுவித்திருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. வவுனியாவுக்கு 2,583 குடும்பங்களைச் சேர்ந்த 8,643 தமிழர்களும், மன்னாருக்கு 2,644 குடும்பங்களைச் சேர்ந்த 6,631 தமிழர்களும், முல்லைத்தீவுக்கு 4,415 குடும்பங்களைச் சேர்ந்த 16,394 பேரும், கிளிநொச்சிக்கு 2,453 குடும்பங்களைச் சேர்ந்த 10,17 பேரும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இலங்கைப் பணமதிப்பில் ரூபாய் 5,000 பணமும், ரூபாய் 20,000 மதிப்புள்ள பணவைப்புப் புத்தகமும் 6 மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களும் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் மீளக்குடியமர்த்தி அவர்களுக்குரிய இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்தித்தர ஏற்பாடுகள் செய்யப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம் கூறியிருக்கிறார். சம உரிமை, சமத்துவம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை உயிர்வாழ விட்டால் போதும் என்கிற நிலையில் அடைபட்டிருக்கும் அந்த மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியே.

முன்னாள் முப்படைகளின் தளபதியான சரத் பொன்சேகாவை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பாக பிரதம வேட்பாளராக நிறுத்த எதிர்கட்சிகள் முயல்வதைத் தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. சரத் பொன்சேகவுக்கும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் சமீபகாலமாக ஒரு ஊடல் நிலவுவதும், அதையே சாக்காக வைத்து சரத் பொன்சேகவை ஜனாதிபதி வேட்பாளராக்க எதிர்க்கட்சிகள் முயல்வதும் குறிப்பிடத்தக்கது. இராணுவரீதியான வெற்றி ஒன்றைப் பெற்றுத் தந்த காரணத்துக்காகவே அவரை முன்னிறுத்துவது ஆபத்தானது என்பதாக அரசியல் விமர்சகர்களும் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல்-புகுந்தகம்

ஆஃப்கானிஸ்தானில் 2011க்குப் பிறகும் கனேடிய இராணுவ வீரர்களை வைத்திருப்பதற்கு கிட்டத்தட்ட அரைவாசிக் கனேடியர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் முடிவே இதுவாகும். ஆனாலும், அப்படி இருக்கும் கனேடிய வீரர்கள் போரியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாமல், இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே போதுமானது என்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் இறந்த வீரர்களின் உடலங்கள் Highway of Heros என அழைக்கப்படும் 401 நெடுஞ்சாலையில் போகும்போது பாலங்களின் மேல் திரண்டு நின்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் மக்களில் பலர் ஆஃப்கானிஸ்தானுக்கு உறவுகளை அனுப்பியவர்களே. அவர்களிடம் ஆஃப்கானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றிய எதிர்ப்புணர்வு இருந்தது. மற்றவர்களுக்கு ஆஃப்கானிஸ்தானில் வீரர்கள் இருப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை.

அரசியல்-உலகம்
ஈரானில் கிடைக்கும் யுரேனியம் தாதுப் பொருளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதை மேம்படுத்தித் தருகிறோம் என்கிற பெயரில் ஈரான் ஆபத்தான அணு ஆயுதங்கள் செய்வதைத் தடுக்கலாம் என்று அமெரிக்காவும் ஒபாமாவும் சேர்ந்து செய்த முயற்சிக்கு பெரும் அடி விழுந்திருக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இந்த முயற்சிக்கான திட்ட வரைவு ஒன்றை அமெரிக்காவும் ஏனைய உலக நாடுகளும் சேர்ந்து, ஈரானியத் தலைவர்களிடம் முன்வைத்திருந்தார்கள். இந்தத் திட்டவரைவு ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுப்பது போலான தோற்றத்தில் இருப்பதால் அதை ஈரான் தலைவர்கள் எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அவர்களும் எதிர்த்திருக்கிறார்கள். இன்னும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் ரஷ்யா ஆகியோரின் தலைமையில் வரையப்பட்ட அந்தத் திட்ட வரைபுக்கு நிகராக, தங்களுக்கு ஆதரவான ஒரு திட்டவரைபை ஈரான் முன்வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்

மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தின் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பங்கொன்றின் விலை $29.23 (அமெரிக்க டொலர்) என்கிற விலையைத் தொட்டது ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது. ஏனென்றால் கடந்த காலாண்டில் மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் இலாபம் 18% ஆல் வீழ்ச்சியடைந்ததாக நிறுவனம் அறிவித்திருக்கிற நிலையில் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்றம் ஆச்சரியகரமானதே. புதிதாக இவர்கள் வெளியிட்டிருக்கும் விண்டோஸ்-7 இயங்குதளம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தால் அடுத்த காலாண்டில் நிச்சயமாக இன்னும் நல்ல இலாபம் கிட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மைக்ரோசொஃப்ற்றின் சமீபத்திய பிரச்சினைகளுக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் இயங்குதள வெளியீடுகளில் மிகவும் கேவலமானதாகக் கருதப்படும் விஸ்டா பாவனையாளர்களுக்குச் செய்த அநியாயம் என்பது குறிப்பிடத்தக்கது. (நானும் விஸ்டா பாவனையாளன்தான். ஆனால் விண்டோஸ்-7 க்கு மாறப்போவதில்லை. சில தொழிநுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்து திறந்த மூல இயங்குதளம் ஒன்றுக்கு மாறுவதாக உத்தேசம்)

விளையாட்டு
சாம்பியன் கோப்பை 20-20 போட்டிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. அனைவரும் எதிர்பார்த்த அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் அணியும், யாருமே எதிர்பார்க்காத ஆனால் போட்டிகள் நடந்துகொண்டிருந்த காலத்தில் எல்லோரும் விரும்பிய ட்ரினிடாட் & ரொபாகோ அணியும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன. இரு அணிகளும் முன்னைய சுற்றொன்றில் சந்தித்தபோது 18 பந்துகளில் 54 ஓட்டங்களைக் கைரோன் போலார்ட் அடிக்க கிட்டத்தட்ட நியூசவூத்வேல்ஸ் அணியின் கையிலிருந்த வெற்றியை பிடுங்கியது ட்ரினிடாட் & ரொபாகோ. ஆனால் இறுதியாட்டத்தில் நியூசவுத்வேல்ஸ் அணியின் பலம்வாய்ந்த பந்து வீச்சு மற்றும் அவுஸ்திரேலியர்களுக்கேயுரிய போராட்ட குணத்தை அவர்களால் மீறமுடியவில்லை.

83 ஓட்டங்களுக்கு 6 விக்கெற்றுகளை இழந்து தடுமாறிய நியூசவுத்வேல்ஸ் அணியை தனது 48 ஓட்டங்களால் 159 ஓட்டங்களுக்கு உயர்த்திய ப்ரெட் லீ, அருமையாகப் பந்தும் வீச, 41 ஓட்டங்களால் வென்று முதலாவது சாம்பியன் லீக் 20-20 கிண்ணத்தை நியூசவுத்வேல்ஸ் அணி வென்றிருக்கிறது. உண்மையில் கடினமான ஆடுகளங்களில் எல்லாம் ஆடி, அற்புதமாக இந்தத் தொடரில் தம்முடைய பலத்தை நியூசவுத்வேல்ஸ் காட்டியபோதும், கரீபியன் தீவு மக்களுக்கேயுரிய கொண்டாட்டமான கிரிக்கெட் ஆடிய ட்ரினிடாட் & ரொபாகோ அணியே ரசிகர்கள் மனதை வென்ற அணியாகும்.

சினிமா

இளையராஜாவின் பழசிராஜா பாடல்கள் தமிழிலும் வெளிவந்திருக்கிறன. இதுவரை கேட்காத இசை என்று சொல்லாவிட்டாலும் பெரும்பாலான படங்களில் குத்துப்பாடல்களும், R&B ஐ மையமாக வைத்து உருவாக்கப்படும் பாடல்களுமாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவின் ஆண்டாண்டு காலமாகக் கேட்டுவரும் இசை இன்னும் அலுத்துப்போகாமல் இருப்பது அதிசயமே. அதிலும் ‘ஆதிமுதல் காலம்' என்கிற பாடல் ஜேசுதாஸ் குரலில் மயக்குகிறது. 'அம்பும் கொம்பும்' என்ற ஒரு பாடல் (மலை ஜாதிப்பாடல் என்று நினைக்கிறேன்) வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை காணாத இசை என்றெல்லாம் புகழமுடியாது, ஆனால் ராஜா இன்னும் சோடை போகவில்லை என்றுமட்டும் சொல்லலாம்.

என்னாது???
சமீபத்தில் நான் படித்த கல்லூரியின் இணையத்தளத்தில் பகுதிநேரப் படிப்பு பற்றிய பகுதியை மேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணில் தட்டுப்பட்ட ஒரு பாடத்தின் பெயர் என்ன தெரியுமா? Bollywood Dance. இந்த நடனம் இந்திய நாட்டுப்புற மற்றும் இன்னபிற நடனங்களின் கலவையாம். இந்தியாவில் வெளியாகும் புதிய படங்களின் பாடல்களுக்கான நடனங்களை உடலுக்கும் உறுதி சேர்க்கும் வண்ணம் சொல்லித்தருகிறார்களாம். வெறும் $85 கட்டி ஒன்றரை மாதம் சந்தோசமாகப் ஆடிப்பழகுங்கள், புதிய தொடர்புகளை ஏற்படுத்துங்கள் என்று அழைக்கிறார்கள். ஆதாரம் இங்கே.

Thursday 22 October 2009

நினைத்தாலே இனிக்கும் ஈரம்

கொஞ்சம் காலம் தாழ்த்தித்தான் பதிவிடுகிறேன். இந்த இரு படங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்பதாக என்னுடைய முன்னைய பதிவென்றில் சொல்லியிருந்தேன். என்ன, வேறு பதிவுகள் போடுவது, ஆணி புடுங்கல்கள் எல்லாவற்றுக்கும் நடுவே மறந்து போய்விட்டேன். இன்றைக்கு தற்செயலாக ஈரம் படத்தின் பாடல் ஒன்றைக்கேட்டபோது (சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது) 'அட இதை மறந்திட்டனே' என்று தோன்றியது. விமர்சனமாக இல்லாமல் படங்கள் இரண்டும் மனதில் என்ன பாதிப்பை ஏற்படுத்தின என்று சொல்லிப்போகலாம் என்று நினைக்கிறேன்.

ஈரம்
இப்படியான கதைகளில் லொஜிக் எல்லாம் பார்ப்பதில்லை நான். சில்லென்று முதுகுவடம் குளிர்ந்தால் போதும். பெரும்பாலும் தமிழில் வந்த இப்படியான அமானுஷ்யம் கலந்த கதைகளில் அப்படி முதுகுவடம் குளிர்வதில்லை. ஆனால் சமீபகாலத்தில் இரண்டு படங்கள் அப்படிக் குளிரவைத்தன. ஒன்று ‘சிவி'. அமெச்சூர்த்தனமான காட்சியமைப்புகளுடன் கூடிய அந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் உடம்பு உதறும். அதே போல் இந்தப்படத்தின் இடைவேளைக்கு முந்திய அந்த தியேட்டர் கழிவறைக்காட்சியைச் சொல்லலாம். என்ன, இடைவேளையிலேயே அந்த உச்ச உணர்ச்சியைத் தந்தவர்கள் அதற்குப் பின்னால் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார்கள். இருந்தும் பார்க்கக்கூடிய படம்.

படத்தின் பலங்களாகச் சொல்லக்கூடியது இசை மற்றும் ஒளிப்பதிவு. அதுவும் இரண்டாவது படத்திலேயே montage ஆக வரும் பாடல்களும், அதிரடிப் பின்னணி இசையுமாக அசத்தியிருக்கிறார் ‘கிருஷ்ணா' தமன். அவரது ‘சிந்தனை செய்' கூட எனக்குப் பிடித்திருந்தது. என்ன 'போய்ஸ்' படத்தில் மல்கோவா ஆண்ட்டி கதை எழுதும் அவரது முகம்தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. அதே போல் ‘ஈரம்' பெயருக்கேற்றபடி ஒவ்வொரு ஃப்ரேமிலும் இருந்த ஈரமும் கவர்ந்தது. ஆதி-சிந்து மேனன் காதல் காட்சிகள் கொள்ளை அழகு. பலவீனம் என்றால் பின்பாதியைச் சொல்லலாம். காரணம், கிட்டத்தட்ட படத்தின் மர்ம முடிச்சு இடைவேளையிலேயே அவிழ்வது காரணமாய் இருக்கலாம்.

ஆதியை மிகவும் பிடித்திருந்தது. சராசரிக்குக் கொஞ்சம் மேலான உயரம்கொண்ட கம்பீரமான இளைஞனைக் கண்முன் நிறுத்தினார். என்ன, பிரசன்னா, நந்தா வரிசையில் இவரும் நிச்சயம் வீணடிக்கப்படுவார் என்பது என்னுடைய நம்பிக்கை. தலைமுடிக்கு செம்பட்டைச்சாயம் பூசி, உடம்பில் tatoo குத்தி, தலைமுடியை வெட்டி, கிழிந்த ஆடைகளைப் போட்டு கதாநாயகியைச் சித்தரிக்காமல், பக்கத்துவீட்டு மின்னல்மாதிரி அழகாகச் சித்தரித்திருந்தார்கள். பின்பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அற்புதமாக வந்திருக்கும். அந்த முதுகுத்தண்டு குளிர்வதைப் பற்றிச் சொன்னேனே, Sixth Sense பார்த்தபின் அந்த உணர்வு மணிக்கணக்கில் தங்கி நின்றது.

நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் பார்த்த பின்னர் Class Mates பார்ப்பது என்று கடுமையாக விரதமெல்லாம் இருந்தேன். காரணம் A Wednesday முதலில் பார்த்ததால் இன்னும் உன்னைப் போல் ஒருவனைப் பார்க்கவில்லை. நினைத்தாலே இனிக்கும் பார்த்த போது பிடிக்கவில்லை. ஏதோ ஒருவகையில் படத்தில் செயற்கைத்தனம் நிறைய இருந்தது போல் இருந்தது. முக்கியமாக அந்த தேர்தல் வரும் காட்சிகள் படத்தோடு ஒட்டவேயில்லை. பிறகு மலையாள Class Mates பார்த்தபின்னர் எங்கே தவறியிருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருந்தது.

மலையாளத்தில் ஒன்றும் பெரிதாக அவர்கள் சாதித்து விடவில்லை. ஆனால் அந்தத் தேர்தல் சம்பந்தமான காட்சிகள் அற்புதமாகப் பொருந்திப் போயின. அந்த ‘எண்ட கல்பிலே' என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு நிகராய் ஒரு பாடல் தமிழில் விஜய் அன்ரனி போடவில்லை. கன்னத்தில் குழி விழ சிரித்தபடி திரியும் நரேனுக்கும், சக்திக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. மலையாளத்தில் படம் முழுக்க இருந்த இயல்பான நகைச்சுவை தமிழில் இல்லை. உதாரணத்துக்கு காவ்யா மாதவனின் நடனத்தைக் குழப்ப ‘வந்தேண்டா பால்காரன்' பாட்டைப் போட்டு ப்ருத்விராஜ் ஆடும் ஆட்டம். காதல் காட்சிகள் தமிழில் வெறுமை. அதுவும் ப்ருத்வியின் காதல் முறையே காவ்யாவிடமும், பிரியாமணியிடமும் வெளிவரும் காட்சிகள். முதலாவது வாவ்... இரண்டாவது உவ்வேக்.

தமிழில் படம் எடுக்கும்போது எங்கே தவறுகிறார்கள் என்பதற்கு உதாரணம்:
தமிழில் சக்தி சாகும் அந்த இரவில், ப்ருத்விராஜ் மின்சாரக்கம்பிக்கு சைக்கிள் செயின் எறிந்துதான் மின்சாரத்தைத் துண்டிப்பார். அதற்கான சைக்கிள் செயினை எங்கிருந்து எடுப்பார் என்று பார்த்தீர்களா? அவருக்காகவே அவர் ஒளிகிற இடத்தில் ஒரு சைக்கிளை யாரோ விட்டுவிட்டுப் போயிருக்க இவர் அந்தச் சைக்கிளில் இருந்து செயினை எடுத்து எறிவாராம். மலையாளத்தில் அப்படியில்லை. ப்ருத்விராஜ் அந்தச் செயினோடு அலைவார். ஒரு கட்டத்தில் ஜெய்சூர்யாவை அடிக்கும்போதுகூட அதைப் பயன்படுத்துவார். ஒரு குத்துப்பாட்டுக்கு இடம் யோசிக்கும் நேரத்தில் அப்படி அவர் செயினோடு அலைவதைக்காட்ட ஒரு சீன் யோசித்திருக்கலாம்.

மொத்தத்தில் ஈரம், பெரிதாகக் கதை இல்லாமல் நல்லமுறையில் தரப்பட்ட படைப்பு. நினைத்தாலே இனிக்கும் நல்ல கதை இருந்து, நல்ல நடிகர்கள் கிடைத்தும், கேவலமாய் தரப்பட்ட படைப்பு.

Monday 19 October 2009

நவீன பிச்சைக்காரர்கள்-கருணாநிதி சிந்தனைகள்

நவீன பிச்சைக்காரர்கள்
பிரபல வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் நிதி மோசடியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், ராஜ் ராஜரட்ணம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இடையில் இருந்த தொடர்பு பற்றிய செய்திகளும் வெளிவருகின்றன. இவர் விடுதலைப் புலிகளுக்கு கோடிக்கணக்கான டொலர் பணம் திரட்டிக் கொடுத்திருக்கலாம் என்கிற செய்தி கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் இந்த விஷயத்தை நான் எடுக்கிறேன் என்பது பற்றி பலர் விசனப்படலாம், ஆனால் இப்போதும் பதியாவிட்டால் அது துரோகம் ஆகிவிடலாம்.

ராஜ் ராஜரட்ணம் நிதி சேர்த்தாரா இல்லையா என்பதுபற்றி அமெரிக்கா கண்டுபிடிக்கட்டும். ஆனால், இதே நிதி திரட்டல் சம்பந்தமான இன்னொரு மோசடி எம் மக்களால் கண்டுகொள்ளப்படாமலும், இப்போது தண்டிக்கப்படாமலும் விடப்பட்டிருக்கிறது. அதை மோசடி என்பதைவிட, துரோகம் என்பேன் நான். வீடுவீடாக வந்து புலம்பெயர் நாடுகளில் நடந்த நிதி சேகரிப்பு மற்றும் அது தொடர்பான மோசடிகளைத்தான் சொல்கிறேன். நிதி சேகரிப்பதற்காக வந்த முக்கால்வாசிப் பேர், மோசடிப் பேர்வழிகள். மக்களின் துயரத்தைக் காட்டி நிதி சேர்த்து தங்களுக்கான சுகவாழ்வைத் தேடிக்கொண்டவர்கள். இன்றைக்கு இன்னும் கொஞ்சம் கவலைப்பட்டபடி இருக்கிறார்கள். ஏனென்றால் இப்போதைக்கு அவர்களின் சுகவாழ்வு பற்றி எவனும் கேள்வி எழுப்பமாட்டான் என்று இருந்தவர்களுக்கு, ராஜ் ராஜரட்ணத்தின் நிதி மோசடியே இவ்வாறான புலிகளுக்கான நிதி திரட்டல் பற்றி விசாரிக்கப்போனதில்தான் அம்பலமானது என்ற செய்தி நிச்சயமாக வயிற்றில் புளி கரைத்திருக்கும்.

இப்போதுகூட, சில நிதி திரட்டல்கள், முட்கம்பி வேலிக்குப் பின்னால் இருக்கும் மக்களுக்காக என்கிற பேரில் நடத்தப்படுகிறதாகக் கேள்விப்பட்டேன். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் மக்களிடையே இருக்கும் அவர்களின் இரத்த உறவுகளை மீட்டெடுக்க சிலபேர் எல்லா மக்களையும் சாக்காக வைத்துப் பணம் சேர்க்கிறார்களாம். சுயநலம் மிக்க ஒரு செயல் என்றாலும்கூட, ஒருவகையில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அப்படிச் சேர்க்கிற பணத்திலும் ஒரு பகுதியை தங்களின் சொந்தத் தேவைகளுக்காகப், (வீட்டுக்கடன் மாதாந்திர கட்டணம், அல்லது வீட்டுக்கடன் பெறுவதற்கான வைப்பு, வாகனக் கடன், கடனட்டை மாதாந்திரக் கட்டணம்) பயன்படுத்துகிறார்கள்.

இப்படியானவர்களை அடையாளம் காண்பது இலகு. கொஞ்சம் தெரிந்தவர் போல எடுத்துவிட்டால் தெறித்து ஓடிவிடுவதோடு, திரும்பவும் அந்த வீடுகளுக்கு வருவதில்லை (‘இதுக்கெல்லாம் இன்னார்தானே பொறுப்பு, நாங்கள் அவையளுக்கே நேரடியாக அனுப்பிறம்'). இதுவே ‘இப்ப கொஞ்சம் இறுகிப் போயிருக்கு, அடுத்த மாதம் மட்டிலை வாறியளோ தம்பிமார்' என்று பணிவாகச் சொல்லிப்பாருங்கள், அடுத்த வாரமே வந்து நிற்பார்கள். இப்படியாகப் பிழைப்பதைவிட இவர்கள் நடுத்தெருவில் வெள்ளைவேட்டி விரித்து பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.

பி.கு: உண்மையிலேயே நல்ல நோக்கத்தோடு செயற்படுகிற ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பது எம் இனத்தின் சாபம்.
*----*----*----*

கருணாநிதி சிந்தனைகள்
சென்னைப் பல்கலைக்கழகம் தம்முடைய கலைப் பட்டதாரிகளின் பாடத்திட்டத்தில் புகுத்துவதுக்கு உத்தேசித்திருக்கும் சில விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. பி.பி.சி. தமிழ்ப் பிரிவில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கலாநிதி திருவாசகம் அவர்களின் பேட்டியோடு இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது.

விஷயம் இதுதான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே எம்.ஏ மற்றும் பி.ஏ மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகளை கற்பித்து வருகிறார்களாம். இனிமேல் பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கருணாநிதி சிந்தனைகள் என்று பலவற்றைப் புதிதாகச் சேர்க்கப் போகிறார்களாம். மேற்படி தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் இல்லாமல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளோடு சேர்ந்ததாக இந்தப் பாடத்திட்டம் இருக்குமாம். அப்படியானால் ஜெயலலிதா சிந்தனைகளும் வருமா என்று பேட்டி கண்டவர் கேட்க அப்படியும் வரலாம் என்கிறார் துணைவேந்தர்.

ஆட்சியில் இருக்கிற தலைவருக்குக் காக்கா பிடிப்பது போலிருக்காதா என்றால், அப்படி இல்லையாம். அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொடுக்கலாம் என்கிறார் துணைவேந்தர். விமர்சனங்களை வைக்காமல் அவர்களை நல்லவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள் போல இருக்கிறது. துணைவேந்தர் என்னதான் மழுப்பினாலும் கருணாநிதி சிந்தனைகள் என்கிற பாடத்திட்டம் நிச்சயமாக அவரைக் காக்கா பிடிக்கும் முயற்சிதான். இப்படியே போனால் கருணாநிதி சிந்தனைகள், ஜெயலலிதா சிந்தனைகள் என்று பின்வரும் விஷயங்கள் கற்பிக்கப்படலாம்.

 • பொதுப்பணத்தைத் திருடி குடும்பத்தை வளர்ப்பது எப்படி?
 • ஜனநாயகக் கடமைகளை ஆற்றாமல், கொட நாட்டில் ஓய்வெடுப்பது எப்படி?
 • புரியாணி போட்டு வாக்காளர்களைக் கவிழ்ப்பது எப்படி?
 • தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காகப் பொய் சொல்வது எப்படி?
 • எடுத்ததுக்கெல்லாம் எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டுவது எப்படி?
 • ஒரு அரசை சிறுபான்மை அரசு என்று நக்கல் செய்வது எப்படி? அப்படி நக்கல் செய்பவர் எதிர்முகாமில் இருக்கும் மணமாகாதவர் என்றால் அவரைக் கேவலப்படுத்துவது எப்படி?
 • பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, பிள்ளைகளுக்குப் பதவி பெற்றுக் கொடுக்கவும், நடிக, நடிகையரின் கண்ணீர் துடைக்கவும் நடவடிக்கை எடுப்பது எப்படி?
 • கூழைக்கும்பிடு போடுவது எப்படி?
 • தனக்குத்தானே விருது வழங்கி மகிழ்வது எப்படி?
இப்படியே ராமதாசு சிந்தனைகள், அஞ்சாநெஞ்சன் சிந்தனைகள், விஜயகாந்த் சிந்தனைகள், ரஜினிகாந்த் சிந்தனைகள், நமீதா சிந்தனைகள் என்று வாழ்க தமிழ்; வாழ்க தமிழினத் தலைவர்.....
*----*----*----*

Sunday 18 October 2009

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 11-ஒக்ரோபர் 17 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வடக்குக் கிழக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட 150,000 சிங்களவர்களை மீளவும் அந்தப் பகுதியில் குடியேற்ற வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார். அண்மையில் அவரது நூல் ஒன்றை வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறபோதே அவர் இந்த கருத்தை அல்லது புனைவை வெளியிட்டிருக்கிறார். முட்கம்பி வேலிகளின் பின் அடைத்து வைக்கப் பட்டிருக்கிம் அந்த மண்ணின் குடிகளுக்கு சரியான வழி சொல்லி முடியமுன்னர் இந்தக் கதையெல்லாம் எதற்கு. இவ்வாறு தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைவிட, வட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படும் என்றே சொல்லிவிடலாம். இதே வேளை, முகாம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் விடுவிக்கப்படுவதும், சில பேர் மர்மமாகக் காணாமல்போவதும் நடந்துகொண்டிருக்கிறது.

இடம்பெயர்ந்து அகதிமுகாம்களுக்குள் இருக்கும் 58,000 பேரைப் பதினைந்து நாளைக்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு வந்து சென்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் அறிக்கையின் பேரிலேயே கருணாநிதி மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீளக் குடியமர்த்திவிட்டுப் போகட்டும், எதற்காக இப்படி ஒரு நாடகத்தைக் கருணாநிதி தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை.

இந்தோனேஷியாவில் நங்கூரமிடப்பட்டிருக்கும் கப்பலில் மாட்டிக்கொண்டுள்ள 260 பேரைத் தொடர்ந்து, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்குள் Ocean Lady என்ற கப்பலில் அத்துமீறி நாட்டுக்குள் நுழைய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 76 பேரைக் கனேடிய எல்லைக் காவல் வீரர்கள் கைது செய்திருக்கிறார்கள். இந்தக் கப்பல் இலங்கையில் இருந்து வந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கப்பலில் இருந்த 76 பேரும் இலங்கையர்களா என்பது பற்றி இன்னும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அநேகமாக எம்மவர்களாகத்தான் இருக்கும் என்பது எல்லா ஊடகங்களையும் போல எனது ஊகமும் கூட. கனடா அநேகமாக இவர்களுக்கு வாழ்வளிக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

அரசியல்-உலகம்
காஷ்மீரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரின் பையில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துத் துகள்கள் காணப்பட்டதால் இந்தியாவின் கர்னாடக மாநிலம் பெங்களூருவில் தீபாவளியன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சி.கே. நாயுடு தொடரில் பங்கேற்கவென பெங்களூரு வந்த ஜம்மு கஷ்மீர் 22 வயதுக்கு உட்பட்டோர் அணிவீரரான பர்வேஸ் ரசோல் என்பவரின் பையிலேயே இப்படியான துகள்கள் காணப்பட்டதாகவும், மேற்படி வீரரைக் காவல்துறை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்த போது போதிய ஆதாரங்கள் கிட்டாததால் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். சாம்பியன் லீக் போட்டிகள் நடக்கும் நகரங்களின் பெங்களூருவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வெப்பமயமாதல் பிரச்சினை பற்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன்னுடைய அமைச்சரவைக்கூட்டத்தைத் தண்ணீருக்கு அடியில் நடத்தியிருக்கிறது மாலைதீவு. மாலே நகரில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்துக்கு விசேடமான மேசைகள், காகிதங்கள், எழுதுகோல்கள் எல்லாம் தயார்செய்து சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அடுத்த மனிதனை எப்படிக் கொல்வது, இன்னொரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படி நசுக்குவது, எந்த நடிகையின் கண்ணீர் துடைப்பது என்று மட்டும் விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் கூட்டும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு அமைச்சரவை கூடியது மகிழ்ச்சியளிக்கிறது.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ் வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். Gallon Group என்கிற நிறுவனத்தின் நிறுவுனரும் பெரும் செல்வந்தருமான இவர், insider trading எனப்படும் வர்த்தக உலகில் சர்வசாதாரணமாக இருக்கும் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். பிடிபடும்வரை எல்லோரும் நல்லவர் என்ற ரீதியில் பல வர்த்தகர்கள், பங்குச்சந்தைத் தரகர்கள் எனப் பலர் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரியும், இருப்பினும் ஆதாரங்களோடு பிடிப்பதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. இதே பிரச்சினையில் சிக்கிய மிகப் பெரும் பிரபலம் மார்த்தா ஸ்ரூவர்ட்.

விஷயம் இவ்வளவுதான்; பங்குச்சந்தை வணிகத்தில் நிறுவனங்களின் பங்குகள் பற்றிய சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரியாது. அவை அந்தந்த நிறுவனத்தின் நம்பிக்கைக்கு உரிய சிலருக்கு மட்டுமே தெரியும். இப்படியான விஷயங்கள் பொதுமக்களுக்கு (அதாவது குப்பனுக்கும் சுப்பனுக்கும்) தெரிந்தால் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பதில் சுளையாக இலாபம் பார்க்கலாம். அந்தக் குப்பனிடமோ, சுப்பனிடமோ பணத்தை அல்லது வேறு ஏதாவது பலனைப் பெற்று, வெளியிடக் கூடாத இரகசியங்களை வெளியிடுவது அல்லது அப்படித் தெரிந்த பொதுமக்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பங்கு வாங்குவதில் அல்லது விற்பதில் பயன்படுத்துவது போன்றவைதான் இந்த மோசடியின் அடிப்படை. ராஜ் ராஜரட்னமும் அதைத்தான் செய்திருப்பார் போலிருக்கிறது. (இது பற்றிய ஒரு விரிவான கட்டுரையை சுதாவின் இந்தப் பதிவில் படிக்கலாம்)

விளையாட்டு
ஐ.பி.எல் சாம்பியன் லீக் போட்டிகள் அரையிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறன. விளையாடிய மூன்று இந்திய அணிகளும் மண்ணைக் கவ்வ, அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளும், தென்னாபிரிக்காவின் கேப் கோப்ராஸ் அணியும், ட்ரினிடாட் & ரொபாகோ அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன. அதிலும் டரன் கங்கா தலைமையில் ஆடும் ட்ரினிடாட் & ரொபாகோ அணி கோப்பையை வென்றால் ஆச்சரியம் ஏதுமில்லை. மேற்கிந்திய அணிகளிடம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர்களையும் என்கடன் மட்டையைச் சுற்றுவதே என்று ஆடும் துடுப்பாட்ட வீரர்களும், நல்ல அணித்தலைவரும் அணியின் பலம்.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் செல்ஸீ மற்றும் மான்செஸ்ரர் யுனைற்றட் அணிகள் சங்கீதக் கதிரை ஆடி வருகிறன. அஷ்ரன் வில்லா அணியிடம் செல்ஸீ தோற்றதால் இந்த வார இறுதியில் மான்செஸ்ரர் யுனைற்றட் முதலிடம் பிடித்திருக்கிறது. அதற்கு முதல் வாரம் செல்ஸீயும், அதற்கும் முதல் வாரம் மான்செஸ்ரர் யுனைற்றட்டும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

இந்த முறை தீபாவளிக்கு மக்களுக்குப் பெருமளவில் தொல்லை இல்லை. மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின. அவையும் திருப்திகரமாக இல்லை என்பதாகச் சொல்கிறார்கள். சூர்யாவும் ஏமாற்றிவிட்டார், ஜனநாதனும் கைவிட்டுவிட்டார் என்று புலம்புகிறார்கள். முதல்நாள் முதல் காட்சி என்கிற அபத்தம் எல்லாம் இல்லாமல் நான்கு வருடங்கள் கழித்தாயிற்று. வலையுலகில் இந்தப் படங்களைப் பற்றி நடக்கும் சண்டைகள் படங்களைத் திரையில் பார்ப்பதை விட சுவாரஸ்யமாய் இருக்கிறது.

அச்சச்சோ............
இந்தக் காட்சியைப் பாருங்கள். ஒரு குழந்தை Stroller உடன் சேர்ந்து ஒரு புகைவண்டிக்குள் விழுந்து, 131 அடி இழுத்துச் செல்லப்பட்டு சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் தப்பியிருக்கிறது. அவுஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த இந்தச் சம்பவத்தில் குழந்தை தப்பினாலும், குழந்தையின் தாய் தீவிர மன அழுத்தத்துக்கு உட்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படிக் குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போவதைவிட எங்களூர் போல் மார்போடு அணைத்து அள்ளிச்செல்லலாமே? பிள்ளைக்கும் பெற்றவர்களுக்கும் ஒரு பிணைப்பாவது இருக்கும். அதைவிடுத்து தள்ளுவண்டில்களில் குழந்தைகளை ஏதோ குப்பைபோல் வைத்து.... அடப்போங்கடா

Friday 16 October 2009

கந்தசாமி-அருண்மொழிவர்மன்-சுஜாதா

கந்தசாமியில் இன்னொரு அபத்தம்
சென்ற ஞாயிற்றுக்கிழமை ‘ஏதிலிகள்' ஏற்பாடு செய்திருந்த 'சுடருள் இருள்' நிகழ்வு-2க்குப் போயிருந்தேன். ஆரம்பத்தில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் எந்த அறையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அருண்மொழிவர்மன் மூலம் டி.சே. தமிழன் என்கிற இளங்கோவின் அலைபேசி இலக்கத்தை எடுத்து அறைக்குள் செல்வதற்கு முன்னரே அன்று போடுவதாகச் சொல்லப்பட்ட The Boy in the Striped Pyjamas என்ற படத்தின் 15 நிமிடம் ஓடியே போய்விட்டது. இருட்டுக்குள் தடவித்தடவி ஒரு நிகழ்ச்சிக்கு (அதுவும் எம்மவர் நிகழ்ச்சிக்கு) பிந்திப் போய் அமர்ந்த அனுபவம் புதுமையாக இருந்தது. வழமையாக ஆகக் குறைந்தது அரை மணித்தியாலம் காக்க வைப்பார்கள்.

நிகழ்வுகள் முடிந்ததும் மேற்படி படத்தைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடைபெற்றது. அந்தப் படத்தில் இருந்த குறியீடுகள், பாதிப்பு அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இல்லாமல் (யூதர்கள்) பாதிப்பைக் கொடுத்தவர்களின் கோணத்தில் இருந்து (ஜேர்மானியர்கள்) பக்கமிருந்து கதை சொன்ன விதம், யூதர்களின் பிரச்சார யுக்தி என்றெல்லாம் நிறையப் பேசிக்கொண்டிருந்தபோது, (அல்லது அவ்வாறான உரையாடல்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது) தமிழ்சினிமாப் பக்கம் உரையாடல் திரும்பியது. அப்போது தர்ஷன் கந்தசாமி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா? அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா? அதாவது யூதன் என்றால் கொல்லலாம் என்பது பொதுப்புத்தியில் உறைந்து போய்விட்டது. நாளைக்கே ஈழம் பற்றியும் சர்வசாதாரணமாக இப்படி ஒரு வரி வந்துவிடலாம். சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் கேட்காது.

அருண்மொழிவர்மன் மீதான பொறாமை
நிகழ்வு முடிந்ததும் அருண்மொழிவர்மன் தான் புதிதாகக் குடியேறிய மனைக்கு வாருங்கள் சற்றுநேரம் பேசலாம் என்றார். சில பல பெரியவர்களும் சென்றதாலும், அருண்மொழியாரின் சினேகபூர்வமான அழைப்பை உதாசீனம் செய்ய முடியாமலும் அங்கே சென்றேன். அன்றைக்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பும் இருந்தது. எவ்வளவு நேரம் தாழ்த்தி பிறந்த நாளுக்குப் போக முடியுமோ அவ்வளவு நேரம் தாழ்த்த விரும்பிய எனக்கு இது நல்ல வாய்ப்பாகிப் போய்விட்டது. சிலருக்குத் தேநீரும் சிலருக்கு மற்ற நீரும் கொடுத்துவிட்டு, அருண்மொழிவர்மன் சமைக்கலானார். சமைக்கும்போது மனிதருக்கு அருகில் நின்று பேசிப்பேசித் தொல்லை கொடுத்ததால் கடுப்பானாரோ என்னவோ, ஒரு காரியம் செய்தார். அவருடைய புத்தகங்களைப் பார்வையிட அழைத்தார்.

அடப்பாவி... நாங்களெல்லாம் வீடு மாறிப்போகும்போது துணிகளையும், தட்டுமுட்டு சாமான்களையும் கட்டிக்கொண்டு வருவோம். இந்த மனிதர் புத்தகங்களைக் கட்டி எடுத்து வந்திருந்தார். என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இவ்வளவு புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர் இவர் மட்டுமே. அவரது வாசிப்புத்தான் அவரது எழுத்துக்களை மெருகூட்டி, வாசிப்பவருக்கு நல்ல வாசிப்பனுபவமாகத் தருகிறது. அத்தனை புத்தகங்களை ஒரு சேரப் பார்த்தபோது ஒரு தோழமை கலந்த பொறாமை ஏற்பட்டது. நானெல்லாம் கையில் காசிருந்தால் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் செலவளித்திருப்பேன். இனிமேல் தேடித் தேடிப் புத்தகங்கள் வாங்கப்போகிறேன். இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........

சுஜாதா ஒரு நிர்வாண வியாபாரி
அண்மையில் கானா பிரபாவின் றேடியோஸ்தபதியை மேய்ந்த ஒரு நாளில் அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி மீள் நினைவில் என்றொரு பதிவு கண்ணில் தட்டுப்பட்டது. சுஜாதா மீதான மரியாதை இன்னொரு படி கூடிப்போய்விட்டது. காரணம் அந்தப் பேட்டியின் இறுதியாக கானா பிரபாவின் கேள்வி ஒன்றுக்கு சுஜாதா சொன்ன பதில். 17.42 நிமிடங்கள் ஓடும் அந்த ஒலிப்பேட்டியில் சுஜாதாவின் இலக்கியம், தொழில் நுட்பம், கவிதை, எழுத்துலகு எல்லாவற்றையும் விட ஒரு விஷயத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்தார். அதுதான் என்னைக் கவர்ந்தது.

கானா பிரபா: நீங்கள் ஈழத்தமிழர்களின் குறைகளையும் அங்கு நடக்கும் போர்ச்சூழலையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மனிதராக, அதாவது எழுத்தாளர் என்ற பாவனையைக் கடந்து, ஒரு சாதாரண மனிதராக உங்களுடைய பார்வையை, கருத்துக்களைப் பல விடயங்களில் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். இன்று(2002ல்) இந்த ஈழத்தமிழர்களுடைய நிலையைப் பற்றிய உங்கள் பார்வையைச் சொல்லுங்களேன்?

சுஜாதா: ஈழத்தமிழர்களுக்கு நான் சொல்லவேண்டிய மிகமுக்கியமான, மிகமுக்கியமான அறிவுரை என்று சொல்லவேண்டாம், மிக முக்கியமான விருப்பம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், தாய்நாட்டை மறக்காதீர்கள். அந்த விதத்தில் உங்களுடைய திறமையும் உங்களுடைய அந்த நாள் நிச்சயம் வரும் என்றுதான் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்களை நம்பாதீர்கள். எங்களை நம்பினால் நாங்கள் கைவிட்டுவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் நிறையப் பேசுவோம். உங்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒரு மனோதத்துவ ரீதியில் இருக்குமே ஒழிய செயற்பாட்டில் இருக்காது. அதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது உங்களுக்கு சரியாக உதவவில்லை என்று.

சுஜாதாவை நே(வா)சித்தவர்களுக்கு இன்னும் ஒரு காரணம், அவரை இன்னும் அதிகமாக நேசிக்க. தூஷித்தவர்களுக்கும் இன்னுமொரு காரணம், ‘எப்படி ஒரு பார்ப்பான் எங்களை நிர்வாணமாக்கலாம்' என்று திட்ட. அவர் திறமைகளை மட்டுமல்ல, சில துரோகங்களையும் முன்கூட்டியே கண்டுணர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கானா பிரபா அண்ணனுடனான அந்தப் பேட்டியை கீழே முழுமையாக இணைக்கிறேன். அந்தப் பேட்டியில் சுஜாதா சொன்னதைவிட இன்னொரு பாடமும் இருக்கிறது. தரமான ஒரு வானொலிப் பேட்டி எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் பேட்டி.


Sujatha Interview - Kana Praba

Monday 12 October 2009

பிள்ளைகளின் சுயவெளி

சென்ற செவ்வாய்க்கிழமை, மருமகனை மிருதங்க வகுப்புக்கு அழைத்துச் சென்றிருந்தேன். வகுப்பு நேரம் தொடர்பாக ஆசிரியருடன் உரையாட வேண்டியிருந்தது. உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்களைக் கடந்து போன ஒரு மாணவனைப் பார்த்து உயர்ந்த குரலில், ‘உப்பிடியெல்லாம் வகுப்புக்கு வரேலாது. எங்கை அம்மா, எங்கை அப்பா?' என்று அதட்டினார். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த மாணவன் கொஞ்சம் ‘ஸ்ரைலாக' தலைமயிர் வெட்டியிருந்தான். ‘உப்பிடி எல்லாம் பிள்ளைகளைக் கொண்டுவரக்கூடாது பாருங்கோ. உப்பிடி பிள்ளை வளக்கிறதெண்டா காரில ஏத்தி ரவுடியளோட விடுங்கோ. இஞ்ச அனுப்பவேண்டாம்' என்று கூட்டிவந்த தாய்க்கும் ஏச்சு விழுந்தது. நான் பேசாமல் என்னுடைய காருக்குள் வந்துவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் தாயும் மகனும் வெளியே வந்தார்கள். இருவருக்கும் முகம் கறுத்திருந்தது. எங்கோ வெளியே போனார்கள். ஒரு அரை மணித்தியாலத்தில் திரும்பி வந்தார்கள். அந்த மாணவனின் தலைமயிர் ஒழுங்காகத் திருத்தி வெட்டப்பட்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. ஆசிரியர் செய்தது சரியா தவறா என்கிறமாதிரியான ஒரு விவாதம் என மனதுக்குள்ளாக எழுந்தது. அந்த ஆசிரியர் மட்டுமல்ல, பல பெற்றோர்களும் மகன்கள், மகள்களின் உடைகள் தடக்கம் பல விஷயங்களில் அவர்களின் சுயவெளிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக எனக்குப்படுகிறது.

பெற்றோர்கள் பலர், தம்முடைய பதின்ம வயதுப் பிள்ளைகளின் உடைத் தெரிவில் பயங்கரமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இங்கே பால் வேறுபாடு என்கிற கதைக்கே இடமில்லை. ஆனால் பிள்ளைகள் தம் சகபாடிகள் போல் உடை உடுத்துவதற்கு ஆசைப்படுகின்றன. காது குத்திய எல்லா ஆண் பிள்ளைகளும் ‘ரவுடி' என்கிற ஒரு பெரிய வட்டத்துக்குள் வந்துவிடுவது வழமையாகிவிட்டது. அதே நிலையில்தான் சிகையலங்காரமும். சில பெற்றோர் இதற்காகவே தலைமயிர் வெட்டும் இயந்திரங்களை வீட்டில் வாங்கிவைத்து பிள்ளைகளுக்கு தாமே சிகையலங்காரம் செய்கிறார்கள், அல்லது முடிதிருத்தும் இடத்தில் தங்களின் சிகைபோலவே வெட்டிவிடச் சொல்கிறார்கள். இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும், பிள்ளையின் சுயவெளியில் இவர்கள் நுழைவதால் வரும் பெரிய பிரச்சினைகளுக்கு இந்தச் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் காரணமாகின்றன.

இப்படியான அத்துமீறல்களுக்கு (பிள்ளைகளின் பார்வையில்) சில காரணங்களைப் பெற்றோர் முன்வைக்கிறார்கள். காது குத்தும், விதம் விதமாக தலையலங்காரம் செய்யும், வித்தியாசமாக உடையணியும் பிள்ளைகளை குழுமங்களில் சேர்ந்து நாசமாகிப் போயிருக்கும் இளைஞர்கள் தங்களவர்களாகப் பாவித்து, குழுமங்களுக்குள் இழுத்துப் போய்விடுகிற அபாயம் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஒரு பிள்ளையின் நடத்தை சமூகத்தால் தீர்மானிக்கப்படும்போது, இப்படியான உடை, சிகை மற்றும் இன்னபிற அலங்காரங்கள் குறிகாட்டிகளாகத் தொழிற்படுவதாக பல பெற்றோர் நம்புகிறார்கள். சற்றே கூர்ந்து பார்த்தோம் என்றால், அவர்களின் பயத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த ஆசிரியர் அன்றைக்குச் செய்தது ஒரு வகையில் ஒரு பதின்ம வயதுப் பையனின் சுய வெளிக்குள் அத்துமீறி நுழையும் ஒரு செயலாகவும் பார்க்கப்படலாம். அதேவேளை, பெற்றோரின் கண்ணோட்டத்தில் தன்னிடம் படிக்கிற மாணவன் வழிதவறிப் போகாமல் இருக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாகக்கூட பார்க்கப்படலாம். கலாசார இடைவெளி, வயது இடைவெளி, சுவை இடைவெளி போன்ற காரணங்களை ஒரு பொதுவான பார்வையாளனாக இருக்கிற நான் முன்வைக்கலாம். எது எப்படியோ, பொதுப்புத்தியில் ஆழமாக விழுந்துவிட்ட சிலவற்றை மாற்றுவது கடினமே.

Saturday 10 October 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-7

முன்னைய எல்லாப் பாகங்களையும் இங்கே சென்று படியுங்கள்.

சிவா பிள்ளை போன்றவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, ‘உவர் காசுக்குத்தான் உதெல்லாம் செய்யிறார். சும்மா நேரத்தை வீணடிக்கோணும்' 'உதெல்லாம் சும்மா பேக்காட்டு வேலை' ‘உவர் சொல்லி நான் ஏன் கேக்கோணும்' என்பது மாதிரியான வசவுகள். அதுவும் பணம் சம்பந்தமாக இப்படியானவர்கள் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆபாசமானவை. உண்மையில் இப்படியான பட்டறைகள் நடத்துபவர்களுக்கு இங்கே கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் தொகை தலைசுற்ற வைப்பது. உதாரணமும் ஒன்று சொல்ல முடியும்.

எனக்குப் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் சிறு தொழில் தொடங்குபவர்களுக்கான பட்டறைகளை நடத்துபவர். அவரது இரண்டு மணிநேரப் பட்டறைக்கு, அனுமதிக் கட்டணம் மட்டும் 30-40 டொலர்கள். அதுவே அவர் ஒரு நிறுவனத்துக்காக இந்தப் பட்டறையைச் செய்கிறார் என்றால், அவருக்கு அந்த நிறுவனம் 175-250 டொலர்கள் அளிக்கவேண்டும் (அவர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பற்றிய விபரங்கள் இல்லை என்றாலும் அவருடைய வலைத்தளம் உங்கள் பார்வைக்கு இதோ). இப்படியான ஒரு நாட்டில் யாரோ ஒரு உறவினரின் திருமண வீட்டுக்கு வந்த சிவா பிள்ளை எங்களுக்காக மூன்று மணித்தியாலங்களை ஒதுக்கினார். இப்படியானவர்களுக்கு என்னுடைய பார்வையில் எவ்வளவும் கொடுக்கலாம், சன்மானமாக. ஆனால், அவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. (இல்லாவிட்டால் சொந்த அலுவலாக வந்த மனிதருக்குப் பட்டறை நடத்தும் அவசியம் எதற்கு?).

அடுத்ததாக எம்மவரிடம் உள்ள இன்னொரு குணம், ஆராய்ந்து அனுபவித்துப் பார்க்காமல் ஒன்றைப் பற்றி முடிவெடுப்பது. அன்றைய பட்டறைக்கு வராத சில ‘பிரபல' ஆசிரியர்களின் கேள்வி ‘அப்படி என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறார் இவர்?' என்பதேயாகும். என்னுடைய கேள்வியும் அதேதான், சங்கீதக் கச்சேரிகளிலும், பரத நாட்டிய அரங்கேற்றங்களிலும், கனடா தின வாண வேடிக்கைகளிலும், சாமத்திய வீடுகளிலும், சினிமாப் படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களிலும் அப்படி என்னத்தைப் புதிதாக நீங்கள் சொல்லிவிட்டீர்கள்? மேற் சொன்ன வழிகளில் மூன்று மணிநேரத்தைச் செலவிடுவதைவிட இது எத்தனையோ மேல்.

அதுவும் என்னை மிகக் கோபப் படுத்துவது இதுதான். எனக்கும் இசைக் கச்சேரிகளுக்கும் வெகுதூரம். கடைசி வரிசையில் சந்தோசமாக நித்திரை கொள்வேன் இல்லையென்றால் ரசிக சிகாமணிகளின் அபத்தங்களை ரசிப்பேன். ஒரு முறை இப்படித்தான் ராஜேஷ் வைத்யாவின் கச்சேரியில் அவர் வாசித்த கீர்த்தனங்களில் அசந்தர்ப்பமாக எங்கள் ரசிக சிகாமணிகள் கைதட்டித் தொலைக்க கடுப்பான ராஜேஷ் வைத்யா கழிவறை போகிற சாக்கில் இவர்களைத் திட்டியதைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்து கர்னாடக இசை வளர்க்கும் எங்கள் சமூகம் என்றைக்கும் பிரயோசனமான எந்த நிகழ்வுக்கும், பட்டறைக்கும் ஆதரவு தருவதேயில்லை. சமீபத்தில் நடந்த தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்குக்கும் இதே நிலைதான்.

அதே போல் சிவா பிள்ளை அவர்களின் கருத்தரங்கிலேயே முன் வைக்கப்பட்ட ஒரு நேரடியான குற்றச்சாட்டு, சில இடங்களில் நீங்கள் இந்தியத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாக. அந்தக் குற்றச்சாட்டின் அடிநாதமாக இருந்தது ‘தூய தமிழ்' என்ற வறட்டுக் கூச்சல். அந்தக் கூச்சல் போடுபவர்கள் ‘கதிரை' என்ற சொல்லையும் அவர்களால் குற்றம் சாட்டப்படுகிறவர்கள் ‘நாற்காலி' என்ற சொல்லையும் பயன்படுத்துவது வேடிக்கை. இந்தியத் தமிழர்களுக்கு அப்துல் ஹமீது உதவியுடன் தெனாலியில் பேசப்பட்ட தமிழ்தான் இலங்கைத் தமிழ், அதுதான் சுத்தத் தமிழ் என்ற மாயையும், இலங்கைத் தமிழர்களுக்கு ‘லூஸ் மோகனால்' பிரபலப்படுத்தப்பட்ட ‘இன்னா நைனா'வும், இன்றைக்கு எல்லாப் படங்களிலும் பேசப்படும் ‘அவிய்ங்க' ‘என்னவே' போன்ற தமிழ் இந்தியத் தமிழ் என்ற மாயையும் நன்றாகப் புகட்டப்பட்டு இருக்கிறது. இருவருமே தூய தமிழ் பேசுவதில்லை, எழுதுவதில்லை எனபதே கசப்பான உண்மை. (தூய தமிழ்ச் சொற்களாகக் கருதப்பட்ட பல சொற்கள் மலையாளத்தில் வாழ்வதாக எங்கோ கேள்விப்பட்டேன், எங்கென்று மறந்துவிட்டேன்).

இவ்வாறாக, என் தமிழ் சரி உன் தமிழ் பிழை என்ற வாதத்திலும், தமிழை வளர்க்க யாருக்கு உரிமை இருக்கிறது என்ற வாதத்திலும் தமிழ் மோசமாகக் கொல்லப்படுகிறது. வேற்று மொழி மோகம் தமிழைக் கொல்கிறது என்கிற குற்றச் சாட்டைவிட, தமிழ் மொழிக்கு ஏக போக உரிமை கொண்டாடுபவர்களால் தமிழ் இன்னும் வேகமாகச் செத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டியிருக்கிறது.

அதே போல், தொழில்நுட்ப விஷயங்களை இளைஞர்களிடம் கற்றுக் கொள்ளப் பெரியவர்கள் தயங்குகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள். இதுவே அனுபவமும், வயதும் முதிர்ந்த ஒருவர் கற்றுக் கொடுக்க வந்தால் அதற்கும் ‘உவர் பழம் ஆள்.. உவரிட்ட புதுசா ரெக்னோலொஜி பற்றி என்ன இருக்கும். ஆரும் இளம் பொடியள் எண்டாலும் பரவாயில்லை' என்கிறார்கள். இவர்களின் பிரச்சினை கற்றுக் கொடுப்பவரில்லை, இவர்களிடம் குடிகொண்டிருக்கும் ஈ.கோ. எல்லாப் பெரியவர்களையும் சொல்லவில்லை. தொழில்நுட்ப விஷயங்களைத் தொலைபேசியில் அழைத்தோ, வேறு விதமாகவே கற்றுக்கொள்வதில் தீராத காதல் கொண்ட சிலர் இருக்கிறார்கள். ஆனால் பலர் ஒரு நிலைக்கு மேல் கற்றுக் கொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதனால் தாங்கள் பின்தங்கிப் போவது அவர்களுக்கு ஏனோ உறைப்பதில்லை.

நம்மவர்கள் மீதொரு குற்றச்சாட்டு இருக்கிறது என்றேனே, அதைச் சொல்கிறேன். இப்படித்தான் இந்தியாவில் ஒரு கற்பித்தல் பற்றிய கருத்தரங்கு நடந்த போது, இலங்கையில் இருந்து கொஞ்ச ஆசிரியர்களைக் கல்வித் திணைக்களம் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் காசு செலவளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்களாம். அங்கே போன அவர்கள் கருத்தரங்கு நடந்த நாட்களில் காலையில் அல்லது போய் கருத்தரங்கில் வழங்கப்பட்ட தகவல்கள் உள்ளடக்கிய பிரசுரங்களை மட்டும் வாங்கிக் கொள்வார்களாம். மற்ற நேரங்களில் ஊர் சுற்றுவதும், கொள்வனவு செய்வதுமாய் அலைந்தார்களாம். தமிழைக் கொலை செய்வதில் முன்னுக்கு நிற்பதாய்ச் சொல்லப்படும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் கருத்தரங்கு முழுவதும் பொறுமையாக இருந்தது மட்டுமன்றி, பல சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்தார்களாம். இவர்களை என்னென்று சொல்வது?

சிவா பிள்ளை போன்ற சிலரின் முயற்சிகளுக்கு நாங்கள் தோள் கொடுக்க வேண்டும், ஆதரவளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், அவர்கள் பற்றிய தூற்றலைத் தவிர்க்கவேண்டும். நான் எப்போதும் சொல்வது போலவே, நாங்கள் எப்போதுமே நடுநிலைத் திறனாய்வு செய்வதில் (Criticising) பின்னுக்கும் தூற்றுதலில் (Bashing) முன்னுக்கும் நிற்பவர்கள். ஆகையால்தான் எல்லா விஷயத்திலும், திறமையும், உழைப்பும் இருந்தும் பின்னுக்கு நிற்கிறோம். எங்கோ ஒரு ஒலிப்பதிவில் சோமிதரன் சொன்னமாதிரி நாங்கள் சைக்கிள் போல்ஸ்சுக்கு தமிழ் கண்டுபிடிக்கும் காலத்தில் சைக்கிள் போல்ஸ் பாவனையில் இல்லாமலிருக்கும். எங்களவர்களை நாங்களே பிடித்து கீழே இழுக்கும் மடமைத்தனம்தான் சோமியை எரிச்சலுக்குள்ளாக்கி இவ்வாறு பேசத் தூண்டியதோ தெரியாது, ஆனால் அவரது கருத்தோடு எழுத்துக்கு எழுத்து (குற்றுகள், விசிறிகள் உட்பட) உடன்படுகிறேன்.

சிவா பிள்ளை போன்றவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக நாங்கள் செய்யக்கூடியத உதவி, அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்தி, அயராத அவர்களின் உழைப்புக்குரிய பலனை அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு அறுவடை செய்து காட்டுவது மட்டுமே. அதுதான் அவர்களுக்கும் வேண்டும், எங்களுக்கும், எங்கள் சந்ததிக்கும் வேண்டும். இதுவரை காலமும் என்னுடைய இந்தத் தொடர் பதிவை வாசித்து வந்த நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இவ்வளவுதான். என்னுடைய பதிவுகளையோ, வலை மனையையோ நீங்கள் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டாம். சிவா பிள்ளையை அறிமுகப்படுத்துங்கள். என்னை நீங்கள் சிவா பிள்ளையின் சம்பளமில்லாத மக்கள் தொடர்புப் பணியாளனாகக் கற்பனை பண்ணிக்கொண்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல மனிதரின் முயற்சிக்கு என்னாலான சின்ன உதவி இது. அவ்வளவுதான்.

Siva Pillai
Dept of Educational Studies
Goldsmiths College, University of London
Newcross, London SE14 6NW
http://homepages.gold.ac.uk/siva
sivapillai@hotmail.com
Tel: +44 (0) 20 7919 7316
Fax: +44 (0) 20 7919 7313
MOB: 07951 476 706

**முற்றும்**

நான் பார்க்கும் உலகம்: ஒக்ரோபர் 04-ஒக்ரோபர் 10 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்- பிறந்தகம்+ இந்தியா
தி.மு.க. கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறது. ரி.ஆர். பாலு தலைமையில் கனிமொழி, திருமாவளவன் ஆகியோரை உள்ளடக்கிய பத்துப் பேர் கொண்ட குழுவின் விஜயத்துக்கான காரணம் விளங்கவேயில்லை. கருணாநிதி அவர்கள் இந்தக் குழு அரசாங்கத்தால் அனுப்பப்படவில்லை என்று அறிவித்திருக்கிறார். அந்தந்தக் கட்சிகள் தமது சொந்தச் செலவிலேயே உறுப்பினர்களை அனுப்புகின்றன என்று அறிவித்திருந்தார். இது கண்துடைப்பு நாடகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இலங்கை அதிபர் ராஜபக்ச, அமைச்சர்கள் சிலர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை இவர்கள் சந்திப்பார்களாம். மானிக் பாமிலும் வேறு சில அகதி முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கும் அகதிகளையும் பார்ப்பார்களாம். ஆனால் யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்குமான விஜயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணங்களுக்குப் போகமாட்டார்கள் போல் தெரிகிறது. இந்திய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் இந்த முறை கொஞ்சம் உண்மை இருக்கிறது.


புல்மோட்டை முகாம் ஒன்றிலிருந்து 78 தமிழர்கள் வெள்ளிக்கிழமை இரவு அரசபடையினரால் பலவந்தமாக பவள் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இரவில் திடீரென உள்ளே நுழைந்து பலவந்தமாக யுவதிகளை ஏற்றிச் சென்ற இராணுவத்தினர் மீண்டும் வந்து இளம் பெண்களை ஏற்றிச் செல்ல முயன்றதாகவும், மக்கள் எல்லாம் ஒன்றுகூடி அதனைத் தடுத்து நிறுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணான செய்தியாக இது பட்டாலும், உண்மைகளை உறுதிசெய்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது இலங்கையில்.

அரசியல்-புகுந்தகம்
24 வயதான சகாரியா அமாரா என்ற ரொரன்ரோ 18 என்கிற பாரிய தொடர் குண்டுவெடிப்புத் திட்டம் ஒன்றுக்குத் தாங்கள் திட்டமிட்டிருந்தோம் என்று பிராம்ப்டன் நகரநீதி மன்றம் ஒன்றில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ரொரன்ரோவின் முக்கிய வர்த்தக வலயமான Bay Street ரொரன்ரோ பங்குச் சந்தைக்கு அருகில் ஒரு குண்டும், கனேடிய உளவுத்துறை அலுவலகத்துக்கு அருகே இன்னொரு குண்டும், ரொரன்ரோவிலிருந்து ஒட்டாவா செல்லும் 401 நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இராணுவ முகாமில் மூன்றாவது குண்டும் வைப்பதற்குத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இனிமேல் கனடாவிலும் இஸ்லாமியர்களின் கதி அதோ கதிதான். உண்மையிலேயா இப்படியான வேலைகளில் இந்தச் சகோதரர்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா இல்லாவிட்டால் அவர்களை மட்டுமே தேடித்தேடிப் பிடிக்கிறார்களா?


இந்த வழக்கு தொடர்பான செய்திகளில் ஒரு விசித்திரமான விஷயம் இருக்கிறது. இது வரை, அவரது புகைப்படம் என்று கருதப்படும் ஒரு புகைப்படத்தை மட்டுமே ஊடகங்கள் எங்கோ தேடி எடுத்துப் போட்டிருக்கின்றன. வழக்கு விசாரணை செய்யப்படும் நீதிமன்றத்தில் அவரைப் பார்த்து வரையப்பட்ட சித்திரமே ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல வழக்குகளிலும் இப்படியான ஒரு நடைமுறையையே பின்பற்றுகிறார்கள். இதே போல் இரண்டொரு கற்பழிப்பு வழக்கு, ஒரு கொலை வழக்கிலும் செய்தார்கள்.

அரசியல்-உலகம்
இந்த வார உலக அரசியலில் எல்லாச் செய்திகளையும் பின்தள்ளி முன்னே வந்து நிற்பது, ஒபாமாவும் அவருக்குக் கிடைத்த உலக அமைதிகான நோபல் பரிசும். உலகின் பல தலைவர்களுக்கு பெரியண்ணனுக்குக் கிடைத்த விருது எரிச்சலளித்தாலும், பெரியண்ணனைப் பகைக்கமுடியாமல் அடக்கி வாசிக்கிறார்கள். வன்முறைக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று தலீபான் (யார் சொல்வது என்று பாருங்கள்) அமைப்புக் கிண்டல் செய்திருப்பதைத் தவிர இன்னும் கண்டனக் குரல்கள் எழவில்லை. என்ன, 'இதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, என் மீதான பொறுப்பு அதிகரித்திருக்கிறது' என்று அடக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஒபாமா.

தனிப்பட்ட முறையில் ஒபாமாவை எனக்குப் பிடிக்கும். என்னதான் சொன்னாலும் அமெரிக்கா ஜனாதிபதிகளால் ஆளப்படுவதில்லை. முடிவுகள் எடுப்பது அவர்களின் தேசிய பாதுகாப்புக்கான அமைப்புகள், FBI, CIA மற்றும் தொழிலதிபர்கள் என்பதும், ஜனாதிபதி, அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் எடுக்கும் முடிவுகளை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லும் தூதுவர்கள் என்பதும் அமெரிக்க அரசியலைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். என்ன, ஒபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசு இந்தத் திரைமறைவு ஆட்களை எந்தளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மற்றபடி, ஒரு சாதாரண பிரஜையாக ஒபாமாவில் தெறிக்கும் கம்பீரம் எனக்குப் பிடிக்கும்.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
பொருளாதாரம் பற்றிய ஒரு வருத்தமான செய்தி. கனடாவில் இந்த வருடம் ஓகஸ்ற் 31ம் திகதி வரைக்கும், 143, 541 நுகர்வோர்கள் கடன் தீர்த் திறனை இழந்திருக்கிறார்கள். ஓகஸ்ற் மாதத்தில் மட்டும் 10,000 பேர் தனிப்பட்ட வங்குரோத்துக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதே ஓகஸ்ற் மாதம் 466 வர்த்தக நிறுவனங்கள் தம் கடன் தீர்த் திறணை இழந்திருக்கிறார்கள். தனிப்பட்ட வங்குரோத்துக்கள் அல்பேர்ட்டா மாகாணத்திலேயே அதிகளவில் (886) நிகழ்ந்திருக்கின்றன.

கொஞ்சக் காலமாக பலருக்கு வேலை அளித்து வந்த அல்பேர்ட்டாவிலும் வேலையில்லாத் திண்டாட்டம் சற்றே தலைதூக்கியிருந்தது. இப்போது வங்குரோத்துகள் பற்றிய செய்தி. இதற்கெல்லாம் மருந்து தடவுவது போல் அல்பேர்ட்டாவில் செப்ரெம்பர் மாதம் வேலையிழப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக இன்னொரு அறிக்கையை அல்பேர்ட்டாவுக்கான குடிவரவு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் வெளியிட்டிருப்பது ஆறுதல்.

விளையாட்டு
கிரிக்கெட் உலகின் இன்னொரு பரபரப்பான மாற்றமான சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா இரண்டு அணிகளும், இலங்கை, மேற்கிந்தியா, நியூசிலாந்தில் இருந்து தலா ஒவ்வொரு அணியும், இந்தியாவில் இருந்து மூன்று அணிகளும் விளையாடுகிறன. இதுவரை நடந்து முடிந்திருக்கும் ஐந்து போட்டிகளில் தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகள் கலக்கி வருகின்றன. முழுமையான போட்டிகள் பற்றிய விபரங்களை இங்கே பெறலாம்.

சீனாவில் நடைபெற்றுவரும் பீஜிங் ஓபன் ரென்னிஸ் போட்டிகளில் அரையிறுதியில் நடால், க்ரோசியாவின் மரின் சிலிச்சிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருக்கிறார். ஃபெடரருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நடால் காயங்களால் சமீபகாலமாக அவதிப்படுவது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஃபெடரரை எனக்கு மிகவும் பிடித்தாலும், நடால் போன்ற கோலாகலமான விளையாட்டு வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவது ஏமாற்றம் அளிக்கக்கூடியது. போட்டிகளைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லும் திறமை படைத்தவர்கள் இவர்கள். அதுவும் நடாலின் உடல்வாகுக்கும் அவர் சமீபகாலமாக சந்திக்கும் காயங்களுக்கும் தொடர்பே இல்லாமலிருக்கிறது. இங்கேதான் ஃபெடரர் தனித்து நிற்கிறார்.

சினிமா

தமிழ் சினிமா உலகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அது பற்றிப் பதிவும் போட்டாயிற்று. சமீபத்தில் நான் பார்த்த இன்னொரு சினிமா பற்றிச் சொல்லவேண்டும். புரட்சி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வரக்கூடிய சே குவேராவின் The Motorcycle Diaries என்கிற புத்தகத்தின் அடிப்படையில் அதே தலைப்பில் உருவான படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 'சே' பற்றி முழுமையாகத் தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 'சே' யின் வாழ்க்கையைத் திசைமாற்றிய மோட்டார் சைக்கிள் பயணங்களில் 'சே' சந்திக்கிற அவலங்கள் வலியுடன் காட்டப்படவில்லை என்று நினைக்கிறேன். ‘சே' பற்றி அரசல் புரசலாகப் படித்தவற்றில் இருந்து, படத்தில் அவரது மாற்றம் மற்றும் சிந்தனைகளின் வீரியம் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்லலாம். ‘சே' பற்றி இன்னும் கொஞ்சம் நேரம் செலவளித்து இன்னும் ஆழமாக திரைக்கதை அமைத்து, பொலிவியாக் காடுகளில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அந்த அழகான போராளிக்கு நியாயம் செய்திருக்கலாம்.

ஒரு வருத்தம்
அவர்களின் முகம்கூட எனக்குத் தெரியாது. சமூகத்தில் அடக்குமுறைக்கு எதிரான போராளிகளாக, அறிவுஜீவிகளாக, கட்டுடைப்பவர்களாக, அறச்சீற்றம் கொண்டவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். என்னையும் வாசிக்க வைத்தார்கள். கட்டுடைத்தவர்கள் இப்போது மூக்குடைத்திருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்களை பின்னூட்டம் எல்லாம் போட்டு இவர்களுக்கு வாளி எல்லாம் வைக்காவிட்டாலும், சமீபகாலமாக இவர்களிடம் தங்களுக்கு ஆதரவான ஆட்களைத்தவிர மற்றவர்களை துரும்பாகக் கூட மதிக்காமை, பெண்களை எடுத்தெறிந்து பேசுதல் ('போய்க் கவிதை எழுதிறதுதானே...'), எல்லாவற்றையும் தாண்டி, மோசமான தனிமனிதத் தாக்குதல் என்று போய், இப்போது நேரடித்தாக்குதலும் நடத்தி முடித்திருக்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது. (ஒருவேளை இதைத்தான் கட்டுடைத்தல், கட்டுடைத்தல் என்கிறார்களோ?)

நெகிழ்ச்சி
எங்கேயோ எதையோ தேடும்போது ஆயில்யன், கானா பிரபாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாக இப்படி எழுதியிருந்தார்.
நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!
ஒரு கணம் உண்மையில் கண்ணோரம் நீர் சிலிர்த்தது.

எப்புடி?
நெகிழந்தால் மட்டும் போதுமா? ஆப்படிக்க வேண்டாமா. ஆயில்யனின் அதே வாழ்த்தில் தமிழன் கருப்பி இப்படிக் கேட்டிருந்தார்.
///அண்ணனோட வயசைத்தான் யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க...
பெரிய ரகசியமாவே இருக்கய்யா!!!///

அதைத் தேடிக் கண்டுபிடித்தாயிற்று. வருஷம் 16 படம் வந்தபோது அண்ணனுக்கு 16 வயசு. அந்தப்படம் 1989ல் வந்தது என்று நினைக்கிறேன். இப்ப எத்தினை வயசெண்டு கண்டுபிடிக்கலாம்தானே. (ஏதோ.. என்னாலை முடிஞ்சது. அடுத்த குறி... ச.....)