நாளுக்கு நாள் மணக்கும் மட்டன், ருசிக்கும் றால், சிவாஸ் ரீகல், ஹெனிக்கன், ஜமேக்கன் ரம், வித விதமாய் சோறு, சலாடுகள், பழக் கலவைகள், ஐஸ் கிரீம் என்று கிட்டத்தட்ட களிப்பாகத் தான் போகிறது இந்த மார்கழி. நத்தார் கொண்டாட்டமும் புதுவருட வரவேற்பும். இதிலெல்லாம் நான் பங்கெடுப்பதில்லை என்று பொய்சொல்ல மனம் ஒப்பாவிட்டாலும், எதையோ ஒன்றை இழந்த மனநிலை எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஊரில் இருந்தபோது மார்கழி ஒவ்வொரு வயதுக்கு ஒவ்வொரு கோலமாய் மகிழ்வித்துப் போனது. அந்த சுகமான அனுபவங்களை மனம் அசைபோட்டுப் பார்க்கும்போதே சில்லிடுகிறது மனம்.
சின்ன வயதில் மார்கழி விடுமுறையில் பகல் முழுதும் பட்டம் பறக்க விடுவதிலேயே கழியும். மார்கழிக்கென்றே இரு வகை வாசனைகள் தனித்துவமானவை. ஒன்று மார்கழி முடிகிற தறுவாயில் கடையிலிருந்து அடுத்த வருடப் பாடசாலைத் தேவைகளுக்காக அப்பா கொண்டுவரும் புதுக் கொப்பிகளைப் பிரிக்கும்போது வரும் காகித வாசனை. அதுவும் அக்காக்கள் வீட்டில் இருந்த வரையில் அப்பா ஐந்தாறு டசின் கொப்பிகளைக் கொண்டுவருவார். அவற்றைப் பிரித்து அட்டைக்கு உறை போடுவோம். அதுவும் ‘ஸ்ரேப்ளர்' அடித்த நாற்பது தாள், அறுபது தாள் கொப்பிகளை அப்பா ‘கொறளோன்' நூல் போட்டுக் குத்திக்கட்டித்தான் உறை போடுவார். மண்ணிறத்தாள், மணிலாத்தாள் இரண்டில் ஏதாவது ஒன்றில் அக்காமார் உறை போட, எனக்கு மட்டும் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்ரார்' தாங்கி வரும் வண்ண வண்ணப் புகைப்படங்கள் உறைகளாவது பெருமையாயிருக்கும். சில வேளை அதற்கு மேலே மணிலாத் தாள் போட்டாலும், அதைக் கிழித்து படங்களைக் வெளியே காட்டுவதில் ஒரு மிதப்பு இருக்கும்.
இன்னொன்று பட்டத்து நூலின் நைலோன் வாசனை, பட்டத்தாளின் வாசனை, பட்டம் ஒட்டக் கிண்டிய கோதுமைப் பசையின் வாசனை என்று ஒன்றுகட்டி வரும் இன்னொரு வாசனை. எனக்குத் தெரிந்து நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் இந்த வாசனைகளை அனுபவிக்காமல் யாருடைய குழந்தைப் பருவமும் கடந்திருக்குமா என்பது சந்தேகமே.
எங்கள் மார்கழியின் இன்னொரு அழகான அனுபவம், திருவெம்பாக் காலம். சின்னப் பொடியன்கள் எல்லாம் சங்கு, சேமக்கலம் எல்லாம் எடுத்துக்கொண்டு விடியலிலேயே புறப்பட்டுவிடுவார்கள், துயிலெழுப்ப. பதின்ம வயதுகளுக்கு வரும் முன்னர் அம்மா என்னையும் துயிலெழுப்பி விடுவார். அப்பா கோயிலை என்றைக்கும் மறக்காதவர். சங்கு, சேமக்கலக் கூட்டத்தோடு போகாவிட்டாலும் நடுங்கும் குளிரில் அம்மா வைத்த சுடுதண்ணீரில் குளித்து அப்பாவுடன் கோயில் போவதில் ஒரு ‘த்ரில்' இருந்தது என்றே சொல்லலாம். ‘லிங்கம் பேக்கரி' ராசலிங்கத்தின் மகள்களுக்கும் எனக்கும் அந்தப் பனியில் ஒரு பனிப்போர் நடக்கும், கோயில் மணியை யார் அடிப்பது என்று. அநேகமான தருணங்களில் அப்பா நேரத்துக்கே கோயிலுக்குப் போய்விடுவதால் குலனையில் மணியை நான் குத்தகைக்கு எடுத்துவிடுவேன். ஆனால் குழவியடி அம்மனுக்கு அவர்கள் குறுக்குப் பாதையால் ஓடிவந்து என்னை முந்திவிடுவார்கள். பிரசாதம் மட்டும் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதால் அதில் போட்டிபோட மாட்டோம். சிலவேளைகளில் குலனை அய்யரோ, அம்மன் கோயில் அய்யரோ விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பூத்தட்டு இதில் ஏதாவது ஒன்றைத் தந்து ‘எல்லாருக்கும் காட்டுங்கோ' என்று சொன்னால் பயங்கரப் பெருமையாக இருக்கும்.
இதே காலங்களில் பனியில் நனைந்து சிரிக்கிற பூக்கள் அழகாயிருக்கும். தொடரும் தை மாசியிலும் பனி பொழிவதால் அந்தக் காலைவேளைகள் மனதை மகிழ்விப்பதாயே இருக்கும். நாள்தோறும் தாயறையில் சாமிப் படங்களுக்கு அப்பா பூப்பறித்து வைப்பார். அதற்காக வளர்க்கப்பட்ட பூமரங்கள் முற்றத்தை அலங்கரித்திருக்கும். மூன்று நிறங்களில் செவ்வரத்தை நின்றது. நந்தியாவெட்டை, நித்தியகல்யாணி, தேமா, மல்லிகை, நீலோற்பலம், ரோசா எல்லாம் நின்றது. அதிலும் இந்த நந்தியாவெட்டையும், நித்தியகல்யாணியும் கோடை காலத்திலேயே பயங்கரக் குளிர்ச்சியாயிருக்கும். பனிக்காலத்தில் செல்லவும் வேண்டுமா? அந்தக் குளிர்மைக்காகவே அவற்றில் சிலவற்றை எட்டிப் பறிப்பதுண்டு.
வரப்போகிற புதிய ஆண்டை வரவேற்பதற்குரிய ஆயத்தமாகவே ஊரில் மார்கழி மாசம் இருக்கும். தை பிறக்கும்போது புது வகுப்புக்குப் போகிற ஆவல் தருகிற அடி வயிற்று அவஸ்தை தவிர, புதுசாகப் பிறந்ததுபோல் மனம் குதூகலிக்கும். புதிதாய்ப் பிறந்த வருஷத்திலும் முதல் இரண்டு மாதங்களுக்காவது தொடர்கிற அந்தப் பனிநிறைந்த காலைகள், பள்ளிசெல்லும்போது கடந்து செல்லும் தோட்டவெளிகள், அந்த வெளிகளிலிருந்து வரும் இனம்புரியாத வாசம், மத்தியானங்களில் எங்களுக்குப் பட்டம்விட வசதியாய் வீசும் காற்று, மறக்க முடியவில்லை மார்கழித் திங்களை.
வாழ்க்கை எப்படியெல்லாம் எங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது. பட்டம்விட்ட, காலையில் அப்பாவின் சைக்கிளில் முன்புறம் அமர்ந்து கோயில் போன, மணி அடித்த சிறுவன், இன்றைக்கு அதே மார்கழித் திங்கள் அதிகாலையில் பெயர்கூடத் தெரியாத அயலவனுக்கு வணக்கம் சொல்லி கொட்டும் ‘பனி' துடைக்கிறேன். சங்கும், சேமக்கலமுமாய் திரிந்த யாரும் இன்றைக்கு ஊரில் இல்லை என்று கேள்வி. மணி அடிக்கப் போட்டி போட்ட பெட்டைகளில் ஒருத்தி கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாகி, அவளது அம்மாவுக்கு சமாந்தரமாக ஒரு பிள்ளை பெற்று, அந்தப் பிள்ளையின் தகப்பனை ‘தேசத்துரோக' முத்திரைக்குப் பலி கொடுத்து, இடுப்பில் பிள்ளையோடும் கிழிந்த துணியோடும் அலைந்துகொண்டிருந்தாள் (அலைந்துகொண்டிருக்கிறாள் என்று எழுதமுடியவில்லை). சுவாமி காவுவதற்கே இளந்தாரிகள் இல்லையாம், மணியடிக்க சண்டை யார் போடப்போகிறார்கள்?
இருந்தும் சில விஷயங்கள் மாறவில்லை. அப்பா இன்றைக்கும் கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார், திருவெம்பாவைக்கு, அதிகாலையில் எழுந்து. இப்போதும் தீவிரமாகக் கடவுளை நம்புகிறார். இன்றைக்கும் வீட்டின்முன்னால் எல்லாப் பூமரங்களும் நிற்கும் என்று நினைக்கிறேன். சைக்கிளில் தாவி ஏறும்போது எட்டி ஒரு பூவைப் பறித்துக் கொண்டுபோகிற வழக்கம் தம்பியிடம் இருக்கிறதா தெரியவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் சொர்க்கம்தான். இருந்தும், சொர்க்கமே என்றாலும்......