Saturday, 10 October 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-7

முன்னைய எல்லாப் பாகங்களையும் இங்கே சென்று படியுங்கள்.

சிவா பிள்ளை போன்றவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, ‘உவர் காசுக்குத்தான் உதெல்லாம் செய்யிறார். சும்மா நேரத்தை வீணடிக்கோணும்' 'உதெல்லாம் சும்மா பேக்காட்டு வேலை' ‘உவர் சொல்லி நான் ஏன் கேக்கோணும்' என்பது மாதிரியான வசவுகள். அதுவும் பணம் சம்பந்தமாக இப்படியானவர்கள் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆபாசமானவை. உண்மையில் இப்படியான பட்டறைகள் நடத்துபவர்களுக்கு இங்கே கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் தொகை தலைசுற்ற வைப்பது. உதாரணமும் ஒன்று சொல்ல முடியும்.

எனக்குப் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் சிறு தொழில் தொடங்குபவர்களுக்கான பட்டறைகளை நடத்துபவர். அவரது இரண்டு மணிநேரப் பட்டறைக்கு, அனுமதிக் கட்டணம் மட்டும் 30-40 டொலர்கள். அதுவே அவர் ஒரு நிறுவனத்துக்காக இந்தப் பட்டறையைச் செய்கிறார் என்றால், அவருக்கு அந்த நிறுவனம் 175-250 டொலர்கள் அளிக்கவேண்டும் (அவர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பற்றிய விபரங்கள் இல்லை என்றாலும் அவருடைய வலைத்தளம் உங்கள் பார்வைக்கு இதோ). இப்படியான ஒரு நாட்டில் யாரோ ஒரு உறவினரின் திருமண வீட்டுக்கு வந்த சிவா பிள்ளை எங்களுக்காக மூன்று மணித்தியாலங்களை ஒதுக்கினார். இப்படியானவர்களுக்கு என்னுடைய பார்வையில் எவ்வளவும் கொடுக்கலாம், சன்மானமாக. ஆனால், அவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. (இல்லாவிட்டால் சொந்த அலுவலாக வந்த மனிதருக்குப் பட்டறை நடத்தும் அவசியம் எதற்கு?).

அடுத்ததாக எம்மவரிடம் உள்ள இன்னொரு குணம், ஆராய்ந்து அனுபவித்துப் பார்க்காமல் ஒன்றைப் பற்றி முடிவெடுப்பது. அன்றைய பட்டறைக்கு வராத சில ‘பிரபல' ஆசிரியர்களின் கேள்வி ‘அப்படி என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறார் இவர்?' என்பதேயாகும். என்னுடைய கேள்வியும் அதேதான், சங்கீதக் கச்சேரிகளிலும், பரத நாட்டிய அரங்கேற்றங்களிலும், கனடா தின வாண வேடிக்கைகளிலும், சாமத்திய வீடுகளிலும், சினிமாப் படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களிலும் அப்படி என்னத்தைப் புதிதாக நீங்கள் சொல்லிவிட்டீர்கள்? மேற் சொன்ன வழிகளில் மூன்று மணிநேரத்தைச் செலவிடுவதைவிட இது எத்தனையோ மேல்.

அதுவும் என்னை மிகக் கோபப் படுத்துவது இதுதான். எனக்கும் இசைக் கச்சேரிகளுக்கும் வெகுதூரம். கடைசி வரிசையில் சந்தோசமாக நித்திரை கொள்வேன் இல்லையென்றால் ரசிக சிகாமணிகளின் அபத்தங்களை ரசிப்பேன். ஒரு முறை இப்படித்தான் ராஜேஷ் வைத்யாவின் கச்சேரியில் அவர் வாசித்த கீர்த்தனங்களில் அசந்தர்ப்பமாக எங்கள் ரசிக சிகாமணிகள் கைதட்டித் தொலைக்க கடுப்பான ராஜேஷ் வைத்யா கழிவறை போகிற சாக்கில் இவர்களைத் திட்டியதைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்து கர்னாடக இசை வளர்க்கும் எங்கள் சமூகம் என்றைக்கும் பிரயோசனமான எந்த நிகழ்வுக்கும், பட்டறைக்கும் ஆதரவு தருவதேயில்லை. சமீபத்தில் நடந்த தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்குக்கும் இதே நிலைதான்.

அதே போல் சிவா பிள்ளை அவர்களின் கருத்தரங்கிலேயே முன் வைக்கப்பட்ட ஒரு நேரடியான குற்றச்சாட்டு, சில இடங்களில் நீங்கள் இந்தியத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாக. அந்தக் குற்றச்சாட்டின் அடிநாதமாக இருந்தது ‘தூய தமிழ்' என்ற வறட்டுக் கூச்சல். அந்தக் கூச்சல் போடுபவர்கள் ‘கதிரை' என்ற சொல்லையும் அவர்களால் குற்றம் சாட்டப்படுகிறவர்கள் ‘நாற்காலி' என்ற சொல்லையும் பயன்படுத்துவது வேடிக்கை. இந்தியத் தமிழர்களுக்கு அப்துல் ஹமீது உதவியுடன் தெனாலியில் பேசப்பட்ட தமிழ்தான் இலங்கைத் தமிழ், அதுதான் சுத்தத் தமிழ் என்ற மாயையும், இலங்கைத் தமிழர்களுக்கு ‘லூஸ் மோகனால்' பிரபலப்படுத்தப்பட்ட ‘இன்னா நைனா'வும், இன்றைக்கு எல்லாப் படங்களிலும் பேசப்படும் ‘அவிய்ங்க' ‘என்னவே' போன்ற தமிழ் இந்தியத் தமிழ் என்ற மாயையும் நன்றாகப் புகட்டப்பட்டு இருக்கிறது. இருவருமே தூய தமிழ் பேசுவதில்லை, எழுதுவதில்லை எனபதே கசப்பான உண்மை. (தூய தமிழ்ச் சொற்களாகக் கருதப்பட்ட பல சொற்கள் மலையாளத்தில் வாழ்வதாக எங்கோ கேள்விப்பட்டேன், எங்கென்று மறந்துவிட்டேன்).

இவ்வாறாக, என் தமிழ் சரி உன் தமிழ் பிழை என்ற வாதத்திலும், தமிழை வளர்க்க யாருக்கு உரிமை இருக்கிறது என்ற வாதத்திலும் தமிழ் மோசமாகக் கொல்லப்படுகிறது. வேற்று மொழி மோகம் தமிழைக் கொல்கிறது என்கிற குற்றச் சாட்டைவிட, தமிழ் மொழிக்கு ஏக போக உரிமை கொண்டாடுபவர்களால் தமிழ் இன்னும் வேகமாகச் செத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டியிருக்கிறது.

அதே போல், தொழில்நுட்ப விஷயங்களை இளைஞர்களிடம் கற்றுக் கொள்ளப் பெரியவர்கள் தயங்குகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள். இதுவே அனுபவமும், வயதும் முதிர்ந்த ஒருவர் கற்றுக் கொடுக்க வந்தால் அதற்கும் ‘உவர் பழம் ஆள்.. உவரிட்ட புதுசா ரெக்னோலொஜி பற்றி என்ன இருக்கும். ஆரும் இளம் பொடியள் எண்டாலும் பரவாயில்லை' என்கிறார்கள். இவர்களின் பிரச்சினை கற்றுக் கொடுப்பவரில்லை, இவர்களிடம் குடிகொண்டிருக்கும் ஈ.கோ. எல்லாப் பெரியவர்களையும் சொல்லவில்லை. தொழில்நுட்ப விஷயங்களைத் தொலைபேசியில் அழைத்தோ, வேறு விதமாகவே கற்றுக்கொள்வதில் தீராத காதல் கொண்ட சிலர் இருக்கிறார்கள். ஆனால் பலர் ஒரு நிலைக்கு மேல் கற்றுக் கொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதனால் தாங்கள் பின்தங்கிப் போவது அவர்களுக்கு ஏனோ உறைப்பதில்லை.

நம்மவர்கள் மீதொரு குற்றச்சாட்டு இருக்கிறது என்றேனே, அதைச் சொல்கிறேன். இப்படித்தான் இந்தியாவில் ஒரு கற்பித்தல் பற்றிய கருத்தரங்கு நடந்த போது, இலங்கையில் இருந்து கொஞ்ச ஆசிரியர்களைக் கல்வித் திணைக்களம் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் காசு செலவளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்களாம். அங்கே போன அவர்கள் கருத்தரங்கு நடந்த நாட்களில் காலையில் அல்லது போய் கருத்தரங்கில் வழங்கப்பட்ட தகவல்கள் உள்ளடக்கிய பிரசுரங்களை மட்டும் வாங்கிக் கொள்வார்களாம். மற்ற நேரங்களில் ஊர் சுற்றுவதும், கொள்வனவு செய்வதுமாய் அலைந்தார்களாம். தமிழைக் கொலை செய்வதில் முன்னுக்கு நிற்பதாய்ச் சொல்லப்படும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் கருத்தரங்கு முழுவதும் பொறுமையாக இருந்தது மட்டுமன்றி, பல சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்தார்களாம். இவர்களை என்னென்று சொல்வது?

சிவா பிள்ளை போன்ற சிலரின் முயற்சிகளுக்கு நாங்கள் தோள் கொடுக்க வேண்டும், ஆதரவளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், அவர்கள் பற்றிய தூற்றலைத் தவிர்க்கவேண்டும். நான் எப்போதும் சொல்வது போலவே, நாங்கள் எப்போதுமே நடுநிலைத் திறனாய்வு செய்வதில் (Criticising) பின்னுக்கும் தூற்றுதலில் (Bashing) முன்னுக்கும் நிற்பவர்கள். ஆகையால்தான் எல்லா விஷயத்திலும், திறமையும், உழைப்பும் இருந்தும் பின்னுக்கு நிற்கிறோம். எங்கோ ஒரு ஒலிப்பதிவில் சோமிதரன் சொன்னமாதிரி நாங்கள் சைக்கிள் போல்ஸ்சுக்கு தமிழ் கண்டுபிடிக்கும் காலத்தில் சைக்கிள் போல்ஸ் பாவனையில் இல்லாமலிருக்கும். எங்களவர்களை நாங்களே பிடித்து கீழே இழுக்கும் மடமைத்தனம்தான் சோமியை எரிச்சலுக்குள்ளாக்கி இவ்வாறு பேசத் தூண்டியதோ தெரியாது, ஆனால் அவரது கருத்தோடு எழுத்துக்கு எழுத்து (குற்றுகள், விசிறிகள் உட்பட) உடன்படுகிறேன்.

சிவா பிள்ளை போன்றவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக நாங்கள் செய்யக்கூடியத உதவி, அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்தி, அயராத அவர்களின் உழைப்புக்குரிய பலனை அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு அறுவடை செய்து காட்டுவது மட்டுமே. அதுதான் அவர்களுக்கும் வேண்டும், எங்களுக்கும், எங்கள் சந்ததிக்கும் வேண்டும். இதுவரை காலமும் என்னுடைய இந்தத் தொடர் பதிவை வாசித்து வந்த நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இவ்வளவுதான். என்னுடைய பதிவுகளையோ, வலை மனையையோ நீங்கள் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டாம். சிவா பிள்ளையை அறிமுகப்படுத்துங்கள். என்னை நீங்கள் சிவா பிள்ளையின் சம்பளமில்லாத மக்கள் தொடர்புப் பணியாளனாகக் கற்பனை பண்ணிக்கொண்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல மனிதரின் முயற்சிக்கு என்னாலான சின்ன உதவி இது. அவ்வளவுதான்.

Siva Pillai
Dept of Educational Studies
Goldsmiths College, University of London
Newcross, London SE14 6NW
http://homepages.gold.ac.uk/siva
sivapillai@hotmail.com
Tel: +44 (0) 20 7919 7316
Fax: +44 (0) 20 7919 7313
MOB: 07951 476 706

**முற்றும்**

No comments: