Saturday 29 January 2011

சதீஸ் கொலை/மரணம் தொடர்பில்... (இற்றைப்படுத்தப்பட்டது)

முன்னைய பத்தியில் சதீஸ் கொலை செய்யப்பட்டார் என ஆரம்பகட்டத்தில் இரண்டு மூன்று இணையத்தளங்களில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே எழுதினேன். யாழ் இணையத்தில் ஈழநாதம் மற்றும் தமிழ்த்தாய் ஆகிய இணையத்தளங்களை மேற்கோள்காட்டி இதைப்பற்றி எழுதியிருந்தார்கள். தமிழ்த்தாய் இணையத்தளத்தில் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது.
Picture
Picture
ஈழநாதம் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:
Picture
ஆனால் இப்போது உதயன் வெளிவிட்டிருக்கிற செய்தி இந்த இரு செய்திகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கிறது. சதீசின் சாவு ஒரு வீதி விபத்தே என்று சட்ட மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது என்று உதயன் இணையப்பதிப்பில் செய்திவெளிவிடப்பட்டிருக்கிறது. குழப்பங்களின் எல்லையில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் இப்போது என்பதை மட்டுமே உறுதிப்படுத்தமுடிகிறது என்னால்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, சதீஸ் எப்படி இறந்தார் என்பதை விட, அவர் இறப்பு தொடர்பில் இருக்கிற சில கருத்துக்கள் பிழையென்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் ஆனைவிழுந்தானுக்கும் வல்லிபுரத்துக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டமற்ற இடத்தில் இப்படியான மோசமான விபத்துக்கான சாத்தியங்கள் பற்றிய கேள்விகளும் மனதைவிட்டு அகல மறுக்கின்றன. அவரது மரணத்துக்கான காரணங்கள் தொடர்பில் தவறாக நான் வாசிப்போரை வழிநடத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

பிணம்தின்னும் சாத்திரங்கள்

தெரிந்த முகங்களின் அகால மரணங்கள் இலகுவில் யாரையும் உலுக்குவதுண்டு. இந்த வருடத்தின் முதல் நாளிலும், இன்றைக்கும் எனக்குத் தெரிந்த முகங்களின் மரணங்கள் என்னை உலுக்கித்தான் இருக்கின்றன. முதல் மரணம் தவராசா கேதீஸ்வரன் என்கிற என்னுடைய வயதொத்த, என்னுடைய பாடசாலையில் படித்த (வணிகப்பிரிவோ, கலைப்பிரிவோ சரியாகத் தெரியாது), என்னுடன் பாடசாலை மாணவர் தலைவர்களில் ஒருவனாகக் கடமையாற்றிய இளைஞனுடையது. இவர் டிசம்பர் 31, 2010 இரவு கொல்லப்பட்டார். இரண்டாவது இன்று சனிக்கிழமை (சனவரி 29, 2011) கொல்லப்பட்ட இராசரத்தினம் சதீஸ் என்பவருடையது. இவரும் நான் படித்த பாடசாலையில் என்னைவிட இரண்டோ, மூன்று வகுப்புகளுக்கு முன்னால் படித்தவர். விளையாட்டுப்போட்டிகளில் என்னுடைய இல்லத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதுக்காகச் சொல்லப்படுகிற காரணங்கள் மிகவிசித்திரமாக எனக்குத் தோன்றுகின்றன. இரண்டு காரணங்களும் முரண்களின் உச்சமாகப்படுகின்றன. ‘போரின் பக்கவிளைவுகள்’ என்று சொல்கிற அறிவுசீவிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகின்றன.
முதல் கொலை கேதீஸ்வரனுடையது. இந்தவருடம் பிறந்ததும் Face Book இணைப்புகள் மூலமாகக் கிடைத்த முதல் செய்தி இது. குடத்தனை பொற்பதிப் பகுதியில் வைத்துக் கேதீஸ் கொல்லப்பட்டான். ‘கேதீஸ்’ என்னுடைய உயிர் நண்பன் என்றெல்லாம் சொல்லி ஒரு பச்சாதாப நாடகம் ஒன்றை இங்கே அரங்கேற்ற நான் முயலவில்லை. ஆனாலும், ஓரளவுக்காவது கேதீசை எனக்குத் தெரிந்திருந்தது. கேதீஸ் எங்களுடைய பாடசாலையில் ஆறாம் வகுப்புமுதல் படித்தவனில்லை. அவன் எந்தவகுப்பில் பாடசாலைக்கு வந்தான் என்பதுகூட சரியாக எனக்குத் தெரியாது. என நண்பர்கட்கும் தெரியாது. ஆனால், இடையில் வந்தவன் என்பது தெரியும். அது நன்றாகப் ஞாபகமிருத்தலுக்கான காரணங்களும் உண்டு. அவற்றில், ’கேதீஸ் உயர்தரம் படிக்கிறபோது மாணவர் தலைவனாகத் (Prefect) தெரிவுசெய்யப்பட்டபோது அவனுக்கெதிரான ஒரு எதிர்ப்பலை இருந்தது’ என்கிற காரணம்தான் மிகப்பெரியது. ஆறாம் வகுப்புமுதல் படிக்கிற நிறையப்பேர் இருக்கத்தக்கதாக இடையில் வந்தவன் எப்படி மாணவர் தலைவனாகலாம் என்று நாங்கள் எங்களுக்குள் குசுகுசுத்ததுண்டு. இப்படியான மாணவர் தலைவர்களின் தலைவனாக இருந்தவன் இப்படியான அரசியல்கள் இல்லாமல் இருந்தகாரணத்தால் அந்த எதிர்ப்பு குசுகுசுப்போடே அடங்கிப்போனது. (அவனுக்கெதிராகவும் நாங்கள் கிளர்ந்த கதை வேறு). கேதீஸ் விஞ்ஞானம் அல்லாத பிரிவில் படித்ததுதான் அவனுக்கிருந்த ஒரே தகுதி என்று நக்கல்வேறு செய்வோம்.  விஞ்ஞானம் படித்த எங்கள் விண்ணாணம் தெரியவந்தபோது எந்த மூஞ்சையை வைத்து நக்கல் செய்தீர்கள் என்று அவன் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை. இப்போது அவன்கூட விஞ்ஞானம்தான் படித்தானோ என்கிற மாதிரி ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், கேதீசுக்கும் எனக்குமான நட்பின் நெருக்கம், இவ்வளவுதான்.

கேதீஸ் கொலை பற்றிப் பலபேர் பல கதைகள் சொல்கிறார்கள். அவன் முன்னைநாள் போராளி என்கிறார்கள் சிலர். இல்லையில்லை அவனது அண்ணனே போராளி என்கிறார்கள் வேறு சிலர். இவன் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்கிறார்கள் இன்னும் சிலர். ‘இலங்கையில இருந்துகொண்டு கையில கார்த்திகைப் பூவோட படம் போடுறது கொழுப்புத்தானே’ என்கிறார்கள் மற்றவர்கள். குழப்பமான இந்தக் கோணங்களில் இருந்து கேதீசை ஏன் கொன்றார்கள் என்கிற முடிவை என்னால் எட்டமுடியவில்லை. தன்னை ஏன் கொன்றார்கள் என்று கேதீசுக்குத் தெரிந்திருக்குமா, அல்லது கேதீசை ஏன் கொல்கிறோம் என்பது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்குமா என்பதுகூட சந்தேகமே.

அவன் முன்னைநாள் போராளி அல்லது அவனது அண்ணன் முன்னைநாள் போராளி என்று வைத்துக்கொள்வோம். புனர்வாழ்வுக்கென்றுதான் அப்படியான போராளிகளைத் திருப்பியனுப்பி இருக்கிறார்கள், கொடுஞ்சிறைகளிலிருந்து. இதுதான் அரசாங்கமும், அறிவுசீவிகளும் முன்வைக்கிற வாதம். அப்படியானால் புனர்வாழ்வுக்காகத் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவனோ/ அவன் சார்ந்தவர்களோ ஏன் கொல்லப்பட்டார்கள்? குழுவாகக் கொன்றால் பிரச்சினை என்று தனித்தனியாகக் கொல்கிற திட்டமா? அல்லது உண்மையிலேயே புனர்வாழ்வுக்கு என்று வெளியே வந்துவிட்டு மீண்டும் பழைய போராளிக்குணங்களை வெளிக்காட்டினார்கள் என்கிற காரணமா? அப்படிப் போராளிக் குணங்களை வெளிக்காட்டினார்கள் என்றால் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இது தொடர்பில் பேசவேண்டி வரும். புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான போராளிகள் மரணத்தின் எல்லைவரை போய் மீண்டவர்கள். அரசாங்கத்துக்கெதிரான சின்ன அசைவும் அவர்களுக்கு உடனடியாகத் தரக்கூடிய பரிசு பற்றித் தெளிந்தவர்கள். இதைவிடக் கேதீஸ் போல அண்மையில் மணமான ஒரு இளைஞனுக்கு வாழ்க்க தந்திருக்ககூடிய சுகமான புதிய பொறுப்புகள் பற்றிய அக்கறையும் இருந்திருக்கும். அவன் மீண்டும் ஒரு வன்முறைக்கிளர்ச்சியை நோக்கிப் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு. அப்படி சாத்தியக்கூறுகள் குறைந்த ஒருவன் அந்த ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று ஒரு விவாதத்துக்கு வைத்துக்கொண்டோமென்றால், அவன் எந்தளவுக்கு தூண்டப்பட்டிருப்பான் என்கிற கேள்வி வரும். அந்த தூண்டலுக்கான காரணம் என்ன அல்லது யார் என்கிற கேள்விகள் வரும். ’கார்த்திகைப் பூவோடு நின்று படம்போடும் கொழுப்பு’ எப்படி வந்தது என்ற கேள்வி வரும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களிலிருந்து பிரபாகரனை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டே இலங்கை அரசு தான் சொன்னபடி தமிழ்மக்களுக்கான எந்தவொரு அடிப்படை உரிமையயும் கொடுக்கவில்லை என்பதோடு, இருந்த உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கிறது என்கிற தெளிவான முடிவுக்குத்தான் வரமுடியும்.

இல்லாவிட்டால் செய்திஊடகங்கள் சொல்கிறபடி கேதீஸ் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்றே வைத்துக்கொள்வோம். கேதீஸ் மணற்தலைப் பகுதியில் நடக்கிற சட்டபூர்வமற்ற மணல் வியாபாரம் பற்றி அம்பலப்படுத்தியிருக்கிறான் வெறும் Face Book படங்களின் மூலம். இதற்காக கேதீஸ் கொல்லப்பட்டதாக வைத்துக்கொண்டால், இந்தக் கொலையயும் ‘போரின் பக்க விளைவு’ என்று சொல்கிற அறிவுசீவிகளைப் பார்த்து நான் சொல்லிக்கொள்வது ‘just go and fuck yourselves'. மணல் அள்ளப்படுதலும் கடல் உள்ளேறலும் இனப்பிரச்சினை அல்ல நண்பர்களே... அது ஒரு தேசத்தின் பிரச்சினை. தன்னை சிறிலங்காவின் பெருமைமிகு பிள்ளை என்று சொல்லிக்கொள்கிற இலங்கைப்பிரசைகள்கூட கவனிக்கவேண்டிய பிரச்சினை. வடமராட்சி கிழக்கில் வாழ்கிற சனங்கள் கால காலமாக அனுபவிக்கிற பெரிய பிரச்சினை. தமிழீழம் என்கிற கோரிக்கையை ஆதரிக்கிறவர்களுஞ்சரி, எதிர்க்கிறவர்களுஞ்சரி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய பிரச்சினை. சுனாமியின் பின் அழுகிமிதந்துவந்த பிணங்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போன மக்களின் வாழ்வு சம்பந்தமான பிரச்சினை. அந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த குற்றத்துக்காகத்தான் கேதீஸ்வரன் கொல்லப்பட்டான் எனில், நண்பர்களே கேளுங்கள், நாளைக்கே ஆயுதங்கள் தவிர்த்து யாவுமே செயலிழந்து போகும் அந்த நாட்டில்.

இரண்டாவது கொலை சதீஸ் அண்ணாவுடையது. இந்த சதீசும் எங்களின் பாடசாலையிலேயே படித்தவர். சதீசை ஞாபகத்தில் வைத்திருக்கப் பெரிய காரணம் சதீசின் பென்னாம்பெரிய உடல்வாகு. விளையாட்டுப்போட்டிகளில் சதீசின் அணிநடை பிரபலம். Left-Right என்று அவர் நடக்கும்போது பின்னிருந்து பார்த்து அவரது புட்டத்துத் தசைகளின் அசைவை நாங்கள் கிண்டல் செய்வதுண்டு. பின்னர் அணிநடையை எங்களுக்குப் பழக்குகிறேன் என்று சொல்லி இவர் கொன்றை மரத்தின் கீழ்வைத்து அதே கொன்றை மரத்துக் கம்புகளால் அடித்தும் இருக்கிறார். அடித்ததும் வருகிற கோபம் ‘லெப்பைலெப்’ என்ரு சொல்லி இவர் எங்களுக்குப் புட்டத்தைக்காட்டியபடி அணிநடை செய்துகாட்டும்போது போய்விடும். இவர், பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து ‘இனம்தெரியாதோரால்’ சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காலையில் இந்தக் கொலை நடந்து, மதியம்வரை சடலம் வீதியிலேயே கிடந்ததாக ‘யாழ்’ இணையத்தில் படித்தேன்.

சதீஸ் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குக்குப் பொறுப்பாளராக இருந்ததாகவும், சில நாட்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்பால் விமர்சனங்களை இவர் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. யாழ் இணையத்தளத்தில் இவர் ‘கொல்லப்பட்ட பொற்பதிப் பொதுமகன்’ ஒருவரின் குடும்பத்துக்கு கொலையாளிகளை அடையாளம் காட்டுவேன் என்று உறுதியளித்ததாகவும் அதன்காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் ‘ஆத்தியடி குத்தி’ எனப்படும் ஒரு நபரைப் பற்றியும் சொல்கிறார்கள். கேதீஸ் கொலைபோலவே சதீஸ் கொலைக்கும் சரியான(??!!) காரணங்கள் யாருக்குமே தெரியவில்லையாம். கொலைக்கு என்ன ‘சரியான காரணங்கள்’ இருக்கமுடியும். யாழ் இணையத்தளத்தில் ஒருவர் தெரிவித்திருந்தது போலவே ‘வேட்டை நாயொன்று செத்தது’ என்று சும்மா போவதும் சாத்தியமில்லை. ஒன்றையும் பெரிதாக நாங்கள் பிடுங்கிவிடப்போவதில்லை என்றபோதிலும் ஆகக்குறைந்தது இந்தக்கொலைகள் தொடர்பில் எம்மாலான பதிவுகளை விட்டுச்செல்லல் அவசியமாகிறது. கேதீஸ், சதீஸ் ஆகியோரின் அரசியல் பின்னணிகளைத் தாண்டி இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், அதுவும் யாரால், சொந்தச் சகோதரர்களால் என்கிற கோணத்தில் இதைப் பார்த்தாகவேண்டும். ’சகோதரப் படுகொலையாளி’ என்று பிரபாகரனைச் சுட்டிய அறிவுள்ளங்களே, தயவு செய்து இந்தக் கொலைகளை ‘போரின் பின் விளைவுகள்’ என்று நியாயப்படுத்தாதீர்கள். ‘இலக்கிய மாநாடு, ஒன்று கூடல், தமிழ் வளர்ப்பு’ என்றெல்லாம் குதிக்கும் கருத்தியல்களைக் கரைத்துக்குடித்து கொட்டாவி மட்டுமல்ல, குசுவும் விட்டு ஓய்ந்து போய்விட்ட புத்திமான்களே, இவை போரின் பக்கவிளைவுகள் என்றால், 70 களிலும் 80 களிலும் எங்கள் இளைஞர்கள் செய்தவை யாவுமே பல்லாண்டுகால அடக்குமுறை மற்றும் கையாலாகாத அரசியல் தலமைகளின் வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் பக்கவிளைவுகள்தாம்.

என்னுடைய சகோதரனை ஆயுதம் தூக்கி செத்துப்போ என்று சொல்கிற தார்மீக உரிமை எனக்கில்லை. ஆனால் அவன் படுகிற அவலங்களை மறைத்து அவன் சுபீட்சமாக இருக்கிறான் என்று பொய்சொல்கிற திறமையும் எனக்கில்லை. ‘இவங்கள் செய்யிற அநியாயங்களைப் பாத்துக்கொண்டு சும்மாயிருக்கேலுமோ?’ என்று அவன் கேட்கிற கேள்விக்கு மௌனித்துப்போகிறேன்.

பி.கு:
  1. கேதீஸ் கொல்லப்பட்டதன் பின்னான அரசியலைத் தவிர்த்து அவனது மரணச்செய்தியை எங்கள் பாடசாலை வட்டத்துக்குள் பகிராமல் பதுங்கியிருந்த கையாலாகாத்தனத்துக்கு வெட்கப்படுகிறேன். வெற்றிபெற்றவனை மட்டுமே உரிமை கோருகிறோம். 
  2. சதீஸ் கொலைய ‘ஒட்டுக்குழு உறுப்பினன் கொலை’ என்று மட்டும் பார்க்கிற மனோபாவத்தை வளர்த்துவிட்ட தலைமைகள், ஊடகங்கள் யாவரும் நாசமாய்ப் போகட்டும்.
 

Saturday 15 January 2011

செருப்பாய் இருப்போம்...

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய வசனம் மற்றும் இன்னபிற சினிமாச் சர்ச்சைகளை முன்வைத்து.

'த்ரிஷாவின் செருப்பாக நடிக்கவும் தயார்’ என்கிறமாதிரி ஒரு எள்ளலை புலம்பெயர் தமிழர்களை நோக்கி அள்ளிவிட்டிருக்கிறார் அறிவுசீவி கமல்ஹாசன். Pre DVD Rip ல் ஒழுங்கான சத்தம், காட்சிகள் இல்லாமல் பார்த்த எனக்கே கோபம் பொத்துக்கொண்டுவந்தபோது, அறிவுசீவி கமலின் படங்களுக்கு முன்னோட்டம் பின்னோட்டம் எல்லாம் எழுதி முதல்நாள் முதல்காட்சி பார்த்தவர்கள் வயறெரிந்து சாபம் போடுவதில் பிழை ஒன்றும் இல்லைத்தான். ஆனால் இந்தக் கோபம் எதனடிப்படையில் வருகிறது என்று ஆராய்வோமானால் சில உண்மைகள் தெரியும். எந்தளவுக்கு தமிழக சினிமாவால், தமிழகத் தொலைக்காட்சிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியவரும். இந்தக் கோபம் சிலவேளை நடிகை ஒருவருக்கு செருப்பாக நடிக்கிறேன் என்று சொல்லாமல் ‘விஜய்க்கு செருப்பாக நடிக்கத் தயார்’ ‘ரஜினிக்கு பின்பக்கம் கழுவ ரெடி’ ஏன் ‘அறிவுசீவிக்கு கொம்பு நீவிவிடுவது பாக்கியம்’ என்கிற ரீதியில் வசனம் எழுதப்பட்டிருந்தால் விசிலடித்துப் பாராட்டியும் இருப்போம்.

இந்தச் சர்ச்சையின்  அடிவேர் இரண்டு விடயங்களில் இருக்கிறது. ஒன்று கமல்ஹாசனின் அரசியல் தேர்வு. இரண்டாவது, இவ்வாறான எள்ளல்கள் மற்றும் ஈழத்தமிழர்களைத் தங்களின் ஒரு சந்தையாக மட்டும் பார்க்கக்கூடிய இந்தத் தமிழகச் சினிமாக்காரர்களின் மனநிலைக்கு எதிர் அரசியல் பேசக்கூடியளவுக்கு எமக்கான சினிமா எங்களிடம் இல்லாமை. இந்த இரண்டு விடயங்களின் அடிப்படையில் இந்தச் சர்ச்சையை அணுகலாம் என நினைக்கிறேன்.
Picture
கமல்ஹாசனிடம் இருந்துவந்த மேற்படி எள்ளல் கமலின் சமீபத்திய அரசியல் ஈடுபாடுகளைப் பார்த்து வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போவதில்லை. அவரது ஒஹனேக்கல் பேச்சில் எனக்கு எல்லாரும் வேண்டும். ரஜனியும் வேண்டும், கும்ப்ளேவும் வேண்டும். சத்தியராஜும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும் என்றும், இது நூறு கோடி மக்களின் பிரச்சினை என்றும் அவர் சொன்னதுதான் கிட்டத்தட்ட பொதுமேடை ஒன்றில் அவரது அரசியல் பூனை வெளிவந்த முதல் சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். அதே போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதக் கண்காட்சியிலும் ‘ இது நான் தமிழன் என்பதால் பேசுவதாக என்னைக் குறுகியவட்டத்துக்குள் அடைத்துவிட வேண்டாம்’ என்ற கருத்தையும் உதிர்த்தார். இடையே ஹிட்லருக்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு சிலவிடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரிச் சொன்னார். ‘அகதிகளாக அவர்களை ஏற்கிற பெருந்தன்மை எமக்கிருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தன்மானம் இருக்கிறது’ போன்ற கருத்துகள் மூலம் அவர் சொல்லவந்தது,‘நீ வேறு நாங்கள் வேறு’ என்ற ஒன்றைத்தான். அவரது ‘தமிழன்-குறுகியவட்டம்’ என்கிற பார்வை அவருக்குள்ளே அவர் ஒளித்து வைத்திருக்கக்கூடிய இந்தியத் தேசியவாத அரசியலின் அபிமானம் அல்லது தமிழ்த்தேசியவாத அரசியலின்மீதான வெறுப்பின் குறியீடே. இதேதான் அவரது பெரும் செல்வாக்கில் உருவாகிய ‘உன்னைப் போல் ஒருவன்’ படம்கூட எடுத்துச்சொன்னது. ’உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தின் மூலக்கதை வேறொருவருடையது, அதை ‘சக்ரி டோலட்டி’ என்கிற இயக்குனர் இயக்கினார், இரா. முருகன் வசனங்களை எழுதினார். இவ்வாறிருக்கையில் அது எப்படிக் கமல்ஹாசனின் அரசியல் ஆகும்? என்று கேள்வி எழலாம். மேற்படி திரைப்படத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற நோக்கத்தோடு விஜய் தொலைக்காட்சியில் இன்னொரு அறிவுசீவி கோபிநாத்துடன் சேர்ந்து அறிவுசீவி கமல்ஹாசன் செய்த சில நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகள் படம் பேசுகிற அதே அரசியலைத்தான் கமல்ஹாசனும் மானசீகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியிருந்தன. இந்த அரசியல்தேர்வு கமல்ஹாசனின் பிறப்புரிமை. அந்தப் பிறப்புரிமையின் அடிப்படையில் தமிழ்த்தேசியவாதத்தின் மிகப் பெரிய குறியீடான ஈழத்தமிழர்கள் மீதான எள்ளல் அவருக்கு இயல்பாகவே வரும். அதில் பெரியளவு ஆச்சரியம் இருக்கப்போவதில்லை.

ஏற்கனவே கமல் தெனாலி என்றொரு படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவர் ஈழத்தமிழர்களை எள்ளல் செய்தார் என்று ஒருபுறமும், இல்லை ஈழத்தமிழர்களின் வலியைக் காட்டியிருந்தார் என்று மறுபுறமும் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தத் ’தெனாலி சோமன்’ என்கிற பாத்திரப்படைப்பில் எனக்குப் பெரிய கோபமெல்லாம் இல்லை. இலங்கைத் தமிழர்கள் எப்போதும் இறுகிய முகத்தோடே அழுதபடிதான் இருப்பார்கள் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனம். இருந்தபோதும் அந்தப் பாத்திரம் பேசுகிற மொழி தொடர்பான விடயங்களில் நிச்சயம் கமல்ஹாசன் மெத்தனமாகவே இருந்திருக்கிறார். மிகமுக்கியமாக பி.எச்.அப்துல் ஹமீதுவின் உதவியோடு எழுதப்பட ’றேடியோ சிலோன்’ நாடகத்தமிழ் போன்ற விடயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல் விட்டதுகூட ஈழத்தமிழர்கள் மீதான அவரது பார்வையின் பிரதிபலிப்பாகக் கருதப்படலாம். ’போர் விளைவுகளால் மனநிலை தவறிய இளைஞன்’ கதாபாத்திரம் போரின் விளைவுகளைக் காட்டப் பயன்படுத்தப்பட்டதா அல்லது அப்போது தமிழகச் சினிமாவுக்குக் கிடைக்க ஆரம்பித்திருந்த புதிய சந்தையைத் தட்டித் திறக்கப் பயன்படுத்தப்பட்டதா என்பது படம் எடுத்தவர்களுக்கே வெளிச்சம். எனக்குத் தெரிந்தவரை இன்றைக்கு தமிழக சினிமாவில் பங்குபெறக்கூடிய நிறையப்பேரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவானது நேரடியாக அவர்களின் சினிமா வியாபாரத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியதாகவே இருக்கிறது.

தமிழக சினிமாக்களில் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு குறிப்பிடக்கூடிய பங்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் இருந்தே கிடைக்கிறது என்பது உண்மை. இலங்கையில் இருந்தும் ஒரு பங்கு போகிற போதிலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தோடு ஒப்பிடும்போது கொஞ்சம் நலிவாகவே இருக்கும். இன்னும் கொஞ்சக்காலத்தில் நாங்கள் பதின்மங்களில் இருந்தபோது ஆரம்பமான ஒரு கெட்டபோக்குக் காரணமாக இந்த நிலமை மாறலாம். காரணம் ரஜனிகாந்தின் துதி பாட ஒரு மூவர் குழுமம் இயங்கிவருகிறது, நடிகர் விஜயை வைத்துச் சண்டை பிடிக்கிறார்கள். ஏன், ‘சச்சின்’ படமாக இருக்கவேண்டும், யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்கில் அபிஷேகம் செய்தார்கள். ‘ஜீ’ என்ற நடிகர் அஜீத்தின் படம் அதே திரையரங்கில் ஓடியபோது ஒரு சோகமான காட்சிக்கு விசிலடித்த நடிகர் விஜய் ரசிகர்கள் இருந்த பல்கணிக்கு குடித்துமுடித்த சோடாப்போத்தல்கள் பறந்ததும் நடந்தது. இப்போதுகூட போனவருடத்து கந்தசஷ்டிக் காலத்தில் வடமராட்சியில் ஒரு கோவிலில் சூரனும் முருகனும் ‘வாடா மாப்பிள்ளை’ பாடலுக்கு ஆடியிருக்கிறார்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாவும், தமிழகத்துத் தொலைக்காட்சிகளாகவும் ஆகியிருக்கிறது. தமிழ் வன் மற்றும் தமிழ் விசன் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளுமே முறையே கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சியிடம் இருந்தே நிகழ்ச்சிகளை வாங்கிப்போடுகின்றன. மொத்தத்தில் தமிழக சினிமா மற்றும் சினிமா சார்ந்தியங்கும் தொலைக்காட்சிகளே இன்றைக்கு ஈழத்தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக மாறிவிட்டன என்கிற உண்மையை ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இந்தப் பெரிய சந்தையை இன்னும் இன்னும் ஊடுருவும் முயற்சியாகத்தான் நடிகர்களின் பிரபாகரனாக ஒருமுறையாவது நடிக்கவேண்டும் என்கிற ஆசைகளையும், இயக்குனர்களின் ஈழத்தை மையமாக வைத்து ஒருபடமாவது எடுக்கவேண்டும் என்கிற இலட்சியங்களையும், பிரேம்கோபால், பிரேமினி போன்றவர்கள் ஈழத்தின் துயரசாட்சியங்களாகக் காட்டப்படுவதையும் பார்க்கமுடியும்.

ஒரு சந்தை பெரும்பாலும் தேவை-வழங்கல் இரண்டின் அடிப்படையிலேயே இயங்குகிறது. தமிழக சினிமாவின் ஈழத்தமிழ் சந்தையானது முதலில் வழங்கலைவிடக் குறைந்த தேவையுடையதாகவே இருந்தது. அப்போதெல்லாம் பெரியளவில் தமிழகத்துச் சினிமாக்காரர்களுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றிய அக்கறை பெரிதாக இருந்திருக்கவில்லை. இங்கே எம்.ஜி.ராமச்சந்திரனின் ஈழ ஆதரவுக்கு அரசியல் காரணங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. எம். ஜி. ராமச்சந்திரனை சினிமாக்காரனாக அல்லாமல் அரசியல்வாதியாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. கொஞ்சக் காலத்தின் பிறகு ஈழத்தமிழர் சந்தையில் தமிழகச் சினிமாவுக்கான நுகர்வோர் அதிகரிக்க தேவை வழங்கலை விஞ்சியது. இப்போது ஈழத்தமிழர் சந்தையைத் தமிழக சினிமாக்காரர்கள் இன்னும் உற்றுக் கவனித்தார்கள். இந்தச் சந்தையைத் தம்மிடம் வைத்திருப்பது தொடர்பில் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவர்களுக்கு ‘ஐங்கரன் International' பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தச் சந்தையின் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கக்கூடியது சந்தையின் தேவை-வழங்கல் விதி வழங்கிகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்களால் உடைக்கப்பட்டதுதான். தனியே ஈழத்தமிழ்ச் சந்தையில் மட்டுமல்லாமல் இந்தியச் சந்தைகளிலும் வழங்கிகளும் சந்தைப்படுத்திகளும் இந்த விதியை உடைத்து தேவை இல்லாத இடத்தில்கூட நுகர்வோர் இவர்களின் சந்தைப் பொருளை கூடிய விலையில் வாங்குகிற நிலமையை ஏற்படுத்தியிருப்பதென்பது வியத்தகு விடயமே. விரும்பியோ விரும்பாமலோ ஒரு பொருளை நுகர்வோர் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்கிற நிலமை இப்போது கருணாநிதி மற்றும் கலாநிதி மாறன் குடும்பங்களால் தொலைக்காட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும். முக்கியமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பில் பொதுவெளியில் நடக்கிற உரையாடல்கள்கூட இந்தப்போக்கின் தொடர்ச்சியாகவே பார்க்கமுடியும். வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் சந்திப்புகளில்கூட எப்படியாவது நாங்கள் தமிழகச் சினிமாபற்றி உரையாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஏன், இணையங்களில் கிறுக்குகிற என் போல எத்தனையோபேர் தமிழகச் சினிமாவை மட்டுமே கருப்பொருளாக வைத்து எவ்வளவுகாலம் எழுதிவந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்களால் படிக்கப்படுகிற ஆக்கங்களாக சினிமா விமர்சனங்களே இணைய எழுத்துலகில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றமையைக் கவனத்தில்கொள்ளவேண்டும். இதற்கான காரணங்களையும் தேடிப்பார்க்கவேண்டியிருக்கிறது.

ஈழத்தமிழர்களிடம் இருந்து இதுவரைக்கும் தமிழகச்சினிமாவை எதிர்த்து நிற்கக்கூடிய சினிமாக்கள் வரவில்லை என்பதுதான் பிரச்சினையே. சமீபத்தில் பெருமளவு கொண்டாடப்பட்ட ‘1999’ திரைப்படத்தில் எத்தனையோ நல்ல விடயங்கள் இருந்தபோதும் தமிழகச் சினிமாவின் தாக்கம் பெருமளவில் இருந்தது. ‘மரநாய்’ என்கிற ஒரு கதாபாத்திரத்தைக் கடைசிவரையில் திரையில் காட்டாமல், அந்தப் பாத்திரம் பற்றிய பயங்களை, தாக்கத்தை மனதில் விதைத்த இயக்குனர் லெனின்.எம். சிவம், கதாநாயகியைக்கூட சாதாரண  காட்சிகளில் காட்டாமல் இருந்துவிட்டு இரண்டு பாடல்களில் மட்டும் ஆடவைத்துக் காட்டியிருந்தார் என்பதை வருத்தத்தோடு குறிப்பிடவேண்டியிருக்கிறது. கனடாவில் நடந்த குறும்பட விழாவொன்று பற்றி டிசே தமிழன் எழுதிய ஒரு கட்டுரையில்கூட ஈழப்படைப்பாளிகளின் குறும்படங்களில் இருந்த கதைக்குறைபாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஈழத்தமிழர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பெரும்பாலும் கருத்தில் கொள்ளாமல் தமிழகச் சினிமாவின் பாதிப்பிலான படங்களை அல்லது தனியே அழுதுவடிகிற கதைகளை படமாக எடுப்பது எம்மவர் மத்தியில் இருக்கிற குறைபாடாக இருக்கிறது. யுத்தத்தின் மத்தியில் வாழ்ந்த மக்களின் மற்றைய பக்கங்கள் எழுத்தளவிலாவது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான நிலையில் கிட்டத்தட்ட ஈழத்தவர் வாழ்க்கையில், முக்கியமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தவர் வாழ்க்கையில் ஒரு அங்கமாகக் கலந்துபோய்விட்ட தமிழக சினிமாவைப் பிரித்தெடுப்பது என்பது மற்று சினிமா மற்றும் கலைகளுக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகும்.

தமிழக சினிமா தொடர்பில் ஈழத்தவரிடம் அல்லது சில விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இப்போது பெருகிவருகிற இன்னொரு நடைமுறை  சில நடிகர்களின் படங்கள் வருகிறபோது எழுப்புகிற புறக்கணிப்புக் கோசங்கள். நடிகர் விஜயின் வேட்டைக்காரன் என்ற படம் வந்தபோது அதற்கு சில நாட்களின் முன் விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தார், காங்கிரசுக் கட்சியில் இணைகிறார், ஆகவே புறக்கணியுங்கள் என்கிற கோசம் முன்வைக்கப்பட்டது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றியும் ஏதோ ஒரு சிக்கலை அப்போது முன்வைத்தார்கள். இப்போது விஜயின் காவலன் படத்துக்கான புறக்கணிப்புப் பிரச்சாரங்களில் நடிகை அசின் முன்னிறுத்தப்படுகிறார். காங்கிரசில் சேர்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை விஜய் ‘யாழ்நகர்’ என்ற ஊரின் மீட்பராக நடித்துக் களைந்துவிட்டாராம். இன்றைக்கு வரைக்கும் இந்தப் புறக்கணிப்புகளின் மூலகாரணம் ‘அஜீத்-விஜய்’ கதாநாயக வழிபாடுதவிர வேறொன்றுமில்லை என்பது திண்ணம். இல்லாவிட்டால் இந்த இருவரின் படங்களைப் புறக்கணியுங்கள் என்று ஈழத்தோடு தொடர்புபடுத்தி அடிக்கடி கத்திக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏன், ‘செருப்பாக இருப்பேன்’ என்ற வசனம் எழுதிய கமல்ஹாசனுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான புறக்கணிப்புக் கோசமும் வந்ததில்லை. இப்படியான கோசங்கள் தனியே விஜய் மற்றும் அஜீத் படங்கள் வரும்போதே எழுப்பப்படுகின்றன என்பதிலிருந்தே இவற்றின் உண்மை நோக்கம் தெரிந்துவிடும். இது நிச்சயமாக சில விசிலடிச்சான் குஞ்சுகளின் வேலையே. புறக்கணிப்பது என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் முழுமையாகப் புறக்கணிக்கவேண்டும். அப்படி இல்லாமல் இந்த அரைகுறை விளையாட்டுகள் மூலம் வழங்கிகளால் ஆளப்படுகிற ஒரு சந்தையை உடைப்பது என்பது கடினமானதே. இந்தக் கோசங்களைத் தாண்டி மேற்படி படங்கள் இந்தச் சந்தையில் இலகுவில் நல்ல இலாபத்தோடு விலைபோகின்றமைக்கான காரணங்களை எடுத்தாயவேண்டியுள்ளது.

தமிழகச் சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் ஈழத்தமிழர் வாழ்வில் பாரிய செல்வாக்குச் செலுத்துவதற்கான பாரிய காரணம், ஏலவே சொன்னதுபோலவே எம்மிடம் மாற்று முயற்சிகள் இல்லாமல் போயிருக்கின்றமை அல்லது மாற்று முயற்சிகளுக்கான களம் இல்லாமல் போயிருக்கின்றமையே ஆகும். முக்கியமாகப் புலம்பெயர் சூழலில்கூட இந்தப் பிரச்சினை படைப்பாளிகளுக்கு இருப்பது வருந்தத்தக்கது. கனடாவில் இருக்கக்கூடிய மிகமுக்கியமான சில ஈழப்படைப்பாளிகள் தமிழகப்படைப்பாளிகளின் அங்கீகாரம் தொடர்பில் கொண்டிருக்கிற கருத்துக்கள் அதிர்ச்சியூட்டுபவையாகவே இருக்கின்றன. அவர்களின் அங்கீகாரம் மேலானதொன்றாகவே பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் கனடாவில் இருக்கிற முக்கியமான ஈழக்கவிஞர் ஒருவரோடு டிசே முரண்பட்டுமிருக்கிறார். முற்றுமுழுதாக தமிழகப்படைப்பாளிகளிடமிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்கிற வாதம் இங்கே முன்வைக்கப்படவில்லை.தீர்ப்பெழுதும் நாட்டாமைகளாக அவர்களை அவர்களோ, அவர்களை நாங்களோ கருதவேண்டியதில்லை. எங்களுக்கான வழிகளை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். எங்கள் வழியில் நாங்கள் அவர்களை எதிர்கொள்ளவேண்டும். இல்லையெனில் கமல்ஹாசன் போன்ற குழப்பநிலை அரசியல்வாதிகளிடமிருந்து இப்படியான இழிவுகள் வந்துகொண்டேதான் இருக்கும். மேலும், இளம்தலைமுறைக்கான ஒரு கடமையாக நான் பார்ப்பது, தந்திரமான வியாபாரிகளால் தமிழகச் சினிமாக்காரர்களிடம் நாங்கள் கட்டுண்டு போயிருக்கிறோம். எங்கள் எழுத்து மொழியில்கூட அவர்களின் மொழி ஆதிக்கம் செலுத்துமளவுக்கு நாம் மாசுபட்டிருக்கிறோம், எங்களின் சுயத்தை இழந்திருக்கிறோம். ரஜனிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிறோம். தவிக்கிற சகோதரனுக்கு உதவுவதற்கு வைக்கிற வேண்டுகோளில்கூட விஜய் படத்துக்கு விளம்பரம் செய்கிறோம், ‘நீங்களும் காவலனாகலாம்’ என்று. மாண்டவரை நினைக்கிற ஒன்றுகூடல்கள் கூட ‘சீமான் கலந்துகொள்ளும் கூட்டம்’ என்று சீமானை முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்படியான விடயங்களை இயலுமானவரையில் எதிர்க்கவேண்டும். பொழுதுபோக்குக்காகக் கிடைக்கிற ஒரு சந்தைப்பொருள் எங்கள் வாழ்வியலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் இருக்கவேண்டும்.

புறக்கணிப்புகளை ஆரம்பிக்கிற யாரும் நடக்கக்கூடிய விடயங்களைப் பேசுகிறார்களில்லை. என்னுடைய ஆசிரியர் ஒருவர் ‘இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்று தீவிர பிரச்சாரம் நடந்த காலத்தைப் பற்றி Face Book ல் சொல்லியிருந்தார். ’புறக்கணித்தால் வியாபாரம் என்னாவது?’ என்கிற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். கனடாவில் இருக்கிற பெரிய கடைகளுக்கு ஆரம்பகாலத்து முதல் எங்கிருந்து வந்தது, அவை யாருடைய கடைகள் என்று பார்க்கவேண்டும். அவர்களே புறக்கணிப்புகளை இந்தமாதிரித்தான் எதிர்கொண்டார்கள். அதாவது, உணர்வு பூர்வமான, போராட்ட குணம் உள்ளவர்களாகக் காட்டிக்கொள்கிறவர்கள்கூட பெருவியாபாரிகளின் மனநிலையோடுதான் இருக்கிறார்கள். மூலதனத்தை மீட்பது, இலாபத்தைப் பெருக்குவது போன்றவைதான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இலாபப் பெருக்கமும், மூலதன மீட்பும் பிழையல்ல, மூலதனம் உங்கள் பணமாக இருக்கிறபோது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் மண்மீட்பு முதல், இனமானம் என்கிற சொல்லாடல் வரை எல்லாமே கிட்டத்தட்ட வியாபாரமயப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதே புறக்கணிப்பாளர்கள்தான் இலண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தமிழகச் சினிமாவில் தலைகாட்ட அலைந்து திரிந்து தலைகாட்டியும் இருக்கிறார்கள். இதே புறக்கணிப்பாளர்கள்தான் விஜயகாந்துக்கு காசில்லாமல் கனடாவில் தங்க ஏற்பாடும் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஈழத்துக் கலைஞர்களைக் கௌரவிக்கிற விழாவுக்கு பிரகஷ்ராஜ் வந்து போயிருக்கிறார். வடிவேலு முதற்கொண்டு கலக்கப்போவது யாரு படைவரை எல்லோரும் உழைத்துக்கொண்டு போவார்கள். சூப்பர் சிங்கர், மானாட மயிலாட போன்றவைதான் ‘கலை நிகழ்ச்சிகள்’ ஆகும். பிரேம்கோபாலும், பிரேமினியும் தமிழீழம் பெற்றுத் தருவார்கள். இப்படியாக எந்தவிதமான அடிப்படை அறமோ, ஓர்மமோ இல்லாமல் இருக்கிற எங்களை ‘செருப்பாய் இரு’ என்று ஒரு கழிசடை சொல்லும், இன்னொரு கழிசடை ‘யாழ்நகர்’ என்றெல்லாம் பொது அறிவெல்லாம் இல்லாமல் பெயரிட்டு விசரேற்றும், இன்னொரு கழிசடை உண்ணாவிரதப்பந்தலில் ‘பஞ்ச்’ பேசும். நாங்களும் ‘செருப்பாய் இருப்போம்’.

தமிழகச் சினிமா நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதா. பாருங்கள், மகிழுங்கள். தயவுசெய்து அந்த வியாபாரிகளை எங்கள் வாழ்வியலுக்குள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். கெட்ட அரசியல்வாதியைவிட மோசமானவர்கள் இந்தக் கெட்டிக்கார வியாபாரிகள்

 



Saturday 8 January 2011

செரிலாக்

’அப்ப என்ன மாதிரித் தம்பி. ஊரில எல்லாரும் சுகமா? அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம்? கதச்சனியே. நான் விசாரிச்சனான் எண்டு சொல்லடாப்பு’. அன்னாரை எனக்குக் கிட்டத்தட்ட 11 வருசமாகத் தெரிந்திருந்தது. திருமணவழியில் எங்கள் குடும்பத்துடன் உறவானவர். அன்னாரைப்பற்றி ‘ர்’ போட்டுக் கதைக்கிறபடியால் அவருக்கு பெரிய வயசெல்லாம் இல்லை. என்னிலும் ஒரு பதினைந்துவயது கூட இருக்கலாம். எங்களின் கிராமத்துக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு ஊர்தான் அவருக்கு அடி. ‘அல்வாய்’ கிராமசேவகர் பிரிவுக்குள் கொஞ்சம் பெரிய ஊர். தகப்பனார் நல்ல உழைப்பாளி, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. அந்தியோட்டிக் கல்வெட்டுகளில் விசாலமான அடைமொழிபோடுகிறவர்கள். எண்பதுகளின் கடைசியோ, தொண்ணூறுகளின் ஆரம்பமோ என்னவோ அன்னார் அங்கே வாழமுடியாத சூழ்நிலைக்கைதியாகி ஐரோப்பாவில் எல்லாம் சுற்றி கனடாவில் நிரந்தரமாகிவிட்டவர்.

அன்னார் ஒரு தேர்ந்த அரசியல்வாதி/விமர்சகர்/நோக்குனர். அதுவும் தாயக அரசியலில் அன்னாரின் பங்கு மகத்தானது. ‘சிவாஸ் ரீகல்’ கூடத் தேவையில்லை, ‘மொல்சன் கனேடியன்’ மணமே போதும், அன்னாரின் கருத்துரைகள் கடல்தேடு நதியெனப் பெருக்கெடுக்க. அன்னாரோடு சேர்ந்திருக்கும் இன்னார்கள் எல்லாம் ‘அவரிட ஐடியா என்ன எண்டால்...’ என்று தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்ககூடிய தங்களின் கருத்துக்களைச் சொல்லுவார்கள். உதாரணமாக, கமலஹாசன் எதை நினைத்து கையடிப்பார்... மன்னியுங்கள், கமலஹாசன் எதை நினைத்து தசாவதாரம் படத்தில் மேற்படி காட்சி எடுத்தார் என தங்களின் கருத்தை இப்படிச்சொல்வார்கள், ‘கமலிட ஐடியா என்னவெண்டால்........’. சதாம் ஊசேன், ஒபாமா, ராஜபக்சே, பிரபாகரன் எல்லோருடைய மனத்துக்குள் இருந்தவை, இருக்கிறவை எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தால் உங்களுக்கு உடனடியாகத் தண்ணியடிக்கத் தோன்றும்.

அன்னாருக்குக் கிட்டத்தட்ட எல்லாப்பரப்பிலும் விஷயஞானம் உண்டெனத் தோன்றும் எனக்கு. அதிலும் அன்னாருக்கும் இன்னார்களுக்கும் இடையில் நடக்கிற விவாதங்கள் அளப்பரிய கருத்தியல்களை சர்வசாதாரணமாகத் தொட்டுச்செல்லும். பெரும்பாலும் அன்னாரின் விவாதங்கள் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்றுதான் ஆரம்பிக்கும். இடனே முதலாவது இன்னார் ‘இல்ல.. அது எப்படியெண்டால் ஒன்றும் ஒன்றும் மூன்று’. அடுத்த இன்னார் ‘ஒன்றும் ஒன்றும் ஐந்தெல்லோ’ என்பார். இது சுற்றிச் சுற்றி அன்னாரிடம் வருகிறபோது அன்னார் விகாரமாகச் சிரித்தபடி ‘ஒன்றும் ஒன்றும் மூன்று’ என்பார். உடனே முதல் இன்னார் ‘இல்லைப்பாருங்கோ.. ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பார். இப்படியே விவாதங்கள் தொடர்ந்தபடியிருக்கும்.

அன்னார் அடிக்கடி ‘இந்த யூனியன் வச்சிருக்கிற கொம்பனியளில வேலைக்கே போகக்கூடாது. சும்மா யூனியன் fee எண்டு காசைப் பிடுங்கிறாங்கள். இந்தக் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு வேற வேலையே’ இல்லை என்பார். எனக்கு யூனியன்களின் இருத்தலுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். கைத்தொழில் புரட்சி, அந்தப் புரட்சி இந்தப் புரட்சி என்று தொழிற்சங்கவாதிகளின் தோற்றத்துக்கு வேண்டுமானால் பொதுவுடமைவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கலாம். அதே போல் பொதுவுடமைவாதிகளால் தொழிற்சங்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது இலகுவானதொன்றாய் இருக்கலாம். இருந்தும், சாதாரண உழைப்பாளிகளுக்கு நேர்மையான ஒரு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு நீ பொதுவுடமைவாதியாயிருக்கவேண்டியதில்லை, உன்னைச் சுற்றிய முதலாளிகளின் சமூகம் உன்னை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்று தெரிந்திருந்தாலே போதுமானது என்பது என்னுடைய கருத்து, தொழிற்சங்கங்களைப் பற்றி. தமிழகத்துச் சினிமாவில் வருகிற காக்கிச்சட்டைபோட்ட சந்திரசேகரைப் பார்த்துவிட்டு தொழிற்சங்கங்களைப் பற்றி அன்னார் கதைக்கும்போது அவரோடு வாதம் பண்ணுவதில் பிரயோசனமிருப்பதில்லை. ஒருமுறை ரசினிகாந்தும் கவுண்டமனியும்கூட அதே உடைபோட்டு ஒரு தொழிலாளியின் கைவெட்டுப்பட்ட காரணத்துக்காக ஏதோ வேலைநிறுத்தம் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லி....ம்ம்ம்ம், இப்படித்தான் அறிவூட்டப்பட்டிருந்தார் அன்னார். ஒருநாள் அன்னாரை downsizing  என்று சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிவிட்டார்கள். அன்னார் சொன்னார் ‘சே, எங்கட கொம்பனீல மட்டும் யூனியன் இருந்திருந்தால் என்ர நிலமையே வேற...’

ஒருநாள் அன்னாரின் வீட்டுக்குப் போயிருந்தபோது தாயக நிலமை பற்றிக் கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் கவலை இருந்தது. கடலில் மூன்று நாட்களாக ‘ஓட்டி யாரடா’ என்று சொல்லி எஞ்சின் சுடப்பட்டு, துப்பாக்கி முனையில் ஓட்டி திருப்பி அழைத்துச் செல்லப்பட ‘ஜலசமாதியை’ எதிர்பார்த்துக் காத்திருந்த உறவு சொன்ன கதைகள் எனக்குள்ளும் இருந்தன. கடல் தண்ணீரைத் தாங்கள் குடித்ததோடு மட்டுமல்லாமல் பழுதாய்ப்போன செரிலாக் மாவை கடல் தண்ணீரில் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டியதென்பது என்னைப் பொறுத்தவரை பெரும்கொடுமையாக இருந்தது. அப்படி செரிலாக் கூடக் கிடைக்காமல் செத்த எத்தனையோ பிள்ளைகள் பற்றியெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். அன்னார் மும்முரமாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்தார். அன்றைக்கும் போர் முடிந்துவந்துதான் பேசிக்கொண்டிருந்தோம். ரீ.வி.ப் பெட்டியில் திவ்யதர்ஷிணி பேசிக்கொண்டிருந்தார். அன்னார் உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னார், ‘இந்த மோட்டுச் சனங்களாலதான் எல்லாப் பிரச்சினையும். உவை என்னத்துக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு வாறம் எண்டு தாலிய அறுக்கினம்?’. ‘அப்பிடியில்லை அண்ணை. அவயளுக்கும் வாழோணும் எண்ட ஆசை இருக்குமண்ண. சாவு பற்றின பயத்தைவிட வேற எந்தப் பயமும் பெரிசில்லையண்ணை. அதான் அவையளும் வாழோணும் எண்டு நினைச்சு இஞ்சால வரப்பாக்கினம். நானும் நீங்களும் அவயளமாதிரி அங்க இருக்கேலாது எண்டு முடிவெடுத்து இஞ்ச வந்து இருக்கிறது எங்கட உரிமை. கடல் தண்ணீல பழுதான செரிலாக் கரைச்சு எட்டுமாசக் குழந்தைக்குக் குடுக்கிற சனம் உயிர்வாழ எண்டு எடுக்கிற முடிவுகூட அவேட உரிமை அண்ணை. பிறகு....’ முடிக்கமுன் இடைமறித்த அன்னார் சொன்னார், ‘தமிழனாப் பிறந்தவன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது அவேட கடமை’.

கொஞ்ச நேரத்துக்கு எதையுமே பேசாமல் இருந்தோம். திவ்யதர்ஷிணி ‘Judges  சொன்ன comments ஐ எல்லாம் improvise பண்ணி அடுத்தமுறை ஆடுங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். Comments ஐ, improvise பண்ணி எப்படி ஆடுவது என்று சிந்திக்கமுயன்றேன். என் மூளைக்கெட்டிய பரப்புகளில் மட்டும்தானே சிந்திக்கலாம்? அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய்? ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை? ஆ... முதல்ல பிள்ளைய ஒழுங்காப் பார்..........’ வசை தொடர்ந்தது.

*----*----*----*
2015 மே மாதம் ஒரு நாள். ரொரொன்ரோவில் 10 வயது மதிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். ‘நான் தமிழன். நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்னுடைய கடமை. அன்னார் முகத்தில் பெருமிதம் பொங்க HD Camcorder ஒன்றில் சிறுவனின் முழக்கத்தை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நாள் முரசுமோட்டையில் சுற்றாடல்கல்வி ஆசிரியை கொடுத்த வீட்டுவேலையில் ‘கடல் நீரின் பயன்கள் என்ன?’ என்ற கேள்விக்கு நிறைய யோசித்து ‘செரிலாக் கரைக்கலாம்’ என்று ஒரு எட்டுவயதுச் சிறுமி எழுதிக்கொண்டிருந்தாள்.