Saturday 16 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 10-ஜனவரி 16, 2010

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
கொழும்பு நியூ மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் பத்து நாட்களின் பின் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களின் மூலம் அரசு வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்' என்கிற கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனைய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கத் தயாராகிவந்த நிலையில், இந்தக் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து கைதிகள் தமது போராட்டத்தை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வாக்காளர்கள் இருவரதும் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும், தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இது தொடர்பாகப் பேசி, இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்வதாக அவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில்தான் திசநாயக்க இன்னும் தேர்தல் ஆணையாளராக நீடிக்கிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே அவரது சொந்த விருப்பத்துக்கு மாறாக நீதிமன்ற ஆணை ஒன்றின் பேரிலேயே தேர்தல் ஆணையாளராக திசநாயக்க நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்-புகுந்தகம்
தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரமான போர் என்ற பெயரில் அமெரிக்கா முன்னெடுக்கிற முட்டாள்தனமான போரில் இன்னொரு கனேடியர் காவுகொடுக்கப்பட்டிருக்கிறார். சார்ஜன் ஜோன் போட் (John Faught) என்பவரே இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். ஆஃப்கான் மக்களுக்கு வணக்கம் தெரிவித்தவேறே நடந்து சென்ற இவர் ஒரு பொறிவெடியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார். ஒன்ராரியோவின் சோல்ற் செயின்-மரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி மேற்படி ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குவாத சக்திகளின் முட்டாள்தனமான மோதலில் பலிவாங்கப்பட்ட 139வது இராணுவவீரர் ஆவார்.

மத்திய ரொரொன்ரோ தொகுதி இடைத் தேர்தல் மும்முரமடைந்திருக்கிறது. முன்னை நாள் ஒன்ராரியோ துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மான் தன்னுடைய பதவியை ரொரொன்ரோ நகரபிதா பதவியில் போட்டியிடும் பொருட்டு ராஜினாமாச் செய்த காரணத்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவரை ஸ்மிதர்மானைத் தாண்டி அந்தத் தொகுதியை லிபரல்களிடமிருந்து கைப்பற்ற முடியாமலிருந்த மற்றக் கட்சிகள் மும்முரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன. லிபரல்களுக்கு ஸ்மிதர்மானின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறது. காரணம், ஸ்மிதர்மானின் செல்வாக்கு அப்படி.

செய்திகள்-உலகம்
இந்த வாரம் உலகை உலுக்கியது ஹெய்ட்டி பூகம்பம். அரசியல் நிலையின்மையால் கிழிந்து போயிருந்த இந்த நாடு சமீபத்தில்தான் பெரும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரை இழந்தது, லட்சக்கணக்கானோர் அகதிகளானார்கள். அந்த அழிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் பலமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. செஞ்சிலுவைச் சங்கம் 45,000-50,000 பேர்வரை மடிந்திருக்கலாம் என்ற கணிப்பை வெளியிட்டபோதும், ஹெய்ட்டி உள்நாட்டு அமைச்சர் ஆகக் குறைந்தது 200,000 பேராவது இறந்துவிட்டார்கள் என்று கணிப்புத் தெரிவித்திருக்கிறார். Moment Magnitude Scale ல் புவி மேற்பரப்பில் 7.0 என்ற சுட்டெண்ணுடன் பதிவான இந்த நிலநடுக்கத்தின் பின்னான முதல் 9 மணித்தியாலங்களில் 4.2 சுட்டெண்ணுக்கு மேற்பட்ட மேலும் 26 அதிர்வுகள் இடம்பெற்றதுதான் அழிவை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஐ.நா. மற்றும் பல தன்னார்வ நிறுவனங்கள், உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொண்டர் அமைப்புகள், பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் எல்லாம் ஹெய்ட்டிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன. மேற்கரைக் கோளத்தில் மிகவும் வறிய நாடு ஹெய்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான இயற்கைப் பேரழிவுகளின்போது மனிதம் வெளிப்படுகிறது. ஆனாலும் இயற்கையும் கொன்று நாமும் நம்மைக் கொல்லும் வேகத்தைப் பார்த்தால் 2012 பற்றிய புரளிகளில் உண்மை இருக்குமோ என்று பயப்பட வேண்டியதாய் இருக்கிறது.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
ரோஜேர்ஸ் நிறுவனத்திம் வழங்கிவந்த HTC Dream Smartphone சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் GPS பாவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால், அவ்வாறு GPS பாவிக்கும்போது அவசர உதவிக்கான 911 அழைப்புகளை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறதாம் HTC Dreamல். அதனால் அவசர அவசரமாக ஒரு குறுஞ்செய்தி மூலம் ஏலவே இந்த வகை smartphoneகளைப் பாவிக்கிற பாவனையாளர்களுக்கு சரியான வழிமுறைகளை அனுப்பி வைத்திருப்பதோடு, HTC Dream விற்பனையையும் நிறுத்தி வைத்திருக்கிறது ரோஜேர்ஸ் நிறுவனம்.

விளையாட்டு
கடந்த பத்தாண்டுகளின் மிகச் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் cricinfo இணையத் தளத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பல புகழ்பெற்ற வீரர்களின் கடுமையான போட்டியைத் தாண்டி இவருக்கு இந்தக் கௌரவத்தை அந்த இணையத்தளம் கொடுத்திருக்கிறது. அடுத்து வந்த இடங்களை ஜக் கல்லிஸ், அடம் கில்கிறிஸ்ட், முத்தையா முரளிதரன், கிளென் மக்ராத், சச்சின் டெண்டூல்கர், ஷேன் வோர்ண், பிரயன் லாரா, ராகுல் ட்ராவிட், சிவநாராயணன் சந்திரபோல் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். மேற்படி கௌரவத்தைக் கொண்டாடுவதுபோல் பொண்டிங் அடித்தார் பாருங்கள் ஒரு இரட்டைச் சதம், அதுதான் பொண்டிங்.

அலன் போடர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்ற தலைவர்கள் கட்டமைத்த அருமையான அணியில் விளையாடினார் போன்ற காரணங்களையும், நடுவர்கள் எதிரணி வீரர்களுடன் முரண்படுபவர் என்ற பழிச் சொல்லை மீறியும் பொண்டிங் சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்படக் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதற்கு இந்த இரட்டைச் சதம் ஒரு நல்ல உதாரணம். அதற்கு முன்னைய போட்டிகளில் அப்படி நாறியவர், அந்த இரட்டைச் சத இன்னிங்ஸ்சை எப்படிக் கட்டியமைத்தார் என்பது masterclass.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
தைப் பொங்கலுக்குத் திரைக்குவந்த படங்களில் பலவற்றின் வலையுலக விமர்சனங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' பிய்த்து எடுக்கப்படுகிறது. பாண்டியர்களின் நிறம்கொண்ட பார்த்திபனைச் சோழனாக நடிக்க வைத்ததிலேயே சறுக்கிவிட்டார் போலிருக்கிறது. தனுஷ் குட்டியில் கடைசிக் காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். விரைவில் டி.வி.டி. வரட்டும். பார்க்கலாம்.

இந்த வருடம் வர இருக்கிற படங்களுக்கான பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஏலவே நல்ல முறையில் சந்தைப்படுத்தப்பட்ட ‘ஹோசானா'வோடு ஏனைய பாடல்களிலும் ரஹ்மான் கவர்கிறார். வித்தியாசமான genreல் அமைந்த 'ஆரோமலே' ஆகட்டும், மெல்லிதாகப் பின்னணியில் நாதஸ்வரம் கலந்து படைக்கப்பட்ட 'ஓமனப் பெண்ணே' ஆகட்டும்... ராஜாவுக்குப் பிறகு எல்லைகளைத் தாண்டுபவராக ரஹ்மான் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.

Sunday 10 January 2010

சானல்-4 காணொளி: ஐ.நா.வின் அறிவிப்பும் சில சாத்தியங்களும்

விடுதலைப் புலிப் போராளிகளை சர்வதேசப் போரியல் விதிகளுக்கு முரணாக இலங்கை அரச படைகள் கொலை செய்வது போன்ற காட்சிகளுடன் வெளியான காணொளி ஆதாரபூர்வமானது என சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் ஓல்ற்சன் தன்னுடைய அறிக்கையில் உறுதிசெய்திருக்கிறார். சென்ற ஓகஸ்ட் மாதம் வெளியான இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை தொடர்பில் இலங்கை அரசு பெரும் மறுப்புத் தெரிவித்து வந்திருப்பதும், அரசு சார் நிபுணர் குழுக்கள் மேற்படி காணொளி போலியானது என்று அறிவித்திருந்ததும் முந்தைய செய்திகளாக இருக்கும் வேளையில், பிலிப் ஓல்ற்சனின் இந்த அறிக்கை மீண்டும் இலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி வெளியான உடனேயே இலங்கை அரசாங்க அமைச்சர்கள், பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஆகியோர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள். அதுவும் நிஹால் ஜயசிங்க (பிரித்தானியாவுக்கான தூதுவர்) பி.பி.சி. க்கு அவசர அவசரமாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார் (பேட்டி அப்பா குதிருக்குள்ள இல்லை என்கிற மாதிரி இருந்தது வேறு விடயம்). இப்போது மூன்று நிபுணர்கள் அந்தக் காணொளியைப் ஆராய்ந்து கொடுத்த முடிவுகளின் அடிப்படையில் ‘அந்தக் காணொளி ஆதாரபூர்வமானது என்றும், மேற்படி படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசு விசாரணைகளை நடத்த வேண்டும்' என்றும் பிலிப் ஓல்ற்சன் ஐ.நா.வுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். ஓல்ற்சனின் முழுமையான அறிக்கைக் காணொளியைக் கீழே காணலாம்.அவரது இந்த அறிக்கை தொடர்பான கண்டனங்களை இலங்கை அரசு பதிவு செய்திருக்கிறது. தம்மிடம் எந்த விளக்கமும் கேட்காமல் இந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டது ராஜதந்திர விதிகளை மீறும் செயலாகும் என்று ரோஹித போகல்லாகமவும், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடிய செயலை பிலிப் ஓல்ற்சன் செய்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஓல்ற்சனின் அறிக்கை முழுமையாக மேலே இருக்கிறபடியால் அவரது அறிக்கையைப் பற்றி இங்கே நான் பேசப்போவதில்லை. ஆனாலும், ஓல்ற்சன் சொல்கிற சிபாரிசுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இங்கே அவசியமாகிறது. அதாவது, இந்தக் காணொளி பற்றி இலங்கை அரசாங்கம் சார்புகளற்ற ஒரு விசாரணைக் குழுவை இலங்கை அரசு அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான முடிவான முடிவொன்றுக்கு வழிகோல வேண்டும் என்பதாக அமைந்திருக்கிற அவரது சிபாரிசு/வேண்டுகோள் இலங்கை அரசால் இரண்டுவிதமாக நிறைவேற்றப்படலாம் (இலங்கை அரசு மட்டுமல்ல. எந்த நாட்டு அரசாங்கமும் மேற்படி சிபாரிசுகளை இந்த இரண்டு வழிமுறைகள் மூலம் நிறைவேற்றலாம்).
  1. இலங்கை அரசு தானாவ்கவே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்தக் காணொளி தொடர்பில் விசாரித்தல்.
  2. தம்மால் ஒரு குழுவை அமைக்க முடியாது என்பதை ஐ.நா.வுக்குத் தெரிவித்து ஐ.நா. வே ஒரு சர்வதேசக் குழுவை அமைத்து விசாரிக்க வைத்தல்
இலங்கை அரசு அமைக்கக்கூடிய குழு
ஏலவே இலங்கையில் பல பிரச்சினைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு என்கிற பெயரில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன என்பதும், அந்தக் குழுக்கள் பெரும்பாலும் எல்லாவற்றுக்குமான கண்துடைப்புக்கு மட்டுமே பயன்பட்டன என்பதும் யாவரும் அறிந்ததே. கண்துடைப்பு இல்லாமல், கொஞ்சமாவது செயல்ரீதியாக இயங்கிய குழுக்களின் கடைசி அறிக்கைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. மேற்படி காணொளி தொடர்பிலான விசாரணைகளுக்கு பிலிப் ஓல்ற்சன் முன்னரே கோரிக்கை வைத்தபோது இலங்கை அரசு ஒரு குழுவை அமைத்தது. அதில் இருந்த நான்கு இலங்கையைச் சேர்ந்த நிபுணர்களில் இருவர் இராணுவத்தினரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விசாரித்து மேற்படி காணொளி பொய்யானது, முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளின் பரப்புரை என்றுதான் சொன்னார்கள். அவர்களின் அறிக்கையின் பல முக்கியமான ஆவணங்கள் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களிடம் காட்டப்படவில்லை. இதனால்தான் ஓல்ற்சனே ஒரு குழுவை அமைத்து இந்தக் காணொளி பற்றி ஆராய நேர்ந்தது. இதை ஓல்ஸ்ரனே தன்னுடைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்கிற ஓல்ஸ்ரன் மீண்டும் இலங்கை ஒரு சார்பற்ற விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மீண்டும் ஒரு குழு அமைக்கப்படுமானால் மீண்டும் உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்படவே அதிக சாத்தியம் இருக்கிறது. இல்லாவிட்டால் வருகிற தேர்தலில் ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தால் அவரது அரசியல் எதிரி/துரோகி சரத் பொன்சேகாவுக்கு ஆப்படிக்கக்கூடிய வகையில் ஒரு விசாரணைக்குழுவை அமைக்கலாம். அல்லது சரத் ஆட்சியைப் பிடித்து கோத்தபாயவுக்கு ஆப்படிக்கக் குழுவை அமைக்கலாம். மகிந்த இந்தக் குற்றங்கள் நடந்த போது ஜனாதிபதி என்பதால் இலங்கையில் வைத்து அவரை யாரும் ஆட்ட முடியாது. ஆகவே இலங்கை அரசால் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டால், இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
  1. உண்மைகள் இருட்டடிக்கப்படலாம்
  2. அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டும் விசாரணைக்குழு அமைக்கப்படலாம்
ஐ.நா. குழு அமைத்தல்
இந்தக் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. முழுமையான விசாரணை ஒன்றை எடுத்துச் செல்ல ஒரு குழுவை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு மிகப் பெரிய உதவி ஒன்றைச் செய்தாகவேண்டும். அதாவது, ‘இந்த விசாரணைக்காக சார்பற்ற ஒரு குழுவை எங்களால் அமைக்க முடியாது. ஆகவே நீங்களே ஒரு சர்வதேசக் குழுவை அமைத்து விசாரித்துக்கொள்ளுங்கள்' என்று ஒரு வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுத்தாகவேண்டும். யாராவது ஆப்பென்று தெரிந்து போய் உட்காருவார்களா? ஆகவே இந்த இரண்டாவது வழிமுறை சாத்தியமில்லை.

மொத்தத்தில் காணொளி உண்மையானது என்பது தீர்மானமாகிவிட்டது. இலங்கையில் அந்தப் போரின் இறுதி நாட்களில் கொடூரமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் வெளிப்படை உண்மையாகிவிட்டது. ஆனபோதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. (இங்கே குற்றவாளிகள் என்ற சொல்லைத் தனியே இராணுவம் என்றுமட்டும் அர்த்தப்படுத்திக்கொண்டால் நான் பொறுப்பல்ல). ஆக மொத்தத்தில் ஓல்ஸ்ரனின் சிபாரிசு மனதில் விதைக்கும் கேள்வி, ஐக்கிய நாடுகள் சபையிடம் என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஐ.நா.வை நோக்கி நாமெல்லாம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுவே.

Saturday 9 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 03-ஜனவரி 09, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பரவட்டும் பரவட்டும் ஒளிவெள்ளம். ஒரு வார இடைவெளிவிட்டு மீண்டும் இதோ என்னுடைய வாராந்திரத் தொகுப்பு, நண்பன் ‘வடலூரான்' கலையரசன் என்றைக்கோ சொன்ன புதிய தலைப்புடன்.

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.


செய்திகள்-பிறந்தகம்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற குழப்பம் (அல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்ற பேரம்) கடைசியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தீர்ந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு எடுக்கிற முடிவுகள் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பனவாக இல்லாமல் இருக்கிற காரணத்தால், அவர் இன்னொரு முறை ஜனாதிபதியாக வர அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது என்றும், இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகவுக்கு தமிழ் மக்கள் யாவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய வரியாக கருதக்கூடியது, ‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன'. அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நாக்கைப் புரட்டிப் பேசுவார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம் இங்கே. (முஸ்லிம்களை மட்டும் தொப்பி பிரட்டிகள் என்று இலகுவாக முத்திரை குத்திவிட முடிகிறது நம்மால். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை?)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார். அவரது பூதவுடல் வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் A9 நெடுஞ்சாலையூடாக வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இராணுவக் காவலில் இயற்கை மரணம் எய்தினார் என இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது (??!!).

செய்திகள்-புகுந்தகம்
வருகிற ஜனவரி 25ம் திகதி தொடங்கவேண்டிய கனேடியப் பாராளுமன்ற அமர்வை மார்ச் 3ம் திகதிவரை பின்தள்ளி வைக்க பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. பெப்ரவரி 12-28 வரை நடக்க இருக்கிற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற அமர்வைத் தள்ளிவைக்க இருப்பதாக ஹார்ப்பர் சொல்லும் காரணத்தை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்திருக்கிறன. அதிலும் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் சர்வநிச்சயமாக குறிப்பிட்ட திகதிகளில் மன்றில் இருப்போம், தங்கள் வேலையைச் செய்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆஃப்கானியக் கைதிகளைத் துன்புறுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளின் சூட்டை இன்னும் குறைப்பதற்கே ஹார்ப்பர் முயல்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறன.

இதே வேளை பொதுமக்களும் பாராளுமன்றம் பிற்போடப்படுவதை ஆதரிக்கவில்லை. Facebook, twitter போன்ற சமூக வலையமைப்புகளில் மக்களின் எதிர்ப்புக்குரல் வலுவாகப் பதியப்பட்டுள்ளது. வழமையாக வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களை வேலைக்குக் கொண்டுவர back to work legislation கொண்டுவருவார்கள் ஆள்பவர்கள். இனி மக்கள் பொங்கி ஆள்பவர்களை வேலைக்கு இழுத்துவரவேண்டி இருக்கும் போல் இருக்கிறது நிலைமை.

செய்திகள்-உலகம்
உமர் அப்துல்முதலப்பின் வாக்குமூலத்தின் பின்னர் யேமன் நாட்டுக்கு பிரச்சினை முற்றி இருக்கிறது. அல்-கய்தா தன்னைப் போல் பலரை மூளைச் சலவை செய்து யேமன் நாட்டில் வைத்து அமெரிக்காவுக்கு எதிராக தயார் செய்து வருகிறது எனற உமரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தீவிரவாதத்துக்கு எதிரான பயிற்சிகளை யேமன் நாட்டின் படைகள் மேற்கொண்டு வருகின்றன. யேமன் நாட்டின் புவிச்சூழல் ஆஃப்கானிஸ்தானைவிட அல்-கய்தாவுக்குப் பாதுக்காப்பானதாக இருப்பதால் இலகுவில் அங்கே இருக்கிற தீவிரவாதிகளை அழித்துவிட முடியும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. அல்-கெய்தாவிடமும், ஏகாதிபத்தியங்களிடமும் கேட்க நினைக்கும் கேள்வி இவைதான்:
  1. முஸ்லிம்களுக்கு உலகமே சேர்ந்து அநீதி விளைவித்துவிட்டதாகச் சொல்லி நீங்கள் எடுக்கிற முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் ஏன் குர்-ஆன் என்ற புனித நூலுக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்?
  2. உங்கள் இருதரப்புக்குமான முட்டல் மோதலில், எங்கோ ஒரு மூலையில் பிறந்து, வளர்ந்து, கொஞ்சம் மேலான வாழ்க்கை தேடி வெளிநாடுகளுக்கு வருகிற அப்பாவிகள் ஏன் சாகவேண்டும்?


வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீள்வது பற்றிய நம்பிக்கைகள்மீது இன்னொரு இடி விழுந்திருக்கிறது. கனடாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் சென்ற மாதத்துக்கான வேலையின்மை பற்றிய புள்ளிவிபரங்கள் நம்பிக்கையூட்டுவதாய் இல்லை. கனேடியப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைப்படி டிசம்பர் மாதம் 2600 பேர் வேலையிழந்தார்கள். 20,000 பேர் வேலை பெற்றார்கள். நவம்பரில் திடீரென 79,000 பேர் வேலை பெற்றபோது கிடைத்த நம்பிக்கை இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. இருந்தபோதும் வேலையின்மைச் சுட்டெண் 8.5ல் மாறிலியாகவே இருந்திருக்கிறது.

இப்படியாகப் பொருளாதாரம் மீள்வதற்குப் பலர் போராடிக்கொண்டிருக்க, வங்கிக் கடன்களைச் சுருட்டிக்கொண்டு வங்குரோத்துக்குப் போவது, விபத்துக்களை செயற்கையாக உருவாக்கி காப்புறுதி நிறுவனங்களை அறுப்பது, கள்ளக் கடனட்டைகள் என்று ஒரு கூட்டமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

விளையாட்டு
அங்கோலாவில் நடைபெற இருக்கிறா ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்ள அங்கோலா சென்ற ரோகோ நாட்டுக் காலபந்தாட்ட அணி பயணம் செய்த பஸ்மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் மேற்கொண்ட தாக்குதல் இந்த வாரம் விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 'எங்களை நாய்களைப் போல சுட்டார்கள்' என்று ரோகோ வீரர் தோமஸ் டொசாவி கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. தனியே விளையாட்டு வீரர்கள் மீது நடந்த தாக்குதலாக மட்டும் இதை நோக்காமல், மனித குலம் அழிவுப் பாதையில் விரைவாகச் சென்றுகொண்டிருப்பது தொடர்பான எச்சரிக்கையாக இதைக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட இனங்கள் துப்பாக்கி தூக்காவிட்டால் அழிக்கப்பட்ட இனங்களாகிவிடும் அபாயம் இருக்கிறபோதும், துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதற்கு சமீபத்தில் நாங்கள் பார்த்த உதாரணம், இலங்கைப் பிரச்சினை.

இதே வேளை இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கிற கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளுக்கும் இந்தத் தாக்குதல் ஒரு அச்சுறுத்தலே. தென்னாபிரிக்கா அருமையாகப் போட்டிகளை நடாத்தக்கூடிய ஒரு நாடு. அங்கே நடக்க இருக்கிற மிகப்பெரிய போட்டித்தொடர் 2010 கால்பந்தாட்ட உலகக் கோப்பை. அது தென்னாபிரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆபிரிக்காவுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. பார்க்கலாம்.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
சரத்குமாரின் ‘ஜக்குபாய்' படம் வெளிவர முன்னரே திருட்டு வி.சி.டி. யில் உலகம் பூராவும் வெளிவந்து தமிழ்த் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரையுலகம் அதிர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு ஒழுங்கு இருக்கிறதல்லவா, அது அப்படியே நடந்தது. திரையுலக ஜாம்பவான்கள் கூடிக் கூட்டம் போட்டுத் திட்டித் தீர்த்தார்கள். சரத்தும், ராதிகாவும் மேடையில் கண்கலங்கினார்கள். முதல்வர் கருணாநிதியை நோக்கி ஜம்பவான்கள் படையெடுத்தார்கள். மனுக் கொடுத்தார்கள். ‘மனு'நீதிச் சோழன் உடனே முடிவெடுத்தார். இனிமேல் திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள், விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் என்று அறிவித்தாயிற்று.

எல்லாம் சரிதான், திரையுலகுக்கு உள்ளே நடக்கும் மோசடிகளுக்கெல்லாம் எந்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? உதவி இயக்குனர்கள், துணை நடிகர்கள், நடிகைகள், முன்னணி நடிகைகள், தொழில்நுட்பவியலாளர்கள் தொடக்கம் எத்தனையோ பேரைப் பயங்கரமாக சுரண்டிக் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார்கள் இவர்கள். அப்படிச் சுரண்டப்படுபவர்கள்தான் இவர்களைத் திருட்டு வி.சி.டி. வடிவில் சுரண்டுகிறார்களோ என்பது என் ஐயம்.