Wednesday 28 October 2009

குட் ஷெப்பேர்ட்

இந்திய-அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியின் நிலவரம் அறிய இன்று காலை cricinfo பக்கம் போனவன் கண்ணில் தேடிவந்து பட்டது முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பேர்ட் அவர்களின் மரணச் செய்தி. கிரிக்கெட்டை ரசிக்கும் எவரும் ஷெப்பேர்ட்டை மறக்க முடியாது. இன்றைய பில்லி பௌடனின் கோமாளித்தனம் எதுவுமே இல்லாமல், மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்களையும், நண்பர்களையும் பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல், வீரர்கள், நிர்வாகிகள், விமர்சகர்கள் ஏன் ரசிகர்களால் மதிக்கவும் நேசிக்கவும் பட்ட இரண்டு சர்வதேச நடுவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தி, கிரிக்கெட் ரசிகன் ஒருவனின் கண்ணில் இயல்பாய்ப் பட்டதில் ஆச்சர்யமில்லை. (மற்றவர் டிக்கி பேர்ட்)

படம்-1: மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வசீகரப் புன்னகையோடு ஷெப்பேர்ட்.
படம்-2: நெடுநாள் நண்பர் டிக்கி பேர்ட்டுடன் ஷெப்பேர்ட். இருவரும் திறமையான நடுவர்கள், நகைச்சுவைக்கும் கண்டிப்புக்கும் பெயர்போனவர்கள்

ஷெப்பேர்ட்டுக்கும் எனக்குமான தொடர்பும், கிரிக்கெட்டுக்கும் எனக்குமான காதலுக்கும் ஒரே வயதுதான். ஆம், 1996ம் வருடம் எந்தப் போட்டியில் சச்சின் என்னை வசீகரித்து இந்த விளையாட்டில் மூழ்கடித்தாரோ, அதே போட்டியில் (இந்தியா எதிர் கென்யா, மாசி 18, 1996) ‘இந்தாளைப் பார். பகிடியாய் இருக்கும்' என்று அப்பாவால் காட்டப்பட்டு அறிமுகமாகி, பின்னர் கிரிக்கெட்டின் நெளிவு சுளிவுகளையும், நடுவராகப் பணியாற்றுவதில் இருக்கக்கூடிய சிக்கல்களையும் உணர்ந்துகொண்டபோது, வீரர்களில் சச்சின் எப்படி ஆதர்ச நாயகனோ, அப்படி ஆதர்சமானவர் ஷெப்பேர்ட். அந்தப் போட்டியிலும் 111 என்ற ஸ்கோர் வந்ததும், ஷெப்பேர்ட் தன்னுடைய துள்ளலைச் செய்ததும் இன்றுங்கூட மனதில் இருக்கிறது.

டேவிட் ரொபேர்ட் ஷெப்பேர்ட், 1940ம் வருடம் டிசம்பர் மாதம் 27ம் திகதி, இங்கிலாந்தின் டெவொன் (Devon County) மாநிலத்தின் துறைமுக நகரான பைட்ஃபோர்ட் (Bideford) என்ற இடத்தில் பிறந்தார். குளோசெஸ்டர் அணிக்காக 1965 தொடக்கம் 1979 வரை முதல்தரப் போட்டிகளில் ஆடினார். 282 நான்கு நாள் போட்டிகளிலும், 183 ஒருநாள் போட்டிகளிலும் அந்த அணியின் மத்திய வரிசையில் ஆடிய ஷெப்பேர்ட்டின் உருண்டு திரண்ட உடல்வாகு காரணமாகவும், அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வு காரணமாகவும் அப்போதே எல்லாராலும் விரும்பப்பட்டார். ஆனால் ஷெப்பேர்ட் புகழின் உச்சத்தை அடைந்தது, ஒரு நடுவராக.

படம்-3: களத்தில் வீரராக ஷெப்பேர்ட்.

1981 ல் முதல்தரக் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றத் தொடங்கிய ஷெப்பேர்ட், 1983 உலகக் கோப்பையில் சர்வதேசக் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1985ல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த ஒரு டெஸ்ட் ஆட்டத்தின்பின் இவர் மேலும் புகழ் பெற்றார். விளையாடும் அணி எண்ணிக்கையோ அல்லது ஒரு தனிநபர் எண்ணிக்கையோ 111 என்ற எண்ணையோ அல்லது அதன் மடங்குகளையோ தொட்டால் அது துரதிர்ஷ்டம் என்று நம்பிய ஷெப்பேர்ட், அப்படியான எண்ணிக்கை எட்டப்படும்போதெல்லாம் சின்னதாக ஒரு துள்ளல் துள்ளுவார். சில நண்பர்கள் சேர்ந்து 1985 ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் போட்டியில் பெரிதாக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு அதன்பின் அவரது அந்தத் துள்ளலுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

படம்-4: ஷெப்பின் அந்தப் புகழ் பெற்ற நெல்சன் துள்ளல்.

ஷெப்பேர்ட்டின் நகைச்சுவை உணர்வு பலரையும் கவர்ந்த ஒன்று. ஷெப்பேர்ட் தன் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உதவினார் என்று அவருக்கான அஞ்சலிக் கட்டுரையில் கூறியிருக்கும், ஐந்து முறை தலைசிறந்த நடுவராக வாக்களிக்கப்பட்ட சைமன் ரோஃபுல் அதே அஞ்சலிக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ஷெப்பேர்ட்டும் நானும் ஒருங்கிணைந்து பணியாற்றிய வெளிநாட்டுத் தொடர்களை மறக்கமுடியாது. அந்தத் தொடர்களில் ஷெப்பேர்ட் என்னிடம் அடிக்கடி ‘எனக்காக ஒரு சுற்று அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய், நான் உனக்காக ஒரு ஐஸ்கிரீம் அதிகமாகச் சாப்பிடுகிறேன்' என்று. இனிமேல் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஐஸ்கிரீம் சாப்பிடும்போதோ நன்றி நண்பா என்று சொல்லி ஷெப்பை நினைத்துக் கலங்கத்தான் முடியும்'.

ஷெப்பேர்ட்டிடம் என்னைக் கவர்ந்த விஷயமாக நான் பார்ப்பது, அவர் தன்னுடைய உள்ளுணர்வையும், கிரிக்கெட் அறிவையும் அற்புதமாக ஒருங்கிணைத்து, வேகமாக தன்னுடைய முடிவுகளை எடுப்பார். அதிலும் எல்.பி.டபிள்யூ கொடுப்பதில் நேரம் தாழ்த்தவே மாட்டார். சாதாரண மென்பந்துக் கிரிக்கெட்டில் நடுவராகப் பணியாற்றுவதே கடினம். அப்படியான போட்டிகளில் இதே உள்ளுணர்வை வைத்து எடுக்கும் முடிவுகளை வீரர்கள் ஏற்பது அதைவிடக் கடினம். இந்நிலையில் சர்வதேசப் போட்டிகளில் ஷெப் அப்படியான முடிவுகளை எடுத்தது உண்மையிலேயே மிகவும் துணிகரச் செயல்.

படம்-5: நடுவராக ஷெப்பேர்ட். வலப்பக்கம் ஒரு ரன்-அவுட்டை முடிவு செய்ய அவர் நிற்கும் இடத்தைப் பாருங்கள். அதுதான் ஷெப்.
படம்-6: தேவையான நேரங்களில் ஷெப் கண்டிப்பாக இருக்கத் தவறியதில்லை. இரண்டு பீமர் வீசிய வக்கார் யூனுசைப் பந்து வீசவிடாமல் தடுப்பதிலாகட்டும், உலகின் மிகவும் செல்வாக்கான வீரர்களான ஸ்டீவ் வோ மற்றும் லாராவைக் கூப்பிட்டுக் கண்டிப்பதிலாகட்டும், ஷெப் கடமை தவறவில்லை.

ஷெப்பின் இதே முறையில் உள்ளுணர்வைக் கேட்டு, பக்னோர் போன்றெல்லாம் ஆராய்ந்து குழம்பாமல் எடுக்கப்பட்ட முடிவுகளில் சில தவறுகள் நேர்ந்தாலும் மிக மிக மோசமான முடிவுகளாக அவை ஒருபோதும் இருப்பதில்லை. இதை சொந்த அனுபவத்திலும், ஷெப்பை தொலைக்காட்சியில் பார்த்த அனுபவத்திலும் என்னால் உறுதிப்படுத்தமுடியும். ஒரு முடிவுக்கு எடுக்கப்படும் நேரம் அதிகமாக அதிகமாக, முடிவில் சர்ச்சை இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும் என்பது என்னுடைய கருத்து. அத்துடன் அவரே ஒரு வீரராகவும் இருந்த காரணத்தால், உள்ளுணர்வு அநேகமான சந்தர்ப்பங்களில் அவருக்கு சரியாகவே வழிகாட்டியிருக்கிறது. எனக்கு அவர் விட்ட பிழைகள் இரண்டுதான் ஞாபகத்தில் இருக்கின்றன. (பக்னோர்-சச்சின் இணையை நினைத்தாலே என்னிடம் நான்கைந்து பிழையான முடிவுகள் உதாரணமாக இருக்கின்றன)
  1. 1999 உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இன்சமாமை ஆட்டமிழந்ததாக அறிவித்தது.
  2. 2001ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து மான்செஸ்டர் டெஸ்டில் தோற்றபோது விழுந்த கடைசி நான்கு விக்கெட்டுகளில் மூன்று No-balls. அவற்றில் இரண்டைக் கணிக்காமல் விட்டது ஷெப்.
படம்-7: ஷெப்பின் இறுதி டெஸ்ட் போட்டியில் லாராவும், இறுதி ஒரு நாள் போட்டியில் டரன் கௌஃபும் தம் அன்பைப் பரிமாறுகிறார்கள்.

ஜூன் 3-5, 2005, மேற்கிந்தியா-பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கிங்ஸ்ரனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இறுதித் தடவையாக டெஸ்ட் போட்டிகளிலும், ஜுலை 12, 2005 ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டியில் இறுதித்தடவையாக ஒரு நாள் போட்டிகளிலும் கடமையாற்றினார் ஷெப்பேர்ட். 1996, 1999, 2003 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதியாட்டங்களிலும், (1987, 92 இல் இங்கிலாந்து இறுதியாட்டத்துக்கு வந்ததால் இவர் நடுவராக முடியவில்லை) மொத்தமாக 92 டெஸ்ட் போட்டிகளிலும் (பக்னோர் 128, கோர்ஸ்டன் 107), 172 ஒருநாள் போட்டிகளிலும் (கோர்ஸ்டன் 201, பக்னோர் 181) கடமையாற்றிய ஷெப்பேர்ட், 2008ம் வருடம் அவரின் நீண்டகால சிநேகிதியான ஜென்னியை மணமுடித்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஷெப் இன்று (27/10/2009) மரணமெய்தினார். தன் மனச்சாட்சிக்குப் பிறழ்வாக எந்த ஒரு முடிவையும் தான் எடுக்கவேயில்லை என்று கூறிய ஷெப் அடிக்கடி சொல்லும் வாசனத்தால் அவருக்குப் பிரியாவிடை கொடுத்திருக்கிறது cricinfo.... 'Good luck mate and may your god go with you'. May his soul Rest In Peace. Good bye Shep.

3 comments:

sanjeevan said...

ம்ம். மிகச்சிறந்த நடுவர் சேப்பெட்

Unknown said...

உண்மைதான் சஞ்சீவன்

யோ வொய்ஸ் (யோகா) said...

உண்மையில் ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டோம்.