Thursday, 8 October 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-6

முன்னைய எல்லாப் பாகங்களையும் இங்கே சென்று படியுங்கள்.

சென்ற பாகத்தில் சொன்னது போலவே, தமிழ் எழுத மாணவனுக்குப் பயிற்ற, சிவா பிள்ளை பல்வேறு வழிமுறைகளைச் சொல்கிறார். உதாரணமாக, கரும் பலகையில் அல்லது வெண் பலகையில் ஆசிரியர் ‘அ' எழுதும் போது, அவருக்கு வளமான பக்கத்தில் நின்று எழுதுவார். அந்தப் பக்கத்தில் இருக்கும் மாணவனுக்கு சில வேளை அந்த எழுத்தை அவர் எங்கே தொடங்கி, எங்கே முடிக்கிறார் என்று தெரியாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்குக் கூட நான் எழுதும் சில ஆங்கில எழுத்துக்களை, சில எண்களை பிழையாகத் தொடங்கிப் பிழையாக முடிக்கிறேன். உருவம் கிட்டத்தட்ட ஒத்திருப்பதால் தப்பிக்கிறேன். அதுவும் வெளிநாடுகளில் நாங்கள் ஒரு இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்பிக்கும் சூழ்நிலையில், எழுத்துருக்கள் சரியாக அறிமுகம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் பெரிதாக இருக்கிறது.

இதற்கு சிவா பிள்ளையவர்கள் முன்வைக்கும் தீர்வுகளில் இரண்டை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று, பல்லூடகச் சாதனங்களைப் பயன்படுத்தி எழுத்துருவை அறிமுகம் செய்வது. உதாரணமாக, ‘அ' என்ற எழுத்தை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை, பல்லூடகச் சாதனங்கள் மூலம் நிகழ்த்திக் காட்டலாம். சிவா பிள்ளையவர்கள் PowerPoint அளிக்கையில் அதையும் உள்ளடக்கி நிகழ்த்திக் காட்டினார். அந்த அசைவூட்டம் என்ன மென் பொருள் மூலம் உருவாக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனாலும், மாணவர்களைக் கவரும் முறையில் அந்த அசைவூட்டம் இருந்தது. (எனக்குத் தெரிந்த மென் பொருள்களில், flash மூலம் அதை ஒரு நிமிடத்தில் செய்ய முடியும். அதைவிட மேம்பட்ட மென்பொருள்கள் இருக்கிறனவா இல்லையா என்று எனக்குத் தெரியாது).

இது போன்ற பாடத்திட்டங்கள் வேணுமானால் தமிழம் இணையத்தளத்தில் பொள்ளாச்சி நேசன்- சிவா பிள்ளை ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான (இப்போது பொள்ளாச்சி நேசன் வசமே முழுப் பொறுப்பும் இருப்பதாகக் கேள்வி) இலவச பல்லூடகப் பாடம் ஒன்று இருக்கிறது. ஒரு உதாரணத்துக்காகப் பார்க்கலாம்.

இல்லை இப்படி அசைவூட்டம் மூலம் நிகழ்த்திக் காட்டுவது கடினம் என நினைத்தால், அதற்கும் சிவா பிள்ளை வழி சொல்கிறார். இது தொட்டுணர்தல் மூலம் சொல்லிக் கொடுக்கும் வழி. அதாவது, பிரத்தியேகமான இரப்பர் மூலம் தமிழ் எழுத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார். பிள்ளையை ஒரு எழுத்தைத் தொட்டு உணர்ந்து, அதன் உருவத்தை வைத்து அந்த எழுத்தை இனங்காண வைப்பதன் மூலமும் தமிழ் எழுத்துருக்களை அறிமுகம் செய்யலாம் என்பது அவர் சொன்ன வழிகளில் இன்னொன்று. அதே போல், ஒரு எழுத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, அந்த எழுத்தைக் கொண்ட சில சொற்களைத் திரும்பத் திரும்ப மாணவர்களை உச்சரிக்க வைப்பதும் பலன் தரும் என்கிறார் சிவா பிள்ளை அவர்கள். பின்னர் சொற்களை அறிமுகம் செய்யும்போது, அச்சொற்கள் பயன்படும் சிறு சிறு வசனங்களை வாசிக்க வைக்கலாம்.

பிள்ளைகளிடம் தமிழ் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு அவர் சொன்ன இன்னொரு வழியை சிலர் சர்ச்சைக்குரியதாகக் கூடப் பார்த்தார்கள். அதாவது சினிமாவை தமிழ் கற்பித்தலில் ஒரு கருவியாக எடுத்துக் கொள்ளலாம என்கிறார். உண்மைதான், நாங்கள் என்னதான் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனைகள் போல் நடந்து கொண்டாலும், சினிமா எங்கள் அன்றாட வாழ்க்கையில் ஊறிவிட்டதுதான். ஆகையால் சினிமாவையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது தவறில்லை என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருத்தே.

ஆனால், சினிமாவைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. சிவா பிள்ளை அவர்கள் சில பிரபலமான அந்தக் காலத்து சினிமாப் பாடல்களை இசைக்கேற்ப சொற்களை மாற்றி சில காணொளிகள் தயாரித்திருந்தார். உதாரணமாக, கீழே உள்ள பாடலைப் பாருங்கள். தில்லானா மோகனாம்பாள் படப்பாடலை எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்று. (இதே போல் ‘மலர்ந்தும் மலராத' பாடலையும் மாற்றியிருக்கிறார். காணொளி கிடைக்கவில்லை)ஆனால் இங்கேதான் ஒரு சிக்கல் இருக்கிறது. இங்கே சிவா பிள்ளை அவர்கள் தேர்ந்தடுத்த பாடலும், பாடலுக்கான காணொளியும் சிறப்பாகவே இருக்கின்றன. சிக்கல் என்னவென்றால், என்னுடைய அக்காவின் மகன் இதில் வரும் சிவாஜி- பத்மினி ஆகியோரின் முகபாவனைகளைப் பார்த்தால் சிரிக்கிறான். என்னுடைய ரசனையைக் கிண்டலடிக்கிறான். இந்த ரசனை வேறுபாடு சிலவேளை பிள்ளைகளை ஈர்க்காமல் போகலாம். (எல்லாப் பிள்ளையும் கிண்டலடிக்கும், எல்லாப் பிள்ளைக்கும் ஈர்ப்பு வராது என்று சொல்லமுடியாது).

இன்றைக்கு வருகிற பாடல்களை இவ்வாறு மாற்றலாம் என்றால் குழந்தைகளுக்குப் பாடல் எடுக்கிறோம் என்று சில குப்பைகளை எடுக்கிறார்கள் (உ+ம்: மியாவ் மியாவ் பூனை). நேர்த்தியான, பெரும்பாலான குழந்தைகளின் ரசனைக்கும் பொருந்தக்கூடிய சினிமாப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் ஆசிரியர்கள் சினிமாவைக் கருவியாக்குவதில் இருக்கக்கூடிய பிரதானமான சிக்கல். பட்டறையில் கலந்து கொண்ட வயதானவர் ஒருவர் 'சரஸ்வதி சபதம்' படத்தில் சிவாஜி 'அம்மா' 'அப்பா' உச்சரிப்பதான காட்சியை சிவா பிள்ளை அவர்கள் போட்டுக் காட்டியபோது அடித்த ஒரு விமர்சனம் ‘சிவாஜி தமிழ் உச்சரிக்கிற மாதிரி ஆரய்யா இண்டைக்கு உச்சரிக்கிறாங்கள்' என்று. காணொளியைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யலாம்.இவ்வாறாகப் பல நல்ல கருத்துக்களை முன்வைத்த சிவா பிள்ளை அவர்களின் பட்டறையின் வெற்றி, இறுதியாக நடந்த கலந்துரையாடலகளில் தெரிந்தது. பெரும்பாலானவர்கள் இது ஒரு மிகவும் பயனுள்ள பட்டறை என்று உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினார்கள். கிட்டத்தட்ட பட்டறையில் இருந்த எல்லோருமே அவரைத் தனியாகச் சந்தித்து நன்றி கூறினார்கள். நன்றியுரை நிகழ்த்திய துறையூரான் அவர்கள், எம்மவர்கள் கேளிக்கைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இப்படியான பட்டறைகளுக்குக் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். சிவா பிள்ளை போன்றவர்களின் முயற்சிகளின் அடிநாதத்தில் இருக்கும் நல்ல நோக்கைப் பாராமல், அவர்களது தமிழ் மொழி வார்த்தைப் பிரயோகம் போன்ற சில உப்புச் சப்பில்லாத விஷயங்களைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பவர்களையும் துறையூரான் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் சாடினார். (அவையில் இருந்த சிலருக்குக் கூட நன்றாகச் சுட்டிருக்கும்)

சிவா பிள்ளை போன்றோர் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. பட்டறை பற்றிய பார்வை இந்தப் பாகத்தோடு முடிந்தாலும் கூட, சிவா பிள்ளை போன்றவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், இவர் போன்றவர்களைக் குறி வைத்து சில வைக்கோற் பட்டடைச் சிங்கங்கள் (அந்தப் பிராணியைச் சொன்னால் பிராணிக்குக் கேவலம்) செய்கிற சில அவதூறுகள், இலங்கை, இந்தியத் தமிழர்கள் என்ற அபத்தமான பிரிவினை மற்றும் எம்மவர்கள் மீதான சில குற்றச்சாட்டுகளையும் ஆகக் குறைந்தது இன்னொரு பதிவில் கலந்துரையாட வேண்டியிருக்கிறது. மீண்டும் சந்திப்போம்

1 comment:

vasu balaji said...

நிறைவான நிறைவு. மிகப் பயனுள்ள ஒரு தொடர். நன்றி கிருத்திகன்.