Monday 29 June 2009

அக்கரைப் பச்சை

பதிவர் வந்தியத்தேவனின் 'இளையராஜா ஒரு சகாப்தம்' படித்தேன். பல சாதனைகள் செய்த ராஜாவை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது பற்றியும் பதிவுலகில் இருக்கும் அவர்பற்றிய மாற்றுக் கருத்துகள் பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். மக்கள் மத்தியில் வரும் எல்லாமே விமர்சனத்துக்குரியவைதான். ஆனால், பதிவுலகில் ஒரு புற்றுநோய் பரவி வருகிறது. அதாவது, விமர்சனம் (Criticism) என்பதை விடுத்து, முக்கால்வாசிப் பேர் பதிவுகளுக்கு அதிக ஹிட் கிடைப்பதற்காக நிந்தனையில் (Bashing) ஈடுபடுவதுதான் அந்த நோய். ராஜாவை மட்டுமல்ல, கலைத்துறையில் இருக்கும் 99சதவீதம் பேரையுமே இவர்கள் வெளிநாட்டுக் கலைஞர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலான பதிவர்கள் வைக்கும் ஒரு பாரிய குற்றச்சாட்டு இயக்குனர்கள் வெளிநாட்டுப் படங்களைச் சுட்டுப் படம் எடுக்கிறார்கள் என்பதே. உண்மை, பல பேர் அப்படி வெளிநாட்டுப் படங்களை ஒரு Inspirationஆக வைத்துப் படம் எடுக்கிறார்கள் எனபது உண்மைதான். அதற்காக, ஒரு மையக் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதைவைத்துப் படம் பண்ணும் இயக்குனர்களையும் ‘காப்பி காப்பி' என்று சொல்லி நிந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு தனது வேலைக்குத் தேவையான வாகனத்தைத் தொலைத்துவிட்டுத் தேடும் ஒருவனை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட படம் 'Bicycle Thieves' என்ற படம். அந்தக் கருவை மட்டும் பின்னணியாக வைத்துக்கொண்டு பொல்லாதவன் படத்தை எடுத்தார் வெற்றிமாறன். கடத்தல் செய்யும் தாதாக்கள், ஒரு காதல், திருடிய மோட்டார் சைக்கிள்கள் என்னாகின்றன இப்படி பல விடயங்களை நுணுக்கமாக நுழைத்திருப்பார் வெற்றிமாறன். இவைகளைப் பாராட்டாமல், பொத்தாம் பொதுவாக ‘பொல்லாதவன் ஒரு காப்பி' என்று மட்டுமே சொல்கிறார்கள் நம்மவர்கள்.

கமல் அல் பாசினோ போல், மார்லின் பிராண்டோ போல் நடிக்கிறாராம். வெளிநாட்டுப் படங்களைச் சுட்டுப் படம் எடுக்கிறாராம். இப்படியெல்லாம் குற்றம் சுமத்தும் இவர்கள், இந்தியாவின் கிராமங்களினைப் படம்பிடிக்க அவர் முயன்ற போது அவர் எதிர்நோக்கிய நெருக்கடிகளைக் கண்டுகொள்வதேயில்லை. 'தேவர் மகன்' படம் எடுத்தபோது சாதிச் சண்டைகளையும், அரிவாள் கலாசாரத்தையும் தூண்டுகிறார் என்று கூக்குரலிட்டார்கள். விருமாண்டியில் கூட அதுதான் நடந்தது. இந்தியாவின் கிராமங்களிலிருந்து வந்த யாராவது சொல்லுங்கள், இன்றைக்கும் கமல் காட்டிய கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லையா? அதைவிடுங்கள் விருமாண்டியில் அப்பத்தா செத்ததும் ‘என்ன விட்டுட்டு போயிட்டியே நாயே, என் தாயே' என்று புலம்பும் அந்த நடிப்பை கமல் எங்கிருந்து சுட்டார்? அல் பாசினோ அப்படி ஒரு அசல் கிராமத்தானாக ஒப்பாரி சொல்லி அழுததை நான் அறியவில்லை.

அதற்காக கமல் உட்பட எல்லாக்கலைஞர்களுமே சுத்தமாகத் தான் படம் எடுக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட மாட்டேன். நிச்சயமாக சில காட்சியமைப்புகளையும், சில தரமான கதைசொல்லும் முறைகளையும் உருவுகிறார்கள் என்பது உண்மை. அதே போல், ஏன் இந்தியப் படங்களிலிருந்து மற்ற நாட்டு இயக்குனர்கள் காட்சிகளையோ, கதை சொல்லும் பாணியையோ உருவுவதில்லை என்றும் கேள்விகள் உள்ளன. ஒரே காரணம், நம்மவர்களைப் பொறுத்தவரையில், இக்கரைக்கு அக்கரை பச்சை. அதாவது, வெளிநாட்டு தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் நம்மூர் படங்களைத் தமது தியேட்டர்களில் காசு கொடுத்து வாங்கிப் போடுவதில்லை. எம்மூர் டி.வி.டி. க்கள் அவர்களின் டி.வி.டி. கடைகளில் கிடைப்பதில்லை. நம்மூர் பட டி.வி.டி க்களை வெளிநாட்டு மக்கள் தேடிப்போய் வாங்குவதில்லை.

இங்கே வெளிநாடுகளில் இந்தியப் படங்கள் ஓடும் தியேட்டர்கள் பெரும்பாலும் இந்தியர்களாலேயே நடாத்தப்படுகின்றன. இல்லையெனில் சில விநியோகஸ்தர்கள் தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து படம் போடுகிறார்கள். மற்றபடி எந்த வெளிநாட்டு தியேட்டர் முதலாளியும் தேடிப்போய் வெளிநாட்டுப் படங்களை போடுவதில்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலப் படங்களைப் போடுவதற்கு என்றே தியேட்டர்கள் இருக்கின்றன அல்லவா. அதேபோல் மேலைநாட்டு மக்கள் மற்ற நாட்டுப் பட டி.வி.டி. க்களைத் தேடிப்போய் வாங்குவதில்லை. அவர்கள் அவர்களின் மொழி, நாடு சார்ந்த கலைஞர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் நாம் எங்கே அந்தக் கலைஞர்களைக் குத்தலாம் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

விமர்சனம் செய்வது கூடப் பரவாயில்லை. ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக் கூடாது. ஒரு அதிமேதாவிப் பதிவர் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு இயக்குனரும் நல்ல இயக்குனர் இல்லை என்றும், இதிகாசங்களை அடிப்படையாக வைத்துப் படமெடுக்கக் கூடாது என்றும் தடா போடுகிறார். இன்னொருவர் மணிரத்னத்தை மட்டம் தட்டும் ஒரே நோக்கில் 1995ல் மணிரத்னம் எடுத்த ஒரு படத்தை 2004 ல் வந்த ஆங்கிலப் படம் ஒன்றின் காப்பி என்கிறார். வெளிநாட்டுப் படங்களின் பெயர்கள் தெரிந்து விட்டால் போதும், உடனே அது இதன் காப்பி, இது அதன் உல்டா என்று வரிந்துகட்டிக் கொண்டு பதிவிடும் இவர்கள், சொந்த முயற்சியில் யாராவது ஒரு நல்ல படம் எடுத்தால் அது ‘க்ளீஷே, நாடகம்' என்று ஊதித் தள்ளிவிடுகிறார்கள். ஒரு நல்ல காட்சி வைத்தால் அதைப் பாராட்டுவதும் இல்லை.

எப்போதுமே கீழைத்தேய நாடுகளில் பிறந்து புகழ் பெற்ற எவருமே மதிக்கப்படுவதில்லை. அது கலை, சினிமா மட்டுமல்ல எல்லாத் துறையிலும் சகஜம். சச்சின் 90களில் மிக மெதுவாக ஆடுகிறார் என்பார்கள். 2007ல் சர்வதேசக் கிரிக்கட்டில் மூன்று 99கள் உட்பட 7 முறை சச்சின் 90களில் ஆட்டமிழந்த போது, 100க்கு மேல் அடித்து பெரிய ஸ்கோர் பெறாமல் 90களில் பொறுப்பில்லாமல் ஆடி ஆட்டமிழக்கிறார் என்று திட்டினார்கள். இப்படித்தான் இந்தியா முழுதும், விமர்சனம் என்ற பெயரில் நிந்தனை மட்டுமே செய்பவர்கள் கணக்கிலடங்காதவர்கள் என்பது என் கருத்து. 'வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாமல் இருங்கள். எங்களவரே நாங்கள் சாண் ஏறினால் முழக்கணக்கில் இழுத்து வீழ்த்தும்போது எங்களால் எப்படி உலக அளவில் சாதனைகள் படைக்க முடியும்?' என்று சேரன் ஒரு பேட்டியில் கேட்ட கேள்வி அர்த்தம் மிகுந்தது. வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தூற்றுவதில் நமக்கு நிகர் நாமே.

Wednesday 24 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 21-27, 2009

அரசியல்
ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா அருமையான சித்தாந்தம் ஒன்றை உதிர்த்திருக்கிறார். 'தமிழ் மக்களுக்கென்று தனியான அரசியல் தீர்வு ஒன்று தேவையில்லை. சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்களுக்கும் வழங்கினால் போதுமானது. தமிழரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பொருளாதார வளம், இயல்பு வாழ்க்கை போன்றவற்றை மறுபடியும் கொண்டுவந்தால் பிரச்சினை தீர்ந்து விடும்' என்பதே சரத் ஃபொன்சேகா கூறிய கருத்து. நான் இலங்கைப்பிரச்சினை பற்றிக் கண்டு கேட்டு படித்துப் பெற்ற சொற்ப அறிவுப்படி அரசியல் ரீதியாகப் போராடிய தந்தை செல்வா முதலான அரசியல்வாதிகள் தொடங்கி, ஆயுதம் தாங்கிப் போராடிய பிரபாகரன் வரை எல்லோருமே பன்னெடுங்காலமாக இதைத்தான் சொல்லி வந்தார்கள். இப்போதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதைத்தான் சொல்லி வருகிறார்கள். கடைசியாக ஒரு சிங்கள அதிகாரிக்காவது இது தோன்றியிருக்கிறது. ஆனால் அதற்காக விலைமதிப்பற்ற பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டு விட்டன.

இதுவும் சரத் பற்றிய ஒரு செய்தி. ஆனால் இது ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு' என்றமாதிரியான ஒரு ஜோக். செய்தியாளர் சந்திப்பொன்றில் மே 19 வெள்ளைமுள்ளிவாய்க்காலில் காயப்பட்ட புலிகள் யாரையும் தாங்கள் கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ இல்லையாம். அவர்களைப் புலிகளே சுட்டுக் கொண்டு விட்டார்களாம். இப்படி கொஞ்சம் கூட ‘லாஜிக்'கே இல்லாமல் அவர் சொன்ன அந்த ஜோக்கை நேற்று கனேடிய தொலைக்காட்சி (Tamil One) தனது செய்தியறிக்கையில் சொன்னபோது நிஜமாகவே சிரித்து விட்டேன்.

உலகவங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்குக் கடனுதவி செய்யத் தீர்மானித்திருக்கின்றன. உலகவங்கி 24 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்கனவே ஒதுக்கிய 60 மில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக ஒதுக்கியுள்ளது. இதில் 12 மில்லியன் டாலர்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சுகாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதே சுகாதார மேம்பாட்டுக் காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அபிவிருத்திக்கான குழு 7 மில்லியன் டாலர்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. ஒதுக்கப்பட்ட காரணங்களுக்காகவே இந்த நிதி பயன்பட்டால் அதைப் போல சந்தோஷம் ஏதுமில்லை.
வணங்காமண் கப்பல் பற்றிய சிறப்புக் கவனயீர்ப்புத் தீர்மானத்தைப் பற்றி தமிழ்நாடு சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்தச் சிறப்புக் கவனயீர்ப்புத்தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதால் கோபமுற்றே தாம் வெளியேறுவதாய் பா.ம. க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டார். 844 டன் உணவுப் பொருட்களுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து புறப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை அரசு ஏற்க மறுத்ததும், கப்பல் சென்னைக் கடல் எல்லையில் சிலகாலம் தரித்து நின்றதும், கப்பல் காப்டன் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதும் (இன்னுமா அந்தாளை நம்புறாங்க?) அனைவரும் அறிந்ததே. இப்போது சென்னைக் கடல்பரப்பிலிருந்தும் கப்பல் விரட்டப்பட்டு சர்வதேசக் கடல் பரப்பில் தரித்து நிற்கிறது.

பொருளாதாரம்
கனடாவின் பங்குச்சந்தையில் சமீப காலமாக வளர்ச்சிப்போக்கு காணப்படுகிறது. அதிலும் கனடாவின் Addax Petroleum சீனாவின் Sinopec Groupக்கு 8.27 மில்லியன் கனேடிய டாலர்களுக்கு விலைபோயிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கைக் கீற்றைத் தோற்றுவித்திருக்கிறது. உலோகங்களின் விலை உயர்ந்திருப்பதும், நிதிநிறுவனங்களின் பங்குகள் பெறுமதி கூடியிருப்பதும் பொருளாதார ரீதியில் சந்தோஷமான செய்திகள். அதே வேளை அமெரிக்க வீடு விற்பனைத் துறை இன்னமும் மந்தமாகவே இருக்கிறது. புதிய வீடுகளின் விற்பனை வீதம் எதிர்பாராத வகையில் மேலும் 0.6 சதவீதம் வீழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை Organization for Economic Co-operation and Developement என்ற அமைப்பு 60 வருடங்களில் மிக மோசமான இந்தப் பொருளாதார நெருக்கடிக்காலம் கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறது. இருப்பினும் உலக நாடுகள் இதிலிருந்து எவ்வளவு வேகமாக மீண்டு வரும் எனபது, அரசாங்கங்கள் வங்கிகள் சம்பந்தமான குழப்பநிலைகளை எவ்வளவு விரைவில் தீர்த்து வைக்கப்போகின்றன என்பதிலேயே தங்கியுள்ளதாகவும் மேற்படி அமைப்பு கூறியிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகப் போலி முத்திரை தாங்கிய, சீனாவில் தயாரான ஸ்பார்க் பிளக்குகள் 2 லட்சம் சென்னைத் துறைமுகத்தில் பிடிபட்டன. இருசக்கர வாகன உதிரிப்பாகமான இது போல பல பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து, இந்தியா போன்றா வேறு நாடுகளில் விற்று வருகிறார்கள். சீனா இப்படிப்பட்ட தகிடுதத்தங்கள் செய்து மிக வேகமாக ஒரு பொருளாதார அரக்கனாக உருப்பெற்று வருகிறது. குறைந்த செலவில் உற்பத்தி செய்து தருகிறோம் என்று அடிமாட்டு விலையில் வேலை செய்யும் தொழிலாளர்களை உள்ளடக்கிய Sweat Shops என்று மேலைத்தேயத்தவர்கள் அழைக்கும் உற்பத்தி ஸ்தலங்கள் சீனாவில் அதிகம். ஒருமுறை Nike கூட இப்படி ஒரு ஸ்தலத்தை சீனாவில் பயன்படுத்தியதற்காக பிரச்சனைகளில் மாட்டியது. இருந்தும் சீனாவை நாடும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குழந்தைத் தொழிலாளர்களும் சீனாவில் அதிகம் என்று என்னோடு படித்த நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விளையாட்டு


Fifa Confederations Cup அரையிறுதிக்கான அணிகள் தெரிவுசெய்யப்பட்டு விட்டன. ஸ்பெயின் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அணியுடனும், பிரேசில் தென்னாபிரிக்க அணியுடனும் மோதவிருக்கின்றன. எதிர்பாராத வகையில் 3-0 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்று நடப்பு உலக சாம்பியன் இத்தாலி வெளியேறியது. மொத்த அணியாக அற்புதமாக இணைந்து விளையாடும் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்பது வல்லுனர்களின் கணிப்பு.


விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. நடப்பு சாம்பியன் நடால் கலந்து கொள்ளவில்லை. மரியா ஷரப்போவா இரண்டாவது சுற்றிலேயே காலி. ஃபெடரர் கடந்த வருடம் இழந்த பட்டத்தை இந்த வருடம் பெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

இருபது இருபது உலகக் கோப்பையை அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மாற்றாக பாகிஸ்தான் அணி ஜெயித்திருக்கிறது. ஷாஹிட் அஃப்ரிடி யாருமே எதிர்பார்க்காத முதிர்ந்த ஆட்டத்தை அரையிறுதி ஆட்டத்திலும், இறுதி ஆட்டத்திலும் வெளிக்காட்டி பாகிஸ்தானை ஜெயிக்க வைத்தார். கோப்பையை ஜெயித்த மகிழ்ச்சியோடு இருபது இருபது போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் அணித்தலைவர் யூனுஸ் கான். பயிற்றுவிப்பாளர் இண்டிகாப் அலாம் பெற்ற இரண்டாவது உலகக் கோப்பை இது. 1992 ஒரு நாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் ஜெயித்த போதும் இவர்தான் பயிற்றுவிப்பாளர்.

வருத்தம்
வெள்ளவத்தையில் குடிபோதை காரணமாக நடைபெற்ற கோஷ்டி பூசலில் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். நிரோஜன் மற்றும் சசிதரன் என்ற இரண்டு இளைஞர்கள் இறந்து விட்டார்கள். ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எல்லா சோகத்துக்கும் மேல இப்பிடியும் சோகங்கள்.

Tuesday 23 June 2009

புலிக்குட்டியின் குட்டி

எங்களது பாடசாலையில் 90களிலும் 2000ங்களின் சில பகுதிகளிலும் படித்த மாணவர்களுக்கு புலிக்குட்டியின் குட்டியைத் தெரியாமல் இருக்காது. வேதியியல் பயிற்றுவித்த குட்டி அது. அந்தக் குட்டியின் கோபத்துக்கு பள்ளிக்கூடமே நடுங்கும். நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு இவையெல்லாவற்றிலும் குட்டிக்கு நிகர் குட்டியேதான். 'பரவாயில்லை' என்ற சொல்லை குட்டி ‘பரவேல்லை' என்று உச்சரிக்கும். குட்டியின் தகப்பனும் ஒரு வாத்தியார்தான். அவரது உள்ளங்கை கூடக் கறுப்பாய் இருக்கும் என்பதால் அவரைப் புலிக்குட்டி என்று அழைத்ததாக அவரிடம் படித்த எனது அப்பா அடிக்கடி கூறுவார். புலிக்குட்டியின் குட்டியிடம்தான் நாங்கள் பயின்றோம். குட்டியின் மேற்கூறிய குணங்களைவிட குட்டியின் இன்னொருமுகம் மாணவர்மத்தியில் மிகவும் பிரபலம்.

குட்டி தனது சேவைக்காலத்தில் உப-அதிபராகப் பலகாலம் பணியாற்றியவர். குட்டியிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. அவர் 'இயக்கம்' பற்றிப் பேச ஆரம்பித்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். அப்படிப் பட்ட ஆதரவாளர் அவர். தன் வீர சாகசங்கள் பற்றியெல்லாம் சொல்வார். தன்னை இந்திய ராணுவம் பின்னால் 30 வண்டிகள் முன்னால் 30 வண்டிகள் பாதுகாப்புக்கு வர கைது செய்து அழைத்துச் சென்றதாக ஒரு கதையை அடிக்கடி மாணவர் தலைவர்களுக்கான கூட்டத்தில் சொல்வார். வேதியியல் படிப்பித்ததை விட குட்டி தனது சுய புராணம் பாடியதே அதிகம். அவரது சுயபுராணம் எல்லாம் நம்பும்படி இருக்கும். ஒரு முறை அவரைச் சிங்கள ராணுவம் கைது செய்து மிக மோசமாகத் தாக்கி விசாரித்துக்கூட இருக்கிறது. அதனால் அவர் சொல்லும் சில கதைகள் உண்மையாய் இருக்கலாம் (அவர் பாணியில், இருக்கல்லாம்) என்று கூட நம்பினோம். தலைவரைக்கூட சைக்கிளில் போய் சந்தித்து வரும் அளவிற்கு தனக்கு செல்வாக்கு இருப்பதாகப் புலிக்குட்டி பெற்ற குட்டியின் கதைகள் இருக்கும். இந்நிலையில் தான் புலிக்குட்டி பெற்ற குட்டி தான் ஒரு பூனைக்குட்டி என்ற சுயரூபத்தை எங்களுக்குக் காட்டியது.

2003ன் பிற்பகுதி. மாணவர் அமைப்பின் பாடசாலைச் செயலாளராக நான் பணியாற்றிய காலம். புலிக்குட்டியின் குட்டிதான் எமக்குப் பொறுப்பான ஆசிரியர். தர்சனிடம் செய்தி அனுப்பினார். தமிழ்ச்செல்வன் அண்ணாவைச் சந்திக்க மாணவர் அமைப்புக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போகவிடாமல் தடுக்கும் தர்சன் தான் வராமல் எங்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்துப் போகச்சொன்னான். வதிரியில் சிறப்பு பஸ் எடுத்துப் போக வேண்டும், பாடசாலைச் சீருடையில். இவ்வளவு தான் சொன்னான். தமிழ்ச்செல்வன் அண்ணாவை எங்கே சந்திப்போம் என்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணம் நகரில் என்றுதான் நினைத்துப் புறப்பட்டோம். எங்களோடு குட்டியும் வந்தது. பஸ் வதிரியிலிருந்து நெல்லியடிச் சந்திவந்து யாழ்ப்பாணம் போகும் திசையில் போகாமல் கொடிகாமம் நோக்கித் திரும்பிய போதுதான் உண்மை உறைத்தது. நாங்கள் வன்னிக்குப் போகிறோம் என்று.

வன்னிக்குப் போவது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. ஆனால், பாடசாலைச் சீருடையில் இராணுவக் காவலரண்களை முகமாலையில் கடந்து செல்வதுதான் பிரச்சினை. அதுவும் நாங்கள் 4 பேர் மட்டும்தான் மாணவர்கள். குட்டியிடம் ஆலோசனை கேட்டோம். வழியில் இறக்கிவிடுங்கள் நாங்கள் திரும்பிப் போய் உடை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ்ஸில் வந்து விடுகிறோம் என்றோம். ‘அதெல்லாம் பரவேல்லை. ஒருத்தரும் ஒண்டும் பிடுங்க மாட்டினம்' என்றது குட்டி. குட்டியிருக்கப் பயமேன் என்று சொல்லி பயணம் தொடர்ந்தோம். முகமாலையிலும் சிக்கல் இல்லாமல் எம்மைப் பரிசோதித்து பஸ்ஸில் ஏறச் சொன்னான் ஒரு ராணுவ வீரன். பஸ் புறப்பட்டு நான்கு ஐந்து மீட்டர் உருண்டிருக்காது, ‘அடோ...அடோ' என்று கத்தியபடி துப்பாக்கிகளுடன் மூன்று ராணுவத்தினர் ஓடிவந்து பஸ்ஸை நிறுத்தினார்கள். 'அடோ... நாலு பேரும் இறங்கு' என்றார்கள் எம்மைப்பார்த்து. நாம் போய் விடுதலைப்புலிகளுடன் இணந்து விடுவோம் என்ற சந்தேகம் அவர்களுக்கு. அதுவும் பாடசாலைச் சீருடையில் புலிகள் ஆட்சேர்ப்புச் செய்கிறார்களோ என்ற வலுவான சந்தேகம் அவர்களுக்கு. வயிற்றில் பயப்பந்து உருள குட்டியை நோக்கினேன். குட்டி இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பாவனை செய்தபடி ஜன்னல் வழியே பாவனை செய்தது. கூடவே பயணித்த மற்றவர்கள், ‘இறங்குங்கோ தம்பிமார், கெதியா' என்று அவசரப்படுத்தினார்கள். எங்களை இறக்கி விட்டு போகுமாறு ராணுவமும் சொல்ல, கூடவந்தவர்களும் அதையே சொன்னார்கள். புலிக்குட்டி பெற்ற குட்டி ஒரு வார்த்தை பேசாமல் பதுங்கியது.

எங்களுக்கு உயிர்ப்பயம் பிடித்துக் கொண்டது. எம் இன மக்கள், எமக்குப் படிப்பித்த வாத்தி எல்லோரும் எங்களைக் கைவிட்டுவிட்டனர். 'இறங்குங்கோடா கெதியா' குரல்களில் உஷ்ணம் கூடியது. அப்போதான் அந்த பஸ் ட்ரைவர் இராணுவத்திடம் பேசினார். ‘மாத்தையா (சிங்களத்தில் சகோதரன் என்று நினைக்கிறேன்), மீட்டிங் போறம். இப்ப இவையளிண்ட ஐ. சி. (அடையாள அட்டை) வாங்கிக்கொண்டு விடுங்க. திரும்பி வரேக்க நாலுபேரையும் கூட்டிக் கொண்டு வாரது எண்ட பொறுப்பு' என்று துணிந்து பேசினார். அவர் அடிக்கடி அந்த வழியால் பேரூந்து ஓட்டுபவர் என்பதால் அவரது உத்தரவாதம் செல்லுபடியானது. எங்கள் நால்வரது அடையாள அட்டையுடன் தன்னுடைய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றைப் பிணையாக வைத்து, உயரதிகாரிகளுடன் தனக்குத்தெரிந்த சிங்களத்தில் எங்களுக்காக வக்காலத்து வாங்கி எங்களைப் பளை சென்று சேர்த்தார். ராணுவத்துக்குச் சொன்னது போலவே மீண்டும் யாழ்ப்பாணம் கூட்டியும் வந்தார். எங்கள் அடையாள அட்டைகளையும் மீட்டுத் தந்தார்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவுடனான கூட்டத்தில் புலிக்குட்டி பெற்ற குட்டியின் சுயரூபம் தெரிந்தது. அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. இவரிடம் படித்த சிலபேர் மேலிடத்துக்கு நெருக்கமாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இவருக்கு ஒரு ஆசிரியர் என்ற மரியாதை மட்டுமே கொடுத்தார்கள். இவருக்கு பெரிய தலைகளை நிஜமாயே தெரியாதாம். சும்மா ரீல் ஓட்டியிருக்கிறார் எங்களிடம். இவரது ரீலைக் கேட்டு பலபேர் இயக்கத்தில் சேர, தன்னைத் தானே ஒரு பிரசார்ப் பீரங்கி என நினைத்துக் கொண்டார் இவர். மற்றபடி இவருக்கு எந்த செல்வாக்குமே இருக்கவில்லை. மொத்தத்தில் புலிக்குட்டி பெற்ற குட்டி ஒரு ‘புலித்தோல் போர்த்திய பசு'.

வெறுத்துப் போய் பளையிலிருந்து திரும்பி புறப்பட்ட வதிரிச் சந்தியில் இறங்கும்போது ட்ரைவர் எங்கள் நால்வரையும் கூப்பிட்டு உரக்கச் சொன்னார்.. ‘இனிமே எந்தப் பு....மகனையும் நம்பி இப்பிடி அலைஞ்சீங்கள், பஸ் ஏத்திக் கொல்லுவண்டா உங்களை. நாலு குலக்கொழுந்துகளை ஆமி கண்ணுக்கு முன்னால கூட்டீற்றுப் போக வெளிக்கிட நீங்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்குத் தொல்லை இருக்கக் கூடாது எண்டு நினைச்ச இந்த நாயளை நம்பி இனி ஒரு இடமும் நீங்கள் போகக்கூடாது' என்று ஆவேசமாகத்திட்டி விட்டு எங்களோடு வந்த அனைவரையும் சுட்டெரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை புலிக்குட்டி பெற்ற குட்டியைச் சுட்டிருக்கவேண்டும். ஏற்கனவே கர்ண கடூரமான அந்த முகம் இன்னும் சிறுத்துக் கறுத்திருந்தது.

அதற்குப் பிறகு மாணவர் அமைப்பிலிருந்து நாங்கள் நால்வரும் விலகிக் கொண்டோம். உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் இணைந்த அந்த அமைப்பில் மேற்படி சம்பவத்துக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்க என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. எங்களைத் தெரியாத பலர் எம்மை அன்று தடைகளாகப் பார்த்தனர், தம் இனத்தைச் சேர்ந்த வாழ்வேண்டிய இளைஞர்கள் என்பதையும் மறந்து. எம்மை ஊக்குவித்து, உணர்வூட்டிய புலிக்குட்டியின் குட்டி கூட எங்களை நிராதரவாய் விட்டது. எங்களை அன்றுதான் முதல் முதலில் பார்த்த ட்ரைவர் சம்யோசிதமாகச் செயற்பட்டு எம்மைக் காப்பாற்றினார். அன்றுதான் தீர்மானித்தேன், மனசு சொல்வதைவிட அறிவு சொல்லும் வழியில் போவது எவ்வளவோ மேல் என்று.

வாசுவும் கடல்புறாவும்

பதின்ம வயதுகளின் பிற்பகுதி அது. யாழ்ப்பாணத்தில் கூட விஜய் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் நிகழ்ந்த காலம் அது. அப்படிக் 'கனவில் உறையும் சினிமா' உலகில் இளைஞர்கள் மூழ்கியிருந்த காலத்தில் ‘கில்லியில் சிவாஜி நடித்திருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும்' போன்ற தொனியில் பேசி சிவாஜியை அணுவணுவாய் ரசிக்கும் ஒரு ஜீவன் எங்கள் சமவயதில் இருந்தது என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். 'Karoke' இசைத் தட்டுக்களை உபயோகித்து 'சர்க்கரை நிலவே' ‘கொக்கோ கோலா பிரவுணு கலருடா' என்று உயர்தர வகுப்பு மாணவ மாணவியர் ஒன்று கூடல்களில் மாணவர்கள் மாணவிகளை மயக்க முயலும் போது, 'சோதனை மேல் சோதனை' பாடிய ஜீவனை சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன். ஆனந்த விகடன், குமுதம் மூலமாக பல எழுத்தாளர்கள் அறிமுகமாகி அவர்களின் எழுத்துக்களையும் வெகுசனப்பத்திரிகை எழுத்துக்களையும் நாங்கள் வாசிக்கத் தொடங்கிய காலத்தில், ‘சாண்டில்யன்' மீது காதலாகிக் கண்ணீர் மசிந்த ஜந்தைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அதுதான்.. இல்லை இல்லை அவன் பெயர் வாசு.

வாசுவின் சுவைகள் வித்தியாசமானவை. அவன் பிறந்தது ‘பண்டாரிகள்' என்று அழைக்கப்படும் சுத்த சைவ உணவு உண்ணும் சமூகத்தில். இரண்டு மூத்த அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். கடைக்குட்டி இவன். இவனை முதன் முதலில் நான் கவனித்தது ஆறாம் வகுப்பில். எல்லோருக்குமே புதிய பள்ளி. புதிய நாள். புதிய நண்பர்கள். புதிதாகத் தெரியப்பட்ட வகுப்புத் தலைவனிடம் கணீர் குரலில் யாரோ முறைப்பாடு சொல்ல திரும்பிப் பார்த்தேன். முதல் பார்வையிலேயே வாசுவில் ஒரு வித்தியாசமான ஈர்ப்புத் தென்பட்டது. கன்னங்கரேல் என்ற நிறம். களையான முகம். நெற்றியில் சந்தனப் பொட்டு, மிகச்சின்ன விட்டமுடைய வட்டமாக. அதன் நடுவே அதிலும் சிறிய விட்டத்தில் குங்குமப் பொட்டு. காமா சோமா என்று பொட்டு வைத்துப் போகும் எங்கள் மத்தியில் வினைகெட்டு நேர்த்தியாகப் பொட்டு வைத்திருந்தான்.

எனக்கு இந்த 'கிச்சு கிச்சு' மூட்டினால் படு கோபம் வரும். ஆனால் கிச்சு கிச்சு மூட்டியே நண்பனானவன் வாசு. வாசுவுக்கு தமிழில் பேரார்வம். கவிதை கட்டுரை எல்லாம் வரைவான். நாங்கள் கிரிக்கெட் பற்றிப் பேசினால் அவன் வரலாற்றுப் புதினங்கள் பற்றிப் பேசுவான். எங்கள் ரசனை தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், ரஹ்மான், ராஜா என்று மாறியபோது அவனுக்கு டி. எம். சௌந்திரராஜனையும், சீர்காழி கோவிந்தராஜனையும் மட்டுமே பிடித்திருந்தது. சிவாஜி கணேசனின் நடிப்புப் பற்றி சிலாகித்துப் பேசி, மஜிந்தனிடமும் நிதியிடமும் வாங்கிக்கட்டிக் கொள்வான். ஒரு மென்மையான ஒரு தலைக்காதல் கூட அவனுக்கு இருந்தது. பள்ளி மேடைகளில் வாசு கலந்து கொண்ட நாடகங்களும், பேச்சுப் போட்டிகளும், பட்டிமன்றங்களும் அதிகம். அவனது பேச்சிலும் , நடிப்பிலும் ஒரு மிகைப்படுத்தப் பட்ட தனமை காணப்பட்டாலும் தமிழ்ப் பள்ளி மேடைகளில் அவனுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. (கீழுள்ள படத்தில் நாடகமொன்றில வாசு. இந்த நாடகத்தை நான் பார்க்கவில்லை. சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் அவன் போட்ட யமன் வேஷம் இது என்று அவன் சொல்லித் தெரியும்)
வாசுவின் ஆன்மீக ஈடுபாடு கூட மிகையானது. அதுவும் ஒரு கொஞ்சக் காலம், சின்மயானந்தா என்றொரு மிஷன், அதில் ஒரு சாமியார்; இரண்டுமே வாழ்க்கை என்பது போல் திரிந்தான். என்னுடைய அப்பாவுடன் பருத்தித்துறை நீதிமன்றில் வேலை பார்த்த அவனின் தமக்கை அடிக்கடி அப்பவிடம் சொல்லிக் கவலைப் படுவாராம் இவனது ஓவர் ஆன்மீக ஈடுபாடு பற்றி. இது பற்றியும் சொல்லி வாசுவை நக்கல் செய்வதுண்டு. சாண்டில்யனின் எழுத்துக்களில் தீராக்காதல் அவனுக்கு. அதிலும் அவரது ‘கடல் புறா' நாவலை வாசிப்பதே அவனது வாழ்வின் முக்கிய லட்சியமாக ஒரு கொஞ்சக் காலம் இருந்தது. (சாண்டில்யன் எழுதிய ஏதோ ஒரு நாவலை அவனது புத்தகப் பையிலிருந்து எடுத்து மேய்ந்தேன். ஒரு அரசன் இரு மாதர்களுடன் சரசமாடுவதை இரண்டரைப் பக்கத்துக்கு வர்ணித்திருந்தார். உடலில் சில பகுதிகள் கல்லாவது போல் தோன்றியதால் மூடி வைத்துவிட்டேன்)

வாசுவின் கடல்புறாக் காதல் அவன் மீது ஒரு பெரிய பழியைக் கொண்டுவந்தது. அப்போது நாங்கள் 13ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். பள்ளிகளில் மாணவத் தலைவர்கள் (Prefects) தெரிவது வழமை. மற்ற மாணவர்களுக்கு இல்லாத சில உரிமைகள் மாணவத் தலைவர்களுக்கு உண்டு. அந்த மாணவர் தலைவர் குழுமத்தில் நானும் வாசுவும் கூட இருந்தோம். அப்போது எங்கள் பாடசாலையில் ‘இல்ல மெய்ல்லுனர்ப் போட்டி' (Athletics Meet)காலம். பாடசாலை வளாகத்துள் மாணவர்களோ ஆசிரியர்களோ இருக்கமாட்டார்கள். எதாவது தேவை என்றால் கூட, மைதானத்திலிருந்து பாடசாலை வளாகத்துக்கு மாணவர் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே வந்து போகலாம். இப்படிப்பட்ட ஒரு நாளில் பாடசாலை நூலகத்தில் இருந்து சாண்டில்யனின் ‘கடல் புறா' பறந்து போய்விட்டது.

மாணவர் தலைவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் கொஞ்சம் பரபரப்பை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. ஆங்காங்கே நின்று கிசு கிசுத்த பலரது வாயில் அவலாய் மெல்லப்பட்டது... வாசு. அந்த தினத்தன்று ஏதோ தேவைக்காக வாசு பாடசாலை வளாகத்துக்கு வந்திருந்தது அவனுக்கு பாதகமாய் போய்விட்டது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி யாரும் அவன் தான் கடல் புறாவைக் கிளப்பினான் என்று சொல்லத்துணியவில்லை. எங்கள் உப அதிபர் மட்டும் இந்த விஷயத்தை மாணவர் தலைவர் குழும சந்திப்பில் கலந்துரையாடினார். வாசுவைப் பற்றி மறைமுகமாகக் குத்திக்காட்டினார். வாசுவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லை. திடீரென்று ‘உன்னைப் பற்றித்தான் சொல்லுறன். தெரியாதது மாதிரி நடிக்கிறியே' என்று குண்டைப் போட்டார் உப அதிபர். ‘நானோ சேர்.... எனக்கு ஒண்டும் தெரியாது சேர்' என்று பதறினான் வாசு. அதற்குப் பிறகு நடந்த கலந்துரையாடலில் எதிலுமே மனம் செல்லவில்லை. பதறிக் கொண்டிருந்த வாசுவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களின் பின் வாசுவே சொன்னான். கடல் புறா மூன்று பாகங்களைக் கொண்டது. மூன்று பாகங்களுக்குமான பணத்தை தான் பாடசாலை நிர்வாகத்துக்குச் செலுத்திவிட்டதாகச் சொன்னான். திருடிவிட்டு தன்னை நல்லவனாகக் காட்டுவதற்காக அவன் அப்படிச் செய்ததாகவும் பேசிக்கொண்டார்கள். கிட்டத்தட்ட 1500 ரூபாய் மதிப்புள்ள அந்த மூன்று பதிவுகளையும் திருடி விட்டு பின்னர் பணம் கட்டுவதற்குப் பதில் அவனால் அந்த மூன்று பதிப்பையும் புதிதாக வாங்கியிருக்க முடியும் என்பது அப்படிப் பேசியவர்களுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. எனக்குத் தெரிந்த வாசு அப்படித் திருடியிருக்க மாட்டான் என்று இன்றைக்கும் உத்தரவாதம் தர நான் தயார். எனக்குத் தெரியாத முகம் ஏதாவது வாசுவுக்கு இருந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அந்தத் தெரியாத முகம் பற்றி எனக்கு எவ்விதமான அக்கறையுமில்லை.

Monday 22 June 2009

நடுநிலை மேதாவிகள்

சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக வைரமுத்து எழுதிய இரண்டு பாடல்கள் பிடித்திருந்ததால் ஒரு பதிவு போட்டேன். உடனே நான் ஈழப்பிரச்சனைக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தீர்வைச் சொல்லிவிட்டேன் என்று சொல்லி ஒரு அதி மேதாவி ஒரு பின்னூட்டம் போட்டார். அந்த அனானி நண்பருக்காக இந்தப் பதிவு. வைரமுத்து பற்றிய பதிவை இங்கே வாசியுங்கள்.

அனானி நடுநிலை மேதாவியின் பின்னூட்டம் இது:
///இதே வைரமுத்து சிங்களவராக பிறந்திருந்தால், புத்தரும் பூமியும் என்று எழுதி பணமும், பெயரும், புகழும் சம்பாதித்து இருப்பார்....
கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் (cinema) எல்லோரும் உணர்ச்சி மிகுந்தவர்கள்.. உணர்ச்சி இல்லையேல் அவர்கள் நல்ல படைப்பாளியாகாவே இருக்க முடியாது.. இது மாதிரியான கலை கூத்தாடிகளின் உணர்ச்சி மிகுந்த பேச்சு, பாட்டு, கவிதை என்பதெல்லாம் ஈழதமிழ் பிரச்சனைகளுக்கு முடிவே வராது...
சர்வேதச அரசியல் மற்றும் ராஜாங்க பரிபாலனங்கள் மூலமாகவே ஒரு தீர்வை எட்ட முடியும்... ஓரளவு படித்த மனிதர்களுக்கே புரியும் விஷயமிது... ஆனால் தாங்களை போல படித்தவர்களுக்கு புரியாததேன்...
காரணம்: உணர்ச்சி பூர்வமகாவே பிரச்சனையை அணுகுவதுதான்... அதுதான் தமிழினத்தின் குறைபாடு...
குறிப்பு: இதையும் தாங்கள் ஒத்துகொள்ள மாட்டீர்கள்.///

போயும் போயும் ஒரு கவிதை நன்றாக இருக்கிறது என்று பதிவு போட்டால் தன் பெயரைக்கூட வெளியே சொல்லப் பயந்து நடுங்கும் அந்த நடுநிலை மேதாவி ஏதோ நான் சினிமாக் கவிஞர்களும் கலைஞர்களும், அவர்கள் காட்டும் உணர்ச்சியும் அவர்களின் உணர்வு பூர்வமான பேச்சுகளும்தான் ஈழப்பிரச்சினைக்குத் தீர்வென்று சொன்னது போல் துள்ளிக் குதித்திருந்தார். மேற்படி பதிவில் இப்படி பாட்டு, கூத்து, கவிதை என்பனதான் ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா. விமர்சனத்துக்கும் நிந்தனைக்கும் வித்தியாசம் தெரியாமல், நிந்தனையே தொழிலாக இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட நடுநிலை மேதாவிகள். தங்கள் அவரது மனதில் வேணுமானால் அப்படி ஒரு கருத்து இருந்திருக்கலாம். அதனால்தான் ஒரு கவிதையய் ரசித்துப் போட்ட பதிவு கூட அவருக்குள்ளே வேறு அர்த்தங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறது. இதைத்தான் எங்கள் ஊரில் ‘கருத்துக்குள் குருத்தெடுப்பது' என்று கூறுவார்கள்.

இவரின் கருத்துக்குள் குருத்தை படித்தவுடனே எனக்கு நண்பன் ஆதிரை 'அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த,‘சர்வதேச அரசியல் மற்றும் ராஜாங்க பரிபாலனம்' பற்றிப் பேசும் மேதாவிகள் பற்றிய கௌதமாலா போராளி ஒருவனின் கவிதையின் தமிழாக்கம்தான் நினைவுக்கு வந்தது. மேற்படி அனானி மேதாவி இதையும் படிக்கட்டும்.. அதேசமயம் என் முன்னைய பதிவுகளையும் படிக்கட்டும். உணர்ச்சிக்கு அறிவை அடகு வைக்கக்கூடாது என்று எனக்கு உணர்த்திய ஒரு சம்பவம் பற்றி நான் இடப்போகும் எதிர்காலப் பதிவையும் படிக்கட்டும். (ஆதிரை பதித்த இந்தக் கவி எனக்கும் என்போன்ற பலருக்கும் கூட ஒரு சாட்டையடி. அதை நான் வேண்டி விரும்பி ஏற்றுக்கொள்வேன்)

உணர்ச்சிக்கு அறிவை அடகுவைப்பது பற்றி நான் எனது முன்னைய சில பதிவுகளில் கூடக் குறிப்பிட்டு வருந்தியிருந்தேன். அனானி நடுநிலை மேதாவி அவற்றையும் வாசிக்கலாம்.
முதல் பதிவு: ஒரு பேப்பர். முட்டாள்தனத்தின் மறுபெயர்.
இரண்டாம் பதிவு: மனதில் பட்டவை- 1ஒரு நாள்
என் தேசத்தின்
நடுநிலை மேதாவிகள்
சாதரண மனிதர்களால்
விசாரிக்கப்படுவார்கள்.

"உங்கள் தேசம்
மெதுவாக
மரணமடைந்து கொண்டிருந்த போது
தனியே ஒதுங்கி நிற்கும்
ஒரு அழகிய தீயைப் போல . ..
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?"
என்று கேள்வி கேட்கப்படுவார்கள்.

நடுநிலை மேதாவிகளே ...

உங்கள் உடைகளைப் பற்றி ....
மதிய உணவிற்கு பின்
உங்கள் குட்டி தூக்கத்தைப் பற்றி....
அவர்கள் கேட்கப் போவது இல்லை

"ஒன்றுமில்லாததின் உள்ளடக்கம்" பற்றிய
உங்கள் உப்பு சப்பற்ற விவாதங்களை...
அவர்கள் தெரிந்துகொள்ளப் போவதில்லை

உங்கள் வருமானம் குறித்து...
மிகுந்த பட்டறிவு குறித்து.....
அவர்களுக்கு கவலை இல்லை

கேள்விகள்
கிரேக்க மெய்ஞானத்திலிருந்தோ
அல்லது
உங்களில் ஒருவன்
மரணமடைந்து கொண்டிருந்த போது
'உங்கள் கேவலமான சொந்த நலனுக்காக'
மௌனம் காத்தது பற்றியோ....
இருக்கப் போவதில்லை

பொய்களின் நிழலில் பிறந்த
உங்கள் வியாக்கியானங்கள் தொடர்பாக
அவர்கள் ஒன்றுமே கேட்கப் போவதில்லை

ஒரு நாளில்
அந்த சாதாரண மனிதன் வருவான்...!

மேதாவிகளின்
புத்தகங்களிலும் கவிதைகளிலும் காணப்படாத
ஆனால்
தினமும் அவர்களுக்கு
அரிசியும் பாலும்
ரொட்டியும் முட்டையும்
கொடுத்த
அவர்களின் ரதங்களை ஓட்டிய
அவர்களின் நாய்களையும் தோட்டங்களையும் கவனித்த
அவர்களுக்காய் உழைத்த
அந்த சாதரண மனிதன் கேட்பான்

"என் போன்ற ஏழைகள்
தன் வாழ்க்கையையும் காதலையும் தொலைத்து
துன்பத்தில் உழன்று கொண்டிருந்த போது ...
நடுநிலை மேதாவிகளே !!!
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

என் இனிய தேசத்தின்
நடுநிலை மேதாவிகளே
உங்களால் பதில் சொல்ல முடியாது!

அப்போது
மௌனம் எனும் கழுகுகள் வந்து
உங்கள் குரல்வளையை கவ்வும்!

உங்கள் பாவங்கள்
உங்கள் ஆன்மாவையே தூக்கிச்செல்லும்!

"அந்தக் கேள்வியின் முன்
நீங்கள் ஒரு நிமிடம் வெட்கித் தலைகுனிந்து
கூனிக் குறுகி நிற்பீர்கள் "

-ஓட்டோ ரேனே காஸ்டில்லோ (கௌதமாலா கொரில்லா போராளி)

நன்றி: ஆதிரை

Saturday 20 June 2009

அந்த்ராக்ஸ்

செப்டெம்பர் 11, 2001க்குப் பிறகு உலகமெல்லாம் அந்த்ராக்ஸ் பீதி பரவியிருந்த சமயம். தபால்களில் வெள்ளைப் பொடியாக வந்து சேர்கிறது அந்த நுண்ணுயிர் ஆயுதம் என்று உலகமே பீதியில் ஆழ்ந்திருந்த சமயம். இலங்கையின் வடக்கில் பருத்தித்துறையில் இருக்கும் ஒரு பாடசாலையில் நடுவாந்திர வகுப்பு மாணவர்களுக்கு (6ம் வகுப்பு-11ம் வகுப்பு) இரண்டு ஆசிரியர்களுக்கு தபால்மூலம் தமிழ்சினிமா நடிகர்களின் படம் கொண்ட தீபாவளி வாழ்த்துமடல், பத்திரிகைகளில் கத்தரிக்கப்பட்ட கவர்ச்சிப் படங்கள் சகிதம் ஒரு கடித உறை வருகிறது. பிரித்தால் இதுவரை அவர்கள் நுகர்ந்திராத வாசத்துடன் வெள்ளை நிறப் பொடி ஒன்று கொட்டுப்படுகிறது. ஆம், யாழ்ப்பாணத்தின் ஒரு மூலைக்கும் அந்த்ராக்ஸ் வந்தது என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்.

ஒரு ஆசிரியர் வீ. கே. வாத்தி என்று அழைக்கப்பட்ட விஜயகுமார் என்ற விஞ்ஞான ஆசிரியர். ‘சோடியம் குளோரைடின் இரசாயனப் பெயரை எழுதி மகிழ்க?' என்றெல்லாம் காமெடி பண்ணக்கூடியவர். மற்றவர் கனகசபாபதி என்ற தமிழ் மற்றும் சமூகக்கல்வியும் வரலாறும் பாடங்களைக் கற்பிப்பவர். அப்போது 11ம் வகுப்பு ‘டி' பிரிவில் இருந்த எங்களது வகுப்பாசிரியர். 'மெய் எழுத்துக்கள்' என்பதை கரும்பலகையில் ‘மொய் எழுத்துக்கள்' என்று தவறாக ஒரு கணம் எழுதி அழிப்பதற்குள் மாணவர்கள் பார்த்துவிட்டதால் அவரது இயற்பெயரை விட 'மொய்' என்ற பெயரால் புகழ் பெற்றவர். இந்த இருவருக்கும் தபாலில் அந்த்ராக்ஸ் வந்தது.

11ம் வகுப்பில் நாங்கள் O/L Exam எழுதுவதற்கு முன்பான கடைசித்தவணைப் பரீட்சை. மரியதாஸ் தயார் பண்ணிய கணக்குப் பரீட்சை வினாத்தாளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். எங்களது வகுப்பை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் 'மொய்'. அப்போது எங்கள் பாடசாலை உதவியாளர் (பியோன் என்ற சொல்லை பயன்படுத்த மனம் ஒப்பவில்லை) மொய்யிடம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மொய் அதை வாங்கி ஆர்வமுடன் பிரித்தார். பிரிக்க ஆரம்பித்ததுமே வெள்ளை நிறமாக, வித்தியாசமான மணத்துடன் 'அந்த்ராக்ஸ்' கொட்டுப்பட்டது. பதறிய மொய் உடனே ஆசிரியர்கள் ஓய்வறைக்கு ஓடி மற்ற ஆசிரியர்களின் ஆலோசனைப்படி அதைத் தூரத் தூக்கி எறிந்தார். அதே சமயம் வீ.கே. வாத்தியாருக்கும் ஒரு உறை. இதே நிலை. வீ.கே தைரியமாக முழுதும் திறந்து ரஜினியும் நக்மாவும் நிற்கும் ஒரு தீபாவளி வாழ்த்து அட்டை மற்றும் மும்தாஜின் கவர்ச்சிப் படங்கள் உட்பட ‘அந்த்ராக்ஸ்' ம் கண்டு மகிழ்ந்தார்.
செய்தி பரவி பாடசாலை பரபரப்பானது. வீ.கே யாரோ மாணவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்றும் சூளுரைத்தார். எங்கள் வகுப்பைச் சேர்ந்த கஜேந்திரன் மீதுதான் அவரது சந்தேகம் இருந்தது. கஜனைப் பல வழிகளில் விசாரித்தார். தபால் உறையில் இருந்த விலாசம் எழுதிய கையெழுத்தையும் மாணவர்களின் கையெழுத்தையும் ஒப்பிட்டும் பார்த்தார். பலன் கிட்டவில்லை. அந்தத் துகளை பரிசோதிக்கும் அளவுக்கு ஆய்வுகூட வசதிகள் கூட இல்லை. கொஞ்ச நாள் பள்ளிக்கூட வாத்தியார்கள் யாவரையும் ஒரு கலக்குக் கலக்கியது அந்த புதுவித மணம் குணம் கொண்ட பொதி.

அந்த வகுப்பில் ஒரு நாலுபேர் மட்டும் மர்மமாகத் திரிந்தார்கள். தபாலுறையை மொய் பிரித்த போது நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் இன்னொருவனைப் பார்த்துச் சிரிக்க, மற்றவன் சிரிக்காதே பொத்து என்று சைகை வேறு காட்டினான். பொடி கிளப்பிய பரபரப்பில் இவர்களை யாருமே பார்க்கவில்லை. இவர்களும் பெரிதாக எதையுமே வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இவர்களின் கையெழுத்துக்கூட தபால் உறையில் இருந்த கையெழுத்தோடு ஒத்துப் போகவில்லை. இப்படி நுண்ணுயிர் ஆயுதங்கள் புழங்கும் அளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டிருந்ததா? கல்வி தந்த ஆசான்களுக்கே இப்படிச் செய்யும் அளவுக்கு அவர்கள் ஏன் கெட்டுப் போனார்கள்? இது பரவினால் அவர்களும்தானே பாதிக்கப்படுவார்கள்? எப்படி இவர்களின் கையெழுத்து தபால் உறையிலிருந்த கையெழுத்தோடு ஒத்துப் போகவில்லை? இப்படியான கேள்விகள் எழுமல்லவா? இதோ பதில்கள்
 • தபால் உறையில் விலாசம் எழுதிய பையன் அந்தப் பாடசாலையில் படிக்கவில்லை (ஹாட்லிக் கல்லூரி). ஸ்ரீகாந்தன் என்ற பெயர் கொண்ட அவன் கற்றது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்.
 • இந்தச் சதியில் ஹாட்லியில் படித்த 4 கொள்ளையர்கள் மற்றும் ஸ்ரீகாந்தனோடு, கபிலன் என்கின்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவனும் அடக்கம்.
 • அந்தப் பொடி செய்யப்பட்ட மூலப் பொருட்கள் வருமாறு: மலத்தியோன் என்ற துர்நாற்றம் வீசும் கிருமிநாசினி (Pesticide); நல்ல மணம் கமழும் பாண்ட்ஸ் முகப் பவுடர்; கொஞ்சம் கராம்புவாசம் வீசும் ‘கோல்கேட்' பற்பொடி; கொஞ்சமே கொஞ்சம் திவ்ய மணம் கமழும் ‘பழனி' திருநீறு. இதெல்லாம் சேர்ந்து விநோத வாசம் வருமே தவிர விபரீத விளைவுகள் தராது.
 • ஒரு சின்னப்பிரச்சினையில் இந்த இரு ஆசிரியர்கள் மீதும் கடுப்படித்துப்போய் இந்த பாதகம் செய்யத்துணிந்த அந்தக் கொள்ளைக்கூட்டம் இதுதான்: கொள்ளைக்கூட்டத் தலைவன்: தயாநிதி, கொள்ளைக்கூட்ட உபதலைவன் மஜிந்தன். கொள்ளைக்கூட்ட உதவியாளர்கள்...நிருத்தனன், கபிலன், ஸ்ரீகாந்தன்.
பி.கு: இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும் என்று கேட்கிறீர்களா. மேலே உள்ள பெயர்களை எண்ணிப்பாருங்கள். ஒரே பாடசாலையைச் சேர்ந்த 4 பேர் மற்றும் வேறு பாடசாலையைச் சேர்ந்த இருவர் என ஐந்து பேர் இந்தச் சதியில் ஈடுபட்டார்கள். அந்த பெயர்ப்பட்டியலில் ஆறாவது ஆளின் பெயர் விட்டுப் போயிருக்கிறது. அப்புறம் கடைசிவரிகளில் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தின் சாயல் அடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Thursday 18 June 2009

பெல்ஃபாஸ்ட் சொல்லும் சேதி


வட அயர்லாந்து தலைநகரான பெல்ஃபாஸ்ட் நகரில் ஒரு சிறிய சுற்றுவட்டாரத்தில் வாழ்கின்ற இருபது குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ரோமேனியர்கள் இனம்தெரியாத சில குழுக்களால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். இவர்களை ரோமேனியார்கள் என்று பொதுப்படையாகக் குறிப்பிடுவது எந்தளவுக்குப் பொருந்தும் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பலர் வட அயர்லாந்தில் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட அயர்லாந்தில் 2003 மற்றும் 2004 ஆகிய இரு வருடங்களிலும் சேர்த்து 453 இனவெறிக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டனவாம். அந்த எண்ணிக்கைதான் அயர்லாந்து நாட்டில் இதுகாரும் அதிகபட்சமாக இருந்ததாம். ஆனால் கடந்த 12 மாதங்களில் மட்டும் இவ்வாறான 1000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர்கூட 46 போலந்துக் குடும்பங்கள் அயர்லாந்தை விட்டுத் தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.

பெல்ஃபாஸ்ட்டில் நடக்கும் இந்த வன்செயல்களை எதோ இரு இனங்களுக்கான மோதல் என்று விட்டுவிட முடியாது. இது தவறான முன்னுதாரணமாக அமைவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் ஒரு புலம் பெயர்ந்த தமிழனுக்கு இது ஒரு நல்ல செய்தி அல்ல. என்னதான் உலகமயமாதல், இன ஏற்புணர்வு என்று அறிவுஜீவிகள் புதுப்புதுச் சொற்களை எல்லாம் பாவித்தாலும், சாதாரண மேலைத்தேய பிரஜைகளிடம் இந்த இன உணர்வு ஒழிந்துகொண்டிருக்கிறது. அதை இல்லை என்று மறுக்க முடியாது. நாளைக்கே உலகின் எங்காவது ஒரு மூலையில் நாங்களும் இவ்வாறு தாக்கப்படலாம். அவ்வாறு தாக்கப்பட்டால் எங்கே போவது நாங்கள்? போலந்து மக்களை போலந்து அரசாங்கம் வாரியணைத்துக் கொண்டது. ரோமானியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறது அவர்களின் அரசாங்கம். ஆனால் எங்கள் நிலை நிச்சயம் அதோ கதிதான்.

வட அய்ர்லாந்து சம்பவத்தில் இரண்டு விடயங்கள் என்னைப் பாதித்தன. முதலாவது, அந்தப் பிரதேசப் போலீசாரின் மெத்தனம். இந்த ரோமேனிய மக்களின் வீடுகள் தாக்கப்பட்ட போது அவர்கள் போலீசாரின் உதவியை நாடியிருக்கிறார்கள். அப்படி உதவியை நாடிய தருணங்களில் சம்பவ இடத்துக்கு போலீசார் வர எடுத்துக் கொண்ட ஆகக் குறைந்த நேரம் 30 நிமிடங்கள். சில சம்பவ ஸ்தலங்களுக்கு நான்கு ஐந்து மணித்தியாலங்கள் கழித்துத் தான் வந்து சேர்ந்திருக்கிறார்கள் போலீசார். அந்தப் பிரதேசப் போலீஸ் உயரதிகாரியை சேனல்-4 செய்தியாளர் ஒருவர் கிழி கிழியெனக் கிழித்து, தொலைக்காட்சியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வைத்தார். (நம்மூரில் என்றால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று நாடு கடத்தியிருப்பார்கள்). என்னதான் மன்னிப்புக் கேட்டாலும் கிட்டத்தட்ட ஒருவாரமாக மக்கள் தாக்கப்பட்ட போது முறைப்பாட்டைக் கேட்க மட்டுமே வந்த வட அயர்லாந்து போலீசார், இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் எந்த பந்தோபஸ்துக்கும் ஏற்பாடு செய்யாமல் மெத்தனமாகச் செயற்பட்ட விதம் சிறுபான்மையினரின் நலத்தில் பெரும்பான்மை அதிகாரவர்க்கங்கள் எல்லா நாடுகளிலும் ஒரே மனப்பான்மையுடன்தான் செயற்படுகின்றன என்ற கசப்பான உண்மையை மறுபடியும் சொல்லியிருக்கிறார்கள் வட அயர்லாந்து போலீசார்.

அதேவேளை அந்தச் சுற்று வட்டாரத்தில் வாழும் மற்ற சாதாரண பெரும்பான்மை இன மக்கள், இந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதம் நெகிழ்ச்சியானது. போலீசாருக்குத் தகவல் சொல்வதில் மும்முரமாக ஈடுபட்டது இப்படிப்பட்ட பக்கத்து வீட்டு மக்கள்தான். அதே போல் போலீசாரின் மெத்தனம் கண்டு அருகிலிருந்த ஒரு டென்னிஸ் மைதானத்துக்கும், ஒரு பல்கலைக் கழக தங்குமிடத்துக்கும் இந்த மக்களை இரவோடிரவாக அப்புறப்படுத்தி, உணவளித்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மாற்றுடைகள், மற்றைய பொருட்கள், ரோமேனிய அகதிகளின் வீடுகளில் இருந்த விலைமதிப்பான பொருட்கள் எல்லாவற்றையும் அந்த டென்னிஸ் மைதானத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் கொண்டுபோய் கொடுப்பதில் முன்னின்றிருக்கிறார்கள். அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த மக்களுக்குரிய பாதுகாப்பை ஓரளவு அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், மேற்சொன்ன இனவெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டவும் பலர் முன்வந்திருக்கிறார்கள். ஆகவே என்னதான் நிறம், மதம், இனம் என்று வேறுபாடுகள் இருந்தாலும், கூடிவாழ்ந்த மனிதர்கள் துன்புறும் போது உள்ளம் கனியும் ‘மனிதம்' இன்னும் கொஞ்சமாவது வாழ்கிறது என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறார்கள் இந்தச் சுற்றுவட்டார மக்கள். (இது எல்லா இடத்திலும் சகஜமல்ல. சில இடங்களில் சேர்ந்து துவைப்பார்கள், கவனம்!)

Wednesday 17 June 2009

என்று திருந்துவோம்?

வருகின்ற வெள்ளிக்கிழமை கல்லூரியில் பட்டமளிப்பு விழா. பங்கேற்பதில் பெரியளவு ஆர்வம் எனக்கில்லை, இருந்தும் செலவு செய்து படிக்கவைத்த அக்கா ஆசைப்பட்டதால் கலந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். தலையில் கத்தரி அல்லது முடிவெட்டும் இயந்திரம் (என் கேஸில் இரண்டாவது) பட்டு கிட்டத்தட்ட மூன்று மூன்றரை மாதங்கள் ஓடிவிட்டதால் தலை காக்கைக் கூடுபோல் எனக்கே அசிங்கமாக இருந்தது. சரி, முடிவெட்டலாம் என்று புறப்பட்டேன். சிகை திருத்த சென்ற இடத்தில் ஒரு அனுபவம். துரதிர்ஷ்ட வசமாக, கசப்பான அனுபவம். எம்மவர் மனதில் சாதி வெறி மிக ஆழமாக வேரூன்றி விட்டது என்று மீண்டும் ஒரு உயர்சாதி மனிதன் (பகுத்தறிவின்படி பார்த்தால் அவன் இழிசாதி.. வர்ணாசிரமப் படி அவன் அந்தணன் என்பதால் உயர்சாதி) குத்திக்காட்டினான்.

முடி திருத்துவதற்கு நான் இங்கே இரண்டு சிகையலங்கார நிலையங்களைத் தெரிவு செய்து வைத்திருக்கிறேன். ஒன்று பெண்டிக்ட் பாக்கியநாதன் என்பவர் நடத்தும் ‘மில்லர் சலூன்'. அங்கே முதலாளி தொழிலாளி எல்லாமே பாக்கியநாதன் ஒருவர்தான். மிகவும் பரபரப்பான ஒரு கடைத்தொகுதியில் (Plaza) இடத்தில் அவரது சலூன் இருக்கிறது. பழைய எம். ஜி. ஆர் பாடல்கள் ஒலிக்க எங்களுக்கு என்ன மாதிரி வெட்டிவிட வேண்டும் என்று கேட்டு பாக்கியநாதன் முடி திருத்தும் அனுபவம் ஒரு சுகானுபவம். வார நாட்களில் பாக்கியநாதனைப் பிடிப்பது கொஞ்சம் கடினம். வாடிக்கையாளர்கள் வருவதில்லை என்பதால் மூடிவிட்டு சென்று விடுவார். பாக்கியநாதன் கிடைக்காத நாட்களில் எனது தேர்வு ‘டயனா ப்யூட்டி சலூன்'. இது கனடாவின் ஸ்காபுரோ நகர் வாழ் தமிழ் மக்களின் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற சிகைதிருத்தும் நிலையம். வர்ணாசிரம் தர்மத்தை மீறி தன் குலத்தொழில் முடி திருத்துவது இல்லாமல் இருந்த போதும், தன் சொந்தக் காலில் நிற்பதற்காக தமிழ் இளைஞன் ஒருவன் ஆரம்பித்த சலூன் இது. எல்லா நேரமும் 6 பேர் ஆண்களுக்கும், இருவர் பெண்களுக்கும் முடி வெட்டுவதற்குத் தயாராய் இருப்பார்கள் (பெண்களுக்கென தனிப் பகுதி). இப்போது ஊரில் முடிதிருத்துவதை குலத்தொழிலாகக் கொண்ட, அல்லது வேறு குலத்தொழில் இருந்தும் முடிதிருத்தும் கலை தெரிந்த 10-12 பேர் அங்கே வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நம்மவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற சமூகத்தினரிடமும் (வெள்ளைக்காரர்கள், கறுப்பின மக்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள்) புகழ் பெற்ற இவர்களிடம் எப்போதும் கூட்டம் இருக்கும், வார நாட்களில் மதியம் தவிர. நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இவர்கள் தான் மிக அருகில் இருக்கிறார்கள். இங்கே பணி செய்யும் நண்பர்கள் பாக்கியநாதனை விட கொஞ்சம் அழகுணர்ச்சி கூடியவர்கள். இப்படிப்பட்ட காரணங்களால் இன்று (ஜூன் 17, 2009) முடி வெட்டிக் கொள்ள டயானா சலூனைத் தெரிவு செய்தேன்.

வழமை போல ‘வாங்கோ' (இது ஐயராத்து வாங்கோ அல்ல, யாழ்ப்பாண வாங்கோ) என்று சொல்லி ஒரு நண்பர் என்னை நிலைக் கண்ணாடிக்குமுன் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தார். பெரிதாகக் கூட்டமில்லை. 3 பேர் மட்டும்தான் முடிதிருத்த வந்திருந்தார்கள். இருவருக்கு முடியும் நிலை. நான் நாலாமவன். என் தலையில் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார் நண்பர். அப்போ புதிதாக் ஒருவர் நுழைந்தார். முடிதிருத்தும் 6 நண்பர்களில் சும்மா நின்ற நண்பர்கள் உட்பட எல்லோரும் 'வாங்கோ ஐயா' என்று வரவேற்றார்கள். கண்ணாடியில் பார்த்தேன். ஒரு ஐயர் முடிதிருத்த வந்திருந்தார். அவரையும் ஒரு கண்ணாடி முன் இருத்தி முடிதிருத்த ஆரம்பித்தார் ஒரு நண்பர். இந்த நண்பர்களில் ஒரு நல்ல பழக்கம். முடிதிருத்தும் போது, வாடிக்கையாளருடனோ, சக வேலைபார்ப்பவருடனோ நகைச்சுவையாகப் பேசிக் கொண்டுதான் வேலை செய்வார்கள். முடிதிருத்த வந்தோம் என்பதைவிட ஒரு நண்பனுடன் பேச வந்தது போன்ற ஒரு உணர்வைத் தருவதில் கெட்டிக்காரர்கள். அப்படித்தான் அந்த ஐயருடனும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

ஐயர் வலு கில்லாடி. கனடா வந்து 17 வருடம் ஆகிவிட்டதாம். அவர் பல கடைத் தொகுதிகளில் முதலீடு செய்திருக்கிறாராம். அதாவது கடைத் தொகுதிகளில் ஒரு சிறிய கடையை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு நன்றாகச் சம்பாதிக்கிறார். இபோதும் எங்கோ ஒரு கடைத்தொகுதியின் ஒரு சிறிய Unit விற்பனைக்கு வருவதாயும் அதை வாங்கி வாடகைக்கு விடவிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். கனடாவில் பல ஐயர்கள் ஊரிலுள்ள கோயில்களின் பெயரில் கடைத்தொகுதிகளில் கோவில்கள் வைத்திருப்பது பற்றிப் பேச்சு திரும்பியது. ஆகம விதிகளின் படி அது பிழை அப்படி இப்படி ஏதாவது சொல்லி வாதிட்டிருக்க வேண்டிய ஐயர், ஒரு வார்த்தைவிட்டார் பாருங்கள், உற்சாகமாகப் பேசிக்கொண்டு முடிதிருத்திக் கொண்டிருந்த ஆறு நண்பர்களும் பேச்சை நிறுத்தியே விட்டனர். பலசரக்குக் கடைகள், மதுபானக் கடைகள், மாமிசக் கடைகள், சாப்பாட்டுக்கடைகள் இப்படி எத்தனையோ கடைகள் இருக்கும் கடைத் தொகுதிகளில் கோயில்கள் இருக்கக்கூடாது என்றாவது சொல்லியிருக்கலாம். அதை எல்லாம் விடுத்து ஐயர் சொன்னார்: ‘அடேயப்பா, உங்கட அம்பட்டக் கடைகளையும் பிளாசாவளுக்கை வச்சிருக்கேக்கை, அதுவளுக்கை கோயில் இருக்கக் கூடாதடாப்பா'.

ஒரு கணம் எனக்கே உடம்பில் மயிர்க்கால்கள் குத்தி நின்றன. என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் முட்டாளே என்று மனம் ஓலமிட்டது. கண்ணாடியில் பார்த்தேன். அந்த நிலையத்து நண்பர்கள் முகம் கறுத்திருந்தது. பேச்சு நின்று போயிருந்தது. எனக்கு முடிதிருத்துபவர் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். என்பார்வையும் அவர் பார்வையும் சந்தித்தபோது அந்தக் கண்ணில் வலி தெரிந்தது. ஐயரைத் திரும்பி முறைத்தோம். அது பற்றிச் சட்டை செய்யாமல் ஐயர் தந்து அழகை நிலைக் கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தார். கோபத்தில் ‘எழும்பி வெளியே போடா நாயே' என்று யாராவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். அவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை அந்த நண்பர்கள். எனக்கு சரி நேரே பின்னால் முடிதிருத்திக் கொண்டிருந்த நண்பர் எனக்கு முடிதிருத்திய நண்பரை மெதுவாகக் கூப்பிட்டார். ஏதோ குசு குசுத்துவிட்டு அவர் தன் வேலையைத் தொடர இவர் என் தலையில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஐயரின் வாய் அவர்களை காயப்படுத்தியது மட்டும் நிஜம். ஆனால் இவர்களின் அமைதி என்னை ஆச்சரியப்படுத்தியது.

அப்போது பின்னால் முடிதிருத்திக்கொண்டிருந்த நண்பர் கடையின் பின்பகுதிக்குச் சென்றார். சென்றதும் எனக்கு முடிதிருத்தும் நண்பருக்கு செல்லில் ஒரு அழைப்பு வந்தது. செல்லை எடுத்த நண்பர் ஆரம்பித்தார் பாருங்கள் ‘அண்ணை, எந்த ஊர் நீங்கள்.. ஆ, உங்களுக்கு ஒரு பப்ளிக் பிளேசில் என்ன கதைக்கிறது என்று தெரியாதே. இனிமேல் இப்பிடிக் கதைக்காதீங்க' என்று கத்திவிட்டு ஓய்ந்தார். அவரின் முகத்தின் கண்ணாடி விம்பத்தில் வெளிவந்த அனல் பயமுறுத்தியது. அதுவரை தன் சுய புராணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த ஐயரின் முகத்தில் ஈயாடவில்லை. மெதுவாக முடிதிருத்துவது போல் என் காதில் சொன்னார் அந்த நண்பர் ‘எங்களுக்கு வேற வழி தெரியேல தம்பி ஐயரைத் திட்ட'. ஆம், கடையின் பின்புறம் போன நண்பர் இவருக்கு ஃபோன் செய்ய அவரைத் திட்டுவது போல் ஐயரைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த நண்பர். முடி திருத்தியதற்குரிய காசை அவரிடம் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது மெதுவாக ஐயரைப் பார்த்தேன். ஏ.சி குளிரிலும் வேர்த்திருந்தார்.

இதில் இரண்டு விஷயங்கள் என்னைப் பாதித்தன. குலத்தொழில்கள் என்று சில தொழில்களை ஒதுக்கி, அந்தக் குலத்தவரைக் காலுக்குள் மிதிக்கும் அந்தப் பழக்கம் ஒரு முன்னேறிய மேலை நாட்டில் தொடர்வது ஒன்று. இன்னொன்று கோபத்தைக்கூட நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் அடக்கப்பட்டிருக்கும் அந்த மனிதர்களின் அவலம். இதை நினைக்கும் போது 2001ல் இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலும், மொத்த காலமும் வன்னியிலும் புலிகள் நாவிதர்கள் வீடுகளுக்குச் சென்று சேவை செய்யும் கலாசாரத்தை (கிட்டத்தட்ட ஒரு ஆண்டான் அடிமை கலாசாரம்) தடை செய்திருந்தது நினைவுக்கு வந்தது. முடிவெட்ட, மொட்டை போட, சவரம் செய்ய என்று குறிப்பிட்ட தொகைகளை 'முடிதிருத்துவோர் சங்கம்' மூலம் முடிவு செய்து, சலூன்களை எல்லோரும் தேடிப்போக வைத்தார்கள். எல்லா அத்தியாவசியமான சேவைகளுக்குக் கிடைக்கும் அதே கௌரவத்தை முடிதிருத்துவோருக்கும், சலவைத்தொழிலாளிகளுக்கும் பெற்றுத் தந்தார்கள். சமரசம் இல்லாத சமதர்ம சமூகம் அமைக்க முற்பட்ட அந்த நல்லரசு இன்று கனவாய் போய்விட்டது. கூடவே இந்த சமூக அவலங்களுக்கெல்லாம் மிகவிரைவில் தீர்வு வரும் என்று எண்ணியிருந்த இந்த ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் நம்பிக்கையும்தான்.

பி.கு: யாழ்ப்பாண சமூக அமைப்பில் சாதீயம், அதற்கெதிரான புலிகளின் நடவடிக்கைகள் பற்றிய என் நினைவுகளை வருங்காலத்தில் பகிர்ந்து கொள்வேன். நான் கூட ஒரு காலத்தில் சாதீயம் பேசியவன். ஆனால் என் பள்ளிக்கால சம்பவங்கள் சாதீயத்தின் மீது அசாத்திய வெறுப்பை ஏற்படுத்தின. அவைபற்றியும் பகிர்ந்து கொள்வேன்.

Tuesday 16 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 14-20, 2009

***தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையங்களில் பார்த்த செய்திகளில் என் மனதை நெருங்கியவை பற்றிய தொகுப்பு***

அரசியல்

வடகொரியா சென்ற மாதம் நடாத்தியதாகக் கூறப்படும் அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்க குடியரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. (ஆமா, அதுக்கு இவங்க யாரு?) 2006ம் வருடம் முதன் முதலாக வட கொரியா இதே போன்ற சோதனையை நிகழ்த்தியது. இது இரண்டாம் தடவை. முதல் சோதனையை விட இம்முறை பலமடங்கு சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்ததாகவும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு இந்தப் பிரச்சினை தொடர்பான தனது முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. வட கொரியா மேற்கொண்ட மேற்படி நிலக்கீழ் பரிசோதனை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் கூட உலகநாடுகள் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபைகூட சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தடைகளை நீக்கக் கோரி வட கொரிய மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் அதே வேளை, தடைகளை நீக்காமல் விட்டால் தாங்கள் மேலும் வலுவான யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் என்பவற்றைப் பாவித்து மேலும் சக்திவாய்ந்த அணுகுண்டுகளைத் தயாரிப்போம் என வட கொரியா ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது (ப்ளூட்டோனியம் இதுவரை எங்குமே ஆயுதமாக்கப்படவில்லை என்று கேள்வி). மேலோட்டமாகப் பார்த்தால் இது அமெரிக்காவைக் கடுப்படிக்கும் ஒரு செய்தி என்று சந்தோசப் படக்கூட முடியும். ஆனால் இதன் அடியாழத்தில் ஒழிந்திருக்கும் எச்சரிக்கை ஒட்டுமொத்த மனித குலத்துக்குமானது. இப்படியே போனால் ஒருவனை ஒருவன் அடக்குகிறேன் பேர்வழி என்று அடித்துக்கொண்டு சாகப் போகிறார்கள் போலிருக்கிறது. (அது சரி அணுகுண்டு சோதனை உலக மகா குற்றம். தன் நாட்டு மக்களை தானே கொல்வது இறையாண்மை. நல்லா சொல்லுறீங்கய்யா டீட்டெய்லு)

இலங்கையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 80,000 இலங்கையர்கள் வேலை இழந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 300,000 பேர் சொந்த வருமானத்தை இழந்திருப்பதாகவும் வேலை இழந்தவர்களுக்கான தேசிய மையம் (National Centre for Job Loosers) ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக போரிலீடுபட்டிருந்த இலங்கை அரசுக்கு இந்தச் செய்தி ஒரு அதிர்ச்சி. ஆனால் அதை அவர்கள் எப்படித் தீர்க்கப் போகிறார்கள் என்பதை உற்று நோக்கினால் இலங்கை அரசாங்கத்தின் அற்புத நிர்வாகத் திறமையைப் புரிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமா உலக நாடுகள் அனைத்துக்கும் நல்ல தீர்வும் அதுதான். இலகுவான தீர்வு. பின்பற்றவேண்டிய நடைமுறைகள் இதோ:
 • போர் அழிவைக் காரணம் காட்டி உலக வங்கியிடம் கடன் வாங்குங்கள்
 • 50,000 பேரை ராணுவத்தில் சேருங்கள். 80,000 பேர் வேலை இழந்த மறு நொடியே 50,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு.
முடியுமா யாராலும்? 50,000 பேரை மேலதிகமாக ராணுவத்துக்குச் சேர்க்கும் வேலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாயும், அவ்வீரர்கள் புதிதாக சுதந்திரப் படுத்தப்பட்ட (என்னாது??????) பகுதிகளில் பாதுக்காப்பைப் பலப்படுத்த பயன்படுவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் பாதுகாப்பு (!!!!???) அமைச்சின் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. (பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் ஆலோசகர்களைக் கோரலாம்)

பொருளாதாரம்

கனேடிய நிறுவனங்கள் மிக வேகமாகப் பொருளாதார நெருக்கடிக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதாக கனடாவின் புள்ளிவிபரவியல் அமைப்பு (Statistics Canada) அறிவித்திருக்கிறது. சரியான முறையில் திட்டமிடப்பட்ட ஆட்குறைப்பு மூலம் இந்த நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இவ் அமைப்பு சொல்லும் இன்னொரு தகவல்தான் கொஞ்சம் கவலைப் படுத்துகிறது. என்னதான் ஆட்குறைப்பு மூலம் தங்களது Pay Rollல் பெருமளவு சேமித்தாலும், கனேடிய நிறுவனங்களின் விற்பனைத்திறன் வெகு வேகமாக வீழ்வடைவதால் மூலப்பொருட்கள் நிறுவனங்களுக்கே தேங்க ஆரம்பித்திருப்பதன் காரணமாக, செலவைக் குறைக்கும் பொருட்டு மேலும் ஆட்குறைப்புகள் இந்த நிறுவனங்களுக்கு அவசியமாகின்றது. இது ஒரு சாதாரண நபருக்கு நல்ல செய்தியல்ல. மேலும் கனேடிய நிறுவனங்களின் Labour Productivity அதிகரித்திருக்கிறது. இருந்த போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP), மனிதர்களின் வேலை செய்த நேரமும் (Hours Worked) கவலைக்கிடமான எதிர்மறை வளர்ச்சியையே காட்டுகின்றன. அது சம்பந்தமாக Stats Canada வெளியிட்ட ஒரு சிறிய வரைபடம் கீழே:
இதே வேளை அத்தியாவசியப் பொருட்களுக்கான பங்குச்சந்தை விலைகள் Toronto Stock Exchange குறியீட்டு எண்ணை தூக்கி நிறுத்தியிருப்பது கொஞ்சம் நிம்மதி அளிக்கும் செய்தி.

தொழில் நுட்பம்

Research In Motion (RIM) நிறுவனம் தனது Black Berry குடும்பத்தில் மேலும் ஒரு அங்கத்தவரை இணைக்கப் போகிறது. இந்தப் புதிய Smart Phone, Blackberry Tour என்று அழைக்கப்பட இருக்கிறது. சாதாரண பாவனையாளர்கள் Black Berry Curve பயன்படுத்தும் க்கும் பெரிய Corporate முதலாளிகள் பயன்படுத்தும் Black Berry Bold க்கும் இடைப்பட்ட ஒரு வர்க்கமாக இது இருக்குமாம். இதன்மூலம் இரு சாராரிடமும் இந்த புதிய Smart Phone ஐக் கொண்டு சேர்த்து RIMன் வருமானத்தை மேலும் கூட்டுவதற்குரிய ஒரு முயற்சிதான் இது என RIMஇன் Co-Chief Excecutive Jim Balsillie தெரிவித்திருக்கிறார். RIM தனது வலைத்தளத்தில் போட்டிருக்கும் Black Berry Tourன் படம் கீழே: (பாத்து ரசிக்கதாங்க முடியும் என்னால). இன்றைக்கு (ஜூன் 16 2009) இது வட அமெரிக்காவில் அறிமுகமாகிறது.


விளையாட்டு

ICC T20 ன் அரையிறுதிக்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டு விட்டன. முதல் உலகக் கோப்பையை வென்ற இந்தியா மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து ஆகிய ஒரு சுலபமான அணிகளிடமும் பரிதாபமாகத் தோற்று இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. தோனியின் தலைக்கு குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்திய ரசிகர்கள். கொடும்பாவிகள் எரிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. Cricket is a great leveller. தென்னாபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதியில் மோத உள்ளன. ஏலவே சொன்னது போல ஸ்மித்தின் தென்னாபிரிக்கா தொடரை வெல்லும் என்று நினைக்கிறேன். இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டிகளில் ஓய்வெடுக்க அனுமதி தருமாறு தோனியும், சச்சினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டிருக்கிறார்களாம். IPL போட்டிகளில் விளையாடியதால் அடைந்த உடல் ரீதியான களைப்பே தோல்விக்குக் காரணம் என்று இந்தியப் பயிற்றுவிப்பாளர் Gary Kirsten தெரிவித்த கருத்துக்கு இந்திய வாரியம் தாங்கள் எந்த வீரரையும் IPL ல் விளையாடுமாறு நிர்ப்பந்திக்கவில்லை என்று பதிலளித்திருக்கிறது. (மறுபடி ஆரம்பிச்சுட்டங்க).
Confederation Cup Soccer தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகியிருக்கிறது. 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடாத்தப்படுகின்றன. ‘A' குழுவில் ஸ்பெயின், ஈராக், தென்னாபிரிக்கா, நியூசீலாந்து அணிகளும், ‘B' பிரிவில் பிரேஸில், இத்தாலி, ஐக்கிய அமெரிக்க குடியரசு, எகிப்து அணிகளும் ஆடுகின்றன. முதல் இரு நாட்களில் ஸ்பெயின் நியூசிலாந்தை 5-0 என்றும் பிரேசில் எகிப்தை 4-3 என்றும், இத்தாலி ஐக்கிய அமெரிக்கக் குடியரசை 3-1 என்றும் தோற்கடித்தன. ஈராக் தென்னாபிரிக்கா ஆட்டம் 0-0 சமநிலையில் முடிந்தது.

வட அமெரிக்காவின் புகழ் பெற்ற Stanly Cup Ice Hockey போட்டித் தொடரை Pittsburg Penguins அணி வென்றது. 7 போட்டிகள் கொண்ட இறுதியாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் Detroit Red Wings அணியை வெற்றிகொண்டு ஸ்டேன்லி கோப்பை இறுதியாட்டத் தொடரை 4 போட்டிகளுக்கு 3 போட்டிகள் என்ற கணக்கில் கைப்பற்றியது. அதே போல் National Basketball Association போட்டித் தொடரின் இறுதியாட்டத் தொடரை Los Angeles Lakers அணி 99-86 என்ற கணக்கில் Orlando Magics அணியை தோற்கடித்து 4 போட்டிகளுக்கு 1 போட்டி என்ற கணக்கில் கைப்பற்றியது.

பொழுதுபோக்கு

செல்வராகவனின் இயக்கத்தில், G.V. பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி சிவகுமார், ரீமா சென், ஆண்ட்ரியா ஜெர்மையா, ரா. பார்த்திபன் நடிப்பில் உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பாடல்கள் ஜூன் 14 வெளியிடப்பட்டன. இரண்டு Background Scoreகள் உட்பட 10 Track கள். பெரும்பாலானவை பழைய செல்வராகவன் படப் பாடல்களை நினைவுபடுத்துகிறன. ஒரு பாடல் யுவனின் ‘அடடா வா அசத்தலாம்' பாடலை நினைவுபடுத்துகிறது. ஆனால் 3 இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களை வைரமுத்து எழுதி விஜய் ஜேசுதாஸ், P. B. ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் பாடிய பாடல்கள் படம் பற்றிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியுள்ளன. இசைவெளியீட்டு விழாவுக்கு செல்வாவோடு ‘டூ' விட்ட யுவனும் வந்திருந்தார். பாடல்கள் பற்றிய எனது பார்வ இங்கே.

நயன்தாரா பிரபுதேவா காதல் மேட்டர் ஊரெல்லாம் சந்தி சிரிக்கிறது. அவர்களின் திருமணப் படம் என்று ஒன்றை ஒரு பத்திரிகை வெளியிட அவர்கள் மீது வழக்குப் போடுவேன் என நயன்தாரா மிரட்டியிருக்கிறார்.


Univercell Vijay Awards வெற்றி பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன். ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நடிகை நயன்தாரா. மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன், சிறந்த திரைக்கதையாளர் ஆகிய நான்கு விருதுகளை நடிகர் கமல்ஹாசன் பெற்றார். சூர்யாவுக்கு விருது வழங்கும் போது 'சிவகுமார் எனது அண்ணன் என்றும், சூர்யா தான் பெறாத மகன்' என்றும் கமல் கூற, சிவகுமார் கண்கலங்க ஒரு Emotional Sequence அங்கே அரங்கேறியது. மற்ற வெற்றியாளர்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

மற்றவை

புதிதாக Blog ஆரம்பித்திருக்கும், ஆரம்பிக்க நினைக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு Show Dial Jaya TV என்ற பெயரில் ஜெயாவில் ஒளிபரப்பாகியது. மூத்த பதிவர் Cableசங்கர் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

Sunday 14 June 2009

இட ஒதுக்கீடு


பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, உடல் ரீதியாக இயலாமல் போனோருக்கான இட ஒதுக்கீடு என்று பல இட ஒதுக்கீடுகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். சில நாடுகளில் பெண்களுக்கு 33% இடம் ஒதுக்குகிறோம் என்று 33 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த விகிதாசார இட ஒதுக்கீடுகள் ஒரு போதும் நியாயமாக இருப்பதில்லை. முக்கியமாக மனித வளத்துறையில் (Human Resources) வேலை செய்வோருக்கு இந்த விகிதாசார இட ஒதுக்கீடுகள் ஒரு சவால் நிறைந்த விடயம். நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது, எனது துறையில் மூன்று தவணைகள் (Semester) வேலை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. (ஆங்கிலத்தில் Co-op Terms அல்லது Field Placements). என்னுடைய முதல் இரண்டு தவணைகளிலும் நான் படித்த கல்லூரியின் (Centennial College, Toronto) Centre for Organizational Learning and Teaching (COLT) இலேயே பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே வேலை செய்யும் போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளில் இதுவும் ஒன்று.

COLT ன் முக்கிய பணி கல்லூரியின் மாணவரல்லாத மற்றத் துறையினரைப் பயிற்றுவிப்பது. அதாவது ஒரு கல்லூரி என்றால் மாணவர்கள் தவிர விரிவுரையாளர்கள் இருப்பார்கள். Non-Acedamic Staff எனப்படும் கல்விசாரா ஊழியர்கள் (இவர்களை இங்கே Support Staff என அழைப்பார்கள்) இருப்பார்கள். இவர்களைப் பயிற்றுவிப்பதுதான் நான் வேலை செய்த பிரிவான COLT ன் பணி. விரிவுரையாளர்களுக்கு பாடத்திட்ட திட்டமிடல் (Curriculum Design), பாடத்திட்ட விரிவாக்கமும், மேன்மைப்படுத்தலும் (Curriculum Expansions and Upgrades) ஆகிய துறைகளில் உதவி செய்வதுடன், அவர்களின் கற்பித்தல் திறண் (Teaching Skills) வளர்ச்சிக்குரிய பயிற்சிகளையும் இந்தப் பிரிவுதான் அளிக்கிறது. அதேபோல் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அன்றாடக் கடமைகளை திறம்படச் செய்வதற்குரிய தொழில்சார் திறண்களை (Professional Skills) விருத்தி செய்வதும் இவர்களின் பொறுப்பே. மேலும், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் சட்டதிட்டக் கோர்வைகள் (Policies and Procedures) மற்றும் அவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் (Changes and Upgrades) பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும் இவர்களே. இதுதவிர கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் தொழில்சார் கருத்தரங்குகளுக்கு கல்லூரி ஊழியர்களை நெறிப்படுத்துவதும் COLTன் இன்னொரு பங்களிப்பு. இதுதவிர விரிவிரையாளர்களுக்கும், கல்விசாரா ஊளியர்களுக்கும் 'கல்லூரி வளாகத்தில் வன்முறையைத் தவிர்ப்பது எப்படி?' (Violence Prevention Training) போன்ற அத்தியாவசியமான பயிற்சி நெறிகளையும் வழங்கியது. அதே போல LGBQT என்ற அமைப்பின் மூலம் Lesbians, Gays, Bi-sexuals, Queers, Transgenders ஆகியோருக்குரிய சம அந்தஸ்தை கல்லூரி வளாகத்தில் பெற்றுத்தரும் ஒரு முயற்சியையும் நான் அங்கே வேலை செய்த காலப் பகுதியில் அமலாக்கினார்கள்.

நான் வேலை செய்த காலப்பகுதியில் (மே 2007-டிசம்பர் 2007) COLT ஆனது, Kristi Harrison, Dean of Organizational Learning அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கியது. அவருக்குக்கீழே பதின் மூன்று பேர் வேலை செய்தோம். நான் ஒரு Project Assistant ஆக பணியாற்றினேன். Kristiயின் மேலதிகாரி Vicki Bismilla, Vice President of Academic Learning, என்ற இந்திய வம்சாவளிப் பெண்மணி. (இப்போ Kristi Vice President of Organiazational Learning என்னும் Vickyக்கு ஈடான பதவிக்கு உயர்ந்திருக்கிறார்). Vicky பிறந்தது வளர்ந்தது எல்லாம் தென்னாபிரிக்காவில். நல்லதோர் நிர்வாகி. நான் எனது வேலைத் தவணை முடிந்து மீண்டுக் கல்லூரி போகும் போது கூட என்னை கல்லூரி வளாகத்தில் எங்கே கண்டாலும் நிறுத்தி விசாரிப்பார். (அலுவலகத்தில் எல்லோருமே அப்படித்தான். ஏனென்றால் நான்தான் அவர்களின் முதல் Co-op Student) Vickyன் வளர்ச்சி மிக அபாரமானது. அவர் எங்கள் கல்லூரியில் பதவியேற்று இரண்டு வருடங்களே ஆகியிருந்த போதும் அவரது நிர்வாகத் திறமை மிகவும் மதிக்கப்பட்டது. அப்படிப்பட்ட Vicky ஒரு வித்தியாசமான உத்தரவை எங்கள் பிரிவுக்கு இட்டார்.


எங்களது பிரிவை விரிவுபடுத்தும் திட்டம் அப்போதான் அமலாக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதனடிப்படையில் கல்விசாரா ஊழியர்களுக்கான ஒரு பயிற்றுனர் (Trainer) ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அதற்குரிய முறை (Hiring Process) வழமைபோல Jop Advertisementல் ஆரம்பித்தது. அந்த விளம்பரத்தை வடிவமைக்கும் பொறுப்பு என்னிடம். (அதற்கென்று ஒரு Template இருக்கிறது) அந்த விளம்பரத்தில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை Vicky ஒரு E-mail ல் அனுப்பியிருந்தார். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் எல்லா வேலை விளம்பரங்களிலும் பின்வரும் வாக்கியம் கட்டாயம் இணைக்கப் பட்டிருக்கும். (Company Name) is an equal opportunity employer with specialized programs in recruiting:
 1. People with disabilities
 2. Women
 3. Aboriginals
 4. Visible Minorites.
Vicky அனுப்பிய E-Mail படி, மேற்கூறிய நான்கு பிரிவினரை மட்டும் குறிவைத்து அந்த விளம்பரத்தை அமைக்கும்படி கூறியிருந்தார். நான் வேலையில் இணைய முன்னமே Recruitment and Selection என்றோரு பாடத்தைப் படித்திருந்ததால் அவர் கூறியது போல் விளம்பரம் அமைப்பதில் சிக்கலிருப்பதாகக் கருதினேன். எனது சிற்றறிவுப்படி மேற்படி வாக்கியம் அந்த நான்கு பிரிவினரையும் குறித்த வேலைக்கு விண்ணப்பிக்க வைப்பதற்காகவும், எல்லோரையும் சமமாகவே குறிப்பிட்ட நிறுவனம் பார்க்கிறது என்பதற்கான ஒரு 'டிஸ்கி' யாகவும் பயன்படுத்தப்படுவது. Ontario Ministry of Labour ன் கண்களுக்கு மண் தூவுவதற்காகவே மேற்படி வசனத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களும் உள்ளன. ஆனால், மேற்படி நான்கு பிரிவினரை மட்டும் குறிவைத்து Vicky சொன்னது போல் ஒரு விளம்பரத்தை வெளியிட முடியாது. காரணம், அந்த நான்கு பிரிவுகளுக்குள்ளும் அடங்காத தகுதி படைத்தவர்களுக்கு அது ஊறு செய்வதாகக் கருதப்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே இதுபற்றி நான் Vicky ன் கவனத்துக்குக் கொண்டு செல்ல அவரும் Human Resources Department ஐ கேட்டு நான் சொன்னது சரியென்று உறுதி செய்தார். அப்படி குறிப்பிட்ட பிரிவை மட்டும் குறிவைத்து ஒரு Hiring Process தேவையெனில் அதை விளம்பரப் படுத்தாமல் நேர்முகத் தேர்வுவைக்கும் குழுவுக்கு அந்தக் குறிப்பிட்ட பிரிவிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யுமாறு அறிவுறுத்தலாம் என HR Department சொன்னார்கள்.

இந்தச் சம்பவம் எனக்குச் சொன்ன சில விடயங்கள்: தலைமைப் பதவியில் இருக்கும் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை. தம் கீழ் வேலை செய்பவர்களிடமும் கற்றுக்கொள்ளத் தயாராயிருப்பவர்கள் தம் பதவிகளை நீண்ட காலத்துக்கு தக்க வைத்துக் கொள்வார்கள். (இது ஒரு சின்ன படிப்பினை) பெரிய படிப்பினை என்னவென்றால், இட ஒதுக்கீடு என்பது ஒரு காலமும் ‘சமரசம் இல்லாத சமதர்மம்' (Equity without Compromising) என்ற கோட்பாட்டோடு பொருந்திப் போகாது. ஒருவர் வாழ இன்னொருவர் வீழ வேண்டி இருக்கும். இந்தியாவில் தலித்துகளுக்கு பார்ப்பனர்கள் நிகழ்த்தும் கொடுமையை நீக்கி சமதர்ம சமூகம் அமைக்கிறோம் என்று சொல்லி தலித்துகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டைதான் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் என்பேன். அதேபோல் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற கதையும் ஒரு புருடா. அவர்களுக்கு உரிமைகளை மற்றவர்கள் ஒதுக்கிப் பெற்றுக் கொள்ளும் அவசியம் அவர்களுக்கில்லை. என்னைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு என்பது நல்லது செய்கிறோம் என்ற பெயரில் செய்யப்படும் ஒரு discrimination.

Friday 12 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 7-13, 2009

***இந்த வாரம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையங்களில் பார்த்த செய்திகளில் என் மனதில் பட்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு தொடராக வரும் இனி, எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்***

கொஞ்சம் அரசியல்


Liberal கட்சியின் Toronto Centre MP Bob Rae இலங்கை விமான நிலையத்தில் வைத்து அவமானப்பட்டது, சிறிலங்கா மீதான கனடாவின் பார்வையில் என்ன மற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. கனேடிய அரசியல்வாதிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கான அபாயம் இருந்தபோது தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரே நோக்கில் அரசாங்கத்தைக் கலைத்து மீண்டும் தேர்தல் அறிவித்தவர்தான் பிரதமர் Stephen Harper. (மேற்படி Progressive Conservative கட்சியை சார்ந்தவர்). Liberal கட்சியோ National Democratic Party (NDP) மற்றும், Bloc Quebec என்ற Quebec மாநிலத்தின் பிரிவினையைக் கோரும் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து Harper அரசைக் கலைத்து கூட்டரசு அமைக்க இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு தடவை முயன்றது. இந்நிலையில் Liberal கட்சியைச் சேர்ந்த Bob Rae பட்ட அவமானத்துக்கு சிறு சிறு கண்டனங்கள் மட்டுமே எழுந்துள்ளன. (முக்கால்வாசி அவரது கட்சியிலிருந்து). இங்கே புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை செய்த போது ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சியான Liberal கட்சிதான் அதிகம் கண்டுகொண்டது. அப்படிக் கண்டுகொண்டதுக்கும், Bob Rae சிறிலங்கா போனதற்கும் வோட்டு வங்கியைப் பலப்படுத்துவதும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் ஒரு சிறு சலசலப்பை கனேடிய அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது. புலம் பெயர் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்திற்கு இப்போது கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கு அர்த்தம் புலப்படத் தொடங்கியிருக்கிறது.
அவுஸ்திரேலியா புலிகள் மீதான தடைகொண்டு வரும் தீர்மானத்தைக் கைவிடப் போவதாகச் செய்திகள் வந்தவுடன், அந்நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ‘குய்யோ முறையோ' என்று அலறுகிறார். அப்படித் தடை செய்யாமல் விட்டால் வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்கள் நிதி சேர்த்து புலிகள் இயக்கத்தை மீண்டும் தலைதூக்க வைத்து விடுவார்களாம். புலிகள் வெளிநாடு முழுவதும் பரவிவிடுவார்களாம். அப்போ சில நாடகளுக்கு முன் சிறிலங்கா அதிபர் ‘வீர' மகிந்த, விடுதலைப் புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டோம் என்றும், தமிழ் மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துவிட்டோம் என்றும், இனிமேல் இலங்கையில் புலிகள் தலைதூக்க முடியாதென்றும் முழக்கமிட்டதெல்லாம் வெறும் வாய் ஜாலம். அப்படித்தானே உயர்திரு. சேனக வலகம்பாய?. நீங்கள் சொன்னதுபோல் முற்றுமுழுதான சுதந்திரம் தந்து, எங்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக நடாத்தினால், இன்னொரு ஆயுதப் போராட்டம் எங்களுக்குத் தேவையே இல்லை. புலிகள் இயக்கத்தை அவுஸ்திரேலியா தடைசெய்ய மாட்டாது என்ற செய்தி கேட்டதும் நீங்கள் பதறிய பதற்றம் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான்... நீங்கள் திருந்தவே போவதில்லை.
தமிழர்கள் உணர்ச்சிகளுக்கு மூளையை அடகு வைப்பவர்கள் என்பது எனது கருத்து. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் 'புரட்சிப் பீரங்கிகள்' சீமானும், வை. கோபால்சாமியும். ‘இனி சிங்கள நாட்டைக் கைப்பற்றும் போராட்டத்தை ஆரம்பிப்போம்' என்று முன்னவரும், ‘வவுனியாவில் ஆயுதக்கிடங்கை எரித்தது எம்மவர்கள் தான்' என்று பின்னவரும் பேசிய பேச்சுக்கள் ‘புனர்வாழ்வு' முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழர்களை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பது பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் பேசியிருக்கிறார்கள். இவர்களுக்கென்ன, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரமோ, ஒரு மாதமோ சிறைவாசம். கொஞ்சம் காசு கொடுத்தால் சிறையிலும் நன்றாக இருந்துவிட்டு வரலாம். (சிறைசென்று வரும்போது எவ்வளவு ஃப்ரெஷ்சாக வெளிய வாறாங்கப்பா???). அங்கே அந்த மக்கள் பணயக் கைதிகளாக அடைபட்டிருக்கிறார்கள். இவர்களின் பேச்சுக்கள் எல்லாம் தெளிவாக மொழி பெயர்க்கப்பட்டு கோத்த பாயவின் பார்வைக்குப் போகும். எங்கள் சனம் சாகும். இனியாவது வாய்க்கும் மூளைக்கும் தொடர்பு வைத்துப் பேசுங்கய்யா. (06/06/2009 அன்று யாழ்ப்பாணத்திலும் ஒரு ஆயுதக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாம். இப்ப யாழ்ப்பாணத்தில் ஒரே வெயில், அந்த சூட்டில தீ பிடிக்குதய்யா)

வவுனியா மற்றும் கொடிகாமம் முகாம்களில் பிரிந்து வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களைச் சேர்த்து வைக்குமாறு ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வவுனியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்னுசாமி சுரேந்திரநாதன், ஜெயராணி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் மற்றும் கொடிகாமம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சோபிதா சுரேந்திரநாதன், சிவபாக்கியம் மாணிக்கராஜா ஆகியோர் சார்பில் இந்த மனுவை சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா அவர்கள் தாக்கல் செய்திருக்கிறார். இந்தக் குடும்பம் வவுனியா செல்லவென இரண்டு பதுங்குகுழிகளில் தங்கியிருந்தது. சுரேந்திரநாதன், மனைவி ஜெயராணி, மகள் நேசனா (வயது 10க்கு கீழ்) ஆகியோர் ஒன்றிலும், ஜெயராணியின் தாயார் சிவபாக்கியம், மூத்த மகள் சோபிதா (13வயது), மகன் கிஷோர் (12வயது) ஆகியோர் இன்னொன்றிலும் இருந்த போது, எதிர்பாராத விதமாகப் பிரிய நேரிட்டது. சுரேந்திரநாதன், மனைவி மற்றும் நேசனா வவுனியாவுக்குத் தப்பிவந்தனர். எறிகணைக்குப் பலியான பேரன் கிஷோரை அவசர அவசரமாகப் புதைத்துவிட்டு சிவபாக்கியம் சோபிதாவோடு கொடிகாமத்துக்குத் தப்பியோடினார். தங்களை ஒரே முகாமில் விடுமாறு பலமுறை கேட்டும் பலனில்லாததால் சுரேந்திரநாதன் குடும்பம் நீதிமன்றை நாடியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ( பி.கு: சுரேந்திரநாதனின் தாயார் இராசம்மா பொன்னுச்சாமி, என் தகப்பனாரின் மூத்த சகோதரி. சுரேந்திரநாதன் என் மச்சான். செத்துப் போன கிஷோரும், அவலப்படும் சோபிதா, நேசனா ஆகியோர் என் பெறாமக்கள். Tamil One தொலைக்காட்சியில் மேற்படி செய்தியைக் கேட்டபோது வலித்தது)


கொஞ்சம் பொருளாதாரம்

திடீரென்று கச்சா எண்ணை விலை அதிகரித்திருக்கிறது. நேற்று எரிபொருள் (Car Gas) லிட்டர் 1 டாலர் 3 சதமாக உயர்ந்திருந்தது. சென்ற வருடம் இதே நேரம் லிட்டர் 1 டாலர் 52 சதமாகக் கூட இருந்தது. சென்ற டிசம்பரில் வெறும் 70 சதமாக விழுந்தது. கனேடியா டாலரின் மதிப்பும் சற்றே உயர்ந்திருக்கிறது. Bank of Canada வின் கூற்றுப்படி 1 கனேடிய டாலர், 0.9106 ஐக்கிய அமெரிக்க டாலராக மதிப்புயர்ந்திருக்கிறது. சென்ற வருடம் கிட்டத்தட்ட அமெரிக்க டாலரை எட்டிப்பிடித்து, பின் அதலபாதாளத்தில் விழுந்து இப்போது ஓரளவுக்கு மீண்டுவருகிறது. கச்சா எண்ணை விலை கேலனுக்கு 70 டாலரைக் கடந்திருக்கிறது. (மார்ச்சில் வெறும் 35 டாலர்கள்). விரைவில் 80 டாலரை எட்டும் என்கிறார்கள். இவற்றின் விலை அதிகரிப்பால சாதாரண மக்களுக்கு நட்டம் போல் தோன்றினாலும், கனடாவைப் பொறுத்த மட்டில் சாதாரண குடிமகனுக்கு இது ஒரு நல்ல செய்தி. கனேடியப் பொருளாதாரமும் கச்சா எண்ணை மற்றும் எரிபொருள் விலைகளும் அன்றில் பறவைகள் மாதிரி. ஒன்றில்லாமல் இன்னொன்று வாழாது. அதனால் பொருளாதார நெருக்கடியிலிருந்த கனடா மீளுவதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஆனால் சில பொருளாதார வல்லுனர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. FACTS' அமைப்பின் Fereidun Fesharaki இது ஒரு தற்காலிகமான நிலை என்றும் மிக விரைவிலேயே கச்சா எண்ணை விலைகள் 40 டாலர் அல்லது அதற்குக் கீழே போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாயும் கூறி வயற்றில் புளியைக் கரைத்திருக்கிறார். இவர் மற்றும் இவர் போன்ற வல்லுனர்களின் கூற்றை முதலீட்டாளர்கள் கேட்பதாய் தெரியவில்லை. கச்சா எண்ணை பங்குகளில் நன்றாக முதலீடுகள் நடப்பதாக Toronto Stock Exchange சொல்கிறது.

கொஞ்சம் விளையாட்டு

ICC T20 உலகக் கோப்பை இப்போதான் சூடு பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியா முதல் சுற்றிலேயே வெளியேறியது, இங்கிலாந்துடனான நெதர்லாந்தின் வெற்றி, அயர்லாந்து பங்களாதேஷை வெளியேற்றியது ஆகிய மூன்றும்தான் Upsets. அவுஸ்திரேலியாவின் தோல்வி பற்றி கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனராம் அணி ஸ்பான்சர்களான Victoria Better, Johnnie Runner மற்றும் Wolf Bass. (மூன்றுமே Alcohol Brands). குடித்தார் என்று காரணம் காட்டி Andrew Symonds வெளியேற்றப்பட்டது பற்றி அணிவீரர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கேள்வி. சேவாக் காயம் காரணமாக நாடு திரும்பியது இந்திய அணிக்குப் பேரிழப்பு. தோனிக்கும் சேவாக்குக்கும் பனிப்போர் என்றுவேறு கிளப்பி விட்டிருக்கிறார்கள். Warm Up போட்டிகளிலிருந்தே மாறாத பதினொருவருடன் கலக்கிவரும் தென்னாபிரிக்காவுக்கு இந்த முறை கோப்பை கிடைக்கலாம்.

இத்தாலியின் AC Milan அணியில் ஆடிவந்த Kaka' ஸ்பெயினின் Real Madrid அணிக்கு 56 மில்லியன் யூரோவுக்கும், இங்கிலாந்தில் Manchester United அணியில் ஆடிவந்த Christiano Ronaldo அதே Real Madrid அணிக்கு சாதனைத் தொகையான 80 மில்லியன் யூரோவுக்கும் விற்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வீரர்களின் விற்பனை கால்பந்தாட்ட உலகின் தற்போதைய பரபரப்பு.

கொஞ்சம் பொழுதுபோக்கு
ஒருவழியாக ‘பசங்க' DVD Rip (Superb Quality) கிடைத்தது. பார்த்தேன். விமர்சனங்களில் சொன்னது போல் ஜாலியான படம். வாண்டுங்களாகட்டும், விமல்-வேகா ஜோடியாகட்டும், மற்ற எல்லப் பாத்திரங்களாகட்டும் நன்றாக காட்டப்பட்டிருந்தன. ‘ஒரு வெட்கம் வருதே' மற்றும் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அன்பாலே அழகாகும் வீடு' பாடல்கள் கவர்ந்தன. ‘எப்புடி?' 'கொன்னு கொன்னு கொன்னுடுவேன்?' போன்ற வசனங்களால் வசீகரிக்கும் அந்தக் குட்டிப் பயலை எனக்கு ரொம்பவே பிடித்தது. இயக்குனரிடம் ஒரு கேள்வி: தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்கள் மேல் என்ன கோபம் சார். இப்படிக் கடிச்சிருக்கீங்களே. ஆனா அவங்களுக்கு இப்பிடி யாராவது கடிக்கணும். இல்லாட்டா எங்களுக்கு ஒரே ‘பொல்லாத' 'ரோதனை'!!! தமிழ் சினிமாவின் எதிர்காலம் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதையில்தான் இருக்கிறது.

Thursday 11 June 2009

தமிழனென்று சொல்லடா -3: ஈரோடு வெங்கட ராமசாமி (பெரியார்)


பதிவுக்குள் செல்ல முன்பு: தமிழனென்று சொல்லடா தொகுப்பின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே அழுத்தவும்.
தமிழர்களின் வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சம்பவங்கள் பற்றிய எளியேனின் தொகுப்பு.

1925ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் பெரியார் சுயமரியாதைக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். ‘குடியரசு' பத்திரிகை மூலமும், ஆங்கிலப் பத்திரிகையான 'Revolt' மூலமும் உணர்ச்சியற்று ஜடங்களாய் வாழ்ந்த தமிழர்களுக்கு உணர்வூட்டப் போராடினார் பெரியார். 1929ல் உலகளாவிய ரீதியில் நிலவிய பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில், உலகளாவிய ரீதியில் அரசியல் சிந்தனையாளர்களிடம் உலகளாவிய கம்யூனிசத்துக்கு ஆதரவான் போக்கு தென்பட்டது. இந்தப் போக்கின் தாக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. சுயமரியாதை இயக்கக் கோட்பாடுகளில் இடதுசாரிப் போக்கு மிகையாக இருந்தது. அதே சமயம் இயக்கத்தை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையும் பெரியாருக்கு இருந்தது. அதன் பொருட்டு பெரியார் உலக அரசியலை உற்று நோக்க ஆரம்பித்தார்.

உலக அரசியல் எப்படியெல்லாம் இயங்குகிறது என அறிய விரும்பிய பெரியார் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். அவர் முதலில் 1929 ல் மலேஷியா சென்று, அங்கே இருந்த தமிழர்கள் மத்தியில் சுயமரியாதை இயக்கம் பற்றி பிரசாரம் மேற்கொண்டார். அதன் பின் சிங்கப்பூர், ஜேர்மனி, எகிப்து, கிரேக்கம், ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், துருக்கி, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கேயிருந்த சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை எல்லாம் அறிந்து இந்தியா திரும்பினார். அவருடைய இந்த வெளிநாட்டு விஜயங்கள் தான் சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் வடிவம் பெற ஏதுவாயின. குறிப்பாக ருஷ்யாவில் அன்று நிலவிய கம்யூனிசக் கொள்கைகள் பெரியாரைப் பெரிதும் கவர்ந்தன. ஆனால் எல்லா நிறுவனங்களையுமே பொதுவுடமையாக்குவது என்ற கோட்பாட்டை மட்டும் அவரால் ஏற்றுக்கொள்ள கடினாமாயிருந்தது. தீவிர கம்யூனிஸ்டான சிங்காரவேலு செட்டியார் என்பவருடன் சேர்ந்து, சுயமரியாதைக் கொள்கைகளையும், சோஷலிசக் கொள்கைகளையும் கலந்து பெரியார் உருவாக்கிய கொள்கைகள் தான் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒரு அரசியல் இயக்கமாக வேரூன்ற முக்கிய காரணமானது.

பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தை ஒரு கழகமாகப் பதிவு செய்தபோது பின்வரும் விடயங்களை இயக்கத்தின் கொள்கைகளாகக் கூறினார். அவற்றில் வருமாறு:
 • அரசியல் பற்றிய அறிவும் தகவல்களும் யாவர்க்கும் கிடைக்க வேண்டும்.
 • தேவையில்லாத சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் அழிக்கப்பட வேண்டும்.
 • பிறக்கும் குல அடிப்படையில் தொழில் செய்யும் முறை (வண்ணான் பிள்ளை வண்ணான்), சாதி, மதம், தீண்டாமை ஆகிய மனுசாத்திர அடிப்படையில் சமூகத்தில் காணப்படும் சமரசமின்மை களையப்பட வேண்டும்.
 • காரணமின்றி சமூகத்தில் நிலவும் ஆண்டான் - அடிமை முறை இல்லாமல் செய்யப்பட வேண்டும்.
 • தீண்டாமை இல்லாதொழிக்கப் பட்டு, சமூகத்தில் யாவரும் சமமாக வாழ வழி செய்ய வேண்டும்.
 • பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.
 • பால்ய விவாகங்கள் தடுக்கப் படவேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் சார்பான திருமணச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். காதல் திருமணங்கள், கலப்புத்திருமணங்கள், விதவை மறுமணம் யாவற்றுக்கும் சமூக அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும். இம்மணங்கள் சட்டரீதியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
 • அனாதைகளுக்கும், விதவைகளுக்கும் கல்வி நிலையங்கள் அமைத்து வாழ்வாதாரங்கள் வழங்க வேண்டும்.
பெரியாரின் அரசியல் வாழ்வில் அடுத்த கட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். ராஜாஜி என்கிற சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அன்றைய மதராஸின் முதல்வரான போது பாடசாலைகளில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வந்தார். இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் சலசலப்பைக் கிளப்பியது. ஜஸ்டிஸ் கட்சித்தலைவர் பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து ‘தமிழ் நாடு தமிழர்களுக்கே' என்ற கோஷத்தை முன்வைத்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தினார் பெரியார். இந்தி ஆரியர்களால் திராவிட கலாசாரத்தை அளிக்க ஏவப்பட்ட ஆயுதம் என்று கருதினார் பெரியார். கட்டாய இந்திக்கல்வி தமிழர்கள் பன்னெடுங்காலம் போற்றிப் பாராட்டிய கலாசார விழுமியங்களை இல்லாதழித்துவிடும் என்று திடமாக நம்பினார் பெரியார். மேலும், ஏற்கனவே இளக்காரமாகப் பார்க்கப்படும் தென்னகத்தார் மேலும் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பது அவரது வாதமாயிருந்தது. அதனால் பெரியார் மும்முரமாக இந்தி எதிர்ப்பை முன்னெடுக்க கட்சி பேதமின்றி பல தமிழ் ஆர்வலர்களும் அவருடன் இணைந்து பணியாற்றினர். பொறுக்க முடியாத ராஜாஜி அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பலரைக் கைது செய்து இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் வீரியத்தைக் குறைத்தது. இந்த முதல் போராட்டம்தான் 1948, 1952, 1965 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கெல்லாம் மூலம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெரியாரோடு சேர்ந்து ஈடுபட்ட ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராய் பெரியார் சில காலம் பதவி வகித்தார். பிராமணரல்லாத மக்களுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத்தரவென ஆரம்பிக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிகிற தறுவாயில் சற்றே பலமிழக்க ஆரம்பித்திருந்தது. சாதாரண மக்களிடம் பெரியளவு ஆதரவு இல்லாததுதான் அதற்குரிய காரணமாயிருந்தது. இதனால் 1939ல் இந்தி எதிர்ப்புக்காக சிறை சென்று வந்தபின் ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமைத்துவத்தில் கட்சி உருப்பட்ட போதும், சில படித்த ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினர்கள் அவரது தலைமையை பெருமளவில் ஆதரிக்க மறுத்தார்கள். ஜஸ்டிஸ் கட்சி பிளவுபட்டும் போனது. அது 1944ல் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றுவதாகப் பெரியார் அறிவித்தபோது நிகழ்ந்தது. அதுபற்றி அடுத்த ‘தமிழனென்று சொல்லடா...' பதிவில் பார்ப்போமா?

தமிழனென்று சொல்லடா-4