Thursday, 22 October 2009

நினைத்தாலே இனிக்கும் ஈரம்

கொஞ்சம் காலம் தாழ்த்தித்தான் பதிவிடுகிறேன். இந்த இரு படங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்பதாக என்னுடைய முன்னைய பதிவென்றில் சொல்லியிருந்தேன். என்ன, வேறு பதிவுகள் போடுவது, ஆணி புடுங்கல்கள் எல்லாவற்றுக்கும் நடுவே மறந்து போய்விட்டேன். இன்றைக்கு தற்செயலாக ஈரம் படத்தின் பாடல் ஒன்றைக்கேட்டபோது (சாரல் ஏன் அடியே என் ஜன்னல் உடைக்கிறது) 'அட இதை மறந்திட்டனே' என்று தோன்றியது. விமர்சனமாக இல்லாமல் படங்கள் இரண்டும் மனதில் என்ன பாதிப்பை ஏற்படுத்தின என்று சொல்லிப்போகலாம் என்று நினைக்கிறேன்.

ஈரம்
இப்படியான கதைகளில் லொஜிக் எல்லாம் பார்ப்பதில்லை நான். சில்லென்று முதுகுவடம் குளிர்ந்தால் போதும். பெரும்பாலும் தமிழில் வந்த இப்படியான அமானுஷ்யம் கலந்த கதைகளில் அப்படி முதுகுவடம் குளிர்வதில்லை. ஆனால் சமீபகாலத்தில் இரண்டு படங்கள் அப்படிக் குளிரவைத்தன. ஒன்று ‘சிவி'. அமெச்சூர்த்தனமான காட்சியமைப்புகளுடன் கூடிய அந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் உடம்பு உதறும். அதே போல் இந்தப்படத்தின் இடைவேளைக்கு முந்திய அந்த தியேட்டர் கழிவறைக்காட்சியைச் சொல்லலாம். என்ன, இடைவேளையிலேயே அந்த உச்ச உணர்ச்சியைத் தந்தவர்கள் அதற்குப் பின்னால் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார்கள். இருந்தும் பார்க்கக்கூடிய படம்.

படத்தின் பலங்களாகச் சொல்லக்கூடியது இசை மற்றும் ஒளிப்பதிவு. அதுவும் இரண்டாவது படத்திலேயே montage ஆக வரும் பாடல்களும், அதிரடிப் பின்னணி இசையுமாக அசத்தியிருக்கிறார் ‘கிருஷ்ணா' தமன். அவரது ‘சிந்தனை செய்' கூட எனக்குப் பிடித்திருந்தது. என்ன 'போய்ஸ்' படத்தில் மல்கோவா ஆண்ட்டி கதை எழுதும் அவரது முகம்தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. அதே போல் ‘ஈரம்' பெயருக்கேற்றபடி ஒவ்வொரு ஃப்ரேமிலும் இருந்த ஈரமும் கவர்ந்தது. ஆதி-சிந்து மேனன் காதல் காட்சிகள் கொள்ளை அழகு. பலவீனம் என்றால் பின்பாதியைச் சொல்லலாம். காரணம், கிட்டத்தட்ட படத்தின் மர்ம முடிச்சு இடைவேளையிலேயே அவிழ்வது காரணமாய் இருக்கலாம்.

ஆதியை மிகவும் பிடித்திருந்தது. சராசரிக்குக் கொஞ்சம் மேலான உயரம்கொண்ட கம்பீரமான இளைஞனைக் கண்முன் நிறுத்தினார். என்ன, பிரசன்னா, நந்தா வரிசையில் இவரும் நிச்சயம் வீணடிக்கப்படுவார் என்பது என்னுடைய நம்பிக்கை. தலைமுடிக்கு செம்பட்டைச்சாயம் பூசி, உடம்பில் tatoo குத்தி, தலைமுடியை வெட்டி, கிழிந்த ஆடைகளைப் போட்டு கதாநாயகியைச் சித்தரிக்காமல், பக்கத்துவீட்டு மின்னல்மாதிரி அழகாகச் சித்தரித்திருந்தார்கள். பின்பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அற்புதமாக வந்திருக்கும். அந்த முதுகுத்தண்டு குளிர்வதைப் பற்றிச் சொன்னேனே, Sixth Sense பார்த்தபின் அந்த உணர்வு மணிக்கணக்கில் தங்கி நின்றது.

நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் பார்த்த பின்னர் Class Mates பார்ப்பது என்று கடுமையாக விரதமெல்லாம் இருந்தேன். காரணம் A Wednesday முதலில் பார்த்ததால் இன்னும் உன்னைப் போல் ஒருவனைப் பார்க்கவில்லை. நினைத்தாலே இனிக்கும் பார்த்த போது பிடிக்கவில்லை. ஏதோ ஒருவகையில் படத்தில் செயற்கைத்தனம் நிறைய இருந்தது போல் இருந்தது. முக்கியமாக அந்த தேர்தல் வரும் காட்சிகள் படத்தோடு ஒட்டவேயில்லை. பிறகு மலையாள Class Mates பார்த்தபின்னர் எங்கே தவறியிருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு விளங்கிக்கொள்ளக்கூடியதாய் இருந்தது.

மலையாளத்தில் ஒன்றும் பெரிதாக அவர்கள் சாதித்து விடவில்லை. ஆனால் அந்தத் தேர்தல் சம்பந்தமான காட்சிகள் அற்புதமாகப் பொருந்திப் போயின. அந்த ‘எண்ட கல்பிலே' என்று ஆரம்பிக்கும் பாடலுக்கு நிகராய் ஒரு பாடல் தமிழில் விஜய் அன்ரனி போடவில்லை. கன்னத்தில் குழி விழ சிரித்தபடி திரியும் நரேனுக்கும், சக்திக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. மலையாளத்தில் படம் முழுக்க இருந்த இயல்பான நகைச்சுவை தமிழில் இல்லை. உதாரணத்துக்கு காவ்யா மாதவனின் நடனத்தைக் குழப்ப ‘வந்தேண்டா பால்காரன்' பாட்டைப் போட்டு ப்ருத்விராஜ் ஆடும் ஆட்டம். காதல் காட்சிகள் தமிழில் வெறுமை. அதுவும் ப்ருத்வியின் காதல் முறையே காவ்யாவிடமும், பிரியாமணியிடமும் வெளிவரும் காட்சிகள். முதலாவது வாவ்... இரண்டாவது உவ்வேக்.

தமிழில் படம் எடுக்கும்போது எங்கே தவறுகிறார்கள் என்பதற்கு உதாரணம்:
தமிழில் சக்தி சாகும் அந்த இரவில், ப்ருத்விராஜ் மின்சாரக்கம்பிக்கு சைக்கிள் செயின் எறிந்துதான் மின்சாரத்தைத் துண்டிப்பார். அதற்கான சைக்கிள் செயினை எங்கிருந்து எடுப்பார் என்று பார்த்தீர்களா? அவருக்காகவே அவர் ஒளிகிற இடத்தில் ஒரு சைக்கிளை யாரோ விட்டுவிட்டுப் போயிருக்க இவர் அந்தச் சைக்கிளில் இருந்து செயினை எடுத்து எறிவாராம். மலையாளத்தில் அப்படியில்லை. ப்ருத்விராஜ் அந்தச் செயினோடு அலைவார். ஒரு கட்டத்தில் ஜெய்சூர்யாவை அடிக்கும்போதுகூட அதைப் பயன்படுத்துவார். ஒரு குத்துப்பாட்டுக்கு இடம் யோசிக்கும் நேரத்தில் அப்படி அவர் செயினோடு அலைவதைக்காட்ட ஒரு சீன் யோசித்திருக்கலாம்.

மொத்தத்தில் ஈரம், பெரிதாகக் கதை இல்லாமல் நல்லமுறையில் தரப்பட்ட படைப்பு. நினைத்தாலே இனிக்கும் நல்ல கதை இருந்து, நல்ல நடிகர்கள் கிடைத்தும், கேவலமாய் தரப்பட்ட படைப்பு.

10 comments:

sanjeevan said...

நினைத்தாலே இனிக்கும்,ஈரம் இரண்டுமே பார்க்கவில்லை. எங்கே high quality யில் download செய்யலாம்.யாராவது தெரிந்தால் link அனுப்புங்களேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

ஈரம் பார்க்கவில்லை. நி.இ. பார்த்தேன் ரொம்ப செயற்கையாக இருந்தது.

Unknown said...

சஞ்சீ... http://sabtamilmovies.blogspot.com/
www.lazydesis.com
www.tecsatish.net
என்று கன இடத்தில எடுக்கலாம். கூகிளாண்டவரிட்ட eeram dvd rip என்று கேட்டாலே போதும்

உண்மைதான் யோகா... வெறுப்படித்தார்கள்

Subankan said...

இன்னும் இரண்டுமே பார்க்கவில்லை. ஈரம் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கிறது.

நாஸியா said...

உண்மை தான்.. எண்டே கல்பிலே எனக்கு மிகவும் விருப்பமான பாடல்.. கல்ப் என்றால் அரபியில் இதயம் என்று பொருள்.. எனக்கு ட்ரைலரை பார்த்தவுடனே தெரிந்து விட்டது, தமிழில் மொக்கையாக இருக்குமென்று..

ஈரம் எனக்கும் பிடித்திருந்தது..

Unknown said...

சுபாங்கன்..
ஈரம் பாருங்கள்... நினைத்தாலே இனிக்கும் பார்ப்பதற்கு மலையாள class mates பாருங்கள்

Unknown said...

///கல்ப் என்றால் அரபியில் இதயம் என்று பொருள்///

நாஸியா.. தகவலுக்கு நன்றி.. அழகான பாட்டு அது.

sanjeevan said...

thanks kiruththi

மாதேவி said...

இரண்டும் பார்த்து விட்டேன்.

உங்கள் கருத்துப்போல ஈரம் விறுவிறுப்பாய் ஓடுகிறது.

"பலவீனம் என்றால் பின்பாதியைச் சொல்லலாம். காரணம், கிட்டத்தட்ட படத்தின் மர்ம முடிச்சு இடைவேளையிலேயே அவிழ்வது"

கார்த்தி said...

ஈரம்=தரம்