Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Saturday, 10 October 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-7

முன்னைய எல்லாப் பாகங்களையும் இங்கே சென்று படியுங்கள்.

சிவா பிள்ளை போன்றவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, ‘உவர் காசுக்குத்தான் உதெல்லாம் செய்யிறார். சும்மா நேரத்தை வீணடிக்கோணும்' 'உதெல்லாம் சும்மா பேக்காட்டு வேலை' ‘உவர் சொல்லி நான் ஏன் கேக்கோணும்' என்பது மாதிரியான வசவுகள். அதுவும் பணம் சம்பந்தமாக இப்படியானவர்கள் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆபாசமானவை. உண்மையில் இப்படியான பட்டறைகள் நடத்துபவர்களுக்கு இங்கே கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் தொகை தலைசுற்ற வைப்பது. உதாரணமும் ஒன்று சொல்ல முடியும்.

எனக்குப் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் சிறு தொழில் தொடங்குபவர்களுக்கான பட்டறைகளை நடத்துபவர். அவரது இரண்டு மணிநேரப் பட்டறைக்கு, அனுமதிக் கட்டணம் மட்டும் 30-40 டொலர்கள். அதுவே அவர் ஒரு நிறுவனத்துக்காக இந்தப் பட்டறையைச் செய்கிறார் என்றால், அவருக்கு அந்த நிறுவனம் 175-250 டொலர்கள் அளிக்கவேண்டும் (அவர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பற்றிய விபரங்கள் இல்லை என்றாலும் அவருடைய வலைத்தளம் உங்கள் பார்வைக்கு இதோ). இப்படியான ஒரு நாட்டில் யாரோ ஒரு உறவினரின் திருமண வீட்டுக்கு வந்த சிவா பிள்ளை எங்களுக்காக மூன்று மணித்தியாலங்களை ஒதுக்கினார். இப்படியானவர்களுக்கு என்னுடைய பார்வையில் எவ்வளவும் கொடுக்கலாம், சன்மானமாக. ஆனால், அவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. (இல்லாவிட்டால் சொந்த அலுவலாக வந்த மனிதருக்குப் பட்டறை நடத்தும் அவசியம் எதற்கு?).

அடுத்ததாக எம்மவரிடம் உள்ள இன்னொரு குணம், ஆராய்ந்து அனுபவித்துப் பார்க்காமல் ஒன்றைப் பற்றி முடிவெடுப்பது. அன்றைய பட்டறைக்கு வராத சில ‘பிரபல' ஆசிரியர்களின் கேள்வி ‘அப்படி என்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறார் இவர்?' என்பதேயாகும். என்னுடைய கேள்வியும் அதேதான், சங்கீதக் கச்சேரிகளிலும், பரத நாட்டிய அரங்கேற்றங்களிலும், கனடா தின வாண வேடிக்கைகளிலும், சாமத்திய வீடுகளிலும், சினிமாப் படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களிலும் அப்படி என்னத்தைப் புதிதாக நீங்கள் சொல்லிவிட்டீர்கள்? மேற் சொன்ன வழிகளில் மூன்று மணிநேரத்தைச் செலவிடுவதைவிட இது எத்தனையோ மேல்.

அதுவும் என்னை மிகக் கோபப் படுத்துவது இதுதான். எனக்கும் இசைக் கச்சேரிகளுக்கும் வெகுதூரம். கடைசி வரிசையில் சந்தோசமாக நித்திரை கொள்வேன் இல்லையென்றால் ரசிக சிகாமணிகளின் அபத்தங்களை ரசிப்பேன். ஒரு முறை இப்படித்தான் ராஜேஷ் வைத்யாவின் கச்சேரியில் அவர் வாசித்த கீர்த்தனங்களில் அசந்தர்ப்பமாக எங்கள் ரசிக சிகாமணிகள் கைதட்டித் தொலைக்க கடுப்பான ராஜேஷ் வைத்யா கழிவறை போகிற சாக்கில் இவர்களைத் திட்டியதைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்து கர்னாடக இசை வளர்க்கும் எங்கள் சமூகம் என்றைக்கும் பிரயோசனமான எந்த நிகழ்வுக்கும், பட்டறைக்கும் ஆதரவு தருவதேயில்லை. சமீபத்தில் நடந்த தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்குக்கும் இதே நிலைதான்.

அதே போல் சிவா பிள்ளை அவர்களின் கருத்தரங்கிலேயே முன் வைக்கப்பட்ட ஒரு நேரடியான குற்றச்சாட்டு, சில இடங்களில் நீங்கள் இந்தியத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாக. அந்தக் குற்றச்சாட்டின் அடிநாதமாக இருந்தது ‘தூய தமிழ்' என்ற வறட்டுக் கூச்சல். அந்தக் கூச்சல் போடுபவர்கள் ‘கதிரை' என்ற சொல்லையும் அவர்களால் குற்றம் சாட்டப்படுகிறவர்கள் ‘நாற்காலி' என்ற சொல்லையும் பயன்படுத்துவது வேடிக்கை. இந்தியத் தமிழர்களுக்கு அப்துல் ஹமீது உதவியுடன் தெனாலியில் பேசப்பட்ட தமிழ்தான் இலங்கைத் தமிழ், அதுதான் சுத்தத் தமிழ் என்ற மாயையும், இலங்கைத் தமிழர்களுக்கு ‘லூஸ் மோகனால்' பிரபலப்படுத்தப்பட்ட ‘இன்னா நைனா'வும், இன்றைக்கு எல்லாப் படங்களிலும் பேசப்படும் ‘அவிய்ங்க' ‘என்னவே' போன்ற தமிழ் இந்தியத் தமிழ் என்ற மாயையும் நன்றாகப் புகட்டப்பட்டு இருக்கிறது. இருவருமே தூய தமிழ் பேசுவதில்லை, எழுதுவதில்லை எனபதே கசப்பான உண்மை. (தூய தமிழ்ச் சொற்களாகக் கருதப்பட்ட பல சொற்கள் மலையாளத்தில் வாழ்வதாக எங்கோ கேள்விப்பட்டேன், எங்கென்று மறந்துவிட்டேன்).

இவ்வாறாக, என் தமிழ் சரி உன் தமிழ் பிழை என்ற வாதத்திலும், தமிழை வளர்க்க யாருக்கு உரிமை இருக்கிறது என்ற வாதத்திலும் தமிழ் மோசமாகக் கொல்லப்படுகிறது. வேற்று மொழி மோகம் தமிழைக் கொல்கிறது என்கிற குற்றச் சாட்டைவிட, தமிழ் மொழிக்கு ஏக போக உரிமை கொண்டாடுபவர்களால் தமிழ் இன்னும் வேகமாகச் செத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டியிருக்கிறது.

அதே போல், தொழில்நுட்ப விஷயங்களை இளைஞர்களிடம் கற்றுக் கொள்ளப் பெரியவர்கள் தயங்குகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள். இதுவே அனுபவமும், வயதும் முதிர்ந்த ஒருவர் கற்றுக் கொடுக்க வந்தால் அதற்கும் ‘உவர் பழம் ஆள்.. உவரிட்ட புதுசா ரெக்னோலொஜி பற்றி என்ன இருக்கும். ஆரும் இளம் பொடியள் எண்டாலும் பரவாயில்லை' என்கிறார்கள். இவர்களின் பிரச்சினை கற்றுக் கொடுப்பவரில்லை, இவர்களிடம் குடிகொண்டிருக்கும் ஈ.கோ. எல்லாப் பெரியவர்களையும் சொல்லவில்லை. தொழில்நுட்ப விஷயங்களைத் தொலைபேசியில் அழைத்தோ, வேறு விதமாகவே கற்றுக்கொள்வதில் தீராத காதல் கொண்ட சிலர் இருக்கிறார்கள். ஆனால் பலர் ஒரு நிலைக்கு மேல் கற்றுக் கொள்வதற்குத் தயங்குகிறார்கள். இதனால் தாங்கள் பின்தங்கிப் போவது அவர்களுக்கு ஏனோ உறைப்பதில்லை.

நம்மவர்கள் மீதொரு குற்றச்சாட்டு இருக்கிறது என்றேனே, அதைச் சொல்கிறேன். இப்படித்தான் இந்தியாவில் ஒரு கற்பித்தல் பற்றிய கருத்தரங்கு நடந்த போது, இலங்கையில் இருந்து கொஞ்ச ஆசிரியர்களைக் கல்வித் திணைக்களம் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் காசு செலவளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்களாம். அங்கே போன அவர்கள் கருத்தரங்கு நடந்த நாட்களில் காலையில் அல்லது போய் கருத்தரங்கில் வழங்கப்பட்ட தகவல்கள் உள்ளடக்கிய பிரசுரங்களை மட்டும் வாங்கிக் கொள்வார்களாம். மற்ற நேரங்களில் ஊர் சுற்றுவதும், கொள்வனவு செய்வதுமாய் அலைந்தார்களாம். தமிழைக் கொலை செய்வதில் முன்னுக்கு நிற்பதாய்ச் சொல்லப்படும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் கருத்தரங்கு முழுவதும் பொறுமையாக இருந்தது மட்டுமன்றி, பல சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்தார்களாம். இவர்களை என்னென்று சொல்வது?

சிவா பிள்ளை போன்ற சிலரின் முயற்சிகளுக்கு நாங்கள் தோள் கொடுக்க வேண்டும், ஆதரவளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், அவர்கள் பற்றிய தூற்றலைத் தவிர்க்கவேண்டும். நான் எப்போதும் சொல்வது போலவே, நாங்கள் எப்போதுமே நடுநிலைத் திறனாய்வு செய்வதில் (Criticising) பின்னுக்கும் தூற்றுதலில் (Bashing) முன்னுக்கும் நிற்பவர்கள். ஆகையால்தான் எல்லா விஷயத்திலும், திறமையும், உழைப்பும் இருந்தும் பின்னுக்கு நிற்கிறோம். எங்கோ ஒரு ஒலிப்பதிவில் சோமிதரன் சொன்னமாதிரி நாங்கள் சைக்கிள் போல்ஸ்சுக்கு தமிழ் கண்டுபிடிக்கும் காலத்தில் சைக்கிள் போல்ஸ் பாவனையில் இல்லாமலிருக்கும். எங்களவர்களை நாங்களே பிடித்து கீழே இழுக்கும் மடமைத்தனம்தான் சோமியை எரிச்சலுக்குள்ளாக்கி இவ்வாறு பேசத் தூண்டியதோ தெரியாது, ஆனால் அவரது கருத்தோடு எழுத்துக்கு எழுத்து (குற்றுகள், விசிறிகள் உட்பட) உடன்படுகிறேன்.

சிவா பிள்ளை போன்றவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக நாங்கள் செய்யக்கூடியத உதவி, அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்தி, அயராத அவர்களின் உழைப்புக்குரிய பலனை அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு அறுவடை செய்து காட்டுவது மட்டுமே. அதுதான் அவர்களுக்கும் வேண்டும், எங்களுக்கும், எங்கள் சந்ததிக்கும் வேண்டும். இதுவரை காலமும் என்னுடைய இந்தத் தொடர் பதிவை வாசித்து வந்த நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இவ்வளவுதான். என்னுடைய பதிவுகளையோ, வலை மனையையோ நீங்கள் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டாம். சிவா பிள்ளையை அறிமுகப்படுத்துங்கள். என்னை நீங்கள் சிவா பிள்ளையின் சம்பளமில்லாத மக்கள் தொடர்புப் பணியாளனாகக் கற்பனை பண்ணிக்கொண்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல மனிதரின் முயற்சிக்கு என்னாலான சின்ன உதவி இது. அவ்வளவுதான்.

Siva Pillai
Dept of Educational Studies
Goldsmiths College, University of London
Newcross, London SE14 6NW
http://homepages.gold.ac.uk/siva
sivapillai@hotmail.com
Tel: +44 (0) 20 7919 7316
Fax: +44 (0) 20 7919 7313
MOB: 07951 476 706

**முற்றும்**

Thursday, 8 October 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-6

முன்னைய எல்லாப் பாகங்களையும் இங்கே சென்று படியுங்கள்.

சென்ற பாகத்தில் சொன்னது போலவே, தமிழ் எழுத மாணவனுக்குப் பயிற்ற, சிவா பிள்ளை பல்வேறு வழிமுறைகளைச் சொல்கிறார். உதாரணமாக, கரும் பலகையில் அல்லது வெண் பலகையில் ஆசிரியர் ‘அ' எழுதும் போது, அவருக்கு வளமான பக்கத்தில் நின்று எழுதுவார். அந்தப் பக்கத்தில் இருக்கும் மாணவனுக்கு சில வேளை அந்த எழுத்தை அவர் எங்கே தொடங்கி, எங்கே முடிக்கிறார் என்று தெரியாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்குக் கூட நான் எழுதும் சில ஆங்கில எழுத்துக்களை, சில எண்களை பிழையாகத் தொடங்கிப் பிழையாக முடிக்கிறேன். உருவம் கிட்டத்தட்ட ஒத்திருப்பதால் தப்பிக்கிறேன். அதுவும் வெளிநாடுகளில் நாங்கள் ஒரு இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்பிக்கும் சூழ்நிலையில், எழுத்துருக்கள் சரியாக அறிமுகம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் பெரிதாக இருக்கிறது.

இதற்கு சிவா பிள்ளையவர்கள் முன்வைக்கும் தீர்வுகளில் இரண்டை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று, பல்லூடகச் சாதனங்களைப் பயன்படுத்தி எழுத்துருவை அறிமுகம் செய்வது. உதாரணமாக, ‘அ' என்ற எழுத்தை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை, பல்லூடகச் சாதனங்கள் மூலம் நிகழ்த்திக் காட்டலாம். சிவா பிள்ளையவர்கள் PowerPoint அளிக்கையில் அதையும் உள்ளடக்கி நிகழ்த்திக் காட்டினார். அந்த அசைவூட்டம் என்ன மென் பொருள் மூலம் உருவாக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனாலும், மாணவர்களைக் கவரும் முறையில் அந்த அசைவூட்டம் இருந்தது. (எனக்குத் தெரிந்த மென் பொருள்களில், flash மூலம் அதை ஒரு நிமிடத்தில் செய்ய முடியும். அதைவிட மேம்பட்ட மென்பொருள்கள் இருக்கிறனவா இல்லையா என்று எனக்குத் தெரியாது).

இது போன்ற பாடத்திட்டங்கள் வேணுமானால் தமிழம் இணையத்தளத்தில் பொள்ளாச்சி நேசன்- சிவா பிள்ளை ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான (இப்போது பொள்ளாச்சி நேசன் வசமே முழுப் பொறுப்பும் இருப்பதாகக் கேள்வி) இலவச பல்லூடகப் பாடம் ஒன்று இருக்கிறது. ஒரு உதாரணத்துக்காகப் பார்க்கலாம்.

இல்லை இப்படி அசைவூட்டம் மூலம் நிகழ்த்திக் காட்டுவது கடினம் என நினைத்தால், அதற்கும் சிவா பிள்ளை வழி சொல்கிறார். இது தொட்டுணர்தல் மூலம் சொல்லிக் கொடுக்கும் வழி. அதாவது, பிரத்தியேகமான இரப்பர் மூலம் தமிழ் எழுத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார். பிள்ளையை ஒரு எழுத்தைத் தொட்டு உணர்ந்து, அதன் உருவத்தை வைத்து அந்த எழுத்தை இனங்காண வைப்பதன் மூலமும் தமிழ் எழுத்துருக்களை அறிமுகம் செய்யலாம் என்பது அவர் சொன்ன வழிகளில் இன்னொன்று. அதே போல், ஒரு எழுத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, அந்த எழுத்தைக் கொண்ட சில சொற்களைத் திரும்பத் திரும்ப மாணவர்களை உச்சரிக்க வைப்பதும் பலன் தரும் என்கிறார் சிவா பிள்ளை அவர்கள். பின்னர் சொற்களை அறிமுகம் செய்யும்போது, அச்சொற்கள் பயன்படும் சிறு சிறு வசனங்களை வாசிக்க வைக்கலாம்.

பிள்ளைகளிடம் தமிழ் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு அவர் சொன்ன இன்னொரு வழியை சிலர் சர்ச்சைக்குரியதாகக் கூடப் பார்த்தார்கள். அதாவது சினிமாவை தமிழ் கற்பித்தலில் ஒரு கருவியாக எடுத்துக் கொள்ளலாம என்கிறார். உண்மைதான், நாங்கள் என்னதான் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனைகள் போல் நடந்து கொண்டாலும், சினிமா எங்கள் அன்றாட வாழ்க்கையில் ஊறிவிட்டதுதான். ஆகையால் சினிமாவையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது தவறில்லை என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருத்தே.

ஆனால், சினிமாவைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. சிவா பிள்ளை அவர்கள் சில பிரபலமான அந்தக் காலத்து சினிமாப் பாடல்களை இசைக்கேற்ப சொற்களை மாற்றி சில காணொளிகள் தயாரித்திருந்தார். உதாரணமாக, கீழே உள்ள பாடலைப் பாருங்கள். தில்லானா மோகனாம்பாள் படப்பாடலை எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்று. (இதே போல் ‘மலர்ந்தும் மலராத' பாடலையும் மாற்றியிருக்கிறார். காணொளி கிடைக்கவில்லை)



ஆனால் இங்கேதான் ஒரு சிக்கல் இருக்கிறது. இங்கே சிவா பிள்ளை அவர்கள் தேர்ந்தடுத்த பாடலும், பாடலுக்கான காணொளியும் சிறப்பாகவே இருக்கின்றன. சிக்கல் என்னவென்றால், என்னுடைய அக்காவின் மகன் இதில் வரும் சிவாஜி- பத்மினி ஆகியோரின் முகபாவனைகளைப் பார்த்தால் சிரிக்கிறான். என்னுடைய ரசனையைக் கிண்டலடிக்கிறான். இந்த ரசனை வேறுபாடு சிலவேளை பிள்ளைகளை ஈர்க்காமல் போகலாம். (எல்லாப் பிள்ளையும் கிண்டலடிக்கும், எல்லாப் பிள்ளைக்கும் ஈர்ப்பு வராது என்று சொல்லமுடியாது).

இன்றைக்கு வருகிற பாடல்களை இவ்வாறு மாற்றலாம் என்றால் குழந்தைகளுக்குப் பாடல் எடுக்கிறோம் என்று சில குப்பைகளை எடுக்கிறார்கள் (உ+ம்: மியாவ் மியாவ் பூனை). நேர்த்தியான, பெரும்பாலான குழந்தைகளின் ரசனைக்கும் பொருந்தக்கூடிய சினிமாப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் ஆசிரியர்கள் சினிமாவைக் கருவியாக்குவதில் இருக்கக்கூடிய பிரதானமான சிக்கல். பட்டறையில் கலந்து கொண்ட வயதானவர் ஒருவர் 'சரஸ்வதி சபதம்' படத்தில் சிவாஜி 'அம்மா' 'அப்பா' உச்சரிப்பதான காட்சியை சிவா பிள்ளை அவர்கள் போட்டுக் காட்டியபோது அடித்த ஒரு விமர்சனம் ‘சிவாஜி தமிழ் உச்சரிக்கிற மாதிரி ஆரய்யா இண்டைக்கு உச்சரிக்கிறாங்கள்' என்று. காணொளியைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யலாம்.



இவ்வாறாகப் பல நல்ல கருத்துக்களை முன்வைத்த சிவா பிள்ளை அவர்களின் பட்டறையின் வெற்றி, இறுதியாக நடந்த கலந்துரையாடலகளில் தெரிந்தது. பெரும்பாலானவர்கள் இது ஒரு மிகவும் பயனுள்ள பட்டறை என்று உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினார்கள். கிட்டத்தட்ட பட்டறையில் இருந்த எல்லோருமே அவரைத் தனியாகச் சந்தித்து நன்றி கூறினார்கள். நன்றியுரை நிகழ்த்திய துறையூரான் அவர்கள், எம்மவர்கள் கேளிக்கைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இப்படியான பட்டறைகளுக்குக் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். சிவா பிள்ளை போன்றவர்களின் முயற்சிகளின் அடிநாதத்தில் இருக்கும் நல்ல நோக்கைப் பாராமல், அவர்களது தமிழ் மொழி வார்த்தைப் பிரயோகம் போன்ற சில உப்புச் சப்பில்லாத விஷயங்களைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பவர்களையும் துறையூரான் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் சாடினார். (அவையில் இருந்த சிலருக்குக் கூட நன்றாகச் சுட்டிருக்கும்)

சிவா பிள்ளை போன்றோர் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. பட்டறை பற்றிய பார்வை இந்தப் பாகத்தோடு முடிந்தாலும் கூட, சிவா பிள்ளை போன்றவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், இவர் போன்றவர்களைக் குறி வைத்து சில வைக்கோற் பட்டடைச் சிங்கங்கள் (அந்தப் பிராணியைச் சொன்னால் பிராணிக்குக் கேவலம்) செய்கிற சில அவதூறுகள், இலங்கை, இந்தியத் தமிழர்கள் என்ற அபத்தமான பிரிவினை மற்றும் எம்மவர்கள் மீதான சில குற்றச்சாட்டுகளையும் ஆகக் குறைந்தது இன்னொரு பதிவில் கலந்துரையாட வேண்டியிருக்கிறது. மீண்டும் சந்திப்போம்

Wednesday, 7 October 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-5

முன்னைய பாகங்களை இங்கே அழுத்திப் படிக்கவும். சற்றே அதிகமாகக் காக்க வைக்கிறேன் என்றாலும், இயலுமான அளவுக்கு நேர்த்தியாகக் கருத்துக்களைப் பகிர வேண்டிய கடப்பாடு இருப்பதால் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சென்ற பாகத்தில் சொன்னது போல, மொழியானது கேட்டல், பேசுதல், வாசித்தல் எழுதுதல் என்ற படி வரிசையில் கற்பிக்கப்பட்டால் மாணவர்களால் இலகுவாக விளங்கிக் கொள்ளப்படும் என்கிறார் சிவா பிள்ளை. இது பற்றி நான் முன்னரே ஒரு முறை சொல்லி இருந்தால் கூட, மீண்டும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. காரணம், இது தொடர்பாக நான் உரையாடிய பலரின் கருத்துக்கள்.

ஒரு குழந்தை தன்னுடைய தாய் மொழியைக் கற்கும் வரிசையில்தான் இந்தக் கற்றல் படிவரிசையும் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தென்பட்ட போதும், பலர் ஏற்க மறுக்கிறார்கள். அது ஏன் என்பது எனக்கும் புரியவில்லை, சில நாட்களுக்கு முன் என்னுடன் தொலைபேசிய சிவா பிள்ளை அவர்களுக்கும் புரியவில்லை. சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ‘அ' என்ற எழுத்தை அடையாளம் காண்பதற்கும், ‘அ' எழுதக் கற்பதற்கும் முன்னரே அம்மா என்ற சொல்லைக் கேட்டும், பேசியும் இருப்பீர்கள். அதன் பின் ஆசிரியரால் உங்களுக்கு ‘அ' என்ற சொல் அடையாளம் காட்டப்படும். அதன் பின்னர் அதை எழுதக் கற்றுக் கொள்வீர்கள். அவ்வாறாக நீங்கள் கற்றுக் கொண்டது போலவே இந்தப் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள் என்பதுதான் சிவா பிள்ளையின் வாதம். இல்லை நாங்கள் பிறந்த உடனேயே ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா' என்று எழுதிய தாதாவா, அப்படியே இருந்துவிட்டுப் போங்கள், எங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வராதீர்கள்.

தமிழ் மொழி கற்பிப்பதற்கு சரியான பாடத்திட்டம் ஒன்று அவசியமாகிறது. அதன் அவசியம் பற்றிச் சிவா பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்;

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டுக் கல்வித் திட்டத்துக்கேற்ப பாட அமைப்புக்கள், திட்டங்கள் உண்டு. சில நாடுகளில் தமிழ் மொழி ஏனைய அந்நாட்டு மொழிகளுடன் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. சில நாடுகளில் பல காலம் இருந்தும் அது குறிப்பிட்ட அளவிலேயே சமூகக் குழுக்களால் கல்வி புகட்டும் பழைய தரத்தில் இருந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் உலகளாவிய ரீதியில் அவரவர் மொழிக்கு மதிப்பும், உயிரும் அந்தந்த நாட்டுக் கல்விச் சபைகள் கொடுத்து வருகின்றன. மேற்கு நாடுகளில் ஏனைய இந்திய மொழிகள் சரிசமமாக ஏனைய ஐரோப்பிய மொழிகள் கற்பிக்கும் தரத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அந்தந்த நாட்டுக் கல்வித் தினக் கழகப் பாடத்திட்ட அமைப்புகளுக்கு ஏற்ப கற்பிக்கும் வழி முறைகளும், அதற்கான தரமான புத்தகங்கள், நவீன சாதனங்கள், அம்மொழிக்கான மென்பொருள்கள் அமைக்கப்பட்டு ஒரே தரத்தில் இருப்பதே ஆகும்.

இங்கிலாந்து நாட்டில் மொழி கற்பித்தலில் ஆறு தரநிலைகள் இருப்பதாகவும், அந்த ஆறு தரநிலைகளின் படி மாணவர்களுக்கான பல்லூடனப் பாடங்களை ஆசிரியர்கள் உருவாக்கலாம் எனவும் சிவா பிள்ளை குறிப்பிடுகிறார். இங்கிலாந்தில் பயன்படும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய படிநிலைகளுக்கான பாடத்திட்டம் வருமாறு. (தமிழ்ப்படுத்திப் போடுமளவுக்கு நான் விற்பன்னன் அல்லன்)

Skill

NC Level

Topic

Grammar

Listening

1

A

Self and Family

Gender/ Demonstratives/ Adjectives

B

Animals


2

Culture and Traditions

Word Order (Nominal and Verbal Sentences)


3

School

Gender


4

Daily Routine

Use of connectives in sequencing


5

Health



6

Jobs

Tenses (Past and Present)


Skill

NC Level

Topic

Grammar

Speaking

1

A

Self and Family

Gender/ Demonstratives/ Adjectives

B

Food


2

A

Home/Animals

Gender/ Demonstratives

B

Greetings


3

Personal Information



4

Meals



5

Holidays

Tenses (Past, Present and Future)


6

Holidays

Tenses (Past, Present and Future)/ Use of adjectives


Skill

NC Level

Topic

Grammar

Reading

1

A

Self and Family

Gender/ Demonstratives/ Adjectives

B

Food


2

A

General

Gender/ Demonstratives/ Adjectives

B

Animals


3

Customs and Traditions

Verbs/Gender/Adjectives agreement/ Tenses


4

Folk Stories

Adjective agreement/ Adverbs/ Gender/ Tenses/ Use of definite article


5

Media- Current Affairs

Tenses/ Numbers/ Use of connectives


6

Media- Current Affairs

Tenses/ Numbers/ Use of connectives


Skill

NC Level

Topic

Grammar

Writing

1

Family

Demonstratives and Gender


2

Culture and Traditions

Tenses/ Prepositions


3

Personal Details

Nominal and Verbal Sentences/ Numbers


4

Festivals and Holidays

Tenses and Persons


5

Education and Careers

Use of conditional


6

Comparing ways of life

Tenses/ Adjectives/ Adverbs


மேலுள்ள பாடத்திட்டத்தில் ஒவ்வொரு தர நிலையிலும் ஒவ்வொரு குழந்தையும் எதை அறிந்து வைத்திருக்க வேண்டும் என வரையறுத்து இருக்கிறார்கள். அதற்கேற்றவாறு தமிழிலும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கினால், கற்பித்தல் இலகுவாகும் என்பது சிவா பிள்ளையின் வாதம். இதே முறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி ஆங்கிலமல்லாத வேறு ஐரோப்பிய மொழிகளும், இந்திய மொழிகளும் வெற்றிகரமாகக் கற்பிக்கப்பட்டு வருவதாக சிவா பிள்ளை குறிப்பிடுகிறார்.

இனிப் பட்டறையின் முக்கிய கட்டத்துக்குப் போகிறோம். தமிழ் எழுத்துக்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதற்கும் சிவா பிள்ளை வேறு முறைகளைச் சொல்கிறார். புள்ளிக் கோடுகளால் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் புள்ளிகளை இணைத்துப் பிள்ளையை எழுத வைக்காமல், பல்லூடன மென் பொருள்கள், சில இலத்திரனியல் கருவிகள், ஏன் இறப்பரில் செய்யப்பட்ட எழுத்துருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுத்துக்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்யச் சொல்கிறார் சிவா பிள்ளை. அதே போல், எங்கள் வாழ்வில் நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ புகுந்துவிட்ட சினிமாவைக்கூட தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தலாம் என்கிறார் சிவா பிள்ளை. அவை பற்றி அடுத்த பாகத்தில்

Sunday, 20 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4

எங்களது பிள்ளைகள் தமிழ் கற்பது பற்றிய ஒரு நல்ல அணுகுமுறை பற்றிய தொடர் என்பதால், ஆற அமர்ந்து எழுத நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன். சில தொடர்களை அவசர அவசரமாக எழுதி முடித்திருக்கிறேன். சிலவற்றை இடையில் நிறுத்தியும் இருக்கிறேன். இந்தத் தொடரை அப்படியாக எழுதி முடிக்கவோ இல்லை இடையில் நிறுத்திவிடவோ விருப்பமில்லை. ஆகவே, கொஞ்சம் நேரம் கொடுங்கள், முழுமையாக எழுதுகிறேன். முன்னைய பாகங்களை இங்கே சென்று படிக்கவும்.

சென்ற பாகத்தில் சொன்னது போலவே, Microsoft PowerPoint பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று பட்டறை முடிவில் சிவா பிள்ளை அவர்கள் தந்த ஒரு கையேட்டில் சொல்கிறார். அது பற்றிச் சுருக்கமாக இங்கே:

PowerPoint ஒரு மிகவும் சுலபமான பல்லூடனச் சாதனம் ஆகும். கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓரளவு அறிமுகமான ஒரு சாதனம் என்றுகூடச் சொல்லலாம். இது பல வழிகளில் எங்களது தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடியது. மீ இணைப்பு (Hyperlink) செய்வதற்கும் இதில் வசதியுண்டு. (இணைய வசதியும் இருந்தால் எவ்வளவு விஷயங்களைக் காட்டலாம் என்று யோசித்துப் பாருங்கள்). இதில் சொற்களை மறைக்கவும், மங்கிப் பிறகு தெளிவாக வரவும், பல நிறங்களில் சொற்களையும் எழுத்துக்களையும் வேறுபடுத்திக் காட்டவும் முடியும். அதே போல், குறிப்பிட்ட நேரத் தாமதத்துக்குப் பிறகு எழுத்துக்கள், சொற்களை வரச் செய்யலாம். மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று எப்படி வேண்டுமானாலும் வரச் செய்யலாம். ஒலி, ஒளித் துணுக்குகளை இணைக்கலாம். இப்படியாக எத்தனையோ வசதிகள் இருக்கிறன. (காகம் ‘கா கா' என்று கத்தும் என்று அபத்தமாகக் கத்திக் காட்டுவதைவிட, காகத்தின் குரல் உள்ள ஒலித் துணுக்கை ஒலிக்க விடலாம் அல்லவா?)

PowerPoint மூலம் பாடங்களை உருவாக்கிக் கற்பிப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பாடத்திட்ட சி.டி. யை உபயோகித்துக் கற்றுக் கொடுக்கும்போது, அந்த சி.டி. மாணவர்களைக் கவரவில்லை என்றால், அவர்களைக் கவரும்படி மாற்றம் ஏதும் செய்ய முடியாது. இதுவே, ஒரு ஆசிரியர் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தானாகவே ஒரு பாடத்தை PowerPoint இல் உருவாக்கிக் கற்பிப்பாரேயானால், அவர் உருவாக்கிய பாடம் பிள்ளைகளுக்குப் பிடிக்காவிட்டால், மாற்றங்கள் செய்து அவர்களுக்குப் பிடிக்கக் கூடியாதாய் ஆக்கலாம். காரணம், இதன் ஆக்கவாளராக நாங்களே இருக்கப் போகிறோம். மாற்றம் செய்வதில் எந்தத் தடங்கலும் இருக்கப் போவதில்லை.

PowerPoint இல் ஏனைய பாடங்களுக்கு இணைப்புக் கொடுக்க, இணையப் பக்கங்களுக்கு இணைப்புக் கொடுக்க என்று பல வசதிகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. இதைக் கற்றுக் கொள்வதற்கு எந்தவித கஷ்டமும் படத் தேவையில்லை. (என்னுடைய பார்வையில் MS Office Suite ல் மிக இலகுவானதும், சிக்கல் இல்லாததுமான ஒரு Program, PowerPoint தான்). எந்தவிதமான Programming அறிவும் உங்களுக்குத் தேவைப்படப் போவதில்லை. மிகவும் இலகுவாக படைப்புக்களை உருவாக்கலாம். சிலவேளை பிழைகள் வருவது உண்மை. அப்போது மனம் சலிப்படையும். நேர விரயம் பற்றிய விரக்தி ஏற்படும். ஆன போதும், அதை விரயமாக நினைக்காமல், முதலீடாக நினைத்து செயற்பட்டால், நிச்சயம் ஆசிரியர்களில் கற்பித்தல் திறண் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

மேலே வர்ண எழுத்துக்களில் இருப்பவை சிவா பிள்ளை அவர்கள் பட்டறை முடிவில் தந்த கையேட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம் என்றால், இம்முறையில் பாடங்களை உருவாக்கிக் கற்றுக் கொடுப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப் போவதில்லை. என்ன நம் சமூகத்தில் இருக்கிற ஆசிரியர்களிடம் இரண்டொரு தவறான மனப்பாங்குகள் இதில் தடையாக இருக்கும். ஒன்று, ஒரு நிலைக்குமேல் கற்றலில் இவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியராக இருக்கும் நாங்கள் கற்க என்ன இருக்கிறது என்கிற எண்ணம், ஒரு வயதுக்குப் பிறகு கற்றலில் இருக்கும் கூச்சம் ஆகியன இந்த மனப்பாங்கு வளரக் காரணம். அடுத்தது, எம்மவர் மத்தியில் இருக்கும் ‘இவர் சொல்லி நான் என்ன கேக்கிறது' மனப்பாங்கு. இந்த இரண்டு மனப் பாங்குகளையும் தூக்கி எறிந்துவிட்டால், ஒரு ஆசிரியர் தன்னுடைய மகன், அல்லது மகளிடமே PowerPoint பற்றிக் கற்றுத் தேறிவிடலாம். ஆனால், ‘Hyperlinkல ஒரு தரம் கிளிக்கினால் போதும்' என்று வெளிப்படை உண்மையைப் பிள்ளை சொன்னாலே, ‘எனக்கு நீ சொல்லித் தாறியோ' என்று கேட்கிற பலர்தான் இங்கு அதிகம்.

தமிழ் மட்டுமல்லாமல் எந்த மொழி கற்பிப்பதிலும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய படிமுறைகள் இருக்கின்றன என்று முன்னர் ஒரு பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி இன்னும் பலர் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே இருக்கிறார்கள். அப்படியானால் எழுத்து முக்கியமில்லையா? எங்கள் மொழியின் எழுத்து வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால், தமிழ் எழுத்துருக்கள் அழிந்துவிடாதா? என்று விசனப்படுகிறார்கள். ஆகையால், இந்த நான்கு படிமுறைகள் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக அடுத்த பாகத்தில் பார்க்க இருக்கிறோம். முக்கியமாக எழுத்துக்களை எப்படிக் கற்றுக் கொடுப்பது என்றும் சில நல்ல வழிமுறைகளைச் சொல்கிறார் சிவா பிள்ளை. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பொறுப்பீர்கள்தானே?

Sunday, 13 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-3

தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிவா பிள்ளை அவர்கள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்ற ரீதியில் செயல்முறை மூலமாகத் தமிழைக் கற்றுக் கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று கூற அலெக்ஸாண்டர் மறுத்தார். பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பேணி வரும் எழுத்துருக்கள் பிள்ளைகளுக்குச் சேராமல் போய்விடும் என்ற பயத்தினை வெளிக்காட்டினார். அத்தோடு சிவா பிள்ளை அவர்களின் PowerPoint Presentationல் ஒரு இடத்தில் சிவப்பு என்பது சிகப்பு என்று எழுதப்பட்டது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டாவது சுட்டிக்காட்டல் பட்டறைக்கு அவசியமற்றது என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய வித்தகத் தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு முயற்சி என்பேன் அது. எனக்கு சிவா பிள்ளை சொன்ன கருத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.

புலம் பெயர் நாட்டில் நாங்கள் தமிழை எங்களது குழந்தைகளுக்கு இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப் போகிறோம். அவர்களின் தாய்மொழி அந்த நாட்டில் அவர்கள் சாதாரணமாகப் பேசிப் பழகும் மொழியே அன்றி, தமிழ் அல்ல என்பது என் கருத்து. வீட்டில் பேசும் மொழிதான் தாய்மொழி என்ற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. சமூகத்தில் என்ன மொழியை அவர்கள் பேசுகிறார்களோ அதுதான் தாய்மொழி. அந்தத் தாய்மொழியை எவ்வாறு குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்களோ அந்த வரிசையிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியையும் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்ற கருத்தை யாராலும் மறுதலிக்க முடியாது.

ஏன் நாங்கள் கூட ‘அ' ‘ம்' 'மா' என்று எழுத்துருத் தெரிய முன்னமே 'அம்மா' என்ற சொல்லை அறிந்திருந்தோம் அல்லவா? பேசியிருந்தோம் அல்லவா? கேட்டுப், பேசிப் பழகிய பின்தானே வாசிக்க, எழுத எல்லாம் பழகிக் கொண்டோம். இயல்பாகவே அமைந்துவிட்ட அந்த வரிசையை ஒரு பாடத்திட்டத்தில் எழுத்துருவில் பார்க்கும்போது ஏன் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

சிவா பிள்ளை கற்பித்தலில் அடுத்து நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, தெரிந்ததில் இருந்து தெரியாததைக் கற்பிப்பது என்கிற கருத்தாக்கத்தை ஆகும் என்றார். ‘ஒரு வட இந்திய நண்பர் தென்னிந்தியா வந்து உப்புமா சாப்பிடுகிறார். அவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்துப் போகிறது. அதை எப்படிச் செய்வது என்று தன்னுடைய மனைவிக்குக் கற்றுக் கொடுக்கும்படி உங்களைக் கேட்கிறார். எப்படிச் சொல்லிக் கொடுப்பீர்கள்' என்று பயன் பெறுனர்களைக் கேட்டார். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள். சமையல் குறிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும் புன்னைகையோடு கேட்டுக்கொண்டிருந்தார் சிவா பிள்ளை. பின்னர் அவர் தன்னுடைய பாணியில் அந்த வட இந்தியருக்கு எப்படி உப்புமா செய்யச் சொல்லிக் கொடுப்பது என்று சொன்னார்.


‘எல்லாருக்கும் கேசரி தெரியும்தானே' என்று கேட்டார். தெரியும் என்றோம். ‘அதே போல் அந்த வட இந்திய நண்பருக்குக் கட்டாயம் கேசரி பற்றித் தெரிந்திருக்கும். அவர்களில் அநேகமானவர்களுக்குக் கேசரி செய்யத் தெரிந்தும் இருக்கும் ஆகவே உப்புமா செய்வதை இப்படி விளக்குங்கள். கேசரி-இனிப்பு+தாளித்த வெங்காயம்= உப்புமா' அவ்வளவுதான் என்றார். இங்கே அவரது சமையல் கலை அனுபவமோ, இந்திய உணவு வகைகள் பற்றிய அனுபவமோ விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர் சொல்ல வந்த கருத்து, மாணவனுக்குத் தெரிந்ததில் இருந்து, தெரியாததைச் சொல்லிக் கொடுங்கள் என்பதே ஆகும்.


சிவா பிள்ளை இந்தத் தெரிந்ததில் இருந்து தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதில் கணனி மற்றும் பல்லூடனப் பயன்பாட்டை விளக்கினார். எங்கள் ஊரில் படித்தது போலவே அப்பாவின் படம், அம்மாவின் படம் எல்லாம் காட்டிப் படிப்பிப்பதை விட, குழந்தைகள் தொலைக்கட்சியில் விரும்பிப் பார்க்கக்கூடிய கேலிச் சித்திரத் தொடர்களில் வரும் பாத்திரங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்றார். குடும்ப உறவுமுறைகளைப் பற்றிக் கற்பிப்பதற்கு அவர் உதாரணம் காட்டிய Simpsons கனடாவில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது என்றாலும் பல குழந்தைகளுக்கு Simpsons பற்றித் தெரியும். அதைப் பயன்படுத்த விரும்பாவிட்டால் கனடாவில் இன்னொரு பிரபலக் கேலிச் சித்திரத் தொடரான Arthur ஐப் பயன்படுத்தலாம். இந்தக் கேலிச் சித்திரங்களில் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி, மாமா என்று எல்ல உறவு முறைகளும் வருகின்றன. பிள்ளைகளின் மனதில் நிச்சயம் ஒரு ஆர்வம் தூண்டப்படும் அல்லவா?

பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த விஷயங்களூடாகத் தெரியாத விஷயங்களை கற்பிக்கும் போது அவர்களுக்குத் தானாகவே ஒரு ஈடுபாடு வரும் என்பது சிவா பிள்ளையின் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதம். ஒரு மாணவனின் நிலையில் இருந்து பார்க்கும் போது எனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி என்னுடைய ஆசிரியர்கள் வகுப்பில் கதைக்கும்போது மனதில் சந்தோசத்தை உணர்ந்திருக்கிறேன். அதே போல் என்னுடைய அடுத்த தலைமுறையை வழிநடத்துவது தவறாக இருக்காது என்பதுதான் என்னுடைய கருத்து.

இலக்கணத்தைக் கூட இந்தப் பல்லூடனச் சாதனங்களையும், கணனியையும் வைத்தே கற்பிக்கலாம் என்கிறார். ஒரு சிறிய உதாரணமாக ஒரு பழம் சாப்பிடும் சிறுவனின் படத்தைக் காட்டி ‘நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொடுக்கலாம். பழங்களின் படங்களைக் காட்டி ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுக்கலாம். சற்றே பேச ஆரம்பித்த பிள்ளையிடம் ஒரு படத்தைக் காட்டி உனக்குத் தோன்றுவதைச் சொல் என்று கேட்கலாம். இப்படியாகப் பிள்ளையை முதலில் செயல்முறை மூலம் கேட்க, கிரகிக்க, சிந்திக்க, பேச வைப்பது மிகவும் அவசியம் என்பதாக சிவா பிள்ளையின் பார்வை இருக்கிறது.

தமிழை வாசிக்கும் நிலைக்கு வந்த, கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு படம் பார்த்துக் கதையை வாசிக்க வைக்கலாம். ஒரு பாடலை ஒலிக்க விட்டு அந்தப் பாடலின் வரிகளைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தச் சொல்லிக் கேட்கலாம். உதாரணமாக ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல...' பாடலின் முதல் ஐந்து வரிகளை ஒலிக்கவிட்டு பிறகு அந்தப் பாடல்களின் வரிகளை பல்லூடன மென்பொருள் ஒன்றில் PowerPoint ஓடவிட்டு, அவற்றை வரிசைப்படுத்தச் சொல்லலாம். ஒரு பெரிய பந்தியைக் கொடுத்து வரிசைப்படுத்தச் சொல்வதைவிட ஒரு பாடலை வரிசைப்படுத்தச் சொல்வது அவர்களை ஈர்க்கும் என்பது சிவா பிள்ளையின் கருத்தாகும்.


மேலும் இந்தப் பல்லூடன மென்பொருள்கள் சந்தை எங்கும் பரவிக் கிடக்கின்றன. உங்களது கணனி அறிவுக்கு ஏற்ற வகை மென்பொருளைத் தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் இலகுவான மென்பொருளான PowerPoint ஆவது பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என்ன கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த அளிக்கைகளை (Presentation) தயார் செய்யும் பொறுமை ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்கிறார் சிவா பிள்ளை. உதாரணத்துக்கு தமிழைக் கற்பிப்பதில் PowerPoint ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிவா பிள்ளை தான் தந்த கையேடு ஒன்றில் சொல்கிறார். அது பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன். அதற்கு கொஞ்சம் பொறுத்திருப்பீர்கள்தானே?

Friday, 11 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-2

தமிழ் கற்பித்தலில் பல்லூடனப் பயன்பாடு- பட்டறை பற்றிய பார்வை; பாகம்-1

திரு. சிவபாலு அவர்களின் அறிமுகத்தின் பின்னர் திரு. சிவா பிள்ளை அவர்கள் தன்னைப் பற்றிய ஒரு சுய அறிமுகத்தைத் தந்தார். அதிலேயே ஆள் விஷயமுள்ள மனிதர் என்ற ஈர்ப்பு வரத்தக்கதான அறிமுகம். இவருடைய தகமைகள் மற்றும் சிறப்புகள் வருமாறு:
  • கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழக அயல் மொழிகளுக்கான தலைமைப் பரீட்சகர்
  • இலண்டன் Ed Excel பரீட்சைப் பகுதியில் தமிழ் மொழிக்கான தலமைப் பரீட்சகர்
  • கணினி விரிவுரையாளர்
  • ஐரோப்பிய மற்றும் சமூக மொழிகளைக் கணனித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்ற துறையிக்குப் பொறுப்பாக இருக்கிறார்.
  • அரசாங்கப் பாடசாலைகளில் பாடசாலை நேரத்தின் பின்னர் நடக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும், சனிக்கிழமைகளில் நடாத்தப்படும் தமிழ்க் கலைப் பள்ளிக்கும் பொறுப்பாக இருக்கிறார்.
  • 2008/09 ல் Ourlanguage வேலைத் திட்டத்துக்கான விருதையும், 2007 ல் மொழிகளுக்கான ஐரோப்பிய விருதையும் பெற்றிருக்கிறார்.
  • Nuffield வேலைத் திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடத்திட்ட வடிவமைப்பாளராக இருக்கிறார்.
  • ஐக்கிய இராச்சிய சீனப் பாடசாலைகள் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக இருக்கிறார்.
அவ்வாறாக தன்னைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து கணனி மூலமான தமிழ் கற்பித்தல் பாடத்திட்டம் உருவான கதையைச் சுருக்கமாகச் சொன்னார். இங்கிலாந்தில் தமிழ் கற்கும் பாடத்திட்டம் உருவான கதையும், அதில் சிவா பிள்ளையின் ஈடுபாடும் இங்கே எங்களுக்கு ஆழமாகத் தேவைப்படப் போவதில்லை. சிவா பிள்ளை எனப்படும் சிவகுருநாத பிள்ளை அவர்களைப் பற்றி மேலதிக விபரங்களை இங்கே அல்லது இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள். அவர் chennaionline க்கு வழங்கிய பேட்டியை இங்கே படியுங்கள்.

ஒரு வேண்டுகோள்: சிவா பிள்ளையவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்னிடம் தற்போது இல்லை. அவரது தொழில் சார் மின்னஞ்சலில் நான் அவரைத் தொடர்பு கொண்டதும் இல்லை. அவரை இணையமூலம் சந்திக்க விரும்புபவர்களுக்கு அவரது தனிப்பட்ட இணையத் தொடர்பு முகவரிகள் தெரிந்த யாராவது உதவிசெய்யலாமே!!

இனிமேல் பட்டறைக்குள் நுழைவோம்.

சிவா பிள்ளை தமிழைக் கற்பதற்குப் புலம் பெயர் நாடுகளில் வாழும் இளம் சமுதாயம் பின்னடிப்பதற்கு தமிழை இன்னும் அன்றுதொட்டு நாங்கள் கற்ற பழைய முறையிலேயே கற்றுக் கொடுப்பதைக் காரணமாகச் சொல்கிறார். உதாரணமாக, ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்குப் புதிய வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய நடைமுறைகளைப் புகுத்தி, பழைய வழிமுறைகளை நீக்கி மொழிக் கற்றலை இலகுவாக்குகிறார்கள். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்கிற வகைகளாக இந்தக் கற்பித்தலைப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதுவே எளிமையான முறையாக அங்கே கருதப்படுகிறதாம். ஏன் அப்படியான எளிய முறைகளைப் பயன்படுத்தித் தமிழைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவரது கேள்வி.

கற்பித்தலை எளிமையாக்குவதற்கு முதலில் மாணவனை தான் கற்கின்ற பாடத்தில் ஆர்வம் கொள்ளச் செய்வது அவசியம் என்பது சிவா பிள்ளையின் வாதமாக இருக்கிறது.

அவரது இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்து கனேடிய மண்ணில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின் உந்துதல் காரணமாக மட்டுமே தமிழ் கற்கவெனப் பள்ளி செல்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டுமிருக்கிறேன். அப்படிப் போன சில பிள்ளைகள் தமிழில் மிக ஆர்வம்கொண்டு படிக்க ஆரம்பித்ததையும், சிலர் வெறுப்படைந்து தமிழ் படிக்கப் பின்னடித்ததையும் கண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தபோது சில ஆசிரியர்களிடம் படிக்கும் குழந்தைகள் ஆர்வமாகத் தமிழ் படித்தார்கள், சிலரிடம் படிப்பவர்கள் ‘தமிழ் Class' என்றாலே அலறுகிறார்கள். இங்கே இந்த வித்தியாசத்துக்குக் காரணம், ஆசிரியரின் கற்பித்தல் முறை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும்போது, சில நல்ல ஆசிரியர்களிடம் படிக்கிற பிள்ளைகளும் தமிழ் படிக்கப் பின்னடிக்கிறார்கள். சில சோத்தி ஆசிரியர்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஆச்சரியகரமாக தமிழ் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இது எதனால் என்று பார்த்தால், அந்தப் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதில் பெற்றோர் எவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதில் தங்கியிருக்கிறது. அதனால் பட்டறைக்குப் போகும் முன்னரே என் மனதில் இந்த விஷயம் தெளிவாக இருந்தது. பிள்ளை ஆர்வமாகத் தமிழ் படிப்பது ஆசிரியரின் கற்பித்தல் திறண், பெற்றோரின் ஆர்வம் இரண்டிலும் தங்கியிருக்கிறது. இருவரில் ஒருவர் தவறினாலும், பிள்ளை தமிழை ஆர்வமாகக் கற்கப் போவதில்லை. இது தமிழ் மட்டுமல்ல எல்லாப் பாடங்களுக்கும் பொருந்தும் என்பது என்னுடைய கருத்து.

இப்போது மீண்டும் சிவா பிள்ளையின் பட்டறைக்கு வருவோம். சிவா பிள்ளை தமிழ் கற்பதினால் பிள்ளைக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை விளங்கப் படுத்துவது அவசியம் என்கிறார். உதாரணமாக இப்போது கனடாவில் பல்கலைக் கழக அனுமதிக்கான credit course களில் ஒன்றாகத் தமிழும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அதைச் சொல்லி அவர்களைத் தமிழ் படிக்க ஊக்குவிப்பதில் தவறேதும் இல்லை என்பதாக அவர் கருதுகிறார்.

உண்மைதான், ஆனால் இந்த விஷயத்தில் நம்மவர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். சில ஆசிரியர்களிடம் பிள்ளையை அனுப்பினால், பிள்ளை சரியாகக் கற்றுக் கொள்கிறதோ இல்லையோ, பிள்ளைக்குத் தேவையான credit கொடுத்து விடுவார்கள். அதாவது எனக்குச் சம்பளம் வருகிறது, உனக்கு பல்கலைக் கழக அனுமதிக்கு ஒரு மேலதிக credit வருகிறது.. இருவருக்குமே லாபம் என்கிற வியாபாரமாகத் தமிழ்க் கல்வி மாறிவிட்டதை நான் இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.

எல்லா ஆசிரியர்கள் மீதும் நான் இந்தக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. சிலர் மட்டுமே அப்படிச் செயற்படுகிறார்கள். பெற்றோரும் சளைத்தவர்கள் இல்லை. எந்த ஆசிரியரிடம் போனால் பிள்ளைக்கு இலகுவாக மதிப்பெண் கிடைக்குமோ அவர்களிடம் அனுப்பி தங்களையும் ஏமாற்றி, பிள்ளையையும் ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த சின்னையா சிவநேசன் அவர்கள் ஒன்பதாம் வகுப்புக்குத் தமிழ் படிப்பிப்பவர். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய வகுப்புக்கு வரும் மாணவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் ‘அ', ‘ஆ' சரியாகத் தெரியாமல் வருவதாகக் அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். எனக்குத் தெரிந்து இங்கே LKG, UKG வகுப்புகளில் இருந்தே தமிழ் கற்பிக்கிறார்கள் (என்னுடைய தமக்கையார் அந்த வகுப்புகளுக்குத் தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்). இருந்தும் ஒன்பதாம் வகுப்பில் ‘அ' ‘ஆ' தெரியாமல் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் வருகிறார்கள் என்றால், எங்கோ பிழை செய்கிறோம் அல்லவா?

சிவா பிள்ளையின் பார்வையில் மாணவனைத் தமிழ் படிப்பதால் வரக்கூடிய கல்வியியல் ரீதியான பலன்களைச் சொல்லி (Credit Course, University Entrance) வகுப்பறைக்குள் அழைத்து வந்தாலும், அவனை ஆர்வமாகத் தமிழ் கற்க வைக்க எம்முடைய பழைய கற்பித்தல் முறைகள் உதவாது என்கிறார். முக்கியமாக புள்ளிக் கோடுகளை இணைத்து ‘அ' எழுதுதலில் மொழியைக் கற்றுக் கொடுக்கத் தொடங்காமல், கேட்டல், பேசுதல் வாசித்தல் கடைசியாக எழுதுதல் என்ற வரிசைக் கிரமத்தில் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்.

இங்கே தான் சபைக்கும் சிவா பிள்ளைக்கும் முதல் முரண்பாடு வந்தது, பண்டிதர் திரு. அலெக்ஸாண்டரின் ரூபத்தில். உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன சர்ச்சை என்று... தொன்று தொட்டு இருந்துவரும் எழுத்து மூலமான கற்பித்தலை விடுத்து, சொல்மூலமான கற்பித்தலால் எழுத்துவடிவங்கள் அழியாதா? என்கிற கேள்விதான் அலெக்ஸாண்டரிடம் இருந்து எழுந்தது. சிவா பிள்ளை என்ன பதில் சொன்னார்? இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன? இதுபற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Thursday, 10 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-1

புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது எங்கள் வாழ்வியலை, எங்கள் கலாசாரத்தை, எங்கள் மொழியை எவ்வாறு அடுத்த சந்ததிக்குக் கொண்டுபோகப் போகிறோம் என்பதே. அதுவும் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளிலேயே கல்வி வழங்கப்படும் சூழலில் அவர்களின் முதல் மொழி (தாய் மொழி என்றுகூடச் சொல்லலாம்) அந்த நாட்டு மொழியாகவே அமைகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழைக் கற்பதென்பது அவர்களுக்கு மிகவும் வெறுப்பு மிகுந்த ஒரு அனுபவமாகவே அமைகிறது. நாங்கள் எப்படி ஆங்கிலம் கற்க விழுந்து எழும்பினோமோ, அதே சிக்கல்களை அவர்களும் எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கு ஆங்கிலம் படிக்கச் சொல்லி பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பினார்கள், எங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்கப் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். அப்படி விருப்பமில்லாமல் தமிழ் படிக்க வருகின்ற பிள்ளைகளுக்கு விருப்பத்தை எவ்வாறு உண்டுபண்ணலாம்?

இதுபற்றித்தான் ஐக்கிய ராச்சியத்தில் இருந்து கனடா வந்திருந்த இலண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிவகுருநாத பிள்ளை (சிவா பிள்ளை) அவர்கள் சென்ற 28/08/2009 அன்று ஒரு பட்டறை நிகழ்த்தினார். கனடாவில் ஒரு உறவினரின் திருமணத்துக்காக வந்திருந்த சிவா பிள்ளையின் தொடர்பு அவரின் ஆசிரியர் ஒருவர் மூலமாக எழுத்தாளரும், ஆசிரியருமான சின்னையா சிவநேசன் (துறையூரான்) அவர்களுக்குக் கிடைக்க, அவரது முயற்சியில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக இந்தப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டது. துறையூரான் அவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதாலும், பட்டறையை புகைப்படம் பிடிப்பதற்கு உதவி தேவைப்பட்ட காரணத்தாலும், என்னுடைய தமக்கையாரும் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் தமிழ் கற்பிக்கிற காரணத்தாலும், நானும் இந்தப் பட்டறைக்குப் போயிருந்தேன்.

எங்களது அடையாளங்களில் ஒன்றான நேரம் தவறுதல் இங்கேயும் இருந்தது. ஐந்தரைக்கு ஆரம்பிக்க வேண்டிய பட்டறையை ஆறு மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள். வழமைபோலவே வழங்குனர் நேரத்துக்கு வந்திருந்தார், பயன் பெறுனர்கள் ஆறுதலாக வந்து சேர்ந்தார்கள். 'அஞ்சரைக்கு எண்டு சொல்லி ஆறு மணிக்குத்தான் தொடங்குவினம்' என்று சொன்ன அக்காவை இழுத்துக்கொண்டு போய்ச் சேர பத்து நிமிடம் பிந்தியிருந்தது. வழி முழுக்க புறுபுறுத்துக் கொண்டுதான் போனேன். அங்கே போனால் ஒரு ஐந்தே ஐந்து பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் ஒரு ஆசிரியையின் கணவர், மற்றவர் சிவா பிள்ளை அவர்களை அழைத்து வந்தவர். மூன்றே மூன்று ஆசிரியைகள் மட்டும் உள்ளே இருந்தார்கள். அறிமுகம் செய்து பட்டறையை ஆரம்பித்து வைக்கவேண்டிய தமிழ் எழுத்தாளஎ சங்கத் தலைவர் திரு. த. சிவபாலு அவர்கள் ஆறுமணியளவில் வந்து சேர்ந்தார்.

படம்-1: தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கனடா தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. வந்திருந்த பயனாளர்களில் சிலர்

சிவபாலு அவர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து சிவா பிள்ளை தனது பட்டறையை ஆரம்பித்தார். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்குள் ஐந்து அலைபேசிகள் ஒலித்தன. அதிலும் திரு. சிவபாலு அவர்கள் தன் அலைபேசி அழைப்பை ஏற்று சத்தமாகப் பேசியபோது உண்மையிலேயே கோபமாக இருந்தது. பொறுப்பில்லாதவர்கள், பழக்க வழக்கங்கள் சரியாக இல்லை என்று எங்களைச் சாட்டிச் சாட்டி இந்த மூத்த தலைமுறை தங்கள் தவறுகளைக் கவனிக்க மறந்து வருகிறது. ஒரு பட்டறைக்கு வரும்போதோ, ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரும்போதோ, பெரிய சத்தத்தில் அலைபேசியை ஒலிக்க வைத்து, அதைவிடப் பெரிய சத்தத்தில் அந்த அலைபேசி அழைப்புக்குப் பதிலிறுப்பது ஒரு 'படம் காட்டும்' மனநிலையாக எனக்குப் படுவதுண்டு. என்னுடைய அலைபேசி எப்போதும் அதிர்வு நிலையிலேயே இருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும் இங்கே.
படம்-2: சிவா பிள்ளை (இடம்) அவர்களை அறிமுகம் செய்து பட்டறையை ஆரம்பித்துவைக்கும் திரு. த. சிவபாலு அவர்கள்.

இப்படியாக சில கசப்புகளுடன் தொடங்கிய இந்தப் பட்டறையை சிவா பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவந்தார். அவரது ஆழ்ந்த அனுபவம் அவருக்குத் துணைசெய்ய, இலகுவாக அவையை அடக்கினார் என்றே சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆசிரியர்கள் வந்து இணைந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இருந்தும் இப்படியான ஒரு பட்டறைக்குத் தமிழ் ஆசிரியர்கள் 15 பேர் மட்டுமே வந்தார்கள் என்பது, வரவேற்கத்தக்க ஒன்றல்ல. அதுவும், தமிழ் படிக்க வரும் பிள்ளைகளை விரும்பிப் படிக்கவைக்க முடியவில்லை என்று பல ஆசிரியர்கள் குறைகூறும் ஒரு நாட்டில், இவ்வாறு வரவு குறைவாக இருந்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில் சிவா பிள்ளை தந்த பல தகவல்கள், பல யோசனைகள் செயற்படுத்திப் பார்க்கும் தரம் வாய்ந்தவை. அவை பற்றி அடுத்த பகுதிகளில் பார்ப்போம்.