Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, 8 January 2011

செரிலாக்

’அப்ப என்ன மாதிரித் தம்பி. ஊரில எல்லாரும் சுகமா? அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம்? கதச்சனியே. நான் விசாரிச்சனான் எண்டு சொல்லடாப்பு’. அன்னாரை எனக்குக் கிட்டத்தட்ட 11 வருசமாகத் தெரிந்திருந்தது. திருமணவழியில் எங்கள் குடும்பத்துடன் உறவானவர். அன்னாரைப்பற்றி ‘ர்’ போட்டுக் கதைக்கிறபடியால் அவருக்கு பெரிய வயசெல்லாம் இல்லை. என்னிலும் ஒரு பதினைந்துவயது கூட இருக்கலாம். எங்களின் கிராமத்துக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு ஊர்தான் அவருக்கு அடி. ‘அல்வாய்’ கிராமசேவகர் பிரிவுக்குள் கொஞ்சம் பெரிய ஊர். தகப்பனார் நல்ல உழைப்பாளி, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. அந்தியோட்டிக் கல்வெட்டுகளில் விசாலமான அடைமொழிபோடுகிறவர்கள். எண்பதுகளின் கடைசியோ, தொண்ணூறுகளின் ஆரம்பமோ என்னவோ அன்னார் அங்கே வாழமுடியாத சூழ்நிலைக்கைதியாகி ஐரோப்பாவில் எல்லாம் சுற்றி கனடாவில் நிரந்தரமாகிவிட்டவர்.

அன்னார் ஒரு தேர்ந்த அரசியல்வாதி/விமர்சகர்/நோக்குனர். அதுவும் தாயக அரசியலில் அன்னாரின் பங்கு மகத்தானது. ‘சிவாஸ் ரீகல்’ கூடத் தேவையில்லை, ‘மொல்சன் கனேடியன்’ மணமே போதும், அன்னாரின் கருத்துரைகள் கடல்தேடு நதியெனப் பெருக்கெடுக்க. அன்னாரோடு சேர்ந்திருக்கும் இன்னார்கள் எல்லாம் ‘அவரிட ஐடியா என்ன எண்டால்...’ என்று தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்ககூடிய தங்களின் கருத்துக்களைச் சொல்லுவார்கள். உதாரணமாக, கமலஹாசன் எதை நினைத்து கையடிப்பார்... மன்னியுங்கள், கமலஹாசன் எதை நினைத்து தசாவதாரம் படத்தில் மேற்படி காட்சி எடுத்தார் என தங்களின் கருத்தை இப்படிச்சொல்வார்கள், ‘கமலிட ஐடியா என்னவெண்டால்........’. சதாம் ஊசேன், ஒபாமா, ராஜபக்சே, பிரபாகரன் எல்லோருடைய மனத்துக்குள் இருந்தவை, இருக்கிறவை எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தால் உங்களுக்கு உடனடியாகத் தண்ணியடிக்கத் தோன்றும்.

அன்னாருக்குக் கிட்டத்தட்ட எல்லாப்பரப்பிலும் விஷயஞானம் உண்டெனத் தோன்றும் எனக்கு. அதிலும் அன்னாருக்கும் இன்னார்களுக்கும் இடையில் நடக்கிற விவாதங்கள் அளப்பரிய கருத்தியல்களை சர்வசாதாரணமாகத் தொட்டுச்செல்லும். பெரும்பாலும் அன்னாரின் விவாதங்கள் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்றுதான் ஆரம்பிக்கும். இடனே முதலாவது இன்னார் ‘இல்ல.. அது எப்படியெண்டால் ஒன்றும் ஒன்றும் மூன்று’. அடுத்த இன்னார் ‘ஒன்றும் ஒன்றும் ஐந்தெல்லோ’ என்பார். இது சுற்றிச் சுற்றி அன்னாரிடம் வருகிறபோது அன்னார் விகாரமாகச் சிரித்தபடி ‘ஒன்றும் ஒன்றும் மூன்று’ என்பார். உடனே முதல் இன்னார் ‘இல்லைப்பாருங்கோ.. ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பார். இப்படியே விவாதங்கள் தொடர்ந்தபடியிருக்கும்.

அன்னார் அடிக்கடி ‘இந்த யூனியன் வச்சிருக்கிற கொம்பனியளில வேலைக்கே போகக்கூடாது. சும்மா யூனியன் fee எண்டு காசைப் பிடுங்கிறாங்கள். இந்தக் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு வேற வேலையே’ இல்லை என்பார். எனக்கு யூனியன்களின் இருத்தலுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். கைத்தொழில் புரட்சி, அந்தப் புரட்சி இந்தப் புரட்சி என்று தொழிற்சங்கவாதிகளின் தோற்றத்துக்கு வேண்டுமானால் பொதுவுடமைவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கலாம். அதே போல் பொதுவுடமைவாதிகளால் தொழிற்சங்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது இலகுவானதொன்றாய் இருக்கலாம். இருந்தும், சாதாரண உழைப்பாளிகளுக்கு நேர்மையான ஒரு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு நீ பொதுவுடமைவாதியாயிருக்கவேண்டியதில்லை, உன்னைச் சுற்றிய முதலாளிகளின் சமூகம் உன்னை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்று தெரிந்திருந்தாலே போதுமானது என்பது என்னுடைய கருத்து, தொழிற்சங்கங்களைப் பற்றி. தமிழகத்துச் சினிமாவில் வருகிற காக்கிச்சட்டைபோட்ட சந்திரசேகரைப் பார்த்துவிட்டு தொழிற்சங்கங்களைப் பற்றி அன்னார் கதைக்கும்போது அவரோடு வாதம் பண்ணுவதில் பிரயோசனமிருப்பதில்லை. ஒருமுறை ரசினிகாந்தும் கவுண்டமனியும்கூட அதே உடைபோட்டு ஒரு தொழிலாளியின் கைவெட்டுப்பட்ட காரணத்துக்காக ஏதோ வேலைநிறுத்தம் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லி....ம்ம்ம்ம், இப்படித்தான் அறிவூட்டப்பட்டிருந்தார் அன்னார். ஒருநாள் அன்னாரை downsizing  என்று சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிவிட்டார்கள். அன்னார் சொன்னார் ‘சே, எங்கட கொம்பனீல மட்டும் யூனியன் இருந்திருந்தால் என்ர நிலமையே வேற...’

ஒருநாள் அன்னாரின் வீட்டுக்குப் போயிருந்தபோது தாயக நிலமை பற்றிக் கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் கவலை இருந்தது. கடலில் மூன்று நாட்களாக ‘ஓட்டி யாரடா’ என்று சொல்லி எஞ்சின் சுடப்பட்டு, துப்பாக்கி முனையில் ஓட்டி திருப்பி அழைத்துச் செல்லப்பட ‘ஜலசமாதியை’ எதிர்பார்த்துக் காத்திருந்த உறவு சொன்ன கதைகள் எனக்குள்ளும் இருந்தன. கடல் தண்ணீரைத் தாங்கள் குடித்ததோடு மட்டுமல்லாமல் பழுதாய்ப்போன செரிலாக் மாவை கடல் தண்ணீரில் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டியதென்பது என்னைப் பொறுத்தவரை பெரும்கொடுமையாக இருந்தது. அப்படி செரிலாக் கூடக் கிடைக்காமல் செத்த எத்தனையோ பிள்ளைகள் பற்றியெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். அன்னார் மும்முரமாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்தார். அன்றைக்கும் போர் முடிந்துவந்துதான் பேசிக்கொண்டிருந்தோம். ரீ.வி.ப் பெட்டியில் திவ்யதர்ஷிணி பேசிக்கொண்டிருந்தார். அன்னார் உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னார், ‘இந்த மோட்டுச் சனங்களாலதான் எல்லாப் பிரச்சினையும். உவை என்னத்துக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு வாறம் எண்டு தாலிய அறுக்கினம்?’. ‘அப்பிடியில்லை அண்ணை. அவயளுக்கும் வாழோணும் எண்ட ஆசை இருக்குமண்ண. சாவு பற்றின பயத்தைவிட வேற எந்தப் பயமும் பெரிசில்லையண்ணை. அதான் அவையளும் வாழோணும் எண்டு நினைச்சு இஞ்சால வரப்பாக்கினம். நானும் நீங்களும் அவயளமாதிரி அங்க இருக்கேலாது எண்டு முடிவெடுத்து இஞ்ச வந்து இருக்கிறது எங்கட உரிமை. கடல் தண்ணீல பழுதான செரிலாக் கரைச்சு எட்டுமாசக் குழந்தைக்குக் குடுக்கிற சனம் உயிர்வாழ எண்டு எடுக்கிற முடிவுகூட அவேட உரிமை அண்ணை. பிறகு....’ முடிக்கமுன் இடைமறித்த அன்னார் சொன்னார், ‘தமிழனாப் பிறந்தவன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது அவேட கடமை’.

கொஞ்ச நேரத்துக்கு எதையுமே பேசாமல் இருந்தோம். திவ்யதர்ஷிணி ‘Judges  சொன்ன comments ஐ எல்லாம் improvise பண்ணி அடுத்தமுறை ஆடுங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். Comments ஐ, improvise பண்ணி எப்படி ஆடுவது என்று சிந்திக்கமுயன்றேன். என் மூளைக்கெட்டிய பரப்புகளில் மட்டும்தானே சிந்திக்கலாம்? அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய்? ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை? ஆ... முதல்ல பிள்ளைய ஒழுங்காப் பார்..........’ வசை தொடர்ந்தது.

*----*----*----*
2015 மே மாதம் ஒரு நாள். ரொரொன்ரோவில் 10 வயது மதிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். ‘நான் தமிழன். நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்னுடைய கடமை. அன்னார் முகத்தில் பெருமிதம் பொங்க HD Camcorder ஒன்றில் சிறுவனின் முழக்கத்தை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நாள் முரசுமோட்டையில் சுற்றாடல்கல்வி ஆசிரியை கொடுத்த வீட்டுவேலையில் ‘கடல் நீரின் பயன்கள் என்ன?’ என்ற கேள்விக்கு நிறைய யோசித்து ‘செரிலாக் கரைக்கலாம்’ என்று ஒரு எட்டுவயதுச் சிறுமி எழுதிக்கொண்டிருந்தாள்.

Wednesday, 24 March 2010

பிரவுணி, டெவில் மற்றும் சீக்கோக்கள்

சீக்கோக்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்து வீதிகள் பலவற்றில் இவர்களின் ராச்சியம்தான் நடக்கும். பல நிறங்களில், பல பருமன்களில் போகிற வருபவர்கள் எல்லோரையும் மிரட்டுவதில் சீக்கோக்களுக்கு நிகர் சீக்கோக்கள்தான். ஆனால் நித்தனும் சிறிமாவோ பண்டீரிநிக்காவும் சீக்கோக்களுக்குப் பயப்பட மாட்டார்கள். சைக்கிளில் போகும்போது நிம்மதியாக நித்திரை கொண்டுகொண்டிருக்கும் சீக்கோக்களை ஓங்கி உதைப்பார்கள். அடுத்த நாள் அதே வீதியில் போனால் உதை வாங்கிய சீக்கோக்கள் ஞாபகம் வைத்துக் கலைக்கும். சைக்கிளில் எம்பி மிதித்து ஓடி சடாரென பிரேக் பிடிக்க சீக்கோக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும் பாருங்கள், அந்த வேகத்துக்கு யாருமே ஈடுகொடுக்க முடியாது. இப்போது சிந்தித்துப் பாருங்கள், சீக்கோக்களை உங்களுக்குத் நிச்சயம் தெரியும்தானே.

எனக்கு சீக்கோ என்கிற பெயரை நித்தன்தான் சொல்லித்தந்தான். அதற்குமுன் ‘நாய்கள்' என்கிற பெயரிலேயே அவர்களை அழைத்துவந்தேன் (இப்போது doggy). நித்தனோடு சேர்ந்த பின் சீக்கோக்களுக்கு நானும் சிம்ம சொப்பனம்தான். அவர்களை உதைக்காவிட்டாலும் ‘ஊய்' என்று சத்தமிட்டு மிரட்டி, சைக்கிளைக் கலைக்கவைத்து, பிரேக் போட்டு வாலைச் சுருட்டி ஓடவைப்பதில் ஒரு த்ரில் இருந்தது. அந்தக் கொடுமைக்கு எல்லாம் சேர்த்து கனடாவில் வைத்து ஒரு சீக்கோ இடது முழங்கைக்கு சற்று அருகிலும், முன்தொடையிலும், பிட்டத்திலும் கடித்து கடுக்கக் கடுக்க ஊசி போடவைத்தது என்பது வேறுகதை. ஆனாலும் இன்றைக்கும் சீக்கோக்கள் மீதான வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. கல்லால் அடிக்க, காரால் ஏற்ற ஆசையிருக்கிறது. ஆனால் சீக்கோக்களை வளர்ப்பவர்கள் மில்லியன் கணக்கில் என்னிடம் நட்டஈடு கோரலாம் என்று பயப்படுத்துகிறார்கள்.


நான் ஒன்றும் சின்னவயதில் இருந்தே சீக்கோக்களை வெறுத்ததில்லை. எங்கள் வீட்டில் மெல்லிய மண்ணிறத்தில் கழுத்தில் சின்னதான ஒரு வெள்ளைப் பொட்டுடன் ஒரு சீக்கோவும், கொழுத்துப் போன அழுக்கு மண்ணிறத்தில் ஒரு வயதான சீக்கோவும் இருந்தன. வயதான சீக்கோ ஆணோ, பெண்ணோ என்றெல்லாம் ஞாபகம் இல்லை. அந்த சீக்கோவுடன் எனக்குப் பெரியளவு பரிச்சயம் ஏற்படமுன்னமே அது செத்தும்போனது. மற்ற சீக்கோ நல்ல வீரன். வைரமுத்துப் பெரியப்பா கொண்டுவந்து தந்த சீக்கோ அது என்று அப்பா சொல்லுவார். நல்ல இளைஞன். தெருவில் மற்ற சீக்கோக்களை உறுமி அடக்கும் ரவுடி சீக்கோ அது. அதுக்கு ‘பிரவுணி' என்றும் ‘ராஜா' என்றும் பெயர்கள் வழங்கியதாக ஞாபகம். ஒரு நாள் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ அக்கா அரிசியைக் கடித்துவிட்டது. ஏலவே யாரும் நொண்டி நடந்தால் பிடிக்காது இந்த சீக்கோவுக்கு. அக்கா அரிசி பாவம். ‘அக்கா அரிசி, அக்கா அரிசி' என்று பிச்சை புகுந்து வாழ்கிற அவருக்கு கால் புண்ணுக்கு மருந்துபோடவோ காலுக்கு செருப்பு போடவோ வழியில்லை. நொண்டி நடந்தவரை சீக்கோ பதம்பார்த்துவிட்டான்.

அக்கா அரிசியை சின்னத்துரை கடைக்குப் பக்கத்தில் இருந்த நேர்சக்காவிடம் கூட்டிச் சென்று மருந்துச் செலவை அப்பா ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இரண்டொருவரை பதம் பார்க்க சீக்கோ முயன்று கடைசியில் அக்கா அரிசியைப் பதம் பார்த்த காரணத்தால் சீக்கோவைக் கட்டிப்போடுவது என்று முடிவாயிற்று. அன்றிலிருந்து சீக்கோ கட்டிப்போட்டப்பட்டான்.

ஒரு நாள் மதியவேளை சீக்கோ அலறிக்கொண்டிருந்தான். அவனது கழுத்துப்பட்டியில் இருந்த ஒரு கம்பி கழுத்துக்குள் போய்விட அதிலிருந்து மீளும் முயற்சியில் சீக்கோவின் கழுத்தில் பெரிய காயம். இரத்தம் கொட்டியது. அப்பா ஒருவாறு அவிழ்த்து விட்டதும் ஓரிடமும் போகாமல் ஓடோடி வந்து வீட்டு வாசலில் படுத்து உருண்டு புரண்டு அழுதான் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ. (பிற்காலத்தில் அல்சர் கான்சராக்கிய வைரமுத்துப் பெரியப்பாவும் வயிற்றுவலியால் அப்படித் துடித்ததாக ஞாபகம்). எனக்கு வயிற்றுக்குள் ஏதோ செய்தது. கழுத்தில் ஏதோ ஒரு அவஸ்தை தோன்றியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சீக்கோ பழையமாதிரி உற்சாகமாக இல்லை. காயம் மாறிய பின்னரும் அவனது பழைய உற்சாகத்தைக் காணவில்லை. கொஞ்ச நாளில் சீக்கோ இறந்துபோனான். எங்கள் வீட்டு வளவின் தென்கிழக்கு மூலையில் ஒரு தென்னமர அடியில் சின்னக் கிட்டிணி தோண்டிய கிடங்கில் சீக்கோவைப் புதைத்தார்கள்.

அவனுக்குப் பிறகு வீட்டில் நிரந்தரமாய் ஒரு சீக்கோ வந்தது எனக்கு பத்து வயதிருக்கும்போது. பக்கத்தில் இருந்த ‘அண்ணன்'மார் விட்டுப்போன பெண் சீக்கோ ஒன்றின் பிள்ளைகளில் நான் தெரிந்தெடுத்த சீக்கோ அவன். ‘மயாவி', ‘மாயவி' என்றெல்லாம் வாசித்து கடைசியில் 'மாயாவி' என்று மனதில் பதிந்த முகமூடி வீரர் மாயாவியின் சீக்கோவின் பெயரான ‘டெவில்' என்று பெயர் வைத்து அவனை வளர்த்தேன். கமலாம்மா அடிக்கடி சொல்லுவார்கள், 'எறும்பு போட்ட பால் குடிச்சா நல்ல வீரமா வளரும்' என்று. அம்மாக்குத் தெரியாமல் கறந்த பசும்பாலில கொஞ்சமாக கமலாம்மா அல்லது ஆசையம்மாவிடம் வாங்கி, எறும்பு பிடித்துப் போட்டு டெவிலை வளர்த்தேன். அவனும் என்னோடேயே வளர்ந்தான்.

பக்கத்தில் ‘அண்ணண்மார்' இருந்ததால் யாழ்ப்பாணத்தில் பிரச்சினை வரும்போதெல்லாம் அப்பா பிறந்த வீட்டில் போய் நிற்போம். அப்படி நாங்கள் போகிற நாட்களில் டெவிலை ஏனோ மறந்துபோய்விட்டேன். டெவிலுக்கும் குண்டுச்சத்தமும், புக்காரா, சுப்ப சொனிக் சத்தமும் அடிவயிற்றைக் கலக்கும் என்று புத்திக்கு உறைக்கவில்லை. பிரச்சினை கொஞ்சம் ஓய்ந்து வீட்டுக்குப் போனால் டெவிலைக் காணவில்லை. அவன் பக்கத்துவீட்டு அன்ரி வீட்டில் நிரந்தரமாகிவிட்டான். எறும்புப் பாலை மறந்து மிஞ்சிய சோறைச் சாப்பிடப் பழகிவிட்டான். அவர்கள் வீட்டுக்கு நான் போனால் ஓடிவந்து வாலை ஆட்டினாலும் எங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பார்த்தால் வரவே மாட்டேன் என்றுவிட்டான். மற்ற சீக்கோக்களிடம் கடிபட்டு ரத்தம் ஒழுக வந்தவனை ‘வீட்ட வாடா. உனக்கு எறும்புப் பால் தந்து வீரமாக்கிறன்' என்று சொல்லியும் வரமாட்டேன் என்றுவிட்டான். காலம் போகப்போக என்னைக் கண்டாலும் குரைக்கவும் பழகிக்கொண்டான். நானும் சீக்கோக்களை வெறுக்கப் பழகிக்கொண்டேன். தெருச் சீக்கோக்கள் கடித்துச் செத்த டெவிலின் மரணம் சின்னச் சலனத்தோடு என்னைக் கடந்துபோயிற்று.

Wednesday, 30 December 2009

மார்கழித் திங்கள்

நாளுக்கு நாள் மணக்கும் மட்டன், ருசிக்கும் றால், சிவாஸ் ரீகல், ஹெனிக்கன், ஜமேக்கன் ரம், வித விதமாய் சோறு, சலாடுகள், பழக் கலவைகள், ஐஸ் கிரீம் என்று கிட்டத்தட்ட களிப்பாகத் தான் போகிறது இந்த மார்கழி. நத்தார் கொண்டாட்டமும் புதுவருட வரவேற்பும். இதிலெல்லாம் நான் பங்கெடுப்பதில்லை என்று பொய்சொல்ல மனம் ஒப்பாவிட்டாலும், எதையோ ஒன்றை இழந்த மனநிலை எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஊரில் இருந்தபோது மார்கழி ஒவ்வொரு வயதுக்கு ஒவ்வொரு கோலமாய் மகிழ்வித்துப் போனது. அந்த சுகமான அனுபவங்களை மனம் அசைபோட்டுப் பார்க்கும்போதே சில்லிடுகிறது மனம்.

சின்ன வயதில் மார்கழி விடுமுறையில் பகல் முழுதும் பட்டம் பறக்க விடுவதிலேயே கழியும். மார்கழிக்கென்றே இரு வகை வாசனைகள் தனித்துவமானவை. ஒன்று மார்கழி முடிகிற தறுவாயில் கடையிலிருந்து அடுத்த வருடப் பாடசாலைத் தேவைகளுக்காக அப்பா கொண்டுவரும் புதுக் கொப்பிகளைப் பிரிக்கும்போது வரும் காகித வாசனை. அதுவும் அக்காக்கள் வீட்டில் இருந்த வரையில் அப்பா ஐந்தாறு டசின் கொப்பிகளைக் கொண்டுவருவார். அவற்றைப் பிரித்து அட்டைக்கு உறை போடுவோம். அதுவும் ‘ஸ்ரேப்ளர்' அடித்த நாற்பது தாள், அறுபது தாள் கொப்பிகளை அப்பா ‘கொறளோன்' நூல் போட்டுக் குத்திக்கட்டித்தான் உறை போடுவார். மண்ணிறத்தாள், மணிலாத்தாள் இரண்டில் ஏதாவது ஒன்றில் அக்காமார் உறை போட, எனக்கு மட்டும் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்ரார்' தாங்கி வரும் வண்ண வண்ணப் புகைப்படங்கள் உறைகளாவது பெருமையாயிருக்கும். சில வேளை அதற்கு மேலே மணிலாத் தாள் போட்டாலும், அதைக் கிழித்து படங்களைக் வெளியே காட்டுவதில் ஒரு மிதப்பு இருக்கும்.

இன்னொன்று பட்டத்து நூலின் நைலோன் வாசனை, பட்டத்தாளின் வாசனை, பட்டம் ஒட்டக் கிண்டிய கோதுமைப் பசையின் வாசனை என்று ஒன்றுகட்டி வரும் இன்னொரு வாசனை. எனக்குத் தெரிந்து நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் இந்த வாசனைகளை அனுபவிக்காமல் யாருடைய குழந்தைப் பருவமும் கடந்திருக்குமா என்பது சந்தேகமே.

எங்கள் மார்கழியின் இன்னொரு அழகான அனுபவம், திருவெம்பாக் காலம். சின்னப் பொடியன்கள் எல்லாம் சங்கு, சேமக்கலம் எல்லாம் எடுத்துக்கொண்டு விடியலிலேயே புறப்பட்டுவிடுவார்கள், துயிலெழுப்ப. பதின்ம வயதுகளுக்கு வரும் முன்னர் அம்மா என்னையும் துயிலெழுப்பி விடுவார். அப்பா கோயிலை என்றைக்கும் மறக்காதவர். சங்கு, சேமக்கலக் கூட்டத்தோடு போகாவிட்டாலும் நடுங்கும் குளிரில் அம்மா வைத்த சுடுதண்ணீரில் குளித்து அப்பாவுடன் கோயில் போவதில் ஒரு ‘த்ரில்' இருந்தது என்றே சொல்லலாம். ‘லிங்கம் பேக்கரி' ராசலிங்கத்தின் மகள்களுக்கும் எனக்கும் அந்தப் பனியில் ஒரு பனிப்போர் நடக்கும், கோயில் மணியை யார் அடிப்பது என்று. அநேகமான தருணங்களில் அப்பா நேரத்துக்கே கோயிலுக்குப் போய்விடுவதால் குலனையில் மணியை நான் குத்தகைக்கு எடுத்துவிடுவேன். ஆனால் குழவியடி அம்மனுக்கு அவர்கள் குறுக்குப் பாதையால் ஓடிவந்து என்னை முந்திவிடுவார்கள். பிரசாதம் மட்டும் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதால் அதில் போட்டிபோட மாட்டோம். சிலவேளைகளில் குலனை அய்யரோ, அம்மன் கோயில் அய்யரோ விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பூத்தட்டு இதில் ஏதாவது ஒன்றைத் தந்து ‘எல்லாருக்கும் காட்டுங்கோ' என்று சொன்னால் பயங்கரப் பெருமையாக இருக்கும்.

இதே காலங்களில் பனியில் நனைந்து சிரிக்கிற பூக்கள் அழகாயிருக்கும். தொடரும் தை மாசியிலும் பனி பொழிவதால் அந்தக் காலைவேளைகள் மனதை மகிழ்விப்பதாயே இருக்கும். நாள்தோறும் தாயறையில் சாமிப் படங்களுக்கு அப்பா பூப்பறித்து வைப்பார். அதற்காக வளர்க்கப்பட்ட பூமரங்கள் முற்றத்தை அலங்கரித்திருக்கும். மூன்று நிறங்களில் செவ்வரத்தை நின்றது. நந்தியாவெட்டை, நித்தியகல்யாணி, தேமா, மல்லிகை, நீலோற்பலம், ரோசா எல்லாம் நின்றது. அதிலும் இந்த நந்தியாவெட்டையும், நித்தியகல்யாணியும் கோடை காலத்திலேயே பயங்கரக் குளிர்ச்சியாயிருக்கும். பனிக்காலத்தில் செல்லவும் வேண்டுமா? அந்தக் குளிர்மைக்காகவே அவற்றில் சிலவற்றை எட்டிப் பறிப்பதுண்டு.

வரப்போகிற புதிய ஆண்டை வரவேற்பதற்குரிய ஆயத்தமாகவே ஊரில் மார்கழி மாசம் இருக்கும். தை பிறக்கும்போது புது வகுப்புக்குப் போகிற ஆவல் தருகிற அடி வயிற்று அவஸ்தை தவிர, புதுசாகப் பிறந்ததுபோல் மனம் குதூகலிக்கும். புதிதாய்ப் பிறந்த வருஷத்திலும் முதல் இரண்டு மாதங்களுக்காவது தொடர்கிற அந்தப் பனிநிறைந்த காலைகள், பள்ளிசெல்லும்போது கடந்து செல்லும் தோட்டவெளிகள், அந்த வெளிகளிலிருந்து வரும் இனம்புரியாத வாசம், மத்தியானங்களில் எங்களுக்குப் பட்டம்விட வசதியாய் வீசும் காற்று, மறக்க முடியவில்லை மார்கழித் திங்களை.

வாழ்க்கை எப்படியெல்லாம் எங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது. பட்டம்விட்ட, காலையில் அப்பாவின் சைக்கிளில் முன்புறம் அமர்ந்து கோயில் போன, மணி அடித்த சிறுவன், இன்றைக்கு அதே மார்கழித் திங்கள் அதிகாலையில் பெயர்கூடத் தெரியாத அயலவனுக்கு வணக்கம் சொல்லி கொட்டும் ‘பனி' துடைக்கிறேன். சங்கும், சேமக்கலமுமாய் திரிந்த யாரும் இன்றைக்கு ஊரில் இல்லை என்று கேள்வி. மணி அடிக்கப் போட்டி போட்ட பெட்டைகளில் ஒருத்தி கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாகி, அவளது அம்மாவுக்கு சமாந்தரமாக ஒரு பிள்ளை பெற்று, அந்தப் பிள்ளையின் தகப்பனை ‘தேசத்துரோக' முத்திரைக்குப் பலி கொடுத்து, இடுப்பில் பிள்ளையோடும் கிழிந்த துணியோடும் அலைந்துகொண்டிருந்தாள் (அலைந்துகொண்டிருக்கிறாள் என்று எழுதமுடியவில்லை). சுவாமி காவுவதற்கே இளந்தாரிகள் இல்லையாம், மணியடிக்க சண்டை யார் போடப்போகிறார்கள்?

இருந்தும் சில விஷயங்கள் மாறவில்லை. அப்பா இன்றைக்கும் கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார், திருவெம்பாவைக்கு, அதிகாலையில் எழுந்து. இப்போதும் தீவிரமாகக் கடவுளை நம்புகிறார். இன்றைக்கும் வீட்டின்முன்னால் எல்லாப் பூமரங்களும் நிற்கும் என்று நினைக்கிறேன். சைக்கிளில் தாவி ஏறும்போது எட்டி ஒரு பூவைப் பறித்துக் கொண்டுபோகிற வழக்கம் தம்பியிடம் இருக்கிறதா தெரியவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் சொர்க்கம்தான். இருந்தும், சொர்க்கமே என்றாலும்......

Sunday, 6 December 2009

இன்றைய யாழ்ப்பாணம்

இன்றைக்கு இருக்கிற யாழ்ப்பாணம் பற்றிய யாழ்ப்பாணத்துக் கலாச்சாரக் காவலர்களின் புலம்பல்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. யாழ்ப்பாணம் கலாசாரம் மிகுந்த ஒரு இடமாகவே இதுவரை பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான யாழ் மைந்தர்களுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவதில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்ன ‘தப்புக்கள் வெளியே தெரியாதவரை யாவரும் புனிதர்களே' என்கிற வாக்கியம் இன்றைக்கு யாழ்ப்பாணம் சீரழிந்துவிட்டதாகப் புலம்புகிறவர்களுக்கும் பொருந்தும். இதுவரை பெரியளவில் வெளியில் பேசப்படாமல், வெளியில் தெரியாமல் இருந்த சில விஷயங்கள் இப்போது வெட்டவெளியில் நடக்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசமே.

இவர்கள் வைக்கிற குற்றச்சாட்டுகளில் சிலவற்றைப் பார்ப்போமே. இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே facebookல் தம்பி ஒருவர் திரட்டிய பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு நானும் கொஞ்சக்காலம் ‘கலாசார பூமி'யாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டியவன் என்கிற காரணத்தால் எதிர்வினையாற்றவேண்டி வருகிறது. யாழ்ப்பாணத்தில் திறந்த வெளி விபசாரம் நடக்கிறதாம். நான் இருந்த காலத்திலும் நடந்தது. செல்வநாயகம் அண்ணா ஒரு பெண்ணுக்குப் பச்சை மட்டையால் அடியும் போட்டார். ஆனாலும், அந்தப் பெண்ணுடன் போன ஆண்கள் பற்றி யாருமே கவலைகொண்டாரில்லை. இங்கே பல்லிளிக்க ஆரம்பிக்கிறது பொதுப்புத்தி. எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. எங்கள் பகுதியில் பணக்காரன் வீடு என்று ஒரு சமூகம் இருக்கிறது. இவர்கள் பெரிய வளவுகளில் வீடு கட்டி வாழ்ந்தவர்கள். வீடு கட்டி வாழ்வதைவிட, அவர்களின் வளவுக்குள் சில ‘சின்ன வீடுகள்' இருப்பது கௌரவம் என்று வாழ்ந்தவர்கள். இதைச் சொன்னது எனக்குக் கணிதம் படிப்பித்த ஆசான் ஒருவர். அதாகப்பட்டது, ஒருவனுக்குப் பல பேர். ஆனால் ஒருத்திக்கு ஒருவன் என்கிற ஆணாதிக்கக் கட்டுமானம்தான் இவர்கள் இன்றைக்குப் புலம்பும் சீரழிந்துபோன ‘யாழ்ப்பாணக் கலாசாரம்'.

சிறுமிகள் அணியும் உடைகளை யுவதிகள் அணிகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். முக்கால் காற்சட்டையோடு, மேலே ஒன்றும் இல்லாமல் பருத்த வண்டிகள் குலுங்க இந்த ஆண் சிங்கங்கள் நடைபோடலாமாம், ஆனால் பெண்கள் இழுத்துப் போர்த்தி கலாசாரம் பேணவேண்டுமாம். இதை இளைய சமுதாயம் ஒரு குற்றச்சாட்டாய் வைக்க இனிமேலும் இடம் கொடுக்கக்கூடாது. நீ பாரம்பரிய உடைகளை அணிகிறாயா? நீ கலாசாரத்துக்கு ஏற்ப வாழ்கிறாயா? இல்லையே. பிறகு எப்படி நீ ஒரு பெண் போடுகிற உடைகளை மட்டுப்படுத்துகிற ஆளாக முடியும்? (இதைவிட ஆண்கள் முக்கால் கால்சட்டை போடக்கூடாது என்று உடை விஷயத்தைக்கூட தாங்கள் தீர்மானித்த ஒரு கூட்டமும் இருந்தது). இங்கே மாறவேண்டியது உடைகள் அல்ல. நாங்கள் பார்க்கிற பார்வை. ஒரு வட்டத்துக்குள் இருந்துகொண்டு இவ்வளவுதான் உலகம் என்று இருந்தோம் என்றால், சந்ததி சந்ததியாக முன்னேறாமல் பின்தங்கிப்போய்விட வேண்டியதுதான்.

சந்து பொந்துகளில் காதலன் மடியில் காதலி உட்கார்ந்திருக்கிறாளாம். அடச் சீ... அவர்கள் என்ன... வேண்டாம். என் வாயைக் கிளறவேண்டாம். தெருவில் கூடும் நாய்களைக் கல்லால் அடித்துப் பிரிக்கிற கூட்டம், ஒரு ஆணும் பெண்ணும் அந்நியோன்னியமாக இருந்து உரையாடுவதை விமர்சிக்கிறது. நான் இருந்த போது நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டியதை எல்லாம் சில பேர் யாழ்ப்பாணத்துப் பற்றைகளில் செய்தார்கள். கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் அவர்களைப் பிடித்த ‘கலாசாரக் காவலர்கள்' ஆணை மிரட்டிக் கலைத்துவிட்டு, பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு அதைப் பெரிதாகப் பீற்றியுமிருக்கிறார்கள். அதாகப்பட்டது கலாசாரம் காக்கிறோம் என்கிற பெயரில் ஆணாகப்பட்டவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஒரு பெண் காதலன் மடியில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தால் ‘கலாசாரம் சீரழிகிறது. கலாசாரம் சீரழிகிறது' என்கிற கூச்சல். இதில் ஆண்களின் செல்லிடப்பேசிகளில் பெண்களும், பெண்களின் செல்லிடப் பேசிகளில் ஆண்களும் மட்டுமே பேசுகிறார்கள் என்கிற புலம்பல்வேறு. இப்படிப் பேசுவதாலும் கலாசாரம் கெடுகிறது என்றால், ஒரு பொதுவிழாவில் ஒரு ஆணும் பெண்ணும் பேசினால்கூட கலாசாரம் கெட்டுவிடுமல்லவா???? என்ன அபத்தமான வாதம் இது?

அதே போல நீலப்படங்களை சீ.டி.க்களாகவோ அல்லது இணையத்திலோ தேடும் இளைஞர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களை அப்படி அலைய வைத்ததில் எங்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இந்தக் கலாசாரக் காவலர்கள் உணரவேண்டும். அவர்களுக்கு நீலப்படம் போட்டுக்காட்டுங்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் ஆண் பெண் உடலமைப்பு முதல் இன்ன பிற விஷயங்களை உள்ளடக்கிய பாலியல் கல்வி என்பது நிச்சயமாக எங்களின் சமூகத்துக்குத் தேவை. எங்களின் சமூகம் மட்டுமல்ல. உலகில் பல சமூகங்களின் நிலையும் இதுதான். இது ஒன்றும் கேவலமானதும், விகாரமானதும் அல்ல. பொது வெளியில் பேசப்படவேண்டியது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம். என் பதினமங்களில் எனக்கும் இது தொடர்பான தேடல், தவிப்பு இருந்தது. இங்கே தான் நான் எங்கள் பிதாமகன் சுஜாதாவுக்கும், ஆசான் ஜெவட்டி என்கிற ஜெபரட்ணத்துக்கும் நன்றி சொல்லவேண்டும். ஜெபரட்ணம்தான் பாலியல் பற்றிய கற்கை முக்கியமானது என்ற கருத்தின் விதையை எனக்குள்ளே விதைத்தவர், ஒரு நாற்பது நிமிட வகுப்பில் சர்வசாதாரணமாக அவர் சொன்ன 5 நிமிடக் கருத்தொன்றின் மூலமாக. தமிழ் சினிமாப் பாடல்களைத் தணிக்கை செய்கிற சமூகத்தில் பாலியல் பற்றிய பொதுவெளி உரையாடல்கள் சாத்தியமா என்பது சந்தேகமே.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, அந்த நண்பர் கூறியிருக்கிற வேறு சில குற்றச்சாட்டுகளை நான் தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறேன். ராணுவக் கோப்ரல் ஒருவரின் பெயரைச் சொல்லிச் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்கிறார்களாம். யாரையாவது அடிப்பதையே ஒரு நாள் இலட்சியமாகக் கொண்டு குழுமங்கள் பல அலைகின்றனவாம். இவைகளை நான் 'கலாசாரச் சீரழிவு' என்ற பதத்துக்குள் உட்படுத்தாமல் ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட சீரழிவாகப் பார்க்க விரும்புகிறேன். சினிமாக்களின் தாக்கம், இது வரையில் இருந்த, இப்போது இருக்கிற அடக்கு முறையால் ஏற்பட்ட மனச் சிதைவுகள் இவற்றுக்குரிய காரணங்களாக இருக்கலாம்.

இப்படியான செயற்பாடுகள் அந்த நண்பருக்கு வருத்தம் அளித்திருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ‘கலாசாரத்துக்குப் பேர்போன யாழ்ப்பாணம்' என்கிற பொதுப்புத்திக்கு இந்தச் செய்திகள் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இவற்றுடன் சாதீயமும் கோரமுகம் கொண்டு இருந்து வருவது உண்மை. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருந்தாலும் இதையும் இங்கே சொல்லித்தானாகவேண்டும். யாழ்ப்பாணத்தில் sexual orientation என்கிற பதத்தில் அடங்குகிற அத்தனை வகைகளும் இருக்கிறது. அதே போல் incest கூட. நான் சொல்வது அதிர்ச்சியாகவும், யாழ்ப்பாணத்தை வசைபாடுவது போலவும் இருக்கலாம். என்றைக்காவது ஒரு நாள் என்னைப் போல இன்னொருவனும் இவற்றைக் கண்டுணர்வான். அல்லது கண்டுணர்ந்த ஒருவன் துணிந்து சொல்லுவான். இந்தப் பதிவுக்கு வரும் வசைகளுக்கு நான் சொல்கிற பதில்களுக்கு அப்படி ஒருவன் பலம் சேர்ப்பான்.

Thursday, 19 November 2009

விஜய்

விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள். அப்படி ஏற்றுக்கொண்ட வேலை அது. நேர்முகத்திலேயே செய்பணிகளுக்கான உப தலைவர் லொய்ட் சொல்லியிருந்தார், விஜய் என்கிற இந்தியருடன்தான் நீ பணியாற்றவேண்டும் என்று. எங்கள் பணிப்பகுதியின் முகாமையாளரான டெரிக் என்பவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். முதல்நாள் நேரடியாக டெரிக்கின் அலுவலகத்துக்கே சென்றேன். அவர் என்னை விஜயிடம் ஒப்படைத்து, ‘இன்று முதல் இவன் இங்கே உன்னுடன் வேலைசெய்யப்போகிறான். இவனுக்கு அன்றாடக் கருமங்களைப் பற்றிச் சொல்லிக்கொடு என்றுவிட்டு டெரிக் விடைபெற, விஜயுடன் ஐக்கியமானேன்.

ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். வெளிநாட்டுக்காக நான் பயன்படுத்தும் ஆங்கிலப் பெயரைச் சொல்ல, ‘அதுதான் உன்னுடைய உண்மையான பெயரா?' என்றார். நான் இல்லை என்று என் பெயர் சொல்ல ‘ஓ... அப்போது நீ இந்துவா?' என்றார். ‘இந்துவாகத்தான் பிறந்தேன்' என்றேன் வேகமாக. 60 வயதான அவருக்கு அது சரியாகப் புரிந்து போகாமல் இருக்க அவரது வயது மட்டும் காரணமில்லை. தன்னுடைய பெயர் விஜய் குமார் ஷர்மா என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரை திரு.ஷர்மா அல்லது திருவாளர். விஜய் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். காலைச் சிற்றுண்டிக்கான இடைவேளையில் இருப்பதற்கு இடம் தேடியபோது விஜய் என்னை அழைத்துத் தன்னுடைய மேசையில் இடம் தந்தார். அங்கே வேலை செய்யும் சீனப் பெண்ணொருத்தி இருவரையும் வித்தியாசமாகப் பார்த்துச் சிரித்தாற்போல் தோன்றியது (அவளது கண்கள் எப்போதுமே சிரித்துக்கொண்டேயிருந்தன). கடந்து போன ஒரு கரீபியன் பெண் ‘அட, அதெப்படி விஜய் இவனுக்கு மட்டும் உன் மேசையில் இடம் கொடுத்திருக்கிறாய்?' என்றாள். விஜய் சிம்பிளாகச் சொன்னார், 'அவன் ஒரு இந்து ஆண். அதனால் அவன் எனக்குச் சரிசமமாக இருந்து சாப்பிடலாம்'. அதிர்ந்தேன்.

விஜய் என்னை ஒரு சக மனிதனாகப் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் தன்னைப் பற்றி அடுக்கினார். 'நான் ஒரு பிராமணன் தெரியுமா?. என்னுடைய குடும்பப் பெயரே ஷர்மா. நாங்களெல்லாம் மற்றவர்கள் கண்முன்னே சாப்பிடக்கூடாது. நீ ஒரு இந்து ஆணாக இருப்பதால் உனக்கு இந்த மேசையில் இருப்பதற்கு அனுமதி இருக்கிறது' என்றார். எனக்கு மதிய உணவருந்த ஒரு புதிய இடம் தேடவேண்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. காரணம், நல்ல மட்டன் கறிவைத்து சாண்ட்விச் செய்துகொண்டு போயிருந்தேன் அன்றைய மதிய உணவாக. பின்னர் அவரே சொன்னார், ‘இலங்கை இந்துக்கள் மாமிசம் சாப்பிடிவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் சாப்பிடுவாயா?. சாப்பிடுவாய் என்றால் பரவாயில்லை. நீ ஒரு இந்து ஆண். ஆகவே உனக்கு இந்த மேசையில் அனுமதி இருக்கிறது'. அப்பாடா...........

விஜய் வேலை செய்யும்போதான சின்னச்சின்ன உரையாடல்களிலும், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார், ‘நான் ஒரு பிராமணன், அதுவும் ஐயர்' என்று. இலங்கை இந்துக்களும் இந்திய இந்துக்களும் வழிபடும் தெய்வங்கள் பற்றி வகுப்பெடுத்தார். கார்த்திகேயன் (கார்த்திக் என்பது விஜயின் பாஷை) என்கிற முருகனின் பெயருக்கும், எனக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்பா சொல்வார் என்று சொல்ல, ‘உங்கள் குடும்பம் நல்ல இந்துக் குடும்பம்' என்று சொல்லிச் சிரித்தார்.

அதன் பின் பல விஷயங்கள் உரையாடினோம். விஜய்க்கு கிரிக்கெட் பிடித்திருந்தது. சினிமா பிடித்திருந்தது. கனடா பிடித்திருந்தது. நீல்கிரீஸ் இட்டலி பிடித்திருந்தது. ஏ-வன் லட்டு பிடித்திருந்தது. ஆப்பிள் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் (அந்தச் சீனப் பெண்ணை இப்படித்தான் கூப்பிடுவார் சிங்கன்) பிடித்திருந்தது. எல்லாவற்றையும் விட இந்துமதம் பிடித்திருந்தது. சிவ சேனாவைப் பிடிக்கவில்லை. மோடியைப் பிடிக்கவில்லை. இவர்கள் எல்லோரையும் விட முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை தெரிந்திருந்தது. அரசியல் தலைவர்கள் பெயர் தெரிந்திருந்தது. பிரபாகரனின் கதை தெரிந்திருந்தது. சில தமிழ்ச் சொற்களும் தெரிந்திருந்தன. எல்லாவற்றையும் விட மற்ற மதங்களை மட்டம்தட்டிப் பேசத் தெரிந்திருந்தது.

மதம் பற்றியும், தன் குலம் பற்றியும் பெரிதாகப் பீற்றிப் பீற்றியே கடுப்புற வைப்பார் விஜய். நானும் இயன்றவரை இந்தத் தலைப்பிலிருந்து விலகி கிரிக்கெட் பற்றி, வேலை பற்றியெல்லாம் பேசிப்பார்ப்பேன். சுற்றிச் சுற்றி இங்கேதான் வருவார் விஜய். இப்படியான ஒரு நாளில் மதிய உணவு நேரத்தில் புதிதாகச் சேர்ந்த என்னுடன் பேசுவதற்காக லொயிட் எங்கள் பகுதிக்கு வந்தார். ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்து லொயிட், பேர்கர் அடைந்த வாயால் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நானும் சொசேஜ் ரோல் அடைந்த வாயால் பதில் சொன்னேன்.

லொயிட் விடைபெற்றுத் திரும்புகையில் நானும் லொயிடும் கவனித்தோம். வியர்த்து விறுவிறுக்க, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விஜய் எழுந்து நின்றார். 'ஏதாவது பிரச்சினையா விஜய்?' என்றார் லொயிட். ‘இல்லை சேர். நீங்கள் என்னுடைய முதலாளி. உங்கள் முன் நான் நிற்பது தவறாகும். என்ன இருந்தாலும் எங்களுக்குச் சோறு போடும் முதலாளி நீங்கள்' என்று உளறினார். லொயிட் 'என்னப்பா இது?' என்கிற மாதிரி என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்ந்தார். கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க, ஆறடி உயரமான, தன் பிறப்புப் பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளைக் கொண்ட, அந்த மதிப்பீடுகளைப் பற்றிய கற்பிதங்களை எனக்குள் ஊட்ட முயன்ற அந்த ஆரியப் பிராமணருக்கு, சுய மரியாதை என்பதன் அர்த்தத்தை விரைவில் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

Saturday, 31 October 2009

மனித உருவில் மிருகங்களாய் நாம்

பம்பலப்பிட்டிக் கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவண்ணன் சிவகுமார் என்கிற இளைஞன் பலவந்தமாகக் கடலுக்குள் தள்ளப்பட்டு, கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சரியான மொழியில் சொல்வதென்றால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியும் சம்பந்தப்பட்டிருக்கிறார். (இது முழுமையாக காவல்துறை மட்டுமே செய்த சம்பவம் என்பதாக மிக வேகமாகத் திரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).



நடந்தது என்ன?
நடந்தது என்ன என்பதைப் பற்றி வருகின்ற செய்திகள் வழமைபோலவே முன்னுக்குப் பின் முரணாக வருகின்றன. மேற்படி இளைஞர் பம்பலப்பிட்டிப் புகையிரத நிலையத்துக்கு அண்மித்த கடற்கரைப் பகுதியில், கடற்கரை வீதியால் போகின்ற வருகின்ற வாகனங்களின் மீது கற்களை வீசி எறிந்திருக்கிறார். அப்படி அவர் எறிந்த கல் பட்ட வாகனங்களில் ஒன்று இராணுவ/காவல்துறை வாகனம் எனவும், அதிலிருந்து இறங்கிய அதிகாரிகளைக் கண்டதும் அவர் புகையிரதப் பாதையைத் தாண்டி கடலை நோக்கி ஓடினார் என்றும் சொல்லப்படுகிறது. ஓடியவர் அப்போது அங்கே வந்த புகையிரதத்தையும் பதம் பார்க்க, புகையிரதம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து இறங்கிய அல்லது அந்த இடத்தில் நின்ற இரு சாதாரணக் குடிமகன்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் இந்த இளைஞனைப் பிடிக்க முயல, இளைஞன் கடலுக்குள் செல்ல, ஆத்திரமுற்ற மற்றவர்கள் இளைஞனை மேலும் மேலும் கடலுக்குள் பலவந்தமாகத் தள்ள, கடல் அலைகள் இளைஞனைக் காவுகொண்டுவிட்டன. இப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுவிட்டார். ‘இலங்கைக் காவல்துறையின் அராஜகம்' என்பதாக செய்தி ஊடகங்கள் அலறவும் ஆரம்பித்தாயிற்று.

என்ன பிரச்சினை?
இங்கு நடந்த சம்பவம், சட்டரீதியாகக் கொலை. அதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதற்கு சிங்கள-தமிழ் இனத் துவேசம் 'மட்டும்' காரணம் என்று மேம்போக்காக வைக்கிற குற்றச்சாட்டுகளை மனித இனத்துக்கே செய்யப்படும் துரோகமாக நான் முன்வைப்பேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரோசா வசந்த் எங்கள் எல்லார் மீதும் வைத்த ‘கொலைகாரக் கும்பல்' குற்றச்சாட்டின் இன்னொரு வடிவம்தான் இது. ‘மாட்டினான் ஒருத்தன்' என்பதாகத் தங்களை பொதுநலன் காப்பவர்களாகக் காட்டிக்கொள்ள ஒரு சிலர் முயன்றதன் விளைவு, மனநிலை பிறழ்ந்த ஒரு இளைஞனின் (அப்படிக் குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது) மரணம். இந்தச் சம்பவத்தில் மனநிலை பிறழ்ந்த ஒரு ஜீவன்தான் இருந்ததா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடித்துக் கொன்ற மூவரையும் (சிலர் ஐவரென்கிறார்கள்) மனநிலை பிறழ்ந்தவர்களாக என்னால் பார்க்கமுடிகிறது. அந்த இடத்தில் 6 காவல்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். மேலும் நான்குபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில திறமைசாலிகள் இந்தச் சம்பவத்தை அற்புதமாக வீடியோ பிடித்திருக்கிறார்கள். சாட்சி சொல்லாமல் இன்னும் எத்தனையோ பேர் ஒளித்துமிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மனநோயாளிகள். மன நிலை பிறழ்ந்த ஒருவனை அடையாளம் காணத்தெரியாமல், அவனுக்குரிய தகுந்த வாழ்வியல் நிலமைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகள் முன்னால், அநியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகக் கண்களின் பார்வையில் அந்த இளைஞன் சாகடிக்கப்பட்டதனால், நீங்கள், நான் உட்பட எல்லோரும் எங்களை மனநோயாளிகள் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறோம்.

இந்தப் பாதகத்தை தமிழ்-சிங்களத் துவேசமாக மட்டும் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ‘மாட்டினாண்டா ஒரு தமிழ் நாய்' என்கிற மாதிரியான ஒரு சிந்தனை ஓட்டம் ஓடியிருக்கலாம். ஒரு சிங்களன் எம்மவர் பகுதியில் இதேபோல் மாட்டியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஆனால் அப்படியான ஒரு சித்தரிப்புமூலம் இதன் அடியாழத்தில் ஒளிந்திருக்கக்கூடிய ஒரு கேவலமான மனித மன இயல்பை நாங்கள் மழுப்ப முயல்கிறோம். இதை வைத்து அரசியல் பண்ணுபவர்கள் பண்ணிவிட்டுப்போங்கள்... எனக்கு ஒன்றுமில்லை. அதற்குமுன் நவம்பர் 16, 2005 என்ற நாளை நான் திரும்ப நினைவூட்டவேண்டி இருக்கிறது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில், யாழ் மாவட்டத்தில் நடந்த சில திருட்டுக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சமூக விரோதி என 'காலாச்சாரம் பேணும் இளைஞர் குழுவால்' சந்தேகத்தின் பேரில் முத்திரை குத்தப்பட்ட 20 வயதான தினேஷ் என்ற இளைஞனை, சுற்ற நின்று கதறிய அவனது தாய்க்கும் சகோதரிக்கும் முன்னால் மூன்று மணித்தியாலங்களாக விக்கெட் கொட்டன்களாலும், பொல்லுகளாலும் அடித்துக் கொன்ற மிலேச்சத் தனத்துக்கு இது இணையே அல்ல. இதுபற்றி ஈழநாதன் வலு காட்டமாக ஒரு பதிவு போட்டார் என்றும் நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க காட்டம் குறைத்து மீள்பதிவிட்டார் என்றும் கேள்விப்பட்டேன். மற்றும்படி இந்தச் சம்பவம் பற்றி யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இன்றைக்கு செத்தவன் தமிழன், கொன்றவன் சிங்களன் என்றதும் உணர்வு பொத்துக்கொண்டு வந்துவிட்டது இவர்களுக்கெல்லாம்.

இப்படியான மிலேச்சத்தனங்கள் அரசியல் அல்ல நண்பர்களே. அதையும் தாண்டி மனிதகுலத்தை வேரோடறுக்கக்கூடிய கேவலமான மனச்சிதைவுகளின் வெளிப்பாடு. என்னைக் கேட்டல், சிவகுமாரைக் கொன்ற சிங்களனும், தினேஷைக் கொன்ற தமிழனும், பெஸ்ட் பேக்கரியில் வைத்து தாண்டவம் ஆடிய காவிகளும், முஸ்லிம் நாடொன்றில் கடையில் பாண் திருடிய ஐந்து வயதுச் சிறுவனின் கைகளை வாகனத்தால் நசுக்கி முடமாக்கிய மதபிதாவும் ஒரே ஜாதி என்றே சொல்வேன். அத்தனை பேரும் மனம் பிறழ்ந்தவர்கள், செத்துப்போன சிவகுமாரைப் போலவே.

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. நான் இப்போது இருக்கிற இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 9-1-1 என்று உங்கள் கையில் இருக்கும் தொலைபேசியில் அழுத்தி சத்தமில்லாமல் விஷயம் சொன்னால் நீங்கள் தொலைபேசி முடிக்கமுன் வந்து நிற்கும் காவல்துறை உள்ள இந்த நாட்டிலேயே, பலர் அடித்தும், வாகனங்களால் ஏற்றியும், சுட்டும், குத்தியும் கொல்லப்படுகிறார்கள், வெட்ட வெளிகளில். மிக இலகுவாக இந்தக் காட்சிகளை செல்ஃபோன் கமராவில் படம் பிடிக்கும் ஒருவருக்குக்கூட 9-1-1 ஐ அழுத்தித் தகவல் சொல்லும் நோக்கம் வருவதில்லை. இங்கேயே இப்படி என்றால், காவல்துறையே சேர்ந்து சாகடிக்கும் ஊரில் இருப்பவர்களின் மனநிலையைச் சொல்லவா வேண்டும்?

எங்கள் ஊரில் திருமணத்துக்கு வெளியேயான தொடர்பொன்றினைச் சாக்காக வைத்து ‘இருட்டடி' கொடுக்கப்பட்ட ஒருவர் இறந்து போனதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை சிலர் நியாயப்படுத்த முயன்றதும் என் மனதில் இப்படிப்பட்ட ‘குழுமப் புத்தி' அல்லது ‘பொதுப் புத்தி' பற்றிய வெறுப்பை விதைத்திருக்கிறது. தண்டனை கொடுக்க நாங்கள் யார் என்கிற ஒரு எண்ணம் வந்தாலே போதும். இப்படியான மிலேச்சத்தனங்கள் நடக்காது. அடுத்தவனை நேசிக்கப்பழகு, உலகம் பூங்காவனமாகும். ஆனால் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இன்றைய சமூகங்கள் எல்லாமே ‘காசுக்கு உழைக்கும்' இயந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன.

சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள் சிங்களக் காவல்துறையின் அராஜகம் என்று. இந்த சிவகுமார் விஷயத்தில் நேரடியான குற்றவாளிகளை விட மறைமுகமான குற்றவாளிகள்தான் அதிகம். அந்த மன நலம் பிறழ்ந்த இளைஞனை இப்படிக் கண்காணிப்பு இல்லாமல் அலையவிட்ட அவன் குடும்பத்தில் இருந்து குற்றம்சாட்டிக்கொண்டு போகலாம். ஆனாலும் இதெல்லாம் அந்த இளைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தரப்போவதில்லை. தினேஷுக்கும் அவன் குடும்பத்துக்கும் நிகழ்ந்த அநீதியும் அங்ஙணமே. இன்னும் கொஞ்ச நாளில் நீங்களோ, நானோகூட இப்படிக் கொல்லப்படலாம். அந்த மரணத்தில் ஏதாவது அரசியல் இருந்தால் கண்டுகொள்ளப்படுவோம். இல்லாவிட்டால் உலகில் நாள்தோறும் நிகழும் மரணக்கணக்கில் ஒன்றாக எழுதிவைக்கப்படுவோம்.

இதை சிங்கள-தமிழ் துவேசப் பிரச்சினையாக நோக்கும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதை வெகுநிச்சயம் வரவேற்கிறேன். ஆனால், பூதாகரமான பிரச்சினை ஒன்றை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கும் மாபெரும் துரோகம் ஒன்றை அறிந்தே செய்கிறீர்கள் தோழர்காள். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

Friday, 16 October 2009

கந்தசாமி-அருண்மொழிவர்மன்-சுஜாதா

கந்தசாமியில் இன்னொரு அபத்தம்
சென்ற ஞாயிற்றுக்கிழமை ‘ஏதிலிகள்' ஏற்பாடு செய்திருந்த 'சுடருள் இருள்' நிகழ்வு-2க்குப் போயிருந்தேன். ஆரம்பத்தில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் எந்த அறையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அருண்மொழிவர்மன் மூலம் டி.சே. தமிழன் என்கிற இளங்கோவின் அலைபேசி இலக்கத்தை எடுத்து அறைக்குள் செல்வதற்கு முன்னரே அன்று போடுவதாகச் சொல்லப்பட்ட The Boy in the Striped Pyjamas என்ற படத்தின் 15 நிமிடம் ஓடியே போய்விட்டது. இருட்டுக்குள் தடவித்தடவி ஒரு நிகழ்ச்சிக்கு (அதுவும் எம்மவர் நிகழ்ச்சிக்கு) பிந்திப் போய் அமர்ந்த அனுபவம் புதுமையாக இருந்தது. வழமையாக ஆகக் குறைந்தது அரை மணித்தியாலம் காக்க வைப்பார்கள்.

நிகழ்வுகள் முடிந்ததும் மேற்படி படத்தைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடைபெற்றது. அந்தப் படத்தில் இருந்த குறியீடுகள், பாதிப்பு அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இல்லாமல் (யூதர்கள்) பாதிப்பைக் கொடுத்தவர்களின் கோணத்தில் இருந்து (ஜேர்மானியர்கள்) பக்கமிருந்து கதை சொன்ன விதம், யூதர்களின் பிரச்சார யுக்தி என்றெல்லாம் நிறையப் பேசிக்கொண்டிருந்தபோது, (அல்லது அவ்வாறான உரையாடல்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது) தமிழ்சினிமாப் பக்கம் உரையாடல் திரும்பியது. அப்போது தர்ஷன் கந்தசாமி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா? அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா? அதாவது யூதன் என்றால் கொல்லலாம் என்பது பொதுப்புத்தியில் உறைந்து போய்விட்டது. நாளைக்கே ஈழம் பற்றியும் சர்வசாதாரணமாக இப்படி ஒரு வரி வந்துவிடலாம். சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் கேட்காது.

அருண்மொழிவர்மன் மீதான பொறாமை
நிகழ்வு முடிந்ததும் அருண்மொழிவர்மன் தான் புதிதாகக் குடியேறிய மனைக்கு வாருங்கள் சற்றுநேரம் பேசலாம் என்றார். சில பல பெரியவர்களும் சென்றதாலும், அருண்மொழியாரின் சினேகபூர்வமான அழைப்பை உதாசீனம் செய்ய முடியாமலும் அங்கே சென்றேன். அன்றைக்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பும் இருந்தது. எவ்வளவு நேரம் தாழ்த்தி பிறந்த நாளுக்குப் போக முடியுமோ அவ்வளவு நேரம் தாழ்த்த விரும்பிய எனக்கு இது நல்ல வாய்ப்பாகிப் போய்விட்டது. சிலருக்குத் தேநீரும் சிலருக்கு மற்ற நீரும் கொடுத்துவிட்டு, அருண்மொழிவர்மன் சமைக்கலானார். சமைக்கும்போது மனிதருக்கு அருகில் நின்று பேசிப்பேசித் தொல்லை கொடுத்ததால் கடுப்பானாரோ என்னவோ, ஒரு காரியம் செய்தார். அவருடைய புத்தகங்களைப் பார்வையிட அழைத்தார்.

அடப்பாவி... நாங்களெல்லாம் வீடு மாறிப்போகும்போது துணிகளையும், தட்டுமுட்டு சாமான்களையும் கட்டிக்கொண்டு வருவோம். இந்த மனிதர் புத்தகங்களைக் கட்டி எடுத்து வந்திருந்தார். என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இவ்வளவு புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர் இவர் மட்டுமே. அவரது வாசிப்புத்தான் அவரது எழுத்துக்களை மெருகூட்டி, வாசிப்பவருக்கு நல்ல வாசிப்பனுபவமாகத் தருகிறது. அத்தனை புத்தகங்களை ஒரு சேரப் பார்த்தபோது ஒரு தோழமை கலந்த பொறாமை ஏற்பட்டது. நானெல்லாம் கையில் காசிருந்தால் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் செலவளித்திருப்பேன். இனிமேல் தேடித் தேடிப் புத்தகங்கள் வாங்கப்போகிறேன். இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........

சுஜாதா ஒரு நிர்வாண வியாபாரி
அண்மையில் கானா பிரபாவின் றேடியோஸ்தபதியை மேய்ந்த ஒரு நாளில் அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி மீள் நினைவில் என்றொரு பதிவு கண்ணில் தட்டுப்பட்டது. சுஜாதா மீதான மரியாதை இன்னொரு படி கூடிப்போய்விட்டது. காரணம் அந்தப் பேட்டியின் இறுதியாக கானா பிரபாவின் கேள்வி ஒன்றுக்கு சுஜாதா சொன்ன பதில். 17.42 நிமிடங்கள் ஓடும் அந்த ஒலிப்பேட்டியில் சுஜாதாவின் இலக்கியம், தொழில் நுட்பம், கவிதை, எழுத்துலகு எல்லாவற்றையும் விட ஒரு விஷயத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்தார். அதுதான் என்னைக் கவர்ந்தது.

கானா பிரபா: நீங்கள் ஈழத்தமிழர்களின் குறைகளையும் அங்கு நடக்கும் போர்ச்சூழலையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மனிதராக, அதாவது எழுத்தாளர் என்ற பாவனையைக் கடந்து, ஒரு சாதாரண மனிதராக உங்களுடைய பார்வையை, கருத்துக்களைப் பல விடயங்களில் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். இன்று(2002ல்) இந்த ஈழத்தமிழர்களுடைய நிலையைப் பற்றிய உங்கள் பார்வையைச் சொல்லுங்களேன்?

சுஜாதா: ஈழத்தமிழர்களுக்கு நான் சொல்லவேண்டிய மிகமுக்கியமான, மிகமுக்கியமான அறிவுரை என்று சொல்லவேண்டாம், மிக முக்கியமான விருப்பம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், தாய்நாட்டை மறக்காதீர்கள். அந்த விதத்தில் உங்களுடைய திறமையும் உங்களுடைய அந்த நாள் நிச்சயம் வரும் என்றுதான் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்களை நம்பாதீர்கள். எங்களை நம்பினால் நாங்கள் கைவிட்டுவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் நிறையப் பேசுவோம். உங்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒரு மனோதத்துவ ரீதியில் இருக்குமே ஒழிய செயற்பாட்டில் இருக்காது. அதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது உங்களுக்கு சரியாக உதவவில்லை என்று.

சுஜாதாவை நே(வா)சித்தவர்களுக்கு இன்னும் ஒரு காரணம், அவரை இன்னும் அதிகமாக நேசிக்க. தூஷித்தவர்களுக்கும் இன்னுமொரு காரணம், ‘எப்படி ஒரு பார்ப்பான் எங்களை நிர்வாணமாக்கலாம்' என்று திட்ட. அவர் திறமைகளை மட்டுமல்ல, சில துரோகங்களையும் முன்கூட்டியே கண்டுணர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கானா பிரபா அண்ணனுடனான அந்தப் பேட்டியை கீழே முழுமையாக இணைக்கிறேன். அந்தப் பேட்டியில் சுஜாதா சொன்னதைவிட இன்னொரு பாடமும் இருக்கிறது. தரமான ஒரு வானொலிப் பேட்டி எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் பேட்டி.


Sujatha Interview - Kana Praba

Monday, 12 October 2009

பிள்ளைகளின் சுயவெளி

சென்ற செவ்வாய்க்கிழமை, மருமகனை மிருதங்க வகுப்புக்கு அழைத்துச் சென்றிருந்தேன். வகுப்பு நேரம் தொடர்பாக ஆசிரியருடன் உரையாட வேண்டியிருந்தது. உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்களைக் கடந்து போன ஒரு மாணவனைப் பார்த்து உயர்ந்த குரலில், ‘உப்பிடியெல்லாம் வகுப்புக்கு வரேலாது. எங்கை அம்மா, எங்கை அப்பா?' என்று அதட்டினார். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த மாணவன் கொஞ்சம் ‘ஸ்ரைலாக' தலைமயிர் வெட்டியிருந்தான். ‘உப்பிடி எல்லாம் பிள்ளைகளைக் கொண்டுவரக்கூடாது பாருங்கோ. உப்பிடி பிள்ளை வளக்கிறதெண்டா காரில ஏத்தி ரவுடியளோட விடுங்கோ. இஞ்ச அனுப்பவேண்டாம்' என்று கூட்டிவந்த தாய்க்கும் ஏச்சு விழுந்தது. நான் பேசாமல் என்னுடைய காருக்குள் வந்துவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் தாயும் மகனும் வெளியே வந்தார்கள். இருவருக்கும் முகம் கறுத்திருந்தது. எங்கோ வெளியே போனார்கள். ஒரு அரை மணித்தியாலத்தில் திரும்பி வந்தார்கள். அந்த மாணவனின் தலைமயிர் ஒழுங்காகத் திருத்தி வெட்டப்பட்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. ஆசிரியர் செய்தது சரியா தவறா என்கிறமாதிரியான ஒரு விவாதம் என மனதுக்குள்ளாக எழுந்தது. அந்த ஆசிரியர் மட்டுமல்ல, பல பெற்றோர்களும் மகன்கள், மகள்களின் உடைகள் தடக்கம் பல விஷயங்களில் அவர்களின் சுயவெளிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக எனக்குப்படுகிறது.

பெற்றோர்கள் பலர், தம்முடைய பதின்ம வயதுப் பிள்ளைகளின் உடைத் தெரிவில் பயங்கரமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இங்கே பால் வேறுபாடு என்கிற கதைக்கே இடமில்லை. ஆனால் பிள்ளைகள் தம் சகபாடிகள் போல் உடை உடுத்துவதற்கு ஆசைப்படுகின்றன. காது குத்திய எல்லா ஆண் பிள்ளைகளும் ‘ரவுடி' என்கிற ஒரு பெரிய வட்டத்துக்குள் வந்துவிடுவது வழமையாகிவிட்டது. அதே நிலையில்தான் சிகையலங்காரமும். சில பெற்றோர் இதற்காகவே தலைமயிர் வெட்டும் இயந்திரங்களை வீட்டில் வாங்கிவைத்து பிள்ளைகளுக்கு தாமே சிகையலங்காரம் செய்கிறார்கள், அல்லது முடிதிருத்தும் இடத்தில் தங்களின் சிகைபோலவே வெட்டிவிடச் சொல்கிறார்கள். இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும், பிள்ளையின் சுயவெளியில் இவர்கள் நுழைவதால் வரும் பெரிய பிரச்சினைகளுக்கு இந்தச் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் காரணமாகின்றன.

இப்படியான அத்துமீறல்களுக்கு (பிள்ளைகளின் பார்வையில்) சில காரணங்களைப் பெற்றோர் முன்வைக்கிறார்கள். காது குத்தும், விதம் விதமாக தலையலங்காரம் செய்யும், வித்தியாசமாக உடையணியும் பிள்ளைகளை குழுமங்களில் சேர்ந்து நாசமாகிப் போயிருக்கும் இளைஞர்கள் தங்களவர்களாகப் பாவித்து, குழுமங்களுக்குள் இழுத்துப் போய்விடுகிற அபாயம் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஒரு பிள்ளையின் நடத்தை சமூகத்தால் தீர்மானிக்கப்படும்போது, இப்படியான உடை, சிகை மற்றும் இன்னபிற அலங்காரங்கள் குறிகாட்டிகளாகத் தொழிற்படுவதாக பல பெற்றோர் நம்புகிறார்கள். சற்றே கூர்ந்து பார்த்தோம் என்றால், அவர்களின் பயத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த ஆசிரியர் அன்றைக்குச் செய்தது ஒரு வகையில் ஒரு பதின்ம வயதுப் பையனின் சுய வெளிக்குள் அத்துமீறி நுழையும் ஒரு செயலாகவும் பார்க்கப்படலாம். அதேவேளை, பெற்றோரின் கண்ணோட்டத்தில் தன்னிடம் படிக்கிற மாணவன் வழிதவறிப் போகாமல் இருக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாகக்கூட பார்க்கப்படலாம். கலாசார இடைவெளி, வயது இடைவெளி, சுவை இடைவெளி போன்ற காரணங்களை ஒரு பொதுவான பார்வையாளனாக இருக்கிற நான் முன்வைக்கலாம். எது எப்படியோ, பொதுப்புத்தியில் ஆழமாக விழுந்துவிட்ட சிலவற்றை மாற்றுவது கடினமே.

Wednesday, 9 September 2009

பிள்ளைகளை நெருக்காதீர்கள்

நண்பன் பால்குடி திரும்பவும் கிளறிவிட்டார். எமது சமூகத்தில் கல்வி, கல்விப் பெறுபேறுகள் பற்றிய பார்வைமீதான என்னுடைய கோபங்களை 'பத்து வயசில...' என்கிற தன்னுடைய பதிவின் மூலம் மீண்டும் கிளறிவிட்டார். கொட்டித் தீர்க்கப் போகிறேன் இங்கே.

ஏற்கனவே ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வரைக்கும் பிள்ளை முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தை விட, தங்களின் சுயகௌரவம் பாதிக்கக் கூடாது என்கிற நோக்கில் எங்களைப் பிசைந்த கதைகளை நான் கூறியிருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எனக்கு பிரத்தியேக வகுப்புகள் நடந்தது பற்றியெல்லாம் கூறியிருக்கிறேன். என்னை மிகவும் கோபப்படுத்தும் பெற்றோருடைய மனோநிலைகளில் முதன்மையானது, தன்னுடைய பிள்ளையையும் இன்னொரு பிள்ளையையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது. எனக்கு என்ன எல்லாம் நடந்தது என்று பாருங்கள்.

நான் முன்னைய பதிவொன்றில் சொன்னது மாதிரியே பதினோராம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவனாக வருவேன். அப்போது Progress Report வரும்போதெல்லாம் என்னுடைய மதிப்பெண்களை ஞாபகம் வைத்துக் கொண்டதைவிட பகீருடைய, அரவிந்தனுடைய மதிப்பெண்களை ஞாபகம் வைத்துக் கொண்டதும், என்ன பாடத்தில் யாருக்குக் கூடிய மதிப்பெண் என்று ஞாபகம் வைத்துக் கொண்டதுமே அதிகம். மதிப்பெண்களைப் பார்த்தவுடன் முதலில் வரும் கேள்வி 'பகீருக்கு எத்தினை மாக்ஸ், தனஞ்சியனுக்கு எத்தினை மாக்ஸ்?' என்பதாகத்தான் இருக்கும். (அந்தக் காலத்தில ஏன் அடிக்கடி அவனுடைய மதிப்பெண்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று பகீருக்கு இப்ப விளங்கும்).
இதவிடக் கொடுமை தனியார் கலாசாலையில் நடக்கும் சோதனைகளில் 'தாட்சாயணிக்கு எத்தினை மாக்ஸ்?' என்று கேட்பதுதான். தாட்சாயிணி யார் என்று கேட்கிறீர்களா? இலங்கையில் இருந்து எழுத ஆரம்பித்த முதல் பெண் பதிவர் என்று சயந்தன் அடிக்கடி குறிப்பிடும் சாயினிதான். இதில் பெரிய தலையிடி என்ன என்றால், தாட்சாயிணியுடன் இப்பதான் இணையமூலமாக ஓரிரு வார்த்தைகள் பேசுகிறேன். அந்த நேரம் ‘பெண்கள்' ‘ஆண்கள்' பேசுவதுகூட இல்லை. யாராவது வகுப்பில் குழப்படி செய்தால் ‘ரீச்சர், பெண்கள் குழப்படி செய்யினம்' என்று பெயரைக் குறிப்பிடாமல்தான் முறைப்பாடு செய்வோம். இந்த நிலையில் எப்படி நான் தாட்சாயிணியின் மதிப்பெண்களைக் கேட்க முடியும். ‘அவளுக்கு உன்னைவிடக் கூடப் போல இருக்கு. அதுதான் ஒளிக்கிறாய்' என்று திட்டுவேற விழும். 'ஏன் நீங்களே அவவிட்ட கேளுங்கோவன்' என்று சொல்லி அடிவாங்கியும் இருக்கிறேன்.

இந்த ஒப்பீட்டுக் கணங்களில் சில மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். ஒருமுறை உயர்தரக் கணிதத்தில் எனக்கு 62 மதிப்பெண்கள். பால்குடி நூற்றுக்கு நூறு எடுத்துத் தொலைத்து விட்டார். 'அவனும் உன்னோடதானே படிக்கிறான். அவனெல்லோ பிள்ளை.. அவன் 100 எடுக்கிறான் எண்டால் நீயும் 100 எடுக்கத்தான் வேண்டும்' என்று ஒரே அர்ச்சனை. எனக்கு எத்தனை விதமாகச் சிந்தித்தும், எங்கள் இருவரது கிரகித்தல் திறண், நுண்ணறிவு போன்றன ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்ற அந்தப் பார்வையை ஜீரணிக்க முடியவில்லை. நான் என் பெற்றோரைப் பார்த்து ‘பால்குடி ஆறடி உயரத்தில் பனைமரம் போல் வளர்ந்திருக்கிறார். ஏன் என்னை நீங்கள் அப்படி வளரவைக்கவில்லை?' என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ, ‘அவன் 100 எடுக்கேக்கை, நீயும் 100 எடுத்தே ஆகவேண்டும்' என்ற கட்டாயப்படுத்தலும் அபத்தமே.

பெற்றோரின் அழுத்தம் பிள்ளைகளை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு அடுத்த உதாரணம் இங்கே. என்னுடைய வீட்டின் அழுத்தம் என்னுடைய தம்பியின் பாடசாலை வாழ்வுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்தது. ஆறாம் வகுப்பில் அவனைச் சேர்த்த நேரம் ‘எல்லாப் பாடத்துக்கும் கட்டாயம் 90க்கு மேல் எடுக்க வேண்டும்' என்று கட்டாயப் படுத்தப்பட்டு பயந்து பயந்து பரீட்சை எழுதியவனுக்கு, ஒரு பாடத்திலும் 60க்கு மேல் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அந்த மதிப்பெண்களை வீட்டில் காட்டினால் சிக்கல் என்றுவிட்டு பாடசாலைவிட்டு வரும் வழியில் பொடியன் ஒரு சின்ன விளையாட்டு விளையாடினான். அதாவது Progress Reportல் எல்லா மதிப்பெண்களையும் 90க்கு மேல் வருமாறு மாற்றிவிட்டான். மாற்றியதுதான் மாற்றினான் பின்வரும் விஷயங்களை அறவே மறந்துவிட்டான்.
  • வகுப்பாசிரியர் உபயோகித்தது நீலநிற மை உள்ள பேனா. இவன் உபயோகித்தது கறுப்புநிற மை உள்ள பேனா. அதாவது 95 என்ற புள்ளியில் 9 கறுப்பு மையிலும், 5 நீல மையிலும் இருந்தது.
  • சவர அலகால் சுரண்டிய அடையாளங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.
  • எப்படி அதை மீண்டும் பாடசாலையில் கொடுப்பது, வகுப்பாசிரியரிடம் உண்மையான மதிப்பெண்கள் இருக்குமே என்பதையெல்லாம் மறந்துவிட்டான். உடனடியாக திட்டு மற்றும் அடியில் இருந்து தப்புவதே அவன் நோக்கமாக இருந்தது.
  • கணித பாடத்துக்கு இவன் பெற்ற புள்ளிகள் 93 என்றும் அதிகூடிய புள்ளிகள் 77 என்றும் இருந்தன. கூட்டுத்தொகை 400 சொச்சம் இருந்தது. அவன் 'மாற்றிப் போட்ட' மதிப்பெண்களின்படி 600 சொச்சம் வந்தது.
அப்பாவிடம் சுலபமாக மாட்டிக் கொண்டான். அப்போது இரண்டாம்தரம் உயர்தரப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். நான் தனியார் கலாசாலைக்குச் சென்றிருந்த வேளையில்தான் தம்பி மாட்டிக் கொண்டான். அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியும் அப்பா அவனுக்காக எந்த ஆசிரியரிடமும் போய்ப் பேசிப் பார்க்கத் தயாரில்லை. அம்மா அழுதுவடிந்தார். என்னுடைய அறைக்குள் அழுதழுது களைத்து நித்திரையாகிவிட்ட தம்பியை கோபத்தோடு (வேறென்ன, களவு செய்ததில் இவ்வளவு முட்டாள்தனமா என்ற கோபம்தான்) எழுப்ப, என்னைக் கட்டிப்பிடித்து அழுதான். அடிக்க இருந்தவன் அணைத்துக் கொண்டேன். பிறகு அவனது வகுப்பாசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன்.

வகுப்பாசிரியர் நாங்கள் பாடசாலையில் இருந்து விலகியபின் வந்தவர். அவரை எனக்குப் பெரிதாகத் தெரியாது. எங்கே வசிக்கிறார் என்றுகூடத் தெரியாது. நண்பன் செந்திலோடு சேர்ந்து வீட்டைக் கண்டுபிடித்து அவரிடம் நடந்ததைச் சொல்ல, அவர் கைவிரித்துவிட்டார். அவரின் ஆலோசனைப்படி உப-அதிபர் புலிக்குட்டியின் குட்டியை சந்தித்து விஷயத்தைச் சொல்ல ‘சிவப்பு மை பரவியுள்ள கட்டாய விடுகைப் பத்திரம் தவிர வேறு வழி இல்லை' என்று கைவிரித்துவிட்டார். 11 வயதில் தம்பியின் வாழ்க்கை அழியப்போகிறது என்கிற தவிப்பு. செந்திலுக்குத் தெரியும் அந்த வலி, என்னோடு கூடவே அலைந்து பகிர்ந்துகொண்டான். அப்பாவிடம் இந்தமுறை நான் கெஞ்சினேன். பாடசாலை மட்டத்தில் அவருக்குச் செல்வாக்கு இருந்ததால் ஆகக் குறைந்தது, சாதாரண விடுகைப் பத்திரமாவது பெற்றுக் கொண்டு வேறு பாடசாலையில் சேர்ப்போம் என்று கெஞ்சினேன். அப்பா மாட்டேன் என்றுவிட்டார்.

கடைசியாக எனக்குக் கைகொடுத்தது, இன்றைக்கும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் என் பிரியத்துக்குரிய ஆசான் ஒருவர். பெயரைக் குறிப்பிடுவது எவ்வளவு சரியானது என்று தெரியவில்லை, பட்டப் பெயரைச் சொல்கிறேன். இவருக்கு கொஞ்சம் பெரிய தொப்பை என்பதால் நெய்வண்டி என்று நாங்கள் முதுகுக்குப் பின்னால் பயங்கரமாக நக்கல் அடித்திருக்கிறோம். அவரைக் கண்டாலே ‘அட்வைஸ் பண்ணப் போறாரடா' என்று ஓடி ஒளிந்திருக்கிறோம். அதெல்லாம் வலிக்க வலிக்க எனக்கு உறைக்கும்படி தம்பியை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டார். ஒரு புதிய Progress Report எடுத்து பழையது தொலைந்து விட்டதாகக் காரணம் காட்டி புதியதில் வகுப்பாசிரியரிடம் மதிப்பெண்களை வாங்கிப் பதிந்து, தம்பி செய்த தப்பை மூடி மறைத்துவிட்டார். உப அதிபர் தன் சுய பிரதாபங்களைப் பீற்றுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்ததால் தம்பி பற்றி விடுமுறையின் பின் பள்ளி திரும்பியபோது மறந்தேவிட்டார்.

அதன் பின் என் பெற்றோருடனும் அந்த ஆசான் பேசினார். இந்த விஷயத்தில் அந்த ஆசான் செய்தது நேர்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அது இரண்டு நன்மைகளைச் செய்தது:
  1. தம்பியின் பாடசாலை வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. இப்போது ஒழுங்காகப் படிக்கிறான்
  2. இப்போதெல்லாம் அவனுக்கு மதிப்பெண்கள் குறைந்தால் ஏன் குறைந்தது, எப்படி அடுத்த முறை கூட்ட முயற்சிக்கலாம் என்று நடைமுறை ரீதியாக அம்மா சிந்திக்கிறார். 90 எடுத்தால் மிச்சப் பத்து எங்கே, 70 எடுத்தால் ‘அவன் 100 எடுக்க நீ ஏன் 70 எடுத்தாய்' போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை
'இதே மதிப்பெண் மாற்றும் வேலையை கிருத்திகன் ஏ/எல் படிக்கும் போது செய்திருந்தால், அவனை நான் காப்பாற்றி இருக்கமாட்டேன். ஏனென்றால் நன்மை தீமை தெரிந்த வயதில் நீ அவ்வாறு செய்தால் அது தெரிந்தே செய்த பிழை. ஆனால், 11 வயதில் இந்தப் பிள்ளை உங்களின் நிர்ப்பந்தம் காரணமாகச் செய்த பிழை மன்னிக்கப்பட வேண்டியது. அவனுக்கு கட்டாய விடுகைப் பத்திரம் தருவது அவனைத் தவறான திசையில் திருப்பிவிடக் கூடும். அவ்வாறு சட்ட திட்டங்களுக்கமைய நடந்து தண்டிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது பின்விளைவுகளைப் பற்றிக்கூடச் சிந்திக்கும் மனப்பக்குவம் இல்லாத இந்தச் சின்னவன்தான். இனியும் இப்படி அவனை நெருக்காதீர்கள்' என்ற கருத்துப்பட அந்த ஆசான் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்தபடி இருக்கிறது.

ஆரியர், திராவிடர்.... தமிழன்,இந்திக்காரன்...இலங்கையன் இந்தியன் ஆகிய அரசியல்களைக் கடந்து சமீபகாலத்தில் வந்த படங்களில் (அதாவது அதிகம் நான் படம் பார்க்கத் தொடங்கியபின்) என் உள்ளத்துக்கு மிக அருகில் இருப்பது ஆமிர் கானின் ‘தாரே ஜமீன் பர்'. அந்தப் படத்தில் உப-தலைப்பாக Every Child is Special என்று போடுவார்கள். நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாக் குழந்தைகளுமே அற்புதமானவை. ஆனால் இன்றைய சமூகத்தில் (தெற்காசிய சமூகங்களை முக்கியமாகக் கைகாட்டுவேன்) இருக்கிற சில ஆராய்ந்தறியானல் உள்வாங்கப்பட்ட கருத்துத் தோற்றங்களால் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

எங்கள் சமூகங்களில் பெற்றோர்-குழந்தைகள் இடைவெளி ஏன் வருகிறது தெரியுமா. 'என்னுடைய குழந்தை நான் பார்க்காததெல்லாம் பார்க்கவேண்டும்' என்று ஆசைப்படுகிறார்கள். அது ஒன்றும் நியாயமற்ற ஆசை என்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய பிள்ளை என்னைவிட நன்றாக இருக்கவேண்டும் என்கிற தன்னலமற்ற பாசம் அது. இன்றைய குழந்தைகளின் பார்வையில் அது அத்தியாவசியமற்ற திணிப்பு. அதனால் குழந்தைகள் உங்களிடம் இருந்து விலகிப் போகிறார்கள். இவ்வளவு பாசம் காட்டியும் பயனில்லையே என்று உங்களைப் புலம்பவைக்கிறார்கள். ஆனால் 'என்னுடைய குழந்தை எதைப் பார்க்க விரும்புகிறதோ அதைப் பார்க்கட்டும்' என்று வாழ்ந்து பாருங்கள், அன்றில் பறவைகளாய் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒன்றி வாழலாம். மீண்டும் சொல்கிறேன்.... Every Child is very very very special.

Saturday, 29 August 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு

முன்கதை
‘இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்' கூகிள் குழுமத்தில் உதித்த இந்தத் தொடர் விளையாட்டுக்கான கருவை, மு. மயூரன் ஆரம்பித்து வைத்தார். மு. மயூரன் வந்தி அண்ணாவை அழைக்கும்போதே நினைத்தேன், அடுத்தது என்னிடம் இது வரும் என்று. பாடசாலைக் காலங்களில் அஞ்சல் ஓட்டத்தில் இயலுமான பங்களிப்பு (தனிய ஓட ஏலாது) செய்த காரணத்தால், இதையும் ஒரு அஞ்சல் ஓட்டமாக நினைத்து மேலே கொண்டு செல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. வலையில் நான் பதிய வந்தது ஒன்றும் பெரிய கதையும் அல்ல, அது பற்றிச் சொல்லப்போகும் நான் நல்ல கதை சொல்லியும் அல்ல. ஆனால் முடிந்தவரை சுவையாகச் சொல்கிறேன். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தியத்தேவா)

விதிமுறைகள்
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும். (தடித்த எழுத்தில் இருப்பதை மயூரன் அண்ணா, வந்தி அண்ணா இருவரும் கவனிக்கவும், உங்கள் பதிவுகளில் மூவருக்கும் என்று இருக்கிறது)

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

என் கதை
நான் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரு துறைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு துறையில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனடாவிற்கு கல்வி அனுமதிப் பத்திரம் மட்டும் பெற்று வேறொருவர் காசில் படிக்கும்போது என்னுடைய பெறுபேறுகளை உச்சத்தில் வைத்திருக்கவும், பொருளாதார ரீதியில் கொஞ்சமாவது மேம்படவும் போராடவேண்டிய கட்டாயம். நாடுவிட்டு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வதைத்த காலம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வரும். சில சமயங்களில் என்ன செய்கிறேன் என்று தெரியாதளவுக்கு ஒரு கோபம் வரும். தலையை உடைத்து எறிந்துவிடு என்கிற அளவுக்கு தலை வலிக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிப் பார்த்து கடைசியாக நான் நாடியது, மருத்துவர் லம்போதரனை.

சில விசயங்களை மனம் விட்டுப் பேசியபோது, மனச் சோர்வு அல்லது மனப் பிறழ்வுக்குரிய அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். அது பேரதிர்ச்சி. அவர் சொன்னபடி வேறு விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடிக்கடி நூலகங்களில் போய் கண்ணில் கண்ட புத்தகங்களை வாசித்தேன். முகம் தெரியாதவர்கள் நடத்தும் நடன, இசைக் கச்சேரிகளில் ஒரு ஓரத்தில் போய் குந்தி இருப்பேன். இந்த இயல், இசை எதிலுமே நான் தேர்ந்தவனல்லன். ஆக, என் அடிமன அழுக்குகளை அவைமூலம் வெளியேற்ற முடியாது. பாடசாலைக் காலங்களில் ஆங்கில தினப் போட்டிகளில் creative writing ல் 4முறை இரண்டாவதாகவும் 2 முறை மூன்றாவதாகவும் வந்திருக்கிறேன். ஆக, நான் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. 3 வருடமாக விட்டுப் போயிருந்த டயரி எழுதும் பழக்கத்தைத் திரும்ப ஆரம்பித்தேன்.

என்னை வலையுலகுக்கு இழுத்து வந்த பிதாமகர், அண்ணா ஆதிரை அவர்கள். அடிக்கடி Face Bookல் தன்னுடைய பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பார். அவரது 'அழாதே நண்பா' 'அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' ஆகிய பதிவுகள் தான் என்னை வலைப்பூவில் கொஞ்சம் உன்மத்தம் கொண்டு எழுத வைத்தது. அதுவரை ‘கிருத்திகனின் கிறுக்கல்கள்' என்றிருந்த என் வலைப்பூ ‘மெய் சொல்லப் போறேன்' என்று மாறியது. ஆரம்பகாலப் பதிவுகள் பல எனக்கே பிடிப்பதில்லை. வாசகர்களை என் வலைக்கு அழைக்கும் சூட்சுமமும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் மட்டுமே பின்னூட்டம் இட்டார்கள். சூட்சுமம் புரிய வைத்தது என்னுடைய ‘அவள்+அவன்= அது' என்கிற ஒரு பதிவில் ‘தமிழர்ஸ்' நிர்வாகிகள் போட்ட ஒரு பின்னூட்டம் மூலமாக.

முதன் முதலில் என்னுடைய நூல் என்ற சிறுகதை (???!!!) முயற்சியைத்தான் அதிக திரட்டிகளில் இணைத்தேன். என்னை யார் வாசித்தார்களோ, யார் பின்னூட்டம் போட்டார்களோ அவர்களிற்குத் தீனிபோடும் விதத்தில் எழுதிய நான் இந்த மாதம் எழுதிய ‘நான் பார்த்த இலங்கை' தொடரின் முதல் பகுதியில் இரு வேறு வாசகர்களுக்கு இரு வேறு வடிவங்கள் என்று ஒரு ஆபாசத்தைச் (அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை) செய்ததன் காரணமாக, சில படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, இப்போது கொஞ்சம் திருத்தமாக எழுதி வருகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் முடியாத நிலையில் 141 பதிவுகள் (இதோடு சேர்த்து) போட்டுவிட்டாலும், இன்னும் நான் பதிவுலகில் ‘பாலர் வகுப்பு' தான். ஆக, பெரியவர்கள் என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அனுபவங்கள்-தட்டச்சு
நான் தமிழை தட்டச்சத் தொடங்கியதே Unicode முறையில்தான். இலங்கையில் அப்பாவின் ‘தட்டச்சுக் கருவியில்' பார்த்துப் பார்த்துக் குத்தியபின் இப்போதுதான் தமிழ் தட்டச்சினேன். முதலில் higopi என்ற தளத்தில் தட்டச்சி, படியெடுத்து ஒட்டிய எனக்கு, ஞானியின் திண்ணை வலையில் NHM Writer அறிமுகமாகி, Phonetic முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.

இந்த முறைக்கு எதிரான பலமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரிந்தவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'ammaa' எனபது 'அம்மா' என்று வராமல் ‘சும்மா' என்று வருமாறு யாராவது அமைத்தால் நாங்கள் அப்படியே தட்டச்சிக் கொண்டு போவோமா? இல்லைத்தானே? ‘அ' எங்கே இருக்கிறது என்று தேடி அடிப்போம். கிட்டத்தட்ட எல்லாவிதமான தட்டச்சு முறைகள் (தமிழ் 99, பாமினி) பயன்படுத்துவோரும் இந்த விசையை அழுத்தினால் இந்தத் தமிழ் எழுத்து வரும் என்றுதான் மூளையில் பதித்திருப்பார்கள். இந்த முறையில் வேகம் கூட, இந்த முறையில் வேகம் குறைய என்று வாதாடலாமே ஒழிய, இந்த முறை தமிழை அழிக்கும், இது வளர்க்கும் என்று வாதாடுவது எல்லாம் ‘என் முறை சரி, உன் முறை பிழை' என்று நிரூபிக்க முயலும் சராசரி மனித இயல்பாகவே எனக்குப் படுகிறது.

வசந்தன் தன்னுடைய பதிவில் சொன்னது போல், எதிர்காலச் சந்ததி தட்டச்சித் தமிழ் படிக்கும்போது, இதில் எந்த முறையையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அதுவும் அவர்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரியாமல், phonetic என்றொரு முறை இருப்பதையே சொல்லிக் கொடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழை எழுத்துருக்களை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து அதன் பின் எப்படி வேண்டுமானாலும் தட்டச்ச விடலாம். அல்லது தமிழ் எழுத்துருக்களை சரியாக அறிமுகம் செய்து அவை பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம். மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும். எதிர்காலச் சந்ததிக்குத் தமிழ் கற்பிப்பதில் இவை எதுவுமே உதவி செய்யப்போவதில்லை. (இது ஒரு சிறுவனின் கருத்து. குத்திக் கிழிக்காதீர்கள். நித்திரைவிட்டு எழும்பி மனம் சஞ்சலம் இல்லாத நிலையில் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரியும்)

அனுபவங்கள்- மற்றவை
  • சுயம் இல்லாமல் எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன். சில சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறேன். என்ன அந்தச் சர்ச்சை மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த நண்பர்களின் (யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்) நட்பு வலுப் பெற்றது. புது வழிகாட்டிகள் கிடைத்தார்கள். சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மூத்தவருக்கு நன்றி.
  • சமீபத்தில் இன்னொரு பதிவில் நான் விட்ட பிழைகள் பற்றி 'பெட்டை' சில படிப்பினைகளைத் தந்திருக்கிறார். அந்தப் பிழைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்து எழுதுவேன் என இந்தப் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன். ஆக, 'பெட்டை'க்கும் நன்றி.
  • முகம் தெரியாத நட்புகள், வயதெல்லையின்றிய நட்புகள் என்று பலநட்புகளை இந்த தந்திருக்கும், என் மன ஓட்டங்களுக்கு வடிகாலாக இருக்கும் வலையுலகுக்கும் நன்றி.
என்னுடைய அழைப்புகள்
  1. ஆதிரை- பதிவுலகத்தில் என்னுடைய பிதாமகர். மூத்த அண்ணன். ஆளை அடிக்கடி மாட்டி விடலாம், எதையும் சமாளிப்பார். அதனால் இதையும் சமாளிப்பார் என்றே நம்புகிறேன்
  2. பால்குடி- நெருக்கமான தோழன். இன்னொரு இடிதாங்கி. கூடுதல் தகவல்கள்- பள்ளிநாட்களில் பல மேடைகள் கண்டவர். பலரை விழுந்து விழுந்து சிரிக்கவும், சில சமயம் கண்களைத் துடைக்கவும் வைத்தவர். ஆள் மிருதங்கம் நல்லா வாசிப்பார் என்று தெரியும். பாடசாலைக் காலத்தில் சித்திரம் படித்ததாக ஞாபகம். இவர்கள் ஊருடனான கிரிக்கெட் போட்டிகளில் குத்துக்கட்டை போட்டு எங்களை வீழ்த்தி சாபத்தைச் சம்பாதித்தவர்.
  3. அருண்மொழிவர்மன்- வலையுலகு தந்த இன்னொரு இனிய நட்பு. 12 மணிக்குக்கூட தொ(ல்)லை பேசினாலும் சிரித்தபடி கதைப்பவர். நேற்றுத்தான் இவரை நேரில் சந்தித்த
  4. சாயினி- கனகாலம் இவா எழுதேல்லை. ஆளை மாட்டி விடவேணும் என்ற நல்ல எண்ணம்தான். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையிலும், 8ம் வகுப்பு வரை ரியூசனிலும், ஒன்றாகப் படித்தா. இலங்கையில் இருந்து எழுதிய முதல் தமிழ்ப் பெண் பதிவர் என்று சயந்தன் சொல்லுவார். (எல்லாப் புகழும் சயந்தனுக்கே).

Thursday, 20 August 2009

பேசிய படங்கள்

நிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை

என்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.

எனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும்? நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ? உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

அச்சமுண்டு அச்சமுண்டு

சின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.

இயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.

நேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.

ஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

அருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).

ஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா? 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா?

Wednesday, 12 August 2009

ஆன்மீகம்

நான் பிறந்தது இலங்கையில் வடக்கில் நவிண்டில் ஒரு குக்கிராமத்தில். பக்கத்தில் நெல்லியடி என்ற ஒரு சிறிய நகரம். என்னுடைய சிறுவயது முதலே எனக்கு என்ன கற்றுத்தரப்பட்டதோ இல்லையோ, கடவுள் பற்றிக் கற்றுத் தரப்பட்டது. என்னுடைய ஆரம்பக்கல்வியை நான் கரணவாய் தாமோதர வித்தியாசாலையில் கற்ற போது, அங்கே கூட கடவுளை முன்னிறுத்தும் ஒரு பழக்கம் இருந்தது. எனது பாடசாலைக் காலத்தின் முதல் வருடத்தில் அதிபராய் இருந்த வைத்திய நாதக் குருக்கள் தொடக்கம், அதே பாடசாலையின் அனுபவம் கூடிய ஆசிரியரான ஆறுமுகம் வாத்தியார் வரை எல்லோருமே சைவப் பழங்கள். பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு நாளும் கூட்டுப் பிரார்த்தனையோடுதான் தொடங்குவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. கூட்டுப்பிரார்த்தனையில் பாடும் பஞ்ச புராணத்தை வீட்டிலும் சாமி அறையில் பாடி வணங்கி, காலையில் வீபூதி பூசி சந்தனப் பொட்டு வைக்காமல் பள்ளிக்கூடம் போனதேயில்லை நான்.

எனக்கும் என் குடும்பத்துக்கும் இரண்டு குலதெய்வங்கள். அப்பா வழியாக மூத்த விநாயகரும், அம்மா வழியாக குலனைப் பிள்ளையாரும் குல தெய்வங்களானார்கள். மேலும் அப்பா வழியில் உச்சில் அம்மாள், முதலைக் குழி முருகன், தூதாவளைக் காளி, தில்லையம்பலப் பிள்ளையார் ஆகியோரும், அம்மா வழியாக குழவியடி அம்மன், பொலிகண்டி முருகன், சக்கலாவத்தை வைரவர், பூதராயர் பிள்ளையார் ஆகியோரும் அறிமுகமானார்கள். மேலே சொன்ன கோவில்களில் எல்லாம் அப்பா பகுதியால் அல்லது அம்மா பகுதியால் மகோற்சவ காலங்களில் எங்களுக்கு உரித்தான ஒரு பூசை நடப்பதுண்டு. அந்த நாட்களில் கட்டாயமாகக் கோவிலுக்குப் போவதுண்டு. அதிலும் குலனைப் பிள்ளையாரும், குழவியடி அம்மனும் எங்கள் அன்றாட வாழ்வில் ஒன்றிப் போனார்கள்.

திருவிழா தவிர்த்து பாடசாலை இல்லாத எல்லா வெள்ளிக்கிழமையும் நான் குலனைப் பிள்ளையாரிடமும், குழவியடி அம்மனிடமும் செல்வதுண்டு. அப்பாவும் அம்மாவும் ஒவ்வொரு வெள்ளியும் போவார்கள். நன்றாகக் காசு கொடுத்து அர்ச்சனை செய்வார்கள் இரு கோவில்களிலுமே. மூத்தவிநாயகரிடம் திருவிழாக் காலங்களில் தவறாமல் போவோம். உச்சில் அம்மனிடம் ஒவ்வொரு மாசி மகத்துக்கும் போய் வந்துகொண்டிருந்தோம். நவராத்திரி, கந்தசஷ்டி, பொங்கள், தீபாவளி, வருடப்பிறப்பு, திருவெம்பாவை காலங்களில் குலனைப் பிள்ளையாரையும், குழவியடி அம்மனையும் விட்டுப் பிரிவதேயில்லை நான். அதுவும் திருவெம்பாவைக் காலங்களில் விடிய மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து வெளிக்கிட்டு குலனைப் பிள்ளையாருக்குப் போய், சங்கு, மணி, சேமக்கலம் சகிதமாக ஊரைக் கோவிலுக்கு அழைப்பதும், கோவிலில் என்னால் முடிந்த சின்னச் சின்ன சரியைத் தொண்டுகள் செய்வதும் எனக்கு மிகவும் சந்தோசம் தரும் விஷயமாக இருந்தது, பதினெட்டு வயது வரை.

கடவுள்தான் எல்லாம், கடவுளில்லாமல் எதுவுமே அசையாது என்ற மாதிரியான ஒரு வளர்ப்பில் வேறூ சில விஷயங்களை நான் கவனிக்கத் தவறியிருக்கிறேன் என்று நான் உணர்ந்து கொண்டது அந்த வயதில்தான். அதுவும் குலனைப் பிள்ளையாரில் மக்கள் மனம் ஒருமித்து சாமி கும்பிட வேண்டும் என்கிற காரணத்துக்காக ஆலய தர்மகத்தா மற்றும் நிர்வாக சபை ஒரு காலமும் காவி நிறத்தைத் தவிர வேறு நிறத்தில் வண்ணம் பூச ஒப்புக் கொண்டதில்லை. இப்படியாக பக்தி மார்க்கத்தை எனக்கு ஊட்டி வளர்த்த அதே சமூகம், அந்த பக்தி நெறியிலிருந்து என்னைத் துரத்துவதற்குமான ஒரு செயலைச் செய்து கொண்டிருந்ததை அந்த வருடத்தில் நடந்த ஒரு நவராத்திரி எனக்குப் பொட்டில் அடித்துச் சொல்லிக் காட்டியது.

கூடுதலாக ஒவ்வொரு மாலையிலும் நான் ஒரு மைதானத்துக்கு விளையாடப் போவது வழக்கம். விளையாடி முடிய எப்போதுமே மாலை ஆகிவிடும். அந்த இடத்திலிருந்து என் வீட்டுக்கு வரும் வழியில் இரண்டு கோவில்கள். ஒன்று நாச்சியார் கோவில் இன்னொன்று வைரவர் கோவில். இரண்டிலுமே நாங்கள் என்றைக்கும் கும்பிடுவதில்லை. காரணம் இரண்டு கோவிலின் பேருக்கு முன்னாலும் ஊரின் பெயரை விட சாதியின் பெயரே குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் அந்தக் கோவில்களைக் கடக்கும் போது வழமையாவே நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் செல்வேன். காரணம், கடவுள் பற்றிய பயம் என்று பிற்காலங்களில் உணர்ந்து கொண்டேன். அன்றைக்கும் அப்படித் தொட்டுக் கும்பிட்ட போது, கடலைச் சுண்டல், அவல் போன்றவற்றோடு சேர்த்த ஒரு பிரசாதப் பையை நீட்டினார் ஒருவர். எனக்கு அதை வாங்கிக் கொள்வதில் தயக்கம் இருக்கவில்லை. என்னுடைய எளிய மனதுக்கு அது சாமிப் பிரசாதம். என்ன, உடனேயே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை.

அம்மாவும், பெரியம்மாவும், மாமியும் சன்னதம் ஆடினார்கள். 'ஏன் அதுகளிட்ட பிரசாதம் வாங்கினனி, கொப்பருக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமே?' எண்டு கேட்டு மாமி பிரசாதத்தை நாய்க்குப் போட்டார். எனக்கு அழுகையாக வந்தது. அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா? எனக்குப் பிரசாதம் தந்த அன்பர் ஒரு இளம் வயதினர். அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கள் வீடு தேடி அடுத்த நாள் காலை வந்து, அப்பாவிடம் 'ஐயா, தம்பி உங்கட மகன் எண்டு தெரியாமல் ஒருத்தன் பிரசாதம் குடுத்திட்டான். மன்னிச்சுக் கொள்ளுங்கோ' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா ஒரு சட்டத்தரணி என்பதால் எல்லா சமூகங்களோடும் பழகுபவர். மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் புரிந்துணர்வு உள்ளவர். அதற்காக முற்று முழுதாக சாதீய அடையாளங்களையும் திமிரையும் துறந்தவர் அல்ல. அவர் அந்த நண்பரிடம் ‘பரவாயில்ல, சாமிப் பிரசாதத்தை வாங்கிறதில என்ன இருக்கு' என்று சொல்லி அந்த நபரை அனுப்பினார். அந்தப் பிரசாதம் வாங்கிய பிரச்சினை பற்றி என்னையோ, நாய்க்குப் போட்ட மாமியிடமோ எதுவும் கேட்கவில்லை. சம்பந்தப் பட்ட எல்லோரையும் பொறுத்த வரை அந்தப் பிரசாதப் பிரச்சினை அன்றோடு சுமுகமாக முடிந்தது.

ஆனால் எனக்குள் புயல் வீச ஆரம்பித்தது. எங்கள் சமூக அமைப்பில் அவ்வாறு எனக்குப் பிரசாதம் தந்த சாதியை விட உயர்ந்தவர்களாக எங்கள் சாதி கருதப்பட்டது. ஆக, அந்தச் சாதிக் கோவில்களில் எங்களவர்கள் போய்க் கும்பிட மாட்டார்களாம். அவர்களின் சாமியிடம் படைத்த பிரசாதத்தை வாங்கி உண்பது தப்பாம். நன்றாக அறிவுறுத்தினர் மாமியும் பெரியம்மாவும். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. எனக்குள் எழுந்த கேள்விகள் இவைதான்.
  • எனக்குத் தெரிந்து வைரவர் என்பது ஒரு கடவுள் வடிவம். அப்படி ஒரே ஒருவர்தான் இருக்கிறார். எங்கள் சாதி வழிபடும் சக்கலாவத்தையில் இருப்பவரும் அதே வைரவர்தான். அந்த நண்பர்கள் வழிபடும் கோவிலில் இருப்பவரும் வைரவர்தான். வைரவர்தான் சிறப்பானவர், அவர்தான் மனிதர்களை விட மேலானவர் என்றால், நீங்கள் சாதியைக் கடந்து அவருக்கு யார் கோவில் கட்டினாலும் அனைவருக்கும் வழிபடும் உரிமை இருக்கிறதா இல்லையா?
  • இல்லை, சாதிதான் வைரவரின் சிறப்பைத் தீர்மானிக்கிறது. உயர் சாதிக்காரனின் கோவிலுக்குள் கீழ் சாதிக்காரன் வந்தால் கோவிலுக்கு அசிங்கமென்றும், கீழ் சாதிக்காரனின் கோவிலுக்குள் உயர் சாதிக்காரன் போனால் உயர் சாதிக்காரனுக்கு கௌரவக் குறைச்சல் என்றும் சொல்கிறீர்களானால், கடவுளின் சிறப்பைத் தீர்மானிக்கும் மனிதன் உயர்ந்தவன் ஆகிறான் இல்லையா? ஆக கடவுள் மனிதனிலும் கீழானவன், அவனிடம் நான் பயப்படத் தேவையில்லை எனபதுதானே அர்த்தமாகிறது?
இந்த இரண்டு கேள்விகளையும் நான் மதித்த பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாருமே இன்றைக்கு வரைக்கும் பதிலளிக்கவில்லை. நவிண்டில் என்ற குக்கிராமத்தில் தொடங்கிய தேடலுக்கு இன்றுவரை விடையில்லை. நான் கேட்டவுடனே யாராவது சாதி முக்கியமில்லை கடவுள்தான் முக்கியம் என்று பதில் சொல்லியிருந்தால் நல்ல பக்திமானாகவோ, இல்லை கடவுள் எல்லாம் சும்மா ஒரு ஏமாற்று வேலை, சாதிதான் முக்கியம் என்றி சொல்லியிருந்தால் ஒரு சாதீயப் பதராகவோ வளர்ந்து விட்டிருப்பேன். நல்ல காலம், யாருக்குமே பதில் தெரியாத படியால் நான் பதில் தேட முயன்றேன். அந்த முயற்சியின் விளைவாக நான் இதுவரையில் கண்டது இரண்டு உண்மைகளைத் தான்; ஒன்று, எங்களை எல்லாம் மீறிய ஏதோ ஒரு அற்புதமான சக்தி எங்களை எல்லாம் ஆட்டுவிக்கிறது. அதற்கு பெயரில்லை, உருவமுமில்லை. அது எங்கே எப்படி இருக்கிறது என்று ஒரு தகவலுமில்லை. அது மேகக்கூட்டங்களில் இருக்கலாம், இல்லை மலர்ந்து சிரிக்கும் சின்னக் குழந்தையின் சிரிப்பில் இருக்கலாம். அந்தச் சக்தியைக் கண்டடைவதுக்கு எனக்கு இதுவரையில் தெரிந்த சுலபமான, பெரியளவில் சிக்கல்கள் இல்லாத, விரைவான, மிகச்சிறந்த மார்க்கம், மனிதம்.

Sunday, 2 August 2009

நட்பூ!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பதிவுலகைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாத முதல் ஞாயிறை நண்பர்கள் தினமாகக் கொண்டாடுகிறார்களாம். நான் மட்டும் ஜனவரி 31, மார்ச் 31, ஏப்ரல் 3, ஏப்ரல் 23, ஏப்ரல் 24, ஆகஸ்ட் 11, நவம்பர் 30 உட்பட பல நாட்கள் நண்பர்கள் தினம் வரும். ஏனென்றால் அவை என் நண்பர்களின் பிறந்த நாட்கள். என்னைப் பொறுத்தவரை காதலர் தினம், நண்பர்கள் தினம் எல்லாம் பொதுப்படையான ஒரு கொண்டாட்ட நாட்களே. அவற்றை ஒவ்வொரு நாளும் கொண்டாட யாருக்கும் தடையில்லை. இருந்தும், நட்புக்கு ஒரு பொதுவான நாளாகச் சொல்லியிருக்கும் இந்த நாளில் என் நட்புகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.

சில நட்புகள் ரயில் சிநேகங்கள். அப்படிப்பட்ட ஒரு நட்பு பிரதீப்குமார் ஐங்கரதாசன் இருவருடையது. முதலாம் வகுப்பில் ஆரம்பித்த அந்த நட்பு நிலைத்தது வெறும் 5 வருஷங்களே. அதன் பின் சில காரணங்களால் கடைசிவரை முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை நானும் பிரதீப்குமாரும். ஐங்கரதாசன் எங்கே என்று தெரியவில்லை. அதே முதலாம் வகுப்பில் ஆரம்பித்த இன்னும் பல நட்புகள் இன்னும் பசுமையாய் இருக்கின்றன, மறுபடி ஃபேஸ் புக் மூலம் புதுப்பித்துக்கொண்ட தாட்சாயணியின் நட்பு உட்பட. ரொம்பச் சின்னவயதிலேயே நட்புகள் ஆரம்பித்தாலும் நட்புகள் பலம் பெறுவது பதின்ம வயதுகள் ஆரம்பிக்கும் பதின்ம வயதுகளில்தான்.

அந்த வயதுகளில் ‘டூ' விட்டுக்கொள்வது ஒரு ஃபேஷன் போல் இருந்தது. ஒரு முறை என்னுடன் ரியூசனில் படித்த 40 சொச்ச ஆண்பிள்ளைகள் அத்தனை பேரும் என்னுடன் டூ விட்டனர் (கோஷ்டி மோதல்.. முக்கால்வாசிப் பேர் டூ விட வைக்கப்பட்டனர்). ஆனால் மூன்றே மூன்று பேர் மட்டும் ‘அவன் பக்கம் தப்பில்லை' என்று டூ விட மறுத்து, இன்றுவரை நெஞ்சில் இருக்கிறார்கள். அவர்கள் நித்து, இளம்பரிதி, கண்ணதாசன். இளம்பரிதி தகவல் தொடர்பு சாதனங்களின் தொடர்பெல்லைக்கு அப்பால் போய்விட்டான். கண்ணன் இப்போ கனடாவில் ரொம்ப அருகிலேயே இருக்கிறான். நித்து லண்டனில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு. நித்துவிடம் கேட்க வேண்டும், ‘நித்து. உனக்கு டூ விடுதல் அல்லது கோபம் போடுதல் என்றால் என்னவென்று தெரியுமா?'. நித்துவின் நட்பு ஒரு வரம்.

ஆறாம் வகுப்பில் பாடசாலை மாறியபோது கிடைத்த நட்புகள் பல. மகி, அரவிந்தன், தயாநிதி,ஜெயன், வாசு,ரபிக்காந்த், தனஞ்செயன், பகீ, செந்தில், செந்தூர், ரஞ்சித், பப்பா என்கிற சிவச்செல்வன் போன்ற நட்புகளைச் சொல்லலாம். தனஞ்செயன், செந்தில் ஆகியோர் இன்றைக்கும் அழகான நட்பை, என்னை விடத் தம் நிலை உயர்ந்த பின்னும் பேணி வருகிறார்கள். அதுவும் கொழும்பில் நான் நரக வாழ்க்கை வாழ்ந்த போது செந்திலின் அம்மா கையால் சாப்பிட்ட சோறு மறக்காது, நான் சாகும்வரை. பகீ, ரஞ்சித் குடும்பப் பாரம் சுமக்க ஆரம்பித்திருப்பதால் தொடர்பு எல்லைக்கு அப்பால். பகீ இருந்திருந்துவிட்டு மெயில் அனுப்புவான். செந்தூர் என்னை மறந்திருப்பான் போலிருக்கிறது, இருந்தும் நான் அவனை மறக்கவில்லை. பப்பா என் தூரத்து உறவினன். அடிக்கடி சண்டை போட்டிருக்கிறோம். இப்போ லண்டனில் இருக்கிறான். நல்ல நட்பு இருக்கிறது.

ரபிக்காந்தும் கனடாவில் இருக்கிறான். பாடசாலைக் காலங்களிலிருந்தே தொடரும் நட்பாயினும், 'உடுக்கை இழந்தவன் கை போல' செய்த உதவி என் வாழ்நாளில் மறக்காது. வாசு என்னைக் கடுப்படித்தே நண்பனானவன். இவன் பற்றிய ஒரு பதிவு ஏலவே என் வலையில் உண்டு. இவனது குடும்பமும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய நட்புப் பாராட்டி வருவது மேலதிக தகவல். தயாநிதி ரொம்பவே ஸ்பெஷலான ஒரு நட்பு. வையா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் இவனோடு அரை மணிநேரம் பேசிப்பாருங்கள், உங்கள் மனம் எவ்வளவு கனமாயிருந்தாலும் பஞ்சாய் இளகிவிடும். இவன் கிண்டல் பண்ணாத வாத்தியே இல்லை. முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு இவன் அடிக்கும் ரகளையில் சிரித்து மாட்டிக்கொள்வது நாங்கள்தான்.

ஜெயனின் நட்பும் வித்தியாசமானது. அவனோடு நெருங்கும் வாய்ப்பு நித்து மூலமே வந்தது. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கு எதிராக நான் பேசும் ஒரு சந்தர்ப்பம் வந்தது, ஒரு சின்ன தேர்தல் சம்பந்தமான கூட்டத்தில். கூட்டம் முடிந்ததும் இருவரும் பேசிக் கொள்ளாமல் போய்விட்டோம். அன்று மாலையே வீட்டுக்கு வந்தான், ‘நீ மற்றவங்களை மாதிரி முதுகில் குத்தாம முகத்தில தானே குத்தினாய்' என்ற வசனத்தோடு. அன்றிலிருந்து இன்று வரை நெருக்கமான நட்பு தொடர்கிறது. என்னுடைய குடும்பத்தை விட்டு முதல் முதலாகக் கொழும்பு வந்தபோது ஒரு சகோதரன்போல் என்னைப் பார்த்துக்கொண்டவன் ஜெயன்.

அரவிந்தன் ஆளே கொஞ்சம் வித்தியாசமானவன். அவனும் நானும் எட்டாம் வகுப்பில் ‘டூ' விட்டுக்கொண்டோம். 11ம் வகுப்புவரை பேசிக்கொள்ளவே இல்லை. 11ம் வகுப்பு முடிந்த பின் கொஞ்சக்காலம் அவன் ஊரைவிட்டுப் போன பின்னர்தான் ஊடல் முடிந்து தொலைபேசி மூலம் ஒன்றானோம். அதன் பிறகு 2004 இலும் சின்னதாக ஒரு ஊடல் வந்தது. ஆனால் மொத்தமாகப் பிரிய நாங்கள் அப்போது குழந்தைகள் இல்லை. அரவிந்தனிடம் நான் ஒன்றே ஒன்று கேட்கவேண்டும், ‘எட்டாம் வகுப்பில் நானும் நீயும் பேசுவதை நிறுத்தினோமே? ஏன்? எதற்காக? எவ்வளவு யோசித்தும் எனக்குக் காரணம் தெரியவில்லை. நீயாவது சொல்லேன்!'

அரவிந்தன் போலவே ஊடலும் கூடலும் சேர்ந்த நட்பு மகியுடையது. அதே எட்டாம் வகுப்பில், வகுப்பு லீடராகக் கொஞ்சம் ஓவராக நடந்து கொண்டபோது மகி அழுதான் (நான் காண மகி அழுத ஒரே ஒரு சந்தர்ப்பம், அன்றைக்குக் கேட்காததை இன்றைக்குக் கேட்கிறேன், ஸாரிடா மச்சி). அதை நான் கிண்டல் செய்ய, நட்பில் பிளவு விழுந்தது. ஒரு வருடம் கழித்து ஒரு ஆசிரியர் புண்ணியத்தில் இணைந்து ஒரு வருடக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்த எங்களைப் பார்த்து பகீ சொன்னான், ‘என்னடா நீங்கள், காதலர்கள் போலப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று. அதற்குப் பின்னரும் எத்தனையோ தரம் சண்டை போட்டிருப்போம், ஆனால் அடுத்த நாளே மறுபடி கூடியிருப்போம். சமீபத்திலும் சின்னதாய் ஒரு கீறல்.. ஆனால் பிரியவே மாட்டோம்.

பள்ளிப்பருவத்தில் நான் கொண்டாடிய இன்னொரு நட்பு, கபிலனுடையது. எத்தனை மதியங்கள் அவனுடைய குழுமையான வீட்டில் இருந்திருப்போம். அவனதும் என்னதுமான எத்தனை ரகசியங்களைப் பகிர்ந்திருப்போம். எத்தனை சண்டை போட்டிருப்போம். என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளை போல நடத்திய அவன் அம்மா, சித்தி, தம்பி குலம், தங்கைகள் யாரையும் மறக்க முடியாது. இப்போது அவன் ஏனோ என்னை மட்டுமல்ல, எல்லா நண்பர்களையும் தவிர்க்கிறான். காரணமும் ஓரளவுக்கு எனக்குத் தெரியும். அந்தச் சப்பைக் காரணத்துக்காக நீ ஓடி ஒளிய அவசியமேயில்லை, ஏனென்றால், இன்றைக்கும் நாங்கள் நண்பர்கள்.

அதே போல் மாதக்கணக்கில் என்முகத்தை அசிங்கப் படுத்திய பாலுண்ணியை, ஒரு டாக்டர் போல் நான் அலற அலற ரத்தம் பாயப் பாய பிடுங்கி எறிந்த கஜன், இன்றைக்கு எஞ்சினியர் (மருத்துவ முறைகள், ஆயில்மெண்டுகளால் முடியாதை 10 செக்கனில் முடித்தான்). மேலும் எத்தனையோ ரயில் சினேகங்கள் இருக்கின்றன. அவை முழுமையான நட்பாக விரைவில் மாறும். முகம் தெரிந்த, தெரியாத பதிவர்கள் பலரிடம் நல்ல நட்பு துளிர்த்திருக்கிறது. அந்த நட்புகளைக் கட்டாயம் கொண்டாடுவேன். அதுபோல் ஃபேஸ் புக்கில் செழியன் என்றொரு நல்ல நண்பன் வாய்த்திருக்கிறான். ஃபேஸ்புக் மூலம் கிடைத்த உருப்படியான நண்பன் என்றால் அவன் மட்டும்தான்.

அந்த வயதின் முட்டாள்தனங்களால் இழந்த நட்புகள் சில. குமரன், விஜயதீபன் போன்றோரைச் சொல்லலாம். அவர்களை இழக்க என் முன்கோபமே முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். நிச்சயமாக அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரே சுவையுடைய நட்போ, சண்டை வராத நட்போ நிலைத்திருக்காது என்பது என்கருத்து. மகி, நிதியுடனான என் நட்பிலேயே பல வண்ணங்கள். மூவரும் இந்தியக் கிரிக்கட் அணியின் தீவிர ரசிகர்கள், ஆனால் எனக்கு சச்சினும், மகிக்கு சவ்ரவும், நிதிக்கு ட்ராவிட்டும் ஆதர்ஷம். 2003 ஆசியக் கோப்பையில் இலங்கையிடம் இந்தியா தோற்ற போது, கிட்டத்தட்ட 8 மணிநேரம் மகிவீட்டு வாசலில் துக்கம் அனுஷ்டித்தோம். கபிலனுக்கு விஜய் பிடிக்கும். மகிக்கு அஜித் பிடிக்கும். நித்துவுக்கு சூர்யா பிடிக்கும். எனக்கு இந்த எல்லோரையும் பிடிக்கும், அதாவது, இந்த எல்லா நண்பர்களையும் பிடிக்கும்.....

பி.கு: படங்களில் பெயர்குறிப்பிட்ட நண்பர்களில் முக்கல்வாசிப் பேர் இருக்கிறார்கள். வெள்ளை உடையோடு இருக்கும் நண்பர்கள் மத்தியில் ஒரு குரங்குக் குட்டி இருக்கே, அதுவும் உன் நண்பனா என்று கேட்காதீர்கள். அது எங்க வீட்டுக் குரங்குக்குட்டி. என்னிலும் எட்டு வயது சின்னது. (என்னா ஃபேமிலி பிளானிங்).

Tuesday, 28 July 2009

உன் லாஜிக் நல்ல லாஜிக்!

வெடிவால் முளைத்து மூன்றரை அடிக்கு மேல் நீண்டிருந்த காலம். மாணவர் தலைவர்கள் என்ற பேரில் எங்கள் வகுப்பில் ஒரு 15 பேரின் சந்தோசமான பாடசாலை வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க பள்ளி நிர்வாகம் முயன்றாலும், நாங்களெல்லாம் சிங்கம்ல என்ற ரீதியில் அவர்களுக்கு கடுக்கா கொடுத்து நண்பர்களோடு கூத்தடித்த காலம் அது. நாங்கள் கொஞ்சமே பிஞ்சிலே பழுத்தவர்கள் என்று கூடச் சொல்லலாம். நாங்கள் 10ம் வகுப்புப் படிக்கும்போது அந்த ரீச்சர் வந்து சேர்ந்தா எங்களின் பள்ளிக்கூடத்தில். 80-90களில் கமல், ரஜினியின் ஆதர்ச தேவியாக விளங்கிய நாயகியின் பெயர் அவருக்கு. நம்ம பசங்களுக்கு ஏனோ ஒரு தனிப்பாசம் அவ மேல. அவவைப் பற்றி பள்ளிக்கூடம் பூரா கதைகள் உலாவின. அவ வந்த ஆரம்பகாலத்தில் எங்களின் பள்ளிக்கூட அதிபர், அந்த ரீச்சரின் ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரீச்சருக்கு மரியாதை இருந்தது. அவர் போனதும் அதுவும் இல்லை. ஆனா ரீச்சருக்கும் இளம் வயது என்பதால் அவவும் பகிடியா கதைப்பா.

நாங்கள் 12ம் வகுப்புக்கு வந்திருந்த காலம் அது. ரீச்சர் 11ம் வகுப்புக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான் வகுப்பெடுப்பா. எங்கடை வயதுப் பசங்களுக்கு ஒரே ஒரு பெம்பிளை மலர் ரீச்சர் மட்டும்தான். அவங்களைப் பற்றி நான் ஒண்டும் சொல்ல விரும்பேல்லை. சொன்னா, மகியும், நிதியும் டிக்கட் போட்டுவந்து எனக்கு அடிப்பாங்கள். இவங்கள் எப்பவும் மலர் ரீச்சரிண்ட வகுப்பில Out-Standing Students. இவங்களோட சோமு எண்டு ஒரு ரொம்ப நல்லவன் இருந்தான். இவங்கள் கொஞ்சப் பேர் சேர்ந்து வகுப்பை கண்டம் பண்ணிக் கொண்டே இருப்பாங்கள். இவங்கள் இல்லாமல் வகுப்பில ஒரு களையே இருக்காது. ஒரு நாள் அப்பிடித்தான், மலர் ரீச்சர் நாலு பீரியட் தொடர்ந்து அறுத்த அறுவையால உடம்பும், மனமும் சோர்ந்து போய் இவங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிற நேரம் பாத்து, வேற ஒரு வகுப்புக்கு பாடம் எடுக்க அந்த 'கதாநாயகி' ரீச்சர் போய்க்கொண்டிருந்தது இவங்களிண்ட கண்ணில பட்டுட்டுது.

சோமன் அன்றைக்கு ரொம்பவே கடுப்பில இருந்தான். ரீச்சரைக் கண்டதும் ‘குக்குகூய்' என்று வித்தியாசமாய் ஒரு குரலைக் கொடுத்துத் தொலைத்தான். அவ்வளவு காலமும் எங்களோட பகிடியாய் பேசிப்பழகின ரீச்சருக்கு, அப்பிடி பள்ளிக்கூட வளாகத்திலேயே வைச்சு குரலடிச்சது துண்டற பிடிக்கேல்லை. அந்த வயதில எங்களுக்கு அது பகிடியாய் தெரிஞ்சாலும், ரீச்சர் கடுப்பாகீட்டா. போய் எங்கட செக்‌ஷனுக்கு (12ம், 13ம் வகுப்புகளுக்கு) பொறுப்பாயிருக்கிற, அண்ணன் கரவைக்குரலான் ‘காந்தர்வ ராஜா' என்றும், பொதுவாக மாணவர்களால் 'முயலகன்', 'முயல்குட்டி' என்றும் அழைக்கப்படும் ஆசிரியரிடம் சொல்லிவிட்டார். அப்போதான் எங்களுக்குப் புரிந்தது விளையாட்டு வினையாகிப் போச்சு எண்டு. முயலகன் வந்து 'இண்டைக்கு உங்கட வகுப்புக்கு டிற்றென்சன்' என்று சொல்லீட்டுப் போய்விட்டார்.

பள்ளிக்கூடம் முடிய மணி அடித்து, பாடசாலைக் கீதம் எல்லாம் பாடி எல்லா வகுப்பும் போய் முடிஞ்ச பிறகுதான் முயல் வந்தது. நான் 12ம் வகுப்பு ‘ஏ' பிரிவு. இவங்கள் ‘பி' பிரிவு. ஆனால் இவங்களோடதான் ஒவ்வொரு நாளும் வீட்டை போறனான். முயலகனின் விசாரணை பாணியும் வித்தியாசமாக இருக்கும். ஆக வேடிக்கை பார்க்க ஆயத்தமானேன். முயலகன் முதலில் மிரட்டினார். ‘அடே, கூக்காட்டினது ஆரெண்டு சொல்லாட்டா, ஒருத்தரும் வீட்டை போகேலாது'. ம்ஹூம், ஒருத்தனும் அசையவேயில்லை. கொஞ்சம் பயந்த மாணவர்கள்கூட முயலின் மிரட்டலுக்குப் பணியவேயில்லை. பலவிதமாகச் சொல்லிப் பார்த்தார். 'ஒருத்தன் செய்த பிழைக்கு எல்லாரும் தண்டனை அனுபவிக்கிறியள்' எண்டும் சொல்லிப் பார்த்தார். எங்கட பொடியள் இந்த விஷயத்தில தங்கங்கள். ஒரு எட்டப்பன் கூட எழும்பேல்லை. அலுத்துப்போய் முயலகன் சமாதானம் பேச முயன்றார்.

‘எடே, தம்பியவை. இது வாலிப வயசு எண்டு எனக்குத் தெரியும். இந்த வயசில நாங்கள் மலையில் ஏறி அந்தர் அடித்து கடலிலும் குதிப்போம், கப்பலையும் கவிழ்ப்போம் எண்ட மாதிரி மனசு இருக்கும். இந்த வயசில ரீச்சருக்கு கூக்காட்டிறது, விசிலடிக்கிறது எல்லாம் சகஜமடா. என்ன செய்யிறது, நீங்கள் தனிய பொடியள் படிக்கிற பள்ளிக்கூடத்தில படிச்சு காய்ஞ்சு போயிருப்பியள். நீங்கள் செய்ததை பிழை எண்டு சொல்லேலாது. ஆனால், ஆர் செய்தது எண்டு மட்டும் சொல்லுங்கோடா. நான் ஒண்டுமே செய்யமாட்டன். ஆரெண்டு தெரிஞ்சவுடன இந்தப் பிரச்சினையை அப்பிடியே முடிக்கிறன். ஒரு பனிஷ்மெண்டும் கிடையாது' என்று உருக்கமாய் முயலகன் பேசிமுடிக்கவும், நிதி மெதுவாக எழும்பவும் சரியாயிருந்தது. முயல் முகத்தில் சந்தோஷம்; ‘ஒன்றில் தான் செய்ததாக இவன் ஒப்புக்கொள்வான், இல்லை செய்தவனைக் காட்டித்தரப் போகிறான். நம்ம திட்டம் பலித்தது' என்பதாய் பெருமிதம். மெதுவாய் எழுந்த நிதி சொன்னான், ‘சேர், குரலடிச்சவனுக்குத் தண்டனை குடுக்கப்போறதில்லை எண்டால், அவன் ஆர் எண்டு கண்டுபிடிக்கிறதில என்ன லாபம் சேர்?' என்றான். வகுப்பே சிரிக்க், முயல் முகத்தில் ஈயாடவில்லை. கொஞ்சநேரம் யோசித்தார். ‘மோனே, உண்ட லொஜிக் நல்ல லொஜிக், எல்லாரும் பிழைச்சுப் போங்கடா' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார் முயல்.

பி.கு: படத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட, சம்பவத்தை எழுத்துருவாக்குகின்ற அத்தனை ‘மங்கீஸும்' இருக்கின்றன. அரைவாசி மறைந்து தெரியும் ஒரேயொரு முகம் ‘லாஜிக்' பேசிய நிதியினுடையது. முன்வரிசையில் இருப்பவர்களில் வலதுபக்கம் இருப்பது சோமு.