Wednesday 30 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-4

ஹாட்லிக் கல்லூரியில் உயர்தர வகுப்பு பற்றிய கதைகள் பேசப் போகிறோம் என்றாலே கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அந்தக் கதைகளின் மையமாக இருக்கக் கூடியவர் ராஜேஸ்காந்தன் சேர். ஆள் பயங்கர ‘உசரம்'. பொடியளோட பொடியளா நின்றால் ஆளைத் தெரியாது. அப்படி உயரமான இவர்தான் உயர்தர வகுப்புகளில் நடக்கும் கதைகளின் ஹீரோ.

ராஜேஸ்காந்தன் சேர் எப்ப, என்னத்துக்கு நக்கல் அடிப்பார் என்று தெரியாது. உதாரணத்துக்கு அவர் சொல்லித் தரும் விதத்தில் ஒரு கணக்கைச் செய்யாமல் நாங்கள் தனியார் வகுப்புகளில் கற்ற முறையில் செய்தோமானால் ‘நாங்கள் கடலில் ஏறி அந்தர் அடித்துக் கடலிலும் குதிப்போம், கப்பலையும் கவிழ்ப்போம்' என்றொரு வசனத்தை ஏற்ற இறக்கங்களோடு பேசுவார் பாருங்கள், சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அது போல் எறியம் பற்றி எல்லாம் படிப்பிக்கிற போது ‘நான் இங்க பீரங்கி பற்றிப் படிப்பிக்க அவர் தன்ர பீரங்கிய ஆராய்ச்சி பண்ணுறார்' என்று மேசைக்குக் கீழே குனிந்து பார்த்த வாகீசனுக்கு அவர் அடித்த நக்கலையும், சிவாஜிலிங்கம் எம்.பி. யின் மனைவி மலர்விழி பற்றி நாங்கள் பேச ஏதோ எங்கள் வகுப்புப் பெண் பிள்ளை பற்றிப் பேசுகிறோம் என்று சொல்லி இவர் அடித்த நக்கலும் மறவாது.

இவருக்கும் நிதிக்கும் நல்ல பொருத்தம். அடிக்கடி இருவரும் அன்பு பாராட்டுவார்கள். ஒரு முறை பாடங்கள் போரடித்த நிலையில் நிதி ராஜேஸ்காந்தன் சேர் மீதான தன் அன்பைக் காட்ட முயன்றான். இவரை நாங்கள் ஆர்.கே. என்றுதான் அழைப்போம். நிதி அன்பு மிகுதியால் எங்கள் வகுப்புக்கு அருகே இருந்த கழிவறைச் சுவரில் ‘பேராசிரியர் ஆர்.கே. மண்டபம்' என்று பெரிதாக எழுதினான். (எங்கள் பாடசாலையில் துரைராசா மண்டபம், தாமோதரம் பிள்ளை மண்டபம் என்று கன வகுப்பறைத் தொகுதிகள் உண்டு). அவன் எழுதிக் கொண்டிருக்க தூரத்தில் ஆர்.கே. சேர் வந்து கொண்டிருந்தார். மெதுவாக அவனை எச்சரித்தும் அவனுக்குக் கேட்கவில்லை. நான் வகுப்புக்குள்ளேயே இருந்தபடியால் தப்பி நல்ல பிள்ளையாக இருந்து விட்டேன். அதன் பின் நடந்ததை நிதி விபரித்தான்.

மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த நிதியை யாரோ முதுகில் தட்டியிருக்கிறார்கள். நிதி யாரோ நண்பன் என நினைத்து 'பொறடா மச்சான் வாறன்' என்றிருக்கிறான். மீண்டும் தட்டக் கடுப்பாகித் திரும்பியவன் அங்கே கண்டது ஆர்.கே. சேரை. நாங்கள் இருந்த கட்டடத் தொகுதியில் இருந்த 8 வகுப்பறைகளுக்கும் நிதியைக் கூட்டிக் கொண்டுபோய் ‘இவர், எனக்கு மண்டபம் கட்டிறார்' என்று ஆர்.கே சேர் சொல்லிக் கொண்டுவர, எங்கள் இரண்டாம் கதாநாயகன் அருளானந்தம் சேர் மஜிந்தனையும் சோமுவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். 'என்ன விஷயம் உவை செய்தவை' என்று ஆர்.கே. சேர் கேட்க, அருளர் சொன்னார் ‘இவை ரண்டு பேரும் சைக்கிள் பார்க்கில சைக்கிள் ஸ்ராண்ட் உடைக்கினம் சேர்'. அதுவரை பொழுது போகாமல் வாங்கில் மேசைகளை உடைத்துக் கிரிக்கெட் மட்டும் விளையாடி வந்தவர்கள் சுவாரஷ்யப் பற்றாக்குறை காரணமாக இதெல்லாம் செய்தோம்.

அருளருக்கும் எனக்கும் ஒரு காதல் கதையே இருக்கிறது என்று ஜெயன் அடிக்கடி சொல்வான். ஒரு முறை பாடசாலைக் கன்ரீனில் நானும் நிதியும் இருந்து ‘ரீ' யும் இறால் பொரியும் சுவைத்துக் கொண்டிருந்தோம். 'ரீ' குடித்து முடிந்த கோப்பைகளை அங்கே ஒரு பூக்கல்லு உள்ள சுவரில் எல்லோரும் செருகி வைப்பார்கள். அப்படிச் செருகி வைத்த கோப்பைகளை வாசு குறிபார்த்துக் கல்லால் அடித்துக் கொண்டிருந்தான். அருளருக்கு யார் எறிவது என்று தெரியாமல் வந்து அங்கிருந்தவர்களை விசாரித்தார். நானும் நிதியும் அதைச் செய்யாதபடியால் எங்கள் பாட்டுக்கு கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். அருளருக்குக் கோபம் பத்திவிட்டது. ‘நான் ஒரு வாத்தியார் நிண்டு கொண்டு கதைக்கிறன். நீங்கள் மரியாதை இல்லாமல் இருந்து கொண்டு கதைக்கிறியள்' என்று சொல்லி எனக்கும் நிதிக்கும் ‘துள்ளித் துள்ளி' அடித்தார். ‘இவை ரண்டு பேரும் நோட்டட் ஆ' என்று விட்டு அருளர் போய்விட, நான் அடிவாங்கிய கதையைப் பள்ளிக்கூடம் முழுக்கப் பரப்பினான் ஜெயன்.

இது நடந்து கொஞ்சக் காலத்தின் பின் வகுப்பில் கிரிக்கெட் (வகுப்பில் என்றால், வகுப்பறைக்குள்ளே தான்) விளையாடிய போது எங்கள் எதிர் அணி, ஸ்கோரை பிழையாகச் சொன்னதால் ‘கூழ், கூழ்' என்று பகிடியாகக் கத்தினோம். (கிட்டிப் புள்ளு விளையாடுபவர்களுக்கு இது அறிமுகம்). அதாவது ஸ்கோர் பிழையாகச் சொன்னால் மீண்டும் பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அந்தச் சத்தம் கேட்டு 4 வகுப்புத் தள்ளிப் பாடம் படிப்பித்த அருளர் வந்துவிட்டார். வகுப்பில் இருந்த எல்லாரையும் வகுப்பைவிட்டு வெளியே போய் வெயிலில் நிற்கச் சொன்னார். ஜெயன் சுவரெல்லாம் பாய்ந்து அடி வாங்காமல் ஓடினான். நான் ஆறுதலாக நல்ல பொடியன் மாதிரி வெளியே போக, அருளரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். பிறகு சொல்லவா வேண்டும்? 'துள்ளித் துள்ளி' அடித்தார். (அருளர் தன் பெரிய உடம்பைத் தூக்கித் துள்ளுவதிலேயே முக்கால்வாசிச் சக்தி போய்விடுவதால் நோகவே நோகாது). இந்தக் கதையையும் பள்ளிக்கூடம் முழுக்க ஜெயன் பரப்பினான்.

கடைசி நாட்களில் நான் செய்த இன்னொரு சின்னக் குறும்பும் பிரபலமானது. அப்போது யாழ்ப்பாணம் முழுவதும் உயர்தர வகுப்புத் தவணைப் பரீட்சைகளை தொண்டைமானாறு Field Work Centre (FWC) நடத்துவார்கள். கணிதம், இரசாயனம், பௌதிகம் மூன்றும் பயங்கரக் கஷ்டமான பரீட்சைகள். ஆங்கிலப் பரீட்சையை 3 மணித்தியாலத்துக்குப் பதிலாக ஒரு மணித்தியாலத்தில் எழுதிவிட்டேன். அந்தக் கடுப்பில் FWC= Federation of Workless Culprits என்று ஆங்கில விடைத்தாளில் எழுத, அதைத் திருத்திய சத்தியசீலன் மாஸ்ரர் பள்ளிக்கூடம் முழுவதும் பரப்பி விட்டார். எங்கள் பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் FWCக்காக வினாத்தாள்கள் உருவாக்குபவர்கள். அவர்கள் எல்லாம் என்னைத் தேடிவந்து கேட்டார்கள். (எல்லாருமே அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்கள்)

இப்படி குறும்பாகக் கழிந்த பாடசாலைப் பருவம் முடிவுக்கு வந்த சில நாட்களில் விசர் பிடித்தது போல் இருந்தது என்னவோ உண்மைதான். கடைசி நாளில் பிரியாவிடை போல் என்ன செய்தோம் தெரியுமா? உயர்தர வகுப்புகளில் படிக்கும் அன்றைக்கு வந்த அத்தனை மாணவர்களின் வெள்ளை உடைகளிலும் மை தெளித்துத் தான் வீட்டுக்கு அனுப்பினோம். மை தெளிபடாமல் ஒளித்துத் திரிந்த செந்தூரின் உடுப்பில் மை தெளித்து நான் வெற்றிகரமாக அந்த நாளை முடித்து வைத்தது ஞாபகம் இருக்கிறது. பிரியும்போது கூட எங்களிடம் இருந்த குறும்புத்தனம் ஒருதுளி கூடக் குறையவில்லை.

நாங்கள் கிரிக்கெட் விளையாடி உடைத்த மேசைகள், ஓடுகள் எத்தனை. புதிதாக கீழ் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகமான விவசாயப் பாடத்துக்காக நட்ட எத்தனை கரும்புகளை நாசம் செய்தோம். ஓட்டையாக்கிய சைக்கிள் ரியூப்கள் கணக்கில் அடங்காது. ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் வைத்த பட்டப் பெயர்கள் மறக்குமா. அழகான பரீதா ரீச்சரிடம் ஒரு நாளாவது படிக்க வேண்டும் என்று சித்திரத்தில் இருந்து சங்கீதத்துக்கு மாறிய பொடியங்களை மறக்க முடியுமா. தடை செய்யப்பட்ட ‘போய்ஸ்' படத்தை வேக வேகமாகப் பரப்பிய அந்த அசட்டுத் தைரியத்தை மறக்க முடியுமா (பேசாமல் போய்ஸ்சை ஓடின மாதிரி தியேட்டரில ஓடவிட்டிருக்கலாம். இலவச விளம்பரம் செய்து எல்லாருமே போய்ஸ் பாக்க வழி வகுத்தார்கள்). ஊடல்கள், கூடல்கள் என்று வாழ்ந்த அந்த நாட்கள் திரும்பிக் கிடைக்குமா. நாளை என்றொரு நாளைப் பற்றிக் கவலையின்றி நாங்கள் வாழ்ந்த அந்த நாட்கள் உண்மையிலேயே ‘துள்ளித் திரிந்த காலம்' தான்.

என்னுடைய பள்ளிப் பருவம் பற்றிய மேலும் பல படைப்புகளை இங்கே சென்று பார்க்கலாம். அதே போல் இந்தத் தொடரின் மற்றைய பாகங்களை இங்கே சென்று பார்க்கலாம்.

இந்தத் தொடரில் என் பாடசாலை வாழ்க்கையில் நடந்த சில துளிகளை மட்டுமே தொகுத்திருக்கிறேன். இந்த வலைப்பூவில் என் பாடசாலை வாழ்க்கை பற்றிப் பல இடங்களில் தொட்டுச் சென்றிருக்கிறேன், இனியும் தொடுவேன். ஆகவே, துள்ளித் திரிந்த காலம் தொடரை இத்துடன் முடிப்போமா?

நன்றி

Friday 25 September 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 20-26 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் இடம்பெற்ற இவ்வாறான மோதல் ஒன்றில் ஒரு குடிமகன் காயமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. முகாமில் இருந்த ஒருவரை இராணுவம் கடத்திச் சென்று கொன்று விட்டதாகக் கூறி மக்கள் இராணுவத்துக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அதனால் சென்ற புதன்கிழமை மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை முகாமில் இருந்து கள்ளமாகத் தப்பி ஓட முயன்ற ஒருவர் படையினரிடம் அகப்பட்டுக் கொண்டதால் விளைந்த பிரச்சினையே இது என்று காவல்துறை கூறியிருக்கிறது. இதனால் இம்முகாமுக்குச் செல்லும் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. (எப்போது ஊடகவியலாளர்களை உள்ளே விட்டார்கள் இப்போது தடுப்பதற்கு)


இதே வேளை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து மேலும் சில அதிகாரிகள் இந்த மக்களைப் போய்ப் பார்வையிட்டு வந்திருக்கிறார்கள். வழமை போலவே இலங்கைக்கு ஐ.நா. அறிவுறுத்தல், இலங்கையிடம் ஐ.நா. கோரிக்கை, இலங்கையிடம் ஐ.நா. வலியுறுத்தல் போன்ற தலைப்புகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஏதோ கண்காட்சிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்து கருத்துச் சொல்வதுபோல் செய்துகொண்டிருக்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள். (இன்னுமாடா உலகம் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு என்று வடிவேலு பாணியில் பேசிக்கொள்வார்களோ இந்த ஐ.நா. அதிகாரிகள்???)

அரசியல்-புகுந்தகம்

ரொரொன்ரோ நகரபிதா டேவிட் மில்லர் மூன்றாவது முறையாகவும் நகரபிதா பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார். நகரசபை மண்டபத்துக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தன்னுடைய குழந்தைகளை வழிநடத்துவதில் கவனம் செலுத்த தனக்குக் கூடிய நேரம் தேவைப்படுவதாகக் கூறிய மில்லர், மிகவும் கடினமான முடிவாக இருந்தபோதும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் நெருக்கடி கருதி இந்த முடிவை எடுக்கவேண்டி இருப்பதாகக் கூறிக் கண் கலங்கினார். இந்த வருடக் கோடை காலத்தில் நகரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் பற்றிய பிரச்சினையை மில்லர் சரியாக சமாளிக்கவில்லை என்றும், அதனால் 79% ரொரொன்ரோ நகரவாசிகள் ஒரு புதிய நகரபிதா தேவை என்று விரும்புவதாகவும் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. (விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லை இவருக்கு... அட அவருக்கு மீசையே இல்லையே)

அரசியல்-உலகம்

ஆப்கானைப் பிறப்பிடமாகக் கொண்ட நஜிபுல்லா ஸாஸி என்ற 24 வயது இளைஞர் அமெரிக்காவில் குண்டுகளை வெடிக்க வைக்கச் சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் அடிக்கடி கனடாவுக்கும் வந்து போயிருப்பதாகவும், கனடாவிலும் ஒரு தீவிரவாத கட்டமைப்பை இவர் உருவாக்க முயன்றிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொலராடோ விமான நிலையத்தில் ஷட்டில் பஸ் ஓட்டுனராகவும், நியூயோர்க்கில் ஒரு சிறிய கோப்பி விற்கும் தள்ளுவண்டி உரிமையாளருமான நஜிபுல்லா, மேலதிக விசாரணைகளுக்காக நியூயோர்க் நகரத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். செப்ரெம்பர்-11 இன்னொரு தீவிரவாதத் தாக்குதலுக்கு இவர் முயன்றிருக்கலாம் என்பதான அனுமானங்களும் இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் இவன் குண்டு வைப்பதும், அதையே காரணம் காட்டி எல்லா முஸ்லீமையும் தீவிரவாதியாக்கி அமெரிக்காக்காரன் கொன்றொழிப்பதும் எப்போதுதான் முடியப்போகிறதோ.

வணிகம்-பொருளாதாரம்-தொழில் நுட்பம்

Blackberry பிதாமகர்கள் Research in Motion வெளியிட்ட மூன்றாவது காலாண்டுக்கான வியாபார எதிர்வுகூறல் மோசமாகப் பிழைத்துவிட்டது. 3.91 பில்லியன் வருமானத்தை எதிர்பார்த்த இந்நிறுவனத்தால் 3.6-3.85 பில்லியன் மட்டுமே இந்தக் காலாண்டில் ஈட்டக்கூடியதாய் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த எதிர்மறை அறிக்கை காரணமாக பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் 17% வீழ்ந்திருக்கின்றன. Apple நிறுவனத்தின் i-Phone உடன் ஒப்பிடும்போது Blackberry வகைகள் விலை கூடியதாய் இருப்பதால், Apple நிறுவனத்தோடு போட்டி போட குறைந்த செலவில் Smart Phoneகளைத் தயாரித்துக், குறைந்த விலையில் சந்தைப்படுத்தும் வழி வகைகளை Research in Motion நிறுவனம் செயற்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னதான் சொல்லுங்கள், Steve Jobs, Steve Wozniack மற்றும் Ronald Wayne ஆகியோர் Apple ஐ ஆரம்பித்த போது அவர்களின் தாரக மந்திரமே புதிதாகச் சிந்தித்தல் என்பதுதான். அதனால்தான் பலமுறை விழுந்தும் மீண்டும் மீண்டும் வந்து மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.

விளையாட்டு
ஐ.சி.சி. சாம்பியன் கோப்பைப் போட்டித் தொடர் தென்னாபிரிக்காவில் ஆரம்பம் ஆகியிருக்கிறது. முதல் நாள் போட்டியிலேயே உலகின் முதல் நிலை அணியான தென்னாபிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது இலங்கை அணி. அந்த இலங்கை அணியை வீழ்த்தி மிரட்டியிருக்கிறது இங்கிலாந்து அணி. ஒரு விஷயம் உண்மை. ஆடுகளங்கள் இப்படியாக Swing Bowlingக்கு சாதகமாய் இருக்கும் என்றால் இங்கிலாந்து ஒரு கறுப்புக் குதிரையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. யார் கண்டார்? மேற்கிந்தியத் தீவுகள் அணிதான் பரிதாபகரமாக இருக்கிறது. சிலவேளை அவர்களுக்கு இந்தியா மகிழ்ச்சி அளிக்கலாம் (பாகிஸ்தான் கிட்டத்தட்ட தோற்றுப் போனார்கள்). சேவாக் இல்லாமல் ஏற்கனவே துவண்ட இந்தியாவுக்கு யுவராஜ் இல்லாதது இன்னும் ஒரு அதிர்ச்சி.


நாளை சனிக்கிழமை (26/09/2009) இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறார்கள். இதுவரை இவ்விரு அணிகளும் ஐ.சி.சி. போட்டித் தொடர்களில் 7 முறை மோதியிருக்கிறார்கள். 6 முறை இந்தியாவும் (1992, 1996, 1999, 2003 உலகக் கோப்பைகள், 2007 20-20 உலகக் கோப்பை) ஒரு முறை பாகிஸ்தானும் (2004 சாம்பியன் கிண்ணம்) வென்றிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் இந்த இந்திய அணியால் பாகிஸ்தானை சமாளிக்க முடியுமா தெரியவில்லை. பாகிஸ்தானை அடித்து நொறுக்கும் சேவாக்கும், யுவராஜும் இல்லாதது பெரிய குறை.

சினிமா
ஈரம் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைப் பார்த்தாயிற்று. (அதாவது இரண்டினதும் DVD Rip வந்துவிட்டது என்று அர்த்தம்). ஈரம் பிடித்திருக்கிறது. மிருகம் ஆதியா அவர்? சாதாரணமாக எங்கள் மத்தியில் பார்க்கும் கம்பீரமான இளைஞனாகத் தோன்றுகிறார். ஆனால் இவரும் பிரசன்னா, நந்தா வரிசையில் நிச்சயமாக, வெகு நிச்சயமாக வீணடிக்கப்படுவார் என்பது என் எண்ணம். நினைத்தாலே இனிக்கும் பார்த்த போது கொஞ்சம் பிடித்தது. சக்தியைப் பார்த்த போதெல்லாம் வெறுப்பாய் இருந்தது. A Wednesday முதலிலேயே பார்த்து உன்னைப் போல் ஒருவன் பார்ப்பதில் இருந்த ஆர்வம் குறைந்துபோன அனுபவத்தில், நினைத்தாலே இனிக்கும் படத்தின் மலையாளப் பதிப்பான Classmates படத்தை நினைத்தாலே இனிக்கும் பார்த்த பிறகுதான் தரவிறக்கிப் பார்த்தேன். Remake என்ற பெயரில் கெடுத்திருக்கிறார்கள் தமிழில். விரிவாக எழுதுகிறேன் இன்னொரு பதிவில்.


என்ன, ‘அதை'ப் பற்றி எழுதவில்லை என்று பார்க்கிறீர்களா? நான் ரவுடி இல்லை ரவுடி இல்லை ரவுடி இல்லை.

இது எப்பிடி இருக்கு??
Twitterல் பிரித்தானியப் Pop பாடகி Lily Allen ஐத் தொடர்கிறேன். ஒரு நாள் லில்லி lol lol lol என்று போட்டு ஒரு இணைப்புக் கொடுத்திருந்தார். இணைப்பைத் தொடர்ந்து போனால் 2009 Bestival நிகழ்வில் லில்லி தன்னுடைய Womanizer பாடலை நேரடியாக வழங்கும் காணொளி. காணொளியில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? பாருங்கள். (பார்த்த எனக்கே எப்போது விழும் எப்போது விழும் என்று பதைத்தது.... ம்ஹூம்.. லில்லி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டாலதானே)

Wednesday 23 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-3

முன்னைய பாகங்கள் இங்கே.

எட்டாம் வகுப்பில கொஞ்சம் கொஞ்சமா வெடிவால் முளைக்கத் தொடங்கியது. பொடியன்களுக்கு ஒரு புது வியாதி தொத்திக் கொண்டது. யாராவது ஒரு பொடியன் கொஞ்சம் ஏமிலாந்தி இருக்கும் நேரத்தில் பின் பக்கமாக வந்து காலகளுக்கு இடையே கையை விட்டு 'கண்டதை' பிடித்து நசுக்கும் ஒரு வழக்கம் இருந்தது. விமல்குமார், காந்தராஜ் என்று இருவர் இதில் வலு மும்முரம். சிலவேளை 'எல்லாமே நசுங்கிப் போச்சோ' என்று கலங்கும் அளவுக்கு கொடுமை செய்வார்கள். இதே எட்டாம் வகுப்பில் எங்களிடம் வந்து மாட்டிக் கொடுமை அனுபவித்தது இருவர். ஒருவர் எங்கள் வகுப்பு ஆசிரியரும், ஆங்கில ஆசிரியருமான திருச்செல்வம், மற்றவர் கணித ஆசிரியர் சேந்தன் சேர்.

திருச்செல்வம் சேருக்கு முக்கால் மண்டையில் மயிரே இல்லை. அந்த மண்டையைத் தடவி எல்லாம் பார்ப்பாங்கள். மஜிந்தன் மரம் பதம் பார்ப்பது போல் விரலால் குட்டிக்கூட அட்டகாசம் செய்வான். திருச்செல்வம் சேர் பொறுத்துக் கொள்வார். இவரோடு காந்தராஜ் பேசும் I mean you mean, you mean I mean வசனம் பிரபலம். ‘நீங்கள் நினைப்பதை நானும், நான் நினைப்பதை நீங்களும் நினைக்கிறோம்' என்று ஆங்கிலத்தில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதுதான் காந்துவின் வேலை. அதே போல் சேந்தன் சேர். இவர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் இருந்து நேரடியாக வந்து சேர்ந்தது எங்கள் பாடசாலையில். அவருக்கு அடிக்கடி மகி மீசை ஷேப் பண்ணி விடுவான். உரிமையோடு அவரின் பொக்கற்றுக்குள் கை எல்லாம் விடுவான் காந்தராஜ்.

8ம் வகுப்பு இறுதியில் ஹாட்லிக்கு வந்து சேர்ந்த நிதி, நான், மகி, அரவிந்தன் எல்லாருமே ஒரே வகுப்புக்கு 9ம் வகுப்பில் மாற்றப் பட்டோம். ஒன்பதாம் வகுப்பிலிருந்து எங்களிடம் நொந்து நூலானவர்கள் பலர். அவர்களில் முதல்வர், கனகசபாபதி சேர். இந்தாள் பாவம், ஒரு கொஞ்சக்காலம் எங்களின் வகுப்பாசிரியராய் இருந்தது. ‘மெய்' எழுத்தை தடுமாறி ‘மொய்' என்று எழுதி, அவரது பேரே மொய் என்றாகிவிட்டது. இவருக்கும், விஞ்ஞானம் படிப்பிக்கும் VK சேருக்கும் தபால் மூலம் அந்த்ராக்ஸ் அனுப்பியவர்கள், நாங்கள். மொய் கடைசியில் எங்கள் வகுப்பாசிரியராக இருக்க மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அந்தாளை கஷ்டப்படுத்தினோம். பிறகு மன்னிப்பும் கேட்டோம்.

அது போல் எங்களிடம் மாட்டிய அடுத்த பாவம், ‘மொஸ்கோ மணி' எனப்பட்ட செல்வராஜா. அந்தாள் எங்களுக்கு ஆங்கிலம் படிப்பித்த காலத்தில் பட்ட பாடு சொல்லி மாளாது. ஒரு உதாரணம். ஆள் Oath பற்றிப் படிப்பித்தார். அதாவது சத்தியப்பிரமாணம் எடுப்பது பற்றி. எல்லா ஆசிரியர்களும் முதன் முதலாகப் படிப்பிக்கப் போகும் பாடசாலையில் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அரவிந்தன் எழும்பினான். முகம் வலு சீரியஸாக இருக்க, செல்வராஜா சேரைக் கேட்டான், ‘சேர் நீங்கள் முதன் முதலாக எங்க படிப்பிச்சனியள்?'. அந்தாள் வரப்போற ஆப்பு விளங்காமல், ‘மெதடிஸ்டிலயடா, ஏன் கேட்கிறாய்?' என்றார். இவன் ‘ஒன்றும் இல்லை என்றான்'. அந்தாள் வேலியில போன ஓணானை எடுத்து மடியில விடுற மாதிரி திரும்பவும் ஏன் எண்டு கேட்டுது. இவன் பாவி கேட்டான், ‘அப்ப நீங்கள் மெதடிஸ்டிலையோ Oath எடுத்தனியள்?' என்று. சொன்னா நம்பமாட்டியள் எனக்கு சிரிச்சு சிரிச்சு கண்ணெல்லாம் தண்ணி. இன்றுகூட செல்வாராஜா சேரின் படத்தைப் பார்த்தால், அவரைப் பற்றி நினைத்தால் இந்தக் கேள்விதான் மனதில் வந்து நிற்கும்.

எங்களுக்கு வெடிவால் முளைத்த காலத்தில் எங்களின் பாடசாலை அதிபராக இருந்தவர் ஸ்ரீபதி சேர். ஆள் கொஞ்சம் அதிருப்தியை சம்பாதித்த மனிதர். எனக்கு அவர் மீது தனிப்பட்ட அதிருப்தி இல்லை. இவரது காலத்தில் கட்டப்பட்ட சில கட்டடங்களுக்கு நாங்கள் எங்கள் கையால் சீமெந்து சுமந்தது இன்றைக்கும் ஞாபகம் இருக்கு. மேடையிலை இவரைக்கண்டித்துப் போட்ட ஒரு நாடகத்தை துணிவாக மேடையிறக்கியவர். இவரின் காலத்தில் 11ம் வகுப்பில மரியதாஸ் மாஸ்டர் எங்களுக்கு சனி, ஞாயிறில வகுப்பெடுப்பார். ஒரு சனிக்கிழமை ஸ்ரீபதியும் மரியதாஸ் எடுக்கிற வகுப்பைப் பார்க்க வந்திட்டார். வந்து பார்த்தால் எல்லாரும் கலர் உடுப்போட இருக்கிறம். அவ்வளவு பேரையும் வெறும் மேலோட இருந்து படிக்க வைத்தார் ஸ்ரீபதி. நெஞ்சுக்குக் குறுக்கே ஒருத்தன் கையைக் கட்ட, ‘அதென்ன முத்தின மார்பகமே மறைக்கிறதுக்கு. கையை எடு' என்ற ரீதியில் ஏச்செல்லாம் விழும். ஸ்ரீபதியின் ‘நாய்தான் வாலை ஆட்டலாமே ஒழிய, வால் நாயை ஆட்ட முடியாது' என்ற ‘பஞ்ச்' மிகவும் பிரபலமானது.

மரியதாஸ் வாத்தியாரைப் பற்றிச் சொல்லாமல் இருக்கேலாது. எங்களுக்கு அப்போது இந்தக் ‘கணிப்பீடு' ‘ஒப்படை' என்றெல்லாம் தொல்லைகள் இருந்தது. இந்தாள் மரி எங்களுக்கு கணித்தத்தில் ஒரு ‘கணிப்பீடு' என்று சொல்லி, அடைக்கப்பட்ட உருவங்கள் பற்றி ஐந்து நிமிடம் சுத்தத் தமிழில் பேசச் சொல்லி எல்லாம் தொல்லை பண்ணும். இந்தாளின்ர அடிக்கு பயப்பிடாத ஆளே இல்லை. கள்ள வழி, அது இது என்று ஆள் வலு ஃபேமஸ். ‘ஏழிசை கீதமே' என்று ஜேசுதாஸ் மாதிரி இழுத்தார் என்றால், ம்ஹூம் சொக்கிப் போய்விடுவீர்கள். இந்த மரியிட்ட அடிவாங்காமல் நான் படிச்சதே பெரிய விசயம். ஒரே ஒரு முறை மட்டும் கிட்டத்தட்ட அடிவாங்கியிருக்க வேண்டியது, மயிரிழையில் தப்பினேன்.

மரியதாஸ் தொடைகள் பற்றிப் படிப்பித்த நேரம் அது. ஒரு வென் வரிப்படம் கீறும் போது அந்தாள் சொன்ன முறையில் கீறாமல் பிழையாய்க் கீறிவிட்டேன். மரி பிழை போட்டுவிட்டு ஆள் யார் என்று நிமிர்ந்து பார்த்தபோது என் பின்பக்கம் மட்டுமே தெரிந்திருக்கிறது. ஆக நான் போன திசையை மட்டும் பார்த்த மரிக்கு முகம் தெரியவில்லை. எல்லாருடைய கொப்பிகளையும் திருத்தி முடித்த பின் மரி விறு விறுவென்று வந்து எனக்கு நேரே பின் வரிசையில் இருந்த ரஜனிகாந்துக்கு சளார் பளாஎ என்று அடி. ரஜனிக்கு ஏன் அடி விழுகிறது என்று தெரியவேயில்லை. ஆனால் அடிக்கும்போது மரி வென் வரிப்படம் பற்றி உதிர்த்த ஒரு வசனம் அது எனக்கு விழ வேண்டிய அடி என்பதை உறுதிப்படுத்தியது. அந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு மாதிரி எனக்கு ‘பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' என்று ஆனந்தராஜ் ரஜினிக்கு பாட்ஷா படத்தில் அடிக்கும்போது ஒரு சோகமான பின்னணிப் பாட்டு வருமே, அது ஞாபகம் வந்து தொலைத்தது.

11ம் வகுப்பில் நாங்கள் செய்த இன்னொரு அட்டூழியம் Prefect Enmity Pupils Party என்ற பெயரில் அப்போ பிரிஃபெக்டாக இருந்தவர்களின் ‘அன்பைத்' தேடிப்போய் வாங்கிக் கொண்டதுதான். அண்ணன் கரவைக்குரல் இதைப் பற்றிக் கதை கதையாச் சொல்லுவார் என்று நினைக்கிறேன். அடிக்கடி டிற்றெஞ்சன் போடுவார்கள் எங்களின் வகுப்புக்கு.

இந்தக் காலத்தில் நான் உருப்படியாகச் செய்த ஒரு விஷயம், முதன் முறையாகப் பள்ளிக்கூட மேடை ஏறியதுதான். இது பற்றியும் தனியாக ஒரு பதிவே போட்டிருக்கிறேன். என்னை மேடை ஏற்றியது விஞ்ஞானம் படிப்பித்த விஜயகுமார் சேர். பச்சைய வீட்டு விளைவு பற்றி தமிழில் பேசினேன். அதன்பின் பல ஆங்கில நாடகங்களுக்காக என்னை சத்தியசீலன் சேர் மேடையேற்றினார். அதுதவிர, இப்படியான ரசனைகெட்ட குழப்படிகளே தொடர்ந்தன. என்னில் இருந்த 'நல்ல பொடியன்' இமேஜ் இந்தக் குழப்படிகளில் இருந்து என்னை அடிக்கடி காப்பாற்றியது. அதே போல் எங்கள் வகுப்பில் முக்கால்வாசிப் பேருக்கு நாடகம் நன்றாக வரும். அரவிந்தன் போட்ட ‘ஐயா எலெக்சன் கேட்கிறார்' என்ற நகைச்சுவை நாடகம், அவனை அறியாமலே உருவான ஒரு அருமையான குறியீட்டு நாடகம்.

ஒருவாறாக ஓ.எல் கடந்து ஏ.எல் வந்தோம். இனித்தான் நாங்கள் இன்றைக்கு நினைத்தாலும் இனிக்கும் காலங்கள் அவை பற்றி இன்னொரு பாகத்தில்.

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-2

பகுதி-1 இங்கே.

நான் முதல் முதல் வாங்கிய அடி, வாழ்நாளில் மறக்க முடியாத அடி, சொல்வது எழுதுதல் வைத்து நான் விட்ட பிழைக்கு வைத்தியநாதக் குருக்கள் அடித்த அடிதான். அதைப் பற்றி ஒரு முழுப் பதிவே இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். அதன் பிறகு ஐந்தாம் வகுப்பில் பாடசாலைக் கதவை மூடுவதாக நடித்துவிட்டு, கதவுச் சாவியை மாலியக்கா வீட்டில் கொடுத்துவிட்டு பாடசாலை மைதானத்தில் கால்பந்து விளையாடினோம். மாலியக்கா கண்டுவிட்டார். அடியெண்டால் அப்பிடி ஒரு அடி. ஆறோ ஏழு பெரிய நுணாக் கம்புகள் சிதம்பச் சிதம்ப மாலியக்கா அடிச்ச அடி ஒரு நாளும் மறக்காது. 'நீங்கள் கேட்டிட்டு விளையாடி இருக்கலாம்.. எல்லாரையும் பேக்காட்டி விளையாடலாம் எண்டு நினைச்சியள், அதுக்குத்தான் இது அதுக்குத்தான் இது' என்று சொல்லிச் சொல்லி அடித்தார்.

அதே போல தாமோதரா காலத்தில் மறக்க முடியாத இன்னொரு சம்பவம் நான் சாயினிக்கு அடித்தது. எல்லோரும் தமிழ்ப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கம் முன்னுக்குப் போய் வாசியுங்கோ என்று சொல்லிவிட்டு ஆறுமுகம் வாத்தியார் போய்விட்டார். சாயினி இரண்டாவது பக்கத்துக்குள்ளும் நுழைய, பொடியள் ஏத்திவிட காலில் சின்னதாக ஒரு அடி. சாயினி விழுந்து போனார். அப்போது மன்னிப்புக் கேட்கவில்லை. சமீபத்தில் facebookல் கேட்டேன். அப்படி ஒன்று நடந்ததே ஞாபகம் இல்லை என்கிறார் அவர். (அந்த நேரம் இந்தப் பிள்ளைக்கு நல்ல ஞாபக சக்தி. இப்ப எல்லாத்தையும் மறந்துட்டுது).

ஆரம்பப் பாடசாலைக் காலத்திலேயே தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி தங்கவேல் ஒருமுறை சாத்தினார். ஆறு மணிக்கு ரியூசன் முடிய வலு வேகமாக ஓடிப்போன நான் ஏதோ ஒரு பஞ்சு மூட்டையில் மோதித்தான் நின்றேன். யாரோ கையில் பிடித்து சுழலச் சுழல பிரம்பால் அடித்தார்கள். கையை விட்டதும் நேரே வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். பக்கத்து வீட்டு முரளி அண்ணாதான் சொன்னார், நான் மோதியது தங்கவேலுவின் பெரிய வயிற்றில் என்றும், அடித்தது தங்கவேலு என்றும். அடுத்த நாள் ரியூசனுக்குப் போக வெட்கமாய் இருந்தது.

ஆறாம் வகுப்பில ஹாட்லியில சேர்ந்த நாள் தொடக்கம்தான் என்னுடைய பள்ளி வாழ்க்கை மேலும் சுவாரஷ்யமானது. முதல் நாளிலேயே தொடங்கிவிட்டது அட்டூழியம். அப்பா கொண்டுபோய் பள்ளிக் கூடத்தில் விட, எங்கே எப்பிடிப் போவது என்று தெரியாமல் தடுமாறினேன். ஒரு மனிதர், எளிமையானவர், வெள்ளைக் கால்சட்டை மேல்சட்டை போட்ட ஒரு மெல்லியவர், என்னை தாமோதரம் தொகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்த பல மாணவர்களில் ஒருவரிடம் 'உங்களையுன் உந்தப் பீயோனோ கொண்டுவந்து விட்டவர்' என்றேன் என்னை அழைத்து வந்த அந்த நபரைக் காட்டி. ஓம் அவர்தான் என்றார் அந்த மாணவரும். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உப அதிபர் குணசீலன் வந்து ஒரு அறிமுக உரை ஆற்றிவிட்டு, இப்போது அதிபர் நடராசா அவர்கள் பேசுவார் என்றார். பேச வந்தது யார் தெரியுமா?? ‘அந்த பீயோன்'.. அடடா, அதிபரைப் போய் குமாஸ்தாவாக நினைத்து விட்டோமே என்று வெட்கமாய்ப் போய்விட்டது.

அன்றைக்கே பின்னேரம் பாடசாலை முடிகிற நேரத்தில் மூர்த்தி அண்ணையின் வானைத் தேடின போது அவர் பக்கத்தில் இருக்கும் மெதடிஸ்ட் பெண்கள் பாடசாலையில் வானை நிறுத்தி இருப்பது தெரிந்தது. (S.B. என்று எங்களுக்காக பாடசாலைச் சேவை ஓடிய சத்திய மூர்த்தி அண்ணையை மறக்க முடியுமா?) அங்கே போக வெளிக்கிட, வேட்டி கட்டிய, கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்கும் ஒருவர் போக வேண்டாம் என்றார். அப்படி இருந்தும் ஒரு சிலர் ஓட, நான் கத்தினேன் ‘அண்ணை அண்ணை, அங்க பாருங்கோ அவை பெண்கள் பள்ளிக் கூடத்துக்கு ஓடுகினம்' என்று. நான் சின்னப் பொடியன் என்பதாலும், அந்த வேட்டி கட்டிய ஆளுக்குப் பக்கத்தில் ஒரு பிரிஃபெக்ட் அண்ணை நின்றதாலும், நான் கத்தியது ஒருத்தருக்கும் கேட்கவில்லை. அப்பாவிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லி ‘அந்த காலேலாத பீயோன் அண்ணைகூட ஆக்களை ஒழுங்கு படுத்திறார். அப்ப அந்தப் பள்ளிக்கூடம் சரியான டிசிப்பிளின்தான்' என்றேன். அப்பா சிரித்துவிட்டுச் சொன்னார், 'அவர் பீயோனில்ல, அவரும் அங்க படிப்பிக்கிற மாஸ்டர்தான்' என்று. எனக்கு முதலில் விளங்கவில்லை. அடுத்த நாள் வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்க வந்தார் அந்த மனிதர். அவர்தான் ஈசப்பா என்ற ஈஸ்வரநாதன் சேர்.

இப்படி முதல் நாளே வலு லூசுத்தனமாகத் தொடங்கிய என்னுடைய ஹாட்லி வாழ்க்கை மூன்று நாட்களில் தடைப்பட்டது. ஆமி யாழ்ப்பாணம் முழுக்கப் பிடித்து, தென்மராட்சியிலிருந்து வடமராட்சி நோக்கி வருவதாகச் சொல்லி 12 மணிக்கு பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மூன்று மாதங்களின் பின் திறக்கப்பட்டது. அதன் பின் பால்குடி சொன்னது போல், நீண்ட நேரம் வரிசையாக உடற்சோதனை எல்லாம் முடித்துத்தான் பள்ளிக்கூடம் செல்வோம்.

கொஞ்சக் காலம் ‘ஏ' வகுப்பும், 'பி' வகுப்பும் ஒன்றாயிருந்து படித்தோம். அங்கே வந்த முதல் பிறந்த நாள் பற்றி தவராசா சேர் பொடியளிடம் சொல்ல எல்லோருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தேன். அந்த நாளில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அது பற்றி ஒரு பதிவு இட்டேன். விரும்பினால் வாசியுங்கள்.
ஆறாம் வகுப்பில் சித்திரக் கொப்பி கொண்டு போகாமல் விட்டதுக்காக சற்குணராசா சேர் அடித்த அடி இன்றும் ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் வலிக்கிறது.

அதன் பின், ஏழாம் வகுப்பில் மெதடிஸ்ட் பக்கம் இருந்த ஒரு தொகுதியில் படித்த போது, மெதடிஸ்ட் சங்கீத ஆசிரியை மங்களம் ரீச்சர் மற்றும் திருமதி. சிவராசா செய்த ஒரு கீழ்த்தரமான முறையீட்டால், தவராசா சேரிடம் S.B வானில் பள்ளிக்கூடம் வரும் எல்லோருடனும் சேர்ந்து அடிவாங்கிய ஞாபகம் மறக்காது. மங்களம் ரீச்சரை நான் ஒரு மனிதப் பிறவியாகவே பார்ப்பதில்லை. அந்த வான் எப்படி கிழங்கு அடுக்குவது போல் மாணவர்களை அடுக்கும் என்பது பற்றி எந்தச் சொரணையும் இல்லாமல், மாணவர்களின் கால்சட்டை நுனி அவரின் உடம்பில் பட்டாலே குடையால் அடிப்பார் மங்களம் ரீச்சர். அதே விகார மனநிலையில் அவர் செய்த முறைப்பாட்டை மறக்கவே மாட்டேன். (அந்த ஒரு காரணத்துக்காகவே மங்களம் ரீச்சர் எங்களின் வெடிவால் காலத்தில் பட்ட பாட்டை மறக்க மாட்டார்).

பாடசாலைக் காலத்தில் எங்களின் அட்டகாசம் தொடங்கியது 9ம் வகுப்புக்குப் பிறகுதான். அதுவரை எட்டாம் வகுப்பில் மகியோடும், அரவிந்தனோடும் கோபம் அப்படி இப்படி என்று சில்லறைத் தனமாக இருந்தேன். இருந்தேன் என்ன, எல்லாருமே இருந்தோம். எட்டாம் வகுப்பு இறுதியில் தொடங்கி, ஒன்பதாம் வகுப்பில்தான் விஸ்வரூபம் எடுத்தோம் நாங்கள். அது பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்... சந்திப்போம்

Sunday 20 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-1

நண்பன் பால்குடியின் அழைப்பை மதித்து பாடசாலைக் காலத்தை மீட்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே பல பதிவுகளில் என் பள்ளிப் பருவ அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். ஆசிரியர்கள் பற்றி ‘தகப்பன் சாமிகள்' என்ற தலைப்பில் எழுதிய தொடர் ஒன்று ஓராம் வகுப்பில் அதிபராய் இருந்த வைத்தியநாதக் குருக்களுடன் நின்றுவிட்டது. வெகுவிரைவில் அதையும் தொடரவேண்டும். அதைவிடத் தலைக்கு மேல் வேலை. ஆணி புடுங்கிவிட்டு பதிவு எழுதும்போது பதிவு வசீகரமாக வரவேண்டும் என்கிற ஆர்வத்தில் தூக்கம் தொலைந்து கண்ணைச் சுற்றிக் கருவளையம் விழுகிறது, கண் போதையிலிருப்பவன் போல் சிவந்துபோய்க் கிடக்கிறது. இருந்தாலும் பதிவுலகம் என்னை விடுவதாயில்லை. இந்த ஒரு எரிச்சல் கலந்த அவஸ்தையான காலப் பகுதியில் என் வாழ்வின் பசுமையான பகுதிகளை மீட்குமாறு பால்குடி கேட்டது, பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதான்.

என்னுடைய நேர்சரியில் இருவரிடம் படித்தேன். ஜெயமணி ரீச்சர் மற்றது ஜெயா ரீச்சர். அந்த வயதில் கொஞ்சம் ஈயாப்பி. சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை போடுவேன். பென்சில் கூடக் கடன் கொடுக்க மாட்டேன். ஜெயா ரீச்சர் ஒரு முறை இதை அப்பாவிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது. கேம்பிறிஜ் கலாசாலை நேர்சரியில் ஜெயமணி ரீச்சரிடம் ஒரு கொஞ்சக்காலமும், மீதியை ஜெயா ரீச்சரிடமும் படித்தேன். 1990 டிசம்பரில் அக்காவின் திருமணம் காரணமாக இந்தியா போய், இலங்கைக்குத் திரும்பி வர பிந்திப் போனதால் கொஞ்சம் பிந்தித்தான் ஓராம் வகுப்பில் சேர்ந்தேன்.

ஓராம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை என்னை வளர்த்தது அப்பா பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் யா/ கரணவாய் தாமோதர வித்தியாலயம். வைத்தியநாதக் குருக்கள் அதிபராக இருந்தார். இவர் வாழைப்பழத்தை வாயைப் பயம் என்று உச்சரிக்க நான் அப்படியே எழுதி, பிறகு ஐயோ என்பதை ஐழோ என்று எழுதி அடிவாங்கிய கதையை முன்னொருமுறை எழுதியிருக்கிறேன். முதலாம் வகுப்பிலேயே எனக்கு டீன் தூசணம் சொல்லித் தந்தான் (அப்பவே ராகிங்). ஓராம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்த ‘நுள்ளு' புகழ் ஆறுமுகம் வாத்தியார்தான் அந்தப் பாடசாலையில் எனக்குப் பிடிக்காத ஒரு வாத்தியாராக இருந்தார். மூன்றாம் வகுப்பில் படிப்பித்த இந்திராணி ரீச்சரும் கொஞ்சம் கடுமையானவர்தான்.

இரண்டாம் வகுப்புப் படிப்பித்த இராஜசுலோசனா ரீச்சரை மறக்க முடியாது. அதே போல் நான்காம் வகுப்பில் படிப்பித்த சிவமாலினி ரீச்சரையும். இராஜசுலோசனா ரீச்சரை தனிப்பட்ட முறையிலும் தெரியும். அவரது குடும்பத்தைப் போராடித் தூக்கி நிறுத்திய ஒரு பெண் அவர். பெண்கள் மீதான ஒரு மரியாதையான பார்வைக்கு முழுமுதற் காரணம் ரீச்சர்தான். கம்பீரமானவர். இப்போது எப்படி எங்கே இருக்கிறாவோ தெரியவில்லை. அதே போல் சிவமாலினி ரீச்சர், இல்லையென்றால் அன்பாக மாலியக்கா. அடி என்றால் அப்படி ஒரு அடி. அக்கறை என்றால் அப்படி ஒரு அக்கறை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். மாலியக்கா கூப்பிடு தூரத்தில்தான் கனடாவில் இருக்கிறா. ஆனா வாழ்க்கையில் ஸ்திரமாக ஜெயிக்காமல் மாலியக்காவைப் பார்க்கப் போவதில்லை. ஒரே ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பார்த்த போது அதே நாலாம் வகுப்பில் பார்த்த அன்பு கலந்த கண்டிப்போடு மாலியக்கா நலம் விசாரித்தபோது என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. லேசாகப் பாடகி சுஜாதா சாயல் இருக்கும், மெல்லிய குரலில் பேசும் என்னுடைய முதல் ஆங்கில ஆசிரியை தேன்மதி ரீச்சரையும் மறக்க முடியாது. 13ம் வகுப்பில் ஆங்கில தினப் போட்டிக்குப் போனபோது கூட என்னை மறக்காமல் கூப்பிட்டுக் கதைத்தார்.

அதன் பிறகு ஆறாம் வகுப்புத் தொடக்கம், ஹாட்லிக் கல்லூரி. என்ன நிலைக்கு உயர்ந்தாலும், ஹாட்லியில் 1996-2004 வரை நான் படித்த காலத்து வசந்தம் திரும்பி வராது. உடம்பைத் தடவி, சில சமயம் விதைகளை நசுக்கி எங்களை 'அவர்கள்' சோதிக்க, ‘விடுங்கோ சேர்' என்று கூனிக் குறுகிவிட்டு, அசிங்கத்தை மிதித்த உணர்வோடு உள்ளே போகும் எங்களை, 'எங்கடை சேர்மார்' வழி நடத்தினார்கள். நாங்களும் வழி நடந்தோம். சினேகிதி ஒரு பதிவில் சொன்னார். பல பாடசாலைகளில் மாணவனின் அறிவுக்கு ஏற்றபடி ‘ஏ' ‘பி' ‘சி' ‘டி' என்று வகுப்பில் விடுவார்கள் என்று. அப்படி இல்லாமல் எல்லா வகுப்பிலும் எல்லாத் திறமைகளும் கலந்திருக்குமாறு வகுப்புகள் பிரித்து, என்னில் இருந்த இன்னொரு என்னை எனக்கு அடையாளம் காட்டியது, ஹாட்லிதான்.

ஆறாம் வகுப்பில் வகுப்பாசிரியராக வந்த தவராசா சேர், இடையில் எங்கள் பார்வையில் கொஞ்சம் புளித்துப் போனாலும், ஒரு நல்லாசிரியராகக் காட்டிக் கொண்டவர். இடப் பற்றாக்குறையால் இரண்டு வகுப்புகள் சேர்ந்து இருந்தபோது, தவராசா சேருடன் வகுப்பாசிரியராக இருந்த தவநேசன் சேர், விஞ்ஞானம் படிப்பித்த முத்துலெட்சுமி ரீச்சர், ஆங்கிலம் படிப்பித்த அந்தோனிமுத்து சேர், செல்வராஜன் சேர், கணிதம் படிப்பித்த சர்வானந்தா சேர், சித்திரம் படிப்பித்த (அடியும் போட்ட) சற்குணராசா சேர் இவர்கள் ஆறாம் வகுப்பில் மறக்க முடியாதவர்கள். அதே போல் ஏழாம் வகுப்பில் இருந்து மறக்க முடியாத இன்னும் பலர் வந்து வாய்த்தார்கள். அவர்களின் பெயர்களை இங்கே சொல்கிறேன், பாடங்களுடன்
பாலேந்திரா சேர், ஜெயகோபால் சேர், சேந்தன் சேர், மரியதாஸ் சேர் (ஓ/எல் வரை கணிதம்) ஈஸ்வரநாதன் (ஈசப்பா) சேர், விஜயகுமார் (வீ.கே) சேர் (விஞ்ஞானம்) பாலகங்காதரன் சேர் (ஏழாம் வகுப்பில் சமயம், ஏ/எல்லில் கணிதம்) ராகுலன் சேர் (சித்திரம்), கலைச்செல்வன் சேர், கனகசபாபதி சேர் (சமூகக் கல்வி), ராகவானந்தம் சேர் (தமிழ், சுகாதாரம், விஞ்ஞானம்), ராகவன் சேர், ரகுவரன் சேர் (விஞ்ஞானம்/சுகாதாரம்), ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் கற்றுத்தந்த சத்தியசீலன் சேர், திருச்செல்வம் சேர், செல்வராஜா சேர் விஞ்ஞானமும் கணிப் பொறியும் சொல்லித்தந்த பரணி அண்ணா, சமயம் சொல்லித்தந்த நவத்தார், இரசாயனவியல் படிப்பித்த தங்கராசா சேர், பௌதிகம் படிப்பித்த அமரர் விநாயகமூர்த்தி சேர்................... நீண்ட நெடும் பட்டியல் அது.

அதே போல் தனியார் கல்வி நிலையங்களில் கற்றுத்தந்ததங்கராசா சேர், நவமணி ரீச்சர், வள்ளி ரீச்சர், சிவராசா சேர் (கணிதம்), ஜெயானந்தம் சேர், ஜெபரட்னம் சேர், திரவியநாதன் சேர் (விஞ்ஞானம்), பரராசசிங்கம் சேர், சரவணமுத்து சேர் (ஆங்கிலம்), பண்டிதர் நடராசா, சிவசுப்பிரமணியம் சேர், அன்பழகன் சேர், புஸ்வாணம் சேர் (அம்மாவாண அவரின்ர பேர் ஞாபகத்தில் இல்லை), பால முரளி சேர், மதியழகன் சேர், செந்தூரன் சேர், உயர்தரக் கணிதம் கற்பித்த தில்லையம்பலம் சேர், நல்லையா சேர், செந்தில்ராஜ், பௌதிகம் சொல்லித்தந்த சோதி மாஸ்ரர், பிரபா அண்ணா, சந்திரப்பிரகாசம் சேர் (மன்மத ராசா), இரசாயனம் சொல்லித்தந்த சண் சேர் போன்றவர்களையும் நான் என்றுமே நன்றியுடன் நினைவு கூரக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இவ்வளவு பேரையும் நினைவு கூர்ந்தால் மட்டும் போதாதல்லவா... இவர்கள் பற்றிய சில நினைவு மீட்டல்கள், நான் பெற்ற விழுப் புண்கள் (ஹி ஹி... அடி வாங்கின கதைகள்), செய்த குழப்படிகள் (நான் எங்க செய்தனான்.. எல்லாம் உவன் நிதியும் மகியும் செய்ததுதான்) எல்லாம் பகிர்கிறேன்.... அடுத்த பாகத்தில். அதெல்லாம் எழுதினால் இந்தப் பதிவு நீ............................ண்டு விடும். சந்திப்போமா??

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-4

எங்களது பிள்ளைகள் தமிழ் கற்பது பற்றிய ஒரு நல்ல அணுகுமுறை பற்றிய தொடர் என்பதால், ஆற அமர்ந்து எழுத நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன். சில தொடர்களை அவசர அவசரமாக எழுதி முடித்திருக்கிறேன். சிலவற்றை இடையில் நிறுத்தியும் இருக்கிறேன். இந்தத் தொடரை அப்படியாக எழுதி முடிக்கவோ இல்லை இடையில் நிறுத்திவிடவோ விருப்பமில்லை. ஆகவே, கொஞ்சம் நேரம் கொடுங்கள், முழுமையாக எழுதுகிறேன். முன்னைய பாகங்களை இங்கே சென்று படிக்கவும்.

சென்ற பாகத்தில் சொன்னது போலவே, Microsoft PowerPoint பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று பட்டறை முடிவில் சிவா பிள்ளை அவர்கள் தந்த ஒரு கையேட்டில் சொல்கிறார். அது பற்றிச் சுருக்கமாக இங்கே:

PowerPoint ஒரு மிகவும் சுலபமான பல்லூடனச் சாதனம் ஆகும். கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஓரளவு அறிமுகமான ஒரு சாதனம் என்றுகூடச் சொல்லலாம். இது பல வழிகளில் எங்களது தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடியது. மீ இணைப்பு (Hyperlink) செய்வதற்கும் இதில் வசதியுண்டு. (இணைய வசதியும் இருந்தால் எவ்வளவு விஷயங்களைக் காட்டலாம் என்று யோசித்துப் பாருங்கள்). இதில் சொற்களை மறைக்கவும், மங்கிப் பிறகு தெளிவாக வரவும், பல நிறங்களில் சொற்களையும் எழுத்துக்களையும் வேறுபடுத்திக் காட்டவும் முடியும். அதே போல், குறிப்பிட்ட நேரத் தாமதத்துக்குப் பிறகு எழுத்துக்கள், சொற்களை வரச் செய்யலாம். மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று எப்படி வேண்டுமானாலும் வரச் செய்யலாம். ஒலி, ஒளித் துணுக்குகளை இணைக்கலாம். இப்படியாக எத்தனையோ வசதிகள் இருக்கிறன. (காகம் ‘கா கா' என்று கத்தும் என்று அபத்தமாகக் கத்திக் காட்டுவதைவிட, காகத்தின் குரல் உள்ள ஒலித் துணுக்கை ஒலிக்க விடலாம் அல்லவா?)

PowerPoint மூலம் பாடங்களை உருவாக்கிக் கற்பிப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு பாடத்திட்ட சி.டி. யை உபயோகித்துக் கற்றுக் கொடுக்கும்போது, அந்த சி.டி. மாணவர்களைக் கவரவில்லை என்றால், அவர்களைக் கவரும்படி மாற்றம் ஏதும் செய்ய முடியாது. இதுவே, ஒரு ஆசிரியர் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தானாகவே ஒரு பாடத்தை PowerPoint இல் உருவாக்கிக் கற்பிப்பாரேயானால், அவர் உருவாக்கிய பாடம் பிள்ளைகளுக்குப் பிடிக்காவிட்டால், மாற்றங்கள் செய்து அவர்களுக்குப் பிடிக்கக் கூடியாதாய் ஆக்கலாம். காரணம், இதன் ஆக்கவாளராக நாங்களே இருக்கப் போகிறோம். மாற்றம் செய்வதில் எந்தத் தடங்கலும் இருக்கப் போவதில்லை.

PowerPoint இல் ஏனைய பாடங்களுக்கு இணைப்புக் கொடுக்க, இணையப் பக்கங்களுக்கு இணைப்புக் கொடுக்க என்று பல வசதிகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. இதைக் கற்றுக் கொள்வதற்கு எந்தவித கஷ்டமும் படத் தேவையில்லை. (என்னுடைய பார்வையில் MS Office Suite ல் மிக இலகுவானதும், சிக்கல் இல்லாததுமான ஒரு Program, PowerPoint தான்). எந்தவிதமான Programming அறிவும் உங்களுக்குத் தேவைப்படப் போவதில்லை. மிகவும் இலகுவாக படைப்புக்களை உருவாக்கலாம். சிலவேளை பிழைகள் வருவது உண்மை. அப்போது மனம் சலிப்படையும். நேர விரயம் பற்றிய விரக்தி ஏற்படும். ஆன போதும், அதை விரயமாக நினைக்காமல், முதலீடாக நினைத்து செயற்பட்டால், நிச்சயம் ஆசிரியர்களில் கற்பித்தல் திறண் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

மேலே வர்ண எழுத்துக்களில் இருப்பவை சிவா பிள்ளை அவர்கள் பட்டறை முடிவில் தந்த கையேட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம் என்றால், இம்முறையில் பாடங்களை உருவாக்கிக் கற்றுக் கொடுப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப் போவதில்லை. என்ன நம் சமூகத்தில் இருக்கிற ஆசிரியர்களிடம் இரண்டொரு தவறான மனப்பாங்குகள் இதில் தடையாக இருக்கும். ஒன்று, ஒரு நிலைக்குமேல் கற்றலில் இவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியராக இருக்கும் நாங்கள் கற்க என்ன இருக்கிறது என்கிற எண்ணம், ஒரு வயதுக்குப் பிறகு கற்றலில் இருக்கும் கூச்சம் ஆகியன இந்த மனப்பாங்கு வளரக் காரணம். அடுத்தது, எம்மவர் மத்தியில் இருக்கும் ‘இவர் சொல்லி நான் என்ன கேக்கிறது' மனப்பாங்கு. இந்த இரண்டு மனப் பாங்குகளையும் தூக்கி எறிந்துவிட்டால், ஒரு ஆசிரியர் தன்னுடைய மகன், அல்லது மகளிடமே PowerPoint பற்றிக் கற்றுத் தேறிவிடலாம். ஆனால், ‘Hyperlinkல ஒரு தரம் கிளிக்கினால் போதும்' என்று வெளிப்படை உண்மையைப் பிள்ளை சொன்னாலே, ‘எனக்கு நீ சொல்லித் தாறியோ' என்று கேட்கிற பலர்தான் இங்கு அதிகம்.

தமிழ் மட்டுமல்லாமல் எந்த மொழி கற்பிப்பதிலும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய படிமுறைகள் இருக்கின்றன என்று முன்னர் ஒரு பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி இன்னும் பலர் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே இருக்கிறார்கள். அப்படியானால் எழுத்து முக்கியமில்லையா? எங்கள் மொழியின் எழுத்து வடிவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால், தமிழ் எழுத்துருக்கள் அழிந்துவிடாதா? என்று விசனப்படுகிறார்கள். ஆகையால், இந்த நான்கு படிமுறைகள் பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாக அடுத்த பாகத்தில் பார்க்க இருக்கிறோம். முக்கியமாக எழுத்துக்களை எப்படிக் கற்றுக் கொடுப்பது என்றும் சில நல்ல வழிமுறைகளைச் சொல்கிறார் சிவா பிள்ளை. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பொறுப்பீர்கள்தானே?

Saturday 19 September 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 13-19 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
இந்தச் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ‘இலங்கையில் என்னுடைய கட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. இருந்தபோதும் சுதந்திரமாகக் கருத்து வெளியிட்டால் எனது உயிருக்கே உத்தரவாதமில்லை' என்று தெரிவித்திருப்பது யார் தெரியுமா? ராஜபக்ச சகோதரர்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் கோலோச்சிய பண்டாரநாயக்க குடும்பத்தின் தூண்களில் ஒருவரும், முன்னைநாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கதான். நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியாகவும், பண்டாரநாயக்க குடுமப்த்தின் வாரிசாகவும் கம்பீரமாக நடைபோட்ட அவரே இப்படிச் சொல்லும்போது, இலங்கையில் வாழக்கூடிய சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சாதாரணப் பிரஜைகளின் நிலமையை நினைத்தும் பார்க்க முடியவில்லை.


இதேவேளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான பொதுச் செயலர் லின் பொஸ்கோ அவர்கள் பாதுகாப்பு பற்றிய இலங்கையின் கவலைகள் புரிந்து கொள்ளப்படக் கூடியதாய் இருப்பினும், அகதிகள் மீளக் குடியமர்த்தப்படுவது அத்தியாவசியமானது என்று கூறியிருக்கிறார். அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து இந்தக் கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களை மீளக் குடியமர்த்துவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியல்- புகுந்தகம்
லிபரல் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போட்ட நகைச்சுவை நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான ஆளும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு எதிராக லிபரல் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 224-74 என்கிற வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. லிபரல் கட்சியோடு இணைந்து கூட்டணி அமைத்து அரசபதவி ஏறும் ஆசையில் இருந்த தேசிய ஜனநாயகக் கட்சியும், ப்ளொக் கியூபெக் கட்சியும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.


நாட்டின் பொருளாதார நிலைமை முதலான காரணங்களை இவர்கள் அடுக்கினாலும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அவதானித்து வந்த யாவரும் ‘கூட்டணி அரசு என்ற பேச்சுக்கு இடமில்லை' என்று லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் சென்ற வாரம் (பார்க்க: நான் பார்க்கும் உலகம், சென்ற வாரப் பதிப்பு) சொல்லியிருக்காவிட்டால், சிலவேளை கனேடிய மக்கள் இன்னொரு பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நிலமை ஏற்பட்டிருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் மாண்ட பொருளாதாரம் மீண்டு வரும்போது இன்னொரு தேர்தல் வராமல் தடுக்கப்பட்டிருப்பது சராசரிப் பிரஜை ஒருவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசியல்-உலகம்
காஷ்மீர் மாநிலத்தின் சீன எல்லையில் இந்தியா மேலும் இராணுவத்தைக் குவித்து பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறது. இம்மாநிலத்தின் லடாக் பகுதியில் சீனா ஊடுருவி இருப்பதாக வந்த செய்திகளை அடுத்தும், இந்திய திபெத்திய எல்லைப்படை வீரர்களை நோக்கி சீன இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை அடுத்தும் இந்தியா இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. இதேவேளை கச்ச தீவுக் கடற்பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து சீனர்களும் தாக்கியதாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் இல. கணேசன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆஃப்கானிஸ்தான் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஹமீத் கர்சாய் 54.6% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் சென்ற புதன்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவித்தது. எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா 27.8% வாக்குகள் பெற்றார். செலுத்தப்பட்ட 55 இலட்சம் வாக்குகளில், 15 இலட்சம் வாக்குகள் மோசடி வாக்குகள் என ஐரோப்பியத் தேர்தல் அவதானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

வணிகம்-பொருளாதாரம்கனடாவின் இருபெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பெல் கனடா மற்றும் ரெலஸ் ஆகியன அவர்களின் Land Line வாடிக்கையாளர்களிடம் அதிகமாக வசூலித்த கிட்டத்தட்ட 300 மில்லியன் கனேடிய டொலர்களை திருப்பிச் செலுத்துமாறு கனேகிய உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒரு உத்தரவு காரணமாக சில பிரதேசங்களில் இந்த நிறுவனங்கள் போட்டியாளர்களை சந்தைக்குள் ஊக்குவிக்கும் பொருட்டு வழமையான சேவைக் கட்டணங்களைவிடக் கூடிய கட்டணங்களை வசூலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால்தான் கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இவை கூடிய விரைவில் திருப்பி வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

விளையாட்டு


அமெரிக்க ஓபன் ரென்னிஸ் கோப்பை ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர் இரு பிரிவிலும் பிரமிக்கத்தக்க இரு வெற்றிகள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபெடரர், நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரை வீழ்த்தி ஆர்ஜென்ரீனாவின் 20 வயதான ஜுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ மற்றும் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டேர்ஸ் ஆகியோர் பட்டம் வென்றிருக்கிறார்கள். டெல் பொட்ரோவுக்கு இது முதல் கிராண்ட் ஸ்லாம். இறுதியாட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தினார். அரையிறுதியில் நடாலை வீழ்த்தினார். இருவரையும் ஒரே கிராண்ட் ஸ்லாமில் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். வீனஸ், செரீனா சகோதரிகளையும், இறுதியாட்டத்தில் அழகுப் பெண் கரோலின் வொஸ்னியாக்கியையும் வீழ்த்திய கிம் கிளைஸ்டர்ஸ் பின்வரும் மேலதிகப் பெருமைகளைப் பெற்றார்.
 • வீனஸ் செரீனாவை ஒரே கிராண்ட் ஸ்லாமில் இரண்டாவது முறை வீழ்த்தினார்.
 • அமெரிக்க ஓபன் ரென்னிஸ் போட்டிகளை வென்ற முதல் Wild Card இவர்.
 • 1980க்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் வென்ற முதல் அம்மா இவர். (இது பற்றித் தனியாக ஒரு பதிவு போடுகிறேன்)

கொம்பாக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது. இறுதியாட்டத்தில் அற்புதமான சதம் அடித்தார் சச்சின். இதுபற்றிய என்னுடைய பதிவை இங்கே படியுங்கள். இதே வேளை இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் நடந்து முடிந்த ஆறையும் அவுஸ்திரேலியா வென்றிருக்கிறது. ஐந்தாவது போட்டியில் ரிக்கி பொண்டிங் அருமையான சதம் அடித்தார், 109 பந்துகளில் 126. 50-50 கிரிக்கெட் போட்டிகள் விரைவில் வரவேற்பை இழந்து விடலாம் என்ற பயத்தை மூன்று பேர் போக்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக 98 அடித்த சனத் ஜயசூரிய, சச்சின் மற்றும் பொண்டிங். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான் (உபயம்: மகி)


சினிமா


சென்ற 10ம் திகதி தொடக்கம் ரொரன்ரோ சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ரொரன்ரோ நகர மத்தியில் உள்ள 13 திரைகளில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஹொங்கொங், இஸ்ரேல், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், கொலம்பியா, ஜமேக்கா போன்ற நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்பட்டன. இந்த முறை ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அதாவது இஸ்ரேலியப் படங்களுக்கு மட்டுமே இவ்வருட விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பல மேற்குலக நட்சத்திரங்கள் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அடப்பாவிகளா விஷயம்
சென்ற வியாழக்கிழமை தமிழ் வன் தொலைக்காட்சியில் ஒரு படம் போட்டார்கள். தமிழ்ப்படுத்தப்பட்ட மலையாளப் படம். அந்த மோகன் லால் முகமூடி எல்லாம் போட்டு ஆடுவாரே, கதகளியோ என்னவோ, அது ஆடும் கலைஞன் ஒருவனின் காதல் பற்றிய படம். அதில் ராஜன் பி. தேவன் பேசுவதாய் ஒரு வசனம் வரும். அவருடைய மகள் அந்தக் கூத்தாடியைக் காதலிப்பது தவறு என்று தன் மனைவியை மகளிடம் சொல்லுமாறு ராஜன் பி. தேவன் பணிக்கும் போது சொல்லும் வசனம் அது. பல நேரடித் தமிழ்ப் படங்கள் மற்றும் தமிழ்ப் படுத்தப்பட்ட படங்களில் அடிக்கடி கேட்ட வசனம் என்றாலும் நேற்று அதைக் கேட்டபோது உறுத்தியது. வசனம் இதுதான்,
‘இந்த உலகத்தில தாய் சொல்லைத் தட்டாத ஒருத்தரும் இல்லை'. (அதாவது எல்லோருமே தாய் சொல்லைத் தட்டுபவர்கள்தான் என்றுதானே பொருள்படுகறது இந்த வசனம்)
இந்த வசனம் சரியா? இதே பொருள்பட பல படங்களில் இந்த வசனம் வருகிறது. தாய் சொல்லைக் கேட்காதவர்கள் ஒருத்தரும் இல்லை என்று வர வேண்டிய இடத்தில் கொஞ்சம் நல்ல சொல்லைப் போடுகிறோம் என்று மொத்த அர்த்தத்தையே கெடுக்கிறார்கள் அல்லவா?

Sunday 13 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-3

தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்.

சிவா பிள்ளை அவர்கள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்ற ரீதியில் செயல்முறை மூலமாகத் தமிழைக் கற்றுக் கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று கூற அலெக்ஸாண்டர் மறுத்தார். பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பேணி வரும் எழுத்துருக்கள் பிள்ளைகளுக்குச் சேராமல் போய்விடும் என்ற பயத்தினை வெளிக்காட்டினார். அத்தோடு சிவா பிள்ளை அவர்களின் PowerPoint Presentationல் ஒரு இடத்தில் சிவப்பு என்பது சிகப்பு என்று எழுதப்பட்டது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டாவது சுட்டிக்காட்டல் பட்டறைக்கு அவசியமற்றது என்பது என்னுடைய கருத்து. தன்னுடைய வித்தகத் தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு முயற்சி என்பேன் அது. எனக்கு சிவா பிள்ளை சொன்ன கருத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.

புலம் பெயர் நாட்டில் நாங்கள் தமிழை எங்களது குழந்தைகளுக்கு இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப் போகிறோம். அவர்களின் தாய்மொழி அந்த நாட்டில் அவர்கள் சாதாரணமாகப் பேசிப் பழகும் மொழியே அன்றி, தமிழ் அல்ல என்பது என் கருத்து. வீட்டில் பேசும் மொழிதான் தாய்மொழி என்ற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. சமூகத்தில் என்ன மொழியை அவர்கள் பேசுகிறார்களோ அதுதான் தாய்மொழி. அந்தத் தாய்மொழியை எவ்வாறு குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்களோ அந்த வரிசையிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியையும் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்ற கருத்தை யாராலும் மறுதலிக்க முடியாது.

ஏன் நாங்கள் கூட ‘அ' ‘ம்' 'மா' என்று எழுத்துருத் தெரிய முன்னமே 'அம்மா' என்ற சொல்லை அறிந்திருந்தோம் அல்லவா? பேசியிருந்தோம் அல்லவா? கேட்டுப், பேசிப் பழகிய பின்தானே வாசிக்க, எழுத எல்லாம் பழகிக் கொண்டோம். இயல்பாகவே அமைந்துவிட்ட அந்த வரிசையை ஒரு பாடத்திட்டத்தில் எழுத்துருவில் பார்க்கும்போது ஏன் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

சிவா பிள்ளை கற்பித்தலில் அடுத்து நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, தெரிந்ததில் இருந்து தெரியாததைக் கற்பிப்பது என்கிற கருத்தாக்கத்தை ஆகும் என்றார். ‘ஒரு வட இந்திய நண்பர் தென்னிந்தியா வந்து உப்புமா சாப்பிடுகிறார். அவருக்கு அதன் சுவை மிகவும் பிடித்துப் போகிறது. அதை எப்படிச் செய்வது என்று தன்னுடைய மனைவிக்குக் கற்றுக் கொடுக்கும்படி உங்களைக் கேட்கிறார். எப்படிச் சொல்லிக் கொடுப்பீர்கள்' என்று பயன் பெறுனர்களைக் கேட்டார். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள். சமையல் குறிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாவற்றையும் புன்னைகையோடு கேட்டுக்கொண்டிருந்தார் சிவா பிள்ளை. பின்னர் அவர் தன்னுடைய பாணியில் அந்த வட இந்தியருக்கு எப்படி உப்புமா செய்யச் சொல்லிக் கொடுப்பது என்று சொன்னார்.


‘எல்லாருக்கும் கேசரி தெரியும்தானே' என்று கேட்டார். தெரியும் என்றோம். ‘அதே போல் அந்த வட இந்திய நண்பருக்குக் கட்டாயம் கேசரி பற்றித் தெரிந்திருக்கும். அவர்களில் அநேகமானவர்களுக்குக் கேசரி செய்யத் தெரிந்தும் இருக்கும் ஆகவே உப்புமா செய்வதை இப்படி விளக்குங்கள். கேசரி-இனிப்பு+தாளித்த வெங்காயம்= உப்புமா' அவ்வளவுதான் என்றார். இங்கே அவரது சமையல் கலை அனுபவமோ, இந்திய உணவு வகைகள் பற்றிய அனுபவமோ விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர் சொல்ல வந்த கருத்து, மாணவனுக்குத் தெரிந்ததில் இருந்து, தெரியாததைச் சொல்லிக் கொடுங்கள் என்பதே ஆகும்.


சிவா பிள்ளை இந்தத் தெரிந்ததில் இருந்து தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதில் கணனி மற்றும் பல்லூடனப் பயன்பாட்டை விளக்கினார். எங்கள் ஊரில் படித்தது போலவே அப்பாவின் படம், அம்மாவின் படம் எல்லாம் காட்டிப் படிப்பிப்பதை விட, குழந்தைகள் தொலைக்கட்சியில் விரும்பிப் பார்க்கக்கூடிய கேலிச் சித்திரத் தொடர்களில் வரும் பாத்திரங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்றார். குடும்ப உறவுமுறைகளைப் பற்றிக் கற்பிப்பதற்கு அவர் உதாரணம் காட்டிய Simpsons கனடாவில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது என்றாலும் பல குழந்தைகளுக்கு Simpsons பற்றித் தெரியும். அதைப் பயன்படுத்த விரும்பாவிட்டால் கனடாவில் இன்னொரு பிரபலக் கேலிச் சித்திரத் தொடரான Arthur ஐப் பயன்படுத்தலாம். இந்தக் கேலிச் சித்திரங்களில் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி, மாமா என்று எல்ல உறவு முறைகளும் வருகின்றன. பிள்ளைகளின் மனதில் நிச்சயம் ஒரு ஆர்வம் தூண்டப்படும் அல்லவா?

பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த விஷயங்களூடாகத் தெரியாத விஷயங்களை கற்பிக்கும் போது அவர்களுக்குத் தானாகவே ஒரு ஈடுபாடு வரும் என்பது சிவா பிள்ளையின் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதம். ஒரு மாணவனின் நிலையில் இருந்து பார்க்கும் போது எனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி என்னுடைய ஆசிரியர்கள் வகுப்பில் கதைக்கும்போது மனதில் சந்தோசத்தை உணர்ந்திருக்கிறேன். அதே போல் என்னுடைய அடுத்த தலைமுறையை வழிநடத்துவது தவறாக இருக்காது என்பதுதான் என்னுடைய கருத்து.

இலக்கணத்தைக் கூட இந்தப் பல்லூடனச் சாதனங்களையும், கணனியையும் வைத்தே கற்பிக்கலாம் என்கிறார். ஒரு சிறிய உதாரணமாக ஒரு பழம் சாப்பிடும் சிறுவனின் படத்தைக் காட்டி ‘நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொடுக்கலாம். பழங்களின் படங்களைக் காட்டி ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுக்கலாம். சற்றே பேச ஆரம்பித்த பிள்ளையிடம் ஒரு படத்தைக் காட்டி உனக்குத் தோன்றுவதைச் சொல் என்று கேட்கலாம். இப்படியாகப் பிள்ளையை முதலில் செயல்முறை மூலம் கேட்க, கிரகிக்க, சிந்திக்க, பேச வைப்பது மிகவும் அவசியம் என்பதாக சிவா பிள்ளையின் பார்வை இருக்கிறது.

தமிழை வாசிக்கும் நிலைக்கு வந்த, கொஞ்சம் பெரிய பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு படம் பார்த்துக் கதையை வாசிக்க வைக்கலாம். ஒரு பாடலை ஒலிக்க விட்டு அந்தப் பாடலின் வரிகளைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தச் சொல்லிக் கேட்கலாம். உதாரணமாக ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல...' பாடலின் முதல் ஐந்து வரிகளை ஒலிக்கவிட்டு பிறகு அந்தப் பாடல்களின் வரிகளை பல்லூடன மென்பொருள் ஒன்றில் PowerPoint ஓடவிட்டு, அவற்றை வரிசைப்படுத்தச் சொல்லலாம். ஒரு பெரிய பந்தியைக் கொடுத்து வரிசைப்படுத்தச் சொல்வதைவிட ஒரு பாடலை வரிசைப்படுத்தச் சொல்வது அவர்களை ஈர்க்கும் என்பது சிவா பிள்ளையின் கருத்தாகும்.


மேலும் இந்தப் பல்லூடன மென்பொருள்கள் சந்தை எங்கும் பரவிக் கிடக்கின்றன. உங்களது கணனி அறிவுக்கு ஏற்ற வகை மென்பொருளைத் தேர்வு செய்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் இலகுவான மென்பொருளான PowerPoint ஆவது பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என்ன கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த அளிக்கைகளை (Presentation) தயார் செய்யும் பொறுமை ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்கிறார் சிவா பிள்ளை. உதாரணத்துக்கு தமிழைக் கற்பிப்பதில் PowerPoint ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிவா பிள்ளை தான் தந்த கையேடு ஒன்றில் சொல்கிறார். அது பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன். அதற்கு கொஞ்சம் பொறுத்திருப்பீர்கள்தானே?

Saturday 12 September 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 06-12 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

சென்ற வார நான் பார்க்கும் உலகம் மிகவும் நீண்ட ஒரு பதிவாகி விட்டதாக நினைக்கிறேன். இந்த வாரத்திலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் ஆகக் கூடியது இரண்டு செய்திகளை மட்டும் உள்ளடக்க முயற்சிக்கிறேன்.

பிறந்தகம்
அயலுறவுத் துறை அமைச்சர் பாலித கோகண்ண மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோரின் பிரித்தானியா செல்வதற்கான விசா கோரிக்கை பிரித்தானியத் தூதரகத்தால் மறுக்கப்பட்டு இருக்கிறது. இருவருடைய கடவுச்சீட்டுகளும் அவரவர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. விசா மறுக்கப்பட்டதுக்குரிய காரணங்கள் சொல்லப்படவில்லை என்றும், அமைச்சர்களை நேரில் வந்து விசா விண்ணப்பத்தைக் கையளித்தால் மட்டுமே விசா வழங்க முடியும் என்று பிரித்தானியத் தூதரகம் சொல்லியிருக்கிறது என்றும் செய்திகள் நிலவுகின்றன. இந்த விஷயத்தில் பிரித்தானியத் தூதரகம் இராஜதந்திர நடைமுறைகளை மீறியிருப்பதாக இலங்கை அயலுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இதேவேளை இலங்கைப் பகுதிக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் ஆணையகத்தின் அதிகாரி ஜேம்ஸ் எல்டர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் கருத்துச் சொன்னார் என்று சொல்லி அவரை வரும் 21ம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்திருக்கிறது இலங்கை அரசு. இந்த வெளியேற்றும் உத்தரவை வாபஸ் வாங்க ஐ.நா. அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எல்டரை வெளியேற்றுவதில் இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புகுந்தகம்

சிறுபான்மை கொன்செர்வேற்றிவ் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றி அடுத்த வாரம் தமது முடிவை வெளியிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் தெரிவித்திருக்கிறார். அத்துடன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைக்க மாட்டோம், நாங்கள் தனியாகவே அரசாங்கம் அமைக்க முயல்வோம் என்றும் சொல்லியிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் ப்ளொக் க்யூபெக் கட்சி ஆகியன ஒன்றாகச் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயல்வதாகவும், அது பொருளாதாரச் சிதைவிலிருந்து மீளும் நாட்டுக்குக் கேடு விளைவிப்பதாகவே அமையும் என்று ஆளும் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. அதற்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆக மொத்தத்தில் இன்னொரு சிறுபான்மை அரசாங்கம் விரைவில் கனேடிய மக்களை ஆள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

உலகம்
தேசிய நதிகளை இணைப்பது ஆபத்தானது. அது நாட்டின் சுற்றுச்சூழலை ஆபத்தான பாதைக்கு இட்டுச்செல்லும் என்று கூறி எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறார் ராகுல் காந்தி. அவர் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லியே இந்தக் கருத்தினை முன்வைத்திருக்கிறார். சென்னையில் நிருபர்களுடனான சந்திப்பில் இவர் தெரிவித்த மேற்படி கருத்தை தா. பாண்டியன் மற்றும் வைகோ கண்டித்திருக்கிறார்கள். ராகுல் அறியாமையில் பேசுகிறார் என்று பாண்டியனும், வரலாறு அறியாமல் பிதற்றுகிறார் என்று வைகோவும் கூறியிருக்கிறார்கள். இதேவேளை வெவ்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் ராகுல். இப்போதைக்கு பி.ஜே.பி மீள்முடியாது போலிருக்கிறது.

அமெரிக்காவை உலுக்கிய இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் அல்லது 9/11 தாக்குதல்கலின் 8வது ஆண்டு நினைவுதினம் வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. கடும் குளிர் மற்றும் மழை மத்தியிலும் மக்கள் முன்பு இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சரியாக 8:46 க்கு வெள்ளை மாளிகை முன்றலில் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். என்னதான் அமெரிக்கர்கள் துக்கம் அனுட்டித்தாலும் அவர்களும் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு ஏறத்தாள 30 ஆண்டுகளுக்கு முன் (1973ல்) இதே நாளில் ஒரு கொடும் செயலைச் செய்தார்கள். 1973 ல் சிலி நாட்டின் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்ஸிஸ்ட் சோஷலிச ஜனாதிபதியான சல்வேற்றோர் அலெண்டே (Salvatore Allende) அவர்களைப் புரட்சிக் குழுக்களின் பின்னணியில் நின்று கொன்று முடித்தது. சிலியின் ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளிலேயே அமெரிக்காவுக்கும் ஒரு கறுப்புதினம் வந்து சேர்ந்ததுக்குப் பெயர்தான் விதி என்பதா?

வணிகம்- பொருளாதாரம்

கனேடிய வீடு விற்பனைத் துறையில் வீட்டு விலைகள் கடந்த செப்ரெம்பர் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் முதன் முதலாக ஏறுமுகமாகச் செல்கின்றன என்று கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. புதிய வீடுகளுக்கான விலைகள் கல்கரி, வன்கூவர், ஹமில்ற்றன் மற்றும் வின்சர் ஆகிய இடங்களில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. வீடு விற்பனைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பொருளாதார ரீதியில் மகிழ்ச்சியானது என்றாலும், அரசாங்கம் பற்றி நிலவும் நிலையில்லாத் தன்மை அந்த மகிழ்ச்சியக் கொண்டாட முடியாமல் செய்திருக்கிறது.

விளையாட்டு
இலங்கை முத்தரப்புப் போட்டி இறுதியாட்டத்துக்கு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இரு அணிகளுமே நியூசிலாந்து அணியை இலகுவாக வென்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருக்கிறார்கள். முத்தரப்புப் போட்டி பற்றிய என்னுடைய கருத்துக்களைத் தனிப் பதிவாக எதிர்பாருங்கள். இதே வேளை 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை முதல் மூன்று போட்டிகளில் படுதோல்வி அடையச் செய்திருக்கிறது.

அமெரிக்க ஓபன் ரென்னிஸ் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்குகின்றன. ஆடவர் பிரிவில் ஃபெடரெர் மற்றும் நடால் இறுதிப்போட்டியில் மோதும் சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. அதே வேளை மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெல்லலாம் என்று எதிர்பார்க்கக் கூடியதாய் உள்ளது. வெள்ளிக் கிழமை (11/09/09) ஆட்டம் கடுமையான மழையால் முழுமையாகக் கைவிடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் லியாண்டர் பயஸ்சும், மகேஷ் பூபதியும் விளையாடுகிறார்கள், எதிர் எதிர் அணிகளில்.

சினிமா
கமலஹாசன் 10 கோடியே 90 லட்சம் ரூபாவை 24% வட்டியோடு திருப்பித் தரவேண்டும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இவர்கள் தயாரித்த மர்மயோகி படம் இடையில் கைவிட்டதால் வந்திருக்கும் இழு பறிதான் இது. 'நான் அவர்களுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. என்னுடைய ஒரு ஆண்டு உழைப்பை வீணடித்த அவர்கள்தான் எனக்கு நாற்பது கோடி தரவேண்டும்' என்று கமல் திருப்பி அடித்திருக்கிறார். இரு சாராரும் நீதிமன்றம் போகாமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. இதே வேளை மகளின் இசையில் உருவான ‘உன்னைப் போல் ஒருவன்' பாடல்களை வெளியிட்டிருக்கிறார் கமல். அவர்கள் வெளியிட்ட அந்தப் பாடல் காணொளி சகிக்கவில்லை (பிளாசே+ஸ்ருதி) ஆனால் பாடல்கள் நன்றாக இருக்கிறது, முக்கியமாக மானுஷ்யபுத்திரனின் 'அல்லா ஜானே'.


அடப்பாவிகளா தகவல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்துக்கு உண்டு- குறள் 1281

இதை எங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு செக்ஸ் வலைப்பூவில். ‘நம்ம ஊர் ரெக்கார்ட் டான்ஸ்' என்று கிடைத்த ஒரு சுட்டியைத் தொடர இந்த வலைப்பூவில் கொண்டு சேர்த்தது. வள்ளுவரை எங்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்.

அதைவிடுங்கள, ரெக்கார்ட் டான்ஸ் எப்படி இருந்தது என்கிறீர்களா?? விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘ரெக்கார்ட் டான்ஸ் கூடவே கூடாது' என்று ஒரு கூட்டம் வாதிட்டபோது எனக்கு விபரீதம் புரியவில்லை. நான் ஏதோ சும்மா பாட்டுக்கு ஆடுவதுதானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைத்தேன். மேற்படி வலைப்பூவில் இருந்த அந்த நடனங்கள் ஒரு அம்மன் கோவில் திருவிழாவில் ஆடப்பட்டவை. ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக உடலுறவு கொள்வதைத் தவிர எல்லாம் செய்தார்கள் மேடையில்.

Friday 11 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-2

தமிழ் கற்பித்தலில் பல்லூடனப் பயன்பாடு- பட்டறை பற்றிய பார்வை; பாகம்-1

திரு. சிவபாலு அவர்களின் அறிமுகத்தின் பின்னர் திரு. சிவா பிள்ளை அவர்கள் தன்னைப் பற்றிய ஒரு சுய அறிமுகத்தைத் தந்தார். அதிலேயே ஆள் விஷயமுள்ள மனிதர் என்ற ஈர்ப்பு வரத்தக்கதான அறிமுகம். இவருடைய தகமைகள் மற்றும் சிறப்புகள் வருமாறு:
 • கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழக அயல் மொழிகளுக்கான தலைமைப் பரீட்சகர்
 • இலண்டன் Ed Excel பரீட்சைப் பகுதியில் தமிழ் மொழிக்கான தலமைப் பரீட்சகர்
 • கணினி விரிவுரையாளர்
 • ஐரோப்பிய மற்றும் சமூக மொழிகளைக் கணனித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்ற துறையிக்குப் பொறுப்பாக இருக்கிறார்.
 • அரசாங்கப் பாடசாலைகளில் பாடசாலை நேரத்தின் பின்னர் நடக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும், சனிக்கிழமைகளில் நடாத்தப்படும் தமிழ்க் கலைப் பள்ளிக்கும் பொறுப்பாக இருக்கிறார்.
 • 2008/09 ல் Ourlanguage வேலைத் திட்டத்துக்கான விருதையும், 2007 ல் மொழிகளுக்கான ஐரோப்பிய விருதையும் பெற்றிருக்கிறார்.
 • Nuffield வேலைத் திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடத்திட்ட வடிவமைப்பாளராக இருக்கிறார்.
 • ஐக்கிய இராச்சிய சீனப் பாடசாலைகள் சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினராக இருக்கிறார்.
அவ்வாறாக தன்னைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து கணனி மூலமான தமிழ் கற்பித்தல் பாடத்திட்டம் உருவான கதையைச் சுருக்கமாகச் சொன்னார். இங்கிலாந்தில் தமிழ் கற்கும் பாடத்திட்டம் உருவான கதையும், அதில் சிவா பிள்ளையின் ஈடுபாடும் இங்கே எங்களுக்கு ஆழமாகத் தேவைப்படப் போவதில்லை. சிவா பிள்ளை எனப்படும் சிவகுருநாத பிள்ளை அவர்களைப் பற்றி மேலதிக விபரங்களை இங்கே அல்லது இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள். அவர் chennaionline க்கு வழங்கிய பேட்டியை இங்கே படியுங்கள்.

ஒரு வேண்டுகோள்: சிவா பிள்ளையவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்னிடம் தற்போது இல்லை. அவரது தொழில் சார் மின்னஞ்சலில் நான் அவரைத் தொடர்பு கொண்டதும் இல்லை. அவரை இணையமூலம் சந்திக்க விரும்புபவர்களுக்கு அவரது தனிப்பட்ட இணையத் தொடர்பு முகவரிகள் தெரிந்த யாராவது உதவிசெய்யலாமே!!

இனிமேல் பட்டறைக்குள் நுழைவோம்.

சிவா பிள்ளை தமிழைக் கற்பதற்குப் புலம் பெயர் நாடுகளில் வாழும் இளம் சமுதாயம் பின்னடிப்பதற்கு தமிழை இன்னும் அன்றுதொட்டு நாங்கள் கற்ற பழைய முறையிலேயே கற்றுக் கொடுப்பதைக் காரணமாகச் சொல்கிறார். உதாரணமாக, ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்குப் புதிய வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய நடைமுறைகளைப் புகுத்தி, பழைய வழிமுறைகளை நீக்கி மொழிக் கற்றலை இலகுவாக்குகிறார்கள். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்கிற வகைகளாக இந்தக் கற்பித்தலைப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதுவே எளிமையான முறையாக அங்கே கருதப்படுகிறதாம். ஏன் அப்படியான எளிய முறைகளைப் பயன்படுத்தித் தமிழைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவரது கேள்வி.

கற்பித்தலை எளிமையாக்குவதற்கு முதலில் மாணவனை தான் கற்கின்ற பாடத்தில் ஆர்வம் கொள்ளச் செய்வது அவசியம் என்பது சிவா பிள்ளையின் வாதமாக இருக்கிறது.

அவரது இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனக்குத் தெரிந்து கனேடிய மண்ணில் பிறந்து வளரும் எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின் உந்துதல் காரணமாக மட்டுமே தமிழ் கற்கவெனப் பள்ளி செல்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டுமிருக்கிறேன். அப்படிப் போன சில பிள்ளைகள் தமிழில் மிக ஆர்வம்கொண்டு படிக்க ஆரம்பித்ததையும், சிலர் வெறுப்படைந்து தமிழ் படிக்கப் பின்னடித்ததையும் கண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தபோது சில ஆசிரியர்களிடம் படிக்கும் குழந்தைகள் ஆர்வமாகத் தமிழ் படித்தார்கள், சிலரிடம் படிப்பவர்கள் ‘தமிழ் Class' என்றாலே அலறுகிறார்கள். இங்கே இந்த வித்தியாசத்துக்குக் காரணம், ஆசிரியரின் கற்பித்தல் முறை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும்போது, சில நல்ல ஆசிரியர்களிடம் படிக்கிற பிள்ளைகளும் தமிழ் படிக்கப் பின்னடிக்கிறார்கள். சில சோத்தி ஆசிரியர்களிடம் படிக்கும் பிள்ளைகள் ஆச்சரியகரமாக தமிழ் படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். இது எதனால் என்று பார்த்தால், அந்தப் பிள்ளைக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதில் பெற்றோர் எவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதில் தங்கியிருக்கிறது. அதனால் பட்டறைக்குப் போகும் முன்னரே என் மனதில் இந்த விஷயம் தெளிவாக இருந்தது. பிள்ளை ஆர்வமாகத் தமிழ் படிப்பது ஆசிரியரின் கற்பித்தல் திறண், பெற்றோரின் ஆர்வம் இரண்டிலும் தங்கியிருக்கிறது. இருவரில் ஒருவர் தவறினாலும், பிள்ளை தமிழை ஆர்வமாகக் கற்கப் போவதில்லை. இது தமிழ் மட்டுமல்ல எல்லாப் பாடங்களுக்கும் பொருந்தும் என்பது என்னுடைய கருத்து.

இப்போது மீண்டும் சிவா பிள்ளையின் பட்டறைக்கு வருவோம். சிவா பிள்ளை தமிழ் கற்பதினால் பிள்ளைக்கு என்ன பயன் இருக்கிறது என்பதை விளங்கப் படுத்துவது அவசியம் என்கிறார். உதாரணமாக இப்போது கனடாவில் பல்கலைக் கழக அனுமதிக்கான credit course களில் ஒன்றாகத் தமிழும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அதைச் சொல்லி அவர்களைத் தமிழ் படிக்க ஊக்குவிப்பதில் தவறேதும் இல்லை என்பதாக அவர் கருதுகிறார்.

உண்மைதான், ஆனால் இந்த விஷயத்தில் நம்மவர்கள் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். சில ஆசிரியர்களிடம் பிள்ளையை அனுப்பினால், பிள்ளை சரியாகக் கற்றுக் கொள்கிறதோ இல்லையோ, பிள்ளைக்குத் தேவையான credit கொடுத்து விடுவார்கள். அதாவது எனக்குச் சம்பளம் வருகிறது, உனக்கு பல்கலைக் கழக அனுமதிக்கு ஒரு மேலதிக credit வருகிறது.. இருவருக்குமே லாபம் என்கிற வியாபாரமாகத் தமிழ்க் கல்வி மாறிவிட்டதை நான் இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.

எல்லா ஆசிரியர்கள் மீதும் நான் இந்தக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. சிலர் மட்டுமே அப்படிச் செயற்படுகிறார்கள். பெற்றோரும் சளைத்தவர்கள் இல்லை. எந்த ஆசிரியரிடம் போனால் பிள்ளைக்கு இலகுவாக மதிப்பெண் கிடைக்குமோ அவர்களிடம் அனுப்பி தங்களையும் ஏமாற்றி, பிள்ளையையும் ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த சின்னையா சிவநேசன் அவர்கள் ஒன்பதாம் வகுப்புக்குத் தமிழ் படிப்பிப்பவர். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய வகுப்புக்கு வரும் மாணவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் ‘அ', ‘ஆ' சரியாகத் தெரியாமல் வருவதாகக் அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். எனக்குத் தெரிந்து இங்கே LKG, UKG வகுப்புகளில் இருந்தே தமிழ் கற்பிக்கிறார்கள் (என்னுடைய தமக்கையார் அந்த வகுப்புகளுக்குத் தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறார்). இருந்தும் ஒன்பதாம் வகுப்பில் ‘அ' ‘ஆ' தெரியாமல் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் வருகிறார்கள் என்றால், எங்கோ பிழை செய்கிறோம் அல்லவா?

சிவா பிள்ளையின் பார்வையில் மாணவனைத் தமிழ் படிப்பதால் வரக்கூடிய கல்வியியல் ரீதியான பலன்களைச் சொல்லி (Credit Course, University Entrance) வகுப்பறைக்குள் அழைத்து வந்தாலும், அவனை ஆர்வமாகத் தமிழ் கற்க வைக்க எம்முடைய பழைய கற்பித்தல் முறைகள் உதவாது என்கிறார். முக்கியமாக புள்ளிக் கோடுகளை இணைத்து ‘அ' எழுதுதலில் மொழியைக் கற்றுக் கொடுக்கத் தொடங்காமல், கேட்டல், பேசுதல் வாசித்தல் கடைசியாக எழுதுதல் என்ற வரிசைக் கிரமத்தில் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்.

இங்கே தான் சபைக்கும் சிவா பிள்ளைக்கும் முதல் முரண்பாடு வந்தது, பண்டிதர் திரு. அலெக்ஸாண்டரின் ரூபத்தில். உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன சர்ச்சை என்று... தொன்று தொட்டு இருந்துவரும் எழுத்து மூலமான கற்பித்தலை விடுத்து, சொல்மூலமான கற்பித்தலால் எழுத்துவடிவங்கள் அழியாதா? என்கிற கேள்விதான் அலெக்ஸாண்டரிடம் இருந்து எழுந்தது. சிவா பிள்ளை என்ன பதில் சொன்னார்? இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன? இதுபற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

Thursday 10 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-1

புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது எங்கள் வாழ்வியலை, எங்கள் கலாசாரத்தை, எங்கள் மொழியை எவ்வாறு அடுத்த சந்ததிக்குக் கொண்டுபோகப் போகிறோம் என்பதே. அதுவும் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளிலேயே கல்வி வழங்கப்படும் சூழலில் அவர்களின் முதல் மொழி (தாய் மொழி என்றுகூடச் சொல்லலாம்) அந்த நாட்டு மொழியாகவே அமைகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழைக் கற்பதென்பது அவர்களுக்கு மிகவும் வெறுப்பு மிகுந்த ஒரு அனுபவமாகவே அமைகிறது. நாங்கள் எப்படி ஆங்கிலம் கற்க விழுந்து எழும்பினோமோ, அதே சிக்கல்களை அவர்களும் எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கு ஆங்கிலம் படிக்கச் சொல்லி பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பினார்கள், எங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்கப் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். அப்படி விருப்பமில்லாமல் தமிழ் படிக்க வருகின்ற பிள்ளைகளுக்கு விருப்பத்தை எவ்வாறு உண்டுபண்ணலாம்?

இதுபற்றித்தான் ஐக்கிய ராச்சியத்தில் இருந்து கனடா வந்திருந்த இலண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிவகுருநாத பிள்ளை (சிவா பிள்ளை) அவர்கள் சென்ற 28/08/2009 அன்று ஒரு பட்டறை நிகழ்த்தினார். கனடாவில் ஒரு உறவினரின் திருமணத்துக்காக வந்திருந்த சிவா பிள்ளையின் தொடர்பு அவரின் ஆசிரியர் ஒருவர் மூலமாக எழுத்தாளரும், ஆசிரியருமான சின்னையா சிவநேசன் (துறையூரான்) அவர்களுக்குக் கிடைக்க, அவரது முயற்சியில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக இந்தப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டது. துறையூரான் அவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதாலும், பட்டறையை புகைப்படம் பிடிப்பதற்கு உதவி தேவைப்பட்ட காரணத்தாலும், என்னுடைய தமக்கையாரும் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் தமிழ் கற்பிக்கிற காரணத்தாலும், நானும் இந்தப் பட்டறைக்குப் போயிருந்தேன்.

எங்களது அடையாளங்களில் ஒன்றான நேரம் தவறுதல் இங்கேயும் இருந்தது. ஐந்தரைக்கு ஆரம்பிக்க வேண்டிய பட்டறையை ஆறு மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள். வழமைபோலவே வழங்குனர் நேரத்துக்கு வந்திருந்தார், பயன் பெறுனர்கள் ஆறுதலாக வந்து சேர்ந்தார்கள். 'அஞ்சரைக்கு எண்டு சொல்லி ஆறு மணிக்குத்தான் தொடங்குவினம்' என்று சொன்ன அக்காவை இழுத்துக்கொண்டு போய்ச் சேர பத்து நிமிடம் பிந்தியிருந்தது. வழி முழுக்க புறுபுறுத்துக் கொண்டுதான் போனேன். அங்கே போனால் ஒரு ஐந்தே ஐந்து பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் ஒரு ஆசிரியையின் கணவர், மற்றவர் சிவா பிள்ளை அவர்களை அழைத்து வந்தவர். மூன்றே மூன்று ஆசிரியைகள் மட்டும் உள்ளே இருந்தார்கள். அறிமுகம் செய்து பட்டறையை ஆரம்பித்து வைக்கவேண்டிய தமிழ் எழுத்தாளஎ சங்கத் தலைவர் திரு. த. சிவபாலு அவர்கள் ஆறுமணியளவில் வந்து சேர்ந்தார்.

படம்-1: தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கனடா தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. வந்திருந்த பயனாளர்களில் சிலர்

சிவபாலு அவர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து சிவா பிள்ளை தனது பட்டறையை ஆரம்பித்தார். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்குள் ஐந்து அலைபேசிகள் ஒலித்தன. அதிலும் திரு. சிவபாலு அவர்கள் தன் அலைபேசி அழைப்பை ஏற்று சத்தமாகப் பேசியபோது உண்மையிலேயே கோபமாக இருந்தது. பொறுப்பில்லாதவர்கள், பழக்க வழக்கங்கள் சரியாக இல்லை என்று எங்களைச் சாட்டிச் சாட்டி இந்த மூத்த தலைமுறை தங்கள் தவறுகளைக் கவனிக்க மறந்து வருகிறது. ஒரு பட்டறைக்கு வரும்போதோ, ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரும்போதோ, பெரிய சத்தத்தில் அலைபேசியை ஒலிக்க வைத்து, அதைவிடப் பெரிய சத்தத்தில் அந்த அலைபேசி அழைப்புக்குப் பதிலிறுப்பது ஒரு 'படம் காட்டும்' மனநிலையாக எனக்குப் படுவதுண்டு. என்னுடைய அலைபேசி எப்போதும் அதிர்வு நிலையிலேயே இருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும் இங்கே.
படம்-2: சிவா பிள்ளை (இடம்) அவர்களை அறிமுகம் செய்து பட்டறையை ஆரம்பித்துவைக்கும் திரு. த. சிவபாலு அவர்கள்.

இப்படியாக சில கசப்புகளுடன் தொடங்கிய இந்தப் பட்டறையை சிவா பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவந்தார். அவரது ஆழ்ந்த அனுபவம் அவருக்குத் துணைசெய்ய, இலகுவாக அவையை அடக்கினார் என்றே சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆசிரியர்கள் வந்து இணைந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இருந்தும் இப்படியான ஒரு பட்டறைக்குத் தமிழ் ஆசிரியர்கள் 15 பேர் மட்டுமே வந்தார்கள் என்பது, வரவேற்கத்தக்க ஒன்றல்ல. அதுவும், தமிழ் படிக்க வரும் பிள்ளைகளை விரும்பிப் படிக்கவைக்க முடியவில்லை என்று பல ஆசிரியர்கள் குறைகூறும் ஒரு நாட்டில், இவ்வாறு வரவு குறைவாக இருந்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில் சிவா பிள்ளை தந்த பல தகவல்கள், பல யோசனைகள் செயற்படுத்திப் பார்க்கும் தரம் வாய்ந்தவை. அவை பற்றி அடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

Wednesday 9 September 2009

பிள்ளைகளை நெருக்காதீர்கள்

நண்பன் பால்குடி திரும்பவும் கிளறிவிட்டார். எமது சமூகத்தில் கல்வி, கல்விப் பெறுபேறுகள் பற்றிய பார்வைமீதான என்னுடைய கோபங்களை 'பத்து வயசில...' என்கிற தன்னுடைய பதிவின் மூலம் மீண்டும் கிளறிவிட்டார். கொட்டித் தீர்க்கப் போகிறேன் இங்கே.

ஏற்கனவே ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வரைக்கும் பிள்ளை முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தை விட, தங்களின் சுயகௌரவம் பாதிக்கக் கூடாது என்கிற நோக்கில் எங்களைப் பிசைந்த கதைகளை நான் கூறியிருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எனக்கு பிரத்தியேக வகுப்புகள் நடந்தது பற்றியெல்லாம் கூறியிருக்கிறேன். என்னை மிகவும் கோபப்படுத்தும் பெற்றோருடைய மனோநிலைகளில் முதன்மையானது, தன்னுடைய பிள்ளையையும் இன்னொரு பிள்ளையையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது. எனக்கு என்ன எல்லாம் நடந்தது என்று பாருங்கள்.

நான் முன்னைய பதிவொன்றில் சொன்னது மாதிரியே பதினோராம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவனாக வருவேன். அப்போது Progress Report வரும்போதெல்லாம் என்னுடைய மதிப்பெண்களை ஞாபகம் வைத்துக் கொண்டதைவிட பகீருடைய, அரவிந்தனுடைய மதிப்பெண்களை ஞாபகம் வைத்துக் கொண்டதும், என்ன பாடத்தில் யாருக்குக் கூடிய மதிப்பெண் என்று ஞாபகம் வைத்துக் கொண்டதுமே அதிகம். மதிப்பெண்களைப் பார்த்தவுடன் முதலில் வரும் கேள்வி 'பகீருக்கு எத்தினை மாக்ஸ், தனஞ்சியனுக்கு எத்தினை மாக்ஸ்?' என்பதாகத்தான் இருக்கும். (அந்தக் காலத்தில ஏன் அடிக்கடி அவனுடைய மதிப்பெண்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று பகீருக்கு இப்ப விளங்கும்).
இதவிடக் கொடுமை தனியார் கலாசாலையில் நடக்கும் சோதனைகளில் 'தாட்சாயணிக்கு எத்தினை மாக்ஸ்?' என்று கேட்பதுதான். தாட்சாயிணி யார் என்று கேட்கிறீர்களா? இலங்கையில் இருந்து எழுத ஆரம்பித்த முதல் பெண் பதிவர் என்று சயந்தன் அடிக்கடி குறிப்பிடும் சாயினிதான். இதில் பெரிய தலையிடி என்ன என்றால், தாட்சாயிணியுடன் இப்பதான் இணையமூலமாக ஓரிரு வார்த்தைகள் பேசுகிறேன். அந்த நேரம் ‘பெண்கள்' ‘ஆண்கள்' பேசுவதுகூட இல்லை. யாராவது வகுப்பில் குழப்படி செய்தால் ‘ரீச்சர், பெண்கள் குழப்படி செய்யினம்' என்று பெயரைக் குறிப்பிடாமல்தான் முறைப்பாடு செய்வோம். இந்த நிலையில் எப்படி நான் தாட்சாயிணியின் மதிப்பெண்களைக் கேட்க முடியும். ‘அவளுக்கு உன்னைவிடக் கூடப் போல இருக்கு. அதுதான் ஒளிக்கிறாய்' என்று திட்டுவேற விழும். 'ஏன் நீங்களே அவவிட்ட கேளுங்கோவன்' என்று சொல்லி அடிவாங்கியும் இருக்கிறேன்.

இந்த ஒப்பீட்டுக் கணங்களில் சில மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். ஒருமுறை உயர்தரக் கணிதத்தில் எனக்கு 62 மதிப்பெண்கள். பால்குடி நூற்றுக்கு நூறு எடுத்துத் தொலைத்து விட்டார். 'அவனும் உன்னோடதானே படிக்கிறான். அவனெல்லோ பிள்ளை.. அவன் 100 எடுக்கிறான் எண்டால் நீயும் 100 எடுக்கத்தான் வேண்டும்' என்று ஒரே அர்ச்சனை. எனக்கு எத்தனை விதமாகச் சிந்தித்தும், எங்கள் இருவரது கிரகித்தல் திறண், நுண்ணறிவு போன்றன ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்ற அந்தப் பார்வையை ஜீரணிக்க முடியவில்லை. நான் என் பெற்றோரைப் பார்த்து ‘பால்குடி ஆறடி உயரத்தில் பனைமரம் போல் வளர்ந்திருக்கிறார். ஏன் என்னை நீங்கள் அப்படி வளரவைக்கவில்லை?' என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ, ‘அவன் 100 எடுக்கேக்கை, நீயும் 100 எடுத்தே ஆகவேண்டும்' என்ற கட்டாயப்படுத்தலும் அபத்தமே.

பெற்றோரின் அழுத்தம் பிள்ளைகளை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதற்கு அடுத்த உதாரணம் இங்கே. என்னுடைய வீட்டின் அழுத்தம் என்னுடைய தம்பியின் பாடசாலை வாழ்வுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்தது. ஆறாம் வகுப்பில் அவனைச் சேர்த்த நேரம் ‘எல்லாப் பாடத்துக்கும் கட்டாயம் 90க்கு மேல் எடுக்க வேண்டும்' என்று கட்டாயப் படுத்தப்பட்டு பயந்து பயந்து பரீட்சை எழுதியவனுக்கு, ஒரு பாடத்திலும் 60க்கு மேல் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அந்த மதிப்பெண்களை வீட்டில் காட்டினால் சிக்கல் என்றுவிட்டு பாடசாலைவிட்டு வரும் வழியில் பொடியன் ஒரு சின்ன விளையாட்டு விளையாடினான். அதாவது Progress Reportல் எல்லா மதிப்பெண்களையும் 90க்கு மேல் வருமாறு மாற்றிவிட்டான். மாற்றியதுதான் மாற்றினான் பின்வரும் விஷயங்களை அறவே மறந்துவிட்டான்.
 • வகுப்பாசிரியர் உபயோகித்தது நீலநிற மை உள்ள பேனா. இவன் உபயோகித்தது கறுப்புநிற மை உள்ள பேனா. அதாவது 95 என்ற புள்ளியில் 9 கறுப்பு மையிலும், 5 நீல மையிலும் இருந்தது.
 • சவர அலகால் சுரண்டிய அடையாளங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.
 • எப்படி அதை மீண்டும் பாடசாலையில் கொடுப்பது, வகுப்பாசிரியரிடம் உண்மையான மதிப்பெண்கள் இருக்குமே என்பதையெல்லாம் மறந்துவிட்டான். உடனடியாக திட்டு மற்றும் அடியில் இருந்து தப்புவதே அவன் நோக்கமாக இருந்தது.
 • கணித பாடத்துக்கு இவன் பெற்ற புள்ளிகள் 93 என்றும் அதிகூடிய புள்ளிகள் 77 என்றும் இருந்தன. கூட்டுத்தொகை 400 சொச்சம் இருந்தது. அவன் 'மாற்றிப் போட்ட' மதிப்பெண்களின்படி 600 சொச்சம் வந்தது.
அப்பாவிடம் சுலபமாக மாட்டிக் கொண்டான். அப்போது இரண்டாம்தரம் உயர்தரப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். நான் தனியார் கலாசாலைக்குச் சென்றிருந்த வேளையில்தான் தம்பி மாட்டிக் கொண்டான். அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியும் அப்பா அவனுக்காக எந்த ஆசிரியரிடமும் போய்ப் பேசிப் பார்க்கத் தயாரில்லை. அம்மா அழுதுவடிந்தார். என்னுடைய அறைக்குள் அழுதழுது களைத்து நித்திரையாகிவிட்ட தம்பியை கோபத்தோடு (வேறென்ன, களவு செய்ததில் இவ்வளவு முட்டாள்தனமா என்ற கோபம்தான்) எழுப்ப, என்னைக் கட்டிப்பிடித்து அழுதான். அடிக்க இருந்தவன் அணைத்துக் கொண்டேன். பிறகு அவனது வகுப்பாசிரியரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன்.

வகுப்பாசிரியர் நாங்கள் பாடசாலையில் இருந்து விலகியபின் வந்தவர். அவரை எனக்குப் பெரிதாகத் தெரியாது. எங்கே வசிக்கிறார் என்றுகூடத் தெரியாது. நண்பன் செந்திலோடு சேர்ந்து வீட்டைக் கண்டுபிடித்து அவரிடம் நடந்ததைச் சொல்ல, அவர் கைவிரித்துவிட்டார். அவரின் ஆலோசனைப்படி உப-அதிபர் புலிக்குட்டியின் குட்டியை சந்தித்து விஷயத்தைச் சொல்ல ‘சிவப்பு மை பரவியுள்ள கட்டாய விடுகைப் பத்திரம் தவிர வேறு வழி இல்லை' என்று கைவிரித்துவிட்டார். 11 வயதில் தம்பியின் வாழ்க்கை அழியப்போகிறது என்கிற தவிப்பு. செந்திலுக்குத் தெரியும் அந்த வலி, என்னோடு கூடவே அலைந்து பகிர்ந்துகொண்டான். அப்பாவிடம் இந்தமுறை நான் கெஞ்சினேன். பாடசாலை மட்டத்தில் அவருக்குச் செல்வாக்கு இருந்ததால் ஆகக் குறைந்தது, சாதாரண விடுகைப் பத்திரமாவது பெற்றுக் கொண்டு வேறு பாடசாலையில் சேர்ப்போம் என்று கெஞ்சினேன். அப்பா மாட்டேன் என்றுவிட்டார்.

கடைசியாக எனக்குக் கைகொடுத்தது, இன்றைக்கும் நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் என் பிரியத்துக்குரிய ஆசான் ஒருவர். பெயரைக் குறிப்பிடுவது எவ்வளவு சரியானது என்று தெரியவில்லை, பட்டப் பெயரைச் சொல்கிறேன். இவருக்கு கொஞ்சம் பெரிய தொப்பை என்பதால் நெய்வண்டி என்று நாங்கள் முதுகுக்குப் பின்னால் பயங்கரமாக நக்கல் அடித்திருக்கிறோம். அவரைக் கண்டாலே ‘அட்வைஸ் பண்ணப் போறாரடா' என்று ஓடி ஒளிந்திருக்கிறோம். அதெல்லாம் வலிக்க வலிக்க எனக்கு உறைக்கும்படி தம்பியை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டார். ஒரு புதிய Progress Report எடுத்து பழையது தொலைந்து விட்டதாகக் காரணம் காட்டி புதியதில் வகுப்பாசிரியரிடம் மதிப்பெண்களை வாங்கிப் பதிந்து, தம்பி செய்த தப்பை மூடி மறைத்துவிட்டார். உப அதிபர் தன் சுய பிரதாபங்களைப் பீற்றுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்ததால் தம்பி பற்றி விடுமுறையின் பின் பள்ளி திரும்பியபோது மறந்தேவிட்டார்.

அதன் பின் என் பெற்றோருடனும் அந்த ஆசான் பேசினார். இந்த விஷயத்தில் அந்த ஆசான் செய்தது நேர்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அது இரண்டு நன்மைகளைச் செய்தது:
 1. தம்பியின் பாடசாலை வாழ்க்கை காப்பாற்றப்பட்டது. இப்போது ஒழுங்காகப் படிக்கிறான்
 2. இப்போதெல்லாம் அவனுக்கு மதிப்பெண்கள் குறைந்தால் ஏன் குறைந்தது, எப்படி அடுத்த முறை கூட்ட முயற்சிக்கலாம் என்று நடைமுறை ரீதியாக அம்மா சிந்திக்கிறார். 90 எடுத்தால் மிச்சப் பத்து எங்கே, 70 எடுத்தால் ‘அவன் 100 எடுக்க நீ ஏன் 70 எடுத்தாய்' போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை
'இதே மதிப்பெண் மாற்றும் வேலையை கிருத்திகன் ஏ/எல் படிக்கும் போது செய்திருந்தால், அவனை நான் காப்பாற்றி இருக்கமாட்டேன். ஏனென்றால் நன்மை தீமை தெரிந்த வயதில் நீ அவ்வாறு செய்தால் அது தெரிந்தே செய்த பிழை. ஆனால், 11 வயதில் இந்தப் பிள்ளை உங்களின் நிர்ப்பந்தம் காரணமாகச் செய்த பிழை மன்னிக்கப்பட வேண்டியது. அவனுக்கு கட்டாய விடுகைப் பத்திரம் தருவது அவனைத் தவறான திசையில் திருப்பிவிடக் கூடும். அவ்வாறு சட்ட திட்டங்களுக்கமைய நடந்து தண்டிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது பின்விளைவுகளைப் பற்றிக்கூடச் சிந்திக்கும் மனப்பக்குவம் இல்லாத இந்தச் சின்னவன்தான். இனியும் இப்படி அவனை நெருக்காதீர்கள்' என்ற கருத்துப்பட அந்த ஆசான் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்தபடி இருக்கிறது.

ஆரியர், திராவிடர்.... தமிழன்,இந்திக்காரன்...இலங்கையன் இந்தியன் ஆகிய அரசியல்களைக் கடந்து சமீபகாலத்தில் வந்த படங்களில் (அதாவது அதிகம் நான் படம் பார்க்கத் தொடங்கியபின்) என் உள்ளத்துக்கு மிக அருகில் இருப்பது ஆமிர் கானின் ‘தாரே ஜமீன் பர்'. அந்தப் படத்தில் உப-தலைப்பாக Every Child is Special என்று போடுவார்கள். நூற்றுக்கு நூறு உண்மை. எல்லாக் குழந்தைகளுமே அற்புதமானவை. ஆனால் இன்றைய சமூகத்தில் (தெற்காசிய சமூகங்களை முக்கியமாகக் கைகாட்டுவேன்) இருக்கிற சில ஆராய்ந்தறியானல் உள்வாங்கப்பட்ட கருத்துத் தோற்றங்களால் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

எங்கள் சமூகங்களில் பெற்றோர்-குழந்தைகள் இடைவெளி ஏன் வருகிறது தெரியுமா. 'என்னுடைய குழந்தை நான் பார்க்காததெல்லாம் பார்க்கவேண்டும்' என்று ஆசைப்படுகிறார்கள். அது ஒன்றும் நியாயமற்ற ஆசை என்று நான் சொல்ல வரவில்லை. என்னுடைய பிள்ளை என்னைவிட நன்றாக இருக்கவேண்டும் என்கிற தன்னலமற்ற பாசம் அது. இன்றைய குழந்தைகளின் பார்வையில் அது அத்தியாவசியமற்ற திணிப்பு. அதனால் குழந்தைகள் உங்களிடம் இருந்து விலகிப் போகிறார்கள். இவ்வளவு பாசம் காட்டியும் பயனில்லையே என்று உங்களைப் புலம்பவைக்கிறார்கள். ஆனால் 'என்னுடைய குழந்தை எதைப் பார்க்க விரும்புகிறதோ அதைப் பார்க்கட்டும்' என்று வாழ்ந்து பாருங்கள், அன்றில் பறவைகளாய் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒன்றி வாழலாம். மீண்டும் சொல்கிறேன்.... Every Child is very very very special.