Friday 27 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 22-நவம்பர் 28 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்+புகுந்தகம்+பக்கத்து வீடு
மாவீரர் வாரம்தான் இந்த வாரத்தில் தாயக அரசியலின் மிகப்பெரிய செய்தியாகும். தாயகத்தில் இந்த முறை இந்த நாள் அனுட்டிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளை, தகப்பன்களை, சகோதரன்களை, சகோதரிகளை இழந்த சொந்தங்கள் எத்தனையோ ஊமையாக அழுதிருக்கும். அந்தக் குறையைப் போக்குவது போல் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லியாகவேண்டும். இப்படியாவது ஒன்றுபட்டால் நலம்.

சீமானை கனடாவுக்கு அழைத்து இங்கே ஒரு விழா நடத்தினார்கள். அவரை கனேடியக் காவல்துறை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது. இப்படியான உணர்வு பூர்வமான நிகழ்ச்சிக்கான ‘சிறப்பு விருந்தினர்' அழைப்பு, அவரது பேச்சுக்கான விசில்கள் பற்றிய விமர்சனங்களைக் கடந்து, கனேடிய அரசின் இந்தச் செயல் கீழ்த்தரமான அரசியல் அழுத்தங்களைக் கொண்டது என்பதை இங்கே பதிவுசெய்தாக வேண்டும். ‘தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஒரு சிங்களன் கூட உயிருடன் இருக்கக்கூடாது' என்ற தொனியில் பேசியதைவிட கனடாவில் வன்முறை ஒன்று தோன்றும் அளவுக்கோ, பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும்வகையில் இளைஞர்களைத் தூண்டும் வகையிலோ சீமான் எதையும் சொல்லியிருக்கவில்லை என்பதே உண்மை. இது இந்திய/இலங்கை அண்ணன் தம்பிகளின் அழுகையைத் துடைக்க கனேடியப் பெரியண்ணன் செய்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டு என்பது மட்டும் உண்மை.

இலங்கை அரசியல்களம் விரைவில் இன்னும் சூடேறப்போகிறது. வருகிற 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பாகப் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர ஆலோசனை செய்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வன்முறையில்லாமல் நேர்மையான ஒரு தேர்தலுக்குச் சாத்தியமிருப்பதாகத் தெரியவில்லை. சொந்தங்களையும், நட்புக்களையும் நினைக்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகிறது.

அரசியல்-புகுந்தகம்+உலகம்
சென்ற வார ‘நான் பார்க்கும் உலகம்' தொகுப்பில் ஆஃப்கான் போர்க்கைதிகள் மீதான வன்கொடுமைகளில் கனடாவுக்கும் பங்கிருக்கிறது என்கிற செய்தி இப்போது கனேடிய அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியலையே உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்திலும் இது தொடர்பான மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. தாம் கைது செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாகத் துன்புறுத்தப்பட்டதாக சில பாகிஸ்தானியர்கள் சொல்லியிருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் ‘குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லும்போதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியாத மனித உரிமை மீறல்கள் இப்போது தெரியும் விந்தை அரசியலை விளங்கிக்கொள்வது என் போன்ற பாமரர்களுக்கு இயலாத காரியம்.

இதே வேளை இப்படியான துன்புறுத்தல்கல் பற்றி 2006ம் ஆண்டளவிலேயே செஞ்சிலுவைச் சங்கம் மின்னஞ்சல்கள் மூலமாகத் தங்களுக்கு அறிவித்திருந்தது என்று கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே கூறியிருக்கிறார். இதுவரை காலமும் தீவிரமாக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அரசதரப்பில் இருந்து இப்போது முழுமையான குத்துக்கரணம் அடித்திருக்கிறார் மக்கே. முன்னைநாள் அமெரிக்க அதிபர் புஷ், முன்னைநாள், இற்றைநாள் பிரித்தானியப் பிரதமர்கள் ரொனி பிளேயர், கோர்டன் ப்ரவுன் ஆகியோரின் தலைமையில் உலகின் பெரியண்ணன்கள் பலர் சேர்ந்து ஆடும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இது. கைதிகளைத் துன்புறுத்தவென்றே 'குவாண்டனாமோ பே'யில் சிறைக்கூடம். பின்னர் இப்படியான நாடகங்கள். இந்த மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் திரும்பவும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வினைகெட்ட அமைப்புகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
இந்தவார வணிகம் பொருளாதாரம் சம்பந்தமான மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருப்பது துபாய் பற்றிய செய்திகளே. துபாய் அரசால் நிர்வகிக்கப்படும் துபாய் வேர்ல்ட் எனப்படும் சார்புவைப்புக் குழுமம் பெரும் கடன் நெருக்கடியில் இருப்பதாக அறிவித்ததை அடுத்து உலகின் பல பாகங்களிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆசியப் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதில் பெரும் அதிர்ச்சி இல்லையென்றாலும், வழமையாக அமெரிக்கப் பங்குச் சந்தை ஒரு விடுமுறை தினத்தில் மூடப்பட்டிருக்கும்போது உலகளாவிய ரீதியில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. டொலரின் சரிவும் முதலீட்டாளர்களைக் கொஞ்சம் ஆடவைத்திருக்கிறது.

ஆசியாவில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தைச் சுட்டென் 3.18% வீழ்ச்சி கண்டது. ஹொங்கொங்கின் ஹாங் செங் 1.8%, ஜப்பானின் நிக்கேய் 0.6%, இந்தியாவின் மும்பை 2.67% சரிவைச் சந்தித்தன. ஐரோப்பாவில் லண்டன் பங்குச்சந்தை 3.25% வீழ்ச்சியையும், ஃப்ராங்ஃபேர்ட் பங்குச் சந்தை 3.18% வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன.

விளையாட்டு
இந்த வாரம் ஒரே கிரிக்கெட் கொண்டாட்டம். இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான்-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலியா-மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து-தென்னாபிரிக்கா ஒரு நாள் போட்டிகள் என்று முக்கிய எட்டு அணிகளும் மோதிக்கொண்ட வாரம் இது. இந்தியா இலங்கையை இன்னிங்ஸ்சால் வென்று தமது 100வது டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. அவுஸ்திரேலியா மேற்கிந்தியாவை மூன்று நாட்களில் சுருட்டியது. இங்கிலாந்து ஒரு போட்டியையும், தென்னாபிரிக்கா இன்னொரு போட்டியையும் வென்று சமமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வாரத்தின் அருமையான போட்டி நியூசிலாந்து-பாகிஸ்தான் போட்டி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் கடைசி நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் இரு அணிகளும் போராடி, நியூசிலாந்து 32 ஓட்டங்களால் வென்றது. இப்படியான போட்டிகள்தான் டெஸ்ட் கிரிகெட்டை வாழவைக்கும். அகமதாபாத் போன்ற போட்டிகள் அல்ல.

முதல் போட்டியிலேயே 129+75 ஓட்டங்களைப் பெற்ற 19 வயதான உமார் அக்மல், பந்து வீச்சில் கலக்கும் 17 வயது முகம்மட் ஆமீர் ஆகியோருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றிய எதிர்வுகூறல்கள் எப்போதும் சரியாவதற்குரிய வாய்ப்புகள் குறைவு. பார்ப்போம், இந்த இளம்புயல்கள் என்ன செய்கிறார்கள் என்று. அதே போல் அடுத்த இளம் புயல் மேற்கிந்தியாவின் அட்ரியன் பரத்.

சினிமா-பொழுதுபோக்கு
சமீபத்தில் வெளியான அமீரின் ‘யோகி' படம் வெளியான உடனேயே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அமீரும் இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் காட்சிக்குக் காட்சி ‘டுட்சி' என்ற தென்னாபிரிக்கப் படத்தை சுட்டு விட்டார்கள் என்று திரையுலகம், வலையுலகம் எல்லாம் குதறுகிறார்கள். 'துபாய் திரைப்பட விழாவுக்குப் போகிற படம் எப்படி சுட்ட படமாக இருக்கும்?' என்று கொதிக்கிறார் அமீர். மொத்தத்தில் இரண்டு வருடமாக அமீர் 'செதுக்கிய' யோகி, ஊத்திக்கொண்டாயிற்று.

ஒரு மாதிரி அடுத்த ஐ.பி.எல் வரமுன்னரே காதலித்த ஷில்பா ஷெட்டியை நவம்பர் 22ல் கைப்பிடித்து விட்டார் ராஜ் குந்த்ரா. ஷேன் வோர்னின் குக்ளிகளைச் சமாளிக்க முடியாமல் விரைவில் இந்தத் திருமணம் நடக்கும் என்று 'Fake IPL Player' எப்போதோ சொல்லியிருந்தது ஞாபகம் வருகிறது. வோர்ன் ஷமீதாவுக்கு இனி குக்ளிகளை வீசவேண்டியதுதான்.

அடப் பாவிகளா........
ஆணி புடுங்கும் இடத்தில் Levi Strauss ன் ஆண்களுக்கான பணப்பைகளை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பணப்பைகள் அடைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பைகளில் எழுதியிருந்த வசனம் கொஞ்சம் குழப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கொஞ்சக் காலத்துக்கு முன்னர் வந்த பரபரப்பையும் சேர்த்து ஒரு வாசகம் அடித்திருந்தார்கள். ‘This is not a toy made in China. But keep away from kids'. கிட்டத்தட்ட சீனத் தயாரிப்புகள் மீதான காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வாசகம் அது. வேடிக்கை என்னவென்றால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இடுப்புப்பட்டிகளும், பணப்பைகளும் இங்கே வைத்துப் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான்.

Thursday 26 November 2009

மாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை

மாவீரர் நாள்
மாவீரர் வாரம் என்றுமில்லாதவாறு இந்த வருடம் விமரிசையாகக் 'கொண்டாடப்படுகிறது'. கனடாவில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்ட விழா ஒன்று ‘கொண்டாடப்பட்டது'. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. தமிழ் மக்களை ‘மச்சான்' என்று அழைத்த தமிழ் உணர்வாளர் நமீதா இன்னொரு மாவீரர் நாளில் கலந்துகொண்டு சிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேலையிடத்திலும் பொது இடங்களில் நேரடியாகவும், சிலர் தொலைபேசி வழியாகவும் கேட்ட கேள்வி ‘தம்பி இந்த முறை மாவீரர் நாளுக்கு சீமான் வாறாராம். நீங்கள் போகேல்லையோ?' என்பதாக இருந்தது எரிச்சலூட்டியது.

சீமானின் தமிழுணர்வை நான் மறுக்கவோ, குறுக்கவோ இல்லை. எங்களுக்காக செத்தவர்கள், எங்களை விட எத்தனையோ மடங்கு நெஞ்சுரமும், தியாகக் குணமும் கொண்டவர்களுக்காக அனுட்டிக்கப்படும் நினைவுநாட்களில் கலந்து கொள்ளப் பின்நிற்கக்கூடாதுதான். ஆனால், ‘மாவீரர்களை நினைவுகூரும் பொருட்டு சேர்வோம்' என்கிற ஒரு எண்ண ஓட்டத்தைவிட, ‘சீமான் வாறாராம்' என்கிற வேடிக்கை உணர்வே இங்கே விஞ்சி நிற்கிறது. அதாவது, விழா ஏற்பாட்டாளர்கள் ‘சீமான்' என்கிற எலும்புத்துண்டை வீசினால் இந்த ‘விலங்குகள்' ஓடி வரும் என்று நினைத்திருக்கிறார்கள், அல்லது அப்படி நினைக்கும்படி நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். இப்படியே போனால் ஒரு நாள் நான் மேலே சொன்னபடி ‘தனத் தலைவி'... சீச்சீ... ‘தானைத் தலைவி நமீதா கலந்து சிறப்பிக்கும் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் என்பதாக ஒரு விளம்பரம் வரும் நாள் தூரத்தில் இல்லை.

இதே வேளை இயக்குனர் சீமானை கனேடிய சட்டத்துக்குப் புறம்பாக உரையாற்றியமைக்காக கனேடியப் போலீசார் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.

பாபா
சென்ற வார இறுதி முழுதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. 'பாபாவுக்குப் பிறந்த நாள் கொண்டாடினமாம், போகேல்லையோ?' என்று பலபேர் கேட்டார்கள். வருடாவருடம் கேட்டுக்கேட்டு அலுத்த கேள்விதான் என்றாலும் சலிக்காமல் ‘எனக்கு உதிலையெல்லாம் நம்பிக்கை இல்லை' என்பதைப் பதிலாகச் சொல்லிவருகிறேன். அம்மா பகவான் கல்யாண சீசனில் பாபா கிடப்பில் போடப்படுவார். பாபா பிறந்த நாள் சீசனில் அம்மா பகவானை மறந்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சனங்கள் இவர்கள்?

இங்கே சத்யசாய் பாடசாலை என்கிற பெயரில் ஆறாம் வகுப்புவரை ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மற்றைய பொதுப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது கல்வி, ஒழுக்கம் என்று எல்லாவற்றிலும் தரமான பாடசாலை. பெற்றோரின் நன்கொடையில் நடப்பது. ஆறாம் வகுப்புவரை மருமகனும் அங்கே தான் படித்தான். கிரீன்வூட் என்று ஒரு அருமையான ஆசிரியர் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் வகுப்புக்களை ஆரம்பிக்க நிதி இல்லாமல் திணறுகிறார்கள். தனியான கட்டடம் இல்லாமல் வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பள்ளிக்கூடம் நடக்கிறது. சாய் பாபா தியான மண்டபம் கட்ட நிலம் வாங்கிப்போட்டு ஒரு குழு சாய் பாபாவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. இன்னொரு குழு பள்ளிக்கூட அபிவிருத்திக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இரண்டு குழுக்களும் கூடிப்பேசி அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்யலாம். அதைவிடுத்து ஒரே நெறியைப் பின்பற்றுகிறோம் என்கிற பேரில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் எரிச்சலாக இருக்கிறது.

இதைவிடக் கொடுமை, அந்தப் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி சாயைப் போய்ப் பார்த்து வருபவர்கள் (மருமகனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை). சாய்க்கு கடிதம் எல்லாம் விழுந்து விழுந்து எழுதுவார்கள். சாய் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கென்னவோ சாய்க்கு இப்படியான பிஞ்சுகளைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அவரும் என்னதான் செய்யமுடியும்? அவருக்குத்தான் எத்தனை வேலைகள். சாய்க்கு ஆலயம் கட்டுவதைவிட கல்விச் சாலைகள் கட்டுவது எவ்வளவோ மேல் என்று இந்த முட்டாள்ச் சனங்கள் என்றைக்குப் புரிந்துகொள்ளுமோ தெரியவில்லை.

விபரீத ஆசை
எனக்கு சமீபத்தில் வந்திருக்கும் விபரீத ஆசை இது. வேட்டைக்காரன் படத்தில் ஒரேயொரு பாடலைக் கடன்வாங்கியாவது நான் தயாரிக்க வேண்டும். எந்தப் பாடலைத் தெரியுமா? ‘புலி உறுமுது' பாட்டைத்தான். அதிலும் முக்கியாமாக ஒரு வரியை மிகவும் தத்ரூபமாக, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, படம்பிடிக்க வேண்டும். வரி இதுதான்
‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன்
அமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'.
ஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். அடப் போங்கடா.....


Saturday 21 November 2009

1999- விமர்சனம்

என்றைக்குத் தசாவதாரம் பார்த்து ஏமாற்றம் அடைந்தேனோ அன்றிலிருந்து திரையரங்குகளுக்குப் போய் தமிழ்ப் படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். 10 டொலர்களையும் இரண்டரை மணித்தியாலங்களையும் வீணடிப்பதாக ஒரு உறுத்தல் என்னுள் இருந்தபடியே இருக்கும். ஆனால், 1999 வூட்சைட் சினிமாவில் திரையிடப்படுகிறது என்றதும் போய்ப் பார்த்துவிட மனம் துடித்தது. காரணங்கள் பல. லெனின்.எம்.சிவம் உருவாக்கிய இந்தப் படம் வான்கூவர் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வானது ஒரு காரணம். கனடாவில் வெளியான சிறந்த 10 படங்களில் ஒன்றாக வாக்களித்துத் தெரியப்பட்டது இன்னொரு காரணம். நம்மவர் படைப்புகளில் நல்ல அங்கீகாரம் கிடைத்த முதல் படைப்பு (எனக்குத் தெரிந்தளவில்) என்பது அடுத்த காரணம். எனக்கு மட்டும் இன்னொரு விசேட காரணம் இருந்தது.

படத்தின் இசையமைப்பாளர் ராஜ் தில்லையம்பலத்தின் குடும்பத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். உயர்தரக் கணிதத்தில் பெரிய பெறுபேறுகள் இல்லை என்றாலும்கூட ஆகக்குறைந்தது சித்தியடைவதற்காவது தோள்கொடுத்தவர் ராஜ் அவர்களின் அப்பா தில்லையம்பலம் ஆசிரியர். அவர்களின் குடும்பமும் எங்களின் குடும்பமும் பரஸ்பர அன்பைப் பரிமாறி வந்திருக்கிறது. ராஜ் சொல்வழி கேட்காமல் கோஷ்டிகளில் பாடித்திரிகிறார் என்று ஊரில் ஒரு குற்றச்சாட்டு கூட இருந்தது. ஆனால், ராஜ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படத்துக்கு இசையமைக்கும் அளவுக்குத் திறமைசாலி என்பது இன்ப அதிர்ச்சி. அவரது திறமைக்குக் குழப்படி என்பதாகப் பெயரிட்ட எங்கள் சமூகத்தின் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி.

ஆக, 1999 பார்க்க எனக்குக் கூடுதலாக ஒரு காரணமும் இருந்தது. இனிப் படம் பற்றிப் பார்ப்போமா?

கதைச் சுருக்கம்
1999 கனடாவில் வசிக்கும் மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பற்றிய கதை. குமார் (திலிபன் சோமசேகரம்) ரொரன்ரோவின் ஈஸ்ட் சைட்டில் ஒரு குழுமத் தலைவன். பெற்றோரை இந்திய ராணுவத்திடம் கண்முன்னே பலி கொடுத்தவன். தம்பியையும் இழுத்துக்கொண்டு 18 வயதில் கனடா வந்தவன். அவனது தம்பி ஜீவனை (ஜெரோன் தனபாலசிங்கம்) அடித்த வெஸ்ட் சைட் குழுமத் தலைவன் 'மரநாய்' என்பவனைப் பகைத்துத் தானும் ஒரு குழுமத் தலைவனாக மாறியவன். குமாருக்கும், மரநாய்க்கும் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்திருந்த 1999ம் வருடத்தின் பிற்பகுதியில் இந்த வன்முறைகளைவிட்டு ஒரு 'கஷ்டப்பட்ட பிள்ளை'யைத் திருமணம் செய்து குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழும் வாழ்க்கைக்கு ஏங்குபவன்.

அன்பு (சுதன் மகாலிங்கம்) தகப்பனுடன் வசித்து வருபவன். தகப்பன் சுந்தரத்துக்கு (அம்பலவாணர் கேதீஸ்வரன்) இரண்டு வேலைகள். ஒன்று முழுநேர உழைப்பு. மற்றது அன்புவுடன் சண்டை போடுவது. அன்புவும் சரியாகப் படிக்காமல் சுற்றிக்கொண்டிருப்பவன். அவன் குமாருடைய குழுவில் சேர்ந்து 5 வருடங்களாகியும், தகப்பனுக்கு இப்போதுதான் அரசல் புரசலாகத் தெரியவருகிறது. அன்பு அம்மாவை ஈழப் பிரச்சினைகளில் பறிகொடுத்தவன். குமார் அண்ணாவுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவன். அன்பு இந்தக் குழுமங்களைவிட்டு விலகி நல்ல முறையில் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பது அவனது தகப்பனின் ஆசை.

அகிலன் (காண்டி கனா) ஒரு தீவிரமான மாணவன். வோட்டர்லூவில் படிக்கும் இவன் வார இறுதிகளில் தாத்தாவை (கே.எஸ்.பாலச்சந்திரன்) ஸ்கார்பரோ வந்து சந்திப்பதுண்டு. அதே வார இறுதிகளில் வன்னியில் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் பராமரிக்க வீடுவீடாகப் போய் நிதி திரட்டுவது இவன் வேலை. 2001ம் ஆண்டுக்கு முன் 200 பிள்ளைகளைத் தத்தெடுப்பது இவனது இலக்கு. இப்போது இவன் பொறுப்பில் 30 பிள்ளைகள். இவனும் பெற்றோரைப் போரிடம் பறிகொடுத்தவன்.

அன்புவும் அகிலனும் பாடசாலைக்காலத் தோழர்கள். இப்போது கொஞ்சம் விலகியிருக்கிறார்கள். இருவரும் பழகுவது தாமரையிலைத் தண்ணீராக. இவர்கள் இருவரும் ஒருதலையாக பாடசாலைக்கால ஏஞ்சல் கீதாவை (லக்ஷ்சி) காதலிக்கிறார்கள். அவளது பிறந்தநாளன்று காதலைச் சொல்ல இருவருமே திட்டமிட்டிருக்கிறார்கள். இருவருக்கும் மற்றவரும் கீதாவைக் காதலிப்பது தெரிந்திருக்கிறது. கீதா யாரை விரும்பினாலும் மற்றவர் ஒதுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

குமாருக்கு அவன் நினைத்த வாழ்வு கிடைத்ததா?
அன்பு திருந்தி தந்தையின் விருப்பப்படி வாழ்ந்தானா?
அகிலனது இலட்சியங்கள் நிறைவேறியதா?
அன்புவும் அகிலனும் கீதாவிடம் காதல் சொன்னார்களா? கீதா யாரை விரும்பினாள்?
இது போன்ற கேள்விகளுக்கு திரையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர்கள்
கூடுதலாக எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஸ்ரார் அன்புவாக வரும் சுதன் மகாலிங்கம்தான். கொஞ்சம் குழப்படிகார, சாகசம் செய்ய விரும்புகிற, அன்பு நிறைந்த ஒரு துள்ளலான இளைஞனை கண்முன் காட்டியிருக்கிறார். அதுவும் அந்தக் குழும இளைஞர்களுக்கே உரித்தான நடை ஒன்று நடக்கிறார், கலக்கல். ஏற்கனவே ஒரு சில படங்களில் பார்த்த திலீபன் சோமசேகரத்தின் நடிப்பும் பரவாயில்லை. மூத்தவர்கள் அம்பலபாணர் கேதீஸ்வரன், கே.எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் தங்கள் பங்கைச் செய்திருக்கிறார்கள். அகிலனாக காண்டி கனாவின் நடிப்பு நிறைவில்லை. பல காட்சிகளில் உற்சாகமாக நடித்திருக்கலாம், தவறவிட்டுவிட்டார். லக்ஷ்சிக்கு அன்பு மற்றும் அகிலனுக்கான கனவுப் பாடல்கள் இரண்டில் வண்ண வண்ண உடைகளோடும் மயக்கும் கண்களோடும் ஓடுவதையும் அங்கும் இங்கும் நடப்பதையும் தவிர வேறெந்த வேலையும் இல்லை.

படக்குழுவினர்
லெனின். எம். சிவம் நல்லதொரு கதையை, பல பிரபல இயக்குனர்கள் பாவித்த பல்வேறு கோணங்களில் கதை சொல்லும் உத்தியைப் பாவித்து, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார். மூன்று கோணங்களை இணைப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சபேசன் ஜெயராஜசிங்கத்தின் ஒளிப்பதிவில் சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும் (உ-ம்: குளோசப் காட்சிகளில் நடிகர்களின் முகங்களில் ஒரு பகுதி அடிக்கடி திரைக்கு வெளியே போகிறது) அவருக்குக் கொடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை வைத்துத் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ராஜ் தில்லையம்பலத்தின் பாடல்களும், பின்னணி இசையும் திருப்பம்தர வல்லவை இல்லை என்றாலும் மிக நன்றாக இருந்தது. கார்த்திக் பாடும் 'ஓ மை ஏஞ்சல்' பாடலும், எஸ்.பி.பி.யின் ‘மொழியின்றி' பாடலும் கேட்க இனிமையாக இருந்தது. ரொரொன்ரோவின் அழகிய கடல், நதிக் கரைகளிலும், பூங்காக்களிலும் படம்பிடித்ததும் பரவாயில்லை.

நிறைகள்
நல்ல கதை. நல்லதொரு செய்தியையும் சொல்ல விளைந்திருக்கிறார் லெனின். எம். சிவம். எம்மவர் நிஜவாழ்க்கையில் கண்ட சில சம்பவங்களை ஞாபகப்படுத்திச் செல்கிறார்கள். திரைக்கதை உத்தி நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த ‘மரநாய்' என்கிற எதிர்க் குழுமத் தலைவனைக் காட்டாமலே அவன் சம்பந்தமான ஒரு பயத்தை வரவைத்திருப்பது சிறப்பு. வசனங்களில் சரிவிகிதத்தில் இயல்பான நகைச்சுவையும் (என்ன எம்மவர்கள் சிரிக்கிறார்களில்லை. விவேக், வடிவேலுவைப் பார்த்து இயல்பான நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டார்களோ? கமலின் மும்பை எக்ஸ்பிரசிலும் தியேட்டரில் சிரிப்புக் குறைவாகவே இருந்தது) நுணுக்கமான சமூக உணர்வையும் காட்டியிருக்கிறார் லெனின். மேலே சொன்னது போலவே சுதனின் நடிப்புக்கு ஒரு ஸ்பெசல் சபாஷ்.

குறைகள்
மூன்று முக்கிய பாத்திரங்களில் ஒரு பாத்திரம் கடைசியில் இறந்து போவதாகக் காண்பித்திருக்கிறார்கள். அதற்கான காரணம் திரைக்கதையில் பெரிய பொத்தல். ‘என்னைக் கொல்ல வந்தவன் மாறி அவனைக் கொண்டுட்டான்' என்று இன்னொரு பாத்திரம் பேசும் வசனம் ‘அடையாளப் பிழையால்' நடந்த கொலை என்பதாகக் காட்டுகிறது. அடையாளப் பிழையால் அந்தக் கொலை நடக்க வாய்ப்பில்லை. ‘என்னைக் கொல்ல வந்தவன் நானில்லாத ஆத்திரத்தில அதில நிண்ட அவனைக் கொலை செய்துபோட்டுப் போட்டான்' என்று வசனத்தை மாற்றியிருந்தால் கொஞ்சம் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

அதே போல் கதாநாயகிக்குப் பாடல்கள் மட்டுமே. ஒரு வசனம், ஏன் சிரிக்கின்ற மாதிரி ஒரு காட்சி கூட இல்லை. இந்தியப் படங்களிலாவது கதாநாயகிக்கு சும்மாவாவது இரண்டு வசனம் வைப்பார்கள், இங்கே அதுவும் இல்லை. கதையைச் செதுக்கிச் செதுக்கி எடுக்கும் அளவுக்கு எம்மிடம் வளங்கள் இல்லாமல் போனதுகூட இந்தக் குறைக்குக் காரணமாக இருக்கலாம். தலை முடியை வளர்த்து, கிட்டத்தட்ட முகத்தை மறைத்தபடி இருக்கும் அந்தப் பாத்திரம் ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா' பாத்திரம் ஒன்றையும், மிஷ்கினின் ‘அஞ்சாதே' மொட்டையையும் பாதிபாதியாக ஞாபகப்படுத்துகிறார்கள். அதையும் தவிர்த்திருக்கலாம்.

என் கருத்து
கிடைத்த குறைந்த வளங்களை வைத்துக்கொண்டு எடுத்த இந்தப் படத்துக்கே சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. அப்படியானால் எம்மவர்கள் இன்னும் கொஞ்சம் ஆதரவு வழங்கினால லெனின். எம். சிவம் போன்ற இளம் படைப்பாளிகளிடம் இருந்து இன்னும் நல்ல படைப்புகள், உலகத்தரத்தில் கிடைக்கும்.

தசாவதாரத்துக்கு செலவளித்த 10 ரூபா மற்றும் 3 மணித்தியாலங்களைவிட இது எவ்வளவோ மேல்.

பின்னிணைப்புகள்
ஓ மை ஏஞ்சல் பாடல்... (ரசித்த சில இடங்களில் படமாக்கியிருக்கிறார்கள். Locations அழகாயிருக்கின்றன. பாடல் லெனின் அவருடைய youtube ல் இணைத்தது. இணைப்புத் தந்தது facebookல் காண்டி)


Friday 20 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 15-நவம்பர் 21 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தவீடு+பக்கத்துவீடு
அவரைத் துரோகி என்று திட்டித் தீர்த்து எல்லோரும் ஓய்ந்து போன நேரம் கலைஞர் திரும்பவும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார். சென்ற 17ம் திகதி ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி இவர் விட்ட அறிக்கை ஒன்றில் 'விடுதலைப் புலிகள் எடுத்த அவசரமான முடிவுகள்தான் இன்றைய நிலைக்குக் காரணம்' என்று கருத்தை உதிர்த்துச் சென்றிருக்கிறது இந்தக் கிழட்டுசிங்கம். விடுதலைப் புலிகளின் அரசியல் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அதற்காகக் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, ஏற்கனவே காயம்பட்ட நெஞ்சங்களில் கொதிக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சிக் கிண்டிக் கிளறியிருக்கிறார் கருணாநிதி. ஆகக் குறைந்தது மே 19ம் திகதிக்கு முன்னராவது இந்த அறிக்கையை விட்டுத் தொலைத்திருந்தாலாவது அறிக்கையில் கொஞ்சமாவது யோக்கியத்தனம் இருந்திருக்கும். இப்போது வந்திருக்கும் அறிக்கை சமீபகாலமாக அரசியலில் பரபரப்பு இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டும் முயற்சியாகவே பார்க்கப்படக்கூடியது. வை.கோ, நெடுமாறன் வழமை போல எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். பச்சோந்தித் தலைவி, மன்னிக்கவும், புரட்சித் தலைவியும் கண்டன அறிக்கை விடுகிறார். ஆக மொத்தம் அவர்கள் உருட்டி விளையாடும் பந்துகளாகிவிட்டது ஈழத் தமிழர் பிரச்சினைகள்.

ஜனநாயகத்துக்காகப் போராடப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் சரத் பொன்சேகா. (கொஞ்சம் அப்படியே இருங்கள், சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்). இவ்வளவுகாலமாக தானும் சேர்ந்து கொன்று புதைத்த அந்த ‘ஜனநாயகத்தை' எப்படி உயிர்ப்பிக்கப் போகிறாரோ தெரியவில்லை. வரவர நகைச்சுவைக்காகப் படங்களைப் பார்ப்பதைவிட அரசியல் செய்திகளை வாசித்துவிடலாம் போலிருக்கிறது.

அரசியல்-புகுந்தகம்

ஆஃப்கானிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை சிறைகளில் வைத்துக் கனேடிய அதிகாரிகள் துன்புறுத்தினார்கள் என்று முன்னாள் ஆஃப்கானிஸ்தானுக்கான கனேடியத் தூதரக அதிகாரி ரிச்சர்ட் கொல்வின் (Richard Colvin)குற்றம்சாட்டியிருக்கிறார். பின்வரும் அதிகாரிகளுக்கும் இந்தச் சித்திரவதைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கொல்வின் கனேடியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  1. டேவிட் மல்ரொனி (David Mulroney)- முன்னைநாள் ஆஃப்கான் துருப்புக்களுக்கான மத்திய அமைச்சர், இப்போதைய சீனாவுக்கான கனேடியத் தூதர்
  2. ரிக் ஹில்லியெர் (Rick Hillier)- முன்னைநாள் கனேடியப் பாதுகாப்புப் படைகளுக்கான தலைமை அதிகாரி
  3. மார்கரெட் ப்ளட்வேர்த் (Margaret Bloodworth)- முன்னைநாள் பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகர்
  4. ஜில் சின்கிளேயர் (Jill Sinclair)- முன்னைநாள் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கான அமைச்சகத்தில் உதவிச் செயலர்
  5. கொலீன் ஸ்வோர்ட்ஸ் (Colleen Swords)- வெளிநாட்டு விவகாரங்களின் சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் பிரிவின் முன்னாள் அமைச்சர். பழங்குடி இந்தியர்கள் விவகாரங்களுக்கான தற்போதைய உதவி அமைச்சர்
  6. டேவிட் ஸ்ப்ரோல் (David Sproule)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2006, 2007ல் ஒரு பகுதி)
  7. ஆரிஃப் லாலானி (Arif Lalani)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2007 ஒரு பகுதி, 2008)
  8. மைக்கேல் கோதியேர் (Michel Gauthier)- ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரல். கனேடியப் படைகளின் எல்லா வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர்.
மேற்சொன்ன 8 பேரில் மூவரைத்தவிர மற்றவர்கள் இன்னும் எந்தவிதமான பதில்களையும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றன. அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களையும் மக்களையும் அமைதிக்காக்குமாறு கேட்டிருக்கிறார்கள் அரசதரப்பு. கொஞ்சம் நாகரீகமான நாடாக நான் பார்க்கிற கனடாவும் உண்மையில் இப்படியானவர்களைக் கொண்டிருக்கிறது என்றால், 2012ல் உலகம் அழிந்து போய்விட்டால் நன்றாக இருக்கும்.

அரசியல்-உலகம்
பெல்ஜியம் ப்ருசெல்சில் நடக்கும் உலகின் பலம் மிக்க நாடுகளின் (தாதாக்களின்) அவசர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அணு ஆயுத உற்பத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட வரைபை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஈரான் கடுமையான தண்டனைகளைச் சந்திக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளோடு கூடிய இந்த உரையில் Sanctions என்கிற பதம் பயன்பட்டிருப்பது கொஞ்சம் நிம்மதியளிக்கிறது. வட கொரியா முதலான இன்னபிற அணு ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகளையும் சாடிய அவர், அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தி பற்றி ஒன்றும் சொல்லவில்லை (அட, அவர் எப்படிச் சொல்வார். அவைதானே தாதாக்கள், அவை என்னவும் செய்யலாம்). ஒபாமா, புஷ் போல் முட்டாள்தனமாகச் செயற்பட்டு நோபல் குழுவின் முகத்தில் கரிபூசமாட்டார் என்று நினைக்கிறேன்.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
கனடாவின் தொலைத் தொடர்புத் துறையில் ரோஜேர்ஸ் (Rogers), ரெலஸ் (Telus) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்ந்து பெல் கனடாவும் அவர்களுடைய System Access Fee ஐ இல்லாமல் செய்திருக்கிறார்கள். மாதாந்தம் $6.95 ஆக இருந்த இந்தக் கட்டணம் இனிமேல் புதிதான திட்டங்களில் இணைபவர்களுக்கு இனிமேல் அறவிடப்படமாட்டா. ரோஜேர்ஸ் மற்றும் ரெலஸ் ஏலவே இதை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழைய வாடிக்கையாளர்கள் ஏதாவது புதிய திட்டங்களுக்கு மாறிக்கொண்டால் இந்தக் கட்டணத்தை இனிமேல் தவிர்க்கலாம்.

அதற்காக வாடிக்கையாளர்கள் பெரிதாகச் சந்தோசப்பட முடியாது. முன்பு இருந்த திட்டங்களிற்கான மாதாந்தக் கட்டணங்கள் சராசரியாக ஐந்து டொலர்களால் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மூன்று பெரிய போட்டியாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரித்தான் சிந்தித்திருக்கிறார்கள். எப்படியோ, மாதத்துக்கு 1.95 டொலர்களாவது சேமிக்கலாம் வரும்காலங்களில்.

விளையாட்டு

இலங்கை-இந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்திருக்கிறது. முதலாவது நாள் முதல் ஒரு மணித்தியாலம் தவிர மிகுதி நேரம் முழுவதும் துடுப்பாட்டக்காரர்கள் கையே ஓங்கியிருந்தது. ட்ராவிட்-177, தோனி-110 உதவியுடன் இந்தியா 426 ஓட்டங்கள் பெற, டில்சான்-112, மகேல-275, ப்ரசன்ன-154* உதவியுடன் இலங்கை 760-7 என்ற இமாலய இலக்கை அடைந்தது. 334 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் 412-4 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. கம்பீர்-114, சச்சின்-100* சிறப்பாக ஆடினார்கள். மகேல 9000 ஓட்டங்கள் கடந்த முதல் இலங்கை வீரர் என்ற புகழையும், ட்ராவிட் 11,000 கடந்த 5வது வீரர் என்ற பெருமையையும், சச்சின் 30,000 சர்வதேச ஓட்டங்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்கள். இப்படி ஒரு ஆடுகளத்தில் கிரிக்கெட் ஆடுவதைவிட இந்திய வீரர்கள் விளம்பரப்படங்களில் நடிக்கலாம். இலங்கை வீரர்கள் எல்லே விளையாடலாம். (இதைவிடக் கேவலமான ஆடுகளங்களும் இருக்கின்றன. அது பற்றித் தனிப்பதிவே போடலாம்)

சினிமா-பொழுதுபோக்கு
ராதிகா வித்தியாசமாக ஒன்றைச் செய்திருக்கிறார். சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழாவில் இவரை ‘அரசி' தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த நடிகையாகத் தெரிவு செய்திருந்தார்கள். இந்தத் தெரிவுகளில் நடிகர், நடிகை, இயக்குனர் போன்ற பிரிவுகளில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும், விருதுகளுக்கான தேர்வு முறையில் திருப்தி இல்லை என்றும் கூறி அவருக்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். தனக்குத் தகுதி திறமை அடிப்படையில் மேற்படி விருது வழங்கப்பட்டிருந்தாலும் (???!!!!), இனிமேலும் திறமைசாலிகள் ஓரம்கட்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த விருதைத் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி செய்த அளவுக்கு சரியான மூக்குடைப்பு இல்லையென்றாலும், இன்னும் கொஞ்சம் பெரிய கலைஞர்கள் இப்படியான கேலிக்கூத்து விருதுகளைப் புறக்கணித்து விருதுகளுக்குரிய மரியாதையைப் பெற்றுத்தரவேண்டும். யாராவது இந்த ‘விஜய் விருதுகள்' கூத்தையும் தட்டிக்கேட்க வேண்டும். (அதுசரி பாரதிராசா பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பிவிட்டாரா. இல்லை அதுவும் நல்லதொரு சீனா? யாரப்பா இயக்குனர்??)

இது எப்படி இருக்கு........

மேலே சொன்ன கனேடியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான வழக்கொன்று விரைவில் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. அதாவது ரோஜேர்ஸ் (Rogers) தங்களுடைய மகுட வாசகமாக 'Canadas fastest and most reliable network' என்பதைத் தம்முடைய விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தது. சமீபத்தில் ரெலஸ் (Telus) நிறுவனம் புதிதாக 3-G Network க்கு உரிய Server ஐ மேம்படுத்தி சென்ற வாரம் புத்தம் புதிய Network ஒன்றை களத்தில் இறக்கியது. இதன் காரணமாகத் தாங்களும் ரோஜேர்ஸ் போலவே வேகமானதும், நம்பகமானதுமான Network வைத்திருப்பதால், 'Canadas fastest and most reliable network' என்ற மகுட வாசகத்தை ரோஜேர்ஸ் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களைப் பிழையாக வழிப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் இனிமேல் அந்த வாசகத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் ரோஜேர்ஸை ரெலஸ் கேட்க, ரோஜேர்ஸ் மறுத்துவிட்டது. இதனால் வான்கூவர் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ‘Criminal Competition Law' என்கிற சட்டக் கோர்வையின் கீழ் ரோஜேர்ஸ் மீது நட்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் ரெலஸ். அட இதில் என்ன என்கிறீர்களா? இந்தியாவில் நடிகர், நடிகைகளுக்குக் கோடிகள் கொடுத்து எடுத்த சில விளம்பரங்களை நம்மவர்கள் சர்வசாதாரணமாக அனுமதி எல்லாம் இல்லாமல் பாவிக்கிறார்கள். நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று அறை கூவுகிறார்கள். இப்படியான ஒரு சின்ன வாசகத்தை வைத்தே ஆப்படிக்கலாம் என்பது அவர்களுக்கெல்லாம் தெரியுமா??

Thursday 19 November 2009

விஜய்

விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள். அப்படி ஏற்றுக்கொண்ட வேலை அது. நேர்முகத்திலேயே செய்பணிகளுக்கான உப தலைவர் லொய்ட் சொல்லியிருந்தார், விஜய் என்கிற இந்தியருடன்தான் நீ பணியாற்றவேண்டும் என்று. எங்கள் பணிப்பகுதியின் முகாமையாளரான டெரிக் என்பவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். முதல்நாள் நேரடியாக டெரிக்கின் அலுவலகத்துக்கே சென்றேன். அவர் என்னை விஜயிடம் ஒப்படைத்து, ‘இன்று முதல் இவன் இங்கே உன்னுடன் வேலைசெய்யப்போகிறான். இவனுக்கு அன்றாடக் கருமங்களைப் பற்றிச் சொல்லிக்கொடு என்றுவிட்டு டெரிக் விடைபெற, விஜயுடன் ஐக்கியமானேன்.

ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். வெளிநாட்டுக்காக நான் பயன்படுத்தும் ஆங்கிலப் பெயரைச் சொல்ல, ‘அதுதான் உன்னுடைய உண்மையான பெயரா?' என்றார். நான் இல்லை என்று என் பெயர் சொல்ல ‘ஓ... அப்போது நீ இந்துவா?' என்றார். ‘இந்துவாகத்தான் பிறந்தேன்' என்றேன் வேகமாக. 60 வயதான அவருக்கு அது சரியாகப் புரிந்து போகாமல் இருக்க அவரது வயது மட்டும் காரணமில்லை. தன்னுடைய பெயர் விஜய் குமார் ஷர்மா என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரை திரு.ஷர்மா அல்லது திருவாளர். விஜய் என்று அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். காலைச் சிற்றுண்டிக்கான இடைவேளையில் இருப்பதற்கு இடம் தேடியபோது விஜய் என்னை அழைத்துத் தன்னுடைய மேசையில் இடம் தந்தார். அங்கே வேலை செய்யும் சீனப் பெண்ணொருத்தி இருவரையும் வித்தியாசமாகப் பார்த்துச் சிரித்தாற்போல் தோன்றியது (அவளது கண்கள் எப்போதுமே சிரித்துக்கொண்டேயிருந்தன). கடந்து போன ஒரு கரீபியன் பெண் ‘அட, அதெப்படி விஜய் இவனுக்கு மட்டும் உன் மேசையில் இடம் கொடுத்திருக்கிறாய்?' என்றாள். விஜய் சிம்பிளாகச் சொன்னார், 'அவன் ஒரு இந்து ஆண். அதனால் அவன் எனக்குச் சரிசமமாக இருந்து சாப்பிடலாம்'. அதிர்ந்தேன்.

விஜய் என்னை ஒரு சக மனிதனாகப் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. மேலும் தன்னைப் பற்றி அடுக்கினார். 'நான் ஒரு பிராமணன் தெரியுமா?. என்னுடைய குடும்பப் பெயரே ஷர்மா. நாங்களெல்லாம் மற்றவர்கள் கண்முன்னே சாப்பிடக்கூடாது. நீ ஒரு இந்து ஆணாக இருப்பதால் உனக்கு இந்த மேசையில் இருப்பதற்கு அனுமதி இருக்கிறது' என்றார். எனக்கு மதிய உணவருந்த ஒரு புதிய இடம் தேடவேண்டும் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. காரணம், நல்ல மட்டன் கறிவைத்து சாண்ட்விச் செய்துகொண்டு போயிருந்தேன் அன்றைய மதிய உணவாக. பின்னர் அவரே சொன்னார், ‘இலங்கை இந்துக்கள் மாமிசம் சாப்பிடிவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் சாப்பிடுவாயா?. சாப்பிடுவாய் என்றால் பரவாயில்லை. நீ ஒரு இந்து ஆண். ஆகவே உனக்கு இந்த மேசையில் அனுமதி இருக்கிறது'. அப்பாடா...........

விஜய் வேலை செய்யும்போதான சின்னச்சின்ன உரையாடல்களிலும், திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார், ‘நான் ஒரு பிராமணன், அதுவும் ஐயர்' என்று. இலங்கை இந்துக்களும் இந்திய இந்துக்களும் வழிபடும் தெய்வங்கள் பற்றி வகுப்பெடுத்தார். கார்த்திகேயன் (கார்த்திக் என்பது விஜயின் பாஷை) என்கிற முருகனின் பெயருக்கும், எனக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்பா சொல்வார் என்று சொல்ல, ‘உங்கள் குடும்பம் நல்ல இந்துக் குடும்பம்' என்று சொல்லிச் சிரித்தார்.

அதன் பின் பல விஷயங்கள் உரையாடினோம். விஜய்க்கு கிரிக்கெட் பிடித்திருந்தது. சினிமா பிடித்திருந்தது. கனடா பிடித்திருந்தது. நீல்கிரீஸ் இட்டலி பிடித்திருந்தது. ஏ-வன் லட்டு பிடித்திருந்தது. ஆப்பிள் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் (அந்தச் சீனப் பெண்ணை இப்படித்தான் கூப்பிடுவார் சிங்கன்) பிடித்திருந்தது. எல்லாவற்றையும் விட இந்துமதம் பிடித்திருந்தது. சிவ சேனாவைப் பிடிக்கவில்லை. மோடியைப் பிடிக்கவில்லை. இவர்கள் எல்லோரையும் விட முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை தெரிந்திருந்தது. அரசியல் தலைவர்கள் பெயர் தெரிந்திருந்தது. பிரபாகரனின் கதை தெரிந்திருந்தது. சில தமிழ்ச் சொற்களும் தெரிந்திருந்தன. எல்லாவற்றையும் விட மற்ற மதங்களை மட்டம்தட்டிப் பேசத் தெரிந்திருந்தது.

மதம் பற்றியும், தன் குலம் பற்றியும் பெரிதாகப் பீற்றிப் பீற்றியே கடுப்புற வைப்பார் விஜய். நானும் இயன்றவரை இந்தத் தலைப்பிலிருந்து விலகி கிரிக்கெட் பற்றி, வேலை பற்றியெல்லாம் பேசிப்பார்ப்பேன். சுற்றிச் சுற்றி இங்கேதான் வருவார் விஜய். இப்படியான ஒரு நாளில் மதிய உணவு நேரத்தில் புதிதாகச் சேர்ந்த என்னுடன் பேசுவதற்காக லொயிட் எங்கள் பகுதிக்கு வந்தார். ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்து லொயிட், பேர்கர் அடைந்த வாயால் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு நானும் சொசேஜ் ரோல் அடைந்த வாயால் பதில் சொன்னேன்.

லொயிட் விடைபெற்றுத் திரும்புகையில் நானும் லொயிடும் கவனித்தோம். வியர்த்து விறுவிறுக்க, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விஜய் எழுந்து நின்றார். 'ஏதாவது பிரச்சினையா விஜய்?' என்றார் லொயிட். ‘இல்லை சேர். நீங்கள் என்னுடைய முதலாளி. உங்கள் முன் நான் நிற்பது தவறாகும். என்ன இருந்தாலும் எங்களுக்குச் சோறு போடும் முதலாளி நீங்கள்' என்று உளறினார். லொயிட் 'என்னப்பா இது?' என்கிற மாதிரி என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்ந்தார். கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க, ஆறடி உயரமான, தன் பிறப்புப் பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளைக் கொண்ட, அந்த மதிப்பீடுகளைப் பற்றிய கற்பிதங்களை எனக்குள் ஊட்ட முயன்ற அந்த ஆரியப் பிராமணருக்கு, சுய மரியாதை என்பதன் அர்த்தத்தை விரைவில் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

Wednesday 18 November 2009

பிடித்ததும் பிடிக்காததும்

இந்த சுவாரஷயமான விளையாட்டுக்கு என்னை அழைக்காமல் விட்ட அனைத்துத் துரோகிகளுக்கும் அனானி பகவான் தண்டனை வழங்கட்டும். லோஷன் அண்ணாவுக்கு இனிமேல் அனானி பகவான அருள் மட்டுமே வழங்குவார். லோஷன் அண்ணா செய்தது மாதிரியே மூலமான நிபந்தனைகளிலிருந்து விலகி எனக்குப் பிடித்த, பிடிக்காத ஆட்கள் பற்றிப் பதிவிட்டிருக்கிறேன்.

அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்: தமிழ் ஆட்களில் யாரும் இல்லை. சில தலைவர்கள் மட்டுமே அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள், பேச்சு, நிர்வாகத்திறண் இவற்றைத் தாண்டி, பார்த்தவுடனே ஒரு ஈர்ப்புத் தோன்றும். ஆங்கிலத்தில் Charismatic Appeal என்று சொல்வார்கள். சே-குவேரா, ஜோன்.எஃப்.கென்னடி, ஆபிரஹாம் லிங்கன், ராஜீவ் காந்தி, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரிடம் அந்த ஈர்ப்பை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான ஈர்ப்புடன் இப்போது கண்ணில் தெரிபவர், பாரக் ஒபாமா. மீண்டும் சொல்கிறேன், இந்த ஈர்ப்புக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை.

பிடிக்காதவர்: பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இருவரைச் சொல்வேன். முதலாமவர் மாவை சேனாதிராசா. வீ.ஆனந்தசங்கரிக்கும் இவருக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். ஆனந்தசங்கரி ஒரு விஷயத்தில் உடன்பட மறுத்து அதைப் பொதுவில் சொன்னார். அவர் துரோகி. மாவை அதே விஷயத்தில் சங்கரியின் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லாதபடியால், மக்கள் பிரதிநிதி. இரண்டாமவர் மக்கள் பிரதிநிதியாகப் பின்வாசல் வழியே நுழைந்த, எந்த ஆளுமைகளுமற்ற செல்வராசா கஜேந்திரன் என்கிற ஜந்து.

எழுத்தாளர்கள்
பிடித்தவர்: என்றைக்கும் இளைமையான சுஜாதாவை எப்போதுமே பிடிக்கும். உயிருடன் இருக்கும் பலரது எழுத்துக்களை வாசித்தாலும் இன்னும் எவரும் எனக்கு ஆதர்சமாகவில்லை என்பதே உண்மை.

பிடிக்காதவர்: தமிழ் எழுத்தாளர்களில் பிடிக்காதவர் என்று ஒருவரையும் கோடிட்டுக் காட்டமுடியாது. மேல் நாட்டில் இப்போது அடிக்கடி Best Sellers கொடுக்கும் டான் ப்ரவுணைப் பிடிப்பதில்லை. மதங்களுக்கெதிரான போராட்டத்தை இவரது நாவல்களைவிட வேறெதுவும் இவ்வளவு கொச்சையாகப் படம்பிடிப்பதில்லை.

சினிமா
பிடித்த நடிகன்: நாகேஷ் போய்விட்டார். இப்போது கமல் பிடிக்கும். புதிய தலைமுறை நடிகர்களில் பிரசன்னா. எல்லோரையும் விட ஏனோ எனக்கு லியோ டிகாப்ரியோவைப் பிடிக்கும்.

பிடிக்காத நடிகன்: திலகங்கள் இருவரையும் பிடிக்கவே பிடிக்காது. வம்பு செய்யும் சிம்பு என்கிற துஷ்ட ஜந்துவை இந்தப் பட்டியலில் சேர்க்கத் தயக்கமாய் இருந்தாலும் சேர்த்தே ஆக வேண்டும்.

பிடித்த நடிகை: ஸ்ரீதேவி (கண்டிப்பாக நடிப்புக்காக மட்டும் அல்ல என்பது உங்களுக்கே தெரியும்)

பிடிக்காத நடிகை: பெரிய லிஸ்ட் இருக்கிறது. முன்னணியில் ஆச்சி மனோரமா. இவர் எந்த பாஷயில் படம் நடித்தாலும் மகனிடம் உணர்ச்சி பொங்கப் பேசும்போது ஒரே நடிப்பு மட்டுமல்ல, ‘யெய்யா யெய்யா' என்று ஒரு வசனமும் வைத்திருக்கிறார். இவர் கிராமத்து அம்மாவாகவோ, பாட்டியாகவோ நடித்து இந்த ‘யெய்யா' போடாத படம் ஏதுமிருந்தால் சொல்லவும். இவருக்கு அடுத்ததாய் இருப்பது இவரைவிட மோசமாக எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கும் கலைராணி. அதைவிட உச்சக்கடுப்பு ‘மச்சாள்' மீது.

பிடித்த இயக்குனர்: தமிழில் மிகவும் ஆதர்சம் என்று சொல்கிற அளவுக்கு யாரையும் பிடிக்கவில்லை இதுவரை. என்னதான் பெரியளவு Classic Movies தராவிட்டாலும் மார்ட்டின் ஸ்கார்ஸசி படங்கள் என்னைக் கவர்ந்திருக்கிறன.

பிடிக்காத இயக்குனர்: ஒவ்வொரு இயக்குனரை ஒவ்வொரு விதத்தில் பிடித்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்கவே பிடிக்காமல் போய்விட்ட சிலர் இருக்கிறார்கள். விக்ரமன், சுரேஷ் கிருஷ்ணா, பேரரசு போன்றோர் இருக்கிறார்கள் அந்தப் பட்டியலில். சமீபத்திய புதுவரவு கௌதம் லூசுதேவ மன்னிக்கவும் கௌதம் வாசுதேவ மேனன். ‘ஒரு பெண் கனவில்கூடத் தன்னை ஒரு ஆடவன் கற்பழிப்பதாக நினைக்கிறாள்' என்று கதாநாயகிக்கு அறிமுகக்காட்சி வைத்த மாமேதை so called முருஹன் என்கிறவனையும் பிடிக்காது.

இசையமைப்பாளர்
பிடித்தவர்: இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றென்றும் 'இளைய'ராஜா.

பிடிக்காதவர்: பெரிய பட்டியல் காத்திருந்தாலும், இப்போதைக்குக் கடுப்புகளைக் கிளப்புபவர், எஸ்.ஏ.ராஜ்குமார்

பாடலாசிரியர்/கவிஞர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டைப் பாட்டுக்கோட்டையின் பின் வந்த அரசுகளையும், கவியரசுகளையும் ரசிப்பதுண்டு, ஆனால் பிடித்துப்போகவில்லை. கல்யாணசுந்தரத்திடம் இருந்த சமூக நோக்கு எனக்குப் பிடித்தது. ஒரு படைப்பாளிக்கேயுரிய தார்மீகக் கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதால் இப்போதுள்ளவர்களில் அறிவுமதியைப் பிடிக்கும். உதாரணமாக ஞானிக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் சொல்லியிருப்பார்,
///கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!
எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.///
இந்தக் கோபம்தான் அறிவுமதி பக்கம் என்னை ஈர்த்தது. அதன்பின்தான் ஓரளவுக்கு அவரைப் பற்றிய தேடல்கள் என்னிடம் முளைத்தன.

பிடிக்காதவர்: எத்தனை பேர்??????????????????????? சமீபத்திய எரிச்சல் ரேனிகுண்டா படத்து ‘கந்தர்வனின் கோட்டை' பாடல் எழுதிய பிறைசூடன் மீது.

பாடகர்கள்:
பிடித்த பாடகன்: என்னதான் ஜேசுதாஸ் என்கிற ராட்சசன் இருந்தாலும் எஸ். பி. பாலசுப்ரமணியம் அசைக்கமுடியாத ஒரு சுவர்தான். (உருவத்திலும் சரி, சாதனையிலும் சரி).

பிடிக்காத பாடகன்: க்ரிஷ். இவரைப் பிடிக்காமல் போனது இவரது பாடல்களால் மட்டுமல்ல. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் செய்த அதிகப் பிரசங்கித்தனம் கடுப்பாக்கியது. வட மொழிப்பாடகர்கள் எவரையும் பிடிக்காது. சமீபத்திய வரவு சுரேஷ் வடேகார். யுகபாரதி ஒருவாறாக உருகி உருகி எழுதிய வரிகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். (திட்டில் பாதி பாடவைத்த வித்யாசாகருக்கு)

பிடித்த பாடகி: ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே', ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா'.......... மறக்க முடியுமா ஜானகியை. பி. சுசீலாவும், சித்ராவும், சாதனாவும் குறைந்தவர்களில்லை என்றாலும் ஒரு versatality க்கு ஜானக்கிக்கு அருகில் யாருமில்லை.

பிடிக்காத பாடகி: சுசித்ரா முதலாகப் பலர். சுவர்ணலதாவைக்கூடப் பிடிக்காது. மூக்கால் அழுவார். அவர் பாடியதில் ஒரேயொரு விதிவிலக்காக ‘மாலையில் யாரோ மனதோடு பேச..' பாடல் பிடிக்கும்.

விளையாட்டு வீரர்கள்
பிடித்தவர்: என்றைக்கும், என்றென்றைக்கும், அவர் 60-70 'டக்' தொடர்ந்து அடித்தாலும்............ சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்தான். ஆனால் அடிக்கடி அவரைத் திட்டவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அது ஏன் என்பது ரகசியம்.

பிடிக்காதவர்: ஸ்ரீசாந்த். இவரை எப்போதாவது நேரில் கண்டால் அந்த நாளில் நான் கொலைகாரன் ஆகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஜிடானைத் தூண்டிவிட்டுக் கேவலம் செய்த மத்தறாஸி, Play Acting ல் பெயர் போன கிறிஸ்டியானோ ரொனால்டோ, டிடியேர் ட்ரொக்பா, கால்பந்தைவிட மொடலிங்கைப் பெரிதாக எண்ணிய டேவிட் பெக்காம் போன்றவர்களைப் பிடிப்பதில்லை.

பதிவர்கள்
பிடித்தவர்: ஒருமாதமாக இவர் பதிவு போடவில்லை. இவரது வலைப்பதிவு சமீபத்தில் எனக்கு அறிமுகமாகி என்னை நிரந்தர வாசகனாக்கியது. சென்று பாருங்கள் மா.சிவகுமாரின் 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' வலைப்பூ. அதிகபடசம் தொழில்நுட்பப் பதிவுகளே அவரது வலைப்பூவில் இருக்கும். திறவூற்று மென்பொருட்கள் பற்றி தமிழில் இவர் எழுதிய இந்தப் பதிவு போல் விரிவானதும், எளிமையானதுமான கட்டுரையை வாசித்த ஞாபகம் எனக்கில்லை. (அதற்காக மற்ற யாரையும் பிடிக்காது என்கிற முடிவுக்கு வரவேண்டாம்)

பிடிக்காதவர்:
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலகக் குரல் என்பதாலேயே இவரை வாசிக்க ஆரம்பித்தேன். சில இடங்களில் அருமையான கருத்துக்கள் சொல்வார். பார்ப்பன முகமூடிகளைக் கிழிப்பார். ஆதிக்க சாதி மனோபாவங்களைத் துவைப்பார். ஒரு கட்டத்தில் இவரிடமிருந்து ஒரு நச்சுத்தன்மை வெளிவர ஆரம்பித்தது. பார்ப்பனர்களையும், ஆதிக்க சாதிகளையும் எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் தானே ஒரு நவீன பார்ப்பானாக மாறிப்போய்விட்டார். உதாரணத்துக்கு, பின்னூட்டமிட்ட பெண் பதிவரை ‘நீங்களெல்லாம் ஏன் இதற்குள் மூக்கை நுழைக்கிறீர்கள். போய்க் கவிதை எழுதுவதுதானே' என்கிற ரீதியில் புண்படுத்தினார். பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற பேரில் அந்த ஜாதியில் பிறந்த யாரையும் இழிவு படுத்த எந்த எல்லைக்கும் போவார். (உ-ம்: மணிரத்னம் ஹோட்டல் ருவாண்டா கதையைச் சுட்டு பம்பாய் என்ற பெயரில் எடுத்தார் என்று எழுதுவார். ஹோட்டல் ருவாண்டா வந்தது 2004ல், பம்பாய் வந்தது 1995 ல்). உங்களுக்கே தெரிந்திருக்கும் அவர் யாரென்று. கண்டுபிடியுங்கள் பார்ப்போமே!! சின்னதாக ஒரு க்ளூ தரவா? அவரது பெயர் சுகுணா என்று ஆரம்பித்து திவாகர் என்று முடியும்.

Saturday 14 November 2009

மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் (??!!)

பல இடங்களில் பார்த்துச் சலித்துப்போன ஒரு விஷயமாக இது இருக்கிறது. ஒரு இணையத்தளக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள், நவம்பர் மாதம் ஈழத் தமிழர்களுக்குக் கொண்டாட்டமான வாரமாம். ஏனென்றால் இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் வருகிறதாம். வானொலிகளும் இதே தொனியில்தான் அலறிக்கொண்டிருக்கின்றன. இது ஏதோ ஒரு கோவில் திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி வகையறாக் கொண்டாட்டம் என்பதாக ஒரு கட்டமைப்பு எம்மத்தியில் பலகாலமாக இருந்துவருவது வருந்தத்தக்கது. இணையத்தில்கூட இரண்டொரு குரல்கள் மட்டுமே இந்தக் ‘கொண்டாட்டம்' என்ற சொற்பிரயோகம் பற்றிய எதிர்ப்புக்களை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே மாவீரர் மயானம் ஒன்றுக்கு ஒரு மாவீரர் நினைவு நாளில் போய்வந்திருக்கும் யாரும், இதை ஒரு ‘கொண்டாட்டம்' என்று வாய்தவறிக்கூடச் சொல்லிவிடமாட்டார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் நானும் 2003 நவம்பர் 27 வரைக்கும் இந்த உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வை ஒரு கொண்டாட்டமாகத்தான் பார்த்து வந்திருக்கிறேன். அந்த நாட்களில் பல இடங்களில் பந்தல்கள் போட்டு இறந்தவர் படம் எல்லாம் வைத்து மாலை போட்டிருப்பார்கள். சாந்தனும், தேனிசைச் செல்லப்பாவும் ஒலிபெருக்கிகளில் முழங்கிக்கொண்டிருப்பர். நவம்பர் 27 அன்று தலைவரின் உரைக்கான எதிர்பார்ப்பு பயங்கரமாக சாதாரண மக்கள் மத்தியில் எகிறிக்கிடக்கும். 2003 நவம்பர் 27 வரைக்கும் அந்த உரையை அடுத்த நாள் உதயன் பத்திரிகையில் படிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இந்த நவம்பர் 27 ஐ அண்டி ஒலிக்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' என்ற பாடலை இசைக்ககவே நானும் ரசித்து வந்திருக்கிறேன்.

2003 மாவீரர் வாரத்தில் ஒரு நாள் நித்து வீட்டின் முன்னால் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சோடு பேச்சாக 'இந்த முறை மாவீரர் நாளுக்கு எள்ளங்குளம் சுடலைக்குப் போறதுதான்டா' என்று முடிவாயிற்று. போகும்போது 'எள்ளங்குளம் சுடலை'யாக இருந்தது வரும்போது ‘எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லமாக' மாறியிருந்தது.

அந்த நாளை வீடியோ பிடிக்கவெனக் குழுக்கள் அலைந்து திரிந்த வண்ணம் இருந்தன. பெருந்திரளாய்ச் சனம் வந்திருந்தது. பலர் முகத்தில் நிரந்தரமாக அப்பப்பட்ட சோகம். நாங்களோ வெடிவால்கள். எங்கே என்ன பேசுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் நக்கலாகப் பார்த்த காலம் அது. அப்படி ஒரு வேடிக்கை பார்க்கிற மனோநிலையில்தான் நாங்கள் எள்ளங்குளம் போனோம். ஒளியேற்றப்பட்டு அழகாக இருந்த அந்தத் துயிலும் இல்லத்திலிருந்த ஒரு கனதியான சோகம் மெல்ல மெல்ல எங்களைக் கவ்வத்தொடங்கியது சண்முகசுந்தரம் சேரைப் பார்த்தபோதுதான். எனக்கு நிச்சயமாக நினைவிருக்கிறது. சண்முகசுந்தரம் சேரின் கண்கள் கலங்கியிருந்தன. தலை துவண்டிருந்தது. அவரது மகனின் சமாதிக்கு முன்னால் நிற்கிறார் 72 வயதில் கால்சட்டை போட்டபடி உயரமான வேப்பமரங்களில் ஏறி ஆட்டுக்குக் குழை வெட்டிப்போடக்கூடிய அந்தக் கம்பீரமான மனிதர். அன்றைக்குத்தான் நான் சண்முகசுந்தரம் சேரை ஒரு வயோதிகராகப் பார்த்தேன்.

அந்த நேரம் பார்த்து 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஒலித்தது. சத்தியமாக இசையை ரசிக்க முடியவில்லை. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க ஒரு இனம்புரியாத உணர்வு நாடி நரம்பெங்கும் ஓடிப் பரவும். தாய்மார்கள், சகோதரிகள், மனைவிகள், காதலிகள் என்று பலர் புலம்புவார்கள். ‘ஆம்பிளை அழக்கூடாது' என்ற கட்டமைப்பு உடைந்து தந்தைகளதும், சகோதரன்களதும் கண்கள் குளமாகியிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கிற எம் கண்களும்தான். இந்த நேரம் பார்த்துத் தலைவரின் உரை ஆரம்பமானது. கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டிருந்தபோது மகி சொன்னான் ‘மச்சான் டே, இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன். வா வெளிக்கிடுவம்' என்று. மறுபேச்சில்லாமல் வெளியே வந்துவிட்டோம். வழமையாக ஏதாவது பேசி நக்கல் செய்து திரிகிற எங்களால் அன்றைக்கு மௌனம் தவிர வேறெதையும் தரமுடியவில்லை. அதன் பின் கொஞ்சநாட்கள் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடலின் பின்னணியில் கலங்கிய கண்களோடு சண்முகசுந்தரம் சேர் வந்துபோவார், தூக்கமற்ற இரவுகளில். இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு ‘துக்க அனுஷ்டிப்பை' மிக இலகுவாக ‘மாவீரர் தினக் கொண்டாட்டங்கள்' என்று கொச்சைப்படுத்துவது எப்படிப்பட்ட ஈனச்செயல் தெரியுமா.

உண்மையைச் சொல்லப்போனால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய காட்டமான விமர்சனங்கள் சில எனக்கிருப்பினும், சுகமான வாழ்க்கையைத் துறந்து, துப்பாக்கி ஏந்திச் சண்டைபோட்டுச் சாவதென்பது எல்லோராலும் முடியாது. ஏன், எங்களால்கூட அந்த ஒரு நாள் மட்டும் 'இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன்' என்று சொல்லவும், அதை நினைவுகூர்ந்து வெளிநாட்டில் இருந்துகொண்டு ஒரு குற்ற உணர்ச்சியோடு எழுதவும் முடிந்ததேயொழிய, அவர்கள் செய்த தியாகங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடச் செய்யமுடியவில்லை.

பெருந்தலைகளை விட்டுவிடுங்கள். எத்தனை அப்பாவி இளைஞர்கள், பெயர் தெரியாத, முகம் தெரியாத இளைஞர்கள், 30 வருடங்களாக எங்கள் இனத்தை நிலைத்து நிற்க வைக்கின்ற நோக்கில் செத்துப்போயிருக்கிறார்கள்? அப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்து இன்றைக்கும் எத்தனையாயிரம் குடும்பங்கள் அழுது கொண்டிருக்கின்றார்கள்? அந்தக் குடும்பங்கள் தாம் இழந்த செல்வங்களை நினைவுகூர்கிற ஒரு துக்க நாள், எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகத் தெரிகிறதல்லவா? அன்றைக்குப் பிரபாகரன் மறுபடி தோன்றுவார்... இல்லையில்லை பொட்டு அம்மான் மறுபடி தோன்றுவார் என்று புனைவுகள் எழுத அந்தத் துக்க தினம் எங்களுக்குப் பயன்படுகிறதல்லவா? இப்போதுதான் பிரபாகரன் மீது எனக்கு அடக்கமுடியாத கோபம் வருகிறது. இப்படி ஒரு ஈன இனத்துக்காக (என்னையும் சேர்த்து) 30 வருடங்களாகப் போராட்டம் நடத்திய அவரைவிட ஒரு அடி முட்டாள் அவருக்கு முன்னும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவதில்லை.

நவம்பர் எங்களுக்கு முக்கியமான மாதம்தான், என்றைக்கும். ஆனால் அதை ஒரு கொண்டாட்டமான மாதம் என்று சொல்வது எமக்கு நாமே செய்யும் மாபெரும் துரோகம்.

பி.கு: முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த நவம்பர் 11, 11:00 இங்கே அனுஷ்டித்தார்கள். ஒரு கணம் நாடு முழுவதும் ஸ்தம்பித்து நின்றது. அந்த நாளுக்கு முந்திய வாரங்கள் எதிலும் எந்த ஊடகத்திலும் Remembrance Day Celebrations என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை. நாங்கள் மேல் நாட்டவரைவிட இதிலும் பின்தங்கித்தான் போய்விட்டோம்Justify Full

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 08-நவம்பர் 14 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
ஒரு மாதிரிக் கத்தரிக்காய் சந்தைக்கு வந்துவிட்டது. சரத் பொன்சேகா ராஜினாமா செய்துவிட்டார். உடனடியாக அதை ராஜபக்ச ஏற்றுக்கொண்டும் விட்டார். இப்போது ஒருவரை ஒருவர் அறிக்கைகளால் தாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் உடன்பிறவா சகோதரர்கள் போல் திரிந்தவர்களை வெற்றி தந்த போதை எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள். ராஜபக்ச தரப்பு பொன்சேகாவை துரோகியாகச் சித்தரிக்க முயல்கிறது. தான் நாட்டுக்குச் செய்த 'பங்களிப்பை' (வேறென்ன, ஆயிரக்கணக்கான படுகொலைகள்) மறந்து தன்னைத் துரோகி என்று வர்ணிக்கிறார்கள் என பொன்சேகா புலம்பியிருக்கிறார். 'ராணுவப் புரட்சி நடத்துவேன் என்று பயந்தே தன்னை ஜனாதிபதி பணிமாற்றம் செய்தார்' என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். நாளைக்கே இவ்வளவு நாளும் தலைவராக இருந்த எனக்கு எந்த முக்கியத்துவமும் தருகிறார்களில்லை என்று ரணில் விக்கிரமசிங்கே ராஜபக்சவுடன் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

போரில் கிடைக்கிற வெற்றிகள் தரும் போதையும், பதவி ஆசையும் இப்படித்தான் கேவலமாகத் தங்களுக்குள்ளே அடிபிடி வரவைத்துவிடும். இலங்கையில் நிலமை தலைகீழாக இருந்திருந்தால்கூட இப்படி இன்னொரு கூட்டம் அடிபட்டுக்கொண்டு இருந்திருக்கும். மக்களின் நலன்களைவிட தம் நலன்களைப் பெரிதாகக் கருதும் தலைவர்கள் வாழ்கிற ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் ‘அறசரும்' ‘தலபதி'யும்.

அரசியல்-புகுந்தகம்
'நானோஸ் ரிசேர்ச்' (Nanos Research) என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்று பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலமையிலான ஆளும் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது. கனடாவில் வாக்களிக்க விரும்பும் மக்களில் 38% பேர் தாங்கள் கொன்செர்வேற்றிவ் கட்சிக்கு ஆதரவாகவும், 29% பேர் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்கு ஆதரவாகவும் வாக்களிப்போம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ப்ளொக் கியூபெக் கட்சிக்கு வெறும் 9% மக்களும், புதிய ஜனநாயகக் கட்சிக்கு 18% மக்களும், பசுமைக் கட்சிக்கு 5% மக்களும் ஆதரவளித்திருக்கிறார்கள். சென்ற மாதம் லிபரல் கட்சி கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து எதிர்க்கட்சிகளிடம் இருந்த ஒற்றுமையின்மையால் தப்பிப்பிழைத்த ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியானது என்பதை மறுக்கமுடியாது.

அரசியல்-உலகம்
அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக சீனாவுக்கு விஜயம் செய்திருக்கிறார் பராக் ஒபாமா. ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்டிருக்கும் எட்டு நாள் உத்தியோகபூர்வச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகவே இந்த விஜயம் இடம் பெற இருக்கிறது. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க-சீன உறவுகள் மென்மேலும் மேம்பட்டிருப்பதாக இரு நாட்டு ஊடகங்களும் மாறிமாறி ஊதிக்கொண்டிருக்கின்றன. ஒபாமாவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரன், வணிக அமைச்சர் காரி லொக் ஆகியோரும் சீனா செல்லவிருக்கிறார்கள்.
இதே வேளை தலாய் லாமாவுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவை நிறுத்தவேண்டும் என அறிக்கைவிட்டு தன் பங்குக்கு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது சீனா. இப்போதைக்கு சீனர்களைப் பகைக்கும் நிலையில் அமெரிக்கா என்ன, எந்த நாடுமே இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. விரைவில் அவர்கள் உலக பொலிஸ்காரனாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
i-Phone மீதான முதலாவது பாரதூரமான குற்றச்சாட்டி பிரான்ஸின் கான்ஸ் நகரில் இருந்து எழுந்திருக்கிறது. அந்நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் i-Phone திரை பாவித்துக்கொண்டிருக்கும்போதே வெடித்ததை முன்னிட்டு, i-Phone களின் பாவனைப் பாதுகாப்புக் குறித்து பிரெஞ்சு நீதிமன்றில் அவ்வர்த்தகர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். இது Apple நிறுவனத்தின் வடிவமைப்பில் உள்ள குறைபாடா இல்லையா என ஒரு பொதுவான நபர் அல்லது அமைப்புத் தனக்குக் கண்டறிந்து சொல்லவேண்டும் என தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இப்படியான திரை வெடிப்புகள் பற்றிய செய்திகள் அரசல்புரசலாக வந்தபோதும், பாவனையாளர் ஒருவர் சட்ட உதவியை நாடியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, இது வடிவமைப்பில் உள்ள குறைபாடு இல்லை என்றும், ஏலவே மோசடி i-Phone களைச் சந்தைப்படுத்தப்பட்டிருப்பதாக காவற்துறையால் விசாரிக்கப்படும் சம்பவங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று Apple நிறுவனமும், i-Phone களை பிரான்சின் சந்தைப்படுத்தும் Bouygues நிறுவனமும் தெரிவித்திருக்கின்றன.

விளையாட்டு
அவுஸ்திரேலியா-இந்தியா ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா 4-2 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. மும்பையில் நடந்த 7வது போட்டி மழையால் கைவிடப்பட முன்னரே, கௌகாத்திப் போட்டியில் அபார வெற்றி பெற்று அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. 9 முக்கிய வீரர்கள் இல்லாமல் பெற்ற இந்த வெற்றி தன்னுடைய வாழ்நாளில் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்று என்று ரிக்கி பொன்ரிங் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு அடுத்த சோதனையாக இலங்கை அணி காத்திருக்கிறது. இதுவரை இந்திய மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் வெல்லாத இலங்கை அணிக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள் வல்லுனர்கள். ஸ்ஹீர் கான் அணிக்கு மீண்டிருப்பது இந்தியாவுக்குத் தெம்பூட்டினாலும், ஸ்ரீசாந்தை அணிக்கு அழைத்ததைப் போல் ஒரு முட்டாள்தனம் இருக்க முடியுமா தெரியவில்லை.

நாளையோடு (15 நவம்பர் 2009) சர்வதேசக் கிரிக்கெட் விளையாடவந்து 20 ஆண்டுகள் ஆகிறது சச்சினுக்கு. 1989ல் ஆரம்பித்த சச்சினின் சாதனைப் பயணம் இன்றும் தொடர்வது உண்மையில் மகத்தான சாதனையே. அதுவும் 1990 களின் பின்னரான ஒரு நாள் கிரிக்கெட்டின் வளர்ச்சியால் ஒரு ஆண்டில் இன்றைய வீரர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவை வைத்துப் பார்க்கும்போது, 20 ஆண்டுகள் வில்பிரெட் ரோட்ஸின் 31 ஆண்டுகளைவிடப் பெரிய சாதனையே.

சினிமா-பொழுதுபோக்கு
கரீனா கபூர் வெற்று முதுகோடு இருக்கும் ஒரு திரைப்பட விளம்பரத்துக்கு இன்னும் அதிகமாக எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் விளம்பரம் தேடித்தந்திருக்கிறார்கள் சிவசேனா கட்சியினர். எது சரி எது பிழை என்ற விவாதம் இப்போதைக்கு வேண்டாம், ஆனால் இப்போதெல்லாம் ஒரு படத்தை ஓடவைக்க மிக சுலபமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் படக் குழுவினர் என்று எனக்குத் தோன்றுகிறது. கலாசாரக் காவலர்களுக்கு உறுத்தும்படி ஏதாவது செய்தால் போதும், இலவச விளம்பரம் செய்து குப்பைப் படத்தையும் ஓடவைத்துவிடுவார்கள். (சயீஃப் அலிகான் வெற்று மார்போடு இருக்கிறார் அதே படத்தில். அது ஆபாசமில்லையாமா?)

இதைச் சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும். கமலின் ஐம்பதாவது ஆண்டுவிழா டி.வி.டி. கிடைத்துப் பார்த்தேன். விஜய் ரி.வி. இப்படியான நிகழ்ச்சிகளுக்கு லாயக்கில்லை எனத் திரும்பவும் நிரூபித்திருக்கிறார்கள். அதுவும் எஸ்.பி.பி.யும், ஹரிஹரனும் சேர்ந்து ஒரு அரைமணித்தியாலம் அறுத்தார்கள் பாருங்கள், இதுவரை ரசித்த சில கமல் பாடல்களை இனிமேல் கேட்கவே முடியாமல் செய்துவிட்டார்கள் (அதுவும் ஹரிஹரனின் முகபாவனை சொல்லவே தேவையில்லை. எப்போதாவது மலச்சிக்கலால் அவதிப்படும்போது எங்கள் குளியலறைக் கண்ணாடியில் பார்த்த என்னுடைய முகபாவங்கள் இதற்கு மேல்). இதெல்லாம் தேவையா கமல்?

அடப் பாவி........
George Bush Quotes என்று நண்பர் ஒருவர் ஒரு இணையப் பக்கம் அனுப்பியிருந்தார். அதில் ஒன்று என்னைக் கவர்ந்தது. பிரான்சின் பொருளாதாரம் சரிவில் இருப்பது பற்றி பிரித்தானியப் பிரதமர் ரொனி ப்ளேய்ரிடம் புஷ் உதிர்த்த தத்துவ முத்து இது.
‘The problem with the French is that they don't have a word for entrepreneur'.
இதிலென்ன பிரச்சினை என்கிறீர்களா? Entreprenuer என்கிற சொல்லே ஆங்கிலம் பிரெஞ்சிடம் கடன்வாங்கிய சொல்தான். ஹூம்.... இப்படியாகப்பட்ட ஒரு புத்திசாலி கொஞ்சக்காலம் உலகின் பிரதான தலைவராக விளங்கியிருக்கிறார். என்னத்தைச் சொல்ல

Friday 6 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 01-நவம்பர் 07 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதன் முதலாக வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெற்று வருகிற மீளமைப்புப் பணிகளை ராஜபக்ச பார்வையிட்டதாகவும், துணுக்காய் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து தமிழில் உரையாடியதாயும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரோடு கூடவே அவரது சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும், முப்படைகளின் தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் போய்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அரசியலுக்காக இல்லாமல் உண்மையான நோக்கோடு இதைச் செய்திருந்தார் எனில், ராஜபக்சவுக்கு நன்றிகள். கடைசியாக சிங்கள தேசத்துத் தலைவர் ஒருவர் மக்களைச் சந்தித்து, நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர் முதுகில் குத்திய அனுபவம் இருப்பதால், (வேறு யார், ரணிலைச் சொல்கிறேன்) எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடுதான் அணுகமுடிகிறது.

இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தபோது அங்கே பணியாற்றிய அரசு ஊழியர்களைப் பணிக்குத் திரும்புமாறும், இல்லாவிடில் அவ்வாறு திரும்பாதவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும் என்றும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார். சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட இவ்வாறான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தலைவரின் பெற்றோர் பற்றிய ஆனந்த விகடன் செய்தியை வியாபார தந்திரமாக மட்டுமே பார்க்கிறேன். மரணவியாபாரிகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. அந்தப் பிணந்தின்னிகளின் வியாபார தந்திரத்தை நம்மவர்களும் ஊக்குவிப்பது உறுத்துகிறது.

அரசியல்-புகுந்தகம்
பிரிட்டிஷ் கொலம்பியா (British Colombia) மாகாணத்தின் ஃப்ரேசர் (Fraser) ஆற்றுப் பகுதியில் இருந்த சால்மன் (Salmon) மீன்வளம் திடீரெனக் குறைந்தது பற்றிய விசாரணை ஒன்றை நடத்திமுடிக்க பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் உத்தரவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 9 மில்லியன் மீன்கள் பசுபிக் சமுத்திரத்தில் காணாமல் போயிருப்பது கனேடிய மீன்வளத்துறையை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பல காலமாகவே இது பற்றிய ஒரு விசாரணைக்கு பலதரப்பட்ட அமைப்புகள் கோரி வந்த நிலையில் ஹார்ப்பரின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. வழமையாக காலநிலை மாற்றத்துக்கேற்ப இடம்பெயர்ந்து திரும்பும் இந்த மீன்கள், இம்முறை 10.5 மில்லியன் பசுபிக் கடலில் இருந்து ஃப்ரேசர் ஆற்றுக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இந்த எண்ணிக்கையின் பத்தில் ஒரு பங்கு மட்டுமே திரும்பியிருப்பது கனேடிய மீன்வளத்துறைய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ராரியோ மாநிலத்தின் கல்விக் கட்டணங்களைக் குறைக்குமாறு மாணவர்கள் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. வியாழனன்று உச்சக்கட்டமாக ரொரன்ரோ குயீன்ஸ் பார்க்கில் மாபெரும் திரளணியாக 1000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடித் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். கனடாவிலேயே கல்விக்கட்டணங்கள் உயர்ந்த மாநிலமாக விளங்கும் ஒன்ராரியோ, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு இன்மையிலும் முதல் மாநிலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

அரசியல்-உலகம்
ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்தில் Fort Hood இராணுவ முகாமில் பணியாற்றிய மன நல மருத்துவர் மேஜர். நிடால் மலிக் ஹசன் திடீரென நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும், 30 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். தொழில்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாதவராக அறியப்பட்ட இந்த மனநல மருத்துவரின் தாக்குதல் இந்த வாரம் ‘பெரியண்ணன்' வீட்டில் நடந்த மிகவும் பரபரப்பான சம்பவமாக அமைந்திருக்கிறது. அதுவும் சுட்டவர் முஸ்லிமாக வேறு போய்விட்டதால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஏதாவது நடக்கலாம் என அஞ்சுவதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். (இவனே ஐடியா கொடுக்கிறான்). இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. ஹசன் சமீபத்தில்தான் இந்த முகாமுக்கு மாற்றலாகி வந்தார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.



முதலில் இது ஒரு பெரிய தாக்குதல் என்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் இது ஹசான் தன்னிச்சையாக ஈடுபட்ட ஒரு தாக்குதல் என்று அறிவித்திருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ முகாமான Fort Hood இல் நடந்த இந்தத் தாக்குதல், அமெரிக்க-முஸ்லீம் உறவுகளில் இன்னும் பாரிய விரிசலை உருவாக்கும் என்பதுமட்டும் நிச்சயம்.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
ஏறுமுகத்தில் போய்க்கொண்டிருந்த கனேடியப் பொருளாதாரத்துக்கு இந்த வாரம் வெளியான அறிக்கைகள் பேரிடியாக அமைந்திருக்கின்றன. புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாவிடினும், வேலைகள் இழக்கப்படமாட்டாது என பெரிதும் எதிர்வுகூறப்பட்ட ஒக்ரோபர் மாதத்தில்கூட, கனடாவிலும் அமெரிக்காவிலும் பலர் வேலையிழந்திருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவில் கடந்த 26 வருடங்களில் மிகவும் அதிகமான வேலையிழப்பு வீதம் ஒக்ரோபரில் பதியப்பட்டிருப்பது, பொருளாதார மீள்வு பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதன் காரணமாகக் கொஞ்ச நாட்களாக வெகுவேகமாக ஏறிவந்த கனேடிய டொலரின் மதிப்பும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது.

விளையாட்டு
அவுஸ்திரேலியா-இந்தியா ஒரு நாள் தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 9 முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடும் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகள் முடிந்த நிலையில் 3-2 என்று முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற, அடுத்த போட்டியில் 24 ஓட்டங்களால் போராடி வென்றது அவுஸ்திரேலியா. ஐந்தாவது போட்டியில் முதலில் ஆடி அருமையாக 350 ஓட்டங்களைக் குவித்த போதும், லீ, சிடில், பிராக்கன், ஜோன்சன் போன்ற முன்னணிப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய அவுஸ்திரேலியாவை 175 ஓட்டங்கள் அடித்துத் துவம்சம் செய்தார் சச்சின். இருந்தபோதும் கடைசிவரை நின்று அவர் வெற்றியைப் பெற்றுத்தரமுடியாமல் போக, அவுஸ்திரேலியா 3 ஓட்டங்களால் வென்றது. இந்த 175 இல் 7வது ஓட்டம், சச்சின் பெற்ற 17,000 வது ஓட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 59 ஓட்டங்கள் பெற்றால் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் இவர் வசமாகிவிடும். (சச்சின் விளையாடிய ஒரேயொரு சர்வதேச 20-20 போட்டியையும் சேர்த்தால் இன்னும் 49 ஓட்டங்களே தேவை).

இதே வேளை அடுத்த ஐ.பி.எல் போட்டிகளின் கொல்கத்தா நைற் ரைடேர்ஸ் அணிக்குத் தலைவராக சவ்ரவ் கங்கூலி திரும்பவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். டேவிட் வற்மோர் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். லில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்-1 ல் கடைசி இடம் பிடித்த டெக்கான் அணி ஐ.பி.எல்-2 ஐ வென்றது போல், ஐ.பி.எல்-2 ல் கடைசியாய் வந்த நைற் ரைடேர்ஸ் அடுத்த ஐ.பி.எல். லில் சாதிப்பார்களா?

சினிமா-பொழுதுபோக்கு

நடிகர் சூர்யா ஒரு சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக சூர்யா ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டு, அப்படியான ஒரு படத்தில் தான் நடிக்கவில்லை என உறுதி செய்திருக்கிறார். சூர்யா அப்படி நடித்தால்கூட அது பற்றியெல்லாம் சண்டைபோடுவது முட்டாள்தனம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்படிப் பார்க்கப்போனால் சூர்யா முதலான எல்லா நடிகர்களும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் படத்திலும் நடிக்கவே கூடாது என்பதாகத்தான் போராடவேண்டும் என்பது என்னுடைய பார்வை. ஒருவர் தன் வாழ்வியல் ஆதாரமாக, சட்டத்துக்குட்பட்டு எதையும் செய்யலாம். அதைத் தடுப்பது அராஜகம். அதைவிடப் பரபரப்புக்காக இப்படியான பொய்ச் செய்திகளை விடுப்பது ஊடக விபசாரம். பாவம் சூர்யா, கொஞ்சக் காலமாகவே அவருக்கும் ஊடகங்களுக்கும் ஒத்துப்போவதேயில்லை.

ஒரு புரிதல்
இலங்கையில், அதுவும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் 'தலித்துக்கள்' எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு இதுநாள்வரை புரிந்ததில்லை. ஆனால் சமீபத்தில் அதுபற்றிய ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. தலித்துக்கள் என்று சொல்லாவிட்டாலும், அவர்களை சாதிப் பெயர்களை நேரடியாகச் சொல்லி ஒதுக்கி வந்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் ஆற்றியவர்களில் முதலிடத்தில் இருப்பவர்களில் யாழ்ப்பாணத்துச் சாதி வேளாளர்களும் முக்கியமானவர்கள் என்கிற மறுக்கமுடியாத உண்மை உறைக்கிறது. (தலித்துக்கள் பற்றிய தேடலைத் தூண்டியது சயந்தனின் இந்த வலி). இது பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும்.

Tuesday 3 November 2009

மரணத்தின் வாசனை- ஒரு அறிமுகம்

அகிலனின் மரணத்தின் வாசனை கனடாவில் வெளியிடப்பட்டு, அது என்னுடைய கையுக்குக் கிடைத்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஒருவாறு வாசித்து முடித்திருக்கிறேன். 'போர் தின்ற சனங்களின் கதை' என்கிற உபதலைப்போடு, வடலி பதிப்பகத்திடமிருந்து வெளியாகியிருக்கிற அகிலனின் பன்னிரண்டு சிறுகதைகள் அல்லது அனுபவத் தூறல்களின் தொகுப்புத்தான் ‘மரணத்தின் வாசனை'.
  1. ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
  2. ஒரு ஊரில் ஓர் கிழவி
  3. மந்திரக்காரன்டி அம்மான்டி
  4. குமார் அண்ணாவும் மிளகாய்க்கண்டுகளும்
  5. ஒருத்தீ
  6. சித்தி
  7. நீ போய்விட்ட பிறகு
  8. சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்
  9. தோற்ற மயக்கங்களோ
  10. கரைகளிற்கிடையே
  11. செய்தியாக துயரமாக அரசியலாக
  12. நரைத்த கண்ணீர்
மேற்சொன்ன தலைப்புகளில் படைக்கப்பட்டிருக்கிற படைப்புகள் அத்தனையிலும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அது ‘மரணத்தின் வாசனை'. முதலில் வருகிற ‘ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்' கதையில் நாசி துளைக்கிற அந்த வாசம், அம்மம்மா, சித்தி, நண்பன் தொடக்கம் நேசித்த நாய் எனப் பல தாங்கிகளில் வந்தாலும் புத்தகத்தை மூடிவைத்த பின்னரும் விலகாமல் இருக்கிறது.

எல்லா மரணங்களுக்கும் பொதுவான ஒரே விஷயமாக இருப்பது, போர். நீண்ட கொடும் போர். மண்ணில் மரங்களைக்கூட வேரூன்றவிடாமல் விரட்டியடிக்கிற போர். சனங்களைத் தின்கிற போர். அந்தப் போரின் காரணமாக அகிலனும் முண்டியடித்து ஓடுகிறார். அந்த ஓட்டத்தில் அவர் சந்திக்கிற சாவுகள்தான் இங்கே கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன. பல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்' கண்ட அரசியலையும்தான்.

அகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளின் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அகிலன் இரண்டுபேரை வைத்தியம் கிடைக்காத காரணத்தால் இழந்திருக்கிறார். அவரது அப்பா, வைத்தியசாலைக்குக் கொண்டுபோகமுடியாமல் இறந்திருக்கிறார். (ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப்போகிறார்). இளமையில் அப்பா செத்துப்போனார் என்பதைவிட, ‘அப்பா வைத்தியம் கிடைக்காமல் செத்துப்போனார்' என்கிற ஒரு அங்கலாய்ப்பு அகிலனிடமிருந்து வருகிறது. அவரது சித்திகூட இப்படியாக வைத்தியசாலையில் மருந்து கிடைக்காமல் செத்துப்போகிறார். அந்த மரணமும் அகிலனின் மனதில் ‘சித்தி மருந்து கிடைக்காமல் செத்துப்போனா' என்றுதான் விதைத்துச் செல்கிறது. எனக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில், விசக்கடியில் தப்பிப் பிழைத்து, காய்ச்சலுக்கு மருந்தில்லாமல், இரண்டு வயதும், ஒரு வயதும் நிரம்பிய இரண்டு சின்னைப் பையன்களைத் தவிக்கவிட்டு இறந்துபோன ஸ்ரீ அண்ணா மனதில் வந்து போகிறார்.

கணவன்/காதலனால் கைவிடப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றியும் அகிலன் சொல்லிப்போகிறார் (ஒரு ஊரில் ஓர் கிழவி, சித்தி). அந்தப் பெண்களிடம் இயல்பாகத் தொற்றிவிட்ட பிடிவாதம் போன்றவற்றையும் தொட்டுச்செல்கிறார். அதுவும் யார் வீட்டிலும் நிலையாகத் தங்காமல், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து திரிகிற, உறவினர்களால் ‘அடங்காப்பிடாரி'யாகப் பார்க்கப்படுகிற அவரது 'சித்தி'யின் உருவில் நான் என்னுடைய மாமியைப் பார்க்கிறேன். அம்மனுடன் சகோதரியாக, தாயாக, மகளாக ஏன் ‘வேசை' என்று விளிக்குமளவு உரிமையுள்ளவளாகப் பழகும் அவரின் அம்மம்மா (ஒரு ஊரில் ஓர் கிழவி) எனக்கு எங்களூர்க் கிழவிகள் சிலரைக் கண்முன் நிறுத்துகிறார். அம்மாவிடம் அடிவாங்காமல் சின்னப் பொடியனைக் காப்பாற்றும் அக்காக்கள் ஊரெல்லாம் பரவி இருந்திருக்கிறார்கள். தம்பிகளைப் பிள்ளைகளாய் வளர்க்கும் அந்த உறவுகளைப் பற்றிய எண்ணக் குவியல்களை மீட்டு வருகின்றன அக்காக்கள் பற்றி பெரும்பாலான கதைகளிலும் அகிலன் காட்டும் பிம்பங்கள்.

அவர் சொல்கிற ஜாம் பழம், வீரப்பழம் போன்ற பழங்கள் எனக்கு எங்கள் உறவுகள் இருந்த முரசுமோட்டையை ஞாபகப்படுத்திச் செல்கின்றன. எங்கள் சின்ன மாமா வீட்டில் ஒரு ஜாம் பழ மரம் இருந்தது. ராஜி அண்ணா ஏறிப் பறித்துத் தருவான். மறக்கமுடியாது. அந்த மரத்தின் கீழ் முதன் முதலாக சின்ன மாமாவிடம் கேட்டுவாங்கிச் சுவைத்த சுருட்டையும். நேமி அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் வந்த அந்தக் கோவில் திருவிழா, எனக்கு அருகில் வந்து அடிப்பதுபோல் பாவனை காட்டிக் காட்டி மேளம் அடித்த அந்த மேளக்காரர், ஒரு கட்டைக்கு ஒன்றாக இருக்கிற வீடுகள், 2004ல் கிரிக்கெட் விளையாடிய அந்த விவேகானந்தாப் பள்ளிக்கூட மைதானம், இவ்வளவு தூரம் அடிக்கிறியள் என்று வியந்த பெறாமக்கள், இரவில் படுத்துறங்கிய அந்தக் கொட்டில்..... முற்றுமுழுதாக வன்னியில் வாழாவிட்டாலும், அவர்களின் இந்த வாழ்வியல் எனக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் காணாத ஒரு சுகமான வாழ்வு அங்கே இருந்தது.

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பாதித்த கதை ‘தோற்ற மயக்கங்களோ'. மேலோட்டமாகப் பார்த்தால் அந்தக் கதையில் மரணம் இல்லையோ என்று தோன்றும். ஆனால், நுண்ணிய பாதிப்பைத் தரவல்ல இரண்டு ஜீவன்களின் மரணத்தை அகிலன் அந்தக் கதையில் படம்பிடித்திருந்தார். அவர் செல்லப் பிராணிகளுக்கு வைத்த பெயர்கள், அதை எங்கிருந்து பெற்றார் என்பதெல்லாம் எங்கள் பால்யகாலச் சுவாரஸ்யங்கள். நானும் ‘டெவில்' என்றொரு நாயை பாலில் எறும்பெல்லாம் போட்டு ஊட்டி வளர்த்தேன். என் ‘டெவிலை'யும் யுத்தம் பிரித்தது, வேறுவிதமாக.

அகிலனின் எழுத்தில் ஒரு அப்பாவித்தனம் இழையோடிக் கிடக்கிறது. அந்த அப்பாவித்தனம்தான் அவரது பலமும், பலவீனமும். இப்படி அப்பாவித்தனமான எழுத்துக்களை ‘மேதாவிகள்' ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் அகிலனின் இந்தப் படைப்பு ஒதுக்கப்படலாம், இன்றைய மேதாவி இலக்கியச் சூழலில். ஆனாலும், அந்த அப்பாவித்தனத்தினூடே ஊமைக் குசும்பனாக அவர் பேசும் அரசியல் எனக்குப் பிடித்திருந்தது. நண்பன் ஒருவனின் மரணம் பற்றிய ‘சலனங்கள் அற்றவனின் கடைசி நாள்' என்கிற கதையில் அவரது நண்பன் கேசவன் போர் காரணமாக ஆறு வருடங்களாக இடுப்புக்குக் கீழ் இயங்காமல் போய் இறந்திருப்பான். அந்தக் கதையில் சில இடங்களில் அகிலன் நுட்பமாக அரசியல் பேசுகிறார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சியற்றிருக்கும் கணவர்களைச் சுமக்கும் அக்காமார்களின் ‘தியாகம்' என்று கட்டமைக்கப்பட்ட வாழ்வைத் தொட்டுக்காட்டி, பல விஷயங்களை எங்களின் சிந்தனைக்கு விட்டுச்செல்கிறார்.

ஆறு வருடமாகப் படுக்கையில் கிடந்த கேசவனின் மரணத்தில், அவனது அவஸ்தையிலிருந்தான விடுதலை பற்றிய தனது நிம்மதியைப் பதிவு செய்யும் அதேவேளை, ‘இனியும் கேசவன்கள் உருவாகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்கிற கேள்வி மனசைக் குடைகிறது. துப்பாக்கிகளைத் துதிப்பவர்களுக்குத் தெரியாதபோது எனக்கெப்பிடித் தெரிந்திருக்கும்?' என்கிற கேள்வியோடு அவர் அந்தக் கதையை முடித்திருக்கிற விதம், வலிமை மிகுந்தது. அதே போல் ‘துப்பாக்கிகளில் நல்ல துப்பாக்கி கெட்ட துப்பாக்கி எனப் பிரிவுகள் இருப்பதாக நம்புகிறார்கள் மொக்குச் சனங்கள். துப்பாக்கிக்குத் தெரிந்ததெல்லாம் கொலை. அது மட்டும்தான்' என அவர் சொல்லிச் செல்லுகிற அந்தச் செய்தி கவனிக்கப்படவேண்டியது (கரைகளுக்கிடையே).

அகிலனின் எழுத்துக்களில் குறை இல்லாமலில்லை. தொழில் முறை எழுத்தாளர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சில கதைகளில் அகிலனின் எழுத்தின் செழுமை குறைவாகவே இருப்பதாகப்படும் (என்னால் இந்தளவுகூட எழுதமுடியாது என்பது வேறு விஷயம்). ஆனால் எழுத எழுத அகிலனின் எழுத்து இன்னும் செழுமை பெற்று வீரியமாக வரும் என்பதில ஐயமில்லை. ஏனென்றால் 'ஆக்க இலக்கியங்கள்' உருவாவதற்கு அத்தியாவசியம் என்று மெலிஞ்சி முத்தன் சொல்லும் ‘சூழலை உற்றுப் பார்க்கிற' தன்மையும், சுஜாதா சொன்ன ‘காரணங்களும்' அகிலனுக்கு இருக்கின்றன. களம் கிடைத்தால் அகிலன் அடித்து ஆடுவார் என்பது திண்ணம்.


பதிப்பகம்
வடலி பதிப்பகம் மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சி இது. சமீபகாலமாகத்தான் இவர்கள் இந்தத் துறைக்குள் காலடிவைத்திருக்கிறார்கள். ஈழத்துப் படைப்பாளிகளுக்குப் புத்தகம் அடித்துக்கொடுப்பதில் இருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள் இவர்களை விழுங்கிவிடாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அச்சுக்கோர்ப்பு ரீதியாக முன்னேறுகிறார்கள். கானா பிரபாவின் ‘கம்போடியா' சிறப்பான அச்சுக்கோப்பு அல்ல. ‘மரணத்தின் வாசனை' கூட அவ்வளவு சிறந்த ஒன்றாகச் சொல்லமுடியாவிட்டாலும், ‘கம்போடியாவை' விட நன்றாக வந்திருந்தது. சமீபத்தில் வெளியான கே.எஸ்.பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்' அற்புதமாக வந்திருக்கிறது.
வடலி சரியான திசையில் போகிறது, என்ன எம்மவரிடம் இருந்து ஆதரவேதும் பெரியளவில் இல்லை என்கிற குறைதான் இவர்கள் நிலைத்து நிற்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

சின்னச் சர்ச்சை
ட்விட்டரில் இந்தப் பதிப்பைத் திறந்தவுடனே ஒரு குறை கண்டதாகச் சொல்லியிருந்தேன். சாயினி கூடக் குறை காண்பது பற்றி ஒரு மறைமுகக் குத்துக் குத்தியிருந்தார். தொப்பி அளவாயிருந்ததால் போட்டுக்கொண்டேன் :). அந்தக் குறை இதுதான். 'சொல் விளக்கக் குறிப்புகள்' எதற்காக? வணிக ரீதியான சில நோக்கங்களுக்காகத்தானே. அதாவது இந்தப் படைப்பு இயலுமானளவு பெரியதொரு வீச்சத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்கிற நோக்கத்தால்தானே? இதுவும் ஒரு வகையிலான பெரியண்ணன்களைக் குசிப்படுத்தும் நோக்கம் இல்லையா? (தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்)