Sunday 20 June 2010

வேருலகு (அ) முதுகு சொறிதல்

சம்மாட்டியார் வாய்களிலே
சதைகளை நாம் தீத்தி வைத்தோம்
முள்ளை மட்டும் நாங்களுண்டோம்
முதுகெலும்பு வளைத்துழைத்தோம்
கைகளிலே முள்ளுக்காயம்
காலையிலே பள்ளிக்கூடம்
கணக்கு வாத்தி கம்பெடுத்தால்
கண்ணீரிலும் வெடுக்கு நாறும்...

இந்த வார்த்தைகள் மெலிஞ்சி முத்தனுடையவை. அவர் எழுதிய கூத்தில் வருபவை. மட்டமான ஒலிப்பதிவு காரணமாக சரியாக விளங்கப்பட முடியாமல் அவரது வாயால் மீண்டும் சொல்லப்பட்டவை. அப்படியும் ‘கணக்கு வாத்தி கம்பெடுத்தால் கண்ணீரிலும் வெடுக்கு நாறும்’ என்கிற வரிகள் தவிர மற்றவை படியாமல் போக அவருக்கு மடல் அனுப்பிப் பெறப்பட்டவை. ‘வெள்ளாளச் செருக்கேறிய’ மனங்களைக் கொஞ்சம் குத்திப்பார்ப்பவை. இதற்கு முன் சிலாகித்த வரிகள் பலவற்றை ஒளிமங்கிப் போக வைத்தவை. இப்படியான வலிமிக்க வரிகளைத் தரக்கூடிய மெலிஞ்சிமுத்தன் என்கிற விஜயநாதன் இயூஜின் மசனெட்டின் நான்காவது நூல் (நான் வாசித்த முதல் நூல்), ‘வேருலகு’.

மெலிஞ்சி முத்தன்
மே.ப. நபர் 20.10.1975 யாழ் மாவட்டம் மெலிஞ்சி முனையில் (எங்கிருக்கிறது அந்த இடம்?) பிறந்தார். மெலிஞ்சியில் பிறந்த காரணத்தால் மெலிஞ்சி முத்தன் என்று பெயர் வந்ததா அல்லது ‘மெலிந்த உருவத்தில் முத்தல் கதைகள் பேசுவதால்’ வந்ததா என்பது பற்றிய ஆய்வுகள் எமக்குத் தேவையற்றவை. ‘சிதையும் என்னுள்’, ’என் தேசக் கரையோரம்’, ’முட்களின் இடுக்கில்’ என்று ஏலவே மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டபின் சமீபத்தில் கனடாவில் வெளிவிட்ட இவரது ’குறுநாவல்’தான் ‘வேருலகு’. (இதைக் குறுநாவல் என்று அழைப்பதை விட, ‘கனவுகளின் தொகுப்பு’ என்று அழைப்பதையே மெலிஞ்சி விரும்புவதாக இளங்கோ சொல்கிறார்). முதல் இரண்டு தொகுப்புகளும் ஈழத்திலும், மூன்றாவது தொகுப்பு பிரான்சிலும் வெளிவந்ததாகவும் அதே இளங்கோ சொல்லியிருக்கிறார். மெலிஞ்சி புழங்கும் வட்டத்துக்குள் நான் புதிது என்பதாலும், இளங்கோ அந்த வட்டத்தில் ஒரு... ஒரு.... என்ன சொல்லலாம், மூத்த அங்கத்தவர் என்பதாலும் மெலிஞ்சி பற்றிய சில தகவல்களை இளங்கோவிடமிருந்து உருவுவதென்பது இலகுவானதும், நம்பகமானதாயுமிருக்கிறது. மெலிஞ்சி முத்தனின் ’வேருலகு’ (உயிர்மை வெளியீடு) பற்றிய என்னுடைய பகிர்வுகளே கீழே.

வேருலகு
வேருலகில் மெலிஞ்சி என்ன சொல்லியிருக்கிறார் என்கிற சுருக்கமெல்லாம் நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கப் போவதில்லை. இதை ஒரு திறனாய்வு என்றுகூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் திறனாய்வுசெய்வதற்கு நான் ஒன்றும் இலக்கியவாதி அல்ல. சாதாரண வாசகன். மெலிஞ்சியின் வேருலகில் சஞ்சரிக்கிற சில பாத்திரங்கள், கனவுகள் போல் நடந்த சம்பவங்களைப் பற்றியே பார்க்கப்போகிறோம். புத்தகத்தை வாங்கி வாசிப்பதன் மூலமே மெலிஞ்சி முத்தன் என்கிற படைப்பாளியின் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பரிஸ் விமான நிலையத்திலிருந்து ஸ்பெயினூடாக மெக்சிக்கோ போகிற நோக்கத்துடன் வருகிற, கடற்கரை வீதி, கெட்டில், யாழ்ப்பாணம், இலங்கை என்ற முகவரியுடைய சூசை மரியதாசனின் பயணத்தில் ஏற்படுகிற இடர்களுடன் ஆரம்பிக்கிறது வேருலகு. இங்கேயே ஒரு வாசகன் (ஈழத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் பட்சத்தில்) கனவுகளின் தொகுப்போடு ஒன்ற ஆரம்பிக்கிறான். காரணம், ஈழத்தில் இருந்து இப்படி எத்தனையோ சூசை மரியதாசன்கள் பெயர்ந்திருக்கிறார்கள். அதுவும் ஐரோப்பிய நாடுகளில் ‘கறுப்பாடுகளாக’ப் பிடிக்கப்படுகிற சூசை மரியதாசன்களுக்கு நடத்தப்படுகிற விதத்தை ‘அனுபவப்பட்டவர்கள்’ சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அங்கேயா இங்கேயா’ என்று தெரியாத நிலை, பணத்துக்கான அல்லாட்டம், இன்னொருவரின் வதிவிட அட்டையில் (அடையாளம் தொலைத்து) வேலை செய்வது, பசி, அகதிக் கோரிக்கை வழக்குகள், அவற்றின் தோல்விகள், கள்ளமாக அடுத்த நாட்டுக்குப் பயணம், ஒதுக்கித் தள்ள நினைக்கிற சொந்தங்கள், கைகொடுக்கிற மூன்றாமவன் எனப் பலவிடயங்கள் நேரடி அனுபவமாகவும், நண்பர்களின் கதைகளாயும் ஏற்கனவே மனதின் முக்கால்வாசி இடத்தை அடைத்து இருந்த காரணத்தால் ஒரு கட்டத்தில் அந்த சூசை மரியதாசனாக இந்த வாசகனும் மாறிப்போகிறான். கதைக்களம் அரிப்புத்துறைக்கு மாறும்போதும் கதைசொல்லியுடன் வாசகனை ஓரளவுக்காவது பொருந்திப்போக வைத்திருக்கிறார் மெலிஞ்சி.

இத்தனைக்கும் அரிப்புத்துறை என்றொரு ஊர் இலங்கையில் இருக்கிறதா என்று இணையத்தில் தேடிப்பார்க்குமளவுக்குத்தான் என் சந்ததியில் இலங்கையின் நிலப் பிரதேசம் பற்றிய அறிவு இருக்கிறது. விக்கிபீடியா சொல்கிற தகவல் சரியாக இருப்பின் மேற்படி அரிப்புத்துறை என்பது மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் இருக்கிற ஒரு ஊர். நானாட்டான் என்ற இன்னொரு பிரதேச செயலர் பிரிவு இந்த முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு வடக்கே இருக்கிறதாம். அந்தப் பிரிவில் நானாட்டான் என்ற பெயருடைய ஊரும் இருக்கிறதாம். மெலிஞ்சியின் வேருலகிலும் இந்த நானாட்டான் வருகிறது. ஆகவே விக்கிபீடியா சொல்லும் அரிப்புத்துறையும் மெலிஞ்சி சொல்கிற அரிப்புத்துறையும் ஒன்றாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கிறது. கதை விரிகிற பிரதேசம் உண்மையா அல்லது புனைவா என்றே தெரியாத, அந்தப் பிரதேச வழக்குகள், வாழ்வியல் பற்றி எதுவும் அறியாத ஒரு வாசகனை கதைக்குள் இழுத்துவைத்திருப்பதுதான் மெலிஞ்சியின் முன் இருந்த பெரும் சவாலாக நான் கருதுகிறேன். சம்மனசு, உலுவிந்தம் பழம் போன்ற சொற்களால் மெலின்ஞ்சியின் எழுத்திலிருந்து அந்நியப்பட்டுப்போகாமல் என்னை ஈர்த்து வைத்திருந்தது அவரது கதாபாத்திரங்களும், அவரது கனவுகளுமே. மெலிஞ்சியின் வார்த்தைகளில் சொல்வதானால் அரிப்புத்துறை அவரது கனவுகளை இறக்கிவைப்பதற்குப் பொருத்தமாயிருந்த ஒரு நிலம் மட்டுமே. மற்றபடி எந்த ஒரு ஊரையோ, குழுவையோ தனிப்பட்ட மனிதனையோ அவர் சுட்டவில்லை அல்லது சுட்ட விரும்பவில்லை. ஊர்காவற் துறை தொட்டு அரிப்புத்துறைவரை மெலிஞ்சி கண்ட ஈழத்து வாழ்க்கையின் ஒரு சில படிமங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார்.

மெலிஞ்சி சொல்கிற பொன்னுக் கிழவி என்னைப் பாதித்தாள். அவளது பனங்கூடல் கொட்டில் பாதித்தது. எனக்கு எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பனங்கூடல் கடந்து இன்னொரு பனங்காணிக்குள் கொட்டில் போட்டு, பின்னர் குடிசையாக்கிக் குடியிருந்த நடுவிலம்மா வந்து போனார். நடுவிலம்மாவுக்கு சந்தியாகுக் கிழவர் போல புருசன் இருந்ததாக ஞாபகமில்லை. ஆனால் ஆடுகள் கொஞ்சம் வளர்த்ததாக ஞாபகம். ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய்க்காக அக்காக்களின் பாவாடைகளுக்குள் ஒளித்த ஞாபகம் இருக்கிறது. பொன்னுக்கிழவிக்குப் பூச்சியாடு மாதிரி, நடுவிலம்மாவுக்கு அவரது மகள். நடுவிலம்மாவின் அந்தக் காணியும், கிணறும், குடிலும் மறக்கவே மறக்காது. கல்வீடுகளிலிருந்து கொஞ்சம் தனியனாக இருந்த வீடு அது. நடுவிலம்மா செத்த பிறகொருகாலத்தில், எனக்குப் பதினொரு வயதிருக்கும்போது பிள்ளையார் கோவில் திருவிழாவின் இடையில் துரைராசர் படிப்பிக்க வந்ததும், அவர் போன பின் கோபமாக அம்மாவுடன் அடம்பிடித்து மறுபடி கோவிலில் அப்பாவிடம் கொண்டுபோய் விடக் கேட்டதும், போகிற வழியில் நடுவிலம்மாவின் குடில் கடந்தபோது எதையோ ஓங்கி அடிப்பது போல் கேட்ட நடுவிலம்மாவின் மருமகனின் முக்கல் ஒலிக்கும், ‘விடுங்கோப்பா நோகுது’ என்று நடுவிலம்மாவின் மகளின் முனகலுக்கும் காலம் கடந்து அர்த்தம் தெரிந்ததும், முதலில் ‘ச்சேய்’ என்றதும் பிறகு அவர்களின் ‘சுதந்திரம்’ கண்டு வியந்ததும், அந்த கூட அந்தப் பனங்கூடல் குடில் மீதான ஈர்ப்புக்கான ஒரு காரணமாய் இருக்கலாமோ என்னவோ. நடுவிலம்மா தவிர்த்து ஆடுகளுடனும், மாடுகளுடனும் ஏன் மிளகாய்ச் செடிகளுடனும் பேசுகிற எத்தனையோ கிழவிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களின் முகங்களையெல்லாம் பொன்னுக்கிழவியுடன் பொருத்திப்பார்க்க முயன்றது ஒரு புதுவித அனுபவம்.

மெலிஞ்சியின் வேருலகப் பாத்திரங்களில் இன்னொன்று சசியக்கா. இவள் கண்மணி மாமியின் மகள். கண்மணி மாமி குடும்பத்துடன் சில புரட்சிக்கார இளைஞர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். அவர்களில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் ‘சேமலையண்ணன்’ என்கிற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறான். அந்த இளைஞர்களுக்கு கால்களில் சிரங்கு இருக்கிறது. “கண்மணி மாமி வீட்டில் சசியக்காவுக்கே முதலில் சிரங்கு தொற்றிக்கொண்டது” என்கிற ஒரு வசனத்திலேயே சேமலைக்கும் சசிக்கும் காதல் என்பதை ஊகிக்ககூடியதாய் இருந்தும் அவர்கள் நெருங்கியிருக்கும் காட்சிகள் சில பற்றி மெலிஞ்சி விவரிக்கும்போது கொஞ்சம் ஆயாசமாயிருக்கிறது. அதுவும் அவர்களின் முத்தக் காட்சி பற்றிய வர்ணனையெல்லாம் எதற்கு என்று எண்ணும்போது “அன்றைய இரவு நான் கண்ட கனவு வித்தியாசமாய் இருந்தது” என்று சொல்லி அதன்பின் மெலிஞ்சி சொல்கிற சில விஷயங்கள் சிலருக்கு ஜீரணிக்க முடியாதவையாய் இருக்கலாம். அப்படி ஜீரணிக்க முடியாதவர்களும் மெலிஞ்சி சொல்கிற அந்த அனுபவங்களை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணத்தில் கடந்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.

ஆட்டுத்திருடன் சிமியோன், அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, அதன் பின்விளைவுகள், கண்மணி மாமியின் காணாமல் போன உள்பாவாடை, சிப்பாயின் தலையை வெட்டி வேலிமட்டையில் கொழுவும் உலுந்தை, கக்கா இருக்கும்போது பாம்புகளை வரந்த, பாம்பு கடித்துச் செத்துப்போன அத்தாம்புள்ள, அல்லி பற்றிய அமானுஷ்யக் கதைகள், கண்மணி மாமியின் இளைய மகள் சின்னன், சீத்தைத் துணிக்காடு, பூச்சியாடு.................................................. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஈழத்துத் தமிழ்ப்படைப்பளி ஒருவனிடமிருந்து வந்திருக்ககூடிய ஒரு நல்ல படைப்புக்கு நான் செய்யக்கூடிய சிறிய மரியாதை, அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்கிற சிபாரிசு மட்டுமே, மெலிஞ்சியின் புத்தகக் காசுகூட இன்னும் கொடுக்கவில்லை என்ற உறுத்தலுடன்.

*----*----*----*

என்னதான் வேருலகைச் சிலாகித்தாலும் மெலிஞ்சியின் அந்தக் கூத்து வரிகள் அந்த மெல்லிய பாம்பு மனிதனிடம் இன்னும் நிறைய இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அஜந்தனாய், காந்தனாய், பெயர்களே தெரியாத அந்தக் கற்கோவளத்து உதைபந்தாட்ட வீரர்களாய் மாறி மெலிஞ்சி யாழ்ப்பாணத்து வெள்ளாளச் செருக்கை எட்டி உதைக்கிறார்,

சம்மாட்டியார் வாய்களிலே
சதைகளை நாம் தீத்தி வைத்தோம்
முள்ளை மட்டும் நாங்களுண்டோம்
முதுகெலும்பு வளைத்துழைத்தோம்
கைகளிலே முள்ளுக்காயம்
காலையிலே பள்ளிக்கூடம்
கணக்கு வாத்தி கம்பெடுத்தால்
கண்ணீரிலும் வெடுக்கு நாறும்... என்கிற வரிகளூடாக.

பி.கு: சக மனிதனின் திறமைகளைச் சிலாகிப்பதுக்கு இன்னொரு பெயர் முதுகு சொறிதல் என்றால்..... நான் மெலிஞ்சிக்கு சொறிந்துதான் விட்டிருக்கிறேன்.