Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Saturday, 16 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 10-ஜனவரி 16, 2010

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
கொழும்பு நியூ மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் பத்து நாட்களின் பின் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களின் மூலம் அரசு வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்' என்கிற கோஷத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனைய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கத் தயாராகிவந்த நிலையில், இந்தக் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து கைதிகள் தமது போராட்டத்தை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வாக்காளர்கள் இருவரதும் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும், தேர்தல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இது தொடர்பாகப் பேசி, இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்வதாக அவர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில்தான் திசநாயக்க இன்னும் தேர்தல் ஆணையாளராக நீடிக்கிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே அவரது சொந்த விருப்பத்துக்கு மாறாக நீதிமன்ற ஆணை ஒன்றின் பேரிலேயே தேர்தல் ஆணையாளராக திசநாயக்க நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்-புகுந்தகம்
தீவிரவாதத்துக்கு எதிரான தீவிரமான போர் என்ற பெயரில் அமெரிக்கா முன்னெடுக்கிற முட்டாள்தனமான போரில் இன்னொரு கனேடியர் காவுகொடுக்கப்பட்டிருக்கிறார். சார்ஜன் ஜோன் போட் (John Faught) என்பவரே இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். ஆஃப்கான் மக்களுக்கு வணக்கம் தெரிவித்தவேறே நடந்து சென்ற இவர் ஒரு பொறிவெடியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார். ஒன்ராரியோவின் சோல்ற் செயின்-மரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி மேற்படி ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குவாத சக்திகளின் முட்டாள்தனமான மோதலில் பலிவாங்கப்பட்ட 139வது இராணுவவீரர் ஆவார்.

மத்திய ரொரொன்ரோ தொகுதி இடைத் தேர்தல் மும்முரமடைந்திருக்கிறது. முன்னை நாள் ஒன்ராரியோ துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மான் தன்னுடைய பதவியை ரொரொன்ரோ நகரபிதா பதவியில் போட்டியிடும் பொருட்டு ராஜினாமாச் செய்த காரணத்தால் அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவரை ஸ்மிதர்மானைத் தாண்டி அந்தத் தொகுதியை லிபரல்களிடமிருந்து கைப்பற்ற முடியாமலிருந்த மற்றக் கட்சிகள் மும்முரமாகப் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன. லிபரல்களுக்கு ஸ்மிதர்மானின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறது. காரணம், ஸ்மிதர்மானின் செல்வாக்கு அப்படி.

செய்திகள்-உலகம்
இந்த வாரம் உலகை உலுக்கியது ஹெய்ட்டி பூகம்பம். அரசியல் நிலையின்மையால் கிழிந்து போயிருந்த இந்த நாடு சமீபத்தில்தான் பெரும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரை இழந்தது, லட்சக்கணக்கானோர் அகதிகளானார்கள். அந்த அழிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் பலமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. செஞ்சிலுவைச் சங்கம் 45,000-50,000 பேர்வரை மடிந்திருக்கலாம் என்ற கணிப்பை வெளியிட்டபோதும், ஹெய்ட்டி உள்நாட்டு அமைச்சர் ஆகக் குறைந்தது 200,000 பேராவது இறந்துவிட்டார்கள் என்று கணிப்புத் தெரிவித்திருக்கிறார். Moment Magnitude Scale ல் புவி மேற்பரப்பில் 7.0 என்ற சுட்டெண்ணுடன் பதிவான இந்த நிலநடுக்கத்தின் பின்னான முதல் 9 மணித்தியாலங்களில் 4.2 சுட்டெண்ணுக்கு மேற்பட்ட மேலும் 26 அதிர்வுகள் இடம்பெற்றதுதான் அழிவை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஐ.நா. மற்றும் பல தன்னார்வ நிறுவனங்கள், உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொண்டர் அமைப்புகள், பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் எல்லாம் ஹெய்ட்டிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன. மேற்கரைக் கோளத்தில் மிகவும் வறிய நாடு ஹெய்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான இயற்கைப் பேரழிவுகளின்போது மனிதம் வெளிப்படுகிறது. ஆனாலும் இயற்கையும் கொன்று நாமும் நம்மைக் கொல்லும் வேகத்தைப் பார்த்தால் 2012 பற்றிய புரளிகளில் உண்மை இருக்குமோ என்று பயப்பட வேண்டியதாய் இருக்கிறது.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
ரோஜேர்ஸ் நிறுவனத்திம் வழங்கிவந்த HTC Dream Smartphone சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் GPS பாவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால், அவ்வாறு GPS பாவிக்கும்போது அவசர உதவிக்கான 911 அழைப்புகளை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறதாம் HTC Dreamல். அதனால் அவசர அவசரமாக ஒரு குறுஞ்செய்தி மூலம் ஏலவே இந்த வகை smartphoneகளைப் பாவிக்கிற பாவனையாளர்களுக்கு சரியான வழிமுறைகளை அனுப்பி வைத்திருப்பதோடு, HTC Dream விற்பனையையும் நிறுத்தி வைத்திருக்கிறது ரோஜேர்ஸ் நிறுவனம்.

விளையாட்டு
கடந்த பத்தாண்டுகளின் மிகச் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பொண்டிங் cricinfo இணையத் தளத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். பல புகழ்பெற்ற வீரர்களின் கடுமையான போட்டியைத் தாண்டி இவருக்கு இந்தக் கௌரவத்தை அந்த இணையத்தளம் கொடுத்திருக்கிறது. அடுத்து வந்த இடங்களை ஜக் கல்லிஸ், அடம் கில்கிறிஸ்ட், முத்தையா முரளிதரன், கிளென் மக்ராத், சச்சின் டெண்டூல்கர், ஷேன் வோர்ண், பிரயன் லாரா, ராகுல் ட்ராவிட், சிவநாராயணன் சந்திரபோல் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். மேற்படி கௌரவத்தைக் கொண்டாடுவதுபோல் பொண்டிங் அடித்தார் பாருங்கள் ஒரு இரட்டைச் சதம், அதுதான் பொண்டிங்.

அலன் போடர், மார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்ற தலைவர்கள் கட்டமைத்த அருமையான அணியில் விளையாடினார் போன்ற காரணங்களையும், நடுவர்கள் எதிரணி வீரர்களுடன் முரண்படுபவர் என்ற பழிச் சொல்லை மீறியும் பொண்டிங் சிறந்த வீரராகத் தெரிவுசெய்யப்படக் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதற்கு இந்த இரட்டைச் சதம் ஒரு நல்ல உதாரணம். அதற்கு முன்னைய போட்டிகளில் அப்படி நாறியவர், அந்த இரட்டைச் சத இன்னிங்ஸ்சை எப்படிக் கட்டியமைத்தார் என்பது masterclass.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
தைப் பொங்கலுக்குத் திரைக்குவந்த படங்களில் பலவற்றின் வலையுலக விமர்சனங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' பிய்த்து எடுக்கப்படுகிறது. பாண்டியர்களின் நிறம்கொண்ட பார்த்திபனைச் சோழனாக நடிக்க வைத்ததிலேயே சறுக்கிவிட்டார் போலிருக்கிறது. தனுஷ் குட்டியில் கடைசிக் காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். விரைவில் டி.வி.டி. வரட்டும். பார்க்கலாம்.

இந்த வருடம் வர இருக்கிற படங்களுக்கான பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஏலவே நல்ல முறையில் சந்தைப்படுத்தப்பட்ட ‘ஹோசானா'வோடு ஏனைய பாடல்களிலும் ரஹ்மான் கவர்கிறார். வித்தியாசமான genreல் அமைந்த 'ஆரோமலே' ஆகட்டும், மெல்லிதாகப் பின்னணியில் நாதஸ்வரம் கலந்து படைக்கப்பட்ட 'ஓமனப் பெண்ணே' ஆகட்டும்... ராஜாவுக்குப் பிறகு எல்லைகளைத் தாண்டுபவராக ரஹ்மான் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது.

Saturday, 9 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 03-ஜனவரி 09, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பரவட்டும் பரவட்டும் ஒளிவெள்ளம். ஒரு வார இடைவெளிவிட்டு மீண்டும் இதோ என்னுடைய வாராந்திரத் தொகுப்பு, நண்பன் ‘வடலூரான்' கலையரசன் என்றைக்கோ சொன்ன புதிய தலைப்புடன்.

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.


செய்திகள்-பிறந்தகம்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற குழப்பம் (அல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்ற பேரம்) கடைசியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தீர்ந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு எடுக்கிற முடிவுகள் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பனவாக இல்லாமல் இருக்கிற காரணத்தால், அவர் இன்னொரு முறை ஜனாதிபதியாக வர அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது என்றும், இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகவுக்கு தமிழ் மக்கள் யாவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய வரியாக கருதக்கூடியது, ‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன'. அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நாக்கைப் புரட்டிப் பேசுவார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம் இங்கே. (முஸ்லிம்களை மட்டும் தொப்பி பிரட்டிகள் என்று இலகுவாக முத்திரை குத்திவிட முடிகிறது நம்மால். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை?)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார். அவரது பூதவுடல் வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் A9 நெடுஞ்சாலையூடாக வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இராணுவக் காவலில் இயற்கை மரணம் எய்தினார் என இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது (??!!).

செய்திகள்-புகுந்தகம்
வருகிற ஜனவரி 25ம் திகதி தொடங்கவேண்டிய கனேடியப் பாராளுமன்ற அமர்வை மார்ச் 3ம் திகதிவரை பின்தள்ளி வைக்க பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. பெப்ரவரி 12-28 வரை நடக்க இருக்கிற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற அமர்வைத் தள்ளிவைக்க இருப்பதாக ஹார்ப்பர் சொல்லும் காரணத்தை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்திருக்கிறன. அதிலும் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் சர்வநிச்சயமாக குறிப்பிட்ட திகதிகளில் மன்றில் இருப்போம், தங்கள் வேலையைச் செய்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆஃப்கானியக் கைதிகளைத் துன்புறுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளின் சூட்டை இன்னும் குறைப்பதற்கே ஹார்ப்பர் முயல்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறன.

இதே வேளை பொதுமக்களும் பாராளுமன்றம் பிற்போடப்படுவதை ஆதரிக்கவில்லை. Facebook, twitter போன்ற சமூக வலையமைப்புகளில் மக்களின் எதிர்ப்புக்குரல் வலுவாகப் பதியப்பட்டுள்ளது. வழமையாக வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களை வேலைக்குக் கொண்டுவர back to work legislation கொண்டுவருவார்கள் ஆள்பவர்கள். இனி மக்கள் பொங்கி ஆள்பவர்களை வேலைக்கு இழுத்துவரவேண்டி இருக்கும் போல் இருக்கிறது நிலைமை.

செய்திகள்-உலகம்
உமர் அப்துல்முதலப்பின் வாக்குமூலத்தின் பின்னர் யேமன் நாட்டுக்கு பிரச்சினை முற்றி இருக்கிறது. அல்-கய்தா தன்னைப் போல் பலரை மூளைச் சலவை செய்து யேமன் நாட்டில் வைத்து அமெரிக்காவுக்கு எதிராக தயார் செய்து வருகிறது எனற உமரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தீவிரவாதத்துக்கு எதிரான பயிற்சிகளை யேமன் நாட்டின் படைகள் மேற்கொண்டு வருகின்றன. யேமன் நாட்டின் புவிச்சூழல் ஆஃப்கானிஸ்தானைவிட அல்-கய்தாவுக்குப் பாதுக்காப்பானதாக இருப்பதால் இலகுவில் அங்கே இருக்கிற தீவிரவாதிகளை அழித்துவிட முடியும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. அல்-கெய்தாவிடமும், ஏகாதிபத்தியங்களிடமும் கேட்க நினைக்கும் கேள்வி இவைதான்:
  1. முஸ்லிம்களுக்கு உலகமே சேர்ந்து அநீதி விளைவித்துவிட்டதாகச் சொல்லி நீங்கள் எடுக்கிற முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் ஏன் குர்-ஆன் என்ற புனித நூலுக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்?
  2. உங்கள் இருதரப்புக்குமான முட்டல் மோதலில், எங்கோ ஒரு மூலையில் பிறந்து, வளர்ந்து, கொஞ்சம் மேலான வாழ்க்கை தேடி வெளிநாடுகளுக்கு வருகிற அப்பாவிகள் ஏன் சாகவேண்டும்?


வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீள்வது பற்றிய நம்பிக்கைகள்மீது இன்னொரு இடி விழுந்திருக்கிறது. கனடாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் சென்ற மாதத்துக்கான வேலையின்மை பற்றிய புள்ளிவிபரங்கள் நம்பிக்கையூட்டுவதாய் இல்லை. கனேடியப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைப்படி டிசம்பர் மாதம் 2600 பேர் வேலையிழந்தார்கள். 20,000 பேர் வேலை பெற்றார்கள். நவம்பரில் திடீரென 79,000 பேர் வேலை பெற்றபோது கிடைத்த நம்பிக்கை இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. இருந்தபோதும் வேலையின்மைச் சுட்டெண் 8.5ல் மாறிலியாகவே இருந்திருக்கிறது.

இப்படியாகப் பொருளாதாரம் மீள்வதற்குப் பலர் போராடிக்கொண்டிருக்க, வங்கிக் கடன்களைச் சுருட்டிக்கொண்டு வங்குரோத்துக்குப் போவது, விபத்துக்களை செயற்கையாக உருவாக்கி காப்புறுதி நிறுவனங்களை அறுப்பது, கள்ளக் கடனட்டைகள் என்று ஒரு கூட்டமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

விளையாட்டு
அங்கோலாவில் நடைபெற இருக்கிறா ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்ள அங்கோலா சென்ற ரோகோ நாட்டுக் காலபந்தாட்ட அணி பயணம் செய்த பஸ்மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் மேற்கொண்ட தாக்குதல் இந்த வாரம் விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 'எங்களை நாய்களைப் போல சுட்டார்கள்' என்று ரோகோ வீரர் தோமஸ் டொசாவி கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. தனியே விளையாட்டு வீரர்கள் மீது நடந்த தாக்குதலாக மட்டும் இதை நோக்காமல், மனித குலம் அழிவுப் பாதையில் விரைவாகச் சென்றுகொண்டிருப்பது தொடர்பான எச்சரிக்கையாக இதைக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட இனங்கள் துப்பாக்கி தூக்காவிட்டால் அழிக்கப்பட்ட இனங்களாகிவிடும் அபாயம் இருக்கிறபோதும், துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதற்கு சமீபத்தில் நாங்கள் பார்த்த உதாரணம், இலங்கைப் பிரச்சினை.

இதே வேளை இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கிற கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளுக்கும் இந்தத் தாக்குதல் ஒரு அச்சுறுத்தலே. தென்னாபிரிக்கா அருமையாகப் போட்டிகளை நடாத்தக்கூடிய ஒரு நாடு. அங்கே நடக்க இருக்கிற மிகப்பெரிய போட்டித்தொடர் 2010 கால்பந்தாட்ட உலகக் கோப்பை. அது தென்னாபிரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆபிரிக்காவுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. பார்க்கலாம்.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
சரத்குமாரின் ‘ஜக்குபாய்' படம் வெளிவர முன்னரே திருட்டு வி.சி.டி. யில் உலகம் பூராவும் வெளிவந்து தமிழ்த் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரையுலகம் அதிர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு ஒழுங்கு இருக்கிறதல்லவா, அது அப்படியே நடந்தது. திரையுலக ஜாம்பவான்கள் கூடிக் கூட்டம் போட்டுத் திட்டித் தீர்த்தார்கள். சரத்தும், ராதிகாவும் மேடையில் கண்கலங்கினார்கள். முதல்வர் கருணாநிதியை நோக்கி ஜம்பவான்கள் படையெடுத்தார்கள். மனுக் கொடுத்தார்கள். ‘மனு'நீதிச் சோழன் உடனே முடிவெடுத்தார். இனிமேல் திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள், விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் என்று அறிவித்தாயிற்று.

எல்லாம் சரிதான், திரையுலகுக்கு உள்ளே நடக்கும் மோசடிகளுக்கெல்லாம் எந்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? உதவி இயக்குனர்கள், துணை நடிகர்கள், நடிகைகள், முன்னணி நடிகைகள், தொழில்நுட்பவியலாளர்கள் தொடக்கம் எத்தனையோ பேரைப் பயங்கரமாக சுரண்டிக் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார்கள் இவர்கள். அப்படிச் சுரண்டப்படுபவர்கள்தான் இவர்களைத் திருட்டு வி.சி.டி. வடிவில் சுரண்டுகிறார்களோ என்பது என் ஐயம்.

Saturday, 26 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 20-டிசம்பர் 26, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

செய்திகள்-பிறந்தகம்
பிரதான எதிர்க்கட்சிகளின் தலைமை வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. ஜனாதிபதி ராஜபக்சவுக்கா அல்லது சரத் பொன்சேகாவுக்கா ஆதரவு வழங்குவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஆலோசனை செய்துகொண்டே இருக்கிறது. இரு பகுதியினருடனும் பேரம் பேசிக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை, சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்கிற இரண்டு முடிவான முடிவுகளை மட்டும் எடுத்திருக்கிறார்கள் இதுவரைக்கும். யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று தேர்தலுக்கு முன்னரே முடிவெடுப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

இதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்களையும் குடும்பங்களையும் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொன்றதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும் அது தொடர்பாக அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அதற்குப் பதிலளித்து சேறு பூசப்பட்டாலும் நாட்டைத் தூய்மைப்படுத்த நான் தயார் என்று சொல்லியிருக்கிறார் சரத். பிரச்சாரக் களத்தில் இரு முன்னாள் நாயகர்கள் ஒருவரை ஒருவர் வில்லன்களாக்கி ஆடும் இந்த ஆட்டத்தில் பகடைக்காய்கள் இந்தமுறையும் மக்களே.

செய்திகள்-புகுந்தகம்
உயர்ந்த மாடிக் குடியிருப்பு ஒன்றில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு திருத்தப் பணியாளர்கள், அவர்களைத் தாங்கியிருந்த தளம் உடைந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்திருக்கிறார்கள். நத்தாருக்கு முதல் நாள் மாலை 2757 கிப்ளிங் வீதியில் அமைந்திருந்த மேற்படி கட்டிடத்தின் உப்பரிகைகளில் இருந்த சிறிய பாதிப்புக்களைச் சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் கொண்ட குழுமம் 13 வது மாடியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவர்களைத் தாங்கியிருந்த தளம் உடைந்துபோக ஐந்து பேரும் கீழே விழுந்திருக்கிறார்கள். நால்வர் உடனேயே உயிரிழந்துபோக மற்றவர் நிலமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர்கள் வெளிவிடப்படாவிட்டாலும், அவர்கள் அனைவரும் சமீபத்தில் கனடாவுக்குக் குடிவந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபர்கள் கனடாவுக்கு சமீபத்தில் குடிவந்தவர்கள் என்றதும் கனடாவிற்கு குடிவரும் பலர் எழுப்பும் குற்றச்சாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. வெளிநாடுகளில் அவர்கள் பெற்ற கல்வி இங்கு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவர்களின் படிப்புகளுக்கு இலகுவில் இங்கே வேலை கிடைப்பதில்லை. இங்கே அவர்களை மேம்படுத்திக் கொண்டாலும் மிகவும் கடின முயற்சியின் பின்னரே வேலை கிடைக்கிறது. இங்கே பிறந்து வளர்ந்தவர்களைவிட, ஒரே தரத்தில் வேலை செய்தாலும், சராசரியாக குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இப்படிக் குடிபெயர்ந்து வந்தவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்தால் அதற்கு ஒரே காரணம், இரத்தம் சுண்டும் உழைப்பு. மற்றபடி இப்படிக் குடிவந்து யாரும் சொகுசாக வாழ்ந்ததில்லை.

செய்திகள்-உலகம்
தொடர்ந்து மூன்றாவது வாரமாகவும் தெலுங்கானா பற்றிய செய்திகளைப் பகிரவேண்டி இருக்கிறது. தனித் தெலுங்கானாக் கோரிக்கை தொடர்பான வன்முறைகள் ஆந்திர மாநிலத்தில் அதிகரித்திருக்கின்றன. திங்கட்கிழமைக்கு முன்னர் தனித் தெலுங்கானா தொடர்பான தீர்வு ஒன்றை இந்திய நடுவண் அரசு அறிவிக்காவிட்டால் ஆந்திராவே ஸ்தம்பிக்கும் வண்ணம் (புதிதாக என்ன ஸ்தம்பிப்பு??) கடையடைப்பு நடைபெறும் என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே தெலுங்கானாவைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி, ஆந்திராவில் மிகப் பாரிய அரசியல் நெருக்கடியையும், வன்முறைகளையும் தோற்றுவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக விரைவில் ஒரு முடிவை முன்வைப்போம் என்று மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார். தெலுங்கானா கொடுக்காவிட்டால் இவர்கள், கொடுத்தால் ராயல சீமா மற்றும் கடலோர ஆந்திரா மக்கள் என்று யாராவது வன்முறையில் ஈடுபடத்தான் போகிறார்கள். நடுவண் அரசின் நிலமை கவலைக்கிடமே.

இந்தியப் பெருங்கடல் நாடுகளில் பல சுனாமிப் பேரனர்த்தத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினத்தை சனிக்கிழமை (டிசம்பர் 26) அனுஷ்டிக்கின்றன. கிட்டத்தட்ட 250,000 பேரைப் பலிகொண்ட இந்த இயற்கைப் பேரனர்த்தத்தில் பல உறவுகள் அழிந்து போயின. இருந்தும் சில உறவுகள் மலர்ந்தன. அப்படி ஒரு மலர்வு பற்றிய அல்-ஜசீராவின் காணொளி கீழே. என்ன செய்வது, மனித மனங்களின் அடியாழத்தில் புதைக்கப்பட்ட மனிதத்தைத் தோண்டி எடுக்கவாவது சில அனர்த்தங்கள் தேவையாய் இருக்கிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
சென்ற வாரம்தான் Blackberry தயாரிப்பாளர்கள் RIM பற்றிய நேர்மறைச் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். ஆனால் இந்த வாரம் அவர்களுக்கு நல்ல வாரமாக அமையவில்லை. இந்த வாரத்தில் மட்டும் இரண்டுதடவை இவர்களின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகச் சமூகக் குழுமங்கள் அனைத்திலும் இவர்களுக்கு எதிரான அதிருப்தி அலை தோன்றியிருக்கிறது. இந்த வாரம் இவர்களின் பங்குகளின் விலைகள்கூட சிறிது சரிவுக்குள்ளானது. மென்பொருள் மேம்படுத்தலே இந்த சேவைத் தடங்கலுக்குக் காரணம் என RIM அறிவித்திருக்கிறது. எந்தத் தொழில்நுட்பம் RIM ஐ உயரத்துக்கு இழுத்துச் சென்றதோ, அதே தொழில்நுட்பம் இந்தவாரம் காலை வாரியிருக்கிறது. Appl i-Phone களத்தில் இருப்பதால் RIM உயர்மட்ட நிர்வாகத்துக்கு இது சோதனை காலம் என்றே சொல்லலாம்.

ரொரன்ரோ பங்குச்சந்தை நத்தார் வாரத்தில் நல்ல போக்கைக் காட்டியிருக்கிறது. சக்தி வழங்கல் துறைப் பங்குகளும், நிதித்துறைப் பங்குகளும் நல்ல விலைகளை எட்டியதும் இதற்குரிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. மேலும் நத்தார் காலப் பகுதியில் வழமை போல கொஞ்சமாவது அதிகரித்திருக்கும் நுகர்வோர் கொள்வனவும் இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

விளையாட்டு
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றி இருக்கிறது, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கத் தக்கதாக. மூன்றாவது போட்டி 21ம் திகதி கட்டக்கில் நடந்த போது ஒரு கட்டத்தில் 22 ஓவர்களில் 165-2 என்ற வலுவான நிலையில் இருந்த ஜடேஜாவின் பந்துவீச்சில் இலங்கை பரிதாபமாக 239க்கு சுருள, பொறுப்பாக 96 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் சச்சின் பெற்று இந்தியாவை 2-1 என்று முன்னணிப்படுத்தினார். 24ம் திகதி கொல்கத்தாவில் நடந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று சங்கா துடுப்பெடுத்தாடிய போதே சேவாக் சொன்னபடி தரங்கா (118), சங்கா (60) மற்றும் பின்வரிசை வீரர்களின் அதிரடி மூலம் இலங்கை பெற்ற 315 ஓட்டங்களை, சச்சின் (8), சேவாக் (10) என்று ஆட்டமிழந்த போதும் காம்பிர் (150*), கோலி (107) அபார ஆட்டத்தால் இலகுவாகக் கடந்து இந்தியா தொடரை வென்றது. இலங்கை ரசிகர்கள் சிலரால் crapinfo என்றழைக்கப்படும் cricinfo இந்தப் போட்டிக்காக எழுதிய match previewஐ சங்கா வாசித்திருக்கலாம். இலங்கையுடன் 2005 ம் ஆண்டுக்குப் பின்னர் விளையாடிய ஐந்து பரஸ்பர போட்டித் தொடர்களும் இந்தியா வசம்.

இலங்கையின் நட்சத்திர அதிரடி வீரர் சனத் ஜயசூரிய டிசம்பர் 26, 2009 சனிக்கிழமையுடன் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்வில் 20 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். 1992 உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் மார்க் கிரேட்பட்ச் ஆரம்பித்து வைத்த முதல் 15 ஓவர்களில் பேயாட்டம் என்கிற சித்தாந்தத்துக்கு முறையான வடிவத்தைக் கொடுத்தவர் என்கிற ரீதியில் சனத்தின் இடம் கிரிக்கெட் வரலாற்றுப் பக்கங்களில் என்றும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்கள் வழமை போலவே நடக்கின்றன. புலம் பெயர் தமிழர்கள் ‘போராட்டம்' நிகழ்த்திய களைப்பில் புட்டிகளைத் திறந்து களைப்பாறுகிறார்கள். ரொரன்ரோவுக்கு இந்த முறை 'வெள்ளை நத்தார்' இல்லை. அதாவது, பனிப்பொழிவு இல்லை. அத்திலாந்திக் கனடாவும், அமெரிக்காவின் சில பகுதிகளும் வெள்ளைக் நத்தார் கொண்டாடுகிறார்கள். பின்னே, 25-60 செ.மீ வரையிலான பனிப்பொழிவு இருந்தால் வெள்ளை நத்தார்தானே. இந்தக் குளிரிலும் எப்படித்தான் கொண்டாடுகிறார்களோ!!!

இதே வேளை வத்திக்கான் சிறப்புப் பிரார்த்தனையில் போப்பாண்டவரை ஒரு மன நலம் குன்றிய பெண் தள்ளி விழுத்தியது பரபரப்பாகிவிட்டது. 82 வயதான புனித 16ம் பெனடிக்ட் ஏற்கனவே ஒரு முறை கீழே விழுந்து கால் முறிவுக்குள்ளாகி இருந்தவர். இந்த முறை விழுந்த போதும் அவருக்கு முறிவு ஏதும் ஏற்படவில்லையாம். ஆனால் அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 87 வயதான ரோஜர் கிட்கரே என்கிற பாதிரி விழுந்து காலை முறித்துக்கொண்டாராம்.



எப்புடீ??........
கிளென் மெக்ராத் மீது கிரிக்கெட் உலகம் ஏன் மரியாதை வைத்திருக்கிறது என்று தெரிய வேண்டுமா? இங்கே 'க்ளிக்'கி வரும் காணொளியின் முதல் மூன்று நிமிடங்களை வர்ணனையாளர்கள் மற்றும் ஷேன் வோர்ன், மெக்ராத் போன்றவர்களின் சம்பாஷணையோடு கேட்டுப்பாருங்கள். (காணொளி நன்றி: www.desipad.com)

Saturday, 19 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 13-டிசம்பர் 19, 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவினுடையது என்று கூறப்படும் உடலம் ஒன்றின் புகைப்படங்கள் இந்தவாரம் வெளியாகியிருக்கின்றன. வழமைபோலவே நிர்வாணப்படுத்தப்பட்டு சுடப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படங்களில் இருப்பது துவாரகாவிப் உடலம்தான் என்று ஊடகங்கள் சொல்ல, அது துவாரகாவின் உடலம் இல்லை என்று இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான உதய நாணயக்கார மறுப்புத் தெரிவித்திருக்கிறார். பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி தவிர அவரது குடும்பத்தினரின் உடலங்கள் எதையும் நாம் இன்னும் அடையாளம் காணவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அது துவாரகாவின் உடலமா இல்லையா என்பதைவிட, கிடைத்த உடல்களை எல்லாம் நிர்வாணப்படுத்திப் படம் பிடித்து வலைகளில் மேயவிடுகிற வக்கிரம் கண்டிக்கத்தக்கது.

வருகிற ஜனவரி மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். அதற்கான கட்டுப்பணத்தைத் தேர்தல் ஆணையத்தில் செலுத்தி, தேர்தல் களத்தில் முற்றுமுழுதாக இறங்கிவிட்டார். மேலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக சிவாஜிலிங்கம் கூறியிருக்கிறார். இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவுடன் இணைந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தான் ஈடுபட இருப்பதாகவும், வடக்குக் கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலும் தான் பிரசாரம் செய்யப்போவதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

அரசியல்-புகுந்தகம்
புவி வெப்பமாதல் பற்றி டென்மார்க்கில் நடந்த மாநாட்டில் கனடா மீது கடும் கண்டனங்கள் வெளிவிடப்பட்டிருக்கின்றன. சூழல் மாசடைதல் தடுப்பு முயற்சிகள் மற்றும் உமிழ்வுக் கட்டுப்பாட்டின் கனடா பின்தங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் ரொரன்ரோ நகரத்தின் சூழல் மாசடைதல் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பாராட்டும் ஆதரவும் கிடைத்திருப்பது ரொரன்ரோ நகரவாசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்பதாக நகரபிதா டேவிட் மில்லர் தெரிவித்திருக்கிறார். நகரசபை ஊழியர்களின் பல்வேறுவகையான முயற்சிகளும், ரொரன்ரோ வாசிகளின் முழுமையான ஒத்துழைப்புமே இதற்கு முக்கிய காரணம் என்று மில்லர் தெரிவித்தார்.

இதே வேளை இதே சூழல் மாசடைதல் கருத்தரங்கு கனடாவில் இன்னொரு சிறிய அரசியல் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. ஒன்ராரியோ மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் John Gerretsen மற்றும் கியூபெக் மாநில பிரதம அமைச்சர் Jean Charest, ‘அல்பேர்ட்டாவில் உமிழ்வு அதிகரித்துக்கொண்டே போகிறபோது நாங்கள் மட்டும் ஏன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும்?' என்கிற ரீதியில் வெளிவிட்ட கருத்துக்களால் அல்பேர்ட்டா மக்கள் தனி நாடாகப் பிரிந்து போவது பற்றிப் பேசத்தொடங்கியிருப்பதாக அல்பேர்ட்டா பிரதமர் Ed Stelmach தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்தப் பிரிவினைக் கோரிக்கையை வைத்துக் கியூபெக் வாழ்கிறது. இனி அல்பேர்ட்டாவும் அதே வழியில் போகுமா என்பதற்குக் காலமே பதில் சொல்லும்.

அரசியல்-உலகம்
தனித் தெலுங்கானா மாநிலம் தொடர்பான பிரச்சினை கொழுந்துவிட்டு எரிகிறது. 9 நாட்களாகக் கடையடைப்பு நடக்கிறது. பலபேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பலரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சிரஞ்சீவியின் கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இதே வேளை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதிக் கட்சியின் தலைவர் மணிபால் ரெட்டி என்கிறவர் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் தலையைக் கொண்டுவந்தால் 50 இலட்சம் பரிசு கொடுப்போம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக மனித உரிமை ஆணயத்திடம் காங்கிரஸ் புகார் கொடுத்திருக்கிறது. காவல்துறை, நீதித்துறை எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

மும்பையில் 26/11 நடந்த தாக்குதல் போல இலண்டனிலும் நடக்கலாம் என்று ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்திருப்பதாக ஸ்கொட்லாந்து யார்ட் அறிவித்திருப்பதால் இலண்டனில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
Blackberry தயாரிப்பாளர்களான RIM என்றழைக்கப்படும் Research In Motion நிறுவனம் தன்னுடைய மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான இலாபம் ஈட்டியிருக்கிறது. நான்காவது காலாண்டு தொடர்பான அவர்களின் எதிர்வுகூறலும் நன்றாக இருப்பதால் பொருளாதார வல்லுனர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்வு கூறிய இலக்குகளை RIM நிறுவனம் வெகு இலகுவில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகளின் சந்தைவிலை கூடியிருக்கிறது.
2002 தொடக்கம் 2009 இரண்டாவது காலாண்டு வரை கிட்டத்தட்ட 75 மில்லியன் Blackberry Smartphone களை உற்பத்தியிடங்களில் இருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிய RIM நிறுவனம், 2009 ன் மூன்றாவது காலாண்டில் மட்டும் 10 மில்லியன் Blackberry களை உற்பத்தி சந்தைப்படுத்தியிருப்பது அவர்களின் வரலாற்றில் ஒரு மைல்கள் மட்டுமல்ல, ஒரு வியத்தகு சாதனை என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். நான்காவது காலாண்டிலும் அதே போல் 10 மில்லியன் Blackberry களைச் சந்தைப்படுத்தும் திட்டம் தங்களிடம் இருப்பதாக RIM கூறியிருக்கிறது.

விளையாட்டு
இலங்கை-இந்தியா ஒரு நாள் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. சேவாக் 146 அடித்து இந்தியாவை 414 என்ற இமாலய எண்ணிக்கை பெற வைக்க டில்ஷானின் 160 மற்றும் சங்காவின் 43 பந்துகளில் எடுத்த 90 சகிதம் 411 ஓட்டங்களைப் பெற்று முதல் ஒரு நாள் போட்டியில் போராடித் தோற்ற இலங்கை அணி, தோனியின் சதம் காரணமாக இந்தியா பெற்ற 301 ஓட்டங்களை டில்ஷானின் அருமையான சதத்தின் உதவியுடன் கடந்தது. என்னதான் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளங்களாக இருந்தாலும் இரண்டு போட்டிகளும் மிகவும் பரபரப்பாகவே இருந்தன என்பதை மறுக்க முடியாது.

மிக ஆறுதலாக 50 ஓவர்களை வீசி முடித்தார் என்கிற காரணத்தால் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் ப்ரோட் தோனிக்கு துணிவாக விதித்த இந்தத் தடை பாராட்டப்பட வேண்டியது. இப்போதெல்லாம் இந்திய வீரர்கள் கிரிக்கெட் என்கிற ஆட்டத்தைவிட வீரர்களான தாங்களே பெரியவர்கள் என்பது போல் நடந்து கொள்வது அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பன்றிக் காய்ச்சலால் யுவராஜும் விளையாட முடியாமல் இருக்கிற நிலையில் இந்தியாவுக்கு இது பேரிழப்பே.

சினிமா-பொழுதுபோக்கு
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளியான விஞ்ஞானப் புனைவுப் படமான Avatar உலகம் முழுவதும் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் 73 மில்லியன் வசூலுடன் நேரடியாக முதலாவது இடத்துக்குத் தாவியிருக்கிறது. டிசம்பர் மாதம் வெளிவிடப்பட்ட ஒரு படத்துக்கு முதல் வாரத்தில் இவ்வளவு வரவேற்புக் கிடைத்திருப்பது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இருந்த போதும் 2007ல் வில் ஸ்மித்தின் I am Legend படத்தில் 77.2 மில்லியன் சாதனையை முறியடிக்க முடியவில்லை இந்தப் படத்தால். இந்தியாவில் 18ம் திகதி வெளியிடப்பட்ட இந்தப் படம் முதல் நாளிலேயே 6.75 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது.

புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் ‘வேட்டைக்காரன்' நல்ல ஆரம்பம் பெற்றிருக்கிறதாம். புலம் பெயர் நாடுகளில் நிலவரம் தெரியவில்லை. இங்கிலாந்தில் 7 காட்சிகள் ஓடுகிறதாம். கனடாவில் சில முக்கிய தமிழர் திரையரங்குகள் புறக்கணித்திருந்தாலும், famous players பக்கம் கூட்டம் அலைமோதுவதாகக் கேள்வி.

அடப் பாவிகளா........
OnlineFamily.Norton நிறுவனத்தின் ஆய்வுப்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் 2009ம் ஆண்டு வலையில் தேடியது என்ன தெரியுமா? பாலுறவுப் படங்களையும், மைக்கல் ஜாக்சனையும்தானாம். சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட இந்த அறிக்கைப்படி இளம் ஆண்கள், பெண்களின் தேடுதல் பட்டியலில் முன்னுக்கு நிற்கும் விஷயங்கள் வருமாறு:

வயது ரீதியான பாகுபடுத்தல் வருமாறு:


Saturday, 12 December 2009

நான் பார்க்கும் உலகம்: டிசம்பர் 06-டிசம்பர் 12 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கு இலங்கை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இருந்தும் இன்னும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் அது தொடர்பாக சட்டத்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இலங்கைத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மே மாதம் வன்னிக் காடுகளில் நடந்த கடுமையான சண்டைகளின் முடிவில் பிரபாகரனின் உடல் என்று ஒரு உடலைக் காட்டிய இலங்கையிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்து வைப்பதற்கு ஏதுவாக இறந்தது பிரபாகரன்தான் என்பதற்கான ஆதாரங்களையும், இறப்புச் சான்றிதழையும் கோரியிருந்தது இந்தியா. அந்த ஆதாரங்களில் இறப்புச் சான்றிதழ் தவிர மிகுதி எல்லாவற்றையும் தாம் இந்தியாவிடம் காட்டிவிட்டதாக இலங்கை தெரிவித்திருக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்தி உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியிருக்கின்றன. டிசம்பர் 12ம் திகதி பிரான்சின் இந்த வாக்குப்பதிவுகள் நடக்கின்றன. வருகிற பத்தொன்பதாம் திகதியன்று கனடாவிலும் நாடுதழுவிய வாக்கெடுப்புகள் நடக்க இருக்கின்றன. கனடா வாழ் தமிழர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை தமிழர் தேர்தலுக்கான கூட்டணியின் வலைப்பக்கத்துக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

அரசியல்-புகுந்தகம்
ஆஃப்கானில் கைதிகளை அந்நாட்டு அதிகாரிகளிடம் கையளித்தது தொடர்பான தணிக்கை செய்யப்படாத ஆவணங்களை பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில் ஹார்ப்பர் அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அந்த ஆவணங்களை வருகிற ஜனவரி 25ம் திகதி மீண்டும் கீழ்ச்சபைக்கு வரும்போது ஹார்ப்பர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கீழ்ச்சபை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற வியாழக்கிழமை நடந்த பாராளுமன்றக் கீழ்ச்சபை ஒன்றுகூடலிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேற்படி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இருந்த போதும், சட்டரீதியான சில ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என அரச தரப்பு அறிவித்திருக்கிறது. தேசியப் பாதுக்காப்பைக் கருத்தில் கொண்டும், இராணுவ வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நேச நாடுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்கவும் ஒரு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது என்கிற அரசின் வாதம் அடிபட்டுப் போகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏற்கனவே வெறும் 38% பெரும்பான்மை கொண்ட ஹார்ப்பர் அரசின் மீது, இவ்வாறான ஆவணங்களை மறைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் அறியும் உரிமையை மட்டுமல்லாது சாதாரணக் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையையும் மறுக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன.

அரசியல்-உலகம்
சந்திர சேகர ராவின் உண்ணாவிரதம், மாணவர் கலகம் இவை எல்லாவற்றிம் முடிவாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்துத் தனித் தெலுங்கானா மாநிலம் என்று ஒன்றை உருவாக்க இந்திய அரசு கொள்கையளவில் சம்மதம் தெரிவித்திருக்கிறது. இனிமேல் அதற்குரிய அமைப்புரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. மத்திய அரசின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து ஆந்திர மாநில அமைச்சர்கள் பதவி விலக முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ரோசய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க விருப்பம் தெரிவித்த பல கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு ரோசய்யாவை நட்டாற்றில் விடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது. (ஏற்கனவே 138 சட்டசபை உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது).

இதே வேளை தமிழகத்தின் தென் மாவட்டங்களைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதாக ராமதாசுவும், உத்தரப் பிரதேசத்தை மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்று மாயாவதியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தேசப்பற்று என்கிற மாய நூல் மூலம் தைக்கப்பட்டிருந்த இந்தியாவின் தையல்கள் இத்துப்போக ஆரம்பித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தேசப்பற்று இன்னமும் அவர்களிடம் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது. தம் நாட்டில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்து சாவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், இன்னொரு நாட்டில் இவர்களைத் தொப்பூள் கொடி உறவுகளாக நம்பிய ஒரு கூட்டமே கொத்துக் கொத்தாக செத்தபோது இறையாண்மை பேசினார்களல்லவா???

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
Globalive Wireless என்கிற தொலைத்தொடர்பு நிறுவனத்தைக் கனேடிய சந்தையில் அரசாங்கம் அனுமதித்தது பற்றி கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. ரோஜேர்ஸ், பெல், ரெலஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுமே இவ்வாறான அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன. அதிலும் ரோஜேர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மேற்படி அறிவிப்பைத் தொடர்ந்து 6.7% ஆல் மதிப்புக் குறைந்திருக்கின்றன. 725 மில்லியன் சந்தை முதலாக்கத்தையும் ரோஜேர்ஸ் இழந்திருக்கிறது. இருந்த போதும் எப்படியான போட்டியாளர்களையும் சந்திக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதேவேளை Globalive நிறுவனத்தின் செல்லிடப் பேசிச் சேவையான Wind Mobile வரையறையற்ற பயனர் திட்டங்கள், ஒப்பந்தங்கள் இல்லாத சேவை போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருப்பது மேற்படி மூன்று நிறுவனங்களையும் கலங்கிப்போக வைத்திருக்கும். இப்போதுதான் இவர்கள் system acess fee நீக்கினார்கள். இப்போது இன்னும் பல கட்டணங்களைக் குறைக்க வேண்டி வரும் போல் இருக்கிறது. வர்த்தக உலகில் போட்டிகள் அதிகரிப்பது யாருக்கு லாபமோ இல்லையோ சாதாரண பயனாளர்களுக்குப் பெரும் லாபம்.
விளையாட்டு
இந்தியா-இலங்கை இருபது-இருபது போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் 37 பந்துகளில் சங்ககார எடுத்த 78 ஓட்டங்கள் மற்றும் கப்புகெதர, மத்தியூஸ் ஆகியோரின் அதிரடி காரணமாக 215 ஓட்டங்களை இலங்கை அணி குவித்தது. பதிலுக்கு ஆடிய இந்தியாவுக்கு கம்பீரும், சேவாக்கும் திறமையாக ஆடிய போதும் 40 வயது இளைஞர் சனத்தின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா 29 ஓட்டங்களால் தோற்றுப்போனது. சனத் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியிலும் சங்கா, சனத், ஜயசிங்க, மத்தியூஸ் ஆகியோரின் அதிரடியில் இலங்கை 206 ஓட்டங்களைப் பெற்ற போதும் சேவாக் 64 (36 பந்துகளில்), யுவராஜ் 60 (25 பந்துகளில்), தோனி 46 (28 பந்துகளில்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியா 6 விக்கெட்டுகளால் வென்று தொடரைச் சமன் செய்தது. இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் கண்ட சங்கா ஆட்டத்தொடர் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இருபது இருபது போட்டிகளில் சங்கா போன்றோர் ஓட்டம் குவிப்பதைப்போல் கிரிக்கெட்டில் வேறு எதையும் ரசிக்க முடியாது. இயலுமானளவுக்கு சரியான அடிகளை அடிக்கும் சங்கா, மகேல போன்றோர் ஓட்டம் குவிப்பதற்கும் மற்றவர்கள் ஓட்டம் குவிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக technically correct என்று சொல்லக்கூடிய வீரர்களில் இந்த இருவர் மட்டுமே இருபது இருபது போட்டிகளிலும் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சினிமா-பொழுதுபோக்கு
12.12, ரஜினிக்குப் பிறந்தநாள். என்னதான் 60 வயதாகிவிட்டாலும் ரஜினி என்கிற காந்தம் இன்றும் பலரை இழுத்து வைத்திருக்கிறது என்பதற்கு அவரது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடிய விதமும், அவரைப் பற்றி வலைப்பதிவாளர்களின் பதிவுகளுமே சான்று. வழமைபோல பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, எங்கோ ஒரு ஆசிரமத்தில் தியானம் செய்தாராம் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் நடிப்பு, அவர் தெரிவு செய்கிற படங்கள், அவரது அரசியல் தெளிவின்மை போன்றவற்றின் மீது விமர்சனங்கள் இருப்பினும், அவரை ஒரே ஒரு விஷயத்துக்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரையுலகில் திரைக்கு வெளியே அவர் காட்டுகிற எளிமை. நேற்று முளைத்த காளான்கள் முதல் என்றோ முளைத்த விருட்சங்கள் வரை எல்லோரும் இந்த ஒன்றை அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும். மசாலாப் படங்களைத் தவிர்த்து, ரஜனிக்குள் பலவந்தமாக ஒளித்துவைக்கப்பட்ட அபார நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் படங்களில் இனி அவர் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ரஜனி-60 க்கான வாழ்த்து அல்லது வேண்டுகோள்.

அட........
அந்தத் தீவின் பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. பசிபிக் சமுத்திரத் தீவுக்கூட்டங்களில் ஒரு தீவு அது. பெயர் Vanuatu. இந்தத் தீவின் பிரதமர் எட்வேர்ட் நடாபே பதவி நீக்கப்பட்டிருக்கிறார். ஏன் தெரியுமா? பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்படி அறிவிக்காமல் மூன்று பாராளுமன்ற அமர்வுகளில் இவர் கலந்துகொள்ளவில்லையாம். இதனால் அந்நாட்டு அரசியல்வாதிகள் கூடி அவரைப் பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். பாராளுமன்றக் கூட்டங்களுக்கு சாதாரண உறுப்பினர்களே சமுகமளிக்காமல் திரிவதையும் பார்த்திருக்கிறோம். முறையான விளக்கமின்றி அமர்வுகளில் கலந்து கொள்ளாத காரணத்துக்காக பிரதமரையே பதவி நீக்குவது என்னும் செய்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

Saturday, 5 December 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 29-டிசம்பர் 05 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் என்று சிவாஜிலிங்கம் எம்.பி. சென்னையில் தெரிவித்திருக்கிறார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சவையோ, பொன்சேகவையோ ஆதரிப்பது இயலாத காரியம். ஆகவே நாங்களும் ஒரு வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். அப்படி கட்சி ஒரு வேட்பாளரை நியமிக்காத பட்சத்தில் நானே சுயேட்சையாகப் போட்டியிடுவேன்' என்று சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கும் காரணமும், வெளிப்படையாக அதைச் சொன்ன விதமும் வரவேற்கத்தக்கது. அந்த வேட்பாளர் யாராக இருப்பினும் ஜனாதிபதியாக வரமுடியாது எனிலும், வாக்குகளைப் பிரித்து, தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும், முக்கியத்துவத்தையும் ஓரளவுக்காவது நிரூபிக்கலாம். அதேவேளை தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியுமா என்பதையும் இந்தத் தேர்தலே கோடிட்டுக் காட்டும். சுதந்திரமாக வாக்களிக்கத் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படுவார்களா, இல்லை 22 எம்.பி. க்களை அனுப்ப, செல்வராசா கஜேந்திரனை வரலாறு காணாத வெற்றி பெறவைக்க தமிழ் மக்கள் விதைத்த விதையை ஈ.பி.டி.பி. போன்ற ஒட்டுக்குழுக்களின் வாயிலாக அறுவடை செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமான ஒரு ஆளாக இருந்த கே.பி. என்கிற செல்வராசா பதமநாதனை நினைவிருக்கிறதா பலருக்குத் தெரியவில்லை. பிரதிநிதி, துரோகி, புதிய தலைவர் மீண்டும் துரோகி என்று பல அவதாரங்களைக் கொடுத்து பின்னர் எவ்வளவு வேகமாக தமிழீழ அரசியலில் முக்கியமானாரோ அதைவிட வேகமாக மறக்கப்பட்ட கே.பி. தன்னிடம் 5 கப்பல்களும், 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் இருப்பதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகளுக்குச் சொல்லியிருக்கிறாராம். இவரது தகவலின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மடக்கப்பட்டிருக்கின்றனவாம். இப்போது கே.பி.க்கு என்ன புது அவதாரம் கொடுக்கப்போகிறோம்?

அரசியல்-புகுந்தகம்
இந்த வாரம் ஒன்ராரியோ மாகாண அரசியலில் சூடான வாரம் என்று சொல்லலாம். மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களான, கொன்சேர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்தவர்களான ரிக் ஹில்லியேர் மற்றும் பில் மர்டோச் ஒருங்கிணைந்த விற்பனை வரியை ஒன்ராரியோ மாநிலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு எதிராக அமளி செய்த காரணத்துக்காக சட்டப்பேரவை முதல்வர் ஸ்டீபன் பீற்றேர்ஸ் அவர்களால் அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார்கள். ஆனால் மேற்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் தொடர்ந்து இரு நாட்களாக சட்டப்பேரவையை விட்டு வெளியேறாமல் முரண்டு பிடித்தார்கள். இறுதியாக நேற்று சில நிபந்தனைகளுக்கு ஒன்ராரியோவை ஆளும் லிபரல் கட்சியினர் சம்மதிக்க, தம்முடைய போராட்டத்தை இருவரும் முடிவுக்குக் கொண்டுவந்தார்கள்.

இதுவரை காலமும் மத்திய அரசின் விற்பனை வரியாக 8%ம், மாநில அரசின் விற்பனை வரியாக 5% ம் அறவிடப்பட்டு வருகிறார்கள். வரும் ஜூன் 1 ம் தேதி இவை ஒருங்கிணைக்கப்பட்டு 13% விற்பனை வரி அறவிடப்படுவதற்கு ஒன்ராரியோ லிபரல்கள் முனைகிறார்கள். கொன்சேர்வேற்றிவ் கட்சி ஆளும் சில மாநிலங்களில் ஏற்கனவே இந்த முறமை இருக்கிறது. அப்போது HST என்பதை SHT அதாவது Stephen Harper Tax என்று வாசியுங்கள் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரையும், கொன்சேர்வேற்றிவ் கட்சியையும் நக்கலடித்தார் மத்திய லிபரல் தலைவர் மைக்கல் இக்னாற்றியேவ். இப்போது ஒன்ராரியோ மாநில லிபரல்கள் ஒருங்கிணைந்த விற்பனை வரியை ஆதரிக்க, ஒன்ராரியோ கொன்சேர்வேற்றிவ்கள் அதை எதிர்க்கிறார்கள். அரசியல்வாதிகள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான்.

அரசியல்-உலகம்
ரஷ்யாவின் பெர்ம் (Perm) நகரின் இரவு விடுதி ஒன்றில் நடந்த வெடி/தீ விபத்தில் 109 பேர் பலியாகியிருக்கிறார்கள். சோவியத் யூனியன் பிரிந்த காலத்துக்குப் பிறகு இடம்பெற்ற மிக மோசமான இந்த வெடி/தீ விபத்தில் 130 பேர் காயமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த விபத்திற்கு எந்தவித தீவிரவாதத் திட்டமும் காரணமில்லை என்று ரஷ்யப் புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள். மாறாக ரஷ்ய அதிபர் திமீத்ரி மெட்வெடெவ் (Dmitri Medvedev) இப்படியான இரவு விடுதிகளின் பாவனையாளர்களுடைய பாதுகாப்புக்கு உகந்த வண்ணம் விடுதிகளின் உள்புறங்களை மீள் வடிவமைப்பதில் பின்னிற்கும் விடுதி உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ரஷ்யாவில் நாளை திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
கொஞ்சக் காலத்துக்கு முன்வரை வேலை தேடும் பலருக்குப் பலர் சொன்ன ஒரு அறிவுரை அல்பேர்ட்டா மாகாணத்தில் வேலைகள் இலகுவாகக் கிடைக்கும் என்பதே. இனிமேலும் யாராவது அதையே சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் கனேடியர்கள். கனேடியப் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் அல்பேர்ட்டா மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்கரியில் மேலும் மேலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது என்பதே. இந்த வருடம் இது வரையிலும் கல்கரியில் மட்டும் 16,600 பேர் வேலை இழந்திருக்கிறார்கள். சென்ற வருட இறுதியில் 3.7 ஆக இருந்த வேலையமைவின்மைச் சுட்டெண் இப்போது 7 ஆக அதிகரித்திருக்கிறது.

இப்படியான சிக்கல்களுக்கு முழுமுதல் காரணமாக எல்லோரும் அரசாங்கங்களின் நிர்வாகத்திறமையைச் சுட்டிக்காட்டினாலும், சாதாரண குடிமக்களின் பொறுப்புணர்வின்மையையும் காட்டுகிறது. உதாரணமாக ஒருவருக்கு $75,000 தேவைப்பட்டால், அவருக்காக $150,000 கடன் அனுமதி எடுத்து, அதில் $60,000 கொமிஷனைத் தாங்கள் எடுத்து, $90,000 கடனை குறித்த நபரிடம் கொடுக்கும் அருமையான வங்கி அதிகாரிகள் இருக்கிறார்கள். $90,000 கடனைக் குறித்த நபர் திருப்பிக் கட்டமாட்டார். முழுக் காசையும் உருவிவிட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் இவருக்கு வங்குரோத்துப் பாதுகாப்புப் பெற்றுத்தர ஆட்கள் இருக்கிறார்கள். இவர் மனைவியின் பேரில் ஐந்து அறை ரூமில் இன்பமாக வாழ்வார். நேர்மையாக முன்னேற நினைப்பவர்கள் இப்படிப் பொதுவெளியில் புலம்பிக்கொண்டிருப்போம்.

விளையாட்டு
இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. இன்னும் 4 விக்கட் தேவை. முதலில் துடுப்பெடுத்தாடி 393 ஓட்டங்களை இலங்கை பெற பதிலளித்தாடிய இந்தியா 726 ஓட்டங்களை 9 விக்கெட்டுக்குப் பெற்றது. சேவாக் அதிரடியாக ஆடி வெறும் 254 பந்துகளில் 293 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸ்சில் இலங்கை 6 விக்கெட்டுக்கு 274 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது. சங்ககார 133 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரை 2-1 என்று வென்று இங்கிலாந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. நியூசிலாந்து-பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மேற்கிந்தியா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நடுவர்களின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கும் முறை பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன. இலங்கை இந்தியா தொடரில் இது இல்லாததால் இரண்டு முறை டில்ஷான் பாதிக்கப்பட்டார். இரண்டுமே மிக மோசமான முடிவுகள். ஆனால் அவுஸ்-மே.இ. தொடரில் கள நடுவர் பென்சன் எடுத்த சரியான முடிவு மூன்றாவது நடுவரால் பிழையாக மாற்றப்பட்டதால் பென்சன் கோபமடைந்து ஓய்வு பெற இருக்கிறார். எனக்கென்னவோ இந்த முறையை முற்றாக நீக்குவது நலம் என்றே படுகிறது. இந்த வருட முற்பகுதியில் ஹர்பஜனின் பந்தில் நியூசிலாந்தின் ரெய்லர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இருந்த எல்லாத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ஆராய்ந்து வர்ணனையாளர்கள் நடுவர்களை ஒரு பாட்டம் திட்டி, மறுப்புத் தெரிவிக்காமல் வெளியேறிய ரெய்லரைப் பாராட்டி முடிந்தபின், அன்றைய நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் ரெய்லர் 'கூலாக'ச் சொன்னார், ‘அந்தப் பந்து என் மட்டையில் பட்டது என்று'. திருந்த வேண்டியது விளையாட்டை விளையாட்டாய் எடுக்கவும், நடுவர்களை மனிதர்களாகப் பார்க்கவும் தெரியாத கிரிக்கெட் வீரர்களே.

சினிமா-பொழுதுபோக்கு
முன்னாள் இளைஞர்களை மட்டுமல்லாமல் இன்றைக்கு அவர் படத்தைப் பார்ப்பவர்களையும் ஒரு கணம் சலனமடைய வைக்கும் மர்லின் மன்றோவின் அறியப்படாத வாழ்க்கை பற்றிய ஒரு காணொளி ஒன்றை கெயா மோர்கன் என்பவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். அந்தக் காணொளியில் அந்த எப்போதும் பசுமையான கனவுக்க கன்னி போதை மருந்து புகைப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றனவாம். 50 வருடங்களுக்கு முன் மர்லின் ஒரு விருந்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட காணொளியிலேயே இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கின்றனவாம். ஜோன்.எஃப்.கென்னடி போன்ற அரசியல் பிரமுகரே மயங்கித் தவமிருக்க வைத்த மர்லின் மறைந்தே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (எனது ஞாபகத்தில் 1962ல் மர்லின் இறந்தார் என்று நினைக்கிறேன்). நமீதாவைப் பார்த்து ‘நீ மார்லின் மன்றோ குளோனிங்கா' என்று எழுதிய கவிஞனது கற்பனை....ஆஹா.... ஆஹா....அஹ்ஹ்ஹஹஹா... நல்லவேளை இதெல்லாம் கேட்காமல் மார்லின் இறந்து போனார். இல்லாவிட்டால் தன்னோடு ஒப்பிடப்பட்ட மாமிச மலையின் படத்தைப் பார்த்து நெஞ்சு வெடித்துச் செத்திருப்பார்)

நான் இன்னும் ‘பா' படம் பார்க்கவில்லை (படம் வந்து 2-3 மாதம் கழித்தே தரமான டி.வி.டி.க்களைத் தரவிறக்க முடிகிறது. அண்ணன் கானா பிரபா பார்த்து விமர்சனம் வேறு எழுதியிருந்தார். அதற்கிடையில் படம் பற்றிய சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. ஊனமுற்றவர்களைக் கேலிக்குள்ளாக்கியதாக ஒருவர் 'பா' படத்தைத் தடை செய்யச்சொல்லி வழக்குப் போட்டிருக்கிறார். இன்னும் பல விமர்சனங்களையும் படித்து, படமும் பார்த்த பின்தான் உண்மையிலேயே அமிதாப் பச்சனின் பாத்திரம் அப்படியாக ஊனமுற்றவர்களைக் கேலிக்குள்ளாக்குகிறதா, அல்லது இந்த வழக்கு இன்னொரு publicity stunt ஆ என்று சொல்லமுடியும். மிருகங்களை வைத்துப் படமெடுப்பதற்கு எதிராகக் கூடப் போராடுகிறார்கள், பெண்களையும், அரவாணிகளையும் கேவலாமாகச் சித்தரித்து எடுக்கும் படங்களைப் பற்றி யாருமே பேசுவாரில்லை.

அடப் பாவிகளா........

நிறம், மதம், மொழி, அது இது என்று எந்த வேறுபாடும் இல்லாமல் ஆண்கள் எல்லாம் செய்யும் ஒரு வேலை தெரியுமா நண்பர்களே? பல நாட்களாக அவதானித்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நீங்களும் அவதானித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என்ன வேலை தெரியுமே? Western Toiletல் நின்றபடி 'கொள கொள' சத்தத்தோடு ஒன்றுக்கடிப்பது. இன்றைக்கு படிக்கிற இடத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரும், ஒரு ஆபிரிக்கரும் அதைத்தான் செய்தார்கள். விஜய் அதைத்தான் செய்கிறார். வேலையிடத்தில் பல வெள்ளைக்காரர்கள் அதைத்தான் செய்கிறார்கள். மருமகனும் அதைத்தான் செய்கிறான். அவன் நண்பர்களும் அதைத்தான் செய்கிறார்கள். நான் மட்டும் Comet ல் உட்கார்ந்து போகிறேனோ என்று பயமாயிருக்கிறது. நான் போகிற வழியில் ஒரே ஒரு தொல்லை மட்டும் இல்லை. துன்னாலை அக்கவுண்டண்ட் சொல்லும் ‘ஒன்றுக்கிருந்துவிட்டு ஒருதரம் சுண்டாவிட்டால் நிண்டிட்டு விழுமாம் ஒரு துளி நீர்' என்கிற பிரச்சினை இருப்பதில்லை.

Friday, 27 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 22-நவம்பர் 28 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தகம்+புகுந்தகம்+பக்கத்து வீடு
மாவீரர் வாரம்தான் இந்த வாரத்தில் தாயக அரசியலின் மிகப்பெரிய செய்தியாகும். தாயகத்தில் இந்த முறை இந்த நாள் அனுட்டிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளை, தகப்பன்களை, சகோதரன்களை, சகோதரிகளை இழந்த சொந்தங்கள் எத்தனையோ ஊமையாக அழுதிருக்கும். அந்தக் குறையைப் போக்குவது போல் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லியாகவேண்டும். இப்படியாவது ஒன்றுபட்டால் நலம்.

சீமானை கனடாவுக்கு அழைத்து இங்கே ஒரு விழா நடத்தினார்கள். அவரை கனேடியக் காவல்துறை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது. இப்படியான உணர்வு பூர்வமான நிகழ்ச்சிக்கான ‘சிறப்பு விருந்தினர்' அழைப்பு, அவரது பேச்சுக்கான விசில்கள் பற்றிய விமர்சனங்களைக் கடந்து, கனேடிய அரசின் இந்தச் செயல் கீழ்த்தரமான அரசியல் அழுத்தங்களைக் கொண்டது என்பதை இங்கே பதிவுசெய்தாக வேண்டும். ‘தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஒரு சிங்களன் கூட உயிருடன் இருக்கக்கூடாது' என்ற தொனியில் பேசியதைவிட கனடாவில் வன்முறை ஒன்று தோன்றும் அளவுக்கோ, பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும்வகையில் இளைஞர்களைத் தூண்டும் வகையிலோ சீமான் எதையும் சொல்லியிருக்கவில்லை என்பதே உண்மை. இது இந்திய/இலங்கை அண்ணன் தம்பிகளின் அழுகையைத் துடைக்க கனேடியப் பெரியண்ணன் செய்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டு என்பது மட்டும் உண்மை.

இலங்கை அரசியல்களம் விரைவில் இன்னும் சூடேறப்போகிறது. வருகிற 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பாகப் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர ஆலோசனை செய்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வன்முறையில்லாமல் நேர்மையான ஒரு தேர்தலுக்குச் சாத்தியமிருப்பதாகத் தெரியவில்லை. சொந்தங்களையும், நட்புக்களையும் நினைக்கும்போது இனம்புரியாத வலி ஏற்படுகிறது.

அரசியல்-புகுந்தகம்+உலகம்
சென்ற வார ‘நான் பார்க்கும் உலகம்' தொகுப்பில் ஆஃப்கான் போர்க்கைதிகள் மீதான வன்கொடுமைகளில் கனடாவுக்கும் பங்கிருக்கிறது என்கிற செய்தி இப்போது கனேடிய அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியலையே உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்திலும் இது தொடர்பான மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. தாம் கைது செய்யப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாகத் துன்புறுத்தப்பட்டதாக சில பாகிஸ்தானியர்கள் சொல்லியிருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் ‘குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லும்போதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியாத மனித உரிமை மீறல்கள் இப்போது தெரியும் விந்தை அரசியலை விளங்கிக்கொள்வது என் போன்ற பாமரர்களுக்கு இயலாத காரியம்.

இதே வேளை இப்படியான துன்புறுத்தல்கல் பற்றி 2006ம் ஆண்டளவிலேயே செஞ்சிலுவைச் சங்கம் மின்னஞ்சல்கள் மூலமாகத் தங்களுக்கு அறிவித்திருந்தது என்று கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே கூறியிருக்கிறார். இதுவரை காலமும் தீவிரமாக இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த அரசதரப்பில் இருந்து இப்போது முழுமையான குத்துக்கரணம் அடித்திருக்கிறார் மக்கே. முன்னைநாள் அமெரிக்க அதிபர் புஷ், முன்னைநாள், இற்றைநாள் பிரித்தானியப் பிரதமர்கள் ரொனி பிளேயர், கோர்டன் ப்ரவுன் ஆகியோரின் தலைமையில் உலகின் பெரியண்ணன்கள் பலர் சேர்ந்து ஆடும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இது. கைதிகளைத் துன்புறுத்தவென்றே 'குவாண்டனாமோ பே'யில் சிறைக்கூடம். பின்னர் இப்படியான நாடகங்கள். இந்த மனித உரிமைக் குழுக்கள் எல்லாம் திரும்பவும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுக்கும் வேலை வினைகெட்ட அமைப்புகள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
இந்தவார வணிகம் பொருளாதாரம் சம்பந்தமான மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருப்பது துபாய் பற்றிய செய்திகளே. துபாய் அரசால் நிர்வகிக்கப்படும் துபாய் வேர்ல்ட் எனப்படும் சார்புவைப்புக் குழுமம் பெரும் கடன் நெருக்கடியில் இருப்பதாக அறிவித்ததை அடுத்து உலகின் பல பாகங்களிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆசியப் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டதில் பெரும் அதிர்ச்சி இல்லையென்றாலும், வழமையாக அமெரிக்கப் பங்குச் சந்தை ஒரு விடுமுறை தினத்தில் மூடப்பட்டிருக்கும்போது உலகளாவிய ரீதியில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. டொலரின் சரிவும் முதலீட்டாளர்களைக் கொஞ்சம் ஆடவைத்திருக்கிறது.

ஆசியாவில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தைச் சுட்டென் 3.18% வீழ்ச்சி கண்டது. ஹொங்கொங்கின் ஹாங் செங் 1.8%, ஜப்பானின் நிக்கேய் 0.6%, இந்தியாவின் மும்பை 2.67% சரிவைச் சந்தித்தன. ஐரோப்பாவில் லண்டன் பங்குச்சந்தை 3.25% வீழ்ச்சியையும், ஃப்ராங்ஃபேர்ட் பங்குச் சந்தை 3.18% வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன.

விளையாட்டு
இந்த வாரம் ஒரே கிரிக்கெட் கொண்டாட்டம். இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி, பாகிஸ்தான்-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலியா-மேற்கிந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து-தென்னாபிரிக்கா ஒரு நாள் போட்டிகள் என்று முக்கிய எட்டு அணிகளும் மோதிக்கொண்ட வாரம் இது. இந்தியா இலங்கையை இன்னிங்ஸ்சால் வென்று தமது 100வது டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. அவுஸ்திரேலியா மேற்கிந்தியாவை மூன்று நாட்களில் சுருட்டியது. இங்கிலாந்து ஒரு போட்டியையும், தென்னாபிரிக்கா இன்னொரு போட்டியையும் வென்று சமமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த வாரத்தின் அருமையான போட்டி நியூசிலாந்து-பாகிஸ்தான் போட்டி. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் கடைசி நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் இரு அணிகளும் போராடி, நியூசிலாந்து 32 ஓட்டங்களால் வென்றது. இப்படியான போட்டிகள்தான் டெஸ்ட் கிரிகெட்டை வாழவைக்கும். அகமதாபாத் போன்ற போட்டிகள் அல்ல.

முதல் போட்டியிலேயே 129+75 ஓட்டங்களைப் பெற்ற 19 வயதான உமார் அக்மல், பந்து வீச்சில் கலக்கும் 17 வயது முகம்மட் ஆமீர் ஆகியோருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றிய எதிர்வுகூறல்கள் எப்போதும் சரியாவதற்குரிய வாய்ப்புகள் குறைவு. பார்ப்போம், இந்த இளம்புயல்கள் என்ன செய்கிறார்கள் என்று. அதே போல் அடுத்த இளம் புயல் மேற்கிந்தியாவின் அட்ரியன் பரத்.

சினிமா-பொழுதுபோக்கு
சமீபத்தில் வெளியான அமீரின் ‘யோகி' படம் வெளியான உடனேயே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அமீரும் இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் காட்சிக்குக் காட்சி ‘டுட்சி' என்ற தென்னாபிரிக்கப் படத்தை சுட்டு விட்டார்கள் என்று திரையுலகம், வலையுலகம் எல்லாம் குதறுகிறார்கள். 'துபாய் திரைப்பட விழாவுக்குப் போகிற படம் எப்படி சுட்ட படமாக இருக்கும்?' என்று கொதிக்கிறார் அமீர். மொத்தத்தில் இரண்டு வருடமாக அமீர் 'செதுக்கிய' யோகி, ஊத்திக்கொண்டாயிற்று.

ஒரு மாதிரி அடுத்த ஐ.பி.எல் வரமுன்னரே காதலித்த ஷில்பா ஷெட்டியை நவம்பர் 22ல் கைப்பிடித்து விட்டார் ராஜ் குந்த்ரா. ஷேன் வோர்னின் குக்ளிகளைச் சமாளிக்க முடியாமல் விரைவில் இந்தத் திருமணம் நடக்கும் என்று 'Fake IPL Player' எப்போதோ சொல்லியிருந்தது ஞாபகம் வருகிறது. வோர்ன் ஷமீதாவுக்கு இனி குக்ளிகளை வீசவேண்டியதுதான்.

அடப் பாவிகளா........
ஆணி புடுங்கும் இடத்தில் Levi Strauss ன் ஆண்களுக்கான பணப்பைகளை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பணப்பைகள் அடைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பைகளில் எழுதியிருந்த வசனம் கொஞ்சம் குழப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கொஞ்சக் காலத்துக்கு முன்னர் வந்த பரபரப்பையும் சேர்த்து ஒரு வாசகம் அடித்திருந்தார்கள். ‘This is not a toy made in China. But keep away from kids'. கிட்டத்தட்ட சீனத் தயாரிப்புகள் மீதான காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் வாசகம் அது. வேடிக்கை என்னவென்றால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இடுப்புப்பட்டிகளும், பணப்பைகளும் இங்கே வைத்துப் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான்.

Friday, 20 November 2009

நான் பார்க்கும் உலகம்: நவம்பர் 15-நவம்பர் 21 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்-பிறந்தவீடு+பக்கத்துவீடு
அவரைத் துரோகி என்று திட்டித் தீர்த்து எல்லோரும் ஓய்ந்து போன நேரம் கலைஞர் திரும்பவும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார். சென்ற 17ம் திகதி ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி இவர் விட்ட அறிக்கை ஒன்றில் 'விடுதலைப் புலிகள் எடுத்த அவசரமான முடிவுகள்தான் இன்றைய நிலைக்குக் காரணம்' என்று கருத்தை உதிர்த்துச் சென்றிருக்கிறது இந்தக் கிழட்டுசிங்கம். விடுதலைப் புலிகளின் அரசியல் விமர்சிக்கப்பட வேண்டியதுதான். அதற்காகக் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, ஏற்கனவே காயம்பட்ட நெஞ்சங்களில் கொதிக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சிக் கிண்டிக் கிளறியிருக்கிறார் கருணாநிதி. ஆகக் குறைந்தது மே 19ம் திகதிக்கு முன்னராவது இந்த அறிக்கையை விட்டுத் தொலைத்திருந்தாலாவது அறிக்கையில் கொஞ்சமாவது யோக்கியத்தனம் இருந்திருக்கும். இப்போது வந்திருக்கும் அறிக்கை சமீபகாலமாக அரசியலில் பரபரப்பு இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டும் முயற்சியாகவே பார்க்கப்படக்கூடியது. வை.கோ, நெடுமாறன் வழமை போல எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். பச்சோந்தித் தலைவி, மன்னிக்கவும், புரட்சித் தலைவியும் கண்டன அறிக்கை விடுகிறார். ஆக மொத்தம் அவர்கள் உருட்டி விளையாடும் பந்துகளாகிவிட்டது ஈழத் தமிழர் பிரச்சினைகள்.

ஜனநாயகத்துக்காகப் போராடப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் சரத் பொன்சேகா. (கொஞ்சம் அப்படியே இருங்கள், சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்). இவ்வளவுகாலமாக தானும் சேர்ந்து கொன்று புதைத்த அந்த ‘ஜனநாயகத்தை' எப்படி உயிர்ப்பிக்கப் போகிறாரோ தெரியவில்லை. வரவர நகைச்சுவைக்காகப் படங்களைப் பார்ப்பதைவிட அரசியல் செய்திகளை வாசித்துவிடலாம் போலிருக்கிறது.

அரசியல்-புகுந்தகம்

ஆஃப்கானிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை சிறைகளில் வைத்துக் கனேடிய அதிகாரிகள் துன்புறுத்தினார்கள் என்று முன்னாள் ஆஃப்கானிஸ்தானுக்கான கனேடியத் தூதரக அதிகாரி ரிச்சர்ட் கொல்வின் (Richard Colvin)குற்றம்சாட்டியிருக்கிறார். பின்வரும் அதிகாரிகளுக்கும் இந்தச் சித்திரவதைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கொல்வின் கனேடியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  1. டேவிட் மல்ரொனி (David Mulroney)- முன்னைநாள் ஆஃப்கான் துருப்புக்களுக்கான மத்திய அமைச்சர், இப்போதைய சீனாவுக்கான கனேடியத் தூதர்
  2. ரிக் ஹில்லியெர் (Rick Hillier)- முன்னைநாள் கனேடியப் பாதுகாப்புப் படைகளுக்கான தலைமை அதிகாரி
  3. மார்கரெட் ப்ளட்வேர்த் (Margaret Bloodworth)- முன்னைநாள் பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகர்
  4. ஜில் சின்கிளேயர் (Jill Sinclair)- முன்னைநாள் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கான அமைச்சகத்தில் உதவிச் செயலர்
  5. கொலீன் ஸ்வோர்ட்ஸ் (Colleen Swords)- வெளிநாட்டு விவகாரங்களின் சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் பிரிவின் முன்னாள் அமைச்சர். பழங்குடி இந்தியர்கள் விவகாரங்களுக்கான தற்போதைய உதவி அமைச்சர்
  6. டேவிட் ஸ்ப்ரோல் (David Sproule)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2006, 2007ல் ஒரு பகுதி)
  7. ஆரிஃப் லாலானி (Arif Lalani)- முன்னைநாள் ஆஃப்கானிஸ்தானுக்கான தூதர் (2007 ஒரு பகுதி, 2008)
  8. மைக்கேல் கோதியேர் (Michel Gauthier)- ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரல். கனேடியப் படைகளின் எல்லா வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர்.
மேற்சொன்ன 8 பேரில் மூவரைத்தவிர மற்றவர்கள் இன்னும் எந்தவிதமான பதில்களையும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றன. அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களையும் மக்களையும் அமைதிக்காக்குமாறு கேட்டிருக்கிறார்கள் அரசதரப்பு. கொஞ்சம் நாகரீகமான நாடாக நான் பார்க்கிற கனடாவும் உண்மையில் இப்படியானவர்களைக் கொண்டிருக்கிறது என்றால், 2012ல் உலகம் அழிந்து போய்விட்டால் நன்றாக இருக்கும்.

அரசியல்-உலகம்
பெல்ஜியம் ப்ருசெல்சில் நடக்கும் உலகின் பலம் மிக்க நாடுகளின் (தாதாக்களின்) அவசர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அணு ஆயுத உற்பத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட வரைபை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஈரான் கடுமையான தண்டனைகளைச் சந்திக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளோடு கூடிய இந்த உரையில் Sanctions என்கிற பதம் பயன்பட்டிருப்பது கொஞ்சம் நிம்மதியளிக்கிறது. வட கொரியா முதலான இன்னபிற அணு ஆயுத உற்பத்தி செய்யும் நாடுகளையும் சாடிய அவர், அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தி பற்றி ஒன்றும் சொல்லவில்லை (அட, அவர் எப்படிச் சொல்வார். அவைதானே தாதாக்கள், அவை என்னவும் செய்யலாம்). ஒபாமா, புஷ் போல் முட்டாள்தனமாகச் செயற்பட்டு நோபல் குழுவின் முகத்தில் கரிபூசமாட்டார் என்று நினைக்கிறேன்.



வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
கனடாவின் தொலைத் தொடர்புத் துறையில் ரோஜேர்ஸ் (Rogers), ரெலஸ் (Telus) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்ந்து பெல் கனடாவும் அவர்களுடைய System Access Fee ஐ இல்லாமல் செய்திருக்கிறார்கள். மாதாந்தம் $6.95 ஆக இருந்த இந்தக் கட்டணம் இனிமேல் புதிதான திட்டங்களில் இணைபவர்களுக்கு இனிமேல் அறவிடப்படமாட்டா. ரோஜேர்ஸ் மற்றும் ரெலஸ் ஏலவே இதை அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழைய வாடிக்கையாளர்கள் ஏதாவது புதிய திட்டங்களுக்கு மாறிக்கொண்டால் இந்தக் கட்டணத்தை இனிமேல் தவிர்க்கலாம்.

அதற்காக வாடிக்கையாளர்கள் பெரிதாகச் சந்தோசப்பட முடியாது. முன்பு இருந்த திட்டங்களிற்கான மாதாந்தக் கட்டணங்கள் சராசரியாக ஐந்து டொலர்களால் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மூன்று பெரிய போட்டியாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரித்தான் சிந்தித்திருக்கிறார்கள். எப்படியோ, மாதத்துக்கு 1.95 டொலர்களாவது சேமிக்கலாம் வரும்காலங்களில்.

விளையாட்டு

இலங்கை-இந்தியா முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்திருக்கிறது. முதலாவது நாள் முதல் ஒரு மணித்தியாலம் தவிர மிகுதி நேரம் முழுவதும் துடுப்பாட்டக்காரர்கள் கையே ஓங்கியிருந்தது. ட்ராவிட்-177, தோனி-110 உதவியுடன் இந்தியா 426 ஓட்டங்கள் பெற, டில்சான்-112, மகேல-275, ப்ரசன்ன-154* உதவியுடன் இலங்கை 760-7 என்ற இமாலய இலக்கை அடைந்தது. 334 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் 412-4 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. கம்பீர்-114, சச்சின்-100* சிறப்பாக ஆடினார்கள். மகேல 9000 ஓட்டங்கள் கடந்த முதல் இலங்கை வீரர் என்ற புகழையும், ட்ராவிட் 11,000 கடந்த 5வது வீரர் என்ற பெருமையையும், சச்சின் 30,000 சர்வதேச ஓட்டங்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்கள். இப்படி ஒரு ஆடுகளத்தில் கிரிக்கெட் ஆடுவதைவிட இந்திய வீரர்கள் விளம்பரப்படங்களில் நடிக்கலாம். இலங்கை வீரர்கள் எல்லே விளையாடலாம். (இதைவிடக் கேவலமான ஆடுகளங்களும் இருக்கின்றன. அது பற்றித் தனிப்பதிவே போடலாம்)

சினிமா-பொழுதுபோக்கு
ராதிகா வித்தியாசமாக ஒன்றைச் செய்திருக்கிறார். சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழாவில் இவரை ‘அரசி' தொலைக்காட்சித் தொடருக்காக சிறந்த நடிகையாகத் தெரிவு செய்திருந்தார்கள். இந்தத் தெரிவுகளில் நடிகர், நடிகை, இயக்குனர் போன்ற பிரிவுகளில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும், விருதுகளுக்கான தேர்வு முறையில் திருப்தி இல்லை என்றும் கூறி அவருக்கு வழங்கப்பட்ட விருதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். தனக்குத் தகுதி திறமை அடிப்படையில் மேற்படி விருது வழங்கப்பட்டிருந்தாலும் (???!!!!), இனிமேலும் திறமைசாலிகள் ஓரம்கட்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த விருதைத் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி செய்த அளவுக்கு சரியான மூக்குடைப்பு இல்லையென்றாலும், இன்னும் கொஞ்சம் பெரிய கலைஞர்கள் இப்படியான கேலிக்கூத்து விருதுகளைப் புறக்கணித்து விருதுகளுக்குரிய மரியாதையைப் பெற்றுத்தரவேண்டும். யாராவது இந்த ‘விஜய் விருதுகள்' கூத்தையும் தட்டிக்கேட்க வேண்டும். (அதுசரி பாரதிராசா பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அனுப்பிவிட்டாரா. இல்லை அதுவும் நல்லதொரு சீனா? யாரப்பா இயக்குனர்??)

இது எப்படி இருக்கு........

மேலே சொன்ன கனேடியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்பாக ஒரு விசித்திரமான வழக்கொன்று விரைவில் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. அதாவது ரோஜேர்ஸ் (Rogers) தங்களுடைய மகுட வாசகமாக 'Canadas fastest and most reliable network' என்பதைத் தம்முடைய விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தது. சமீபத்தில் ரெலஸ் (Telus) நிறுவனம் புதிதாக 3-G Network க்கு உரிய Server ஐ மேம்படுத்தி சென்ற வாரம் புத்தம் புதிய Network ஒன்றை களத்தில் இறக்கியது. இதன் காரணமாகத் தாங்களும் ரோஜேர்ஸ் போலவே வேகமானதும், நம்பகமானதுமான Network வைத்திருப்பதால், 'Canadas fastest and most reliable network' என்ற மகுட வாசகத்தை ரோஜேர்ஸ் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களைப் பிழையாக வழிப்படுத்தும் ஒரு முயற்சி என்றும் இனிமேல் அந்த வாசகத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் ரோஜேர்ஸை ரெலஸ் கேட்க, ரோஜேர்ஸ் மறுத்துவிட்டது. இதனால் வான்கூவர் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் ‘Criminal Competition Law' என்கிற சட்டக் கோர்வையின் கீழ் ரோஜேர்ஸ் மீது நட்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் ரெலஸ். அட இதில் என்ன என்கிறீர்களா? இந்தியாவில் நடிகர், நடிகைகளுக்குக் கோடிகள் கொடுத்து எடுத்த சில விளம்பரங்களை நம்மவர்கள் சர்வசாதாரணமாக அனுமதி எல்லாம் இல்லாமல் பாவிக்கிறார்கள். நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று அறை கூவுகிறார்கள். இப்படியான ஒரு சின்ன வாசகத்தை வைத்தே ஆப்படிக்கலாம் என்பது அவர்களுக்கெல்லாம் தெரியுமா??