Saturday 8 January 2011

செரிலாக்

’அப்ப என்ன மாதிரித் தம்பி. ஊரில எல்லாரும் சுகமா? அப்பா, அம்மா எல்லாரும் எப்பிடியடா இருக்கினம்? கதச்சனியே. நான் விசாரிச்சனான் எண்டு சொல்லடாப்பு’. அன்னாரை எனக்குக் கிட்டத்தட்ட 11 வருசமாகத் தெரிந்திருந்தது. திருமணவழியில் எங்கள் குடும்பத்துடன் உறவானவர். அன்னாரைப்பற்றி ‘ர்’ போட்டுக் கதைக்கிறபடியால் அவருக்கு பெரிய வயசெல்லாம் இல்லை. என்னிலும் ஒரு பதினைந்துவயது கூட இருக்கலாம். எங்களின் கிராமத்துக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு ஊர்தான் அவருக்கு அடி. ‘அல்வாய்’ கிராமசேவகர் பிரிவுக்குள் கொஞ்சம் பெரிய ஊர். தகப்பனார் நல்ல உழைப்பாளி, தோட்டம் துரவு எல்லாம் இருந்தது. அந்தியோட்டிக் கல்வெட்டுகளில் விசாலமான அடைமொழிபோடுகிறவர்கள். எண்பதுகளின் கடைசியோ, தொண்ணூறுகளின் ஆரம்பமோ என்னவோ அன்னார் அங்கே வாழமுடியாத சூழ்நிலைக்கைதியாகி ஐரோப்பாவில் எல்லாம் சுற்றி கனடாவில் நிரந்தரமாகிவிட்டவர்.

அன்னார் ஒரு தேர்ந்த அரசியல்வாதி/விமர்சகர்/நோக்குனர். அதுவும் தாயக அரசியலில் அன்னாரின் பங்கு மகத்தானது. ‘சிவாஸ் ரீகல்’ கூடத் தேவையில்லை, ‘மொல்சன் கனேடியன்’ மணமே போதும், அன்னாரின் கருத்துரைகள் கடல்தேடு நதியெனப் பெருக்கெடுக்க. அன்னாரோடு சேர்ந்திருக்கும் இன்னார்கள் எல்லாம் ‘அவரிட ஐடியா என்ன எண்டால்...’ என்று தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் இருக்ககூடிய தங்களின் கருத்துக்களைச் சொல்லுவார்கள். உதாரணமாக, கமலஹாசன் எதை நினைத்து கையடிப்பார்... மன்னியுங்கள், கமலஹாசன் எதை நினைத்து தசாவதாரம் படத்தில் மேற்படி காட்சி எடுத்தார் என தங்களின் கருத்தை இப்படிச்சொல்வார்கள், ‘கமலிட ஐடியா என்னவெண்டால்........’. சதாம் ஊசேன், ஒபாமா, ராஜபக்சே, பிரபாகரன் எல்லோருடைய மனத்துக்குள் இருந்தவை, இருக்கிறவை எல்லாவற்றையும் இங்கிருந்தபடியே எப்படியெல்லாம் படிக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்தால் உங்களுக்கு உடனடியாகத் தண்ணியடிக்கத் தோன்றும்.

அன்னாருக்குக் கிட்டத்தட்ட எல்லாப்பரப்பிலும் விஷயஞானம் உண்டெனத் தோன்றும் எனக்கு. அதிலும் அன்னாருக்கும் இன்னார்களுக்கும் இடையில் நடக்கிற விவாதங்கள் அளப்பரிய கருத்தியல்களை சர்வசாதாரணமாகத் தொட்டுச்செல்லும். பெரும்பாலும் அன்னாரின் விவாதங்கள் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்றுதான் ஆரம்பிக்கும். இடனே முதலாவது இன்னார் ‘இல்ல.. அது எப்படியெண்டால் ஒன்றும் ஒன்றும் மூன்று’. அடுத்த இன்னார் ‘ஒன்றும் ஒன்றும் ஐந்தெல்லோ’ என்பார். இது சுற்றிச் சுற்றி அன்னாரிடம் வருகிறபோது அன்னார் விகாரமாகச் சிரித்தபடி ‘ஒன்றும் ஒன்றும் மூன்று’ என்பார். உடனே முதல் இன்னார் ‘இல்லைப்பாருங்கோ.. ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்பார். இப்படியே விவாதங்கள் தொடர்ந்தபடியிருக்கும்.

அன்னார் அடிக்கடி ‘இந்த யூனியன் வச்சிருக்கிற கொம்பனியளில வேலைக்கே போகக்கூடாது. சும்மா யூனியன் fee எண்டு காசைப் பிடுங்கிறாங்கள். இந்தக் கொம்யூனிஸ்ட்டுகளுக்கு வேற வேலையே’ இல்லை என்பார். எனக்கு யூனியன்களின் இருத்தலுக்கும் கொம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். கைத்தொழில் புரட்சி, அந்தப் புரட்சி இந்தப் புரட்சி என்று தொழிற்சங்கவாதிகளின் தோற்றத்துக்கு வேண்டுமானால் பொதுவுடமைவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கலாம். அதே போல் பொதுவுடமைவாதிகளால் தொழிற்சங்கத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது இலகுவானதொன்றாய் இருக்கலாம். இருந்தும், சாதாரண உழைப்பாளிகளுக்கு நேர்மையான ஒரு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு நீ பொதுவுடமைவாதியாயிருக்கவேண்டியதில்லை, உன்னைச் சுற்றிய முதலாளிகளின் சமூகம் உன்னை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்று தெரிந்திருந்தாலே போதுமானது என்பது என்னுடைய கருத்து, தொழிற்சங்கங்களைப் பற்றி. தமிழகத்துச் சினிமாவில் வருகிற காக்கிச்சட்டைபோட்ட சந்திரசேகரைப் பார்த்துவிட்டு தொழிற்சங்கங்களைப் பற்றி அன்னார் கதைக்கும்போது அவரோடு வாதம் பண்ணுவதில் பிரயோசனமிருப்பதில்லை. ஒருமுறை ரசினிகாந்தும் கவுண்டமனியும்கூட அதே உடைபோட்டு ஒரு தொழிலாளியின் கைவெட்டுப்பட்ட காரணத்துக்காக ஏதோ வேலைநிறுத்தம் எல்லாம் செய்கிறோம் என்று சொல்லி....ம்ம்ம்ம், இப்படித்தான் அறிவூட்டப்பட்டிருந்தார் அன்னார். ஒருநாள் அன்னாரை downsizing  என்று சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிவிட்டார்கள். அன்னார் சொன்னார் ‘சே, எங்கட கொம்பனீல மட்டும் யூனியன் இருந்திருந்தால் என்ர நிலமையே வேற...’

ஒருநாள் அன்னாரின் வீட்டுக்குப் போயிருந்தபோது தாயக நிலமை பற்றிக் கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் கவலை இருந்தது. கடலில் மூன்று நாட்களாக ‘ஓட்டி யாரடா’ என்று சொல்லி எஞ்சின் சுடப்பட்டு, துப்பாக்கி முனையில் ஓட்டி திருப்பி அழைத்துச் செல்லப்பட ‘ஜலசமாதியை’ எதிர்பார்த்துக் காத்திருந்த உறவு சொன்ன கதைகள் எனக்குள்ளும் இருந்தன. கடல் தண்ணீரைத் தாங்கள் குடித்ததோடு மட்டுமல்லாமல் பழுதாய்ப்போன செரிலாக் மாவை கடல் தண்ணீரில் குழைத்துக் குழந்தைகளுக்கு ஊட்டியதென்பது என்னைப் பொறுத்தவரை பெரும்கொடுமையாக இருந்தது. அப்படி செரிலாக் கூடக் கிடைக்காமல் செத்த எத்தனையோ பிள்ளைகள் பற்றியெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த காலம். அன்னார் மும்முரமாக வீதிகளில் போராடிக்கொண்டிருந்தார். அன்றைக்கும் போர் முடிந்துவந்துதான் பேசிக்கொண்டிருந்தோம். ரீ.வி.ப் பெட்டியில் திவ்யதர்ஷிணி பேசிக்கொண்டிருந்தார். அன்னார் உச்சுக்கொட்டிக்கொண்டே சொன்னார், ‘இந்த மோட்டுச் சனங்களாலதான் எல்லாப் பிரச்சினையும். உவை என்னத்துக்குப் பாதுகாப்பு வலயத்துக்கு வாறம் எண்டு தாலிய அறுக்கினம்?’. ‘அப்பிடியில்லை அண்ணை. அவயளுக்கும் வாழோணும் எண்ட ஆசை இருக்குமண்ண. சாவு பற்றின பயத்தைவிட வேற எந்தப் பயமும் பெரிசில்லையண்ணை. அதான் அவையளும் வாழோணும் எண்டு நினைச்சு இஞ்சால வரப்பாக்கினம். நானும் நீங்களும் அவயளமாதிரி அங்க இருக்கேலாது எண்டு முடிவெடுத்து இஞ்ச வந்து இருக்கிறது எங்கட உரிமை. கடல் தண்ணீல பழுதான செரிலாக் கரைச்சு எட்டுமாசக் குழந்தைக்குக் குடுக்கிற சனம் உயிர்வாழ எண்டு எடுக்கிற முடிவுகூட அவேட உரிமை அண்ணை. பிறகு....’ முடிக்கமுன் இடைமறித்த அன்னார் சொன்னார், ‘தமிழனாப் பிறந்தவன் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது அவேட கடமை’.

கொஞ்ச நேரத்துக்கு எதையுமே பேசாமல் இருந்தோம். திவ்யதர்ஷிணி ‘Judges  சொன்ன comments ஐ எல்லாம் improvise பண்ணி அடுத்தமுறை ஆடுங்க’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். Comments ஐ, improvise பண்ணி எப்படி ஆடுவது என்று சிந்திக்கமுயன்றேன். என் மூளைக்கெட்டிய பரப்புகளில் மட்டும்தானே சிந்திக்கலாம்? அன்னார் திடீரென்று குரலெடுத்துக் கத்தினார்... ‘இஞ்ச பாரப்பா.. ரீவி.யப் பாத்துக்கொண்டு என்ன செய்யிறாய்? ஆ... பார் பெடி என்ன செய்யுது எண்டு. பொறுப்பில்லாத நாயே’ என்று. நடுநடுங்கிக்கொண்டே அவரது துணைவி அவர்களில் மூன்று வயதுப்பிள்ளையில் கையிலிருந்த புத்தம்புதிதான, திறக்கப்படாத போத்தல் தண்ணீரைப் பிடுங்கினார். ’கண்டது நிண்டதையும் பிள்ளை எடுத்துச் சாப்பிட சனியனுக்கு ஆட்டக்காரியளைப் பாக்கிறதுதான் முக்கியமாப் போச்சு. போத்தில் தண்ணியக் குடிச்சு நாளைக்கு டையேரியா ஆக்கினா என்ன நிலமை? ஆ... முதல்ல பிள்ளைய ஒழுங்காப் பார்..........’ வசை தொடர்ந்தது.

*----*----*----*
2015 மே மாதம் ஒரு நாள். ரொரொன்ரோவில் 10 வயது மதிக்கக்கூடிய சிறுவன் ஒருவன் மேடையில் முழங்கிக்கொண்டிருந்தான். ‘நான் தமிழன். நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்னுடைய கடமை. அன்னார் முகத்தில் பெருமிதம் பொங்க HD Camcorder ஒன்றில் சிறுவனின் முழக்கத்தை ஆவணப்படுத்திக்கொண்டிருந்தார். அதே நாள் முரசுமோட்டையில் சுற்றாடல்கல்வி ஆசிரியை கொடுத்த வீட்டுவேலையில் ‘கடல் நீரின் பயன்கள் என்ன?’ என்ற கேள்விக்கு நிறைய யோசித்து ‘செரிலாக் கரைக்கலாம்’ என்று ஒரு எட்டுவயதுச் சிறுமி எழுதிக்கொண்டிருந்தாள்.

1 comment:

வடலியூரான் said...

ம்ம் கீத்.. உப்படியான உண்மையில்லாத,நீலிக் கண்ணீர் வடிக்கிற ஆக்கள் இருக்கிறதாலை தான் இவ்வளவு பட்டும் நாங்கள் இப்பவும் எல்லாத்துக்கும் கையேந்திக்கொண்டு நிக்கிறம்.படிக்கிறது தேவாரம் இடிக்கீறது சிவங்கோயில் எண்டது மாதிரித்தான் எங்கடையாக்களின்டை வேலை.உதைப்பற்றிக் கதைக்கிறதிலை வேலை இல்லை.நாங்கள்(எங்கடை சனம்) திருந்தமாட்டம் அவ்வளவு தான்