Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Wednesday, 18 November 2009

பிடித்ததும் பிடிக்காததும்

இந்த சுவாரஷயமான விளையாட்டுக்கு என்னை அழைக்காமல் விட்ட அனைத்துத் துரோகிகளுக்கும் அனானி பகவான் தண்டனை வழங்கட்டும். லோஷன் அண்ணாவுக்கு இனிமேல் அனானி பகவான அருள் மட்டுமே வழங்குவார். லோஷன் அண்ணா செய்தது மாதிரியே மூலமான நிபந்தனைகளிலிருந்து விலகி எனக்குப் பிடித்த, பிடிக்காத ஆட்கள் பற்றிப் பதிவிட்டிருக்கிறேன்.

அரசியல் தலைவர்கள்
பிடித்தவர்: தமிழ் ஆட்களில் யாரும் இல்லை. சில தலைவர்கள் மட்டுமே அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள், பேச்சு, நிர்வாகத்திறண் இவற்றைத் தாண்டி, பார்த்தவுடனே ஒரு ஈர்ப்புத் தோன்றும். ஆங்கிலத்தில் Charismatic Appeal என்று சொல்வார்கள். சே-குவேரா, ஜோன்.எஃப்.கென்னடி, ஆபிரஹாம் லிங்கன், ராஜீவ் காந்தி, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரிடம் அந்த ஈர்ப்பை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான ஈர்ப்புடன் இப்போது கண்ணில் தெரிபவர், பாரக் ஒபாமா. மீண்டும் சொல்கிறேன், இந்த ஈர்ப்புக்கும் கொள்கைகளுக்கும் சம்பந்தமில்லை.

பிடிக்காதவர்: பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் இருவரைச் சொல்வேன். முதலாமவர் மாவை சேனாதிராசா. வீ.ஆனந்தசங்கரிக்கும் இவருக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். ஆனந்தசங்கரி ஒரு விஷயத்தில் உடன்பட மறுத்து அதைப் பொதுவில் சொன்னார். அவர் துரோகி. மாவை அதே விஷயத்தில் சங்கரியின் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லாதபடியால், மக்கள் பிரதிநிதி. இரண்டாமவர் மக்கள் பிரதிநிதியாகப் பின்வாசல் வழியே நுழைந்த, எந்த ஆளுமைகளுமற்ற செல்வராசா கஜேந்திரன் என்கிற ஜந்து.

எழுத்தாளர்கள்
பிடித்தவர்: என்றைக்கும் இளைமையான சுஜாதாவை எப்போதுமே பிடிக்கும். உயிருடன் இருக்கும் பலரது எழுத்துக்களை வாசித்தாலும் இன்னும் எவரும் எனக்கு ஆதர்சமாகவில்லை என்பதே உண்மை.

பிடிக்காதவர்: தமிழ் எழுத்தாளர்களில் பிடிக்காதவர் என்று ஒருவரையும் கோடிட்டுக் காட்டமுடியாது. மேல் நாட்டில் இப்போது அடிக்கடி Best Sellers கொடுக்கும் டான் ப்ரவுணைப் பிடிப்பதில்லை. மதங்களுக்கெதிரான போராட்டத்தை இவரது நாவல்களைவிட வேறெதுவும் இவ்வளவு கொச்சையாகப் படம்பிடிப்பதில்லை.

சினிமா
பிடித்த நடிகன்: நாகேஷ் போய்விட்டார். இப்போது கமல் பிடிக்கும். புதிய தலைமுறை நடிகர்களில் பிரசன்னா. எல்லோரையும் விட ஏனோ எனக்கு லியோ டிகாப்ரியோவைப் பிடிக்கும்.

பிடிக்காத நடிகன்: திலகங்கள் இருவரையும் பிடிக்கவே பிடிக்காது. வம்பு செய்யும் சிம்பு என்கிற துஷ்ட ஜந்துவை இந்தப் பட்டியலில் சேர்க்கத் தயக்கமாய் இருந்தாலும் சேர்த்தே ஆக வேண்டும்.

பிடித்த நடிகை: ஸ்ரீதேவி (கண்டிப்பாக நடிப்புக்காக மட்டும் அல்ல என்பது உங்களுக்கே தெரியும்)

பிடிக்காத நடிகை: பெரிய லிஸ்ட் இருக்கிறது. முன்னணியில் ஆச்சி மனோரமா. இவர் எந்த பாஷயில் படம் நடித்தாலும் மகனிடம் உணர்ச்சி பொங்கப் பேசும்போது ஒரே நடிப்பு மட்டுமல்ல, ‘யெய்யா யெய்யா' என்று ஒரு வசனமும் வைத்திருக்கிறார். இவர் கிராமத்து அம்மாவாகவோ, பாட்டியாகவோ நடித்து இந்த ‘யெய்யா' போடாத படம் ஏதுமிருந்தால் சொல்லவும். இவருக்கு அடுத்ததாய் இருப்பது இவரைவிட மோசமாக எல்லாப் படங்களிலும் ஒரே மாதிரி நடிக்கும் கலைராணி. அதைவிட உச்சக்கடுப்பு ‘மச்சாள்' மீது.

பிடித்த இயக்குனர்: தமிழில் மிகவும் ஆதர்சம் என்று சொல்கிற அளவுக்கு யாரையும் பிடிக்கவில்லை இதுவரை. என்னதான் பெரியளவு Classic Movies தராவிட்டாலும் மார்ட்டின் ஸ்கார்ஸசி படங்கள் என்னைக் கவர்ந்திருக்கிறன.

பிடிக்காத இயக்குனர்: ஒவ்வொரு இயக்குனரை ஒவ்வொரு விதத்தில் பிடித்தாலும், ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்கவே பிடிக்காமல் போய்விட்ட சிலர் இருக்கிறார்கள். விக்ரமன், சுரேஷ் கிருஷ்ணா, பேரரசு போன்றோர் இருக்கிறார்கள் அந்தப் பட்டியலில். சமீபத்திய புதுவரவு கௌதம் லூசுதேவ மன்னிக்கவும் கௌதம் வாசுதேவ மேனன். ‘ஒரு பெண் கனவில்கூடத் தன்னை ஒரு ஆடவன் கற்பழிப்பதாக நினைக்கிறாள்' என்று கதாநாயகிக்கு அறிமுகக்காட்சி வைத்த மாமேதை so called முருஹன் என்கிறவனையும் பிடிக்காது.

இசையமைப்பாளர்
பிடித்தவர்: இதெல்லாம் ஒரு கேள்வியா? என்றென்றும் 'இளைய'ராஜா.

பிடிக்காதவர்: பெரிய பட்டியல் காத்திருந்தாலும், இப்போதைக்குக் கடுப்புகளைக் கிளப்புபவர், எஸ்.ஏ.ராஜ்குமார்

பாடலாசிரியர்/கவிஞர்
பிடித்தவர்: பட்டுக்கோட்டைப் பாட்டுக்கோட்டையின் பின் வந்த அரசுகளையும், கவியரசுகளையும் ரசிப்பதுண்டு, ஆனால் பிடித்துப்போகவில்லை. கல்யாணசுந்தரத்திடம் இருந்த சமூக நோக்கு எனக்குப் பிடித்தது. ஒரு படைப்பாளிக்கேயுரிய தார்மீகக் கோபத்தை அடிக்கடி வெளிப்படுத்துவதால் இப்போதுள்ளவர்களில் அறிவுமதியைப் பிடிக்கும். உதாரணமாக ஞானிக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில் சொல்லியிருப்பார்,
///கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!
எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.///
இந்தக் கோபம்தான் அறிவுமதி பக்கம் என்னை ஈர்த்தது. அதன்பின்தான் ஓரளவுக்கு அவரைப் பற்றிய தேடல்கள் என்னிடம் முளைத்தன.

பிடிக்காதவர்: எத்தனை பேர்??????????????????????? சமீபத்திய எரிச்சல் ரேனிகுண்டா படத்து ‘கந்தர்வனின் கோட்டை' பாடல் எழுதிய பிறைசூடன் மீது.

பாடகர்கள்:
பிடித்த பாடகன்: என்னதான் ஜேசுதாஸ் என்கிற ராட்சசன் இருந்தாலும் எஸ். பி. பாலசுப்ரமணியம் அசைக்கமுடியாத ஒரு சுவர்தான். (உருவத்திலும் சரி, சாதனையிலும் சரி).

பிடிக்காத பாடகன்: க்ரிஷ். இவரைப் பிடிக்காமல் போனது இவரது பாடல்களால் மட்டுமல்ல. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் செய்த அதிகப் பிரசங்கித்தனம் கடுப்பாக்கியது. வட மொழிப்பாடகர்கள் எவரையும் பிடிக்காது. சமீபத்திய வரவு சுரேஷ் வடேகார். யுகபாரதி ஒருவாறாக உருகி உருகி எழுதிய வரிகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். (திட்டில் பாதி பாடவைத்த வித்யாசாகருக்கு)

பிடித்த பாடகி: ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே', ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா'.......... மறக்க முடியுமா ஜானகியை. பி. சுசீலாவும், சித்ராவும், சாதனாவும் குறைந்தவர்களில்லை என்றாலும் ஒரு versatality க்கு ஜானக்கிக்கு அருகில் யாருமில்லை.

பிடிக்காத பாடகி: சுசித்ரா முதலாகப் பலர். சுவர்ணலதாவைக்கூடப் பிடிக்காது. மூக்கால் அழுவார். அவர் பாடியதில் ஒரேயொரு விதிவிலக்காக ‘மாலையில் யாரோ மனதோடு பேச..' பாடல் பிடிக்கும்.

விளையாட்டு வீரர்கள்
பிடித்தவர்: என்றைக்கும், என்றென்றைக்கும், அவர் 60-70 'டக்' தொடர்ந்து அடித்தாலும்............ சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்தான். ஆனால் அடிக்கடி அவரைத் திட்டவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அது ஏன் என்பது ரகசியம்.

பிடிக்காதவர்: ஸ்ரீசாந்த். இவரை எப்போதாவது நேரில் கண்டால் அந்த நாளில் நான் கொலைகாரன் ஆகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஜிடானைத் தூண்டிவிட்டுக் கேவலம் செய்த மத்தறாஸி, Play Acting ல் பெயர் போன கிறிஸ்டியானோ ரொனால்டோ, டிடியேர் ட்ரொக்பா, கால்பந்தைவிட மொடலிங்கைப் பெரிதாக எண்ணிய டேவிட் பெக்காம் போன்றவர்களைப் பிடிப்பதில்லை.

பதிவர்கள்
பிடித்தவர்: ஒருமாதமாக இவர் பதிவு போடவில்லை. இவரது வலைப்பதிவு சமீபத்தில் எனக்கு அறிமுகமாகி என்னை நிரந்தர வாசகனாக்கியது. சென்று பாருங்கள் மா.சிவகுமாரின் 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' வலைப்பூ. அதிகபடசம் தொழில்நுட்பப் பதிவுகளே அவரது வலைப்பூவில் இருக்கும். திறவூற்று மென்பொருட்கள் பற்றி தமிழில் இவர் எழுதிய இந்தப் பதிவு போல் விரிவானதும், எளிமையானதுமான கட்டுரையை வாசித்த ஞாபகம் எனக்கில்லை. (அதற்காக மற்ற யாரையும் பிடிக்காது என்கிற முடிவுக்கு வரவேண்டாம்)

பிடிக்காதவர்:
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கலகக் குரல் என்பதாலேயே இவரை வாசிக்க ஆரம்பித்தேன். சில இடங்களில் அருமையான கருத்துக்கள் சொல்வார். பார்ப்பன முகமூடிகளைக் கிழிப்பார். ஆதிக்க சாதி மனோபாவங்களைத் துவைப்பார். ஒரு கட்டத்தில் இவரிடமிருந்து ஒரு நச்சுத்தன்மை வெளிவர ஆரம்பித்தது. பார்ப்பனர்களையும், ஆதிக்க சாதிகளையும் எதிர்க்கிறேன் என்கிற போர்வையில் தானே ஒரு நவீன பார்ப்பானாக மாறிப்போய்விட்டார். உதாரணத்துக்கு, பின்னூட்டமிட்ட பெண் பதிவரை ‘நீங்களெல்லாம் ஏன் இதற்குள் மூக்கை நுழைக்கிறீர்கள். போய்க் கவிதை எழுதுவதுதானே' என்கிற ரீதியில் புண்படுத்தினார். பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற பேரில் அந்த ஜாதியில் பிறந்த யாரையும் இழிவு படுத்த எந்த எல்லைக்கும் போவார். (உ-ம்: மணிரத்னம் ஹோட்டல் ருவாண்டா கதையைச் சுட்டு பம்பாய் என்ற பெயரில் எடுத்தார் என்று எழுதுவார். ஹோட்டல் ருவாண்டா வந்தது 2004ல், பம்பாய் வந்தது 1995 ல்). உங்களுக்கே தெரிந்திருக்கும் அவர் யாரென்று. கண்டுபிடியுங்கள் பார்ப்போமே!! சின்னதாக ஒரு க்ளூ தரவா? அவரது பெயர் சுகுணா என்று ஆரம்பித்து திவாகர் என்று முடியும்.

Saturday, 29 August 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு

முன்கதை
‘இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்' கூகிள் குழுமத்தில் உதித்த இந்தத் தொடர் விளையாட்டுக்கான கருவை, மு. மயூரன் ஆரம்பித்து வைத்தார். மு. மயூரன் வந்தி அண்ணாவை அழைக்கும்போதே நினைத்தேன், அடுத்தது என்னிடம் இது வரும் என்று. பாடசாலைக் காலங்களில் அஞ்சல் ஓட்டத்தில் இயலுமான பங்களிப்பு (தனிய ஓட ஏலாது) செய்த காரணத்தால், இதையும் ஒரு அஞ்சல் ஓட்டமாக நினைத்து மேலே கொண்டு செல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. வலையில் நான் பதிய வந்தது ஒன்றும் பெரிய கதையும் அல்ல, அது பற்றிச் சொல்லப்போகும் நான் நல்ல கதை சொல்லியும் அல்ல. ஆனால் முடிந்தவரை சுவையாகச் சொல்கிறேன். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தியத்தேவா)

விதிமுறைகள்
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும். (தடித்த எழுத்தில் இருப்பதை மயூரன் அண்ணா, வந்தி அண்ணா இருவரும் கவனிக்கவும், உங்கள் பதிவுகளில் மூவருக்கும் என்று இருக்கிறது)

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

என் கதை
நான் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரு துறைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு துறையில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனடாவிற்கு கல்வி அனுமதிப் பத்திரம் மட்டும் பெற்று வேறொருவர் காசில் படிக்கும்போது என்னுடைய பெறுபேறுகளை உச்சத்தில் வைத்திருக்கவும், பொருளாதார ரீதியில் கொஞ்சமாவது மேம்படவும் போராடவேண்டிய கட்டாயம். நாடுவிட்டு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வதைத்த காலம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வரும். சில சமயங்களில் என்ன செய்கிறேன் என்று தெரியாதளவுக்கு ஒரு கோபம் வரும். தலையை உடைத்து எறிந்துவிடு என்கிற அளவுக்கு தலை வலிக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிப் பார்த்து கடைசியாக நான் நாடியது, மருத்துவர் லம்போதரனை.

சில விசயங்களை மனம் விட்டுப் பேசியபோது, மனச் சோர்வு அல்லது மனப் பிறழ்வுக்குரிய அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். அது பேரதிர்ச்சி. அவர் சொன்னபடி வேறு விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடிக்கடி நூலகங்களில் போய் கண்ணில் கண்ட புத்தகங்களை வாசித்தேன். முகம் தெரியாதவர்கள் நடத்தும் நடன, இசைக் கச்சேரிகளில் ஒரு ஓரத்தில் போய் குந்தி இருப்பேன். இந்த இயல், இசை எதிலுமே நான் தேர்ந்தவனல்லன். ஆக, என் அடிமன அழுக்குகளை அவைமூலம் வெளியேற்ற முடியாது. பாடசாலைக் காலங்களில் ஆங்கில தினப் போட்டிகளில் creative writing ல் 4முறை இரண்டாவதாகவும் 2 முறை மூன்றாவதாகவும் வந்திருக்கிறேன். ஆக, நான் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. 3 வருடமாக விட்டுப் போயிருந்த டயரி எழுதும் பழக்கத்தைத் திரும்ப ஆரம்பித்தேன்.

என்னை வலையுலகுக்கு இழுத்து வந்த பிதாமகர், அண்ணா ஆதிரை அவர்கள். அடிக்கடி Face Bookல் தன்னுடைய பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பார். அவரது 'அழாதே நண்பா' 'அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' ஆகிய பதிவுகள் தான் என்னை வலைப்பூவில் கொஞ்சம் உன்மத்தம் கொண்டு எழுத வைத்தது. அதுவரை ‘கிருத்திகனின் கிறுக்கல்கள்' என்றிருந்த என் வலைப்பூ ‘மெய் சொல்லப் போறேன்' என்று மாறியது. ஆரம்பகாலப் பதிவுகள் பல எனக்கே பிடிப்பதில்லை. வாசகர்களை என் வலைக்கு அழைக்கும் சூட்சுமமும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் மட்டுமே பின்னூட்டம் இட்டார்கள். சூட்சுமம் புரிய வைத்தது என்னுடைய ‘அவள்+அவன்= அது' என்கிற ஒரு பதிவில் ‘தமிழர்ஸ்' நிர்வாகிகள் போட்ட ஒரு பின்னூட்டம் மூலமாக.

முதன் முதலில் என்னுடைய நூல் என்ற சிறுகதை (???!!!) முயற்சியைத்தான் அதிக திரட்டிகளில் இணைத்தேன். என்னை யார் வாசித்தார்களோ, யார் பின்னூட்டம் போட்டார்களோ அவர்களிற்குத் தீனிபோடும் விதத்தில் எழுதிய நான் இந்த மாதம் எழுதிய ‘நான் பார்த்த இலங்கை' தொடரின் முதல் பகுதியில் இரு வேறு வாசகர்களுக்கு இரு வேறு வடிவங்கள் என்று ஒரு ஆபாசத்தைச் (அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை) செய்ததன் காரணமாக, சில படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, இப்போது கொஞ்சம் திருத்தமாக எழுதி வருகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் முடியாத நிலையில் 141 பதிவுகள் (இதோடு சேர்த்து) போட்டுவிட்டாலும், இன்னும் நான் பதிவுலகில் ‘பாலர் வகுப்பு' தான். ஆக, பெரியவர்கள் என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அனுபவங்கள்-தட்டச்சு
நான் தமிழை தட்டச்சத் தொடங்கியதே Unicode முறையில்தான். இலங்கையில் அப்பாவின் ‘தட்டச்சுக் கருவியில்' பார்த்துப் பார்த்துக் குத்தியபின் இப்போதுதான் தமிழ் தட்டச்சினேன். முதலில் higopi என்ற தளத்தில் தட்டச்சி, படியெடுத்து ஒட்டிய எனக்கு, ஞானியின் திண்ணை வலையில் NHM Writer அறிமுகமாகி, Phonetic முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.

இந்த முறைக்கு எதிரான பலமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரிந்தவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'ammaa' எனபது 'அம்மா' என்று வராமல் ‘சும்மா' என்று வருமாறு யாராவது அமைத்தால் நாங்கள் அப்படியே தட்டச்சிக் கொண்டு போவோமா? இல்லைத்தானே? ‘அ' எங்கே இருக்கிறது என்று தேடி அடிப்போம். கிட்டத்தட்ட எல்லாவிதமான தட்டச்சு முறைகள் (தமிழ் 99, பாமினி) பயன்படுத்துவோரும் இந்த விசையை அழுத்தினால் இந்தத் தமிழ் எழுத்து வரும் என்றுதான் மூளையில் பதித்திருப்பார்கள். இந்த முறையில் வேகம் கூட, இந்த முறையில் வேகம் குறைய என்று வாதாடலாமே ஒழிய, இந்த முறை தமிழை அழிக்கும், இது வளர்க்கும் என்று வாதாடுவது எல்லாம் ‘என் முறை சரி, உன் முறை பிழை' என்று நிரூபிக்க முயலும் சராசரி மனித இயல்பாகவே எனக்குப் படுகிறது.

வசந்தன் தன்னுடைய பதிவில் சொன்னது போல், எதிர்காலச் சந்ததி தட்டச்சித் தமிழ் படிக்கும்போது, இதில் எந்த முறையையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அதுவும் அவர்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரியாமல், phonetic என்றொரு முறை இருப்பதையே சொல்லிக் கொடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழை எழுத்துருக்களை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து அதன் பின் எப்படி வேண்டுமானாலும் தட்டச்ச விடலாம். அல்லது தமிழ் எழுத்துருக்களை சரியாக அறிமுகம் செய்து அவை பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம். மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும். எதிர்காலச் சந்ததிக்குத் தமிழ் கற்பிப்பதில் இவை எதுவுமே உதவி செய்யப்போவதில்லை. (இது ஒரு சிறுவனின் கருத்து. குத்திக் கிழிக்காதீர்கள். நித்திரைவிட்டு எழும்பி மனம் சஞ்சலம் இல்லாத நிலையில் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரியும்)

அனுபவங்கள்- மற்றவை
  • சுயம் இல்லாமல் எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன். சில சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறேன். என்ன அந்தச் சர்ச்சை மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த நண்பர்களின் (யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்) நட்பு வலுப் பெற்றது. புது வழிகாட்டிகள் கிடைத்தார்கள். சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மூத்தவருக்கு நன்றி.
  • சமீபத்தில் இன்னொரு பதிவில் நான் விட்ட பிழைகள் பற்றி 'பெட்டை' சில படிப்பினைகளைத் தந்திருக்கிறார். அந்தப் பிழைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்து எழுதுவேன் என இந்தப் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன். ஆக, 'பெட்டை'க்கும் நன்றி.
  • முகம் தெரியாத நட்புகள், வயதெல்லையின்றிய நட்புகள் என்று பலநட்புகளை இந்த தந்திருக்கும், என் மன ஓட்டங்களுக்கு வடிகாலாக இருக்கும் வலையுலகுக்கும் நன்றி.
என்னுடைய அழைப்புகள்
  1. ஆதிரை- பதிவுலகத்தில் என்னுடைய பிதாமகர். மூத்த அண்ணன். ஆளை அடிக்கடி மாட்டி விடலாம், எதையும் சமாளிப்பார். அதனால் இதையும் சமாளிப்பார் என்றே நம்புகிறேன்
  2. பால்குடி- நெருக்கமான தோழன். இன்னொரு இடிதாங்கி. கூடுதல் தகவல்கள்- பள்ளிநாட்களில் பல மேடைகள் கண்டவர். பலரை விழுந்து விழுந்து சிரிக்கவும், சில சமயம் கண்களைத் துடைக்கவும் வைத்தவர். ஆள் மிருதங்கம் நல்லா வாசிப்பார் என்று தெரியும். பாடசாலைக் காலத்தில் சித்திரம் படித்ததாக ஞாபகம். இவர்கள் ஊருடனான கிரிக்கெட் போட்டிகளில் குத்துக்கட்டை போட்டு எங்களை வீழ்த்தி சாபத்தைச் சம்பாதித்தவர்.
  3. அருண்மொழிவர்மன்- வலையுலகு தந்த இன்னொரு இனிய நட்பு. 12 மணிக்குக்கூட தொ(ல்)லை பேசினாலும் சிரித்தபடி கதைப்பவர். நேற்றுத்தான் இவரை நேரில் சந்தித்த
  4. சாயினி- கனகாலம் இவா எழுதேல்லை. ஆளை மாட்டி விடவேணும் என்ற நல்ல எண்ணம்தான். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையிலும், 8ம் வகுப்பு வரை ரியூசனிலும், ஒன்றாகப் படித்தா. இலங்கையில் இருந்து எழுதிய முதல் தமிழ்ப் பெண் பதிவர் என்று சயந்தன் சொல்லுவார். (எல்லாப் புகழும் சயந்தனுக்கே).

Sunday, 23 August 2009

இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு

இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது. கனேடிய நேரம் சரியாக சனிக்கிழமை இரவு 11:43 க்கு (இலங்கை நேரம் 9:13) ஆரம்பித்த இந்த ஒன்றுகூடல் சரியாக ஞாயிறு அதிகாலை 3.28க்கு நிறைவு பெற்றது. 'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலை நானும் முழுமையாகப் பார்த்தேன். நேரடி ஒளியலை கிடைத்த வலைத்தளத்தில் இருந்த கலந்துரையாடும் வசதி காரணமாக, சந்திப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த பதிவர் ஊரோடி, கௌபாய்மது ஆகியோர் மூலமாக எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வசந்தன், கானாபிரபா, சயந்தன் ஆகியோர் நடத்திய இணையக் கலந்துரையாடலிலும் சில சுவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்திப்பில் நான் அவதானித்த, கற்றுக்கொண்ட விடயங்கள் வருமாறு.
  • இலங்கை நேரப்படி 9.13க்கு ஒன்றுகூடல் ஆரம்பமானது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒன்றுகூடல் 10.00க்கு முன் ஆரம்பித்ததே ஒரு பெரிய சாதனை.
  • நேரடி ஒளிபரப்பு 9.30 இலிருந்து சீராக கிடைத்தது. இது மதுவின் முதல் முயற்சியாம். ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரத்துக்கு மண்டபத்துக்கு வந்தவர்கள் மட்டும் 55 பதிவர்கள். மூத்தவர்கள் தொடக்கம், 11 வயது இளையவன் வரை வந்திருந்தார்கள்.
  • புல்லட் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதன் பின் சுபானு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆதிரை Bloggerன் 10வது பிறந்த நாள் கொண்டாடினார்.
  • Blogger ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று என்பது ஒரு தற்செயலான ஒற்றுமை. அதை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 பதிவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்ரர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டினார்கள்
  • அதன் பின்னர் மருதமூரான், சேரன்கிரிஷ், லோஷன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் மருதமூரானுக்குப் பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
  • லோஷனின் உரையைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும், இணையத்தில் இருந்தவர்களும்.
  • தமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். அதுவும் இணையத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்த வசந்தன் அண்ணாவும், சயந்தன் அண்ணாவும் Phonetic Unicode முறையைக் காரசாரமாக விமர்சித்தார்கள். (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)
  • இலங்கைப் பதிவர்கள் அதிகளவில் இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. சயந்தன் அண்ணா அடிக்கடி ‘கீத் இது உனக்குத்தான்' என்று சொல்லி நக்கலடித்தார். (அண்ணா, ஒன்லைனில நான் மாட்டீற்றன்... ஆனா கன ஆரம்பநிலை வலைப் பதிவர்களுக்கு தொப்பி பொருந்தும். அனுபவம் சேரச் சேர எல்லாம் சரிவரும் அண்ணா, இப்ப ஏசாதையுங்கோ)
  • புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித்தார்கள். நான் புனை பெயரில் எழுதாவிட்டாலும், இலங்கையில் உள்ள பதிவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
  • ழ,ல,ள, ந, ன, ண பற்றியும் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது என்னுடைய கருத்து.
  • பல பதிவர்களின் பதிவுகள் சினிமா சம்பந்தப் பட்டு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பிரச்சினையின் பின் முடிந்தளவுக்கு ‘சினிமா மட்டும்' கருப்பொருளான பதிவுகளை இயலுமானளவுக்குத் தவிர்த்திருக்கிறேன். அது தரமான பதிவுகளை, சுயம் நிறைந்த பதிவுகளைத் தருவதற்கான என்னாலான முயற்சி.
  • எங்கள் வாழ்வியலில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாமல், அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இன்ன இன்ன விடயங்களைத்தான் ரசிக்க வேண்டும், இன்ன இன்ன விடயங்களை ரசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், என்னமாதிரியான உரைநடையில் எழுதவேண்டும் என்பதையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து.
  • யாழ்தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் பொதுவான பெயராக இருக்க முடியாது என்ற வாதம் நியாயமானதாகப்படுகிறது. இப்போது கொழும்பு-தாண்டிக்குளம் (தகவல் தந்தது: சயந்தன் அண்ணா) செல்லும் புகையிரத வண்டிதான் யாழ்தேவி என்றால், அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கான அடையாளமாக இருக்காது.
  • விழாவை வந்தியத்தேவன் தன்னுடைய ‘பின்னூட்டத்துடன்' முடித்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் வடை, பற்றீஸ், கேக், நெஸ்கஃபே வழங்கப்பட்டது. இணையத்தில் இருந்து இணைந்த நாங்கள் கொட்டாவி மட்டும் விட்டோம்.
சந்திப்பு சம்பந்தமான படங்களை ஆதிரையின் தளத்திலோ, வந்தியத்தேவனின் தளத்திலோ பாருங்கள்.

தனிப்பட்ட சந்தோஷங்கள்
  • பள்ளிக்காலத் தோழர்களான பால்குடி, பனையூரான், ஆதிரை ஆகியோரை மீண்டும் கண்டது. வந்தியத்தேவன் அண்ணாவின் குரல் கேட்டது.
  • ஒன்றுகூடலில் பேசியவர்களின் பேச்சுக்களிலும், கலந்துரையாடலிலும், கானா பிரபா, சயந்தன், வசந்தன் ஆகிய மூத்தவர்களுடனான உரையாடலில் கிடைத்த சில பயனுள்ள கற்கைகள்.
  • எங்கட பொடியள் செய்த நேரடி ஒளிபரப்பு. மதுவுக்கு திரும்பவும் வாழ்த்துக்கள்.
  • இந்தியப் பதிவர்கள் சிலர் வந்து வாழ்த்தினார்கள், ஒன்லைனில்.
ஒரு தனிப்பட்ட துக்கம்
  • எங்கள் ஒன்லைன் விவாதத்தின் இடையே அடிக்கடி ஒருவர் பெயரை மாற்றி மாற்றி எங்களைக் கோபமூட்ட முயன்றது.
ஆக மொத்தத்தில், இரண்டு பேர் சேர்ந்தாலே பொதுக்கூட்டம் என்கின்ற மாதிரி ஒன்றுகூடல்கள் நிகழும் ஒரு காலத்தில் அறுபது பேர் கலந்து கொண்ட ஒன்றுகூடலை ஒருங்கிணைத்த வந்தியத்தேவன், லோஷன், புல்லட், சுபானு ஆகியோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

பதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்

Thursday, 6 August 2009

வலைத்தளங்களில் தமிழில் தட்டச்சுவது கடினமாய் இருக்கிறதா?

பதிவுலகத்துக்கு புதுசா? இன்னொரு வலைமனையில் டைப் செய்து அவர்கள் தரும் தமிழாக்கத்தைக் வெட்டி ஒட்டி அல்லாடுகிறீர்களா? உங்களுக்குதான் இந்தப் பதிவு. நானும் கூகிளின் மொழிபெயர்ப்பு, கோபியின் யுனிகோடு, எழில் நிலா யுனிகோடு என்று அலைந்தவன்தான். அப்புறம் எங்கோ முட்டி மோதி நான் கண்ட இந்த நல்ல மென்பொருளை உங்களுக்கும் அறிமுகப் படுத்துகிறேன். இது நிச்சயம் பதிவுலகில் பிரபலமாயிருக்கும் என்ற என்னுடைய நம்பிக்கை காரணமாக கடந்த 5 மாதங்களாக நான் பாவிக்கும் இந்த மென்பொருள் பற்றிய சிறிய அறிமுகத்தைத் தராமல் விட்டது என்னுடைய தப்பு. சமீபத்தில் சில நண்பர்களோடு பேசியபோதுதான் அவர்களும் இன்னமும் வெட்டி ஒட்டுகிறார்கள் என அறிந்து கொண்டேன். ஆக, NHM Writer பற்றிய ஒரு அறிமுகம் இங்கே.

NHM Writer சில தகவல்கள்

இந்த மென்பொருள் 10க்கு மேற்பட்ட இந்திய மொழிகளுக்கான யுனிகோடுகளை உள்ளடக்கியது.
  • Firefox, Internet Explorer, Google Chrome, Safari உட்பட அனைத்து ப்ரவுசர்களிலும் வேலை செய்வதுடன் கிட்டத்தட்ட எல்லா மைக்ரோசொஃப்ட் மென் பொருள்கள், எல்லா மைக்ரொசொஃப்ட் ஒஃபிஸ் மென்பொருள்கள், எல்லா மெசஞ்சர்கள் ஆகியவற்றிலும் நேர்த்தியாகப் பங்காற்றுகிறது.
  • தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களுக்கான சில எழுத்துருக்களைக் கொண்டுள்ள இந்த மென்பொருள், தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
  • எல்லா விண்டோஸ் இயங்கு தளங்களிலும் சிறப்பாக நிறுவிக்கொள்ளலாம் இந்த மென்பொருளை.

NHM Writer எங்கே கிடைக்கும்?

New Horizon Media என்ற ஒரு நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருள் இது. கூகிளாண்டவரிடம் NHM Writer என்று கேட்டால் முதலாவதாகப் பட்டியலிடுவார். இல்லை அப்படி கூகிளாண்டவரிடம் தலைவணங்க மாட்டோம் என்றால் இங்கே அழுத்தி திறக்கும் பக்கத்தில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கும் NHMWriterSetup1511.exe என்ற ஃபைலை உங்களுக்கு இலகுவான இடத்தில் சேமித்துக் கொண்டால் உத்தமம். பக்கத்திலேயே அறிவுறுத்தலகள் கொண்ட ஒரு PDF File இருக்கிறது.

எப்படி இன்ஸ்டால் செய்வது?

வழமை போலத்தான். NHMWriterSetup1511.exe ஃபைலில் இரண்டு முறை க்ளிக் செய்ய NHM Set-up Wizard உங்களை மீதிப்படிகளில் வழிநடத்திச் செல்லும்.
லைசென்ஸ் அக்ரீமெண்டை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்கும். (ஏற்றுக்கொள்ளாமல் எப்பிடி இதை நிறுவலாம்?). ஆகவே, கை கட்டி வாய் பொத்தி ஏற்றுக்கொள்ளவும்
லைசன்ஸ் அக்ரீமெண்டை ஏற்றுக் கொண்டதும் எங்கே இன்ஸ்டால் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கும். பயப்படாமல் Next பொத்தானை அழுத்துங்கள். கூடுதலான பி.சி.கள் தாமாகவே சரியான இடத்தைத் தேர்வு செய்வன.
அடுத்த ஸ்டெப்தான் ரொம்பவே முக்கியம். உன்னுடைய மொழி என்னவென்று கேட்கும். அதில் தமிழைத் தேர்வுசெய்து விடுங்கள்.
அதன் பின்வரும் ஸ்டெப்பைப் பற்றிக் கவலையே படாமல் Next பொத்தானை அழுத்துங்கள். அடுத்த ஸ்டெப்பில் Create Desktop Icon, Create Quick Launch Icon ஆகிய இரண்டு தெரிவுகளையும் தேர்ந்தெடுங்கள். மீண்டும் Next பொத்தானை அழுத்த NHM Writer மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.

எப்படிப் பயன்படுத்துவது?

நீங்கள் வழமையாக ஒரு மென்பொருளை எப்படி ஆரம்பிப்பீர்களோ, அவ்வாறே இதையும் ஆரம்பியுங்கள். உங்கள் கணனியின் Task Barன் வலது மூலையில் (இன்னும் பாமரத்தனமாகச் சொல்வதானால், கணனித் திரையின் வலது மூலையில்) ஒரு மணி உருவம் தென்படும். அந்த மணி சாதாரண வெண்கல நிறத்தில் இருந்தால் நீங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்யலாம். அந்த மணி மீது உங்கள் Mouseஐ நகர்த்தி, Left Click செய்ய இந்த மென்பொருளில் உள்ள நான்கு தமிழ் யுனிகோடு மென்பொருள்களையும் இது பட்டியலிடும். அதில் ஒன்றைத் தெரிவு செய்து நீங்கள் ஜமாய்க்க வேண்டியதுதான். தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் Alt+2 ஐ அழுத்தினால் வரும் யுனிகோடை பாவியுங்கள். உள்ளதிலேயே இலகுவானது இதுதான்.
நீங்கள் தமிழில் டைப் செய்யும் நிலையில் இருக்கிறீர்கள் என்பதை தங்க நிறத்தில் ஒளிரும் மணி மூலம் உறுதி செய்யலாம். மணி சாதாரண வெண்கல நிறத்தில் இருக்கும்போது ஆங்கிலத்தில் மட்டுமே டைப் செய்யலாம். ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் Alt உடன் உரிய பொத்தான்களை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

வேறு Options களுக்கும், Settings க்கும் என்ன செய்வது?

இதற்கு Mouseஐ மணிக்கு மேல் வைத்து Right Click செய்யுங்கள். உங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் தேவை, என்ன உதவி தேவை, அப்டேட் ஏதாவது தேவையா, On Screen Keyboard தேவையா என்று கேட்டு எல்லாவற்றையும் வழங்குகிறார்கள்.

NHM Writer எவ்வளவுக்கு உபயோகமானது?
  • வெட்டி ஒட்டுவதிலுள்ள எரிச்சல்கள் இதில் இல்லவே இல்லை.
  • Tamil Phonetic Unicode இருப்பதால் இதைவிட இலகுவான தட்டச்சு மென்பொருள் உங்களுக்குக் கிடைக்காது என்றே சொல்லலாம்
  • MS Office இலுள்ள அனைத்து மென்பொருளிலும் வேலை செய்கிறது
  • அனைத்து Chat களிலும் பயன்படுத்தலாம்
  • Alt உடன் இன்னொரு 'கீ'யை மட்டும் பயன்படுத்தி ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி டைப் செய்யலாம்
  • பந்தி பிரித்து நேர்த்தியாக உங்களது படைப்புக்களை டைப் செய்யலாம்.
  • ப்ளாகரில் புதிய பதிவுகளை நேரடியாக இடலாம்
பின்குறிப்பு: படங்கள் என்னுடையவை அல்ல. பதிவர் Faizal உடையவை. அவருக்கு நன்றி. கிட்டத்தட்ட இதே போல் ஒரு பதிவை மேலும் சில விபரங்களோடு அவரும் இட்டிருக்கிறார். அவரது அனுமதியின்றி படங்களைப் பயன்படுத்தியதுக்கு மன்னிப்பாராக.