Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, 30 December 2009

மார்கழித் திங்கள்

நாளுக்கு நாள் மணக்கும் மட்டன், ருசிக்கும் றால், சிவாஸ் ரீகல், ஹெனிக்கன், ஜமேக்கன் ரம், வித விதமாய் சோறு, சலாடுகள், பழக் கலவைகள், ஐஸ் கிரீம் என்று கிட்டத்தட்ட களிப்பாகத் தான் போகிறது இந்த மார்கழி. நத்தார் கொண்டாட்டமும் புதுவருட வரவேற்பும். இதிலெல்லாம் நான் பங்கெடுப்பதில்லை என்று பொய்சொல்ல மனம் ஒப்பாவிட்டாலும், எதையோ ஒன்றை இழந்த மனநிலை எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஊரில் இருந்தபோது மார்கழி ஒவ்வொரு வயதுக்கு ஒவ்வொரு கோலமாய் மகிழ்வித்துப் போனது. அந்த சுகமான அனுபவங்களை மனம் அசைபோட்டுப் பார்க்கும்போதே சில்லிடுகிறது மனம்.

சின்ன வயதில் மார்கழி விடுமுறையில் பகல் முழுதும் பட்டம் பறக்க விடுவதிலேயே கழியும். மார்கழிக்கென்றே இரு வகை வாசனைகள் தனித்துவமானவை. ஒன்று மார்கழி முடிகிற தறுவாயில் கடையிலிருந்து அடுத்த வருடப் பாடசாலைத் தேவைகளுக்காக அப்பா கொண்டுவரும் புதுக் கொப்பிகளைப் பிரிக்கும்போது வரும் காகித வாசனை. அதுவும் அக்காக்கள் வீட்டில் இருந்த வரையில் அப்பா ஐந்தாறு டசின் கொப்பிகளைக் கொண்டுவருவார். அவற்றைப் பிரித்து அட்டைக்கு உறை போடுவோம். அதுவும் ‘ஸ்ரேப்ளர்' அடித்த நாற்பது தாள், அறுபது தாள் கொப்பிகளை அப்பா ‘கொறளோன்' நூல் போட்டுக் குத்திக்கட்டித்தான் உறை போடுவார். மண்ணிறத்தாள், மணிலாத்தாள் இரண்டில் ஏதாவது ஒன்றில் அக்காமார் உறை போட, எனக்கு மட்டும் ‘ஸ்போர்ட்ஸ் ஸ்ரார்' தாங்கி வரும் வண்ண வண்ணப் புகைப்படங்கள் உறைகளாவது பெருமையாயிருக்கும். சில வேளை அதற்கு மேலே மணிலாத் தாள் போட்டாலும், அதைக் கிழித்து படங்களைக் வெளியே காட்டுவதில் ஒரு மிதப்பு இருக்கும்.

இன்னொன்று பட்டத்து நூலின் நைலோன் வாசனை, பட்டத்தாளின் வாசனை, பட்டம் ஒட்டக் கிண்டிய கோதுமைப் பசையின் வாசனை என்று ஒன்றுகட்டி வரும் இன்னொரு வாசனை. எனக்குத் தெரிந்து நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் இந்த வாசனைகளை அனுபவிக்காமல் யாருடைய குழந்தைப் பருவமும் கடந்திருக்குமா என்பது சந்தேகமே.

எங்கள் மார்கழியின் இன்னொரு அழகான அனுபவம், திருவெம்பாக் காலம். சின்னப் பொடியன்கள் எல்லாம் சங்கு, சேமக்கலம் எல்லாம் எடுத்துக்கொண்டு விடியலிலேயே புறப்பட்டுவிடுவார்கள், துயிலெழுப்ப. பதின்ம வயதுகளுக்கு வரும் முன்னர் அம்மா என்னையும் துயிலெழுப்பி விடுவார். அப்பா கோயிலை என்றைக்கும் மறக்காதவர். சங்கு, சேமக்கலக் கூட்டத்தோடு போகாவிட்டாலும் நடுங்கும் குளிரில் அம்மா வைத்த சுடுதண்ணீரில் குளித்து அப்பாவுடன் கோயில் போவதில் ஒரு ‘த்ரில்' இருந்தது என்றே சொல்லலாம். ‘லிங்கம் பேக்கரி' ராசலிங்கத்தின் மகள்களுக்கும் எனக்கும் அந்தப் பனியில் ஒரு பனிப்போர் நடக்கும், கோயில் மணியை யார் அடிப்பது என்று. அநேகமான தருணங்களில் அப்பா நேரத்துக்கே கோயிலுக்குப் போய்விடுவதால் குலனையில் மணியை நான் குத்தகைக்கு எடுத்துவிடுவேன். ஆனால் குழவியடி அம்மனுக்கு அவர்கள் குறுக்குப் பாதையால் ஓடிவந்து என்னை முந்திவிடுவார்கள். பிரசாதம் மட்டும் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதால் அதில் போட்டிபோட மாட்டோம். சிலவேளைகளில் குலனை அய்யரோ, அம்மன் கோயில் அய்யரோ விபூதி, சந்தனம், குங்குமம் அல்லது பூத்தட்டு இதில் ஏதாவது ஒன்றைத் தந்து ‘எல்லாருக்கும் காட்டுங்கோ' என்று சொன்னால் பயங்கரப் பெருமையாக இருக்கும்.

இதே காலங்களில் பனியில் நனைந்து சிரிக்கிற பூக்கள் அழகாயிருக்கும். தொடரும் தை மாசியிலும் பனி பொழிவதால் அந்தக் காலைவேளைகள் மனதை மகிழ்விப்பதாயே இருக்கும். நாள்தோறும் தாயறையில் சாமிப் படங்களுக்கு அப்பா பூப்பறித்து வைப்பார். அதற்காக வளர்க்கப்பட்ட பூமரங்கள் முற்றத்தை அலங்கரித்திருக்கும். மூன்று நிறங்களில் செவ்வரத்தை நின்றது. நந்தியாவெட்டை, நித்தியகல்யாணி, தேமா, மல்லிகை, நீலோற்பலம், ரோசா எல்லாம் நின்றது. அதிலும் இந்த நந்தியாவெட்டையும், நித்தியகல்யாணியும் கோடை காலத்திலேயே பயங்கரக் குளிர்ச்சியாயிருக்கும். பனிக்காலத்தில் செல்லவும் வேண்டுமா? அந்தக் குளிர்மைக்காகவே அவற்றில் சிலவற்றை எட்டிப் பறிப்பதுண்டு.

வரப்போகிற புதிய ஆண்டை வரவேற்பதற்குரிய ஆயத்தமாகவே ஊரில் மார்கழி மாசம் இருக்கும். தை பிறக்கும்போது புது வகுப்புக்குப் போகிற ஆவல் தருகிற அடி வயிற்று அவஸ்தை தவிர, புதுசாகப் பிறந்ததுபோல் மனம் குதூகலிக்கும். புதிதாய்ப் பிறந்த வருஷத்திலும் முதல் இரண்டு மாதங்களுக்காவது தொடர்கிற அந்தப் பனிநிறைந்த காலைகள், பள்ளிசெல்லும்போது கடந்து செல்லும் தோட்டவெளிகள், அந்த வெளிகளிலிருந்து வரும் இனம்புரியாத வாசம், மத்தியானங்களில் எங்களுக்குப் பட்டம்விட வசதியாய் வீசும் காற்று, மறக்க முடியவில்லை மார்கழித் திங்களை.

வாழ்க்கை எப்படியெல்லாம் எங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது. பட்டம்விட்ட, காலையில் அப்பாவின் சைக்கிளில் முன்புறம் அமர்ந்து கோயில் போன, மணி அடித்த சிறுவன், இன்றைக்கு அதே மார்கழித் திங்கள் அதிகாலையில் பெயர்கூடத் தெரியாத அயலவனுக்கு வணக்கம் சொல்லி கொட்டும் ‘பனி' துடைக்கிறேன். சங்கும், சேமக்கலமுமாய் திரிந்த யாரும் இன்றைக்கு ஊரில் இல்லை என்று கேள்வி. மணி அடிக்கப் போட்டி போட்ட பெட்டைகளில் ஒருத்தி கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாகி, அவளது அம்மாவுக்கு சமாந்தரமாக ஒரு பிள்ளை பெற்று, அந்தப் பிள்ளையின் தகப்பனை ‘தேசத்துரோக' முத்திரைக்குப் பலி கொடுத்து, இடுப்பில் பிள்ளையோடும் கிழிந்த துணியோடும் அலைந்துகொண்டிருந்தாள் (அலைந்துகொண்டிருக்கிறாள் என்று எழுதமுடியவில்லை). சுவாமி காவுவதற்கே இளந்தாரிகள் இல்லையாம், மணியடிக்க சண்டை யார் போடப்போகிறார்கள்?

இருந்தும் சில விஷயங்கள் மாறவில்லை. அப்பா இன்றைக்கும் கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார், திருவெம்பாவைக்கு, அதிகாலையில் எழுந்து. இப்போதும் தீவிரமாகக் கடவுளை நம்புகிறார். இன்றைக்கும் வீட்டின்முன்னால் எல்லாப் பூமரங்களும் நிற்கும் என்று நினைக்கிறேன். சைக்கிளில் தாவி ஏறும்போது எட்டி ஒரு பூவைப் பறித்துக் கொண்டுபோகிற வழக்கம் தம்பியிடம் இருக்கிறதா தெரியவில்லை. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் சொர்க்கம்தான். இருந்தும், சொர்க்கமே என்றாலும்......

Thursday, 20 August 2009

பேசிய படங்கள்

நிறைய காலத்துக்குப் பிறகு ஒரு சினிமாப் பதிவு. அதாவது இரண்டு வாரத்துக்குப் பிறகு. நான் என்னுடைய முன்னைய பதிவு ஒன்றில் சொன்னது மாதிரியே பேசாப் பொருளைப் பேசத்துணிந்த இரு படங்களான அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் வேலு பிரபாகரனின் அரிப்புக் கதை, மன்னிக்கவும், காதல் கதை இரண்டையும் சென்ற வார இறுதியில் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் என்ன நினைக்கிறேன் என்பதுதான் இந்தப் பதிவின் ஆதார நோக்கம்.

வேலு பிரபாகரனின் காதல் கதை

என்னதான் திட்டித் தீர்த்தாலும், வேலு பிரபாகரனைச் சில விஷயங்களுக்காகப் பாராட்டியாக வேண்டும். அவர் பேச வந்த விஷயம் கத்தி மேல் நடப்பது போன்றது. என்னதான் வாய்கிழியக் கத்தினாலும், காமம் கலக்காத காதல் இல்லை என்பது உண்மை. எனக்குத் தெரிந்து காதலியைத் தனிமையான இடத்தில் வைத்துச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது தொட்டுப் பார்க்காத காதலனும், அவ்வாறு தொட அனுமதிக்காத காதலியும் இருக்கவே முடியாது. இல்லை, நாங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்து கல்யாணம் கட்டும் வரை தொட்டுக் கொள்ளவே மாட்டோம் என்று சபதம் எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் யாராவது சொன்னால், அது பச்சைப் பொய். ஒரு துளியாவது காமம் கலக்காமல் காதல் இல்லை என்பது நிதர்சன உண்மை.ஆனால் வேலு பிரபாகரன் எல்லாமே காமம்தான் என்று சொல்லத் தலைப்பட்டிருக்கிறார். அதுதான் உதைக்கிறது. கிட்டத்தட்ட காதல் என்ற ஒரு உணர்வே இல்லை, எல்லாமே காமம்தான் என்ற மாதிரி இருக்கிறது அவரது பார்வை.

எனக்குத் தெரிந்து மோசமான சிலரைத் தவிர வேறு எந்தக் காதலனோ காதலியோ குளத்தாங்கரையிலோ, பனந்தோப்புகளிலேயோ ‘கூடும்' அளவுக்குப் போவதில்லை. அங்கே இங்கே ஏடாகூடமாகத் தொட்டுக் கொள்வார்கள், முத்தமிட்டுக் கொள்வார்கள். சந்திக்கிற போதெல்லாம் கூடுவதை மட்டுமே ஆதார நோக்கம் கொண்டவர்களாக ஒரு காதல் ஜோடியைப் படைத்திருப்பது எனக்கு ஏனோ ஒப்பவில்லை. படம் முழுவதும் இப்படியான அழுத்தமில்லாத பாத்திரப் படைப்புகள். இதிலும் பெரிய irony என்னவென்றால் ஒரு கடற்கரையில் குறைந்த பட்ச ஆடைகளோடு ஆடும் பெண்கள் பற்றியும், அப்படி எல்லாவற்றையும் ‘திறந்து' வைத்தால் கற்பழிப்பு போன்ற பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்பது பற்றியும் முழுமையாக உடை அணிந்த வண்ணம் பாடம் நடத்துகிறார்.

நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஏன் பெண்கள் மட்டும் திறந்து வைக்கவேண்டும்? நீங்களும் உங்களுடையவற்றை ‘ஆடவிட்டு' திரியலாமே. இவர் மட்டும் முழுக்க மூடியிருப்பாராம், இவரது இச்சை தணிக்க பெண்கள் மட்டும் 'திறந்து' பிடிக்க வேண்டுமாம். படம் முழுக்கவும் இவரது ஒரே ஒரு பார்வை மட்டுமே தென்படுகிறது, அதாவது காலம் காலமாக நிலவி வருகிற ‘பெண் ஒரு போகப் பொருள், அவள் திறந்து காட்டிக் கொண்டு திரிந்தால் எல்லாம் சரியாகிவிடும்' என்கிற கேவலமான ஆணாதிக்க சிந்தனை. இதில் பெரியார் வேஷத்தைத் தானும் போட்டு..அட கருமமே.. அம்மா, தாய்மாரே, நம்ம வேலு பிரபாகரன் என்ன சொல்ல வர்றார் தெரியுமோ? உங்கள் பிள்ளைகள் காமம் பற்றிய நல்ல அறிவோடு தெளிவாக வளர, நீங்கள் திற................. அடச்சீ.. பொத்திக் கொள்கிறேன். ஆக, சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை கேவலமான ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

அச்சமுண்டு அச்சமுண்டு

சின்னப் பிள்ளைகளைப் பயன்படுத்தித் தாகம் தணிக்கும் மனிதன் ஒருவனைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் வியாபார ரீதியாக சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறன. படம் மிக ஆறுதலாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் படபடப்பை ஏற்றியிருக்கலாம். இப்போ இயக்குனர் அருண் வைத்தியநாதன் சொல்ல வந்திருக்கும் விஷயம் எந்த அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு பொருத்தமானது என்பதுதான் கேள்வியே.

இயக்குனர் சொல்லியிருப்பது போல் கடத்திப் போய் அனுபவிக்கும் அளவுக்கு இல்லையென்றாலும், அவர் சொல்லியிருக்கும் விஷயம் இருக்கிறது. இது பற்றிப் பேசுவதற்கு எனக்கு 'எல்லாத்' தகுதியும் இருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்வேன். மூன்று வெவ்வேறான இடங்களில், சந்தர்ப்பங்களில் மூன்று வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களால் அந்தத் தகுதி எனக்கு 8 வயதுக்கு உள்ளாகவே வழங்கப்பட்டு விட்டது. இது பற்றி மேலும் சொல்லப் போனால் சில குடும்பங்கள் உடைந்து சின்னாபின்னப் படலாம என்பதால் இங்கேயே நிறுத்துவது உசிதம் என்று நினைக்கிறேன்.

நேரடியாகக் கிடைக்காத ஒரு தகுதி என் பதின்ம வயதுகளின் பிற்பகுதியில் கிடைத்தது. எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த அந்த மனிதர் பற்றி நண்பர்கள் சொன்ன செய்தி அது. அந்த மனிதர் பராயமெய்திய ஆண் பிள்ளைகளைக் குறி வைப்பவர். ஒரு வாசிக சாலையில் அடிக்கடி கை போட முயல்வாராம். கோவில் திருவிழா காலங்களில் இவரது அட்டகாசம் அதிகமாக இருக்குமாம். ஒருமுறை இவரது ஆசைக்கு இணங்குவது போல் நடித்து இவரது மர்மப் பிரதேசத்தில் ‘காஞ்சிரோண்டி' என எங்கள் பக்கத்தில் அழைக்கப்படும் பட்டால் பயங்கரமாக அரிக்கும் செடியின் இலையைப் பூசிவிட்டார்கள் அந்த ஊர் இளைஞர்கள். கொஞ்சக் காலம் அடங்கியிருந்தவர் ஒரு முறை நண்பனுக்காக நான் வாசிகசாலையில் காத்திருந்த போது தேவையில்லாமல் மிக நெருக்கமாய் உட்கார, இவரது வரலாறு தெரிந்த நான் நண்பன் வீட்டு மதிலில் போய் உட்கார்ந்து விட்டேன்.

ஆக, அருண் வைத்தியநாதன் சொல்ல வந்த அந்த child abuse விஷயம், ஒரு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது உண்மை. அதுவும் எட்டு வயதுக்குள் மூன்று தகுதியளிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியான சொல்லாடலா என்று சந்தேகம் வர வைப்பது உண்மை. என்ன நான் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுகிறேன், பலர் பேசுவதில்லை. அருண் வைத்தியநாதனும் கொஞ்சம் வெளிப்படையகப் பேசியிருக்கிறார். இனி வீட்டுக்கு வரும் யாரையும் எப்படி நம்புவது என்கிற ஒரு மனநிலையைத் தோற்றுவித்திருக்கக்கூடிய கரு, அழுத்தம் போதாமை காரணமாக கொஞ்சமே போரடிக்கிறது. ஆனால் ஒரு துளி ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

அருண் சொல்லாத ஒரு விஷயம், இப்படியான அக்கிரமங்களை நிகழ்த்த உங்கள் வீட்டுக்குள் வெளியிலிருந்து ஒரு ஆள் வரவேண்டும் என்பதில்லை. இப்படியான வன் கொடுமைகள் உங்களால் அதிகம் நம்பி வீட்டுக்குள் அனுமதிக்கப்படும் உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்களால்தான் அதிகளவில் நிகழ்த்தப் படுகின்றன என்பது உண்மை. இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் ஞாநி (வேறு விடயங்களில் அவரது கருத்துக்களில் நான் உடன் படாவிட்டாலும்) எழுதிய அறிந்தும் அறியாமலும் (விகடனில் தொடராக வந்தது) கிடைத்தால் படிக்கலாம். சிக்கலான விஷயங்கள் பலவற்றை எளிய தமிழில் சொல்லியிருப்பார். (என்ன வல்லுனர்களை மேற்கோள் காட்டாமல் எல்லாம் தன் சொந்தச் சரக்கு என்ற பாணியில் எழுதியிருப்பார்).

ஒரு கேள்வி, அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த போது எழுந்தது. அதாவது படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளிகளாகக் கருதப்படுவது இல்லையா? 'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற பதத்தை யாராவது சரியாக வரையறுத்துச் சொல்ல முடியுமா?