Wednesday, 24 March 2010

பிரவுணி, டெவில் மற்றும் சீக்கோக்கள்

சீக்கோக்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்து வீதிகள் பலவற்றில் இவர்களின் ராச்சியம்தான் நடக்கும். பல நிறங்களில், பல பருமன்களில் போகிற வருபவர்கள் எல்லோரையும் மிரட்டுவதில் சீக்கோக்களுக்கு நிகர் சீக்கோக்கள்தான். ஆனால் நித்தனும் சிறிமாவோ பண்டீரிநிக்காவும் சீக்கோக்களுக்குப் பயப்பட மாட்டார்கள். சைக்கிளில் போகும்போது நிம்மதியாக நித்திரை கொண்டுகொண்டிருக்கும் சீக்கோக்களை ஓங்கி உதைப்பார்கள். அடுத்த நாள் அதே வீதியில் போனால் உதை வாங்கிய சீக்கோக்கள் ஞாபகம் வைத்துக் கலைக்கும். சைக்கிளில் எம்பி மிதித்து ஓடி சடாரென பிரேக் பிடிக்க சீக்கோக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடும் பாருங்கள், அந்த வேகத்துக்கு யாருமே ஈடுகொடுக்க முடியாது. இப்போது சிந்தித்துப் பாருங்கள், சீக்கோக்களை உங்களுக்குத் நிச்சயம் தெரியும்தானே.

எனக்கு சீக்கோ என்கிற பெயரை நித்தன்தான் சொல்லித்தந்தான். அதற்குமுன் ‘நாய்கள்' என்கிற பெயரிலேயே அவர்களை அழைத்துவந்தேன் (இப்போது doggy). நித்தனோடு சேர்ந்த பின் சீக்கோக்களுக்கு நானும் சிம்ம சொப்பனம்தான். அவர்களை உதைக்காவிட்டாலும் ‘ஊய்' என்று சத்தமிட்டு மிரட்டி, சைக்கிளைக் கலைக்கவைத்து, பிரேக் போட்டு வாலைச் சுருட்டி ஓடவைப்பதில் ஒரு த்ரில் இருந்தது. அந்தக் கொடுமைக்கு எல்லாம் சேர்த்து கனடாவில் வைத்து ஒரு சீக்கோ இடது முழங்கைக்கு சற்று அருகிலும், முன்தொடையிலும், பிட்டத்திலும் கடித்து கடுக்கக் கடுக்க ஊசி போடவைத்தது என்பது வேறுகதை. ஆனாலும் இன்றைக்கும் சீக்கோக்கள் மீதான வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. கல்லால் அடிக்க, காரால் ஏற்ற ஆசையிருக்கிறது. ஆனால் சீக்கோக்களை வளர்ப்பவர்கள் மில்லியன் கணக்கில் என்னிடம் நட்டஈடு கோரலாம் என்று பயப்படுத்துகிறார்கள்.


நான் ஒன்றும் சின்னவயதில் இருந்தே சீக்கோக்களை வெறுத்ததில்லை. எங்கள் வீட்டில் மெல்லிய மண்ணிறத்தில் கழுத்தில் சின்னதான ஒரு வெள்ளைப் பொட்டுடன் ஒரு சீக்கோவும், கொழுத்துப் போன அழுக்கு மண்ணிறத்தில் ஒரு வயதான சீக்கோவும் இருந்தன. வயதான சீக்கோ ஆணோ, பெண்ணோ என்றெல்லாம் ஞாபகம் இல்லை. அந்த சீக்கோவுடன் எனக்குப் பெரியளவு பரிச்சயம் ஏற்படமுன்னமே அது செத்தும்போனது. மற்ற சீக்கோ நல்ல வீரன். வைரமுத்துப் பெரியப்பா கொண்டுவந்து தந்த சீக்கோ அது என்று அப்பா சொல்லுவார். நல்ல இளைஞன். தெருவில் மற்ற சீக்கோக்களை உறுமி அடக்கும் ரவுடி சீக்கோ அது. அதுக்கு ‘பிரவுணி' என்றும் ‘ராஜா' என்றும் பெயர்கள் வழங்கியதாக ஞாபகம். ஒரு நாள் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ அக்கா அரிசியைக் கடித்துவிட்டது. ஏலவே யாரும் நொண்டி நடந்தால் பிடிக்காது இந்த சீக்கோவுக்கு. அக்கா அரிசி பாவம். ‘அக்கா அரிசி, அக்கா அரிசி' என்று பிச்சை புகுந்து வாழ்கிற அவருக்கு கால் புண்ணுக்கு மருந்துபோடவோ காலுக்கு செருப்பு போடவோ வழியில்லை. நொண்டி நடந்தவரை சீக்கோ பதம்பார்த்துவிட்டான்.

அக்கா அரிசியை சின்னத்துரை கடைக்குப் பக்கத்தில் இருந்த நேர்சக்காவிடம் கூட்டிச் சென்று மருந்துச் செலவை அப்பா ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இரண்டொருவரை பதம் பார்க்க சீக்கோ முயன்று கடைசியில் அக்கா அரிசியைப் பதம் பார்த்த காரணத்தால் சீக்கோவைக் கட்டிப்போடுவது என்று முடிவாயிற்று. அன்றிலிருந்து சீக்கோ கட்டிப்போட்டப்பட்டான்.

ஒரு நாள் மதியவேளை சீக்கோ அலறிக்கொண்டிருந்தான். அவனது கழுத்துப்பட்டியில் இருந்த ஒரு கம்பி கழுத்துக்குள் போய்விட அதிலிருந்து மீளும் முயற்சியில் சீக்கோவின் கழுத்தில் பெரிய காயம். இரத்தம் கொட்டியது. அப்பா ஒருவாறு அவிழ்த்து விட்டதும் ஓரிடமும் போகாமல் ஓடோடி வந்து வீட்டு வாசலில் படுத்து உருண்டு புரண்டு அழுதான் பிரவுணி (எ) ராஜா (எ) மண்ணிற சீக்கோ. (பிற்காலத்தில் அல்சர் கான்சராக்கிய வைரமுத்துப் பெரியப்பாவும் வயிற்றுவலியால் அப்படித் துடித்ததாக ஞாபகம்). எனக்கு வயிற்றுக்குள் ஏதோ செய்தது. கழுத்தில் ஏதோ ஒரு அவஸ்தை தோன்றியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சீக்கோ பழையமாதிரி உற்சாகமாக இல்லை. காயம் மாறிய பின்னரும் அவனது பழைய உற்சாகத்தைக் காணவில்லை. கொஞ்ச நாளில் சீக்கோ இறந்துபோனான். எங்கள் வீட்டு வளவின் தென்கிழக்கு மூலையில் ஒரு தென்னமர அடியில் சின்னக் கிட்டிணி தோண்டிய கிடங்கில் சீக்கோவைப் புதைத்தார்கள்.

அவனுக்குப் பிறகு வீட்டில் நிரந்தரமாய் ஒரு சீக்கோ வந்தது எனக்கு பத்து வயதிருக்கும்போது. பக்கத்தில் இருந்த ‘அண்ணன்'மார் விட்டுப்போன பெண் சீக்கோ ஒன்றின் பிள்ளைகளில் நான் தெரிந்தெடுத்த சீக்கோ அவன். ‘மயாவி', ‘மாயவி' என்றெல்லாம் வாசித்து கடைசியில் 'மாயாவி' என்று மனதில் பதிந்த முகமூடி வீரர் மாயாவியின் சீக்கோவின் பெயரான ‘டெவில்' என்று பெயர் வைத்து அவனை வளர்த்தேன். கமலாம்மா அடிக்கடி சொல்லுவார்கள், 'எறும்பு போட்ட பால் குடிச்சா நல்ல வீரமா வளரும்' என்று. அம்மாக்குத் தெரியாமல் கறந்த பசும்பாலில கொஞ்சமாக கமலாம்மா அல்லது ஆசையம்மாவிடம் வாங்கி, எறும்பு பிடித்துப் போட்டு டெவிலை வளர்த்தேன். அவனும் என்னோடேயே வளர்ந்தான்.

பக்கத்தில் ‘அண்ணண்மார்' இருந்ததால் யாழ்ப்பாணத்தில் பிரச்சினை வரும்போதெல்லாம் அப்பா பிறந்த வீட்டில் போய் நிற்போம். அப்படி நாங்கள் போகிற நாட்களில் டெவிலை ஏனோ மறந்துபோய்விட்டேன். டெவிலுக்கும் குண்டுச்சத்தமும், புக்காரா, சுப்ப சொனிக் சத்தமும் அடிவயிற்றைக் கலக்கும் என்று புத்திக்கு உறைக்கவில்லை. பிரச்சினை கொஞ்சம் ஓய்ந்து வீட்டுக்குப் போனால் டெவிலைக் காணவில்லை. அவன் பக்கத்துவீட்டு அன்ரி வீட்டில் நிரந்தரமாகிவிட்டான். எறும்புப் பாலை மறந்து மிஞ்சிய சோறைச் சாப்பிடப் பழகிவிட்டான். அவர்கள் வீட்டுக்கு நான் போனால் ஓடிவந்து வாலை ஆட்டினாலும் எங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பார்த்தால் வரவே மாட்டேன் என்றுவிட்டான். மற்ற சீக்கோக்களிடம் கடிபட்டு ரத்தம் ஒழுக வந்தவனை ‘வீட்ட வாடா. உனக்கு எறும்புப் பால் தந்து வீரமாக்கிறன்' என்று சொல்லியும் வரமாட்டேன் என்றுவிட்டான். காலம் போகப்போக என்னைக் கண்டாலும் குரைக்கவும் பழகிக்கொண்டான். நானும் சீக்கோக்களை வெறுக்கப் பழகிக்கொண்டேன். தெருச் சீக்கோக்கள் கடித்துச் செத்த டெவிலின் மரணம் சின்னச் சலனத்தோடு என்னைக் கடந்துபோயிற்று.

No comments: