Wednesday 10 June 2009

அப்போ நான் நல்ல பிள்ளை.


2004 இல் முதல் தரம் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, இலங்கை பூரா ஒரு சுற்றுலா போவது என்று முடிவெடுத்தோம். அப்போதான் கருணா விவகாரம் வெடித்திருந்தது. அதனால் மட்டக்களப்பு தவிர எங்கு வேண்டுமானாலும் போங்கள் என்றார் அப்பா. நான், மஜிந்தன், நித்து, கபிலன், அரவிந்தன், சிவரூபன், சிறிகாந்தன், 'ப்ளம்ஸ்' மயூரன், 'மக்கி' அரவிந்த், கஜன், வாகீசன், கமலகோபன் ஆகிய 12 பேரோடு ஒரு ட்ரைவர் மற்றும் சிங்களம் பேசும் ஒரு அண்ணா (தமிழர்தான்) புறப்பட்டோம். புறப்பாட்டுக்கு முன் 'மக்கி' அரவிந்தின் அப்பா, மக்கி எனப்படும் மகேந்திரன் மாஸ்டர் ஒரு பிரச்சினை கிளப்பி, அதை பொய்யெல்லாம் சொல்லி சமாளித்துவிட்டு அந்தச் சுற்றுலா கிளம்ப போதும் போதும் என்றாகிவிட்டது. அந்த இன்பச்சுற்றுலா பற்றி, நடந்த சுவையான ஊடல்கள், கூடல்கள் பற்றியெல்லாம் என் பின்னைய பதிவுகளில் என்னிடமுள்ள படங்களோடு தருகிறேன். ஆனால் இந்தப் பதிவு, அந்தச் சுற்றுலாவின் இறுதிப் புள்ளியான சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றியது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் புறப்பட்ட சுற்றுலா, திருகோணமலை, கண்டி, நுவர-எலிய, கதிர்காமம் எல்லாம் போய், கடைசியாகக் கொழும்பு வந்து, அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்புவது என்பதாக ஏற்பாடு. ஏற்பாட்டின் படி கொழும்பு வந்தோம். வந்ததுதான் தாமதம், படம் பார்க்கப் போக வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் பொடியன்கள். எங்களோடு மற்ற இடமெல்லாம் வந்த ட்ரைவர் போய், வண்டி ஓனரான பிரபா அண்ணாவும் சேர்ந்துவிட்டதால் குஷி வேறு. சரி படம் பார்க்கப் போகலாம் என்று எல்லோரும் வானில் ஏறினார்கள். தியேட்டர் போகிற வழியில்தான் சொன்னார்கள் தாங்கள் பார்க்கப் போவது ‘ஒரு மாதிரியான' படம் என்று. அப்ப நான் ரொம்ப நல்லவன். என்னோடு என் மச்சான் நியாயத்தடி ப்ளம்ஸ் மயூரன் வேறு சேர்ந்து கொண்டான். நண்பர்களோடு ஒரு ஒப்பந்தம் போட்டோம். அவர்கள் படம் பார்த்துவிட்டு வருவதென்றும் நாங்கள் எங்கள் உறவினர் வீடொன்றுக்குச் செல்வதாயும், படம் முடிந்து வந்ததும் செல்லில் எங்களைக் கூப்பிடுமாறும் ஒப்பந்தம். (கொழும்பில் நாங்கள் தங்கிய வீட்டுச்சாவி மயூரனிடம்தான் இருந்தது). ஒப்பந்தப்படி எங்களை பம்பலப்பிட்டியவில் இறக்கிவிட்டு அவர்கள் பலான படம் பார்க்க கொழும்பு கோட்டே நோக்கிப் பயணமானார்கள்.

நானும் மயூரனும் என்னுடைய இன்னொரு மச்சானான செந்தூரன் வீட்டுக்குச் சென்றோம். செந்தூரனை செந்தண்ணா என்று அழைப்பது வழக்கம். நாங்கள் போன போது செந்தண்ணா வீட்டில் இருக்கவில்லை. ராதா அக்காவும் (செந்தண்ணாவின் மனைவி) அவர்களின் இரு அழகான குழந்தைகளும், ராதாக்காவின் தம்பி பிரகலாதனும் இருந்தார்கள். மூத்தவன் விதுரபிமன் ஒரு மோட்டார் பைக் சாவியைத் தொலைத்துவிட்டு தந்தைக்குப் பயந்து தேடிக்கொண்டிருந்தான். இளையவன் பரீட்சித் ஒரு பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மயூரனாவது ஓரிரண்டு தரம் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கிறான். எனக்கு அதுதான் முதல் தடவை. இருந்தும் ஒன்றரை வயதான் அந்தப் பாலன் தான் சாப்பிட்ட பிஸ்கட்டை எனது கையில் தந்தான். அப்போ குழந்தைகளின் எச்சில் சாப்பாட்டிலிருக்கும் சுவையை அறியும் பக்குவம் எனக்கிருக்கவில்லை. அந்த இரண்டு சின்னஞ் சிறுசுகளின் சிரிப்பில் மகிழ்ந்திருந்தோம். அப்போ என்று பார்த்து படம் பார்க்கப் போனவர்கள் செல்லில் அழைத்தார்கள். 'என்னடா மச்சான், போய் ஒரு மணித்தியாலம் ஆகேல்லை, அதுக்குள்ளயா' என்றோம். 'படம் சரியில்லையாமடா' என்று பதில் வந்தது. பரீட்சித்தையும், விதுவையும் விட்டு விட்டு இவங்களுக்கு சாவி கொடுப்பதற்காக பஸ் பிடித்து ஓடினோம் நானும் மயூரனும். (பரீட்சித்தை முதலும் கடைசியுமாக அன்றுதான் பார்த்தேன். இரண்டு மாதத்தின் பின் ஒரு சிறு வீட்டு விபத்தில் மூன்றடி உயர தண்ணீர்ப் பீர்ப்பாயில் தலைகுப்புற விழுந்து மூச்சுத்திணறிக்கருகியது அந்தப் பிஞ்சு. அவன் போய் 45 நாளில் செந்தண்ணாவுக்கு எமனாக ஒரு ரயில் வந்து, அந்த அழகான அன்றில் கூடு கலைந்தபோது அழுத ஒவ்வொரு கண்ணும், உண்மையாய் அழுதது)

நானும் மயூரனும் சாவியையும் கொண்டு நாங்கள் தங்கிய வீட்டை அடைந்த போது வாசலில், எங்கள் தவிர்ந்த 10 பேர், பிரபா அண்ணா ஆகியோரோடு புதிதாக ஒரு உருவம் நின்றது. அது, ஜெயன். ஜெயனைப் பற்றி வேறு பதிவுகளில் எழுதுகிறேன். அன்றைக்கு ஜெயனுக்கு நாள் சரியில்லை. ஒருவருக்கும் தெரியாமல் பலான படம் பார்த்துவிட்டு, சீன் ஒன்றும் சரியில்லை என்ற கடுப்பில் வெளியே வந்த ஜெயனை வரவேற்றது உள்ளே போவதற்காகக் காத்து நின்ற இந்த வானரக்கூட்டம். தான் பெற்ற துன்பம் எல்லாரும் பெற வேண்டும் என்று கீழ்த்தரமாக நினைக்காமல், படம் சரியில்லை என்று இவர்களைத் திருப்பிக் கூட்டிவந்திருக்கிறான் ஜெயன் (இதுதான் படம் பார்க்காம திரும்பினதுக்கு அவர்கள் சொன்ன காரணம்).இருந்தும் பல ‘கனவுகளோடு' படம் பார்க்கப் போன நம்ம பசங்க பாவம் தானே. எப்பிடியாவது படம் பார்த்தே ஆகவேண்டும் என்று சொல்லி, பிரபா அண்ணாவிடம் ஒரு சி.டி பிளேயர் ஒழுங்கு செய்தார்கள். ஒசாக்கி என்ற அந்த ஜப்பானியத் தயாரிப்பின் சிறப்பு என்ன தெரியுமா. தூர்தர்ஷனின் தென்மண்டல ஒளிபரப்பை பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நீலப் படத்தை உங்கள் வீட்டில் போட்டால், பக்கத்துவீட்டுக்காரரின் குடும்பம் அன்றோடு உடையும். ஏனெனில் அந்த தூர்தர்ஷன் Frequency ல் இந்த நீலப்படம் தெளிவாகத்தெரியும், ஒரு குறிப்பிட்ட Radius க்குள். அப்போ யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் கிடைத்த சானல் தூர்தர்சன், மலிவான் சி.டி.பிளேயர் ஒசாக்கி. ஒசாக்கியின் வண்டவாளம் தெரியாமல் நீலப்படம் பார்த்துப் பிடிபட்ட ‘அப்பாவிகள்' ஏராளம். கொழும்பில் தூர்தர்ஷன் தெரியாது. ஆகவே துணிந்து ஒசாக்கியை பிரபாவிடம் வாங்கி வந்தார்கள்.

இப்போ பார்ப்பதற்கு படம் வேண்டுமே. அங்கே Majestic City (M.C) என்றொரு Mall இருக்கிறது. அங்கே போய் பட சி.டி இரண்டு வாங்குவது என்று முடிவாயிற்று. அங்கே போயும் சும்மா இருந்தாங்களா பாவிகள், Crash என்றொரு விவகாரமான படத்தைத் தான் எடுத்தார்கள். எனக்கு ‘சீ' என்று போய்விட்டது. அந்த கடை காஷியர் பெண் கூட எங்களைப் பார்த்து வித்தியாசமாக சிரித்தாள். (அவள் சிங்களத்தி என்று நாங்கள் தமிழில் பேசினோம். அவள் ஒரு தமிழ் பெண் என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பின் கொழும்பில் நான் வசித்த போது தெரிந்து கொண்டேன்) இவர்கள் படத்தைப் போட்டவுடன் நான் அங்கே ஒரு தெருவோரக் கடையில் வாங்கிய ஆனந்த விகடன், குமுதம் இரண்டையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் போய் விட்டேன் (நான் தான் நல்ல பிள்ளையாச்சே). வெளியே படம் பார்த்த வானரங்கள் சும்மா இருந்தாத்தானே.... படத்தை விட மோசமாக வினோத ஒலிகளை எழுப்பினார்கள். (அதற்கெல்லாம் Cheer Leader அரவிந்தன். அரவிந்தன் பற்றி ஐம்பது பதிவு எழுதலாம், அவ்வளவு Interesting Character). அந்தச் சத்தங்களைக் கேட்டபடி உறங்கிப் போனேன். காலையில் அரவிந்தன் கதை சொன்னான். செக்ஸில் போரடித்த கணவன் மனைவி, கார் விபத்துக்கள் செக்ஸ் ஈடுப்பாட்டைத் தூண்டுவது பற்றிய கதையாம். கார் அடிபட்டுக்கிடக்க, அவ்விடத்திலேயே செக்ஸ் வைத்துக் கொள்வார்களாம் இந்தத் தம்பதி. (என்னா கதை) அதை எங்கள் வானரங்கள் வாய் பிளந்து ரசிக்க, அவர்களின் வாய்ப்பிளவையும், வேறு பல அங்கங்களையும் குறிவைத்து வீடியோ வேறு எடுத்திருந்தான் அரவிந்தன். இதுக்குள் மஜிந்தன் ‘அது XXX Movie இல்லடா XX Movie' என்றான். 'XXXக்கும் XXக்கும் என்ன வித்தியாசம்' என்றேன். 'XXXஇல் ‘அந்த' உறுப்புக்களை எல்லாம் Zoom பண்ணிக் காட்டுவாங்க. இதில அப்படி காட்டமாட்டாங்க' இது வாகீசன் சொன்ன விளக்கம். என்னவோ பண்ணுங்கடா என்றுவிட்டு மறுபடியும் ஊர் சுற்றப் புறப்பட்டோம், மறுபடியும் உற்சாகமாய்.

இதை ஏன் இப்ப சொல்லணும்னு கேட்கறீங்களா? David Cronenberg இயக்கத்தில், James Spader, Holly Hunter, Elias Koteas, Deborah Kara Unger, Rosanna Arquette ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க J.G. Ballard மற்றும் David Cronenberg எழுத்தாக்கத்தில் உருவாகி 1996 ல் வெளிவந்த அந்த Crash என்ற கனேடியத் திரைப்படத்தின் DVD ஒரு கல்லூரி Friend இடம் வாங்கி இரண்டு வாரத்துக்கு முன் பார்த்தேன். இந்தப் படம் கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றது.

Adult Video News Awards

 • Won: Best Alternative Adult Film

Cannes Film Festival
 • Won: Jury Special Prize for Director David Cronenberg
 • Nominated: Golden Palm Award for Director David Cronenberg

Genie Award
 • Won: Best Achievement in Cinematography- Peter Suschitzky
 • Won: Best Achievement in Direction, Best Adopted Screenplay- David Cronenberg
 • Won: Best Achievement in Editing- Ronald Sanders
 • Won: Best Achievement in Sound Editing- Tom Bjlic, David Evans, Wayne Griffin, John Laing, Andy Malcom, Dale Sheldrake, John Douglas Smith.
 • Won: Golden Reel Award- David Cronenberg, Robert Lantos, Jeremy Thomas
 • Nominated: Best Motion Picture- David Cronenberg
 • Nominated: Best Overall Sound- Tony Van den Akker, David Lee, Dino Pigat, Lou Solakofski, Orest Sushko, Christian. T. Cooke.
Motion Picture Sound Editors
 • Nominated: Golden Reel Award- Best Sound Editiong Foreign Feature films.
இந்த விருதுகளைப்பெற்ற காரணத்தால் அதை ஒரு 'உலகப்படம்' என்றோ ‘All Time Classic' என்றோ சொல்ல மாட்டேன். விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்ததைப் போலக் கிடைத்த விருதுகளாய்க்கூட இருக்கலாம். நான் சொல்ல வந்தது, எங்கள் சமூகத்துக்கும் மேலைத்தேயச் சமூகத்துக்கும் இடையிலிருக்கும் ரசனை வித்தியாசத்தையும், மூன்று வருடங்கள் 5 மாதங்கள் 10 நாட்களில் எனது தனிப்பட்ட ரசனையில் ஏற்பட்ட இமாலய மாற்றத்தையும் பற்றியே. விருதுகள் பற்றிக்குறிப்பிட்டது நான் வெறும் நீலப் படத்தைப் பார்த்து அனற்றவில்லை என்பதைக் காட்டவே. முடிவாக ஒரு விஷயம் 'கனடா வரமுன்னம் நான் ரொம்ப நல்ல பிள்ளைங்கோ...' (என்னங்க அப்படிப் பாக்கிறீங்க? நிசம்மா நான் நல்ல பிள்ளைங்கோ)

படம் பாக்கணுமா? DVD Rip Links இதோ: Link-1 Link-2
No comments: