Wednesday 24 June 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 21-27, 2009

அரசியல்
ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா அருமையான சித்தாந்தம் ஒன்றை உதிர்த்திருக்கிறார். 'தமிழ் மக்களுக்கென்று தனியான அரசியல் தீர்வு ஒன்று தேவையில்லை. சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அவர்களுக்கும் வழங்கினால் போதுமானது. தமிழரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, பொருளாதார வளம், இயல்பு வாழ்க்கை போன்றவற்றை மறுபடியும் கொண்டுவந்தால் பிரச்சினை தீர்ந்து விடும்' என்பதே சரத் ஃபொன்சேகா கூறிய கருத்து. நான் இலங்கைப்பிரச்சினை பற்றிக் கண்டு கேட்டு படித்துப் பெற்ற சொற்ப அறிவுப்படி அரசியல் ரீதியாகப் போராடிய தந்தை செல்வா முதலான அரசியல்வாதிகள் தொடங்கி, ஆயுதம் தாங்கிப் போராடிய பிரபாகரன் வரை எல்லோருமே பன்னெடுங்காலமாக இதைத்தான் சொல்லி வந்தார்கள். இப்போதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இதைத்தான் சொல்லி வருகிறார்கள். கடைசியாக ஒரு சிங்கள அதிகாரிக்காவது இது தோன்றியிருக்கிறது. ஆனால் அதற்காக விலைமதிப்பற்ற பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டு விட்டன.

இதுவும் சரத் பற்றிய ஒரு செய்தி. ஆனால் இது ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு' என்றமாதிரியான ஒரு ஜோக். செய்தியாளர் சந்திப்பொன்றில் மே 19 வெள்ளைமுள்ளிவாய்க்காலில் காயப்பட்ட புலிகள் யாரையும் தாங்கள் கைது செய்யவோ, சுட்டுக்கொல்லவோ இல்லையாம். அவர்களைப் புலிகளே சுட்டுக் கொண்டு விட்டார்களாம். இப்படி கொஞ்சம் கூட ‘லாஜிக்'கே இல்லாமல் அவர் சொன்ன அந்த ஜோக்கை நேற்று கனேடிய தொலைக்காட்சி (Tamil One) தனது செய்தியறிக்கையில் சொன்னபோது நிஜமாகவே சிரித்து விட்டேன்.

உலகவங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்குக் கடனுதவி செய்யத் தீர்மானித்திருக்கின்றன. உலகவங்கி 24 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்கனவே ஒதுக்கிய 60 மில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக ஒதுக்கியுள்ளது. இதில் 12 மில்லியன் டாலர்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சுகாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதே சுகாதார மேம்பாட்டுக் காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அபிவிருத்திக்கான குழு 7 மில்லியன் டாலர்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. ஒதுக்கப்பட்ட காரணங்களுக்காகவே இந்த நிதி பயன்பட்டால் அதைப் போல சந்தோஷம் ஏதுமில்லை.
வணங்காமண் கப்பல் பற்றிய சிறப்புக் கவனயீர்ப்புத் தீர்மானத்தைப் பற்றி தமிழ்நாடு சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்தச் சிறப்புக் கவனயீர்ப்புத்தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதால் கோபமுற்றே தாம் வெளியேறுவதாய் பா.ம. க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டார். 844 டன் உணவுப் பொருட்களுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து புறப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கை அரசு ஏற்க மறுத்ததும், கப்பல் சென்னைக் கடல் எல்லையில் சிலகாலம் தரித்து நின்றதும், கப்பல் காப்டன் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதும் (இன்னுமா அந்தாளை நம்புறாங்க?) அனைவரும் அறிந்ததே. இப்போது சென்னைக் கடல்பரப்பிலிருந்தும் கப்பல் விரட்டப்பட்டு சர்வதேசக் கடல் பரப்பில் தரித்து நிற்கிறது.

பொருளாதாரம்
கனடாவின் பங்குச்சந்தையில் சமீப காலமாக வளர்ச்சிப்போக்கு காணப்படுகிறது. அதிலும் கனடாவின் Addax Petroleum சீனாவின் Sinopec Groupக்கு 8.27 மில்லியன் கனேடிய டாலர்களுக்கு விலைபோயிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கைக் கீற்றைத் தோற்றுவித்திருக்கிறது. உலோகங்களின் விலை உயர்ந்திருப்பதும், நிதிநிறுவனங்களின் பங்குகள் பெறுமதி கூடியிருப்பதும் பொருளாதார ரீதியில் சந்தோஷமான செய்திகள். அதே வேளை அமெரிக்க வீடு விற்பனைத் துறை இன்னமும் மந்தமாகவே இருக்கிறது. புதிய வீடுகளின் விற்பனை வீதம் எதிர்பாராத வகையில் மேலும் 0.6 சதவீதம் வீழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை Organization for Economic Co-operation and Developement என்ற அமைப்பு 60 வருடங்களில் மிக மோசமான இந்தப் பொருளாதார நெருக்கடிக்காலம் கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறது. இருப்பினும் உலக நாடுகள் இதிலிருந்து எவ்வளவு வேகமாக மீண்டு வரும் எனபது, அரசாங்கங்கள் வங்கிகள் சம்பந்தமான குழப்பநிலைகளை எவ்வளவு விரைவில் தீர்த்து வைக்கப்போகின்றன என்பதிலேயே தங்கியுள்ளதாகவும் மேற்படி அமைப்பு கூறியிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகப் போலி முத்திரை தாங்கிய, சீனாவில் தயாரான ஸ்பார்க் பிளக்குகள் 2 லட்சம் சென்னைத் துறைமுகத்தில் பிடிபட்டன. இருசக்கர வாகன உதிரிப்பாகமான இது போல பல பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து, இந்தியா போன்றா வேறு நாடுகளில் விற்று வருகிறார்கள். சீனா இப்படிப்பட்ட தகிடுதத்தங்கள் செய்து மிக வேகமாக ஒரு பொருளாதார அரக்கனாக உருப்பெற்று வருகிறது. குறைந்த செலவில் உற்பத்தி செய்து தருகிறோம் என்று அடிமாட்டு விலையில் வேலை செய்யும் தொழிலாளர்களை உள்ளடக்கிய Sweat Shops என்று மேலைத்தேயத்தவர்கள் அழைக்கும் உற்பத்தி ஸ்தலங்கள் சீனாவில் அதிகம். ஒருமுறை Nike கூட இப்படி ஒரு ஸ்தலத்தை சீனாவில் பயன்படுத்தியதற்காக பிரச்சனைகளில் மாட்டியது. இருந்தும் சீனாவை நாடும் நாடுகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குழந்தைத் தொழிலாளர்களும் சீனாவில் அதிகம் என்று என்னோடு படித்த நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விளையாட்டு


Fifa Confederations Cup அரையிறுதிக்கான அணிகள் தெரிவுசெய்யப்பட்டு விட்டன. ஸ்பெயின் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அணியுடனும், பிரேசில் தென்னாபிரிக்க அணியுடனும் மோதவிருக்கின்றன. எதிர்பாராத வகையில் 3-0 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்று நடப்பு உலக சாம்பியன் இத்தாலி வெளியேறியது. மொத்த அணியாக அற்புதமாக இணைந்து விளையாடும் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்பது வல்லுனர்களின் கணிப்பு.


விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. நடப்பு சாம்பியன் நடால் கலந்து கொள்ளவில்லை. மரியா ஷரப்போவா இரண்டாவது சுற்றிலேயே காலி. ஃபெடரர் கடந்த வருடம் இழந்த பட்டத்தை இந்த வருடம் பெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

இருபது இருபது உலகக் கோப்பையை அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மாற்றாக பாகிஸ்தான் அணி ஜெயித்திருக்கிறது. ஷாஹிட் அஃப்ரிடி யாருமே எதிர்பார்க்காத முதிர்ந்த ஆட்டத்தை அரையிறுதி ஆட்டத்திலும், இறுதி ஆட்டத்திலும் வெளிக்காட்டி பாகிஸ்தானை ஜெயிக்க வைத்தார். கோப்பையை ஜெயித்த மகிழ்ச்சியோடு இருபது இருபது போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் அணித்தலைவர் யூனுஸ் கான். பயிற்றுவிப்பாளர் இண்டிகாப் அலாம் பெற்ற இரண்டாவது உலகக் கோப்பை இது. 1992 ஒரு நாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் ஜெயித்த போதும் இவர்தான் பயிற்றுவிப்பாளர்.

வருத்தம்
வெள்ளவத்தையில் குடிபோதை காரணமாக நடைபெற்ற கோஷ்டி பூசலில் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். நிரோஜன் மற்றும் சசிதரன் என்ற இரண்டு இளைஞர்கள் இறந்து விட்டார்கள். ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எல்லா சோகத்துக்கும் மேல இப்பிடியும் சோகங்கள்.

5 comments:

Anonymous said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் தீர்வு பற்றிய கருத்து சரியானது.
மற்றது தொலைக்காட்சி Tamil One செய்தி எனக்கு ஜோக் மாதிரி தெரியவில்லை.

கலையரசன் said...

வருத்தமான விஷயம்தான்.. என்ன செய்ய குடிபோதையில் செஞ்சிடோமுன்னு சொல்லுவாய்ங்க..

Unknown said...

என்னா பண்றது கலை.... சாகத்தான் போறம்னு தலைகீழா நின்னா என்ன செய்யமுடியும்... இத்தனைக்கும் 24 வயசு பசங்க... அதவிடுங்க.. இங்கெ கனடால என் சித்தப்பா பையன் ஒருத்தன் இப்பிடி கோஷ்டி சண்டையில் செத்தான்... 15 வயசு

தீப்பெட்டி said...

// 15 வயசு //

15 வயசுல என்ன கோஷ்டி சண்டை.. அட கடவுளே.. எங்கே போகுது தமிழினம்..

Unknown said...

தீப்பெட்டி... உண்மை அதுதான்.. அது பற்றி ஒரு பதிவே போடலாம்.. அதே குடும்பத்தில் பலியாவதற்குத் தயாராக இன்னும் 3 பேர் இருக்கிறார்கள்.. முறையே 18, 14, 11 வயதுகளில்.. 15 வய்துக்காரனோடு இன்னொரு தமிழ்ப் பொடியும் செத்தது... அதுக்கு வயது 17