Tuesday 23 June 2009

புலிக்குட்டியின் குட்டி

எங்களது பாடசாலையில் 90களிலும் 2000ங்களின் சில பகுதிகளிலும் படித்த மாணவர்களுக்கு புலிக்குட்டியின் குட்டியைத் தெரியாமல் இருக்காது. வேதியியல் பயிற்றுவித்த குட்டி அது. அந்தக் குட்டியின் கோபத்துக்கு பள்ளிக்கூடமே நடுங்கும். நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு இவையெல்லாவற்றிலும் குட்டிக்கு நிகர் குட்டியேதான். 'பரவாயில்லை' என்ற சொல்லை குட்டி ‘பரவேல்லை' என்று உச்சரிக்கும். குட்டியின் தகப்பனும் ஒரு வாத்தியார்தான். அவரது உள்ளங்கை கூடக் கறுப்பாய் இருக்கும் என்பதால் அவரைப் புலிக்குட்டி என்று அழைத்ததாக அவரிடம் படித்த எனது அப்பா அடிக்கடி கூறுவார். புலிக்குட்டியின் குட்டியிடம்தான் நாங்கள் பயின்றோம். குட்டியின் மேற்கூறிய குணங்களைவிட குட்டியின் இன்னொருமுகம் மாணவர்மத்தியில் மிகவும் பிரபலம்.

குட்டி தனது சேவைக்காலத்தில் உப-அதிபராகப் பலகாலம் பணியாற்றியவர். குட்டியிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. அவர் 'இயக்கம்' பற்றிப் பேச ஆரம்பித்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார். அப்படிப் பட்ட ஆதரவாளர் அவர். தன் வீர சாகசங்கள் பற்றியெல்லாம் சொல்வார். தன்னை இந்திய ராணுவம் பின்னால் 30 வண்டிகள் முன்னால் 30 வண்டிகள் பாதுகாப்புக்கு வர கைது செய்து அழைத்துச் சென்றதாக ஒரு கதையை அடிக்கடி மாணவர் தலைவர்களுக்கான கூட்டத்தில் சொல்வார். வேதியியல் படிப்பித்ததை விட குட்டி தனது சுய புராணம் பாடியதே அதிகம். அவரது சுயபுராணம் எல்லாம் நம்பும்படி இருக்கும். ஒரு முறை அவரைச் சிங்கள ராணுவம் கைது செய்து மிக மோசமாகத் தாக்கி விசாரித்துக்கூட இருக்கிறது. அதனால் அவர் சொல்லும் சில கதைகள் உண்மையாய் இருக்கலாம் (அவர் பாணியில், இருக்கல்லாம்) என்று கூட நம்பினோம். தலைவரைக்கூட சைக்கிளில் போய் சந்தித்து வரும் அளவிற்கு தனக்கு செல்வாக்கு இருப்பதாகப் புலிக்குட்டி பெற்ற குட்டியின் கதைகள் இருக்கும். இந்நிலையில் தான் புலிக்குட்டி பெற்ற குட்டி தான் ஒரு பூனைக்குட்டி என்ற சுயரூபத்தை எங்களுக்குக் காட்டியது.

2003ன் பிற்பகுதி. மாணவர் அமைப்பின் பாடசாலைச் செயலாளராக நான் பணியாற்றிய காலம். புலிக்குட்டியின் குட்டிதான் எமக்குப் பொறுப்பான ஆசிரியர். தர்சனிடம் செய்தி அனுப்பினார். தமிழ்ச்செல்வன் அண்ணாவைச் சந்திக்க மாணவர் அமைப்புக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போகவிடாமல் தடுக்கும் தர்சன் தான் வராமல் எங்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்துப் போகச்சொன்னான். வதிரியில் சிறப்பு பஸ் எடுத்துப் போக வேண்டும், பாடசாலைச் சீருடையில். இவ்வளவு தான் சொன்னான். தமிழ்ச்செல்வன் அண்ணாவை எங்கே சந்திப்போம் என்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணம் நகரில் என்றுதான் நினைத்துப் புறப்பட்டோம். எங்களோடு குட்டியும் வந்தது. பஸ் வதிரியிலிருந்து நெல்லியடிச் சந்திவந்து யாழ்ப்பாணம் போகும் திசையில் போகாமல் கொடிகாமம் நோக்கித் திரும்பிய போதுதான் உண்மை உறைத்தது. நாங்கள் வன்னிக்குப் போகிறோம் என்று.

வன்னிக்குப் போவது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. ஆனால், பாடசாலைச் சீருடையில் இராணுவக் காவலரண்களை முகமாலையில் கடந்து செல்வதுதான் பிரச்சினை. அதுவும் நாங்கள் 4 பேர் மட்டும்தான் மாணவர்கள். குட்டியிடம் ஆலோசனை கேட்டோம். வழியில் இறக்கிவிடுங்கள் நாங்கள் திரும்பிப் போய் உடை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ்ஸில் வந்து விடுகிறோம் என்றோம். ‘அதெல்லாம் பரவேல்லை. ஒருத்தரும் ஒண்டும் பிடுங்க மாட்டினம்' என்றது குட்டி. குட்டியிருக்கப் பயமேன் என்று சொல்லி பயணம் தொடர்ந்தோம். முகமாலையிலும் சிக்கல் இல்லாமல் எம்மைப் பரிசோதித்து பஸ்ஸில் ஏறச் சொன்னான் ஒரு ராணுவ வீரன். பஸ் புறப்பட்டு நான்கு ஐந்து மீட்டர் உருண்டிருக்காது, ‘அடோ...அடோ' என்று கத்தியபடி துப்பாக்கிகளுடன் மூன்று ராணுவத்தினர் ஓடிவந்து பஸ்ஸை நிறுத்தினார்கள். 'அடோ... நாலு பேரும் இறங்கு' என்றார்கள் எம்மைப்பார்த்து. நாம் போய் விடுதலைப்புலிகளுடன் இணந்து விடுவோம் என்ற சந்தேகம் அவர்களுக்கு. அதுவும் பாடசாலைச் சீருடையில் புலிகள் ஆட்சேர்ப்புச் செய்கிறார்களோ என்ற வலுவான சந்தேகம் அவர்களுக்கு. வயிற்றில் பயப்பந்து உருள குட்டியை நோக்கினேன். குட்டி இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பாவனை செய்தபடி ஜன்னல் வழியே பாவனை செய்தது. கூடவே பயணித்த மற்றவர்கள், ‘இறங்குங்கோ தம்பிமார், கெதியா' என்று அவசரப்படுத்தினார்கள். எங்களை இறக்கி விட்டு போகுமாறு ராணுவமும் சொல்ல, கூடவந்தவர்களும் அதையே சொன்னார்கள். புலிக்குட்டி பெற்ற குட்டி ஒரு வார்த்தை பேசாமல் பதுங்கியது.

எங்களுக்கு உயிர்ப்பயம் பிடித்துக் கொண்டது. எம் இன மக்கள், எமக்குப் படிப்பித்த வாத்தி எல்லோரும் எங்களைக் கைவிட்டுவிட்டனர். 'இறங்குங்கோடா கெதியா' குரல்களில் உஷ்ணம் கூடியது. அப்போதான் அந்த பஸ் ட்ரைவர் இராணுவத்திடம் பேசினார். ‘மாத்தையா (சிங்களத்தில் சகோதரன் என்று நினைக்கிறேன்), மீட்டிங் போறம். இப்ப இவையளிண்ட ஐ. சி. (அடையாள அட்டை) வாங்கிக்கொண்டு விடுங்க. திரும்பி வரேக்க நாலுபேரையும் கூட்டிக் கொண்டு வாரது எண்ட பொறுப்பு' என்று துணிந்து பேசினார். அவர் அடிக்கடி அந்த வழியால் பேரூந்து ஓட்டுபவர் என்பதால் அவரது உத்தரவாதம் செல்லுபடியானது. எங்கள் நால்வரது அடையாள அட்டையுடன் தன்னுடைய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றைப் பிணையாக வைத்து, உயரதிகாரிகளுடன் தனக்குத்தெரிந்த சிங்களத்தில் எங்களுக்காக வக்காலத்து வாங்கி எங்களைப் பளை சென்று சேர்த்தார். ராணுவத்துக்குச் சொன்னது போலவே மீண்டும் யாழ்ப்பாணம் கூட்டியும் வந்தார். எங்கள் அடையாள அட்டைகளையும் மீட்டுத் தந்தார்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவுடனான கூட்டத்தில் புலிக்குட்டி பெற்ற குட்டியின் சுயரூபம் தெரிந்தது. அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. இவரிடம் படித்த சிலபேர் மேலிடத்துக்கு நெருக்கமாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இவருக்கு ஒரு ஆசிரியர் என்ற மரியாதை மட்டுமே கொடுத்தார்கள். இவருக்கு பெரிய தலைகளை நிஜமாயே தெரியாதாம். சும்மா ரீல் ஓட்டியிருக்கிறார் எங்களிடம். இவரது ரீலைக் கேட்டு பலபேர் இயக்கத்தில் சேர, தன்னைத் தானே ஒரு பிரசார்ப் பீரங்கி என நினைத்துக் கொண்டார் இவர். மற்றபடி இவருக்கு எந்த செல்வாக்குமே இருக்கவில்லை. மொத்தத்தில் புலிக்குட்டி பெற்ற குட்டி ஒரு ‘புலித்தோல் போர்த்திய பசு'.

வெறுத்துப் போய் பளையிலிருந்து திரும்பி புறப்பட்ட வதிரிச் சந்தியில் இறங்கும்போது ட்ரைவர் எங்கள் நால்வரையும் கூப்பிட்டு உரக்கச் சொன்னார்.. ‘இனிமே எந்தப் பு....மகனையும் நம்பி இப்பிடி அலைஞ்சீங்கள், பஸ் ஏத்திக் கொல்லுவண்டா உங்களை. நாலு குலக்கொழுந்துகளை ஆமி கண்ணுக்கு முன்னால கூட்டீற்றுப் போக வெளிக்கிட நீங்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்குத் தொல்லை இருக்கக் கூடாது எண்டு நினைச்ச இந்த நாயளை நம்பி இனி ஒரு இடமும் நீங்கள் போகக்கூடாது' என்று ஆவேசமாகத்திட்டி விட்டு எங்களோடு வந்த அனைவரையும் சுட்டெரிப்பது போல் ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை புலிக்குட்டி பெற்ற குட்டியைச் சுட்டிருக்கவேண்டும். ஏற்கனவே கர்ண கடூரமான அந்த முகம் இன்னும் சிறுத்துக் கறுத்திருந்தது.

அதற்குப் பிறகு மாணவர் அமைப்பிலிருந்து நாங்கள் நால்வரும் விலகிக் கொண்டோம். உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் இணைந்த அந்த அமைப்பில் மேற்படி சம்பவத்துக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்க என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை. எங்களைத் தெரியாத பலர் எம்மை அன்று தடைகளாகப் பார்த்தனர், தம் இனத்தைச் சேர்ந்த வாழ்வேண்டிய இளைஞர்கள் என்பதையும் மறந்து. எம்மை ஊக்குவித்து, உணர்வூட்டிய புலிக்குட்டியின் குட்டி கூட எங்களை நிராதரவாய் விட்டது. எங்களை அன்றுதான் முதல் முதலில் பார்த்த ட்ரைவர் சம்யோசிதமாகச் செயற்பட்டு எம்மைக் காப்பாற்றினார். அன்றுதான் தீர்மானித்தேன், மனசு சொல்வதைவிட அறிவு சொல்லும் வழியில் போவது எவ்வளவோ மேல் என்று.

7 comments:

குடுகுடுப்பை said...

வன்னி நினைவுகள் இன்றைய நிலையில் மிகவும் மன வருத்தத்தையே தருகிறது.

Unknown said...

உண்மைதான் குடுகுடுப்பை

டவுட்டுக் கணேஷன் said...

எலே கிருத்தி அந்த புலிக்குட்டியின்ர குட்டியின்ர ‘இரசாயனச் சமனிலையப்’ ப்ற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் தானே. வேணுமெண்ட்றால் அதைப்பற்றி ஒரு பதிவு இடலாம் தானே

Unknown said...

இரசாயனச் சமநிலை பற்றியெல்லாம் புலிக்குட்டியின்ர குட்டி எங்களுக்கு சொல்லித்தந்ததா ஞாபகம் இல்லை கணேஷன்

Anonymous said...

//உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் இணைந்த அந்த அமைப்பில் மேற்படி சம்பவத்துக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்க என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை.//
விளங்கவில்லை. புலிக்குட்டி செய்ததுக்கு அமைப்பில் ஏன் இந்த கடுப்பு.சரி வராது என்ற விளகுவது வேறு. இந்த வசனம் அமைப்பைக்குறை சொல்வது மாதிரியே இருக்கிறது.

Unknown said...

அந்த அமைப்பு எங்கள் பாடசாலையில் புலிக்குட்டியின் பூரண வழிகாட்டலில் இருந்தது. அதனால் விலகினேன். அவ்வளவுதான் அனாமிகா

Anonymous said...

புலிக்குட்டி போலி என்று தெரிந்த பின்னர் அந்த அமைப்பு அவரது "பூரண" வழிகாட்டலில் இயங்கியது என்று எப்படி கூறுகிறீர்கள். தவறு தானே. அந்தாள் போலி என்று தெரிந்திருந்தால் அதை உரியவர்களிடம் சேர்ப்பித்திருக்க வேண்டும். அது பிழைதான் என்று சொல்லி இனி பிரியோசனமில்லை.