Wednesday 2 December 2009

இரண்டு படங்கள்-ஒரு வரலாறு

இந்தப் பதிவு நான் பார்த்த இரண்டு தமிழ்ப் படங்கள் மற்றும் ஒரு ஆவணப் படம் பற்றிய என்னுடைய எண்ணங்கள் என்று சொல்லலாம். இரண்டு படங்களும் ஏற்கனவே வலையுலகில் கிழித்துத் தொங்கப்போடப்பட்ட படங்களே. திரையரங்கில் தமிழ் சினிமாப் படங்கள் பார்ப்பதில் இப்போதெல்லாம் பெரிதாக நாட்டமிருப்பதில்லை என்பதால் நல்ல தரமான DVD Rip வலையில் கிடைக்கும்வரை காத்திருந்து பார்க்கவேண்டியதாயிற்று. படங்கள் ஆதவன் மற்றும் பேராண்மை. ஆவணப்படம் DVD Rip மூலம் கிடைத்தது அல்ல. சொந்தக் காசில் வாங்கிய DVD. யாழ்ப்பாண மத்திய நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான சோமிதரனின் ஆவணப்படம் அது.

ஆதவன்
வலையுலகில் இவ்வளவு விமர்சனங்களைப் படித்த பின்னரும் இந்தப் படத்தைப் பார்த்ததுக்காக எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்கிறேன். படம் பெரிதாகப் பிடிக்கவில்லை. வடிவேலுவுக்காகக் கொஞ்சம் பார்க்கலாம். மற்றபடி ‘அஞ்சனா' பாடலும், 'ஏனோ ஏனோ' பாடலும் பிடித்திருந்ததாலும் படத்தைப் பார்த்து முடித்தேன். படத்தில் நிறைகளை விடக் குறைகளே அதிகம் தென்பட்டது ஆச்சரியமாக இருந்தது. (என்னாச்சு சூர்யா?).

பாரதி நடித்த பின் எப்போது தூள் படத்தில் தொடங்கி முழுமையான வர்த்தகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாரோ அப்போதிருந்தே ஷயாதி ஷிண்டேயைக் கண்டாலே உச்சந்தலை தொடக்கம் உள்ளம் கால்வரை ஏறுகிறது. Gaptain படங்களில் Bakistan தீவிரவாதியாய் வருகிற அந்த ஆள் இன்னும் கடுப்படிக்கிறார். துணைப் பாத்திரங்களில் தொடங்கி வடிவேலு தவிர்ந்த எல்லா முக்கிய பாத்திரங்களுமே படத்தை எவ்வளவு நாறடிக்க முடியுமோ, அவ்வளவு நாறடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லலாம். சூர்யாவின் நடிப்பில் பெரியளவு வித்தியாசம் ஏதுமில்லை. நயன்தாரா வழமைபோல பாடல்களில் ‘ஆடி'விட்டுப் போகிறார். மலையாள முரளி கூட இந்தப் படத்தில் அவரது இயல்பான நடிப்பைத் தொலைத்துவிட்டதுபோல் தோன்றுகிறது. பொருந்தாத பின்னணிக்குரல் காரணமாயிருந்திருக்கலாம்.

இந்தப் படத்தைப் பார்க்க இரண்டு மேலதிக காரணங்கள் இருந்தன. முதல் காரணம், சரோஜாதேவி. நான் சரோஜாதேவி படங்கள் அதிகம் பார்த்ததில்லை. அபிநயசரஸ்வதி என்கிறார்களே, அப்படி நடிப்பாரோ என்று ஆர்வத்தோடு பார்த்தேன். இவர் கொடுக்கிற அபிநயத்துக்காகத்தான் அந்தப் பட்டம் கொடுத்தார்கள் என்றால், அன்றைய இளைஞர்களின் ரசனை.... உவ்வேக். படத்தின் மிகப் பெரும் பலவீனமே இவர்தான். இரண்டாவது காரணம், தமிழில் கதை நாயகனுக்குரிய லட்சணங்கள் தப்பிப் பிறந்ததால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, என் பார்வையில் ‘நடிகர்களுக்கெல்லாம் திலகம்' என்று சொல்லக்கூடிய நாகேஷ் பெற்றெடுத்த வாரிசின் திரையுலக மீள்பிரவேசம். ஆனந்த்பாபுவும் ஏமாற்றிவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் படங்கள் எப்படியாவது போட்ட முதலை எடுத்துத் தருமாம். இதுவும் எடுத்துத் தரும். ஆனால் கே.எஸ்.ஆர் தசாவதாரம் எடுத்த பின் அதே பிரமாண்டத்தை இதிலும் தரமுயன்று கவிழ்ந்திருக்கிறார். Better luck next time.

பேராண்மை
பலரும் கொண்டாடிய இயற்கை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் ‘ஈ' பார்த்த பின் எஸ்.பி.ஜனநாதன் மீது ஒரு மரியாதை இருந்தது. பேராண்மை பார்த்ததுக்கு ஒரே காரணம் அவரது இயக்கத்தில் வரும் படம் என்பதாலேயே.

அப்பட்டமாக அரசியல் பேசத் துணிந்த காரணத்துக்காகவே ஜனாவுக்கு ஒரு Royal Salute. வசனங்களைக் கண்டபடி கத்தரித்து படைப்பின் வீரியத்தை வலுவாகக் குறைத்திருக்கிறது இந்தியத் தணிக்கைக்குழு. ஆனால் 'ஈ' க்குப் பிறகு ஜனாவின் அடுத்த படம் இன்னும் வீரியமாக வரும் என்று பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது. சில வசனங்கள் மற்றும் காட்சிகளில் அமெச்சூர்த்தனம் விஞ்சி நிற்கிறது.

ஜெயம் ரவிக்கு குருவி தலையில் பனங்காய் நிலை. கஷ்டப்பட்டு சுமந்திருக்கிறார். அந்த ஐந்து பெண்கள் ஒன்றும் பேரழகிகள் இல்லை என்றாலும் கொடுத்த பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். படத்தில் இவர்களைப் பார்க்கும்போது எரிச்சல் வருகிறதல்லவா? அதுதான் இயக்குனருக்கும் அந்தப் பெண்களுக்கும் வெற்றி. வடிவேலு வேஸ்ட். பொன்வண்ணன் துணிந்து சாதி வெறியை உமிழ்கிற ஒரு கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். இப்படியான கதாபாத்திரங்களை ஏற்கிற நடிகர்கள் கண்டுகொள்ளப்பட வேண்டும். என்ன, இவரது முக்கால்வாசி வசனங்களை தணிக்கை செய்தபடியால் பாத்திரப்படைப்பின் வீரியம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது.

காட்டில் வெள்ளைக்காரர்களோடு ஜெயம் ரவி+ 5 பெண்கள் மோதும் காட்சிகள் அநியாயத்துக்கு செயற்கைத்தனம். ஒரு forrest guard நவீனரக ஆயுதங்கள், ஒரு rocket launcher எல்லாவற்றையும் பற்றி விரல்நுனியில் அறிந்து வைத்திருப்பது விஜயகாந்த், அர்ஜூன் படங்களை நினைவூட்டுகிறது. ஜனநாதன் பொதுவுடமை, பழங்குடியினர் பிரச்சினை, முதலாளித்துவம், விவசாயம் அது இது என்று ஏகப்பட்ட விஷயங்களை ஒரே படத்தில் சொல்ல முயன்றிருக்கிறார். கொஞ்சம் over dose. இருந்தாலும், ஆதவன் போன்ற மட்டமான முயற்சிகளுக்கு இது எவ்வளவோ மேல்.

எரியும் நினைவுகள்- ஆவணப் படம்
நான் பிறப்பதற்கு முன் நடந்த, நான் செவிவழியாகக் கேள்விப்பட்ட ஒரு அநியாயம் பற்றிய ஆவணப்படம் இது. யாழ்ப்பாண மத்திய நூலகம் மே 31, 1981 ஞாயிற்றுக்கிழமை ஒரு திட்டமிட்ட கலவரத்தின்போது எரிக்கப்பட்டது. 97,000 புத்தகங்கள் தீயூட்டப்பட்டன. மீண்டும் தழைக்க முயன்ற நூலகம் திரும்பவும் 1985ல் மீண்டும் சேதமாக்கப்பட்டது. பின்னர் 1998ல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் புதுப்பிக்கப்பட்டு, 2001ல் திறப்புவிழா செய்ய தடைகள் ஏற்பட்டு திறப்பு விழா இல்லாமல் இப்போது இயங்கிவரும் இந்த நூலகத்தின் கதையை ஆதி முதல் இன்றைய நிலைவரை படமாக்கியிருக்கிறார் சோமிதரன்.

வரலாறுகள் திருத்தி எழுதப்பட்டு பல உண்மைகள் புதைக்கப்படுகிற இந்தக் காலத்தில், யாழ்ப்பாண நூலக எரிப்பு, அதன் புனருத்தாரணம், இவற்றின் பின்னே இருந்த, இருக்கிற அரசியல் இவை பற்றிய செய்திகளும் திரிக்கப்படலாம் அல்லது இல்லாதொழிக்கப்படலாம். வரலாற்றில் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மிலேச்சத்தனமான ஒரு தாக்குதல் பற்றி வருங்காலத்தில் அந்த இனத்தின் சந்ததிகள் அறியாமல்கூடப் போய்விடலாம். காயங்களை மறந்தால்தான் சுபீட்சம் ஏற்படும் என்றால், தலதா மாளிகையின் கண்காட்சி அறையில் இருக்கிற தலதா மாளிகைத் தாக்குதல் சம்பந்தமான படங்களைச் சிங்களவர்கள் அகற்றுவார்களா என்றொரு கேள்வி இருக்கிறதல்லவா? நிச்சயமாக அகற்றமாட்டார்கள். அதே போல் எங்கள் காயம் பற்றிய ஆதாரங்களை எங்கள் மனதிலிருந்து அகற்றத் தம்மாலான முயற்சிகளைச் செய்வார்கள். அப்படியான முயற்சிகளைத் தாண்டி நிலைத்து நிற்கக்கூடிய அழியாத சரித்திரப் பதிவாக சோமியின் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கமுடிகிறது. சோமிக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

7 comments:

கலையரசன் said...

உங்க கருத்தும் என் கருத்தும் ஒத்து போகுது மாப்ளே.... கீத்!!

கரவைக்குரல் said...

யாழ் நூலக வரலாற்றினை அது பட்ட கஷ்டங்களையும் ஆவணப்படம் மூலம் நெடுகாலம் பதிவாக்கி விட்ட சோமிதரனுக்கு என் பணிவான நன்றிகள்,

தகவலுக்கு நன்றி கிருத்திகன்

வடலியூரான் said...

நல்ல அலசல் நண்பா..

Unknown said...

அப்பிடியா மாமோய்.... எந்தக் கருத்தச் சொன்னீக.... எப்பிடி இருக்கீங்க கலை.

Unknown said...

சோமியின் ஆவணப் படம் தமிழ்க் கடைகளில் கிடைக்கலாம். வாங்கிப் பாருங்கள் கரவைக்குரல். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்

Unknown said...

நன்றி வடலியூரான்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பேராண்மை பார்த்தேன். உங்கள் கணிப்புடன் ஒத்துப் போகிறேன்.