Sunday, 6 December 2009

அது அவர் குடும்பம்....

ஒரு சின்னப் பெண்ணுக்கு மனித குலம் எப்படித் தோன்றியது என்று நெடுநாளாகச் சந்தேகம். நிறைய வாசித்துக் குழம்பிப் போன அவள் கடைசியாக தன்னுடைய பெற்றோரிடம் இதைக் கேட்பது என்று முடிவெடுத்தாள். முதலில் அம்மாவிடம் போனாள்.

'அம்மா அம்மா, மனித குலம் உருவான வரலாற்றை எனக்குச் சொல்வாயா?' என்று கேட்டிருக்கிறாள். அம்மாவும், ‘மகளே. அதெல்லாம் கடவுளின் அற்புதம். அவர் அண்டத்தை, கோள்களை, நட்சத்திரங்களை, மலைகளை, கடல்களை, ஆகாயத்தை எல்லாம் படைத்து முடித்தார். இருந்தும் எதையாவது உருவாக்கும் தாகம் அவருக்குக் குறையவேயில்லை. இதற்காகவே நிறைய காலம் முயன்று ஆதாம் என்கிற ஆணையும், ஏவாள் என்கிற பெண்ணையும் படைத்தார். இவர்களைப் படைத்து முடிந்ததும் கடவுளின் கற்பனா சக்தி முடிந்துவிட்டது. இனிமேல் வரும் படைப்புகளை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளையிட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார் கடவுள். ஆதாமும் ஏவாளும் தங்களைப் போலவே மேலும் பல ஆண்களையும் பெண்களையும் படைத்தார்கள். அப்படி உருவானதுதான் மனிதகுலம்' என்றார்.

மகளுக்கு ஒரே சந்தோஷம். அப்பாவிடம் ஓடினாள். ‘அப்பா அப்பா, மனித குலம் எப்படித் தோன்றியது என்று எனக்குத் தெரியுமே!' என்றிருக்கிறாள் சந்தோஷமாக. 'அட, அப்படியா. எங்கே சொல்லு பார்ப்போம்' என்றிருக்கிறார் அப்பா. மகளும் சந்தோஷமாக அம்மா சொன்ன கதையைச் சொல்லியிருக்கிறாள். பொறுமையாகக் கேட்ட அப்பா மகளுக்குச் சொன்னார், ‘மகளே, அம்மாவுக்குப் பிழையாக அவளது குடும்பத்தினர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். மனித குலம் அப்படியெல்லாம் தோன்றவில்லை. ஆதிகாலத்தில் இந்த உலகம் முழுக்க குரங்குகளால் நிரம்பி இருந்தது. காலம் செல்லச் செல்லப் பல்வேறுபட்ட காரணங்களால் அந்தக் குரங்குகள் கூர்ப்படைந்து மனிதனாகின. கூர்ப்பு என்றால் என்ன என்பது பற்றி நீ மேல் வகுப்புகளில் படிப்பாய். இப்போதைக்கு மனித குலம் குரங்குகளில் இருந்து தோன்றியது என்பதை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

சிறுமி இப்போது மிகவும் குழம்பிவிட்டாள். பெற்றோரிடம் கேட்க முன் இருந்ததை விட அவளுக்குக் குழப்பம் அதிகமாகிவிட்டது. மீண்டும் புத்தகங்கள், இணையம் எல்லா இடமும் அலசினாள். குழப்பம் கூடியதே தவிரக் குறையவில்லை. மீண்டும் அம்மாவிடம் போய், 'அம்மா, நீங்கள் கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்து அதன் மூலம் மனித குலத்தைப் படைத்தார் என்று சொல்கிறீர்கள். அப்பா. குரங்கிலிருந்துதான் மனிதகுலம் வந்தது என்று சொல்கிறார். எது உண்மை. குழப்பமாக இருக்கிறது' என்றிருக்கிறாள். அம்மா மெல்லிய சிரிப்போடு சொன்னார், ‘இதில் என்ன குழப்பம் மகளே. அம்மா என்னுடைய குடும்பக் கதையைச் சொன்னேன். அப்பா அவருடைய குடும்பக் கதையைச் சொன்னார் அவ்வளவுதான்'.
*----*----*----* *----*----*----*

எங்கள் சொந்தத்தில் கேசு மாமா என்று ஒருவர் இருக்கிறார். பூபாலசிங்கம் என்ற அவருடைய பெயர் எப்படிக் ‘கேசு மாமா' ஆனது என்று தெரியவில்லை. ஆள் பயங்கர நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவருக்கு அடுப்பில் இருக்கிற சுடு நீரில் தேநீர் போட்டுக் கொடுத்தாலும் குடிப்பார். ஒரு முறை கேசு மாமா நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு வில்லங்கம் பிடித்த நபர் ஒருவர் கேசு மாமாவைப் பார்த்து, ‘இஞ்ச கேசா, நீ விண்ணாணக் கதையெல்லம் கதைக்கிறாய். ஏலுமெண்டால் நான் கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லு பாப்பம்' என்றிருக்கிறார். கேசு மாமா ரியூசன் எல்லாம் நடத்தியவர். சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

அந்த நபர் கேட்ட கேள்வி இதுதான். ‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிற புகையிரதம் இப்ப என்ன செய்துகொண்டிருக்கும்?'. எப்பேர்ப்பட்ட கேள்வி பாருங்கள். சூழ இருந்தவர்கள் எல்லாம் திகைத்தார்கள். கேசர் தடுமாறுமாற்போல் இருந்தது. கேள்விகேட்டவர் முகத்தில் ‘எப்புடீ' என்கிற மாதிரி வெற்றிச் சிரிப்பு. கேசர் செருமிவிட்டுச் சொன்னார், ‘மணிக்கு அறுபது மைல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிற புகையிரதம் இப்ப உங்கினேக்க எங்கையாலும் வடலிக் காணியுக்கை பனம்பழம் சூப்பிக்கொண்டிருக்கும். நீ போய் பாத்திட்டு வா' என்று. கேள்வி கேட்டவர்கூட விழுந்து விழுந்து சிரித்தாராம்.

கேசர் எப்போதும் ஒரு பழைய சைக்கிளிலேயே திரிவார். ரோச் லைட் அடித்துத்தான் இரவில் பிரயாணம். சைக்கிளுக்கு பிரேக் கூட இருக்காது. காலை பின் சில்லின் ரயரில் தேய்த்துத்தான் பிரேக் எல்லாம் பிடிப்பார். அப்படி பிரேக்கும் பிடித்து, ரோச்சும் அடித்து கேசர் கஷ்டப்படுவதைப் பார்த்து அப்பா வற்புறுத்தி ஒரு டைனமோவும், சைக்கிள் ஹெட்-லைற்றும் வாங்கிக் மாட்டிக்கொடுத்தார். கொஞ்ச நாளால் கேசர் சைக்கிளோடு விழுந்துவிட்டார். ஆறடிக்கு மேல் உயரமான, கால் பிரேக் எல்லாம் போடக்கூடிய கேசர் சைக்கிளோடு தடுக்கி விழுந்துவிட்டார் என்பதை நம்பமுடியவில்லை. கொஞ்சக் காலம் கழித்துத்தான் உண்மையைச் சொன்னார்.

சைக்கிள்களை ‘லொக்' பண்ணி வைக்கப் பின் சில்லில் ஒரு பூட்டு இருக்கும். ஒரு சிறிய பாகத்தைத் தள்ளிவிட்டால் சில்லு பூட்டுப்பட்டுவிடும். (மேலே படத்தில் அந்தப் பூட்டி இருக்கிறது. டைனமோவோடு படம் சிக்கவில்லை). அந்தச் சின்னப் பாகத்தைப் போலவே டைனமோவிலும் ஒரு பாகம் இருக்கும். அதை அமுக்கினால் டைனமோ ரயருடன் உராய ஆரம்பிக்க, சிறு வயர்களால் மின்சாரம் கடத்தப்பட்டு சைக்கிள் ஹெட் லைட் எரிய ஆரம்பிக்கும். ஒரு இனிய இரவும் மாலையும் சந்திக்கிற ‘மம்மல்' இருட்டில் கேசர் டைனமோவை ரயரில் முட்ட வைக்கிறேன் என்று சைக்கிளை ஓடிக்கொண்டே பின் சில்லை 'லொக்' செய்திருக்கிறார். அதன் பின் குப்புறடித்து விழாமல் பறக்கவா முடியும்???
*----*----*----* *----*----*----*

10 comments:

thiyaa said...

அழகிய கதை
நல்ல வரிகள்
மிகவும் பிடிச்சிருக்குது.

நையாண்டி நைனா said...

ஹ..ஹ...ஹா..ஹா.... நானும் அந்த மாதிரி பல முறை விழுந்திருக்கிறேன்...

ஆதிரை said...

பதிவுக்குச் சம்பந்தமில்லா ஒரு பின்னூட்டம்:

உங்களுடைய முன்னைய பதிவுகளையும் அதற்குரிய் பின்னூட்டங்களையும் அடைய வழி என்ன...? (நான் கூகிள் ரீடர் வழியாகவே அடைந்தேன்...)

தயவு செய்து முன்னைய பதிவுகளையும் முகப்பில் காட்சிப்படுத்துங்கள்....

Chitra said...

Real life comedy is funnier......Good one!

Unknown said...

நன்றி தியாவின் பேனா

Unknown said...

நைனா.... இதெல்லாம் சொல்லியா தெரியவேணும்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

நன்றி சித்ரா

Unknown said...

ஆதிரை... தனியாக மெயிலுகிறேன்

நிலாமதி said...

முட்ட வைக்கிறேன் பேர்வழி .....லோக் ஆக்கி இருகிறார். விழுந்து விழுந்து சிரித்தேன்.....பறக்கவா முடியும் முகம் குப்புற முத்தமிட் தான்முடியும். நல்லாய் இருக்கு உங்க ஜோக்கு .

sellamma said...

நண்பரே,,
உங்களுக்கு serious ஆகவும் எழுத வருகிறது,,
சிரிப்பாகவும் எழுத வருகிறது,,,
க.க.க. போ,,,,,,,