Friday, 25 December 2009

விடுமுறைக்காலம்- இரட்டை நீதி

நத்தார், புதுவருட விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சொந்தங்களின் வீடுகளில் கொண்டாட்டங்களும் ஆரம்பமாகிவிட்டன. இந்த விடுமுறைக்காலத்தில் எப்படி ‘வெள்ளை'கள் குதூகலமாக இருக்கிறார்களோ, அப்படி நாங்களும் இருக்க வேண்டும் என்கிற எங்களவர்களின் தீராக் காதல் ஆச்சரியமளிக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டினரும் ஒரு ஒன்றுகூடல் வைத்து, ஒன்றாகத் தாகசாந்தி செய்யாவிட்டால் உலகமே கவிழ்ந்துபோய்விடும் என்பதுபோல், இந்த விடுமுறைக்காலம் முழுக்க ஏற்கனவே ஒன்றுகூடல் நாட்களால் நிரம்பிப்போய் இருக்கிறது. இதிலும் சந்தித்த முகங்களை மீண்டும் மீண்டும் சந்தித்து, ஒரே விஷயங்களைத் திரும்பத் திரும்ப உரையாடிக்கொண்டிருப்பதென்பது ஆயாசமானதொன்றாகவே இருக்கிறது.

சொந்தங்கள் அழைக்கிறபோது போகாமல் இருந்துவிடுவதிலும் பயங்கரமான ஆபத்துகள் இருக்கின்றன. இலகுவில் எங்கள் மீதான முத்திரைகள் குத்தப்பட்டுவிடும். 'தாகசாந்தி' செய்தபடி பிரபாகரன் தொடக்கம் வேட்டைக்காரன் வரை யாரையும் காலுக்கு மேல் கால் போட்டபடி விமர்சிக்கும் சிங்கங்கள் மத்தியில் போயிருந்து ஆகக்குறைந்தது ‘ஆமாம் சாமி' போடாவிட்டால் (அதற்கு மேலேயும் போய் இவயளின்ர பழைய ‘வரலாறுகளை' கிளறுவது எனக்கு சுவாரஷ்யமாக இருக்கும் ஒரு விளையாட்டு), உங்களுக்கு ‘ஆட்களுடன் பழகத் தெரியாதவன்', ‘சபை நாகரிகம் தெரியாதவன்' போன்ற முத்திரைகளைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு முகத்தில் குத்திவிடுவார்கள். இத்தனைக்கும் முத்திரை குத்தும் சிங்கங்களில் சிலவற்றுக்கு தன்னுடைய சொந்த விஷயத்துக்காக வங்கிக்குப் போய்வருகிற கெட்டித்தனம்கூட இருப்பதில்லை, குடிகாரர்களுடன் சேர்ந்து கூத்தடிக்காத காரணத்துக்காக எங்களுக்கு ‘ஆட்களுடன் பழகத் தெரியாததுகள்' என்கிற முத்திரையை மட்டும் ஏகபோக உரிமை எடுத்துக்கொண்டு வழங்கிவிடுவார்கள்.

இதில் பெரிய தலையிடி, அரசியல். இலங்கை அரசைத் தோற்கடிக்க பிரபாகரன் எப்படியெல்லாம் சிந்தித்தாரோ, பிரபாகரனை வீழ்த்த அரசுகள் எப்படியெல்லாம் சிந்தித்தனவோ, அதையெல்லாம் விட மேதாவித்தனமாக சிந்தித்துக் கருத்துக்களை உதிர்ப்பார்கள். ‘முக்கால்கள்' செய்யும் அட்டகாசத்தை விமர்சித்து, அமெரிக்கர்களின் பராக்கிரமத்தை சிலாகிப்பார்கள். ஏதாவது நாங்கள் எங்கள் மனதில் படுவதைச் சொல்ல நினைத்து வாயைத் திறந்தால், ‘அது அவர் அப்பிடி யோசிக்கேல்லை. அவை இதால போய் அதால வந்து இங்கை அடிச்சு அங்கை உடச்சு அதைப் பிடிச்சு இதிலை கொடிநடத்தான் நினைச்சவை' என்று மற்றவர்களின் மனமே தாங்கள்தான் என்றமாதிரி அடித்துவிடுவார்கள் பாருங்கள், காதிலிருந்து ரத்தம் ஒழுகும்.

இப்படி ரத்தம் ஒழுகாமலிருக்க ஒரு விளையாட்டும் செய்யலாம். இவர்களின் இளமைக்காலத்தைக் கிளறிவிட்டு நக்கல் அடிக்கலாம். அப்படிச் செய்வதும் வினையாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒருமுறை இப்படிக் கிளறிவிட சம்பாஷணை ‘அந்தக் காலத்தில உன்ர பெரியப்பர், என்ர சின்னமாவை லைன் போட்டவர் தெரியுமே' என்கிற ரீதிக்குப் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் போனால் குடும்பங்கள் குலையக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படும்போது, கதையை வேறுதிசைக்கு மாற்றக்கூடிய கெட்டித்தனம் இருந்தால், இப்படியான சபைகளில் சுவாரஷ்யமாக ஏதாவது கொஞ்சம் தேற்றலாம்.
*----*----*----*

கடந்த சில நாட்களில் மட்டும் இரட்டை நீதி என்பது எப்படியெல்லாம் இன்றைய சூழ்நிலையில் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இரண்டு சின்ன நிகழ்வுகள் அமைந்து மனத்தைக் குடைந்தன. முதலாவது எம் நாடு சம்பந்தப்பட்டது. மீண்டும் நேற்று நடந்த ஒரு ஒன்றுகூடலில் நினைவூட்டினார்கள். மற்றது இந்தியாவில் நடந்த வழக்கு சம்பந்தப்பட்டது.

முதல் சம்பவம், பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் என்று வெளியிடப்பட்ட உடல் சம்பந்தமானது. நேற்றைய ஒன்றுகூடலில் போதையில் ஒருவர் பெருமையாகச் சொன்னார் ‘அந்த முழுப்படத்தைப் பார்க்க சகிக்காது. மக்கள் பொங்கிவிடுவார்கள் என்பதற்காக தமிழ் நெற்றில் தணிக்கை செய்து அந்தப் படத்தை வெளியிட்டார்கள்' என்று. அதாவது துவாரகாவின் நிர்வாணம் மறைக்கப்பட்டது அவருக்குப் பெருமை. எனக்கும் முதன் முதலாக பச்சாதாபம் தேடுவதற்காக எங்கள் குலப் பெண்களின் முழு நிர்வாணமாக்கப்பட்ட உடல்களைக் காட்டாமல் விட்டார்களே என்று சந்தோஷம்தான். ஆனால், இதற்கு முன்னரும் இராணுவம் கொன்ற தமிழச்சிகளின் படங்கள் மட்டுமல்ல, காணொளிகளும் கிடைக்கப்பெற்றபோது, இப்படித் தணிக்கை செய்யப்படவேண்டும் என்று நாம் யாராவது சிந்தித்தோமா. பிரபாகரனின் மகளும் எங்கோ ஒரு மூலையில் அழுதுகொண்டிருக்கும் முகம்தெரியாத விநாயகமூர்த்தியினதும், ராஜேஸ்வாரனதும், சுப்பிரமணியத்தினதும் மகளும் ஒரே நோக்கத்துக்காக, ஒரே மூலத்தால் கொல்லப்பட்டவர்கள். பிரபாகரனின் மகள் என்பதற்காகத் துவாரகாவுக்குக் கொடுக்கப்பட்ட புனிதத்துவம், ஏன் சிந்துஜா, மாலினி, ஜெயந்திக்கும் ஏன் கொடுக்கப்படவில்லை???? இங்கு வெளிப்படுகிறது ஒரு இரட்டை நீதி.

இரண்டாவது இந்திய ஊடகங்களில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ருச்சிகா கிர்கோத்திரா என்கிற பெண்ணின் மீது பாலியல் வன்முறை செய்த ரத்தோர் என்பவருக்கு, 19 வருடங்களின் பின்னர் ஆறுமாத சிறையும், ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, உடனே பெயிலும் கொடுத்த ‘நீதிமான்கள்' பற்றியது. 14 வயதுப் பெண்ணைக் கற்பழித்தவன், 19 வருடம் சுதந்திரமாக உலவியது அபத்தம் என்றால், அதைவிட அபத்தம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்புக்குப் போய் 19 வருடம் எடுத்துக்கொண்டார்கள் என்பது, அந்தக் வன்புணர்வைவிடக் கேவலமான செயல். இங்கும், அதிகாரத்தில் இருந்த வன்புணர்வாளனுக்கு தண்டனை இல்லை. 19 வருடங்கள் நீதியை நம்பியவனுக்கு ஒன்றுமில்லை. இங்கும் பல்லிளிக்கிறது இரட்டை நீதி.

No comments: