Saturday 20 June 2009

அந்த்ராக்ஸ்

செப்டெம்பர் 11, 2001க்குப் பிறகு உலகமெல்லாம் அந்த்ராக்ஸ் பீதி பரவியிருந்த சமயம். தபால்களில் வெள்ளைப் பொடியாக வந்து சேர்கிறது அந்த நுண்ணுயிர் ஆயுதம் என்று உலகமே பீதியில் ஆழ்ந்திருந்த சமயம். இலங்கையின் வடக்கில் பருத்தித்துறையில் இருக்கும் ஒரு பாடசாலையில் நடுவாந்திர வகுப்பு மாணவர்களுக்கு (6ம் வகுப்பு-11ம் வகுப்பு) இரண்டு ஆசிரியர்களுக்கு தபால்மூலம் தமிழ்சினிமா நடிகர்களின் படம் கொண்ட தீபாவளி வாழ்த்துமடல், பத்திரிகைகளில் கத்தரிக்கப்பட்ட கவர்ச்சிப் படங்கள் சகிதம் ஒரு கடித உறை வருகிறது. பிரித்தால் இதுவரை அவர்கள் நுகர்ந்திராத வாசத்துடன் வெள்ளை நிறப் பொடி ஒன்று கொட்டுப்படுகிறது. ஆம், யாழ்ப்பாணத்தின் ஒரு மூலைக்கும் அந்த்ராக்ஸ் வந்தது என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்.

ஒரு ஆசிரியர் வீ. கே. வாத்தி என்று அழைக்கப்பட்ட விஜயகுமார் என்ற விஞ்ஞான ஆசிரியர். ‘சோடியம் குளோரைடின் இரசாயனப் பெயரை எழுதி மகிழ்க?' என்றெல்லாம் காமெடி பண்ணக்கூடியவர். மற்றவர் கனகசபாபதி என்ற தமிழ் மற்றும் சமூகக்கல்வியும் வரலாறும் பாடங்களைக் கற்பிப்பவர். அப்போது 11ம் வகுப்பு ‘டி' பிரிவில் இருந்த எங்களது வகுப்பாசிரியர். 'மெய் எழுத்துக்கள்' என்பதை கரும்பலகையில் ‘மொய் எழுத்துக்கள்' என்று தவறாக ஒரு கணம் எழுதி அழிப்பதற்குள் மாணவர்கள் பார்த்துவிட்டதால் அவரது இயற்பெயரை விட 'மொய்' என்ற பெயரால் புகழ் பெற்றவர். இந்த இருவருக்கும் தபாலில் அந்த்ராக்ஸ் வந்தது.

11ம் வகுப்பில் நாங்கள் O/L Exam எழுதுவதற்கு முன்பான கடைசித்தவணைப் பரீட்சை. மரியதாஸ் தயார் பண்ணிய கணக்குப் பரீட்சை வினாத்தாளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். எங்களது வகுப்பை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார் 'மொய்'. அப்போது எங்கள் பாடசாலை உதவியாளர் (பியோன் என்ற சொல்லை பயன்படுத்த மனம் ஒப்பவில்லை) மொய்யிடம் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மொய் அதை வாங்கி ஆர்வமுடன் பிரித்தார். பிரிக்க ஆரம்பித்ததுமே வெள்ளை நிறமாக, வித்தியாசமான மணத்துடன் 'அந்த்ராக்ஸ்' கொட்டுப்பட்டது. பதறிய மொய் உடனே ஆசிரியர்கள் ஓய்வறைக்கு ஓடி மற்ற ஆசிரியர்களின் ஆலோசனைப்படி அதைத் தூரத் தூக்கி எறிந்தார். அதே சமயம் வீ.கே. வாத்தியாருக்கும் ஒரு உறை. இதே நிலை. வீ.கே தைரியமாக முழுதும் திறந்து ரஜினியும் நக்மாவும் நிற்கும் ஒரு தீபாவளி வாழ்த்து அட்டை மற்றும் மும்தாஜின் கவர்ச்சிப் படங்கள் உட்பட ‘அந்த்ராக்ஸ்' ம் கண்டு மகிழ்ந்தார்.
செய்தி பரவி பாடசாலை பரபரப்பானது. வீ.கே யாரோ மாணவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்றும் சூளுரைத்தார். எங்கள் வகுப்பைச் சேர்ந்த கஜேந்திரன் மீதுதான் அவரது சந்தேகம் இருந்தது. கஜனைப் பல வழிகளில் விசாரித்தார். தபால் உறையில் இருந்த விலாசம் எழுதிய கையெழுத்தையும் மாணவர்களின் கையெழுத்தையும் ஒப்பிட்டும் பார்த்தார். பலன் கிட்டவில்லை. அந்தத் துகளை பரிசோதிக்கும் அளவுக்கு ஆய்வுகூட வசதிகள் கூட இல்லை. கொஞ்ச நாள் பள்ளிக்கூட வாத்தியார்கள் யாவரையும் ஒரு கலக்குக் கலக்கியது அந்த புதுவித மணம் குணம் கொண்ட பொதி.

அந்த வகுப்பில் ஒரு நாலுபேர் மட்டும் மர்மமாகத் திரிந்தார்கள். தபாலுறையை மொய் பிரித்த போது நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் இன்னொருவனைப் பார்த்துச் சிரிக்க, மற்றவன் சிரிக்காதே பொத்து என்று சைகை வேறு காட்டினான். பொடி கிளப்பிய பரபரப்பில் இவர்களை யாருமே பார்க்கவில்லை. இவர்களும் பெரிதாக எதையுமே வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இவர்களின் கையெழுத்துக்கூட தபால் உறையில் இருந்த கையெழுத்தோடு ஒத்துப் போகவில்லை. இப்படி நுண்ணுயிர் ஆயுதங்கள் புழங்கும் அளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டிருந்ததா? கல்வி தந்த ஆசான்களுக்கே இப்படிச் செய்யும் அளவுக்கு அவர்கள் ஏன் கெட்டுப் போனார்கள்? இது பரவினால் அவர்களும்தானே பாதிக்கப்படுவார்கள்? எப்படி இவர்களின் கையெழுத்து தபால் உறையிலிருந்த கையெழுத்தோடு ஒத்துப் போகவில்லை? இப்படியான கேள்விகள் எழுமல்லவா? இதோ பதில்கள்
  • தபால் உறையில் விலாசம் எழுதிய பையன் அந்தப் பாடசாலையில் படிக்கவில்லை (ஹாட்லிக் கல்லூரி). ஸ்ரீகாந்தன் என்ற பெயர் கொண்ட அவன் கற்றது உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்.
  • இந்தச் சதியில் ஹாட்லியில் படித்த 4 கொள்ளையர்கள் மற்றும் ஸ்ரீகாந்தனோடு, கபிலன் என்கின்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவனும் அடக்கம்.
  • அந்தப் பொடி செய்யப்பட்ட மூலப் பொருட்கள் வருமாறு: மலத்தியோன் என்ற துர்நாற்றம் வீசும் கிருமிநாசினி (Pesticide); நல்ல மணம் கமழும் பாண்ட்ஸ் முகப் பவுடர்; கொஞ்சம் கராம்புவாசம் வீசும் ‘கோல்கேட்' பற்பொடி; கொஞ்சமே கொஞ்சம் திவ்ய மணம் கமழும் ‘பழனி' திருநீறு. இதெல்லாம் சேர்ந்து விநோத வாசம் வருமே தவிர விபரீத விளைவுகள் தராது.
  • ஒரு சின்னப்பிரச்சினையில் இந்த இரு ஆசிரியர்கள் மீதும் கடுப்படித்துப்போய் இந்த பாதகம் செய்யத்துணிந்த அந்தக் கொள்ளைக்கூட்டம் இதுதான்: கொள்ளைக்கூட்டத் தலைவன்: தயாநிதி, கொள்ளைக்கூட்ட உபதலைவன் மஜிந்தன். கொள்ளைக்கூட்ட உதவியாளர்கள்...நிருத்தனன், கபிலன், ஸ்ரீகாந்தன்.
பி.கு: இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும் என்று கேட்கிறீர்களா. மேலே உள்ள பெயர்களை எண்ணிப்பாருங்கள். ஒரே பாடசாலையைச் சேர்ந்த 4 பேர் மற்றும் வேறு பாடசாலையைச் சேர்ந்த இருவர் என ஐந்து பேர் இந்தச் சதியில் ஈடுபட்டார்கள். அந்த பெயர்ப்பட்டியலில் ஆறாவது ஆளின் பெயர் விட்டுப் போயிருக்கிறது. அப்புறம் கடைசிவரிகளில் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தின் சாயல் அடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

6 comments:

Subankan said...

ம்... நடக்கட்டும், நடக்கட்டும். நம்ம ஊரு ஆயிட்டீங்க, ஏதோ தோணுறத சொல்லுறேன், இதையெல்லாம் இப்படி பப்ளிக்லயா சொல்லறது? அப்புறம் பெரிய பெரிய போலீசெல்லாம் வந்துடப்போறாங்க. :-)

Unknown said...

சுபாங்கன்.... ரொம்பத் தெரிந்த பெயர் போல் இருக்கிறதே.... இதுக்கெல்லாமா போலீஸ் வருவாங்க

பனையூரான் said...

நினைவுகளை ஞாபகமூட்டியமைக்கு நன்றி

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

நல்ல பதிவு...!
http://vetripages.blogspot.com/2009/06/blog-post_6845.html

எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்க‌ள் பின்னூட்ட‌ம் வ‌ழியாக‌வும்,ஓட்டு போட்டும் ஆத‌ர‌வு த‌ருக‌..!
குறைக‌ள் இருப்பின் பின்னூட்ட‌ம் வாயிலாக‌ச் சுட்டிக்காட்ட‌‌வும்

டவுட்டுக் கணெஷன் said...

பசும்மையான நினைவுகள் ராசா..

ARULNILAVAN said...

கீர்த் வாசித்தேன். ரசித்துச் சிரித்தேன்.
அந்த டெரரிஸ்ட்ஸ் நீங்களாடா?
ம்ம்ம்..... பசுமையான நினைவுகள் அவை