Friday, 16 October 2009

கந்தசாமி-அருண்மொழிவர்மன்-சுஜாதா

கந்தசாமியில் இன்னொரு அபத்தம்
சென்ற ஞாயிற்றுக்கிழமை ‘ஏதிலிகள்' ஏற்பாடு செய்திருந்த 'சுடருள் இருள்' நிகழ்வு-2க்குப் போயிருந்தேன். ஆரம்பத்தில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் எந்த அறையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அருண்மொழிவர்மன் மூலம் டி.சே. தமிழன் என்கிற இளங்கோவின் அலைபேசி இலக்கத்தை எடுத்து அறைக்குள் செல்வதற்கு முன்னரே அன்று போடுவதாகச் சொல்லப்பட்ட The Boy in the Striped Pyjamas என்ற படத்தின் 15 நிமிடம் ஓடியே போய்விட்டது. இருட்டுக்குள் தடவித்தடவி ஒரு நிகழ்ச்சிக்கு (அதுவும் எம்மவர் நிகழ்ச்சிக்கு) பிந்திப் போய் அமர்ந்த அனுபவம் புதுமையாக இருந்தது. வழமையாக ஆகக் குறைந்தது அரை மணித்தியாலம் காக்க வைப்பார்கள்.

நிகழ்வுகள் முடிந்ததும் மேற்படி படத்தைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடைபெற்றது. அந்தப் படத்தில் இருந்த குறியீடுகள், பாதிப்பு அடைந்தவர்களின் பக்கத்தில் இருந்து இல்லாமல் (யூதர்கள்) பாதிப்பைக் கொடுத்தவர்களின் கோணத்தில் இருந்து (ஜேர்மானியர்கள்) பக்கமிருந்து கதை சொன்ன விதம், யூதர்களின் பிரச்சார யுக்தி என்றெல்லாம் நிறையப் பேசிக்கொண்டிருந்தபோது, (அல்லது அவ்வாறான உரையாடல்களை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது) தமிழ்சினிமாப் பக்கம் உரையாடல் திரும்பியது. அப்போது தர்ஷன் கந்தசாமி பற்றி ஒரு விஷயம் சொன்னார். அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா? அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா? அதாவது யூதன் என்றால் கொல்லலாம் என்பது பொதுப்புத்தியில் உறைந்து போய்விட்டது. நாளைக்கே ஈழம் பற்றியும் சர்வசாதாரணமாக இப்படி ஒரு வரி வந்துவிடலாம். சிறுபான்மையினருக்காகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் கேட்காது.

அருண்மொழிவர்மன் மீதான பொறாமை
நிகழ்வு முடிந்ததும் அருண்மொழிவர்மன் தான் புதிதாகக் குடியேறிய மனைக்கு வாருங்கள் சற்றுநேரம் பேசலாம் என்றார். சில பல பெரியவர்களும் சென்றதாலும், அருண்மொழியாரின் சினேகபூர்வமான அழைப்பை உதாசீனம் செய்ய முடியாமலும் அங்கே சென்றேன். அன்றைக்கு ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பும் இருந்தது. எவ்வளவு நேரம் தாழ்த்தி பிறந்த நாளுக்குப் போக முடியுமோ அவ்வளவு நேரம் தாழ்த்த விரும்பிய எனக்கு இது நல்ல வாய்ப்பாகிப் போய்விட்டது. சிலருக்குத் தேநீரும் சிலருக்கு மற்ற நீரும் கொடுத்துவிட்டு, அருண்மொழிவர்மன் சமைக்கலானார். சமைக்கும்போது மனிதருக்கு அருகில் நின்று பேசிப்பேசித் தொல்லை கொடுத்ததால் கடுப்பானாரோ என்னவோ, ஒரு காரியம் செய்தார். அவருடைய புத்தகங்களைப் பார்வையிட அழைத்தார்.

அடப்பாவி... நாங்களெல்லாம் வீடு மாறிப்போகும்போது துணிகளையும், தட்டுமுட்டு சாமான்களையும் கட்டிக்கொண்டு வருவோம். இந்த மனிதர் புத்தகங்களைக் கட்டி எடுத்து வந்திருந்தார். என்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் இவ்வளவு புத்தகங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர் இவர் மட்டுமே. அவரது வாசிப்புத்தான் அவரது எழுத்துக்களை மெருகூட்டி, வாசிப்பவருக்கு நல்ல வாசிப்பனுபவமாகத் தருகிறது. அத்தனை புத்தகங்களை ஒரு சேரப் பார்த்தபோது ஒரு தோழமை கலந்த பொறாமை ஏற்பட்டது. நானெல்லாம் கையில் காசிருந்தால் எப்படிச் செலவாகிறது என்று தெரியாமல் செலவளித்திருப்பேன். இனிமேல் தேடித் தேடிப் புத்தகங்கள் வாங்கப்போகிறேன். இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........

சுஜாதா ஒரு நிர்வாண வியாபாரி
அண்மையில் கானா பிரபாவின் றேடியோஸ்தபதியை மேய்ந்த ஒரு நாளில் அமரர் சுஜாதா ஒலிப்பேட்டி மீள் நினைவில் என்றொரு பதிவு கண்ணில் தட்டுப்பட்டது. சுஜாதா மீதான மரியாதை இன்னொரு படி கூடிப்போய்விட்டது. காரணம் அந்தப் பேட்டியின் இறுதியாக கானா பிரபாவின் கேள்வி ஒன்றுக்கு சுஜாதா சொன்ன பதில். 17.42 நிமிடங்கள் ஓடும் அந்த ஒலிப்பேட்டியில் சுஜாதாவின் இலக்கியம், தொழில் நுட்பம், கவிதை, எழுத்துலகு எல்லாவற்றையும் விட ஒரு விஷயத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்தார். அதுதான் என்னைக் கவர்ந்தது.

கானா பிரபா: நீங்கள் ஈழத்தமிழர்களின் குறைகளையும் அங்கு நடக்கும் போர்ச்சூழலையும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மனிதராக, அதாவது எழுத்தாளர் என்ற பாவனையைக் கடந்து, ஒரு சாதாரண மனிதராக உங்களுடைய பார்வையை, கருத்துக்களைப் பல விடயங்களில் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். இன்று(2002ல்) இந்த ஈழத்தமிழர்களுடைய நிலையைப் பற்றிய உங்கள் பார்வையைச் சொல்லுங்களேன்?

சுஜாதா: ஈழத்தமிழர்களுக்கு நான் சொல்லவேண்டிய மிகமுக்கியமான, மிகமுக்கியமான அறிவுரை என்று சொல்லவேண்டாம், மிக முக்கியமான விருப்பம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், தாய்நாட்டை மறக்காதீர்கள். அந்த விதத்தில் உங்களுடைய திறமையும் உங்களுடைய அந்த நாள் நிச்சயம் வரும் என்றுதான் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்களை நம்பாதீர்கள். எங்களை நம்பினால் நாங்கள் கைவிட்டுவிடுவோம் என்றுதான் தோன்றுகிறது. நாங்கள் நிறையப் பேசுவோம். உங்களுக்கு எங்களுடைய ஆதரவு ஒரு மனோதத்துவ ரீதியில் இருக்குமே ஒழிய செயற்பாட்டில் இருக்காது. அதை நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது உங்களுக்கு சரியாக உதவவில்லை என்று.

சுஜாதாவை நே(வா)சித்தவர்களுக்கு இன்னும் ஒரு காரணம், அவரை இன்னும் அதிகமாக நேசிக்க. தூஷித்தவர்களுக்கும் இன்னுமொரு காரணம், ‘எப்படி ஒரு பார்ப்பான் எங்களை நிர்வாணமாக்கலாம்' என்று திட்ட. அவர் திறமைகளை மட்டுமல்ல, சில துரோகங்களையும் முன்கூட்டியே கண்டுணர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கானா பிரபா அண்ணனுடனான அந்தப் பேட்டியை கீழே முழுமையாக இணைக்கிறேன். அந்தப் பேட்டியில் சுஜாதா சொன்னதைவிட இன்னொரு பாடமும் இருக்கிறது. தரமான ஒரு வானொலிப் பேட்டி எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் பேட்டி.


Sujatha Interview - Kana Praba

17 comments:

M.Thevesh said...

உங்களின் யதார்த்த எழுத்துக்காகத்தவறா
மல் எல்லா ஆக்கங்களையும் வாசிப்
பேன்.இளம் வயது வலைப்பதிவர்களில்
என்னைக்கவந்தவர்களில் நீங்களும் ஒரு
வர்.தொடர்ந்து நல்ல ஆக்கங்கள் தர
என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

யூத வரலாறு பற்றியெல்லாம் அறிவை வளர்த்தவர்கள்

சொற்குற்றம் மன்னிக்கப் படலாம். பொருட்குற்றம் மன்னிக்க படலாகாது என்று தமிழ் மண்ணில் இறைவனையே எதிர்த்த கதையையும் படித்திருப்பார்கள் என்றே நம்பலாம்

கானா பிரபா said...

ரசித்தேன், அருண்மொழிவர்மனுக்குள் இன்னொரு மனிதரா ;)

பேட்டியை மீண்டும் தந்ததற்கு நன்றி, பல ஆண்டுக்கு முன் எடுத்ததால் ஒலித்தெளிவு குறைவாக இருக்கும்.

vasu balaji said...

அருமையான பகிர்வுக்கு நன்றி க்ருத்திகன்

அருண்மொழிவர்மன் said...

//இணையம் செய்த அருஞ்செயல், இவர் போன்ற பல நண்பர்களை எனக்குப் புதிதாகப் பெற்றுத் தந்திருப்பதே. ஈங்கிவனை யான் பெறவே........//

மிக்க நன்றிகள் கீத்.

நீங்கள் சொன்ன இதே வரிகளை நானும் சொல்வேன், எனக்கும் உங்களைப் போன்ற பல நண்பர்களை இணையம்தான் தேடித் தந்து இருக்கின்றது. வாழ்வின் மிக முக்கியமான் ஒரு கட்டத்தில், இப்படியே காணாமல் போய்விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் டிசேயின் நட்பையும் எனக்கு இணையம்தான் உருவாக்கித் தந்தது.


கீழே நீங்கள் சொன்ன அந்தப் பேட்டியையும் நான் பலமுறை நண்பர்களுடன் சிலாகித்துப் பேசி இருக்கின்றேன். சுஜாதாவின் மரணம் என்னைப் பொறுத்தவரை “நான் முதன் முதல் உணர்ந்த சினேகிதன் மரணம். இது பற்றி http://solvathellamunmai.blogspot.com/2008/05/blog-post.html ல் எழுதி இருக்கின்றேன். நேரம் கிடத்தால் வாசித்துப் பாருங்கள்.

Unknown said...

நன்றி தேவேஷ்.. உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற முயல்கிறேன்

Unknown said...

SUREஷ்..
அந்தக் கதை எல்லாம் படித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். அதே கடவுள் வழியில் நெற்றிக்கண்களைத் திறந்து எரித்தாலும் எரிப்பார் பாடலாசிரியர். அதுசரி, இந்தியாவிலும் யூதமக்கள் இருக்கிறார்கள்தானே.. கமலின் சிரிப்புக்குக் கூட அர்த்தம் கண்டுபிடிப்பவர்கள், விவேகாவுக்கும் ஒரு சின்னக் கண்டனம் தெரிவிக்கலாம்தானே. யூதர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை என்று விட்டுவிட்டார்களோ???

Unknown said...

கானா பிரபா அண்ணா...
///ரசித்தேன், அருண்மொழிவர்மனுக்குள் இன்னொரு மனிதரா ;)///
எல்லோருக்கும் பல முகம் இருக்கும், அப்படி அவரின் ஒருமுகம் அது.

அந்தப்பேட்டியின் ஒலித்தெளிவு பற்றி எந்த முறைப்பாடும் இல்லை. கேள்விகளின் ஆழமும் பதில்களின் நேர்மையும் இடையிடையே வரும் சத்தங்களை மறக்கடித்து விடுகிறன.

ஒரு கேள்வி உங்களுக்கு: இப்படியான பேட்டிகள் செய்தும், தமிழைத் தமிழாய்ப் பேசியும் நீங்கள் வானொலி உலகில் இப்போதும் எப்படி நிலைத்திருக்கிறீர்கள்? (சுஜாதா சொன்ன மாதிரி தமிழர்களை அவ்வளவு சுலபமாக எடை போட முடியாது. எல்லா நல்லவற்றையும் அவர்கள் ஒதுக்கிவிடுவதில்லை)

Unknown said...

நன்றி பாலா

Unknown said...

///வாழ்வின் மிக முக்கியமான் ஒரு கட்டத்தில், இப்படியே காணாமல் போய்விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் டிசேயின் நட்பையும் எனக்கு இணையம்தான் உருவாக்கித் தந்தது.///
உண்மைதான் அருண்மொழிவர்மரே. இணையத்தை ஆக்கபூர்வமாகப் பாவித்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பல.. அதில் ஒன்று இப்படியான நட்புகள். என்ன அறிவுஜீவித்தனம் மேலோங்கி மூக்குடைக்கும் அளவுக்கு நாங்கள் போகமாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் மனிதர்களைக் காண்பதற்கே எங்கும் சாதி.

‘நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது' என்று ஆரம்பிக்கும் அந்தப் பதிவைத்தானே சொல்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது வாசிக்கவேண்டுமா?? சில பாடல்களைத் திரும்பத்திரும்பக் கேட்பது போல, சில நண்பர்களை ஓடித் தேடிச் சந்திப்பது போல அந்தப் பதிவை அடிக்கடி வாசித்திருக்கிறேன். இன்னும் இரண்டுமுறை வாசித்தால் மனப்பாடம்கூட ஆகிவிடலாம்

DJ said...

அருணின், புத்தக அலுமாரிக்கு இப்படிப் பலர் கண் வைத்திருக்கின்றோம் போலும் :-)
....
நிகழ்வுக்கு வந்தமைக்கும் இங்கே அதைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி கீத்.

Anonymous said...

//அந்தப் படத்தில் ‘காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே' என்றொரு வரி வருகிறதல்லவா? அது, 'யூதன் என்றால் கொல்லலாம்' என்கிற ஒரு அபத்தமான அர்த்தத்தை ஏற்படுத்தவில்லையா? //

அண்ணாத்த நீங்க குறிப்பிட்ட பாடல் வரிக்கு முன்னால இன்னும் ஒரு வரி இருக்கு ' ஹிட்லர் பேரனே ஹிட்லர் பேரனே... காதல் ஒன்றும் யூதன் இல்லை கொல்லாதே''.

இதில ஹிட்லர் யூதரைக் கொன்னதை தான் புரியவைக்கிறாங்க மற்றபடி நீங்க கொல்லுறது போல யூதர்கள் என்றால் கொல்லனும் என்ற அர்தம் தெரியல..

Unknown said...

சும்மா இருங்கோ டி.சே. பிறகு அருண் புத்தக அலுமாரிப்பக்கமே விடமாட்டார்

Unknown said...

ஆஹா என் குலக்கொழுந்தே அனானி..

'ஹிட்லர் பேரனே ஹிட்லர் பேரனே.. காதல் ஒன்றும் யூதன் இல்லைக் கொல்லாதே'... அப்படிப்பார்த்தாலும் 'ஹிட்லர் பேரனே, காதல் யூதனாக இருந்தால் கொல்' என்றுதான் அர்த்தப்படுகிறது. எப்பிடிப்பார்த்தாலும் அந்த வரியை நியாயப்படுத்த முடியாது. பச்சையாக அர்த்தம் தெரிகிறது நன்றாகத் திரிக்க முயல்கிறீர்கள்

Toto said...

Hi.. Thanks for the Sujatha's interview. Nice post !

-Toto
www.pixmonk.com

கிடுகுவேலி said...

சுஜாதாவிடம் பேட்டி எடுத்தார் கானாபிரபா என்பது இன்றுதான் தெரியும். அவருக்கு இந்த நேரத்தில் வாழ்த்துக்கள். சுஜாதாவின் வசனங்கள் இன்று நிதர்சனம் ஆகின்றது என்பதை எண்ண வருத்தமாகத்தான் இருக்கிறது. அருண்மொழிவர்மன் புத்தக அலுமாரியை மட்டும் பார்த்தீர்கள். ஆனால் அவரே ஒரு நடமாடும் நூலகம் என்பது உங்களுக்கு போக போக தெரியும்.

Unknown said...

இரண்டுமுறை மட்டுமே சந்தித்திருக்கிறோம் கதியால்.. போகப் போகத் தெரியும்