Wednesday 8 July 2009

'A' ஜோக் சொன்னால் குற்றமா?

வயது வந்தவர்களுக்கான ஜோக் சொன்னால் அது ஏதோ செய்யக்கூடாத செயல் என்பது போல் குதிக்கிறார்கள் பலர். அண்மையில் நான் 'வயாகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள்' என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன்னர் வந்த ஜோக் ஒன்றைப் பதிவிட்டேன். அப்போது ஒரு பின்னூட்டம் ஒன்றில் ஒரு நண்பர் ‘விகடன் வியாபாரத்துக்காக அதைச் செய்தது. அதையே செய்து நீங்களும் அதே குப்பைதான் என்று காட்டிவிட்டீர்கள்' என்று பின்னூட்டம் இட்டிருந்தார். இதேபோல் கேபிளாரின் ‘கொத்து பரோட்டா'வுக்கும் கண்டனப் பின்னூட்டங்கள் வருவதைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை, இப்படியான ஜோக்குகள் சொல்வது தப்பா?

என்னைக் குப்பை என்று சொன்ன பதிவரைப்பற்றி எனது மனதில் சில கேள்விகள் எழுந்தன. என்னுடைய பதிவின் தலைப்பு ‘வயாகரா தாத்தா (18+)' என்பதாகவே இருந்தது. அத்துடன் அந்த பதிவுக்கான படத்தில் கூட கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தெளிவாகப் போட்டிருந்தேன். இப்படி ஒரு உங்கள் வார்த்தையில் ‘குப்பை மேட்டர்' என்பதற்கான அத்தனை அறிகுறிகள் இருந்தும் ஏன் அந்தப் பதிவுக்குள் நுழையவேண்டும்? நான் பதிவைப் படிக்கவில்லை, கண்டன பின்னூட்டம் மட்டும் போடவே வந்தேன் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். உங்களுக்கெல்லாம் உள்ளூர இப்படியான மேட்டர் எல்லாம் வாசிக்கும், எழுதும், பேசும், செய்யும் ஆசை இருக்கவே இருக்கிறது. ஆனால், மற்றவன் வாசித்தாலோ, எழுதினாலோ, பேசினாலோ, செய்தாலோ குய்யோ முறையோ என்று குதிப்பீர்கள். எந்த ஊர் நியாயம் ஐயா இது? இதில் பெரிய காமெடி என்னவென்றால், பின்னூட்டம் போட்ட வெண்மையான காட்டிலிருந்து வந்தவர் இதுவரைக்கும் நான் எழுதிய வேறெந்தப் பதிவுகளின் பக்கமும் தலைவைத்தே படுக்கவில்லை. வயது வந்தவர்களுக்கான ஜோக் என்றதும் எலும்பு கண்ட நாய் மாதிரி ஓடிவந்து விட்டு, 'நான் உத்தமனுங்கோ.. எல்லாரும் நம்புங்கோ' என்கிறார்.

கேபிளாருக்கு நடக்கும் கொடுமை இதைவிட மோசம். கேபிளாரின் வலைப்பூவுக்கு வரும் புதிய வாசகர்கள் திட்டினாற்கூட பரவாயில்லை. அவரது பதிவுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களே திட்டித் தீர்க்கிறார்கள். அதிலும் புதிது புதிதாக User Id எல்லாம் உருவாக்கி வந்து மொத்துகிறார்கள். மயாதி, மயில் போன்ற சிலர் மட்டுமே தாங்கள் இப்படியான ஜோக்குகளைப் பிரசுரிப்பதைக் கண்டிக்கவில்லை என்றும், இப்படியான பதிவுகளைப் வாசிக்கும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக வாசகர்கள் இருப்பதற்கு ஏதுவாக ஏதாவது அறிவிப்புகளை (18+, வயது வந்தவர்களுக்கு மட்டும்) தருமாறும் உருப்படியாகப் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால், ‘இது ஒரு மாதிரி பதிவு' என்று கூவிக் கூவி பதிவிட்டாலும், உள்ளே வந்து வாசித்துவிட்டு தங்களை உத்தமராகக் காட்டிக்கொள்ள பின்னூட்டம் போட்டுக் கொல்லும் சிலரை என்ன செய்யமுடியும்?

வயது வந்தவர்களுக்கான உரையாடல்களும் கதையாடல்களும் சமூகத்தில் மலிந்திருக்கின்றன. இலைமறைகாயாக சொல்லப்படும் பல பச்சைப் பேச்சுக்களை நான் பல பெரிசுகள் பேசக் கேட்டிருக்கிறேன். ‘கோழி' என்ற சொல்லுக்குரிய கொச்சை அர்த்தம் மிகச் சாதாரணமாக பல இடங்களில் பயன்படக் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த பலரின் மறுபக்கங்களையும் கண்டிருக்கிறேன். நிர்வாணக் காட்சிகள் வரும் படங்கள் என்றாலே ஏதோ அருவருக்கத்தக்க கேவலங்கள் என்ற மாதிரிப் பேசுபவர்களும் உண்டு (நான்கூடப் பேசியிருக்கிறேன்). ஆனால் இயல்பாய் இருப்பது எப்படி என்று அனுபவம் சொல்லிய பாடங்களின் பின்பு, அப்படி அதைப் பார்க்கமாட்டேன் இதைக் கேட்கமாட்டேன் என்று சொல்வதெல்லாம் வெளியுலகுக்கு எங்களை உத்தமனாகக் காட்ட முயலும் ஒரு கேவலமான வித்தை என்பதைப் புரிந்துகொண்டேன். எல்லோருக்கும் உள்ளூர ஆசை இருக்கும், ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

காமம் என்பது தீண்டாப் பொருளா? மனிதகுலத்தின் உயிர்நாடியே அதுதானே? பின் ஏன் அதுபற்றிப் பேசினால் மட்டும் முகம் சுழிக்கிறார்கள்? வள்ளுவரை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விட்டோம், அவரைப்பற்றி எல்லோருமே சிறப்பாகச் சொல்கிறார்கள். ஆனால் கூட, அவர்கூட உலகப் பொதுமறை என்றழைக்கும் திருக்குறளில் காமம் பேசியிருக்கிறாரே? ஏன் காமத்தைப் பற்றிச் சொன்னால் துள்ளிக்குதிக்கிறீர்கள்? சமீபத்தில் ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்' என்று ஒரு புத்தகம் படித்தேன். அதில் காதல் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கும் சில ‘மேட்டர்'களோடு ஒப்பிடும்போது நான் சொன்ன ஜோக் என்ன, கேபிளார் சொன்ன பச்சை ஜோக்குகள் கூட ஜுஜுபி. என்னைத் திட்டிய நண்பர் போனற மற்றவர்களையெல்லாம் நான் கேட்பது இதுதான், 'இயல்பாக இருங்கள், உத்தமர் போல் நடிக்காதீர்கள்'. உங்களை எல்லாம் பார்க்கும்போது தான் கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் யாருக்குமே தான் பால்குடித்தது தெரியவே தெரியாது என்று நினைக்கும் பூனைக்கதை ஞாபகம் வருகிறது.

12 comments:

என்.கே.அஷோக்பரன் said...

மெத்தச் சரியான வாதம். பின்னூட்டமிடுபவர்கள் பதிவரை குற்றவாளியாகவும் தம்மை நீதிபிதயாகவும் நினைத்து பாண்டித்தயத்தனமான கருத்துக்களை இடுவதற்குப் பதில் நியாயமான கருத்துக்களை வெளியிடுவது நன்று.

THANGAMANI said...

நமது தொலைக்காட்சிகளில் வராத ஆபாசமா?

Unknown said...

கருத்துரைக்கு நன்றி அஷோக்பரன்

தங்கமணி... சமீபத்தில் கலைஞர் தொ.கா. வில் மானாட மயிலாடவில் ஒருவர் பெண் வேடமிட்டு வந்து ஒரு ஆட்டு ஆட்டினார்... கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டுக்கு ஒரு பிட்டுப் படக்காட்சியை விடக் கேவலமான மூவ்மெண்ட்ஸ் எல்லாம் ஆடினார்... அவரை சூப்பர் ஃபிகர் என்றார் சஞ்சீவ் மேடையிலேயே.. (அதாவது ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும்)... வருங்காலத்தில் நடுவர்கள் இப்படிப் போட்டியில் ஆடும் பெண்களைப் பார்த்து.. 'ஏங்க நீங்க ஒரு செம க**' என்ற ரேஞ்சுக்குப் போனாலும் ஆச்சரியமில்லை

வால்பையன் said...

காலையில வீட்டுல இருந்து கிளம்பும் போதே கருத்து சொல்லனும்னு கங்கனம் கட்டிகிட்டு சிலர் கிளம்புவாங்க, அவுங்களை பத்தி கவலைப்படாதிங்க!
எழுத்து எல்லா பரிமானத்துலயும் இருக்கனும்!

உங்கள் சேவையை தொடருங்கள்!

Unknown said...

உண்மைதான் வால்பையன்... நான் செய்யறது சேவையா??? ஆஹா....நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

யூர்கன் க்ருகியர் said...

// ‘ஈழத்து நாட்டார் பாடல்கள்' என்று ஒரு புத்தகம் படித்தேன்.//

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் ..:)

மந்திரன் said...

//காமம் என்பது தீண்டாப் பொருளா?//
தீண்டுவதுதானே காமம் ..
காமம் உங்களின் பதிவுகளின் கருவாக இருக்கட்டும் ..
காம பதிவுகளை தவிர்க்கலாம் ..
சில விசயங்களை மறைக்கும் போது தான் அது மீது ஆசை வரும் ..அந்த விசயங்களை மொத்தமாக போட்டு உடைக்கும் போது சில பேருக்கு கோபம் வருவது இயற்க்கை ..
காமத்திற்கு எல்லை கிடையாது.. ஆனால் நீங்கள் சில எல்லைகளை வகுத்துக் கொள்ளலாம் ..
காமத்தையும் எழுதுங்கள் ..("உம்" கவனித்தீரா ??? )

மந்திரன் said...

ss

பால்குடி said...

வயது வந்தவர்களுக்கென்று தலைப்பிட்டு எழுதப்படும் ஆக்கங்கள் நிச்சயமாக வயது வந்தவர்கள் மட்டுமே பார்ப்பதாக இருக்காது. எந்த வயதினராக இருந்தாலும் அதனுள் என்ன இருக்கிறது என்று (இரகசியமாகவேனும்) பார்ப்பார்கள் என்பது உண்மையே. இது சாராயக்கடையை அனைவரையும் கவரும் வண்ணம் அலங்காரமாகத் திறந்து வைத்துக் கொண்டு கடையின் முன்னே “குடி குடியைக் கெடுக்கும்” என்று அறிவித்தல் பலகை வைத்தல் என்பதுக்கு ஏறத்தாள ஒப்பானது.(வேறுபாடு: சாராயம் எல்லாருக்குமே கெடுதலானது, வயது வந்தவர்களுக்கான ஆக்கங்களை வயது வந்தவர்கள் வாசிக்கலாம்).
குடும்பத்தினரோடு சேர்ந்து இருந்து பார்க்கும் நிகழ்வுகளில் நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமான விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. ஆனால் பெரும்பாலும் எழுத்து ஆக்கங்கள் தனித்தனியாகவே ஒவ்வொருத்தரும் வாசிப்பதனால் குறிப்பிட்ட ஆக்கங்களை விரும்பினால் வாசிக்கலாம் இல்லையெனின் தவிர்க்கப்படலாம். அதுக்காக சிறுவர்களுக்கான ஆக்கங்களையும் வயது வந்தவர்களுக்கான ஆக்கங்களையும் ஒரே வலைப்பதிவில் (ஒரே பத்திரிகையில்) இடுவது பொருத்தமற்றது. சிறுவர்களுடன் இருக்கும் போது பெரியவர்களும் சிறுவர்களுக்கேற்றாற்போல வார்த்தைகளையே பிரயோகிக்க வேண்டும். ஆனால் பெரியவர்கள் மட்டும் சேர்ந்து கதைக்கும் போது தங்கள் வயதுக்குரிய கதைகளை கதைக்கலாம். இது வயது வந்தவர்களின் தலையாய கடமையாகும். வயது வந்தவர்களுக்கான விடயங்கள் சொல்லப்படுவதென்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. அச்சந்தர்ப்பத்தை மிகச் சரியான முறையில் தீர்மானிப்பதென்பதும் வயது வந்தவர்களையே சார்ந்தது என்பது எனது கருத்து.

Unknown said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி மந்திரன்....

பால்குடி...மனதில் பட்டதை நேர்மையாகச் சொல்வதில் உங்களை மிஞ்ச யாரும் உள்ளார்களா என்று சல்லடை போட்டுத்தான் தேட வேண்டும்

பால்குடி said...

கீத், உங்களை விடவா?

Anonymous said...

காலையில வீட்டுல இருந்து கிளம்பும் போதே கருத்து சொல்லனும்னு கங்கனம் கட்டிகிட்டு சிலர் கிளம்புவாங்க, அவுங்களை பத்தி கவலைப்படாதிங்க!
எழுத்து எல்லா பரிமானத்துலயும் இருக்கனும்!

உங்கள் சேவையை தொடருங்கள்!

repeatuu

viji
(mayil)