Friday 3 July 2009

முந்துவாரா ஃபெடரர்?

விம்பிள்டன் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. சனிக்கிழமை மகளிர் ஒற்றையர் இறுதியாட்டத்தில் வில்லியம்ஸ் சகோதரிகளும், ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதியாட்டத்தில் ராஜர் ஃபெடரர் மற்றும் ஆண்டி ராடிக் ஆகியோர் ஆட இருக்கிறார்கள். சென்ற முறை 6 தொடர் விம்பிள்டன் பட்டங்களை ஒரே வரிசையில் வென்ற வீரராவதற்குரிய வாய்ப்பை இறுதியாட்டத்தில் 4-6, 4-6, 7-6, 7-6, 7-9 என்ற கணக்கில் நடாலிடம் தோற்று கோட்டைவிட்ட ஃபெடரர் இம்முறையும் இறுதியாட்டத்தில் இன்னொரு சாதனை படைக்கும் வாய்ப்பை எதிர்கொள்கிறார். அதுதான் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் அதிக பட்டங்களை வென்றவர் என்ற சாதனை ஆகும்.

இதுவரை 14 கிராண்ட் ஸ்லாம்களை வென்றிருக்கிறார் ஃபெடரர். 5 விம்பிள்டன்கள், 5 அமெரிக்க ஒபன்கள், 3 ஆஸ்திரேலிய ஓபன்கள் மற்றும் இவ்வருடம் ஜெயித்த பலவருடமாக நடாலை இறுதிப்போட்டிகளில் எதிர்கொண்ட காரணத்தால் கனவாகிப்போன ஃபிரெஞ் ஓபன். இவ்வருடம் ஃபிரெஞ் ஓபனை வென்று பீற் சாம்ப்ரஸின் 14 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் என்ற சாதனையை சமன் செய்தார் ஃபெடரர். (சாம்ப்ரஸ்: 7 விம்பிள்டன், 5 அமெரிக்க ஓபன், 2 ஆஸ்திரேலிய ஓபன்). ஃபெடரருக்கும் சாம்ப்ரஸுக்கும் இருந்த ஒரே ஒரு பிரச்சனை ஃபிரெஞ் ஓபன். சாம்ப்ரஸ் அரையிறுதிக்குக் கூட ஒருமுறைதான் (1996) தெரிவானார். ஃபெடரர் ஒரு அரையிறுதி (2005) மற்றும் நான்கு இறுதிப் போட்டிகளுக்குத் (2006, 2007, 2008, 2009) தெரிவானார். 2009 தவிர மீதி எல்லாவருடமும் நடாலிடம் தோற்றுப்போன ஃபெடரர் இம்முறை நடால் முன்னைய சுற்றிலேயே வெளியேற தனது திறமை மற்றும் மிகச்சிறியளவு அதிர்ஷ்டத்துடன் எட்டாக்கனியான ஃபிரெஞ் ஓபனை பறித்தார் ஃபெடரர்.

தொடர்ந்த விம்பிள்டனில் ஃபெடரர் பக்கம் மீண்டும் காற்று வீசியிருக்கிறது. அவரது மிகப்பெரிய தடையும் உலகின் முதல்நிலை வீரருமான நடால் விம்பிள்டனில் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. இதனால் இறுதிப்போட்டியில் ஃபெடரரை எதிர்கொள்வது ராடிக். ராடிக் இதுவரை விம்பிள்டனில் இரண்டு இறுதியாட்டங்களை (2004, 2005) ஆடியிருக்கிறார். இரண்டுமுறையும் ஃபெடரருடன். இரண்டுமுறையுமே தோற்றுப்போனார். ஆகையால் இந்த வருட இறுதியாட்டத்திலும் ஃபெடரரின் கையே ஓங்கியிருக்கும் என்பது எனது கருத்து மட்டுமல்ல, பல டென்னிஸ் ஆட்ட விமர்சகர்களின் கருத்தும்கூட.

இம்முறை விம்பிள்டனில் பலமான எதிர்பார்ப்பைக் கிளப்பியவர் பிரித்தானியாவின் ஆண்டி மர்ரே. இவரும் இவருக்கு முன்னிருந்த ஹென்மன் போலவே பலத்த ஜனங்களின் ஆதரவுக்கிடையே அரையிறுதிவரை முன்னேறிய போதும் ராடிக்கின் அனுபவத்துக்குமுன் தோற்றார். பலமான எதிர்பார்ப்புக் காரணமாகவோ என்னவோ அரையிறுதியில் மர்ரே பயங்கரமான பதட்டத்துடன் ஆடியதும் ராடிக்குக்கு வாய்ப்பாகிப் போனது. வன்முறையில்லாமல் நல்லமுறையில் விளையாட்டை ரசிக்கும் இங்கிலாந்து ரசிகர்களாலேயே ஒரு விளையாட்டு வீரனை இவ்வளவு பயப்படுத்த முடியும் என்றால், கொடும்பாவி எரிப்பது, வீடுகளை உடைப்பது என்று இம்சை பண்ணும் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களைத் திருப்திப்படுத்திக் கிரிக்கெட் ஆடும் இந்திய வீரர்கள் பாவம். அதனால் தான் எப்போதுமே இந்திய கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் என்றுமே மற்ற நாட்டு வீரர்களின் சாதனைகளைவிட ஒருபடி மேல்.

மகளிர் இறுதியாட்டத்தில் ஆடவிருப்பது வில்லியம்ஸ் சகோதரிகள் வீனஸ் மற்றும் செரீனா. வீனஸ் நடப்பு சாம்பியன். ஐந்து விம்பிள்டன்கள் ஜெயித்தவர் (2000, 2001, 2005, 2007, 2008). செரீனா இரண்டு முறை (2002, 2003) ஜெயித்தவர். இந்த வருடத்துக்கு முன் இந்த சகோதரிகள் மூன்றுமுறை விம்பிள்டன் இறுதியாட்டங்களில் ஆடியிருக்கிறார்கள். இரு முறை செரீனாவும் கடந்த வருடம் வீனஸ்சும் ஜெயித்திருக்கிறார்கள். இருவரில் இம்முறையும் வீனஸ்சுக்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வளவு அபாரமாக ஆடிவருகிறார் வீனஸ். இதுபோதாதென்று மகளிர் இரட்டையர் இறுதியாட்டத்தில் வேறு இந்த சகோதரிகள்தான் ஆடப்போகிறார்கள். யார் ஜெயித்தாலும் பரவாயில்லை என்கிறார் இவர்களது அப்பா. இந்த முறை செரீனா ஜெயிக்க வேண்டும் என்பது எனது ஆசை. காரணம் சகோதரிகள் இருவரும் சேர்ந்து ஜெயித்த 17 ஸ்லாம்களில் 10 செரீனாவுடையது. வீன்ஸ் 5 விம்பிள்டன் 2 அமெரிக்க ஓபன்களை மட்டும் ஜெயித்தவர். செரினா 4 ஆஸ்திரேலியா, 2 விம்பிள்டன், 3 அமெரிக்கா, 1 பிரெஞ்சு என்று நான்கு பெரிய ஸ்லாம்களிலும் கொடி நாட்டியவர். இரு சகோதரிகளும் கிராண்ட் ஸ்லாமில் மோதியபோது தலா 10 போட்டிகளை ஜெயித்திருக்கிறார்கள். எல்லா இடத்திலும் நல்லா ஆடும் செரீனா வீனஸ்சை விட ஓங்கியிருக்கவேண்டும் என்று ஆசைப்படுவது தப்பில்லைதானே? ஆகவே, வீனஸ்சின் கை ஓங்கியிருப்பினும்.. சென்று வா செரீனா.... விம்பிள்டனை வென்றுவா!

No comments: