Saturday 4 July 2009

நான்கெழுத்துக் கெட்டவார்த்தை

அது பொறியியலாளனாகும் கனவில் சுற்றித்திரிந்த காலம். 2003ன் நடுப்பகுதி. நித்து வீட்டில் ஆங்கில டி.வி.டி எல்லாம் பார்த்து ஆங்கிலத்தில் பிரபலமான நான்கெழுத்துக் கெட்டவார்த்தையை (Fornication Under the Consent of Kingன்று கற்றதும் பெற்றதும் வினோத்குமார் சொன்னாரே... அதே கெட்டவார்த்தைதான்) ஐயம் திரிபறக்கற்றிருந்தோம். பிரயோகிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தபாடில்லை. சந்திரப்பிரகாசம் வாத்தியாரிடம் பௌதிகம் படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று பலரும் சொன்னதால், அவரிடம் போவது என்று தீர்மானித்தோம். 6.30 தொடக்கம் 8.00 மணிவரை வகுப்பு. வகுப்பு முடிந்ததும் வீடுதிரும்புவதற்குக் கிட்டிய வழிகள் இருந்தும் 750 பிரதான வீதியால்தான் திரும்புவோம். திரும்பும் வழியில் கற்ற கெட்டவார்த்தையைப் பிரயோகிக்கும் ஒரு வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

பருத்தித்துறை அரசினர் போதனா வைத்தியசாலை என சம்பிரதாய பூர்வமாகவும், மந்திகை ஆசுப்பத்திரி என செல்லமாகவும் அழைக்கப்பட்ட வைத்தியசாலையில் ஒரு சில பிரெஞ்சு வைத்தியர்கள் (Medicins Sans Frontiers/Doctors Without Borders அமைப்பினர்) பணியாற்றி வந்தனர். எங்களுக்கு எல்லா வெள்ளைத்தோலும் ஒன்றுதானே? அதனால் அந்த நான்கெழுத்துக் கெட்டவார்த்தையின் தாக்கத்தை அவர்கள் மீது சோதித்துப் பார்க்க விரும்பினோம். (புரியுது புரியுது... அதே சோதனை ஆர்வத்தை கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ல காட்டியிருக்கலாமே என்று நீங்க முணுமுணுக்கிறது எனக்கும் கேட்டது). அத்துடன் MSFல் வேலை செய்கிற ஒரு தமிழரின் பெயரும் தெரிந்துபோக ஒரே களேபரம். நாங்கள் போகும் நேரம் பார்த்து அவர்கள் இரவு உணவு உண்டுகொண்டிருப்பார்கள். விடுவோமா? ‘F***' உடன் என்ன வார்த்தைகளை எல்லாம் சேர்க்க முடியுமோ அதை எல்லாம் சேர்த்து பாவித்துப் பார்த்தோம். என்ன, ஒரு நாள் இரண்டு நாளா, ஏறக்குறைய ஆறுமாதம் கடுப்பேத்தியும் அவர்களிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. நாங்களும் சந்திரப்பிரகாசம் வீட்டில் எப்போ எல்லாம் வகுப்பு இருந்ததோ, அப்போ எல்லாம் அவர்களைக் கடுப்பேத்தினோம்.. ஊஹூம்.. No reaction...

சிலவேளை நாங்கள் அறிந்துகொண்ட அந்த வார்த்தைக்கான அர்த்தம் பிழையோ என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. இருந்தும் எம் முயற்சி (???!!) தொடர்ந்தது. அது ஒரு மகா ரம்மியமான இரவு (ஹுக்கும்.. சந்திரப்பிரகாசம் சொன்ன ஒண்டுமே தலைக்குள்ள ஏறலை எண்டத கொஞ்சம் கவித்துவமா சொன்னேன்). அவர்தந்த கடுப்பைத் தீர்க்க மீண்டும் அந்த MSF வைத்தியர்களை இலக்கு வைத்தோம். இந்த முறை ரியாக்‌ஷன் இருந்தது. ஒரு மறைவிலிருந்து ஒருவர் சவுக்கோடு வெளிப்பட்டு சுதாகரனைப் பிடித்தார். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. முதல் வரியில் நித்து, கபிலன், சுதாவும் அடுத்த வரியில் நான், மகி, நிதியும் போய்க்கொண்டிருந்தோம். சுதாவை மடக்கியதும் நித்துவும் நின்றான், பின்னால் வந்த நாங்களும் நின்றோம். கூட வந்த வேறு சில நண்பர்களும் நின்றனர். கபிலனை மட்டும் காணவில்லை.

மறித்தவர் அந்த டாக்டர்களின் ட்ரைவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த துணிந்த கட்டை. கையில் திருக்கைவால் சவுக்கு. ஓட முயன்றால் நிச்சயம் விளாறி விடுவார் என்பது புரிந்தது. ‘மாட்டிட்டோமடா' என்று முணுமுணுத்தேன். அவர் கொஞ்சம் தண்ணிவேறு உள்ளே விட்டிருந்தார் போல். வாழ்க்கையில் நாங்கள் கேளாத தூசணம் எல்லம் சொல்லி ‘இனிமே கத்தினா, உங்களின்ர ____ ஐ வெட்டுவன்' என்று வார்னிங்கும் தந்து எங்களைப் போகவிட்டார். மற்றவர்கள் சைக்கிளில் ஏறிய பின்னமும் சும்மா முறைத்த என்னை நோக்கி சவுக்கை ஓங்க ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு சைக்கிளில் ஓட்டம் பிடித்தேன் (முறைப்பெல்லாம் சும்ம ஒரு பயாஸ்கோப்தான்). நாங்கள் அந்தப் பாதையில் போகும் நாட்களையும் நேரத்தையும் பலநாட்களாகக் கவனித்துவைத்து மடக்கிவிட்டார்கள். அவர்களின் எந்த வித ரியாக்‌ஷ்னும் காட்டாமல் ஆக்‌ஷனுக்குத் தயாரானது எங்களுக்குத் தெரியவில்லை.
கொஞ்ச தூரம் போனதும் கபிலனைக் காணவில்லை என்பது உறைத்தது. சற்றே வேகத்தைக் குறைத்தோம். ‘ஹஹ்ஹா' என்று சிரித்தபடி வந்தான். தான் அருகிலிருந்த ஒரு பேருந்து நிலையத்தில் ஒழிந்திருந்து எங்களை வேடிக்கை பார்த்ததாகச் சொல்லிச் சிரித்தான். ஆனால் நிதியும் மகியும் நம்பமாட்டோம் என்றார்கள். எங்கோ வந்த புகையிலை வாசத்தை வைத்து கபிலன் எங்கோ ஒரு புகையிலைத் தோட்டத்துல் ஒளிந்திருந்ததாகக் கதை கட்டினார்கள். (கபிலன் எங்களுடன் மீண்டும் இணைந்த இடத்தில் ஒரு புகையிலைச்சிப்பம் இருந்தது வேறுகதை). கொஞ்ச தூரம் போனதும் படபடப்பெல்லாம் அடங்கி வாய்விட்டுச் சிரித்தோம்.

அடுத்தநாள் சந்திரப்பிரகாசத்தின் வகுப்புக்கு வந்து எங்களைப் பற்றி முறையிடும் அளவுக்கு அவர்கள் எங்களைப்பற்றி தகவல் திரட்டியிருந்தார்கள். சந்திரப்பிரகாசம் யார் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தது என்கிற ரேஞ்சில் விசாரித்தார். எனக்கு வியர்த்தது. ஏனென்றால் வகுப்பிலுள்ள அத்தனை பேருக்கும் தெரியும் நாங்கள்தான் அந்த வேலையைச் செய்தது என்று. ஆனால் யாருமே காட்டிக்கொடுக்கவில்லை (இதெல்லாம் எங்க ஊர் பசங்க கிட்ட சகஜம்). கடுப்பில் சந்திரப்பிரகாசம் இந்த வகுப்புக்கு இனிமேல் பாடம் எடுக்கமாட்டேன் என்றார். நான்தான் நியாயத்தடி மயூரனின் மச்சானாச்சே... சந்திரப்பிரகாசத்திடம் போய் ‘சேர், நானும் எண்ட ஃபிரண்ட்ஸும்தான் அதைச் செய்தனாங்கள். நாங்கள் அடுத்த வகுப்பில இருந்து வரமாட்டம். முழுப்பேரையும் தண்டிக்கவேண்டாம்' என்று மன்னிப்பு கேட்க, அவர் உணமையை ஒப்புக்கொண்டதற்காக என்னை மன்னிக்க என்று ஒரு செண்டிமெண்ட் சீன் நடந்தேறியது. கொடுமை என்னவென்றால், இன்றைக்குக்கூட மகி, நித்து, நிதி Skypeல் வரும்போது அந்த செண்டிமெண்ட் சீனை வைத்து என்னைக் கலாய்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். அத்தோடு கபிலன் பயந்துபோய் புகையிலைத் தோட்டத்துக்குள்தான் ஒளித்திருந்தான் என்பதும் அவர்களின் வாதம்.