Sunday 19 July 2009

பெண்ணா? புலியா?

ரொம்ப நாளைக்கு முன் ஒரு ராஜா இருந்தான். அவனுடைய தலைநகரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தில்தான் பொதுஜன கேளிக்கைகளும் தண்டனைகளும் நடக்கும். எல்லோரும் பார்த்து மகிழ்வார்கள். ராஜாவின் கவனத்தைக் கவரும் வகையில் ஒரு குற்றம் நடந்துவிட்டால் குற்றவாளியை ஸ்டேடியம் நடுவே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். எல்லோருக்கும் தகவல் சொல்லி ஜனங்கள் சூழ்ந்திருக்க, குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்படும். என்ன தண்டனை? ராஜா சைகை காட்ட, குற்றவாளிக்கு எதிரே அருகருகே இருக்கும் ஒரே மாதிரியான கதவுகளில் ஒன்றை குற்றவாளி இச்சைப்படி தேர்ந்தெடுத்துத் திறக்கவேண்டும். அவ்வளவுதானா? இல்லையே... இனிதான் மேட்டரே இருக்கு.

ஒரு கதவைத் திறந்தால் அதனுள்ளிருக்கும் பசித்த புலி வெளிவந்து அவன்மேல் பாய்ந்து குத்திக் குதறிக் கொன்று விடும். மற்றொரு கதவைத் திறந்தால் அவன் வயசுக்கும், தகுதிக்கும் ஏற்ப ஒரு பெண், ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான பெண், காத்திருப்பாள். அவளைக் குற்றவாளி உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ஒரு கதவு கல்யாணம், ஒரு கதவு புலி. எந்தக் கதவைத் திறப்பது என்பது குற்றவாளியின் விதியைப் பொறுத்தது. வேறுயாரும் குறுக்கிடுவதில்லை. அதாவது குற்றவாளிக்கு தண்டனையோ, மன்னிப்போ அவன் விதிப்படிதான் வழங்கப்படும். அதில் தனிமனித விருப்பு வெறுப்புகளின் செல்வாக்கு இருக்கவே இருக்காது என்பதுதான் அந்த ராஜா இந்தத் தண்டனை முறைபற்றிச் சொல்லும் நியாயம்.

ராஜாவுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் வழமைபோலவே ஒரு அழகான ஏழை இளைஞனைக் காதலித்தாள். இந்தக் காதல் ராஜாவுக்குத் தெரிய வந்தது. உடனுக்குடன் இளைஞன் கைது செய்யப்பட்டான். தண்டனை? வழக்கம்போலத்தான்! இரண்டு கதவு, புலி அல்லது பெண். இந்த ஸ்பெஷல் கேஸுக்காக ராஜா பிரத்யேகமாகத் தயார் செய்தார். கோபம் அதிகமான, பசி அதிகமான புலி, அதே போல ராஜ்ஜியத்திலேயே அழகான பெண். இந்த விஷயங்களில் எல்லாம் பாரபட்சமே இல்லாத நல்ல ராஜா அவன். தண்டனை நாளும் வந்தது. காதலன் கொண்டுவரப்பட்டு ஸ்டேடியம் நடுவே விடுவிக்கப்பட்டான். ராஜாவுக்கு வணக்கப் போட்டுவிட்டு காதலியான ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்தான்.

ராஜகுமாரிக்கு எந்தக் கதவின் பின்னால் புலி, எந்தக் கதவின் பின்னால் பெண் என்பது தெரிந்திருந்தது. அவளின் வைராக்கியமும் காவலர்களின் பொன் ஆசையும் அதைச் சாத்தியமாக்கியிருந்தன. ராஜகுமாரியைப் பரிதாபமாகப் பார்த்த காதலன் கண்ணாலேயே ‘எந்தக் கதவு?' என்று கேட்டான். அதற்கு அவள் வலதுகையை சற்றே உயர்த்தி வலது பக்கக் கதவைக் காட்டினாள். அது அவள் காதலனுக்கு மட்டும்தான் தெரிந்தது. காதலன் விறுவிறுவென்று உற்சாகமாக நடந்து போய் கதவைத் தயக்கமே இல்லாமல் திறந்தான்.

வெளிவந்தது புலியா? பெண்ணா? புலி என்றால், தான் உயிரையே வைத்திருக்கும் காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக் கொள்ள முடியும்? பெண் என்றால், மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக் கொள்ள முடியும்?

புலியா? பெண்ணா? எது கதவுக்குப் பின்னாலிருந்தது? நீங்கள்தான் சொல்லுங்களேன் வாசகர்களே!

Frank Stockton (1834-1902) என்ற அமெரிக்க எழுத்தாளர் 1882ம் வருடம் எழுதிய 'The Lady or the tiger?' என்ற தலைப்பிடப்பட்ட மிகப்பிரபலமான கதை இது. மேலே நான் தந்த இந்தக் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்தவர் யார் என்று ஒரு போட்டி அறிவிக்கலாம்தான், ஆனால் வசனநடையிலேயே தெரிந்துவிடும் அது சுஜாதா என்று.

15 comments:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் தெரியலயே

கவிக்கிழவன் said...

புலியா? பெண்ணா? எது கதவுக்குப் பின்னாலிருந்தது?
ஒரு முடிவுக்கு வாங்களேன்!!

இலங்கையில் இருந்து யாதவன்

- இரவீ - said...

புலி

Unknown said...

வருகைக்கு நன்றி யாதவன்

ரவி.. ஏன் பெண்ணாக இருக்கக் கூடாதா? காதல் சேராவிட்டாலும் காதலன் வாழ்ட்டும் என்று அவள் நினைத்திருக்கக் கூடாதா

ஞானசேகரன்... புலியா பெண்ணா யாருக்கும் தெரியாது.. Frank Stockton கூட முடிவைச் சொல்லாமல் வாசகரின் கற்பனைக்கே விட்டுவிட்டார்... இன்றைக்கும் அதிகம் விவாதிக்கப்படும் முடிவை (???) உள்ளடக்கிய கதை இது என்பதுதான் சிறப்பு

இராகவன் நைஜிரியா said...

எது வந்தாலும் அதிக வித்யாசமில்லை... ஒன்று உடனே கொல்லும், மற்றது... கல்யாணம் ஆனவர்களுக்குத் தெரியும்...

வந்தியத்தேவன் said...

புலிதான் இருக்கும் ஏனெனில் ஒரு பெண் தன் காதலன் இன்னொரு பெண்ணை மணப்பதை ஒருபோதும் விரும்பமாட்டால் ஆகவே அவன் புலியுடன் சண்டைப்பட்டு இறந்தாலும் பரவாயில்லை என்றே நினைத்திருப்பாள்.

Unknown said...

இராகவன் நைஜீரியா.... உங்க தங்கமணிகிட்ட இந்த கமெண்ட காட்டுங்க தல....

வந்தியத்தேவன்... அடடா.. கலக்குறீங்க...ஆனா யாருக்குத் தெரியும் பெண்களின் மன ஆழம்

வந்தியத்தேவன் said...

கீத் இன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் சில இளம்பெண்களைப் பார்த்தபின்னர் பெண்களின் மனம் அவ்வளவு கல் நெஞ்சம் இல்லை என்ற எண்ணம் வந்தது. முழு விபரங்கள் என் வலையில் நாளை அல்லது மறுநாள் தருகின்றேன்.

Unknown said...

கொஞ்சம் பொறுங்கள் வந்தி... நானும் Techsatishல் பார்த்துவிடுவேன்

கலையரசன் said...

புலியை கொன்றுவிட்டு ராணியை கை பிடிப்பான் என்று சொன்னால் சிரிக்க மாட்டிங்கதானே?
:-))

Unknown said...

கலை... புலியை ஜெயித்தால் ராணியைக் கைப்பிடிக்க முடியாது.... அடுத்த அறையிலுள்ள பெண்ணைத்தான்.... புலி அல்லது அடுத்த அறைப் பெண்..இரண்டில் ஒன்றுதான் சாய்ஸ்..

நிலாமதி said...

புலி இருந்த கதவு தான். ...........புலியுடன் போராடி அவன் வெல்ல ,
ராஜா அவன் வீரம் கண்டு ராசாத்தியை மணமுடித்து வைப்பான்.

அது சரி உங்களுக்கு விடை தெரியுமா ?

Unknown said...

இதற்கு சரியான விடையே இல்லை நிலாமதி அக்கா... அவரவர் எண்ண ஓட்டங்களுக்கேற்ப வாதாடலாம்... எழுத்தாளரின் வர்ணனைப்படி புலி அல்லது அடுத்த அறைப் பெண் என்ற இரண்டு தெரிவுகளே உள்ளன... புலியை ஜெயித்தால் அந்தப் பெண்ணைத்தான் மணக்க முடியும்... இளவரசியை அல்ல. (புலி இல்லாத அறையில் இருப்பது இளவரசி அல்ல... வேறொரு பெண்). சிலவேளை நீங்கள் சொல்வது போல் அவன் வீரம்கண்டு ராசாத்தியையும் மணம் செய்து கொடுத்திருக்கலாம்..யார் கண்டார்?

Feros said...

/#/வெளிவந்தது புலியா? பெண்ணா? புலி என்றால், தான் உயிரையே வைத்திருக்கும் காதலன் துடிதுடித்துச் செத்துப்போவதை எப்படி ராஜகுமாரியால் தாங்கிக் கொள்ள முடியும்? பெண் என்றால், மற்றொரு பெண்ணுடன் தன் காதலன் சுகித்து வாழ்வதை எப்படி அவளால் சகித்துக் கொள்ள முடியும்?/#/
புலியும் இல்ல பெண்னும் இல்ல ராஜாயை கொன்றுவிட்டு ராணியை கை பிடிப்பான் என்று சொன்னால் சிரிக்க மாட்டிங்கதானே?

சுரேஷ் said...

நிச்சயமாக புலிதான் வரும்...