Thursday, 2 July 2009

மனதில் பட்டவை- வாரம்: ஜூன் 28- ஜூலை 4, 2009

கொஞ்சம் அரசியல்
தமிழர் பிரச்சினையில் அரசியல் இணக்கப்பாடு எட்டியதும் அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என அதிபர் ராஜபக்சே அறிவித்திருக்கிறார். ஜே.வி.பி., பிக்குக்கள் முன்னணி ஆகியவற்றின் இடைவிடாத எதிர்ப்புக்கு மத்தியிலும் அரசியல் தீர்வுபற்றி இவர் பேசியிருப்பது ஆறுதல் அளித்தாலும், சர்வசன வாக்கெடுப்பு என்பது எந்தளவுக்கு சமதர்மத்துக்கான ஒரு தீர்வைத் தரும் என்பது சந்தேகமே. முக்கால்வாசிக்கு மேல் சிங்கள மக்கள் நிறைந்து வாழும் ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் முழுக்கச் சேர்ந்து அரசியல்தீர்வுக்கு ஆதரவாக வாக்களித்தால்கூட, அரைவாசி பெரும்பான்மை இனம் எதிராக வாக்களித்தாலே ஜெயிக்கும் வாய்ப்புக்கள் உள்ள நாட்டில் சர்வசன வாக்கெடுப்பு எவ்வளவு உகந்தது என்பது சந்தேகமே. இதிலும் முக்கால்வாசி சிங்கள மக்கள் சிங்கள அரசியல்வாதிகள் சொல்லும் செய்திகளை மிகவும் நம்புவதோடு, பிக்குகள் மீது மிகவும் மரியாதை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் தமிழ்மக்களுக்கு ஆதரவாக வாக்களித்து எங்களையும் அந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அதிகாரப் பகிர்வில் அக்கறைசெலுத்த விரும்பினால் அரசாங்கம் வரலாறு காணாத போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என தேசிய பிக்கு முன்னணி அறிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. புல்மோட்டைப் பகுதியில் உள்ள முகாமகளிலேயே இந்த ஈனச்செயல் நடைபெறுவதாக அங்கே பணியாற்றும் சில தொண்டுப் பணியாளர்கள் தங்களுக்கு தகவல் தந்திருப்பதாக அந்த நாளிதழ் சொல்லியிருக்கிறது. மேலும், இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலமை காணப்படுவதாயும், கிட்டத்தட்ட 10,000 புகலிடக் கோரிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இவ்வாறான கோரிக்கைகளை ஏற்கவேண்டாம் என்று ரோகித போகல்லகம சென்ற வாரம் அறிவித்ததும் நினைவிருக்கலாம். இலங்கை அகதிகள் பற்றி ஓரளவாது அக்கறை செலுத்துவதில் இன வெறிக்குப் பெயர்போன ஆஸ்திரேலியா முன்னணியில் இருப்பது ஓரளவு மனித நேயம் பற்றிய நம்பிக்கைகளைத் தூவுகிறது. இதேவேளை டோகாவிலிருந்து நாடுதிரும்பியபோது கட்டுநாயக்க விமானநிலையத்தில் காணாமல் போன யுவதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கடத்தியவர்கள் துணை ராணுவக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என்று அவர்கள் பற்றி விடுவிக்கப்பட்ட யுவதிகள் சொன்ன அடையாளங்களில் இருந்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
வடகொரியா மேலும் நான்கு ஏவுகணைகளை பரிசோதித்துப் பார்த்திருக்கிறது. என்னதான் இவர்கள் அமெரிக்காவுக்குக் கடுப்பைக் கிளப்பினாலும், இது ஒரு சாதாரண மனிதனுக்கு நல்ல செய்தி அல்ல. இன்னொரு கொடும் அழிவை உண்டாக்கும் போரை உண்டாக்கியே தீருவோம் என்று வடகொரியா கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவதுபோல் தெரிகிறது. இவர்களுக்குப் பின்னால் சீனா போன்ற தென்கிழக்காசிய நாடுகளும் இருக்கும் எனில், வடகொரியாவின் செயற்பாடுகள் மூன்றாவது உலகப்போருக்கான தீவிர முஸ்தீபுகளாகவே கணிக்கப்படும். இவர்கள் கடுப்பேத்த கடுப்பேத்த அமெரிகா என்ன செய்யப்போகிறது என்ற பயமும் சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஒபாமா முன்னைய அமெரிக்க அதிபர்கள் போலவே முட்டாள்தனமாகச் செயற்படுவாரா அல்லது கொஞ்சமாவது உலக நலம் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பாரா என்பதில்தான் இன்னொரு பாரிய அழிவுபற்றிய பயம் தங்கியிருக்கிறது. அடுத்தவேளைப் பசிக்குச் சாப்பாடே இல்லாமல் எத்தனையோ மக்கள் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், உலகமயமாக்கலால் கிராமாமகிவிட்ட உலகத்தில். ஆனால், இன்னமும் இப்படியான முட்டாள்தனமான Power Struggles இன்றைக்கும் நீண்டுகொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்க ஒரு விஷயம்.
பரஸ்பர சம்மதத்துடனான ஒரினச்சேர்க்கை குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமாக வர்ணித்த இந்திய சட்டக்கோவையின் 377வது பிரிவை மாற்றியமைக்க வேண்டும் என்று எட்டு வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட ஒரு பொதுநல மனுவிற்கே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்றும், அதில் ஈடுபடுவோருக்கு 10 வருடம் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்றும் 1860ல் லார்டு மெக்கலே அவர்கள் பிறப்பித்த சட்டத்தின் அடிப்படையிலேயே இன்றுவரை ஓரினச்சேர்க்கை பற்றிய சட்டங்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. வழமைபோலவே கலாசாரக்காவலர்கள் சத்தம் போடத் தொடங்கியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, ஓரினச்சேர்க்கை கீழைத்தேய சமூகங்களில் பலகாலமாக இருந்து வருவது கசப்பான உண்மை. அப்படி இல்லை என்று சொல்லி சப்பைக்கட்டு கட்டுபவர்கள் ஏராளம். இப்படியான கலாசாரக் காவலர்களுக்கெல்லாம் சாணிபூசிய பிய்ந்த செருப்பால் முகத்தில் அடித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு இவ்வாறான ஓரினச்சேர்க்கையாளர்கள் அனுபவிக்கும் போலீஸ் தொல்லைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றினால் அதுவே பெரிய விஷயம். மேலும் திருநங்கைகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய அங்கீகாரங்களும் கிடைக்கப் பெற்றால் நன்றாக இருக்கும். (இதுபற்றி ஒரு பதிவே இடவேண்டும். நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்)

கொஞ்சம் பொருளாதாரம்

கனடாவின் டொரண்டோ மாநகராட்சி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளது. வேலைக்கான பாதுகாப்பு உத்தரவாதம், ஓய்வு பெறுபவர்கள், பெற்றவர்களுக்கான நலன்புரிச் சேவைகள், உடல்நலக்குறைவு காரணமாக வேலை செய்யமுடியாத ஊழியர்களுக்கான நலன்புரிச்சேவைகள் ஆகியவற்றில் மாற்றம் கோரி சென்ற வாரம் முதல் இவர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இதனால் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் நகரம் நாறிப்போய் இருக்கிறது. நூலகங்கள், குழந்தை பராமரிப்பு இடங்கள், கோடைகால பயிற்சி வகுப்புகள் எனப் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவர்களது வேலைநிறுத்தம் முட்டாள்தனமானது என நகரபிதா டேவிட் மில்லர் குற்றம்சாட்ட, அதற்கு அப்படியானால் நகரசபை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மட்டும் எப்படி செய்தீர்கள் என ஊழியர் சங்கம் கேட்க, குப்பைகளை நகர வீதிகளில் மக்கள் எறிய என ஒரே களேபரம். ஜூலை முதலாம திகதி வழமையாக பூங்காக்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் கனடா தினக் கொண்டாட்டங்கள் இந்தமுறை டொரண்டோவில் பெருமளவு பாதிக்கப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கொஞ்சம் கெட்ட செய்தி

King of Pop என்று அழைக்கப்பட்ட 50 வயதான மைக்கேல் ஜாக்ஸன் சென்ற வாரம் மரணமடைந்தார். மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட ஜாக்ஸனின் மரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜாக்ஸனைக் கொண்டாடும் பலரும், தூற்றும் பலரும் இருக்கிறார்கள். அவரைப்பற்றி பல பாரிய குற்றச்சாட்டுகள் கூட எழுந்தன. அவை எல்லாவற்றையும் தாண்டி கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைப் பாப் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்கு ஒரு உன்னதமான முன்னுதாரணமாக அவர் இருந்தார் என்பதை யாருமே மறுக்கமுடியாது.
அத்திலாந்திக் கடலில் விழுந்த பிரானஸ் நாட்டு விமானத்தைத் தொடர்ந்து யேமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் இந்துமா சமுத்திரத்தில் ஜலசமாதியாகி விட்டது. 153 பயணிகளோடு கடலில் பாய்ந்த இந்த விமானத்தில் 13 வயதான ஒரு பெண் மட்டும் தப்பித்திருக்கிறார். விமானப் பயணங்கள் குறித்த பயங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

ஆடுகளம்
Confederation கோப்பையை பிரேசில் தக்கவைத்துக் கொண்டது. இறுதி ஆட்டம் அமெரிக்கா மற்றும் பிரேசிலிடையே நடைபெற்றது. 35 தோல்வியற்ற போட்டிகள், 15 தொடர் வெற்றிகளுடன் வீறுநடைபோட்ட ஸ்பயினை அரையிறுதி ஆட்டத்தில் 2-0 என்று வீழ்த்திய அமெரிக்கர்கள் 27 நிமிடத்திலேயே 2 கோல்கள் போட்டு பிரேசிலை திணறடித்தாலும், பிரேசிலுக்கேயுரிய அபார ஆட்டத்தை சமாளிக்கமுடியாமல் இரண்டாவது பாதியில் 3 கோல்களை விட்டு தோற்றது அமெரிக்கா. காகா அடித்த ஒரு கோல் நடுவரின் தவறால் கோல் இல்லை என்று அறிவிக்கப்படாவிட்டால் 4-2 என்று பிரேசில் ஜெயித்திருக்கும். தென் ஆபிரிக்க அணியை 3-2 வீதத்தில் வீழ்த்தி ஸ்பெயின் 3ம் இடம் பெற்றது.
விம்பிள்டன் போட்டிகள் அரையிறுதியைத் தொட்டிருக்கின்றன. ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஃபெடரர்-ஹாஸ், மர்ரே-ராடிக் சந்திக்கிறார்கள். மகளிர் ஒற்றையர் இறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆட இருக்கிறார்கள். இந்தத் விம்பிள்டன் தொடரை ஜெயித்தால் ஆடவர் மத்தியில் அதிக கிரண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற புகழை ஃபெடரர் பெறுவார். இதுவரை 14 ஸ்லாம் வென்று அமெரிக்கரான பீட் சம்ப்ரஸ்சுடன் சமநிலையில் இருக்கிறார் ஃபெடரர்.

மேற்கிந்தியத்தீவுச் சுற்றுப்பயணத்தில் யுவராஜின் சதம் மூலம் முதல் போட்டியை ஜெயித்த இந்தியா கேவலமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டாவது போட்டியைக் கோட்டை விட்டது. ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தமது துடுப்பாட்ட நுணுக்கங்களில் பல ஓட்டைகள் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்திய அணி சமீபகாலத்தில் காட்டிய அதீத முன்னேற்றத்துக்கு ஆப்பு வெகுவிரைவில்.

4 comments:

Anonymous said...

ஹீத் நீங்கள் கூறியவிடயத்தை நானும் யோசித்தேன் நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பில் தோல்விதான் காரணம் பல படித்த சிங்களவர்களே தமிழர்களுக்கு ஒன்றும் கொடுக்ககூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் ஜனாதிபதி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது தந்தால் தான் உண்டு. இல்லையென்றால் அவர் பாராளமன்றத்தைக் கலைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஹெல உறுமய ஜேவிபி போன்ற இனவாதக் கட்சிகளை கூட்டணியில் சேர்க்காமல் வெற்றிபெற்றால் ஏதூம் செய்யலாம் ஆனால் அதுவும் நடைமுறைச் சாத்தியமில்லை.

இன்றைக்குகூட ஜேவிபியினர் மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரமும் கொடுக்ககூடாது என சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அத்துடன் இந்தியாவிற்க்கு அடிபணியக்கூடாது என மிரட்டல் வேறை விடுத்துள்ளனர்.
தமிழருக்கு ஒன்றுமே கிடைக்காது. இந்தியாவின் இத்தாலிக்காரியின் சதியால் தமிழர்கள் அனாதைகள் ஆனதுதான் மிச்சம். கருணாய்நிதியும் குடும்பத்தைப் பார்ப்பதில் செலவிடும் நேரத்தை கொஞ்சம் எமக்காகவும் செலவிட்டால் ஏதாவது நடக்கலாம். மற்றும்படி இன்னொரு அகதிதான் நாங்கள். சோபா சக்தி தமிழரங்கம் இராயகரன் போன்ற புலி எதிர்ப்புவாதிகளிடம் சிலவேளை இதற்கான தீர்வுகள் கிடைக்கலாம்.

Anonymous said...

இன வெறிக்குப் பெயர்போன ஆஸ்திரேலியா///
ehto sri lanka nallam maaaathiri sollureengal. emmaaku nallahtu saiyum ore naduu. athayavathu vittu vaiiyungal. nallathu sollavathaka solli solliya tamilar naangal ippadi aakivittom. eluthuvanthu mun sari pilai parrkavittalum samukathai yoosithu eluthungal. this is not a comment. u can remove it

Unknown said...

முதலாவது அனானி நண்பரின் கருத்துக்களை வரவேற்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இரண்டாவது அனானி நண்பருக்கு: இனவெறிக்குப் பெயர்போன ஆஸ்திரேலியா என்ற மூன்றே மூன்று சொற்களை மட்டும் குறிப்பிட்டு நான் ஆஸ்திரேலியாவை மட்டம் தட்டியதாகச் சொல்லாதீர்கள் நண்பரே. நீங்கள் நுனிப்புல் மேய்ந்திருக்கிறீர்கள். நான் சொன்னது, அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாகூட எம்மில் அக்கறை செலுத்துவதில் முன்னணியில் இருப்பது மனிதநேயம் பற்றிய நம்பிக்கைகளை தூவுகிறது என்றே... நான் என்னவோ சொல்ல நீங்கள் என்னவோ விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்... அதுதான் பிரச்சினை.. மற்றபடி சமூகத்தை யோசிக்காமல் நான் எழுதுவது இல்லை

என்.கே.அஷோக்பரன் said...

தீர்வு????!

இன்னுங் “கொஞ்சக்” காலமாகும்!

கொஞ்சம் - யாருக்குத்தெரியும் அதன் வரையறுக்கப்பட்ட அளவு!