Sunday 7 June 2009

பிறந்த நாள்- சில நினைவுகள்


பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எல்லாவீட்டிலும் நடக்கிற ஒரு சாதாரண விஷயம் தான். சில பிறந்த நாட்கள் விமரிசையாக இருக்கும். சில பிறந்த நாட்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில பிறந்த நாட்கள் மனதில் பசுமையான நினைவுகளை விதைத்துச் சென்றிருக்கும். சில பிறந்த நாட்களை நினைத்தால் இதயம் கருகும் ஒரு வாசம் வரும். அப்படியாக என் வாழ்வில் கடந்த சில பிறந்த நாட்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவது பிறந்த நாள் (ஜூன் 6, 1986):
இந்த நாள் பற்றி நான் அனுபவம் என்று ஒன்றுமே சொல்ல முடியாது. ஆனால் அப்பாவும், அம்மா வழித் தாத்தாவும் வக்கீல்கள் என்பதால் கொஞ்சம் விமரிசையாகவே கொண்டாடியிருந்தார்கள். அழகாக கேக் எல்லாம் வெட்டி, ஃபோட்டோ எல்லாம் எடுத்து வீட்டையெல்லாம் அலங்காரம் செய்து கொண்டாடியிருந்தார்கள். என்னுடைய பெரியப்பா என்னுடன் படம் எடுத்த ஒரே சந்தர்ப்பம் அதுதான். அடுத்த வருடம் இலங்கை ராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டவர் என்னானார் என்றே தெரியாது. கிட்டத்தட்ட அம்மா மற்றும் அப்பாவழி உறவுகள் எல்லோரும் கூடிக்கொண்டாடிய ஒரு பிறந்த நாள் அது. (புகைப்படங்கள் இப்போதும் அப்பாவிடம் இருக்கின்றன. இலங்கையில் இருக்கும் போது அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொள்வேன்)

ஆறாவது பிறந்த நாள் (ஜூன் 6. 1991):
பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்த காலம் அது. முதன் முதலாக எங்களூர் வழக்கப்படி பாடசாலை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடத் தொடங்கிய காலம் அது. பெரியப்பா இறந்த பின் எங்களுடன் வளர்ந்த அவரது பிள்ளைகளில் மூத்த அக்காவுக்கு இந்தியாவில் வைத்து அந்த வருடம்தான் திருமணம் செய்துவைத்திருந்தார்கள். பெரியப்பாவின் நான்கு மகள்களுமே என்னை ரொம்பவே தாங்கிப்பிடிப்பார்கள். அவர்களில் ஒருவர் இல்லாமல் கொண்டாடிய பிறந்த நாள் இது. அக்காவின் திருமணத்துக்கு இந்தியா போன போது ஃபூட் பொய்சனிங் காரணமாக என்னை ஒரு வைத்தியசாலையில் வைத்து ரொம்பவே போராடிக் காப்பாற்றினார்கள். கிட்டத்தட்ட இந்த ஆறாவது பிறந்த நாள் ஒரு புனர் ஜென்மம்.

ஒன்பதாவது பிறந்த நாள் (ஜூன் 6, 1994):
இந்தப் பிறந்த நாளில் நான்கு முக்கியமான விஷயங்கள் இருந்தன. என்னை தன் மகன் போல் பார்த்துக் கொண்ட சுதா அக்கா திருமணமாகி மறுவீடு போயிருந்தார். ரொம்பவே மிஸ் பண்ணினேன். அம்மாவழித் தாத்தா இறந்து போயிருந்தார். முதல் முதலாக அம்மா ‘கோழிப் புக்கை' செய்திருந்தார். ரொம்பவே விரும்பிச் சாப்பிட்டேன். இதெல்லாவற்றையும் விட முக்கியமாக, எனக்கெ எனக்கான இரத்த சொந்தம் ஒன்று வீட்டுக்கு புதிதாய் வந்திருந்தது. 1993 செப்டெம்பர் 30ம் திகதி எனக்கு தம்பி பிறந்திருந்தான். (எங்க அப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்ல ஃபேமிலி பிளானேர்ஸ்... இல்லே!!!!)

பதினோராவது பிறந்த நாள் (ஜுன் 6, 1996):
ஆரம்பப் பாடசாலை முடிந்து சிரேஷ்ட பாடசாலை மாறியிருந்த நேரம். பாடசாலை அடையாள அட்டைக்கு வகுப்பாசிரியர் விபரம் சேகரித்தது ஜூன் 5. ' பெடியள், நாளைக்கு இவனுக்கு பிறந்த நாளடா' என்று பறைசாற்றிவிட்டார். அடுத்த நாள் நானும் இனிப்பு வாங்கி கிட்டத்தட்ட பாடசாலையில் எல்லா ஆசிரியர்களுக்கும், (அதிபர் உட்பட) ஓடி ஓடிக் கொடுத்தேன். கடைசியாக எங்கள் வகுப்புக்குப் பின்னால் உயர்தர வகுப்புக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்த ஆசிரியருக்கு இனிப்புக் கொடுத்த போது, என்னை தனியே அழைத்து ஒரு விஷயம் சொன்னார். ‘தம்பி, உனக்கு இப்ப வசதியிருக்கு. இனிப்புக் கொடுத்துக் கொண்டாடுறாய். உன்னுடைய வகுப்பிலேயே இதற்கும் வக்கில்லாமல் சிலபேர் இருப்பார்கள். நீ இவ்வாறு கொண்டாடுவது அவர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். ஆகவே இயன்றவரை இப்படியான கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிடு' என்றார். அவரது பெயர்கூட ஞானப்பிரகாசமோ, ஞானச்சந்திரனோ..சரியாக ஞாபகம் இல்லை. அவர் சொன்ன வார்த்தைகளும் அவரது முகமும் ஆணியடித்தாற்போல் நெஞ்சில் இருக்கிறது. ஆனால், அந்த வயதில் அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று பகுத்தறியும் பக்குவம் என்னிடம் இருக்கவில்லை. 150 இனிப்புகள் 100 ரூபாய்.. 100 ரூபாயெல்லாம் ஒரு காசா என்றுதான் எண்ணினேன்.

இருபதாவது பிறந்த நாள் (ஜூன் 6, 2005):
கிட்டத்தட்ட 2001ம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து ஒவ்வொருநாளும் ‘லவ்லி கூல்பாரில்' போய், கோக், பெப்சி. ஐஸ்க்ரீம், ரோல்ஸ், வடை, கேக், மிதி வெடி (அட..அதுவும் ஒரு சாப்பாட்டு சாமான் தானுங்கோ) சாப்பிடாத நாளே கிடையாது. அதனால் அந்தக் காலப்பகுதியில் பிறந்த நாள் பெரிய ஸ்பெஷலாக இருப்பதில்லை. இனிப்பு கொடுப்பதெல்லாம் மறைந்து ஒரு சில நண்பர்களோடு சேர்ந்து சந்தோசமாகக் கொண்டாடுவேன். ஆனால் இந்த 20வது பிறந்த நாள் ரொம்பவே முக்கியம். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் முதல் தரம் சரியாகச் செய்யவில்லை. அதனால் இரண்டாம் முறை எழுதினேன். கிட்டத்தட்ட என்னுடைய நெருங்கிய நட்புகள் யாவும் இரண்டாம் முறை எழுதினார்கள். பரீட்சைகள் ஆரம்பித்த நாள் எனது பிறந்த நாள். (இரண்டாம் முறையும் சொதப்பினேன் என்பது வேறு கதை). என்னுடைய பள்ளி நண்பர்களோடு கொண்டாடிய கடைசிப் பிறந்த நாள் அது. (இதயம் கருகும் வாசனை)

இருபத்தோராவது பிறந்த நாள் (ஜூன் 6, 2006): அப்பா அம்மா இல்லாமல் கனடாவில் கொண்டாட வேண்டிய நிர்ப்பந்தம். சுதா அக்கா ஒரு சங்கிலி செய்து போட்டார். நிறையக் காலத்துக்குப் பிறகு கேக் வெட்டினேன். அக்காவோடு சிறு மனஸ்தாபம் இருந்தது. ஆனால் காலையில் மகனோடு என் அறைக்கு வந்து வாழ்த்திவிட்டு, சங்கிலியைக் கழுத்தில் போட்டார்கள் (அவர்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்). அக்கா மகன், ‘ஹப்பி பேர்த்டே கீத் மாமா' என்று கழுத்தைக் கட்டிக்கொண்ட போது நெகிழ்ந்து போனேன். அப்பா, அம்மா, தம்பி மூன்று பேருமே சிறிலங்காவிலிருந்து தனித்தனி வாழ்த்தட்டைகள் அனுப்பியிருந்தார்கள்.

இருபத்து மூன்றாவது பிறந்த நாள் (ஜூன் 6, 2008):
ஒன்ராரியோ மாகாண தேர்தல் ஆணையத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் கணக்கு வழக்குகள் சட்டத்துக்கு உட்பட்டு இருந்தனவா என்று பார்க்கும் Election Finances Divisionல், Compliance Reviewer என்னும் நான்கு மாத Contract Job. எங்கள் sectionக்கு Board Roomல் meeting என்றார்கள். எனது மேற்பார்வையாளர் என்னை வேண்டுமென்றே தாமதிக்கவைத்து Board Roomக்கு கொண்டு சென்றார். ஒரு அற்புதமான surprise Birthday Party ஒழுங்கு செய்திருந்தார்கள். பிறந்த நாள் கொண்டாடுபவர் தவிர அனைவருக்கும் இ-மெயில் மூலம் செய்தி சொல்லி ரகசியமாக ஏற்பாடு செய்வார்களாம் Human Resources Department. என்னை நெகிழவைத்த இன்னொரு பிறந்த நாள்.

இருபத்து நாலாவது பிறந்த நாள் (ஜூன் 6, 2009):
அதாவது நேற்று. கல்லூரித்தோழி ஒருத்தி ட்ரீட் கேட்டாள். எடுக்கிறது பிச்சை கொப்பளிப்பது பன்னீரா என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு ஏதேதோ காரணம் சொல்லித்தவிர்த்தேன். ‘பிறந்த நாள் கொண்டாட வக்கில்லாதவர்களின் வலி' பற்றி 1996 ல் அந்த வாத்தியார் சொன்ன கருத்து, 13 வருடம் கழித்து எனக்கு உறைத்தது. ஃபேஸ்புக்என் பள்ளிக்கூட நண்பர்களின் வாழ்த்துக்களை மட்டுமல்லாது, வேறு பலரின் வாழ்த்துக்களையும் சுமந்து வந்தது. அக்கா பையனின் எல்லாப் பிறந்தநாளுக்கும் ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்பேன். அதேபோல் இந்த முறை பிடிவாதமாக நின்று ஒரு கேக் வாங்கி வெட்டவைத்தான். அவனுக்காக வெட்டினேன், ஆனால் கொண்டாடும் மனநிலையில் நான் இருக்கவில்லை. அடுத்த வருடம் நிச்சயமாகத் தனியாகப் போய்விடுவேன். அதன் பின் இந்தப் பிறந்த நாள், கருமாதி எல்லாம் கொண்டாடும் அவசியம் ஏதும் இருக்காது. நான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஐடியாலஜிப் பிரகாரம் வாழலாம். போலிச் சிரிப்பு, போலி மகிழ்ச்சி எல்லாம் இருக்காது. இன்னொரு விஷயம்...என் நெடுநாள் நண்பன் மஜிந்தன் லண்டனிலிருந்து தொலைபேசினான். மனம்விட்டு சில விடயங்கள் பேசிக்கொண்டோம். சந்தோசமாக இருந்தது.

இனிவரும் பிறந்த நாட்களில் என்ன செய்வது என்று முடிவெடுத்து விட்டேன். Simple Procedure, பிறந்த நாளன்று ரத்த தானம் செய்வது என்று முடிவெடுத்து விட்டேன். 'பிறந்தியா, தின், குடி, இரண்டெழுத்துக் கெட்டவார்த்தை செய், சா என்று வாழ்ந்துவிட்டுப் போவதில் அர்த்தமில்லை என்பது என் எண்ணம்.

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

24 வது பிறந்தநாள் காணும் நண்பருக்கு வாழ்த்துகள்

நசரேயன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

வால்பையன் said...

என்னை விட 2 வயது தான் அதிகமா உங்களுக்கு!

Unknown said...

வால்பையன் சார் வால்பையன் சார், உங்க ப்ரொஃபைல் உங்க வயசு சொல்லுது, அதவிட உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ இன்னும் தெளிவா சொல்லுது. இப்பிடி காமடி பண்ணுறீங்களே அண்ணா.. ஓ மனசில நீங்க இன்னும் இளமையா இருக்கீங்க போல.

வாழ்த்திய ஞானசேகரன், திகழ்மிளிர் மற்றும் நசரேயன் தாத்தாவுக்கும் நன்றி