Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Sunday, 23 August 2009

இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு

இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது. கனேடிய நேரம் சரியாக சனிக்கிழமை இரவு 11:43 க்கு (இலங்கை நேரம் 9:13) ஆரம்பித்த இந்த ஒன்றுகூடல் சரியாக ஞாயிறு அதிகாலை 3.28க்கு நிறைவு பெற்றது. 'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலை நானும் முழுமையாகப் பார்த்தேன். நேரடி ஒளியலை கிடைத்த வலைத்தளத்தில் இருந்த கலந்துரையாடும் வசதி காரணமாக, சந்திப்பில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த பதிவர் ஊரோடி, கௌபாய்மது ஆகியோர் மூலமாக எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, வசந்தன், கானாபிரபா, சயந்தன் ஆகியோர் நடத்திய இணையக் கலந்துரையாடலிலும் சில சுவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தச் சந்திப்பில் நான் அவதானித்த, கற்றுக்கொண்ட விடயங்கள் வருமாறு.
  • இலங்கை நேரப்படி 9.13க்கு ஒன்றுகூடல் ஆரம்பமானது. இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். 9.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய ஒன்றுகூடல் 10.00க்கு முன் ஆரம்பித்ததே ஒரு பெரிய சாதனை.
  • நேரடி ஒளிபரப்பு 9.30 இலிருந்து சீராக கிடைத்தது. இது மதுவின் முதல் முயற்சியாம். ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரத்துக்கு மண்டபத்துக்கு வந்தவர்கள் மட்டும் 55 பதிவர்கள். மூத்தவர்கள் தொடக்கம், 11 வயது இளையவன் வரை வந்திருந்தார்கள்.
  • புல்லட் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதன் பின் சுபானு உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ஆதிரை Bloggerன் 10வது பிறந்த நாள் கொண்டாடினார்.
  • Blogger ஆரம்பித்த 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நேற்று என்பது ஒரு தற்செயலான ஒற்றுமை. அதை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். எழுந்தமானமாகத் தெரிவு செய்யப்பட்ட 10 பதிவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, மூத்தவர்களான திரு.அந்தனி ஜீவா, கவிஞர் திரு.மேமன் கவி, சிறப்பு விருந்தினரான திரு.எஸ்.எழில்வேந்தன் மற்றும் வலைப்பதிவர் டொக்ரர் ஜீவராஜ் ஆகியவர்கள் கேக் வெட்டினார்கள்
  • அதன் பின்னர் மருதமூரான், சேரன்கிரிஷ், லோஷன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் மருதமூரானுக்குப் பின்னர் சிறப்புரை ஆற்றினார்.
  • லோஷனின் உரையைத் தொடர்ந்து விவாதங்களுக்குள் நுழைந்தார்கள், நேரடியாகப் பங்கு கொண்டவர்களும், இணையத்தில் இருந்தவர்களும்.
  • தமிழில் தட்டச்சு செய்வது பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். அதுவும் இணையத்தில் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்த வசந்தன் அண்ணாவும், சயந்தன் அண்ணாவும் Phonetic Unicode முறையைக் காரசாரமாக விமர்சித்தார்கள். (என்னட்டையும் தமிழ் எழுத்துக்கள் இருக்கிற கீ-போட் இருந்தா நானும் வடிவா டைப் செய்வன். ஊரில இருந்தது, இஞ்ச தேடோணும்.)
  • இலங்கைப் பதிவர்கள் அதிகளவில் இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிக்கப்பட்டது. சயந்தன் அண்ணா அடிக்கடி ‘கீத் இது உனக்குத்தான்' என்று சொல்லி நக்கலடித்தார். (அண்ணா, ஒன்லைனில நான் மாட்டீற்றன்... ஆனா கன ஆரம்பநிலை வலைப் பதிவர்களுக்கு தொப்பி பொருந்தும். அனுபவம் சேரச் சேர எல்லாம் சரிவரும் அண்ணா, இப்ப ஏசாதையுங்கோ)
  • புனைபெயர்களில் எழுதுபவர்கள் பற்றியும் கொஞ்சம் விவாதித்தார்கள். நான் புனை பெயரில் எழுதாவிட்டாலும், இலங்கையில் உள்ள பதிவர்கள் சொந்தப் பெயர்களில் எழுதுவது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்று சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
  • ழ,ல,ள, ந, ன, ண பற்றியும் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்கு சம்பந்தம் இல்லை என்பது என்னுடைய கருத்து.
  • பல பதிவர்களின் பதிவுகள் சினிமா சம்பந்தப் பட்டு இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பிரச்சினையின் பின் முடிந்தளவுக்கு ‘சினிமா மட்டும்' கருப்பொருளான பதிவுகளை இயலுமானளவுக்குத் தவிர்த்திருக்கிறேன். அது தரமான பதிவுகளை, சுயம் நிறைந்த பதிவுகளைத் தருவதற்கான என்னாலான முயற்சி.
  • எங்கள் வாழ்வியலில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தாமல், அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள் என்ற கருத்தை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இன்ன இன்ன விடயங்களைத்தான் ரசிக்க வேண்டும், இன்ன இன்ன விடயங்களை ரசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும், என்னமாதிரியான உரைநடையில் எழுதவேண்டும் என்பதையோ யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்து.
  • யாழ்தேவி என்ற பெயரில் உள்ள திரட்டி இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் பொதுவான பெயராக இருக்க முடியாது என்ற வாதம் நியாயமானதாகப்படுகிறது. இப்போது கொழும்பு-தாண்டிக்குளம் (தகவல் தந்தது: சயந்தன் அண்ணா) செல்லும் புகையிரத வண்டிதான் யாழ்தேவி என்றால், அது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கான அடையாளமாக இருக்காது.
  • விழாவை வந்தியத்தேவன் தன்னுடைய ‘பின்னூட்டத்துடன்' முடித்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் வடை, பற்றீஸ், கேக், நெஸ்கஃபே வழங்கப்பட்டது. இணையத்தில் இருந்து இணைந்த நாங்கள் கொட்டாவி மட்டும் விட்டோம்.
சந்திப்பு சம்பந்தமான படங்களை ஆதிரையின் தளத்திலோ, வந்தியத்தேவனின் தளத்திலோ பாருங்கள்.

தனிப்பட்ட சந்தோஷங்கள்
  • பள்ளிக்காலத் தோழர்களான பால்குடி, பனையூரான், ஆதிரை ஆகியோரை மீண்டும் கண்டது. வந்தியத்தேவன் அண்ணாவின் குரல் கேட்டது.
  • ஒன்றுகூடலில் பேசியவர்களின் பேச்சுக்களிலும், கலந்துரையாடலிலும், கானா பிரபா, சயந்தன், வசந்தன் ஆகிய மூத்தவர்களுடனான உரையாடலில் கிடைத்த சில பயனுள்ள கற்கைகள்.
  • எங்கட பொடியள் செய்த நேரடி ஒளிபரப்பு. மதுவுக்கு திரும்பவும் வாழ்த்துக்கள்.
  • இந்தியப் பதிவர்கள் சிலர் வந்து வாழ்த்தினார்கள், ஒன்லைனில்.
ஒரு தனிப்பட்ட துக்கம்
  • எங்கள் ஒன்லைன் விவாதத்தின் இடையே அடிக்கடி ஒருவர் பெயரை மாற்றி மாற்றி எங்களைக் கோபமூட்ட முயன்றது.
ஆக மொத்தத்தில், இரண்டு பேர் சேர்ந்தாலே பொதுக்கூட்டம் என்கின்ற மாதிரி ஒன்றுகூடல்கள் நிகழும் ஒரு காலத்தில் அறுபது பேர் கலந்து கொண்ட ஒன்றுகூடலை ஒருங்கிணைத்த வந்தியத்தேவன், லோஷன், புல்லட், சுபானு ஆகியோருக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

பதிவர் சந்திப்பின் முழுமையான ஒலி வடிவம்: நன்றி மதுவதனன்