Thursday 10 September 2009

தமிழ் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு; பாகம்-1

புலம்பெயர் தமிழர்களின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது எங்கள் வாழ்வியலை, எங்கள் கலாசாரத்தை, எங்கள் மொழியை எவ்வாறு அடுத்த சந்ததிக்குக் கொண்டுபோகப் போகிறோம் என்பதே. அதுவும் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளிலேயே கல்வி வழங்கப்படும் சூழலில் அவர்களின் முதல் மொழி (தாய் மொழி என்றுகூடச் சொல்லலாம்) அந்த நாட்டு மொழியாகவே அமைகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழைக் கற்பதென்பது அவர்களுக்கு மிகவும் வெறுப்பு மிகுந்த ஒரு அனுபவமாகவே அமைகிறது. நாங்கள் எப்படி ஆங்கிலம் கற்க விழுந்து எழும்பினோமோ, அதே சிக்கல்களை அவர்களும் எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கு ஆங்கிலம் படிக்கச் சொல்லி பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பினார்கள், எங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்கப் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். அப்படி விருப்பமில்லாமல் தமிழ் படிக்க வருகின்ற பிள்ளைகளுக்கு விருப்பத்தை எவ்வாறு உண்டுபண்ணலாம்?

இதுபற்றித்தான் ஐக்கிய ராச்சியத்தில் இருந்து கனடா வந்திருந்த இலண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிவகுருநாத பிள்ளை (சிவா பிள்ளை) அவர்கள் சென்ற 28/08/2009 அன்று ஒரு பட்டறை நிகழ்த்தினார். கனடாவில் ஒரு உறவினரின் திருமணத்துக்காக வந்திருந்த சிவா பிள்ளையின் தொடர்பு அவரின் ஆசிரியர் ஒருவர் மூலமாக எழுத்தாளரும், ஆசிரியருமான சின்னையா சிவநேசன் (துறையூரான்) அவர்களுக்குக் கிடைக்க, அவரது முயற்சியில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக இந்தப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டது. துறையூரான் அவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதாலும், பட்டறையை புகைப்படம் பிடிப்பதற்கு உதவி தேவைப்பட்ட காரணத்தாலும், என்னுடைய தமக்கையாரும் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் தமிழ் கற்பிக்கிற காரணத்தாலும், நானும் இந்தப் பட்டறைக்குப் போயிருந்தேன்.

எங்களது அடையாளங்களில் ஒன்றான நேரம் தவறுதல் இங்கேயும் இருந்தது. ஐந்தரைக்கு ஆரம்பிக்க வேண்டிய பட்டறையை ஆறு மணிக்குத்தான் ஆரம்பித்தார்கள். வழமைபோலவே வழங்குனர் நேரத்துக்கு வந்திருந்தார், பயன் பெறுனர்கள் ஆறுதலாக வந்து சேர்ந்தார்கள். 'அஞ்சரைக்கு எண்டு சொல்லி ஆறு மணிக்குத்தான் தொடங்குவினம்' என்று சொன்ன அக்காவை இழுத்துக்கொண்டு போய்ச் சேர பத்து நிமிடம் பிந்தியிருந்தது. வழி முழுக்க புறுபுறுத்துக் கொண்டுதான் போனேன். அங்கே போனால் ஒரு ஐந்தே ஐந்து பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் ஒரு ஆசிரியையின் கணவர், மற்றவர் சிவா பிள்ளை அவர்களை அழைத்து வந்தவர். மூன்றே மூன்று ஆசிரியைகள் மட்டும் உள்ளே இருந்தார்கள். அறிமுகம் செய்து பட்டறையை ஆரம்பித்து வைக்கவேண்டிய தமிழ் எழுத்தாளஎ சங்கத் தலைவர் திரு. த. சிவபாலு அவர்கள் ஆறுமணியளவில் வந்து சேர்ந்தார்.

படம்-1: தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கனடா தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. வந்திருந்த பயனாளர்களில் சிலர்

சிவபாலு அவர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து சிவா பிள்ளை தனது பட்டறையை ஆரம்பித்தார். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்குள் ஐந்து அலைபேசிகள் ஒலித்தன. அதிலும் திரு. சிவபாலு அவர்கள் தன் அலைபேசி அழைப்பை ஏற்று சத்தமாகப் பேசியபோது உண்மையிலேயே கோபமாக இருந்தது. பொறுப்பில்லாதவர்கள், பழக்க வழக்கங்கள் சரியாக இல்லை என்று எங்களைச் சாட்டிச் சாட்டி இந்த மூத்த தலைமுறை தங்கள் தவறுகளைக் கவனிக்க மறந்து வருகிறது. ஒரு பட்டறைக்கு வரும்போதோ, ஒரு பொது நிகழ்ச்சிக்கு வரும்போதோ, பெரிய சத்தத்தில் அலைபேசியை ஒலிக்க வைத்து, அதைவிடப் பெரிய சத்தத்தில் அந்த அலைபேசி அழைப்புக்குப் பதிலிறுப்பது ஒரு 'படம் காட்டும்' மனநிலையாக எனக்குப் படுவதுண்டு. என்னுடைய அலைபேசி எப்போதும் அதிர்வு நிலையிலேயே இருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும் இங்கே.
படம்-2: சிவா பிள்ளை (இடம்) அவர்களை அறிமுகம் செய்து பட்டறையை ஆரம்பித்துவைக்கும் திரு. த. சிவபாலு அவர்கள்.

இப்படியாக சில கசப்புகளுடன் தொடங்கிய இந்தப் பட்டறையை சிவா பிள்ளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவந்தார். அவரது ஆழ்ந்த அனுபவம் அவருக்குத் துணைசெய்ய, இலகுவாக அவையை அடக்கினார் என்றே சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆசிரியர்கள் வந்து இணைந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இருந்தும் இப்படியான ஒரு பட்டறைக்குத் தமிழ் ஆசிரியர்கள் 15 பேர் மட்டுமே வந்தார்கள் என்பது, வரவேற்கத்தக்க ஒன்றல்ல. அதுவும், தமிழ் படிக்க வரும் பிள்ளைகளை விரும்பிப் படிக்கவைக்க முடியவில்லை என்று பல ஆசிரியர்கள் குறைகூறும் ஒரு நாட்டில், இவ்வாறு வரவு குறைவாக இருந்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில் சிவா பிள்ளை தந்த பல தகவல்கள், பல யோசனைகள் செயற்படுத்திப் பார்க்கும் தரம் வாய்ந்தவை. அவை பற்றி அடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

8 comments:

கிடுகுவேலி said...

சிவாப்பிள்ளை பற்றி நன்கு அறிவேன். தற்செயலாக ஒரு தடவை அவரோடு இணையத்தில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மனிதர் இன்று வரையும் என்னோடு நட்பு பாராட்டி வருகிறார். கேட்கும் போதெல்லாம் எவ்வாறு சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. எவ்வாறு கற்பிக்கலாம் என்ற பல புதிய சிந்தனைகளோடு உலா வருபவர். அவரின் நட்பு மூலமாக பிரித்தானியாவில் எவ்வாறு மழலைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது என்று அவர் அனுப்பிய இறுவட்டு இன்றும் பலர் அதன் மூலம் பயனடைந்து கொண்டு இருக்கின்றார்கள்...! நன்றி நல்ல முயற்சி தொடரட்டும்.!!

vasu balaji said...

இன்னுமொரு அருமையான ரிப்போர்ட்.

Unknown said...

கதியால்..
இணைய அரட்டைகளில்கூட வருகிறாரா சிவா பிள்ளை? அவர் ஐக்கிய இராச்சியம் போய் 40 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தமிழ் பற்றிச் சிந்திக்கிறார். அவர் பட்டறையில் சொன்னது மற்றும் பட்டறை தொடர்பான சில சர்ச்சைகள் பற்றி எல்லாம் எழுதுகிறேன்...

Unknown said...

நன்றி பாலா

M.Thevesh said...

ஒருசில படித்தவர்கள் ஊரில் உயர் உத்தி
யோகம் பார்த்தவர்கள் சபை நாகரீகம்
தெரியாதவர்களாகநடந்துகொள்ளுகிறார்
கள்.யார் அவர்களுக்கு புத்தி சொல்வது.
மெதுவாகப்பேசத்தெரியாத இனங்களில்
தமிழ் இனமும் ஒன்று.உங்கள் ஆக்கம்
ஒரு சிறந்த ஆக்கம்.நான் விரும்பி வா
சிக்கும் பக்கங்களில் உங்கள் பக்கமும்
ஒன்று.

பால்குடி said...

விரைவில் அவர் கூறிய கருத்துக்களடங்கிய பதிவை எதிர்பார்க்கிறேன். இங்கு நகர்ப்புற வாழ்க்கையைப் பார்க்கும்போது மிக விரைவில் அச்செயற்திட்டங்கள் பயன்படுத்த வேண்டிவருமோ என எண்ணத் தோன்றுகிறது.

Unknown said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவேஷ்

Unknown said...

பால்குடி..
நிச்சயமாக, நான்கைந்து அல்லது அதற்கு மேல் பாகங்கள் எழுத இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை சமீபகாலங்களில் நான் செய்த பிரயோசனமான ஒரு விசயம் இந்தப் பட்டறைக்குப் போனதுதான்