Saturday 29 January 2011

பிணம்தின்னும் சாத்திரங்கள்

தெரிந்த முகங்களின் அகால மரணங்கள் இலகுவில் யாரையும் உலுக்குவதுண்டு. இந்த வருடத்தின் முதல் நாளிலும், இன்றைக்கும் எனக்குத் தெரிந்த முகங்களின் மரணங்கள் என்னை உலுக்கித்தான் இருக்கின்றன. முதல் மரணம் தவராசா கேதீஸ்வரன் என்கிற என்னுடைய வயதொத்த, என்னுடைய பாடசாலையில் படித்த (வணிகப்பிரிவோ, கலைப்பிரிவோ சரியாகத் தெரியாது), என்னுடன் பாடசாலை மாணவர் தலைவர்களில் ஒருவனாகக் கடமையாற்றிய இளைஞனுடையது. இவர் டிசம்பர் 31, 2010 இரவு கொல்லப்பட்டார். இரண்டாவது இன்று சனிக்கிழமை (சனவரி 29, 2011) கொல்லப்பட்ட இராசரத்தினம் சதீஸ் என்பவருடையது. இவரும் நான் படித்த பாடசாலையில் என்னைவிட இரண்டோ, மூன்று வகுப்புகளுக்கு முன்னால் படித்தவர். விளையாட்டுப்போட்டிகளில் என்னுடைய இல்லத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதுக்காகச் சொல்லப்படுகிற காரணங்கள் மிகவிசித்திரமாக எனக்குத் தோன்றுகின்றன. இரண்டு காரணங்களும் முரண்களின் உச்சமாகப்படுகின்றன. ‘போரின் பக்கவிளைவுகள்’ என்று சொல்கிற அறிவுசீவிகள் மீது கோபத்தை ஏற்படுத்துகின்றன.
முதல் கொலை கேதீஸ்வரனுடையது. இந்தவருடம் பிறந்ததும் Face Book இணைப்புகள் மூலமாகக் கிடைத்த முதல் செய்தி இது. குடத்தனை பொற்பதிப் பகுதியில் வைத்துக் கேதீஸ் கொல்லப்பட்டான். ‘கேதீஸ்’ என்னுடைய உயிர் நண்பன் என்றெல்லாம் சொல்லி ஒரு பச்சாதாப நாடகம் ஒன்றை இங்கே அரங்கேற்ற நான் முயலவில்லை. ஆனாலும், ஓரளவுக்காவது கேதீசை எனக்குத் தெரிந்திருந்தது. கேதீஸ் எங்களுடைய பாடசாலையில் ஆறாம் வகுப்புமுதல் படித்தவனில்லை. அவன் எந்தவகுப்பில் பாடசாலைக்கு வந்தான் என்பதுகூட சரியாக எனக்குத் தெரியாது. என நண்பர்கட்கும் தெரியாது. ஆனால், இடையில் வந்தவன் என்பது தெரியும். அது நன்றாகப் ஞாபகமிருத்தலுக்கான காரணங்களும் உண்டு. அவற்றில், ’கேதீஸ் உயர்தரம் படிக்கிறபோது மாணவர் தலைவனாகத் (Prefect) தெரிவுசெய்யப்பட்டபோது அவனுக்கெதிரான ஒரு எதிர்ப்பலை இருந்தது’ என்கிற காரணம்தான் மிகப்பெரியது. ஆறாம் வகுப்புமுதல் படிக்கிற நிறையப்பேர் இருக்கத்தக்கதாக இடையில் வந்தவன் எப்படி மாணவர் தலைவனாகலாம் என்று நாங்கள் எங்களுக்குள் குசுகுசுத்ததுண்டு. இப்படியான மாணவர் தலைவர்களின் தலைவனாக இருந்தவன் இப்படியான அரசியல்கள் இல்லாமல் இருந்தகாரணத்தால் அந்த எதிர்ப்பு குசுகுசுப்போடே அடங்கிப்போனது. (அவனுக்கெதிராகவும் நாங்கள் கிளர்ந்த கதை வேறு). கேதீஸ் விஞ்ஞானம் அல்லாத பிரிவில் படித்ததுதான் அவனுக்கிருந்த ஒரே தகுதி என்று நக்கல்வேறு செய்வோம்.  விஞ்ஞானம் படித்த எங்கள் விண்ணாணம் தெரியவந்தபோது எந்த மூஞ்சையை வைத்து நக்கல் செய்தீர்கள் என்று அவன் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை. இப்போது அவன்கூட விஞ்ஞானம்தான் படித்தானோ என்கிற மாதிரி ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், கேதீசுக்கும் எனக்குமான நட்பின் நெருக்கம், இவ்வளவுதான்.

கேதீஸ் கொலை பற்றிப் பலபேர் பல கதைகள் சொல்கிறார்கள். அவன் முன்னைநாள் போராளி என்கிறார்கள் சிலர். இல்லையில்லை அவனது அண்ணனே போராளி என்கிறார்கள் வேறு சிலர். இவன் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்கிறார்கள் இன்னும் சிலர். ‘இலங்கையில இருந்துகொண்டு கையில கார்த்திகைப் பூவோட படம் போடுறது கொழுப்புத்தானே’ என்கிறார்கள் மற்றவர்கள். குழப்பமான இந்தக் கோணங்களில் இருந்து கேதீசை ஏன் கொன்றார்கள் என்கிற முடிவை என்னால் எட்டமுடியவில்லை. தன்னை ஏன் கொன்றார்கள் என்று கேதீசுக்குத் தெரிந்திருக்குமா, அல்லது கேதீசை ஏன் கொல்கிறோம் என்பது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்குமா என்பதுகூட சந்தேகமே.

அவன் முன்னைநாள் போராளி அல்லது அவனது அண்ணன் முன்னைநாள் போராளி என்று வைத்துக்கொள்வோம். புனர்வாழ்வுக்கென்றுதான் அப்படியான போராளிகளைத் திருப்பியனுப்பி இருக்கிறார்கள், கொடுஞ்சிறைகளிலிருந்து. இதுதான் அரசாங்கமும், அறிவுசீவிகளும் முன்வைக்கிற வாதம். அப்படியானால் புனர்வாழ்வுக்காகத் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவனோ/ அவன் சார்ந்தவர்களோ ஏன் கொல்லப்பட்டார்கள்? குழுவாகக் கொன்றால் பிரச்சினை என்று தனித்தனியாகக் கொல்கிற திட்டமா? அல்லது உண்மையிலேயே புனர்வாழ்வுக்கு என்று வெளியே வந்துவிட்டு மீண்டும் பழைய போராளிக்குணங்களை வெளிக்காட்டினார்கள் என்கிற காரணமா? அப்படிப் போராளிக் குணங்களை வெளிக்காட்டினார்கள் என்றால் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக இது தொடர்பில் பேசவேண்டி வரும். புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான போராளிகள் மரணத்தின் எல்லைவரை போய் மீண்டவர்கள். அரசாங்கத்துக்கெதிரான சின்ன அசைவும் அவர்களுக்கு உடனடியாகத் தரக்கூடிய பரிசு பற்றித் தெளிந்தவர்கள். இதைவிடக் கேதீஸ் போல அண்மையில் மணமான ஒரு இளைஞனுக்கு வாழ்க்க தந்திருக்ககூடிய சுகமான புதிய பொறுப்புகள் பற்றிய அக்கறையும் இருந்திருக்கும். அவன் மீண்டும் ஒரு வன்முறைக்கிளர்ச்சியை நோக்கிப் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு. அப்படி சாத்தியக்கூறுகள் குறைந்த ஒருவன் அந்த ஆபத்தான பாதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று ஒரு விவாதத்துக்கு வைத்துக்கொண்டோமென்றால், அவன் எந்தளவுக்கு தூண்டப்பட்டிருப்பான் என்கிற கேள்வி வரும். அந்த தூண்டலுக்கான காரணம் என்ன அல்லது யார் என்கிற கேள்விகள் வரும். ’கார்த்திகைப் பூவோடு நின்று படம்போடும் கொழுப்பு’ எப்படி வந்தது என்ற கேள்வி வரும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களிலிருந்து பிரபாகரனை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டே இலங்கை அரசு தான் சொன்னபடி தமிழ்மக்களுக்கான எந்தவொரு அடிப்படை உரிமையயும் கொடுக்கவில்லை என்பதோடு, இருந்த உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கிறது என்கிற தெளிவான முடிவுக்குத்தான் வரமுடியும்.

இல்லாவிட்டால் செய்திஊடகங்கள் சொல்கிறபடி கேதீஸ் ஒரு சூழல் பாதுகாப்புப் போராளி என்றே வைத்துக்கொள்வோம். கேதீஸ் மணற்தலைப் பகுதியில் நடக்கிற சட்டபூர்வமற்ற மணல் வியாபாரம் பற்றி அம்பலப்படுத்தியிருக்கிறான் வெறும் Face Book படங்களின் மூலம். இதற்காக கேதீஸ் கொல்லப்பட்டதாக வைத்துக்கொண்டால், இந்தக் கொலையயும் ‘போரின் பக்க விளைவு’ என்று சொல்கிற அறிவுசீவிகளைப் பார்த்து நான் சொல்லிக்கொள்வது ‘just go and fuck yourselves'. மணல் அள்ளப்படுதலும் கடல் உள்ளேறலும் இனப்பிரச்சினை அல்ல நண்பர்களே... அது ஒரு தேசத்தின் பிரச்சினை. தன்னை சிறிலங்காவின் பெருமைமிகு பிள்ளை என்று சொல்லிக்கொள்கிற இலங்கைப்பிரசைகள்கூட கவனிக்கவேண்டிய பிரச்சினை. வடமராட்சி கிழக்கில் வாழ்கிற சனங்கள் கால காலமாக அனுபவிக்கிற பெரிய பிரச்சினை. தமிழீழம் என்கிற கோரிக்கையை ஆதரிக்கிறவர்களுஞ்சரி, எதிர்க்கிறவர்களுஞ்சரி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டிய பிரச்சினை. சுனாமியின் பின் அழுகிமிதந்துவந்த பிணங்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போன மக்களின் வாழ்வு சம்பந்தமான பிரச்சினை. அந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்ந்த குற்றத்துக்காகத்தான் கேதீஸ்வரன் கொல்லப்பட்டான் எனில், நண்பர்களே கேளுங்கள், நாளைக்கே ஆயுதங்கள் தவிர்த்து யாவுமே செயலிழந்து போகும் அந்த நாட்டில்.

இரண்டாவது கொலை சதீஸ் அண்ணாவுடையது. இந்த சதீசும் எங்களின் பாடசாலையிலேயே படித்தவர். சதீசை ஞாபகத்தில் வைத்திருக்கப் பெரிய காரணம் சதீசின் பென்னாம்பெரிய உடல்வாகு. விளையாட்டுப்போட்டிகளில் சதீசின் அணிநடை பிரபலம். Left-Right என்று அவர் நடக்கும்போது பின்னிருந்து பார்த்து அவரது புட்டத்துத் தசைகளின் அசைவை நாங்கள் கிண்டல் செய்வதுண்டு. பின்னர் அணிநடையை எங்களுக்குப் பழக்குகிறேன் என்று சொல்லி இவர் கொன்றை மரத்தின் கீழ்வைத்து அதே கொன்றை மரத்துக் கம்புகளால் அடித்தும் இருக்கிறார். அடித்ததும் வருகிற கோபம் ‘லெப்பைலெப்’ என்ரு சொல்லி இவர் எங்களுக்குப் புட்டத்தைக்காட்டியபடி அணிநடை செய்துகாட்டும்போது போய்விடும். இவர், பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து ‘இனம்தெரியாதோரால்’ சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காலையில் இந்தக் கொலை நடந்து, மதியம்வரை சடலம் வீதியிலேயே கிடந்ததாக ‘யாழ்’ இணையத்தில் படித்தேன்.

சதீஸ் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குக்குப் பொறுப்பாளராக இருந்ததாகவும், சில நாட்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்பால் விமர்சனங்களை இவர் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. யாழ் இணையத்தளத்தில் இவர் ‘கொல்லப்பட்ட பொற்பதிப் பொதுமகன்’ ஒருவரின் குடும்பத்துக்கு கொலையாளிகளை அடையாளம் காட்டுவேன் என்று உறுதியளித்ததாகவும் அதன்காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் ‘ஆத்தியடி குத்தி’ எனப்படும் ஒரு நபரைப் பற்றியும் சொல்கிறார்கள். கேதீஸ் கொலைபோலவே சதீஸ் கொலைக்கும் சரியான(??!!) காரணங்கள் யாருக்குமே தெரியவில்லையாம். கொலைக்கு என்ன ‘சரியான காரணங்கள்’ இருக்கமுடியும். யாழ் இணையத்தளத்தில் ஒருவர் தெரிவித்திருந்தது போலவே ‘வேட்டை நாயொன்று செத்தது’ என்று சும்மா போவதும் சாத்தியமில்லை. ஒன்றையும் பெரிதாக நாங்கள் பிடுங்கிவிடப்போவதில்லை என்றபோதிலும் ஆகக்குறைந்தது இந்தக்கொலைகள் தொடர்பில் எம்மாலான பதிவுகளை விட்டுச்செல்லல் அவசியமாகிறது. கேதீஸ், சதீஸ் ஆகியோரின் அரசியல் பின்னணிகளைத் தாண்டி இரு இளைஞர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், அதுவும் யாரால், சொந்தச் சகோதரர்களால் என்கிற கோணத்தில் இதைப் பார்த்தாகவேண்டும். ’சகோதரப் படுகொலையாளி’ என்று பிரபாகரனைச் சுட்டிய அறிவுள்ளங்களே, தயவு செய்து இந்தக் கொலைகளை ‘போரின் பின் விளைவுகள்’ என்று நியாயப்படுத்தாதீர்கள். ‘இலக்கிய மாநாடு, ஒன்று கூடல், தமிழ் வளர்ப்பு’ என்றெல்லாம் குதிக்கும் கருத்தியல்களைக் கரைத்துக்குடித்து கொட்டாவி மட்டுமல்ல, குசுவும் விட்டு ஓய்ந்து போய்விட்ட புத்திமான்களே, இவை போரின் பக்கவிளைவுகள் என்றால், 70 களிலும் 80 களிலும் எங்கள் இளைஞர்கள் செய்தவை யாவுமே பல்லாண்டுகால அடக்குமுறை மற்றும் கையாலாகாத அரசியல் தலமைகளின் வயிற்றுப்போக்கு ஆகியவற்றின் பக்கவிளைவுகள்தாம்.

என்னுடைய சகோதரனை ஆயுதம் தூக்கி செத்துப்போ என்று சொல்கிற தார்மீக உரிமை எனக்கில்லை. ஆனால் அவன் படுகிற அவலங்களை மறைத்து அவன் சுபீட்சமாக இருக்கிறான் என்று பொய்சொல்கிற திறமையும் எனக்கில்லை. ‘இவங்கள் செய்யிற அநியாயங்களைப் பாத்துக்கொண்டு சும்மாயிருக்கேலுமோ?’ என்று அவன் கேட்கிற கேள்விக்கு மௌனித்துப்போகிறேன்.

பி.கு:
  1. கேதீஸ் கொல்லப்பட்டதன் பின்னான அரசியலைத் தவிர்த்து அவனது மரணச்செய்தியை எங்கள் பாடசாலை வட்டத்துக்குள் பகிராமல் பதுங்கியிருந்த கையாலாகாத்தனத்துக்கு வெட்கப்படுகிறேன். வெற்றிபெற்றவனை மட்டுமே உரிமை கோருகிறோம். 
  2. சதீஸ் கொலைய ‘ஒட்டுக்குழு உறுப்பினன் கொலை’ என்று மட்டும் பார்க்கிற மனோபாவத்தை வளர்த்துவிட்ட தலைமைகள், ஊடகங்கள் யாவரும் நாசமாய்ப் போகட்டும்.
 

3 comments:

மதுரை சரவணன் said...

கொலையின் வலியை உணர்த்துக்கிறது உங்கள் இடுகை...

கும்மாச்சி said...

மரணமே ஒரு சோகம், அதில் முகம் தெரிந்தவர்களின் அகால மரணம் ஒரு நெருஞ்சி முள்.

Jana said...

தங்கள் ஒவ்வொருவரிகளின் வலியும் இங்கே அனைவருக்குள்ளும்.