Wednesday 23 September 2009

துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-2

பகுதி-1 இங்கே.

நான் முதல் முதல் வாங்கிய அடி, வாழ்நாளில் மறக்க முடியாத அடி, சொல்வது எழுதுதல் வைத்து நான் விட்ட பிழைக்கு வைத்தியநாதக் குருக்கள் அடித்த அடிதான். அதைப் பற்றி ஒரு முழுப் பதிவே இருக்கிறது. வாசித்துப் பாருங்கள். அதன் பிறகு ஐந்தாம் வகுப்பில் பாடசாலைக் கதவை மூடுவதாக நடித்துவிட்டு, கதவுச் சாவியை மாலியக்கா வீட்டில் கொடுத்துவிட்டு பாடசாலை மைதானத்தில் கால்பந்து விளையாடினோம். மாலியக்கா கண்டுவிட்டார். அடியெண்டால் அப்பிடி ஒரு அடி. ஆறோ ஏழு பெரிய நுணாக் கம்புகள் சிதம்பச் சிதம்ப மாலியக்கா அடிச்ச அடி ஒரு நாளும் மறக்காது. 'நீங்கள் கேட்டிட்டு விளையாடி இருக்கலாம்.. எல்லாரையும் பேக்காட்டி விளையாடலாம் எண்டு நினைச்சியள், அதுக்குத்தான் இது அதுக்குத்தான் இது' என்று சொல்லிச் சொல்லி அடித்தார்.

அதே போல தாமோதரா காலத்தில் மறக்க முடியாத இன்னொரு சம்பவம் நான் சாயினிக்கு அடித்தது. எல்லோரும் தமிழ்ப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கம் முன்னுக்குப் போய் வாசியுங்கோ என்று சொல்லிவிட்டு ஆறுமுகம் வாத்தியார் போய்விட்டார். சாயினி இரண்டாவது பக்கத்துக்குள்ளும் நுழைய, பொடியள் ஏத்திவிட காலில் சின்னதாக ஒரு அடி. சாயினி விழுந்து போனார். அப்போது மன்னிப்புக் கேட்கவில்லை. சமீபத்தில் facebookல் கேட்டேன். அப்படி ஒன்று நடந்ததே ஞாபகம் இல்லை என்கிறார் அவர். (அந்த நேரம் இந்தப் பிள்ளைக்கு நல்ல ஞாபக சக்தி. இப்ப எல்லாத்தையும் மறந்துட்டுது).

ஆரம்பப் பாடசாலைக் காலத்திலேயே தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி தங்கவேல் ஒருமுறை சாத்தினார். ஆறு மணிக்கு ரியூசன் முடிய வலு வேகமாக ஓடிப்போன நான் ஏதோ ஒரு பஞ்சு மூட்டையில் மோதித்தான் நின்றேன். யாரோ கையில் பிடித்து சுழலச் சுழல பிரம்பால் அடித்தார்கள். கையை விட்டதும் நேரே வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். பக்கத்து வீட்டு முரளி அண்ணாதான் சொன்னார், நான் மோதியது தங்கவேலுவின் பெரிய வயிற்றில் என்றும், அடித்தது தங்கவேலு என்றும். அடுத்த நாள் ரியூசனுக்குப் போக வெட்கமாய் இருந்தது.

ஆறாம் வகுப்பில ஹாட்லியில சேர்ந்த நாள் தொடக்கம்தான் என்னுடைய பள்ளி வாழ்க்கை மேலும் சுவாரஷ்யமானது. முதல் நாளிலேயே தொடங்கிவிட்டது அட்டூழியம். அப்பா கொண்டுபோய் பள்ளிக் கூடத்தில் விட, எங்கே எப்பிடிப் போவது என்று தெரியாமல் தடுமாறினேன். ஒரு மனிதர், எளிமையானவர், வெள்ளைக் கால்சட்டை மேல்சட்டை போட்ட ஒரு மெல்லியவர், என்னை தாமோதரம் தொகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்த பல மாணவர்களில் ஒருவரிடம் 'உங்களையுன் உந்தப் பீயோனோ கொண்டுவந்து விட்டவர்' என்றேன் என்னை அழைத்து வந்த அந்த நபரைக் காட்டி. ஓம் அவர்தான் என்றார் அந்த மாணவரும். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு உப அதிபர் குணசீலன் வந்து ஒரு அறிமுக உரை ஆற்றிவிட்டு, இப்போது அதிபர் நடராசா அவர்கள் பேசுவார் என்றார். பேச வந்தது யார் தெரியுமா?? ‘அந்த பீயோன்'.. அடடா, அதிபரைப் போய் குமாஸ்தாவாக நினைத்து விட்டோமே என்று வெட்கமாய்ப் போய்விட்டது.

அன்றைக்கே பின்னேரம் பாடசாலை முடிகிற நேரத்தில் மூர்த்தி அண்ணையின் வானைத் தேடின போது அவர் பக்கத்தில் இருக்கும் மெதடிஸ்ட் பெண்கள் பாடசாலையில் வானை நிறுத்தி இருப்பது தெரிந்தது. (S.B. என்று எங்களுக்காக பாடசாலைச் சேவை ஓடிய சத்திய மூர்த்தி அண்ணையை மறக்க முடியுமா?) அங்கே போக வெளிக்கிட, வேட்டி கட்டிய, கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்கும் ஒருவர் போக வேண்டாம் என்றார். அப்படி இருந்தும் ஒரு சிலர் ஓட, நான் கத்தினேன் ‘அண்ணை அண்ணை, அங்க பாருங்கோ அவை பெண்கள் பள்ளிக் கூடத்துக்கு ஓடுகினம்' என்று. நான் சின்னப் பொடியன் என்பதாலும், அந்த வேட்டி கட்டிய ஆளுக்குப் பக்கத்தில் ஒரு பிரிஃபெக்ட் அண்ணை நின்றதாலும், நான் கத்தியது ஒருத்தருக்கும் கேட்கவில்லை. அப்பாவிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லி ‘அந்த காலேலாத பீயோன் அண்ணைகூட ஆக்களை ஒழுங்கு படுத்திறார். அப்ப அந்தப் பள்ளிக்கூடம் சரியான டிசிப்பிளின்தான்' என்றேன். அப்பா சிரித்துவிட்டுச் சொன்னார், 'அவர் பீயோனில்ல, அவரும் அங்க படிப்பிக்கிற மாஸ்டர்தான்' என்று. எனக்கு முதலில் விளங்கவில்லை. அடுத்த நாள் வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்க வந்தார் அந்த மனிதர். அவர்தான் ஈசப்பா என்ற ஈஸ்வரநாதன் சேர்.

இப்படி முதல் நாளே வலு லூசுத்தனமாகத் தொடங்கிய என்னுடைய ஹாட்லி வாழ்க்கை மூன்று நாட்களில் தடைப்பட்டது. ஆமி யாழ்ப்பாணம் முழுக்கப் பிடித்து, தென்மராட்சியிலிருந்து வடமராட்சி நோக்கி வருவதாகச் சொல்லி 12 மணிக்கு பள்ளிக்கூடம் மூடப்பட்டு, மூன்று மாதங்களின் பின் திறக்கப்பட்டது. அதன் பின் பால்குடி சொன்னது போல், நீண்ட நேரம் வரிசையாக உடற்சோதனை எல்லாம் முடித்துத்தான் பள்ளிக்கூடம் செல்வோம்.

கொஞ்சக் காலம் ‘ஏ' வகுப்பும், 'பி' வகுப்பும் ஒன்றாயிருந்து படித்தோம். அங்கே வந்த முதல் பிறந்த நாள் பற்றி தவராசா சேர் பொடியளிடம் சொல்ல எல்லோருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தேன். அந்த நாளில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அது பற்றி ஒரு பதிவு இட்டேன். விரும்பினால் வாசியுங்கள்.
ஆறாம் வகுப்பில் சித்திரக் கொப்பி கொண்டு போகாமல் விட்டதுக்காக சற்குணராசா சேர் அடித்த அடி இன்றும் ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் வலிக்கிறது.

அதன் பின், ஏழாம் வகுப்பில் மெதடிஸ்ட் பக்கம் இருந்த ஒரு தொகுதியில் படித்த போது, மெதடிஸ்ட் சங்கீத ஆசிரியை மங்களம் ரீச்சர் மற்றும் திருமதி. சிவராசா செய்த ஒரு கீழ்த்தரமான முறையீட்டால், தவராசா சேரிடம் S.B வானில் பள்ளிக்கூடம் வரும் எல்லோருடனும் சேர்ந்து அடிவாங்கிய ஞாபகம் மறக்காது. மங்களம் ரீச்சரை நான் ஒரு மனிதப் பிறவியாகவே பார்ப்பதில்லை. அந்த வான் எப்படி கிழங்கு அடுக்குவது போல் மாணவர்களை அடுக்கும் என்பது பற்றி எந்தச் சொரணையும் இல்லாமல், மாணவர்களின் கால்சட்டை நுனி அவரின் உடம்பில் பட்டாலே குடையால் அடிப்பார் மங்களம் ரீச்சர். அதே விகார மனநிலையில் அவர் செய்த முறைப்பாட்டை மறக்கவே மாட்டேன். (அந்த ஒரு காரணத்துக்காகவே மங்களம் ரீச்சர் எங்களின் வெடிவால் காலத்தில் பட்ட பாட்டை மறக்க மாட்டார்).

பாடசாலைக் காலத்தில் எங்களின் அட்டகாசம் தொடங்கியது 9ம் வகுப்புக்குப் பிறகுதான். அதுவரை எட்டாம் வகுப்பில் மகியோடும், அரவிந்தனோடும் கோபம் அப்படி இப்படி என்று சில்லறைத் தனமாக இருந்தேன். இருந்தேன் என்ன, எல்லாருமே இருந்தோம். எட்டாம் வகுப்பு இறுதியில் தொடங்கி, ஒன்பதாம் வகுப்பில்தான் விஸ்வரூபம் எடுத்தோம் நாங்கள். அது பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்... சந்திப்போம்

7 comments:

வந்தியத்தேவன் said...

//ஆறாம் வகுப்பில் சித்திரக் கொப்பி கொண்டு போகாமல் விட்டதுக்காக சற்குணராசா சேர் அடித்த அடி இன்றும் ஞாபகம் இருக்கிறது. இன்றைக்கும் வலிக்கிறது. //

உந்த மனிசனட்டை அடிவாங்காதவர்கள் ஹாட்லியில் இல்லையென்றுதான் நினைக்கின்றேன். அண்மையில் ஆளை பழைய மாணவர்கள் ஒன்றுகூடலில் சந்தித்தபோது சிலபொடியள் ஆளைச் சந்திக்கப் பயப்பிட்டார்கள். எல்லாம் பழைய பயம் தான். ஆனால் நாங்கள் இவருக்கு வல்லிபுரக்கோவிலில் வைத்துச் செய்த விடயம் இண்டைக்கும் சிரிப்புத்தான் போங்கோ.

vasu balaji said...

ரொம்ப இன்ரெஸ்டிங்கா இருந்திருக்கு பள்ளிப் பருவம். பிரமாதம்.

Anonymous said...

வணக்கம் கீத்,

ஏன் ஆறுமுகம் சேரிடம் வாங்கிய அடியை எழுதாமல் விட்டுவிட்டீர்கள்.
நல்ல நினைவலைகள், தெடரட்டும் உங்கள் பயணம், வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன் ஈழப்பிரியன்.

Unknown said...

வந்தியண்ணா...
சொன்னா நம்பமாட்டியள், நான் வாங்கின அடியளிலையே உந்தாளின்ர அடிமாதிரி ஒண்டுமே நோகாது, அப்பிடி அடிக்கும். ஆனா வேற சில விசயங்களுக்கு நல்ல மனிசன்.... அந்த வல்லிபுரக்கோவில் அனுபவத்தைப் பகிரலாமே!!!

Unknown said...

இன்னும் இருக்கு பாலா

Unknown said...

ஈழப்பிரியன்..
ஆறுமுகத்தார் அடி அடி எண்டு அடிச்சவர்தான். சில வாத்திமார் அடிச்சாலும் அடிக்காட்டிலும் மனதுக்குப் பிடிச்சுப் போவார்கள். ஆனா ஆறுமுகத்தார் அடிக்காமல் இருந்திருந்தால்கூட ஆளை எனக்குப் பிடிச்சிராது

பால்குடி said...

சற்குணராசா வாத்தியாரிடம் அடி வாங்கி அழுதவர்களில் நானும் ஒருத்தன்