Saturday 9 January 2010

இந்த வார உலகம்: ஜனவரி 03-ஜனவரி 09, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பரவட்டும் பரவட்டும் ஒளிவெள்ளம். ஒரு வார இடைவெளிவிட்டு மீண்டும் இதோ என்னுடைய வாராந்திரத் தொகுப்பு, நண்பன் ‘வடலூரான்' கலையரசன் என்றைக்கோ சொன்ன புதிய தலைப்புடன்.

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.


செய்திகள்-பிறந்தகம்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற குழப்பம் (அல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்ற பேரம்) கடைசியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தீர்ந்திருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு எடுக்கிற முடிவுகள் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பனவாக இல்லாமல் இருக்கிற காரணத்தால், அவர் இன்னொரு முறை ஜனாதிபதியாக வர அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது என்றும், இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகவுக்கு தமிழ் மக்கள் யாவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய வரியாக கருதக்கூடியது, ‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன'. அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நாக்கைப் புரட்டிப் பேசுவார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம் இங்கே. (முஸ்லிம்களை மட்டும் தொப்பி பிரட்டிகள் என்று இலகுவாக முத்திரை குத்திவிட முடிகிறது நம்மால். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை?)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார். அவரது பூதவுடல் வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் A9 நெடுஞ்சாலையூடாக வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இராணுவக் காவலில் இயற்கை மரணம் எய்தினார் என இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது (??!!).

செய்திகள்-புகுந்தகம்
வருகிற ஜனவரி 25ம் திகதி தொடங்கவேண்டிய கனேடியப் பாராளுமன்ற அமர்வை மார்ச் 3ம் திகதிவரை பின்தள்ளி வைக்க பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. பெப்ரவரி 12-28 வரை நடக்க இருக்கிற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற அமர்வைத் தள்ளிவைக்க இருப்பதாக ஹார்ப்பர் சொல்லும் காரணத்தை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்திருக்கிறன. அதிலும் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் சர்வநிச்சயமாக குறிப்பிட்ட திகதிகளில் மன்றில் இருப்போம், தங்கள் வேலையைச் செய்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆஃப்கானியக் கைதிகளைத் துன்புறுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளின் சூட்டை இன்னும் குறைப்பதற்கே ஹார்ப்பர் முயல்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறன.

இதே வேளை பொதுமக்களும் பாராளுமன்றம் பிற்போடப்படுவதை ஆதரிக்கவில்லை. Facebook, twitter போன்ற சமூக வலையமைப்புகளில் மக்களின் எதிர்ப்புக்குரல் வலுவாகப் பதியப்பட்டுள்ளது. வழமையாக வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களை வேலைக்குக் கொண்டுவர back to work legislation கொண்டுவருவார்கள் ஆள்பவர்கள். இனி மக்கள் பொங்கி ஆள்பவர்களை வேலைக்கு இழுத்துவரவேண்டி இருக்கும் போல் இருக்கிறது நிலைமை.

செய்திகள்-உலகம்
உமர் அப்துல்முதலப்பின் வாக்குமூலத்தின் பின்னர் யேமன் நாட்டுக்கு பிரச்சினை முற்றி இருக்கிறது. அல்-கய்தா தன்னைப் போல் பலரை மூளைச் சலவை செய்து யேமன் நாட்டில் வைத்து அமெரிக்காவுக்கு எதிராக தயார் செய்து வருகிறது எனற உமரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தீவிரவாதத்துக்கு எதிரான பயிற்சிகளை யேமன் நாட்டின் படைகள் மேற்கொண்டு வருகின்றன. யேமன் நாட்டின் புவிச்சூழல் ஆஃப்கானிஸ்தானைவிட அல்-கய்தாவுக்குப் பாதுக்காப்பானதாக இருப்பதால் இலகுவில் அங்கே இருக்கிற தீவிரவாதிகளை அழித்துவிட முடியும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. அல்-கெய்தாவிடமும், ஏகாதிபத்தியங்களிடமும் கேட்க நினைக்கும் கேள்வி இவைதான்:
  1. முஸ்லிம்களுக்கு உலகமே சேர்ந்து அநீதி விளைவித்துவிட்டதாகச் சொல்லி நீங்கள் எடுக்கிற முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கும் ஏன் குர்-ஆன் என்ற புனித நூலுக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்?
  2. உங்கள் இருதரப்புக்குமான முட்டல் மோதலில், எங்கோ ஒரு மூலையில் பிறந்து, வளர்ந்து, கொஞ்சம் மேலான வாழ்க்கை தேடி வெளிநாடுகளுக்கு வருகிற அப்பாவிகள் ஏன் சாகவேண்டும்?


வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீள்வது பற்றிய நம்பிக்கைகள்மீது இன்னொரு இடி விழுந்திருக்கிறது. கனடாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் சென்ற மாதத்துக்கான வேலையின்மை பற்றிய புள்ளிவிபரங்கள் நம்பிக்கையூட்டுவதாய் இல்லை. கனேடியப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைப்படி டிசம்பர் மாதம் 2600 பேர் வேலையிழந்தார்கள். 20,000 பேர் வேலை பெற்றார்கள். நவம்பரில் திடீரென 79,000 பேர் வேலை பெற்றபோது கிடைத்த நம்பிக்கை இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. இருந்தபோதும் வேலையின்மைச் சுட்டெண் 8.5ல் மாறிலியாகவே இருந்திருக்கிறது.

இப்படியாகப் பொருளாதாரம் மீள்வதற்குப் பலர் போராடிக்கொண்டிருக்க, வங்கிக் கடன்களைச் சுருட்டிக்கொண்டு வங்குரோத்துக்குப் போவது, விபத்துக்களை செயற்கையாக உருவாக்கி காப்புறுதி நிறுவனங்களை அறுப்பது, கள்ளக் கடனட்டைகள் என்று ஒரு கூட்டமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

விளையாட்டு
அங்கோலாவில் நடைபெற இருக்கிறா ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்ள அங்கோலா சென்ற ரோகோ நாட்டுக் காலபந்தாட்ட அணி பயணம் செய்த பஸ்மீது இனம் தெரியாத ஆயுத தாரிகள் மேற்கொண்ட தாக்குதல் இந்த வாரம் விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 'எங்களை நாய்களைப் போல சுட்டார்கள்' என்று ரோகோ வீரர் தோமஸ் டொசாவி கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. தனியே விளையாட்டு வீரர்கள் மீது நடந்த தாக்குதலாக மட்டும் இதை நோக்காமல், மனித குலம் அழிவுப் பாதையில் விரைவாகச் சென்றுகொண்டிருப்பது தொடர்பான எச்சரிக்கையாக இதைக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட இனங்கள் துப்பாக்கி தூக்காவிட்டால் அழிக்கப்பட்ட இனங்களாகிவிடும் அபாயம் இருக்கிறபோதும், துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதற்கு சமீபத்தில் நாங்கள் பார்த்த உதாரணம், இலங்கைப் பிரச்சினை.

இதே வேளை இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கிற கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிகளுக்கும் இந்தத் தாக்குதல் ஒரு அச்சுறுத்தலே. தென்னாபிரிக்கா அருமையாகப் போட்டிகளை நடாத்தக்கூடிய ஒரு நாடு. அங்கே நடக்க இருக்கிற மிகப்பெரிய போட்டித்தொடர் 2010 கால்பந்தாட்ட உலகக் கோப்பை. அது தென்னாபிரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆபிரிக்காவுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. பார்க்கலாம்.

சினிமா-பொழுதுபோக்கு-பிற..
சரத்குமாரின் ‘ஜக்குபாய்' படம் வெளிவர முன்னரே திருட்டு வி.சி.டி. யில் உலகம் பூராவும் வெளிவந்து தமிழ்த் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரையுலகம் அதிர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு ஒழுங்கு இருக்கிறதல்லவா, அது அப்படியே நடந்தது. திரையுலக ஜாம்பவான்கள் கூடிக் கூட்டம் போட்டுத் திட்டித் தீர்த்தார்கள். சரத்தும், ராதிகாவும் மேடையில் கண்கலங்கினார்கள். முதல்வர் கருணாநிதியை நோக்கி ஜம்பவான்கள் படையெடுத்தார்கள். மனுக் கொடுத்தார்கள். ‘மனு'நீதிச் சோழன் உடனே முடிவெடுத்தார். இனிமேல் திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள், விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் என்று அறிவித்தாயிற்று.

எல்லாம் சரிதான், திரையுலகுக்கு உள்ளே நடக்கும் மோசடிகளுக்கெல்லாம் எந்தச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? உதவி இயக்குனர்கள், துணை நடிகர்கள், நடிகைகள், முன்னணி நடிகைகள், தொழில்நுட்பவியலாளர்கள் தொடக்கம் எத்தனையோ பேரைப் பயங்கரமாக சுரண்டிக் கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார்கள் இவர்கள். அப்படிச் சுரண்டப்படுபவர்கள்தான் இவர்களைத் திருட்டு வி.சி.டி. வடிவில் சுரண்டுகிறார்களோ என்பது என் ஐயம்.

11 comments:

வடலியூரான் said...

//மனு'நீதிச் சோழன் உடனே முடிவெடுத்தார்.
சூப்பர் கீத்...

பால்குடி said...

//ஒடுக்கப்பட்ட இனங்கள் துப்பாக்கி தூக்காவிட்டால் அழிக்கப்பட்ட இனங்களாகிவிடும் அபாயம் இருக்கிறபோதும், துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதற்கு சமீபத்தில் நாங்கள் பார்த்த உதாரணம், இலங்கைப் பிரச்சினை.

உண்மைதான். ஒடுக்கப்பட்ட இனம் துப்பாக்கி தூக்குவதிலுள்ள நியாயங்களை மற்றைய இனங்கள் புரிந்து கொள்வதுமில்லை.
துப்பாக்கி எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது என்பதை ஒடுக்கப்பட்ட இனங்களும் உணர்ந்து கொள்ளப் போவதுமில்லை.
'சின்னப் பிள்ளைகளின் கைகளில் துப்பாக்கிகளைக் கொடுத்து சுடு என்று சொல்வதற்கு எங்களுக்கு என்ன ஆசையா? அவர்களைக் காப்பதற்கு வேறு வழியில்லாமல்தான் இதனைச் செய்கிறோம்’ என்ற மணிரத்தினத்தின் படத்துக்காக சுஜாதா எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

Anonymous said...

அப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவெடுத்திருக்க வேண்டும் என்கின்றீர்கள் ? மஹிந்தவுக்கா?

Unknown said...

///ஒடுக்கப்பட்ட இனங்களும் உணர்ந்து கொள்ளப் போவதுமில்லை///
ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு உணர்ந்துகொள்ள சந்தர்ப்பங்கள் வாய்ப்பதில்லையோ??? ஆயுதம் தாங்காத விளையாட்டு வீரர்களைச் சுடும் கலாசாரம் கண்டிக்கத்தக்கது

Unknown said...

///அப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவெடுத்திருக்க வேண்டும் என்கின்றீர்கள் ? மஹிந்தவுக்கா?///
அனானி..
என்னுடைய கருத்து, தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். பேயை ஆதரிப்பதா பிசாசை ஆதரிப்பதா என்று பேரம் பேசியிருக்கத் தேவையில்லை.

அடுத்தது முஸ்லிம் மக்களின் நலன் பற்றி திடீரென்று இவர்கள் எடுக்கும் அக்கறை சிரிப்பாக இருக்கிறது.

Unknown said...

நன்றி வடலியூரான்

Unknown said...

'மனு'நீதிச் சோழனுக்கு பாராட்டுவிழாவாம் http://thatstamil.oneindia.in/movies/specials/2010/01/film-industry-felicitate-karunanidh.html

தர்ஷன் said...

//என்னுடைய கருத்து, தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். பேயை ஆதரிப்பதா பிசாசை ஆதரிப்பதா என்று பேரம் பேசியிருக்கத் தேவையில்லை.//

தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏதேனும் பலன் இருக்கும் என நினைக்கிறீர்களா? கிருத்திகன் ஏதோ விதத்தில் இது ஆட்சி மாற்றத்திற்கு பலனளிக்கும் என்றால் முடிவை நான் வரவேற்கிறேன்.
வாக்குகள் பெருவாரியாக மகிந்தவுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் தமிழரின் அபிலாஷைகள் உலகறியவும் வாய்ப்புண்டு.

Unknown said...

///தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏதேனும் பலன் இருக்கும் என நினைக்கிறீர்களா? கிருத்திகன் ஏதோ விதத்தில் இது ஆட்சி மாற்றத்திற்கு பலனளிக்கும் என்றால் முடிவை நான் வரவேற்கிறேன்.///

தர்ஷன்
ஆட்சி மாற்றத்தின் தேவை கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்றால், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்றதும் அவருக்கான ஆதரவை வெளியிட்டிருக்கலாம். எதற்காக மகிந்த பகுதியோடும், சரத் பகுதியோடும் பேரம் பேசினார்கள்???? இதுதான் என் கேள்வி. இப்படிப் பேரம் பேசுவதற்குப் பதில் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம்

Unknown said...

தர்ஷன்...
பொன்சேகாவுக்கு ஆதரவளித்துத் தமிழகள் வாக்களித்து அவர் வென்றால் எங்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பார்களா என்பதும் சந்தேகமே!!

Anonymous said...

தமிழ் மக்களின் அரசியலில் தலைமை அற்ற வெற்றிடம் உருவாகியுள்ளது. அதனால் அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மக்களை வழிகாட்டும் தார்மிக உரிமை போய், மக்கள் செல்லும் வழியிலேயே தாமும் செல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டது. இல்லாவிடின் இந்தியாவின் அழுத்தத்தினை மீறி கூட்டமைப்பு இவ்வாறான முடிவை எடுத்திருக்க முடியாது. நாம் மக்கள் கருத்தை மதிக்கவேண்டும் ௨௦௦5 ல் அது நடநிருந்தால் இந்த துன்பங்கள் இவ்வளவுக்கு அரங்க்கேரியிருக்காது