Saturday 29 August 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு

முன்கதை
‘இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள்' கூகிள் குழுமத்தில் உதித்த இந்தத் தொடர் விளையாட்டுக்கான கருவை, மு. மயூரன் ஆரம்பித்து வைத்தார். மு. மயூரன் வந்தி அண்ணாவை அழைக்கும்போதே நினைத்தேன், அடுத்தது என்னிடம் இது வரும் என்று. பாடசாலைக் காலங்களில் அஞ்சல் ஓட்டத்தில் இயலுமான பங்களிப்பு (தனிய ஓட ஏலாது) செய்த காரணத்தால், இதையும் ஒரு அஞ்சல் ஓட்டமாக நினைத்து மேலே கொண்டு செல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. வலையில் நான் பதிய வந்தது ஒன்றும் பெரிய கதையும் அல்ல, அது பற்றிச் சொல்லப்போகும் நான் நல்ல கதை சொல்லியும் அல்ல. ஆனால் முடிந்தவரை சுவையாகச் சொல்கிறேன். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தியத்தேவா)

விதிமுறைகள்
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும். (தடித்த எழுத்தில் இருப்பதை மயூரன் அண்ணா, வந்தி அண்ணா இருவரும் கவனிக்கவும், உங்கள் பதிவுகளில் மூவருக்கும் என்று இருக்கிறது)

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

என் கதை
நான் கல்வி மற்றும் தொழில் ஆகிய இரு துறைகளைத் தவிர வேறு ஏதாவது ஒரு துறையில் கட்டாயம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். கனடாவிற்கு கல்வி அனுமதிப் பத்திரம் மட்டும் பெற்று வேறொருவர் காசில் படிக்கும்போது என்னுடைய பெறுபேறுகளை உச்சத்தில் வைத்திருக்கவும், பொருளாதார ரீதியில் கொஞ்சமாவது மேம்படவும் போராடவேண்டிய கட்டாயம். நாடுவிட்டு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஏற்படும் கலாச்சார அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து கொஞ்சம் வதைத்த காலம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வரும். சில சமயங்களில் என்ன செய்கிறேன் என்று தெரியாதளவுக்கு ஒரு கோபம் வரும். தலையை உடைத்து எறிந்துவிடு என்கிற அளவுக்கு தலை வலிக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிப் பார்த்து கடைசியாக நான் நாடியது, மருத்துவர் லம்போதரனை.

சில விசயங்களை மனம் விட்டுப் பேசியபோது, மனச் சோர்வு அல்லது மனப் பிறழ்வுக்குரிய அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார். அது பேரதிர்ச்சி. அவர் சொன்னபடி வேறு விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடிக்கடி நூலகங்களில் போய் கண்ணில் கண்ட புத்தகங்களை வாசித்தேன். முகம் தெரியாதவர்கள் நடத்தும் நடன, இசைக் கச்சேரிகளில் ஒரு ஓரத்தில் போய் குந்தி இருப்பேன். இந்த இயல், இசை எதிலுமே நான் தேர்ந்தவனல்லன். ஆக, என் அடிமன அழுக்குகளை அவைமூலம் வெளியேற்ற முடியாது. பாடசாலைக் காலங்களில் ஆங்கில தினப் போட்டிகளில் creative writing ல் 4முறை இரண்டாவதாகவும் 2 முறை மூன்றாவதாகவும் வந்திருக்கிறேன். ஆக, நான் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. 3 வருடமாக விட்டுப் போயிருந்த டயரி எழுதும் பழக்கத்தைத் திரும்ப ஆரம்பித்தேன்.

என்னை வலையுலகுக்கு இழுத்து வந்த பிதாமகர், அண்ணா ஆதிரை அவர்கள். அடிக்கடி Face Bookல் தன்னுடைய பதிவுகளுக்கு இணைப்புக் கொடுப்பார். அவரது 'அழாதே நண்பா' 'அப்போது வெட்கித் தலைகுனிந்து நிற்பீர்கள்' ஆகிய பதிவுகள் தான் என்னை வலைப்பூவில் கொஞ்சம் உன்மத்தம் கொண்டு எழுத வைத்தது. அதுவரை ‘கிருத்திகனின் கிறுக்கல்கள்' என்றிருந்த என் வலைப்பூ ‘மெய் சொல்லப் போறேன்' என்று மாறியது. ஆரம்பகாலப் பதிவுகள் பல எனக்கே பிடிப்பதில்லை. வாசகர்களை என் வலைக்கு அழைக்கும் சூட்சுமமும் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள் மட்டுமே பின்னூட்டம் இட்டார்கள். சூட்சுமம் புரிய வைத்தது என்னுடைய ‘அவள்+அவன்= அது' என்கிற ஒரு பதிவில் ‘தமிழர்ஸ்' நிர்வாகிகள் போட்ட ஒரு பின்னூட்டம் மூலமாக.

முதன் முதலில் என்னுடைய நூல் என்ற சிறுகதை (???!!!) முயற்சியைத்தான் அதிக திரட்டிகளில் இணைத்தேன். என்னை யார் வாசித்தார்களோ, யார் பின்னூட்டம் போட்டார்களோ அவர்களிற்குத் தீனிபோடும் விதத்தில் எழுதிய நான் இந்த மாதம் எழுதிய ‘நான் பார்த்த இலங்கை' தொடரின் முதல் பகுதியில் இரு வேறு வாசகர்களுக்கு இரு வேறு வடிவங்கள் என்று ஒரு ஆபாசத்தைச் (அப்போது ஆபாசமாகத் தெரியவில்லை) செய்ததன் காரணமாக, சில படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, இப்போது கொஞ்சம் திருத்தமாக எழுதி வருகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் முடியாத நிலையில் 141 பதிவுகள் (இதோடு சேர்த்து) போட்டுவிட்டாலும், இன்னும் நான் பதிவுலகில் ‘பாலர் வகுப்பு' தான். ஆக, பெரியவர்கள் என்னையும் கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அனுபவங்கள்-தட்டச்சு
நான் தமிழை தட்டச்சத் தொடங்கியதே Unicode முறையில்தான். இலங்கையில் அப்பாவின் ‘தட்டச்சுக் கருவியில்' பார்த்துப் பார்த்துக் குத்தியபின் இப்போதுதான் தமிழ் தட்டச்சினேன். முதலில் higopi என்ற தளத்தில் தட்டச்சி, படியெடுத்து ஒட்டிய எனக்கு, ஞானியின் திண்ணை வலையில் NHM Writer அறிமுகமாகி, Phonetic முறையில்தான் தட்டச்சி வருகிறேன்.

இந்த முறைக்கு எதிரான பலமான கருத்துக்கள் இருந்து வருகின்றன. என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரிந்தவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் எந்தத் தீங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 'ammaa' எனபது 'அம்மா' என்று வராமல் ‘சும்மா' என்று வருமாறு யாராவது அமைத்தால் நாங்கள் அப்படியே தட்டச்சிக் கொண்டு போவோமா? இல்லைத்தானே? ‘அ' எங்கே இருக்கிறது என்று தேடி அடிப்போம். கிட்டத்தட்ட எல்லாவிதமான தட்டச்சு முறைகள் (தமிழ் 99, பாமினி) பயன்படுத்துவோரும் இந்த விசையை அழுத்தினால் இந்தத் தமிழ் எழுத்து வரும் என்றுதான் மூளையில் பதித்திருப்பார்கள். இந்த முறையில் வேகம் கூட, இந்த முறையில் வேகம் குறைய என்று வாதாடலாமே ஒழிய, இந்த முறை தமிழை அழிக்கும், இது வளர்க்கும் என்று வாதாடுவது எல்லாம் ‘என் முறை சரி, உன் முறை பிழை' என்று நிரூபிக்க முயலும் சராசரி மனித இயல்பாகவே எனக்குப் படுகிறது.

வசந்தன் தன்னுடைய பதிவில் சொன்னது போல், எதிர்காலச் சந்ததி தட்டச்சித் தமிழ் படிக்கும்போது, இதில் எந்த முறையையும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அதுவும் அவர்களுக்கு தமிழ் எழுத்துருக்கள் முழுமையாகத் தெரியாமல், phonetic என்றொரு முறை இருப்பதையே சொல்லிக் கொடுக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தமிழை எழுத்துருக்களை முழுமையாகச் சொல்லிக் கொடுத்து அதன் பின் எப்படி வேண்டுமானாலும் தட்டச்ச விடலாம். அல்லது தமிழ் எழுத்துருக்களை சரியாக அறிமுகம் செய்து அவை பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம். மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும். எதிர்காலச் சந்ததிக்குத் தமிழ் கற்பிப்பதில் இவை எதுவுமே உதவி செய்யப்போவதில்லை. (இது ஒரு சிறுவனின் கருத்து. குத்திக் கிழிக்காதீர்கள். நித்திரைவிட்டு எழும்பி மனம் சஞ்சலம் இல்லாத நிலையில் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நான் சொல்வதிலும் நியாயம் இருப்பது புரியும்)

அனுபவங்கள்- மற்றவை
  • சுயம் இல்லாமல் எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன். சில சொற்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தியிருக்கிறேன். என்ன அந்தச் சர்ச்சை மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்த நண்பர்களின் (யாரைச் சொல்கிறேன் என்று தெரியும்) நட்பு வலுப் பெற்றது. புது வழிகாட்டிகள் கிடைத்தார்கள். சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மூத்தவருக்கு நன்றி.
  • சமீபத்தில் இன்னொரு பதிவில் நான் விட்ட பிழைகள் பற்றி 'பெட்டை' சில படிப்பினைகளைத் தந்திருக்கிறார். அந்தப் பிழைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்து எழுதுவேன் என இந்தப் பதிவுமூலம் உறுதியளிக்கிறேன். ஆக, 'பெட்டை'க்கும் நன்றி.
  • முகம் தெரியாத நட்புகள், வயதெல்லையின்றிய நட்புகள் என்று பலநட்புகளை இந்த தந்திருக்கும், என் மன ஓட்டங்களுக்கு வடிகாலாக இருக்கும் வலையுலகுக்கும் நன்றி.
என்னுடைய அழைப்புகள்
  1. ஆதிரை- பதிவுலகத்தில் என்னுடைய பிதாமகர். மூத்த அண்ணன். ஆளை அடிக்கடி மாட்டி விடலாம், எதையும் சமாளிப்பார். அதனால் இதையும் சமாளிப்பார் என்றே நம்புகிறேன்
  2. பால்குடி- நெருக்கமான தோழன். இன்னொரு இடிதாங்கி. கூடுதல் தகவல்கள்- பள்ளிநாட்களில் பல மேடைகள் கண்டவர். பலரை விழுந்து விழுந்து சிரிக்கவும், சில சமயம் கண்களைத் துடைக்கவும் வைத்தவர். ஆள் மிருதங்கம் நல்லா வாசிப்பார் என்று தெரியும். பாடசாலைக் காலத்தில் சித்திரம் படித்ததாக ஞாபகம். இவர்கள் ஊருடனான கிரிக்கெட் போட்டிகளில் குத்துக்கட்டை போட்டு எங்களை வீழ்த்தி சாபத்தைச் சம்பாதித்தவர்.
  3. அருண்மொழிவர்மன்- வலையுலகு தந்த இன்னொரு இனிய நட்பு. 12 மணிக்குக்கூட தொ(ல்)லை பேசினாலும் சிரித்தபடி கதைப்பவர். நேற்றுத்தான் இவரை நேரில் சந்தித்த
  4. சாயினி- கனகாலம் இவா எழுதேல்லை. ஆளை மாட்டி விடவேணும் என்ற நல்ல எண்ணம்தான். ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையிலும், 8ம் வகுப்பு வரை ரியூசனிலும், ஒன்றாகப் படித்தா. இலங்கையில் இருந்து எழுதிய முதல் தமிழ்ப் பெண் பதிவர் என்று சயந்தன் சொல்லுவார். (எல்லாப் புகழும் சயந்தனுக்கே).

21 comments:

மு. மயூரன் said...

வாழ்த்துக்கள் கிருத்திகன்.

இன்று காலையில் தான் உங்களது "நூல் வெளியீட்டு விழா அனுபவங்கள்" தொடர்பான பதிவை நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொண்டேன்.

உங்களுக்குப் பின்னூட்டங்கள் எல்லோரும் எல்லா வேளைகளிலும் போடுவார்கள் என்றில்லை. அதை வைத்து வாசகர்களை அடைகிறீர்களா என்பதை எடை போடாதீர்கள். நல்ல எழுத்து நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தைப்பெறும்.

பரபரப்பு / ஆபாச/ பொது ஆர்வங்கள் தொடர்பான பதிவுகள், மேலோட்டமான பதிவுகள் பல வாசகர்க்ளைச் சம்பாதிக்கலாம்.
ஆனால் நேர்மையான, அக்கறையான, அழமான சிந்தனையும் எழுத்தும் கொஞ்சப்பேரானாலும் பல அழுத்தமான வாசகர்களை, நண்பர்களை உங்களுக்கு தேடித்தரும்.

தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதிரை said...

நன்றிகள் கீத்...

பெருமை கொள்கின்றேன். காரணம் புரிந்திருக்கும்.

மீண்டும் நன்றிகள். மிக விரைவில் பதிவிடுவேன்

Unknown said...

மு. மயூரன்.... உண்மைதான். இயலுமான அளவுக்கு அழுத்தமாகப் பதிய முயல்கிறேன். உடனடியாகத் திருந்தமுடியாது..படிப்படியாகக் கற்கிறேன்

Unknown said...

புரிகிறது ஆதிரை அண்ணா... இப்போது ‘அஞ்சல்' உங்கள் கையில்... ஓடிப் போய் அடுத்தவருக்குக் கொடுங்கள்..

vasu balaji said...

பாராட்டுக்கள் கிருத்திகன்.

Unknown said...

நன்றி பாலா

வந்தியத்தேவன் said...

கீத் எங்கள் கல்லூரிக்கே உரிய நேரம் தவறாமை போல் நீயும் உடனே என் விளையாட்டை விளையாடிவிட்டார் நன்றிகள். எனக்குத் தெரியும் யாருக்கு அழைப்பு விடுத்தால் எங்கே எங்கே போகும் என. சாயினியும் வடமராட்சியா?

கீத்தின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த விளையாட்டுப் பதிவுகள் தான், அடுத்ததாக சில பேசாப் பொருள்களைத் துணிச்சலாகப் பேசத்துணிந்தது. இன்னும் நிறைய எழுத இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள்.

Unknown said...

வந்தி அண்ணா....
///எங்கள் கல்லூரிக்கே உரிய நேரம் தவறாமை போல் நீயும் உடனே என் விளையாட்டை விளையாடிவிட்டார் ///
அட.. அங்கிருந்துதான் வந்ததா நேரம் தவறாமை எங்களிடம்...

அடுத்தது சாயினியும் வடமராட்சிதான்.. அவ என்னோட ஆண்டு 5 வரை படிச்சவ. ஆண்டு 6ம், ஆண்டு 7ல 2 தவணையும் வன்னியில் படித்ததாக ஞாபகப் படுத்தினா. அந்தச் சின்ன வயதில அடிக்கடி வீட்டில ‘அவனுக்கு எத்தினை மாக்ஸ், இவனுக்கு எத்தினை மாக்ஸ்' எண்டு கேட்பினம் எல்லோ... அப்ப கேட்கப்பட்ட ஒரே ஒரு ‘அவள்' இவதான்....

அருண்மொழிவர்மன் said...

நன்றிகள் கீத்.

நாளை அல்லது அதற்கு மறுதினம் பதிவிட்டு விடுவேன்,

நன்றிகள்

Jeya-S said...

இதற்கு நான் பின்னூட்டம் இடலாமோ எனக்கு தெரியவில்லை காரணம் இது பதிவர்களுக்கு உரிய பதிவு என்று நினைக்குறேன்.. ஆனாலும் உங்களை வாழ்த்தி செல்கிறேன்..

உங்கள் பதிவுகளில் அநேகமானவை நியமாக என்னனை கவர்ந்தது காரணம் கடந்த
காலங்களில் உங்களுக்கு நடந்தவை ,& எனது மனதில் தோன்றிய சில வலிகள் பற்றி நீங்கள் பதிவிடுவது ..தொடருங்கள் உங்கள் பணியை

பால்குடி said...

கீத், என்னை அழைத்தமைக்கு முதலில் நன்றிகள். விரைவில் என்னுடைய பதிவை எதிர்பார்க்கலாம்.
என்னைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே எழுதியிருக்கிறீர்.
// பல மேடைகள் கண்டவர்
ஊரூராகப் போய் திருவிழாவில இசைக்குழு பாக்கிறதை இப்பிடியோ நக்கலடிக்க வேணும்.
அந்தக் கிரிக்கட்டை நீர் இன்னும் மறக்கேல்லையோ?

Unknown said...

பால்குடி... உங்களை நான் நக்கல் அடிப்பேனா..... (நம்பிட்டீங்க தானே)

Unknown said...

நன்றி ஜெயா.... இது பதிவர்களுக்கான பதிவு மட்டுமல்ல..

வசந்தன்(Vasanthan) said...

தம்பி,
உமக்கான பதிலொன்று இடுகையாக்கப்பட்டுள்ளது.

வசந்தன் பக்கம்: ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்

Unknown said...

வசந்தன் அண்ணா
உங்கடை இடுகையில பதில் போட்டிருக்கிறன்... ஆரோக்கியமான ஒரு கற்கைக்கு வழி இருக்கிறது... நேரம் இருக்கும்போது தொடருங்கள்

Nimal said...

வாழ்த்துகள் கிருத்திகன்....!

Unknown said...

நன்றி நிமல்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நல்லாயிருக்கு உங்கள் அனுபவம். நானும் எழுதோணும். என்னையும் வந்து கூப்பிட்டிருக்கிறார். கெதியா எழுதவேணும்.

Unknown said...

எழுதுங்கோ மது... எழுதுங்கோ

சினேகிதி said...

நல்லாயிருக்கு கதை.டொக்டர் போன்றவர்களின் உண்மையான பெயர்களைப் பாவிக்கிறதை நிப்பாட்டும். அது உமக்கும் நல்லது எல்லாருக்கும் நல்லது.

Unknown said...

உண்மையான பெயர்களில் என்ன சிக்கல்.. அதுவும் இந்தப் பதிவில்?? என்னவோ மூத்தவை நீங்கள் சொல்லிறதால எதிர்காலத்தில தவிர்க்கிறன்