Tuesday, 25 August 2009

நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 23-29 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
அரசியல்- இலங்கை

இலங்கை இராணுவத்தின் வீர சாகசம் குறித்தான சில காணொளிகளை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது தமிழ் இளைஞர்கள் சில பேரை கைகளையும், கால்களையும், வாயையும் கட்டி, பெரும்பாலானவர்களை நிர்வாணமாக்கி சுட்டுக் கொலை செய்கிறார்கள். அது சம்பந்தமான காணொளி பிரித்தானியாவின் சானல்-4 தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் காட்டப்பட்ட 9 உடலங்களில் 8 உடல்களில் துணி என்ற பெயருக்கே இடமில்லை. அவசர அவசரமாக இலங்கை இந்தக் காணொளியின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறது. சானல்-4 இக்காணொளி தமிழர்கள் அல்லாத இலங்கை ஊடகவியலாளர்களிடம் இந்தக் காணொளியைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறது. காணொளியை இணைத்திருக்கிறேன். (கொடூரமான காட்சிகள் நிறைந்த காணொளி. மென்மையான இதயம் கொண்டவர்களோ, குழந்தைகளோ இக்காணொளியைப் பார்க்க அனுமதிக்கவேண்டாம்)



விடுதலைப் புலிகளிடம் மீட்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் புதிதாக நீதிமன்றங்களைத் திறக்க இருப்பதாக நீதியமைச்சு அறிவித்திருக்கிறது. பலவருடங்களாக இந்த மாவட்டங்களில் அரசாங்க நீதிமன்றுகள் தொழிற்படவில்லை. புலிகளின் நீதிமன்றுகள் செயற்பட்டு வந்தன. (இலங்கைச் சோசலிசக் குடியரசின் சட்டக் கோவையின் மேம்பட்ட வடிவம் என்று புலிகளின் சட்டக் கோவைபற்றி எனது தந்தை குறிப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறேன்). இப்போது அங்கேயும் நீதிமன்றங்கள் திறக்கப் படப் போவது குறித்து மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்குக் காரணம் கீழே உள்ள செய்தி
பொலிஸ் நிலையத்தில் மறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஆடைக் கைத்தொழில்துறை அமைச்சர் மஹிந்த ரட்னதிலக தனது அடியாட்களோடு சென்று பலாத்காரமாக விடுவித்து அழைத்துச் சென்ற செய்திதான் அது. இரத்தினபுரியில் நடந்த இந்தச் சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றத்துக்காக மறியலில் வைக்கப் பட்டிருந்த ஒருவரையே இவ்வாறு அமைச்சர் மீட்டுச் சென்றிருக்கிறார். இப்படி மிக 'உன்னதமான' அரசியல் நிலவும் ஐக்கிய இலங்கையில் நீதியமைச்சு, நீதிமன்றம், நீதிதேவதை, சட்டக்கோவை போன்ற சொற்கள் மிக விரைவில் வழக்கொழிந்து போய்விடலாம். (நல்ல வேளை, சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை முடிவுகள் வரமுன் கனடா விசா கிடைத்து இங்கே வந்துவிட்டேன்)

அரசியல்-உலகம்

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பதற்றம் வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதேவேளை எல்லா நோயாளிகளையும் அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாததால் சிற்சில தனியார் மருத்துவமனைகளுக்கும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சையளிக்கும் அனுமதி வழங்கப் பட்டிருக்கும் செய்தி நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அல்லது பணம் பிடுங்கிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறதா அச்செய்தி என்றுமட்டும் கூற மறந்துவிட்டார்கள்.

கனடாவில் மிக விரைவில் இன்னொரு தேர்தல் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன் கூறியிருக்கிறார். பலவிடயங்களில் பிரதமஎ ஸ்டீஃபன் ஹார்ப்பரின் அரசு தவறிழைப்பதாகவும், அதனால் அவர்கள் மீதான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை தவறில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஹார்ப்பருடன் இன்று நடத்திய ஒரு மணித்தியால தனியான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். ஒரு முழுமையான ஆட்சிக்காலத்துக்குள் மூன்று தேர்தல்களைச் சந்திக்க கனேடிய மக்கள் எந்தளவு தயாராயிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதேவேளை கனேடியப் பிரஜையான சுவாட் ஹாஜி மொகமட் என்கிற பெண்மணியை கென்யாவிலிருந்து கனடாவுக்கு வரவிடாமல் ‘நீங்கள் கனேடியப் பிரஜை என்று நம்பமுடியவில்லை' என்ற காரணத்தைக் காட்டி ஆறுநாட்கள் தடுத்து வைத்திருந்த பிரச்சினையும் ஹார்ப்பர் அரசாங்கத்துக்கு சிக்கலாகிவிட்டது. கடைசியாக மரபணுப் பரிசோதனை மூலமே அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய சோமாலிய வம்சாவளியைக் காரணமாக வைத்துத் தனக்குக் கொடுமை இழைத்து விட்டதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் மீது $2.5 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர இருக்கிறார் அந்தப் பெண்மணி. காணொளி இங்கே.

ஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் குண்டு வெடிப்புகளோடு சேர்ந்து வந்திருக்கின்றன. தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ஹமீத் கர்ஸாய் அவரது பிரதான போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவைவிட சற்றே முன்னிலையில் இருக்கிறார் என்கிற செய்தியும் சில குண்டுவெடிப்புகளுமாக ஆஃப்கானிஸ்தான் அரசியல் நாறிப்போய்க் கிடக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற பெயரில் உலகப் பொலிஸ்காரன் அமெரிக்காவின் முட்டாள்தனமும், தலிபான்களின் பிடிவாதமும் சேர்ந்து அந்த மக்களைக் கிட்டத்தட்ட நிரந்தர அடிமைகளாக மாற்றிவிட்டன. உலகப் பொலிஸ்காரனின் கூத்தால் பல நாடுகளிலிருந்துமான துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தான் போய் அடிக்கடி செத்துக்கொண்டே இருக்கிறார்கள். புலிவாலைப் பிடித்த கதையாக அமெரிக்கா முழிக்கிறது.

பொருளாதாரம்

ஒன்ராறியோ மாநிலத்தில் Employment Insurance பெறுபவர்களின் எண்ணிக்கை போன வருடத்தை விட இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஜுன் 2008ல் 45, 080 பேர் EI பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது 95, 820 பேர் பெறுகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 113% ஆல் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முக்கியமாக தெற்கு ஒன்ராறியோவில் அதிகமாகக் காணப்படும் தொழிற்சாலைகளில் பலர் வேலையிழந்திருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப் படுகிறது.

தொழில் நுட்பம்
Smart Phone களின் முன்னோடியான RIM தற்போது Torch Mobile என்ற ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் Iris என்கிற Browser ஐ கைத் தொலைபேசி உலகில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த நிறுவனம் ஆகும். Iris Browser ஆனது Webkit என்ற Open Source Layoutன் அடிப்படையிலானது. ஆக மொத்தத்தில் இது RIM ன் Apple உடனான நேரடிப் போட்டியின் அடுத்தகட்டம் என்பது தெளிவாகியிருக்கிறது. முதன் முதலாக Black Berry Smart Phone களை அறிமுகம் செய்யும் போது தாங்கள் Internet Browsing பற்றிப் பெருமளவு கவலைப் படவில்லை என்றாலும், Appleன் i-Phone அந்த நிலமையை மாற்றிவிட்டதாக RIM ஒப்புக் கொள்கிறது. ஏற்கனவே மற்ற Smart Phone களிலுள்ள Browser களோடு ஒப்பிடும்போது Blackberry பின்தங்கி இருப்பதாகப் பலர் கருதும் நிலையில் RIM இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் Open Source உலகில் ஆழமாக வேரூன்றிவிட்ட Apple உடன் இவர்கள் எவ்வளவுகாலம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது காலப் போக்கில் தெரியவரும்.

விளையாட்டு

இங்கிலாந்து கடந்த முறை இழந்த ஆஷஸ் கிண்ணத்தை மறுபடி கைப்பற்றி இருக்கிறது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 197 ஓட்டங்களால் வெற்றி பெற்று இதைச் சாதித்திருக்கிறார்கள். ஓய்வு பெறும் அன்றூ ஃபிளிண்டோஃபுக்கு நல்ல பரிசு இது. அவுஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்குப் தள்ளப்பட்டிருக்கிறது . அணித்தலைவர் பொண்டிங்கை மாற்றுமாறு சிலரும், மாற்றத் தேவையில்லை என்று பலரும் கூறியிருக்கிறார்கள். கிரெக் சப்பல் போன்றவர்கள் பொண்டிங்குக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதரவாகவே இருக்கிறது.

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களின் Premier League போட்டிகளின் ஆரம்பக் கட்டங்களில் ஸ்பேர்ஸ் (Tottenham Hotspurs) மற்றும் செல்ஸீ அணிகள் முன்னணி வகிக்கின்றன. ஆர்சனல், மான்செஸ்டர் யுனைற்றற் அணிகளும் பெரியளவுக்கு பின் தள்ளப்படவில்லை. சென்ற வருடம் இரண்டாமிடம் பெற்ற லிவர்பூல் அணி 3 போட்டிகளின் பின்னர் 10வது இடத்தில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்கள்: ஸ்பேர்ஸ் (3-போட்டிகள், 9 புள்ளிகள்), செல்ஸீ (3-9), ஆர்சனல் (2-6), மான்செஸ்டர் யுனைற்றற் (3-6), மான்செஸ்டர் சிற்றி (2-6).

ஜமேக்காவின் உசேய்ன் போல்ட் செய்யும் சாதனைகளுக்கு யாராவது சட்டம் இயற்றி முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 100 மீற்றர் ஓட்டத்திலும், 200 மீற்றர் ஓட்டத்திலும் தனது முன்னைய முன்னைய உலக சாதனைகளை முறியடித்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். 100 மீற்றர் ஓட்டத்தில் தன்னுடைய முன்னைய சாதனையான 9.69 செக்கன்கள் என்ற இலக்கைத் தாண்டி 9.58 செக்கன்களில் ஓடி முடித்த போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் 19.19 செக்கன்களில் ஓடி தன்னுடைய சாதனையான 19.30 செக்கன்கள் என்ற சாதனையை இல்லாது செய்தார். ஜமேகாவில் பிறந்த இந்தத் தங்கமகன் இன்னும் எத்தனை சாதனைகள் செய்யப் போகிறாரோ?

11 comments:

vasu balaji said...

வயிறெரிகிறது. இத்தனையும் கண்டும் காணாமல் உலகம் கண் மூடிக் கிடக்கும். வழமைபோல் அருமையான பதிவு கிருத்திகன்.

கலையரசன் said...

நல்லாயிருக்கு கீத்..

கோவிலடிச்சங்கம் said...

நல்ல விசயங்கள் இருக்கு உங்க பதிவில. குறிப்பா எனக்கு பிடித்தது கிரிக்கெற் பதிவுகள்...
நீங்க குண்டு மயூரனின் மச்சான் தானே?

Unknown said...

பாலா...
இதை விட so called சர்வதேச சமூகத்துக்கு என்ன ஆதாரம் வேண்டுமோ தெரியவில்லை

இன்றைக்கு ஒரு நண்பரோடு உரையாடும்போது சொன்னார், அந்தக் காணொளி ஒரு செட்-அப் என்று இலங்கை அரசு பிரசாரம் செய்வதாக. நண்பர் சொன்ன தகவலை உறுதிப்படுத்த முடியாவிட்டால்கூட அவனுகள் அப்படிச் சொல்ல அதுக்கு ஆமாம் போட ஐ.நா முதல் ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. நாளைக்கே அந்தக் காணொளியை இயக்கி வெளியிட்டார் என்று யாராவது ஒரு தமிழ் இயக்குனருக்கு ஆப்பு வைத்தாலும் வைப்பார்கள்... பொல்லாத உலகமடா...

Unknown said...

நன்றி கலையரசன்

Unknown said...

கோவிலடிச்சங்கம்....
பாராட்டுக்கு நன்றி...அது சரி யாரந்தக் குண்டு மயூரன்??????????? lol..
என்னுடைய அப்பாவின் தமக்கைக்கு மயூரன் என்றொரு மகன் இருக்கிறார். அவரைத்தான் சொல்கிறீர்களா??

கோவிலடிச்சங்கம் said...

ஆமா.. அவர் தான். நாங்கள் ஒன்றாக கிரிக்கெற் விளையாடிருக்றோம். உங்களுடனும் விளையாடியதாக ஞாபகம். நினைவிற்கு வரவில்லை.

Unknown said...

பேரைச் சொல்லலாம்தானே கோவிலடிச் சங்கம்

கோவிலடிச்சங்கம் said...

என் பேரு இளந்தி.. இப்போ சுவீடன்ல குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

பால்குடி said...

எல்லாரும் சேர்ந்து தமிழர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்திட்டாங்கள்... முடிந்தளவுக்கு மீள முயற்சிப்போம்.

Unknown said...

பால்குடி... இப்பவும் ஒரு வீடியோ பாக்கிறன்... ரத்தம் கொதிச்சுட்டுது.. பதிவு போடுறன்