Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, 20 June 2010

வேருலகு (அ) முதுகு சொறிதல்

சம்மாட்டியார் வாய்களிலே
சதைகளை நாம் தீத்தி வைத்தோம்
முள்ளை மட்டும் நாங்களுண்டோம்
முதுகெலும்பு வளைத்துழைத்தோம்
கைகளிலே முள்ளுக்காயம்
காலையிலே பள்ளிக்கூடம்
கணக்கு வாத்தி கம்பெடுத்தால்
கண்ணீரிலும் வெடுக்கு நாறும்...

இந்த வார்த்தைகள் மெலிஞ்சி முத்தனுடையவை. அவர் எழுதிய கூத்தில் வருபவை. மட்டமான ஒலிப்பதிவு காரணமாக சரியாக விளங்கப்பட முடியாமல் அவரது வாயால் மீண்டும் சொல்லப்பட்டவை. அப்படியும் ‘கணக்கு வாத்தி கம்பெடுத்தால் கண்ணீரிலும் வெடுக்கு நாறும்’ என்கிற வரிகள் தவிர மற்றவை படியாமல் போக அவருக்கு மடல் அனுப்பிப் பெறப்பட்டவை. ‘வெள்ளாளச் செருக்கேறிய’ மனங்களைக் கொஞ்சம் குத்திப்பார்ப்பவை. இதற்கு முன் சிலாகித்த வரிகள் பலவற்றை ஒளிமங்கிப் போக வைத்தவை. இப்படியான வலிமிக்க வரிகளைத் தரக்கூடிய மெலிஞ்சிமுத்தன் என்கிற விஜயநாதன் இயூஜின் மசனெட்டின் நான்காவது நூல் (நான் வாசித்த முதல் நூல்), ‘வேருலகு’.

மெலிஞ்சி முத்தன்
மே.ப. நபர் 20.10.1975 யாழ் மாவட்டம் மெலிஞ்சி முனையில் (எங்கிருக்கிறது அந்த இடம்?) பிறந்தார். மெலிஞ்சியில் பிறந்த காரணத்தால் மெலிஞ்சி முத்தன் என்று பெயர் வந்ததா அல்லது ‘மெலிந்த உருவத்தில் முத்தல் கதைகள் பேசுவதால்’ வந்ததா என்பது பற்றிய ஆய்வுகள் எமக்குத் தேவையற்றவை. ‘சிதையும் என்னுள்’, ’என் தேசக் கரையோரம்’, ’முட்களின் இடுக்கில்’ என்று ஏலவே மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டபின் சமீபத்தில் கனடாவில் வெளிவிட்ட இவரது ’குறுநாவல்’தான் ‘வேருலகு’. (இதைக் குறுநாவல் என்று அழைப்பதை விட, ‘கனவுகளின் தொகுப்பு’ என்று அழைப்பதையே மெலிஞ்சி விரும்புவதாக இளங்கோ சொல்கிறார்). முதல் இரண்டு தொகுப்புகளும் ஈழத்திலும், மூன்றாவது தொகுப்பு பிரான்சிலும் வெளிவந்ததாகவும் அதே இளங்கோ சொல்லியிருக்கிறார். மெலிஞ்சி புழங்கும் வட்டத்துக்குள் நான் புதிது என்பதாலும், இளங்கோ அந்த வட்டத்தில் ஒரு... ஒரு.... என்ன சொல்லலாம், மூத்த அங்கத்தவர் என்பதாலும் மெலிஞ்சி பற்றிய சில தகவல்களை இளங்கோவிடமிருந்து உருவுவதென்பது இலகுவானதும், நம்பகமானதாயுமிருக்கிறது. மெலிஞ்சி முத்தனின் ’வேருலகு’ (உயிர்மை வெளியீடு) பற்றிய என்னுடைய பகிர்வுகளே கீழே.

வேருலகு
வேருலகில் மெலிஞ்சி என்ன சொல்லியிருக்கிறார் என்கிற சுருக்கமெல்லாம் நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கப் போவதில்லை. இதை ஒரு திறனாய்வு என்றுகூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் திறனாய்வுசெய்வதற்கு நான் ஒன்றும் இலக்கியவாதி அல்ல. சாதாரண வாசகன். மெலிஞ்சியின் வேருலகில் சஞ்சரிக்கிற சில பாத்திரங்கள், கனவுகள் போல் நடந்த சம்பவங்களைப் பற்றியே பார்க்கப்போகிறோம். புத்தகத்தை வாங்கி வாசிப்பதன் மூலமே மெலிஞ்சி முத்தன் என்கிற படைப்பாளியின் வீரியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பரிஸ் விமான நிலையத்திலிருந்து ஸ்பெயினூடாக மெக்சிக்கோ போகிற நோக்கத்துடன் வருகிற, கடற்கரை வீதி, கெட்டில், யாழ்ப்பாணம், இலங்கை என்ற முகவரியுடைய சூசை மரியதாசனின் பயணத்தில் ஏற்படுகிற இடர்களுடன் ஆரம்பிக்கிறது வேருலகு. இங்கேயே ஒரு வாசகன் (ஈழத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் பட்சத்தில்) கனவுகளின் தொகுப்போடு ஒன்ற ஆரம்பிக்கிறான். காரணம், ஈழத்தில் இருந்து இப்படி எத்தனையோ சூசை மரியதாசன்கள் பெயர்ந்திருக்கிறார்கள். அதுவும் ஐரோப்பிய நாடுகளில் ‘கறுப்பாடுகளாக’ப் பிடிக்கப்படுகிற சூசை மரியதாசன்களுக்கு நடத்தப்படுகிற விதத்தை ‘அனுபவப்பட்டவர்கள்’ சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அங்கேயா இங்கேயா’ என்று தெரியாத நிலை, பணத்துக்கான அல்லாட்டம், இன்னொருவரின் வதிவிட அட்டையில் (அடையாளம் தொலைத்து) வேலை செய்வது, பசி, அகதிக் கோரிக்கை வழக்குகள், அவற்றின் தோல்விகள், கள்ளமாக அடுத்த நாட்டுக்குப் பயணம், ஒதுக்கித் தள்ள நினைக்கிற சொந்தங்கள், கைகொடுக்கிற மூன்றாமவன் எனப் பலவிடயங்கள் நேரடி அனுபவமாகவும், நண்பர்களின் கதைகளாயும் ஏற்கனவே மனதின் முக்கால்வாசி இடத்தை அடைத்து இருந்த காரணத்தால் ஒரு கட்டத்தில் அந்த சூசை மரியதாசனாக இந்த வாசகனும் மாறிப்போகிறான். கதைக்களம் அரிப்புத்துறைக்கு மாறும்போதும் கதைசொல்லியுடன் வாசகனை ஓரளவுக்காவது பொருந்திப்போக வைத்திருக்கிறார் மெலிஞ்சி.

இத்தனைக்கும் அரிப்புத்துறை என்றொரு ஊர் இலங்கையில் இருக்கிறதா என்று இணையத்தில் தேடிப்பார்க்குமளவுக்குத்தான் என் சந்ததியில் இலங்கையின் நிலப் பிரதேசம் பற்றிய அறிவு இருக்கிறது. விக்கிபீடியா சொல்கிற தகவல் சரியாக இருப்பின் மேற்படி அரிப்புத்துறை என்பது மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் இருக்கிற ஒரு ஊர். நானாட்டான் என்ற இன்னொரு பிரதேச செயலர் பிரிவு இந்த முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு வடக்கே இருக்கிறதாம். அந்தப் பிரிவில் நானாட்டான் என்ற பெயருடைய ஊரும் இருக்கிறதாம். மெலிஞ்சியின் வேருலகிலும் இந்த நானாட்டான் வருகிறது. ஆகவே விக்கிபீடியா சொல்லும் அரிப்புத்துறையும் மெலிஞ்சி சொல்கிற அரிப்புத்துறையும் ஒன்றாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கிறது. கதை விரிகிற பிரதேசம் உண்மையா அல்லது புனைவா என்றே தெரியாத, அந்தப் பிரதேச வழக்குகள், வாழ்வியல் பற்றி எதுவும் அறியாத ஒரு வாசகனை கதைக்குள் இழுத்துவைத்திருப்பதுதான் மெலிஞ்சியின் முன் இருந்த பெரும் சவாலாக நான் கருதுகிறேன். சம்மனசு, உலுவிந்தம் பழம் போன்ற சொற்களால் மெலின்ஞ்சியின் எழுத்திலிருந்து அந்நியப்பட்டுப்போகாமல் என்னை ஈர்த்து வைத்திருந்தது அவரது கதாபாத்திரங்களும், அவரது கனவுகளுமே. மெலிஞ்சியின் வார்த்தைகளில் சொல்வதானால் அரிப்புத்துறை அவரது கனவுகளை இறக்கிவைப்பதற்குப் பொருத்தமாயிருந்த ஒரு நிலம் மட்டுமே. மற்றபடி எந்த ஒரு ஊரையோ, குழுவையோ தனிப்பட்ட மனிதனையோ அவர் சுட்டவில்லை அல்லது சுட்ட விரும்பவில்லை. ஊர்காவற் துறை தொட்டு அரிப்புத்துறைவரை மெலிஞ்சி கண்ட ஈழத்து வாழ்க்கையின் ஒரு சில படிமங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார்.

மெலிஞ்சி சொல்கிற பொன்னுக் கிழவி என்னைப் பாதித்தாள். அவளது பனங்கூடல் கொட்டில் பாதித்தது. எனக்கு எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பனங்கூடல் கடந்து இன்னொரு பனங்காணிக்குள் கொட்டில் போட்டு, பின்னர் குடிசையாக்கிக் குடியிருந்த நடுவிலம்மா வந்து போனார். நடுவிலம்மாவுக்கு சந்தியாகுக் கிழவர் போல புருசன் இருந்ததாக ஞாபகமில்லை. ஆனால் ஆடுகள் கொஞ்சம் வளர்த்ததாக ஞாபகம். ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய்க்காக அக்காக்களின் பாவாடைகளுக்குள் ஒளித்த ஞாபகம் இருக்கிறது. பொன்னுக்கிழவிக்குப் பூச்சியாடு மாதிரி, நடுவிலம்மாவுக்கு அவரது மகள். நடுவிலம்மாவின் அந்தக் காணியும், கிணறும், குடிலும் மறக்கவே மறக்காது. கல்வீடுகளிலிருந்து கொஞ்சம் தனியனாக இருந்த வீடு அது. நடுவிலம்மா செத்த பிறகொருகாலத்தில், எனக்குப் பதினொரு வயதிருக்கும்போது பிள்ளையார் கோவில் திருவிழாவின் இடையில் துரைராசர் படிப்பிக்க வந்ததும், அவர் போன பின் கோபமாக அம்மாவுடன் அடம்பிடித்து மறுபடி கோவிலில் அப்பாவிடம் கொண்டுபோய் விடக் கேட்டதும், போகிற வழியில் நடுவிலம்மாவின் குடில் கடந்தபோது எதையோ ஓங்கி அடிப்பது போல் கேட்ட நடுவிலம்மாவின் மருமகனின் முக்கல் ஒலிக்கும், ‘விடுங்கோப்பா நோகுது’ என்று நடுவிலம்மாவின் மகளின் முனகலுக்கும் காலம் கடந்து அர்த்தம் தெரிந்ததும், முதலில் ‘ச்சேய்’ என்றதும் பிறகு அவர்களின் ‘சுதந்திரம்’ கண்டு வியந்ததும், அந்த கூட அந்தப் பனங்கூடல் குடில் மீதான ஈர்ப்புக்கான ஒரு காரணமாய் இருக்கலாமோ என்னவோ. நடுவிலம்மா தவிர்த்து ஆடுகளுடனும், மாடுகளுடனும் ஏன் மிளகாய்ச் செடிகளுடனும் பேசுகிற எத்தனையோ கிழவிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களின் முகங்களையெல்லாம் பொன்னுக்கிழவியுடன் பொருத்திப்பார்க்க முயன்றது ஒரு புதுவித அனுபவம்.

மெலிஞ்சியின் வேருலகப் பாத்திரங்களில் இன்னொன்று சசியக்கா. இவள் கண்மணி மாமியின் மகள். கண்மணி மாமி குடும்பத்துடன் சில புரட்சிக்கார இளைஞர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். அவர்களில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் ‘சேமலையண்ணன்’ என்கிற பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறான். அந்த இளைஞர்களுக்கு கால்களில் சிரங்கு இருக்கிறது. “கண்மணி மாமி வீட்டில் சசியக்காவுக்கே முதலில் சிரங்கு தொற்றிக்கொண்டது” என்கிற ஒரு வசனத்திலேயே சேமலைக்கும் சசிக்கும் காதல் என்பதை ஊகிக்ககூடியதாய் இருந்தும் அவர்கள் நெருங்கியிருக்கும் காட்சிகள் சில பற்றி மெலிஞ்சி விவரிக்கும்போது கொஞ்சம் ஆயாசமாயிருக்கிறது. அதுவும் அவர்களின் முத்தக் காட்சி பற்றிய வர்ணனையெல்லாம் எதற்கு என்று எண்ணும்போது “அன்றைய இரவு நான் கண்ட கனவு வித்தியாசமாய் இருந்தது” என்று சொல்லி அதன்பின் மெலிஞ்சி சொல்கிற சில விஷயங்கள் சிலருக்கு ஜீரணிக்க முடியாதவையாய் இருக்கலாம். அப்படி ஜீரணிக்க முடியாதவர்களும் மெலிஞ்சி சொல்கிற அந்த அனுபவங்களை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணத்தில் கடந்திருப்பார்கள் என்றே சொல்லலாம்.

ஆட்டுத்திருடன் சிமியோன், அவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, அதன் பின்விளைவுகள், கண்மணி மாமியின் காணாமல் போன உள்பாவாடை, சிப்பாயின் தலையை வெட்டி வேலிமட்டையில் கொழுவும் உலுந்தை, கக்கா இருக்கும்போது பாம்புகளை வரந்த, பாம்பு கடித்துச் செத்துப்போன அத்தாம்புள்ள, அல்லி பற்றிய அமானுஷ்யக் கதைகள், கண்மணி மாமியின் இளைய மகள் சின்னன், சீத்தைத் துணிக்காடு, பூச்சியாடு.................................................. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் ஈழத்துத் தமிழ்ப்படைப்பளி ஒருவனிடமிருந்து வந்திருக்ககூடிய ஒரு நல்ல படைப்புக்கு நான் செய்யக்கூடிய சிறிய மரியாதை, அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என்கிற சிபாரிசு மட்டுமே, மெலிஞ்சியின் புத்தகக் காசுகூட இன்னும் கொடுக்கவில்லை என்ற உறுத்தலுடன்.

*----*----*----*

என்னதான் வேருலகைச் சிலாகித்தாலும் மெலிஞ்சியின் அந்தக் கூத்து வரிகள் அந்த மெல்லிய பாம்பு மனிதனிடம் இன்னும் நிறைய இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அஜந்தனாய், காந்தனாய், பெயர்களே தெரியாத அந்தக் கற்கோவளத்து உதைபந்தாட்ட வீரர்களாய் மாறி மெலிஞ்சி யாழ்ப்பாணத்து வெள்ளாளச் செருக்கை எட்டி உதைக்கிறார்,

சம்மாட்டியார் வாய்களிலே
சதைகளை நாம் தீத்தி வைத்தோம்
முள்ளை மட்டும் நாங்களுண்டோம்
முதுகெலும்பு வளைத்துழைத்தோம்
கைகளிலே முள்ளுக்காயம்
காலையிலே பள்ளிக்கூடம்
கணக்கு வாத்தி கம்பெடுத்தால்
கண்ணீரிலும் வெடுக்கு நாறும்... என்கிற வரிகளூடாக.

பி.கு: சக மனிதனின் திறமைகளைச் சிலாகிப்பதுக்கு இன்னொரு பெயர் முதுகு சொறிதல் என்றால்..... நான் மெலிஞ்சிக்கு சொறிந்துதான் விட்டிருக்கிறேன்.

Saturday, 29 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-2

முதல் பாகத்தை இங்கே பாருங்கள்

நூல் வெளியீடு முடிந்ததும் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம் என்று அறிவித்தார்கள். வெளியீடு நடந்த இடம் 9:00 மணிவரை ஒதுக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்கள். அங்கே ஆரம்பித்தார்கள் பிரச்சினையை.

தில்லைநாதன் ஐயா கருணாகரன் மற்றும் அகிலனின் முழுமையான பக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாக ஆரம்பித்து, நடந்து முடிந்த கொடூர யுத்தம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலானது அல்ல என்கிற மாதிரியான ஒரு கருத்தாடலுக்குள் நுழைந்தார். நண்பன் ரபிக்காந்தின் பார்வையில் அது விடுதலைப் போராட்டத்தைச் சாடுவதாக அமைய ஆரம்பித்தது விவாதம். வன்முறைக் காலங்களில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று தில்லைநாதன் சொல்ல, வன்முறை செய்ததே சிங்கள மக்கள்தான் என்று ரபிக்காந்த வாதாட ஒன்றுகூடலின் ஆதார நோக்கத்தை விட்டு (புத்தக வெளியீடும் விமர்சனமும்) விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்கிற பக்கமாக கலந்துரையாடல் திசைதிரும்பியது. இடையில் திரும்பவும் புத்தக வெளியீடு பற்றிய கருத்துக்களைச் சொல்ல மூத்த படைப்பாளி ஒருவரை அழைத்தார்கள். (அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன்).

அவர் கௌசலா அக்காவின் மதிப்புரையில் நம்பிக்கையின்மையின் சுவடுகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையோடு சில விஷயங்களை அணுகும் வண்ணம் சுட்டிக்காட்டினார். கடவுள் நம்பிக்கை, பாவ புண்ணியம், வன்முறை இவற்றில் நம்பிக்கை இல்லை, ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றார். மிகவும் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம் மக்கள் பல இடங்களில் விரட்டி அடிக்கப்பட்டதைச் சொல்லிக்காட்டினார். அதன்பிறகு ஏனோ தெரியவில்லை கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறிப் போய்விட்டார். சொன்ன கருத்துகளில் வலிமை இருந்தாலும் அவரது அந்த நடவடிக்கை எனக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. உணர்வுபூர்வமான சிந்தனைகளைத் துறந்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க எங்களைத் (புதியவர்களை) தூண்டியிருக்க வேண்டிய அந்த மூத்தவர் அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாது.

அவர் வெளியேறியதும் திரும்பவும் ஈழப் போராட்டம் பற்றிய நியாய, அநியாயங்களுக்குள் நுழைந்தார்கள். நான் பொதுவாகவே ஈழப் போராட்டம் பற்றிய கருத்தாடல்களில் ஒதுங்கியிருப்பவன். காரணம், இலகுவில் முத்திரை குத்திவிடுவார்கள். குத்துவதோடு நின்றுவிடாமல் அடிக்கடி மாற்றி மாற்றி முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரைகள் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் விவாதம் சூடேற ஆரம்பித்தது. இன்றைக்கு மூன்று லட்சம் மக்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு இருப்பதற்கு யார் காரணம் என்கிற திசையில் விவாதம் திரும்பியது. திரும்பவும் தில்லைநாதனும், ரபிக்காந்தும் மோதிக் கொண்டார்கள். மூத்தவர் சிவப்பு சிந்தனையாளர் என்பது அவரது உரையிலும், பின்னர் அருண்மொழிவர்மனுடனான அலைபேசி+தொலைபேசி உரையாடலிலும் தெரியவந்தது. என்ன இது ஒரு புரிந்துணர்வு இல்லாத விவாதமாக, என் கருத்துத்தான் சரி என்கிற திசையில் போனபோது, செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்.

செல்வம் தன்னுடைய சிற்றுரையில், இவ்வாறாக ‘இவர்கள் சரி, அவர்கள் பிழை' என்று விரல் சுட்டுவது தவறென்றும், இன்றைக்கு மூன்று லட்சம் பேர் மந்தைகள் போல் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருப்பதற்கு, நாங்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொன்னார். அதற்கு கறுப்பி அவர்கள், அப்படிப் பொறுப்பேற்க முடியாது என்றும், ஆகக்குறைந்தது ஒரு சதவீதம் ஈழத் தமிழ் மக்களாவது போர் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார்கள் என்றும், அப்படியான மக்கள் இந்தத் துயரத்துக்கு பொறுப்பேற்க முடியாதென்றும் வாதிட்டார். அப்படியான குடும்பங்களில் ஒன்று தனது குடும்பமும் என்பதாகச் சொன்னார். அதற்குப் பதிலிறுத்தவர், ஜெயகரன் அண்ணா. அவரது பதிலின் சாராம்சம் இதுதான். (அவர் ஆரம்பகட்டங்களில் போராளிக் குழுக்களில் ஒன்றில் இருந்தவர் என்று யூகிக்கிறேன்)

‘இப்போது புலிச் சார்பு, புலி எதிர்ப்பு என்ற நிலைகளில் மட்டும் இருந்து வாதாடக் கூடாது. நான் கூட அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த நேரத்தில் அங்கிருந்து போராடி இருக்கவேண்டும். அதுதான் என் களமாக இருந்திருக்க வேண்டும். அதைவிடுத்து நான் புலம் பெயர்ந்து வந்ததையிட்டு வருந்துகிறேன். நீங்கள் போராட்டத்தை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கி இருந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டம் வளர ஆதரவளித்திருக்கிறீர்கள். அதாவது, அந்தப் போராட்டத்தில் தப்பிருந்திருந்தால் அதைச் சுட்டிக்காட்டிப் போராடி இருக்க வேண்டும். அதைவிடுத்து பேசாமல் இருந்துவிட்டு இப்போது மக்களின் அவலநிலைக்குப் பொறுப்பேற்காமல் ஒதுங்குவது என்பது சரியல்ல' என்பதாக ஜெயகரனின் பார்வை இருந்தது. சுய விமர்சனத்தின் அவசியத்தையும் ஜெயகரன் அண்ணா, சேனா அண்ணா, சேனா அண்ணாவுக்கு அருகில் இருந்த அந்தத் தாடிக்கார அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

உரையாடலின் நடுவே வந்திருந்த நண்பர்களின் பெயர்களையும் மின்மடல் முகவரிகளையும் சேகரித்தார்கள். இந்த விவாதம் கிட்டத்தட்ட இதே பாதையில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8:40 அளவில் முடிவுக்கு வந்தது. சேனா அண்ணா மற்றும் ஜெயக்குமாரி அக்கா ஆகியோருடன் சற்று நேரம் அளவளாவினோம். சேனா அண்ணா எங்கள் பாடசாலை மாணவர் என்று தெரியவந்தது. 84ம் வருடம் ஏ/எல் முடித்தவராம். ஆள் மொட்டை அடித்து வயதைக் குறைத்து நல்ல இளம் ஆள் மாதிரி இருந்தார். 9:00 மணியளவில் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். 10:30 தொடக்கம், 11:30 வரை அருண்மொழிவர்மன் அண்ணாவுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு, நூல் வெளியீட்டு விழா பற்றிய முதல் பதிவை எழுதிவிட்டுப் படுத்துறங்கிப் போனேன்.

சில எண்ணங்கள்
  • அகிலன் இந்தியாவுக்கு கள்ளமாகப் படகில் வந்தார் என்று சொல்லவந்து ‘கள்ளத் தோணி' என்ற சொல்லைப் பாவித்துவிட்டார்கள் நிகழ்ச்சி இணைப்பாளர்கள். அவர்கள் கொச்சையான அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்தச் சொல்லின் வலி பற்றி பெரியவர்கள் எடுத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது.
  • ‘மூன்று பெண்கள் முன்னின்று நடத்திய விழா' என்று குறிப்பிட்டது கொச்சையாக இருந்தது. ஏன் அவர்கள் முன்னின்று நடத்தியதில் என்ன அதிசயம் கண்டுவிட்டார்கள் இவர்கள்? அவ்வாறு குத்திக் குத்திப் பேசியதிலேயே தெரியவில்லையா எங்கள் சமூகத்தில் ‘பெண் விடுதலை' எந்தளவுக்கு இருக்கிறது என்று. 'விழா ஒருங்கமைப்பாளர்கள் நன்றாகத் செயற்பட்டார்கள்' என்ற கருத்தை ‘மூன்று பெண்கள் அழகாக விழாவை ஒழுங்கமைத்தார்கள்' என்ற வடிவில் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. பிரித்துக் காட்டியிருக்க வேண்டாம்.
  • வாதம் அடிக்கடி வேறுதிசைகளில் பயணித்த போது, யாராவது கொஞ்சம் கடுமையாக நெறிப்படுத்தி இருக்கலாம். ஆனால், வயதில் இளையவனான ரபிக்காந்தின் கருத்துக்களைப் பெரியவர்கள் எடுத்துக்கொண்ட விதத்துக்குத் தலை வணங்குகிறேன்.
  • சுயவிமர்சனம் இன்றைக்கு அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது பற்றிப் பேசவேண்டிய களம் இதுவா என்பதில் என்னிடம் தெளிவான கருத்து இல்லை. நடந்த கலந்துரையாடலை அதற்கெனவே தனியாகக் களம் அமைத்து நடத்தலாம் என்பது என் பணிவான வேண்டுகோள். நூல் வெளியீட்டு விழாவில் என்ன அவசியம் என்று தெரியவில்லை. ஒருவேளை கூடுவதற்கும் அது பற்றிப் பேசவும் வேறு சந்தர்ப்பம் கிட்டுமா என்ற சந்தேகத்தில் அவ்வாறு விவாதித்தார்களோ தெரியவில்லை.

Friday, 28 August 2009

ஒரு நூல் வெளியீட்டு விழா.. சில பாதிப்புகள்-1

வடலி வெளியீடுகளான கருணாகரனின் 'பலி ஆடு' கவிதைத் தொகுப்பும், த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' சிறுகதைத் தொகுப்பும் இன்றைக்கு (28/08/09, வெள்ளிக்கிழமை) ஸ்காபுறோ சிவிக் சென்ரரில் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவதில் என்னில் இருக்கக் கூடிய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழிகாட்டிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், சயந்தன் இந்த விழா பற்றி தனது வலைமனையில் எழுதியிருக்க, ‘அட, இங்கே போவதில் நான் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை' என்ற எண்ணம் மனதில் ஓட, மின்மடல் மூலம் நான் தொடர்பு கொண்டது சேனா அண்ணாவை. அவர் அந்த மின்மடலை தீபா அக்காவுக்கு அனுப்பி வைக்க, விழா பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்ததோடு நிச்சயம் இந்த விழாவுக்குப் போகவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

தீபா அக்கா மின் மடலில் 'ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள்' என்று கூறியிருந்தார். நானாகத் தேடிப் போகாமல், ‘நாளைக்குப் பின்னேரம் என்ன மச்சான் செய்யப் போகிறாய்' என்று தானாக வந்து மாட்டிய நண்பன் ரபிக்காந்தையும் இழுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்து 5:10க்கே வெளிக்கிட்டுப் போய்விட்டதால் ரபிக்காந்தையும் இழுத்துக்கொண்டு 5:55க்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம், நானும் என் மருமகனும். உள்ளே நுழையும்போது கொஞ்சம் தயக்கம். ‘வடலி....' என்று இழுக்க 'ஓமோம்' என்று ஆமோதித்து வரவேற்றார்கள். நாங்கள் மூவரும் சற்றுத் தள்ளியிருந்த பிளாஸ்ரிக் கதிரைகளை நாட, பெரிதாக இருந்த குஷன் கதிரைகளில் வந்து இருக்குமாறு அழைத்தார்கள். (குஷன் கதிரைகள் பெரியவர்களுக்கு என்று ஒதுங்கி இருக்க முயன்றேன்).

தீபா அக்கா, சேனா அண்ணா, மெலிஞ்சிமுத்தன் அண்ணா, தில்லைநாதன் ஐயா ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெயர்களுக்குரிய முகங்களைக் பொருத்தும் போது ஏற்படும் ஒரு சந்தோஷத் தருணம் அது. சில சம்பிரதாய பூர்வமான உரையாடல்களில் இருந்து பெண்ணியப் பக்கம் திசை திரும்பியபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ரபிக்காந்த் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டது என்று சொல்ல, கடுமையாக மறுத்தார்கள் சகோதரிகள். ரபிக்காந்த அடிக்கடி கனவுலகில் சஞ்சரிப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மெலிஞ்சிமுத்தன் 'ஆண்கள், பெண்கள், அரவாணிகள் ஆகிய மூன்று வகையிலானவர்களும் தங்களுக்கான அடையாளங்களை உதறிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பார்க்க வேண்டும்' என்கிற ஒரு கோணத்தில் பேசினார். அது சுலபத்தில் சாத்தியமன்று, ஆனால் சாத்தியமே இல்லாத ஒன்று அல்ல. (பெண்ணுரிமை விசயத்தில் நான் சகோதரிகள் கட்சி. இன்றுவரை அவர்களைப் எங்கள் தேவைகளுக்கேற்ப பாவிக்கிறோம் என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்)

இனி முக்கிய பகுதிக்கு வருவோம். இங்கே நான் பெரிய மன்னிப்புக் கோரவேண்டி உள்ளது. அதாவது, அங்கே சந்தித்தவர்களில் தன்யா மற்றும் சத்யா ஆகியோரின் முகங்களைப் பெயர்களுடன் சரியாகப் பொருத்தத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நிகழ்ச்சி ஆரம்பமாக முன்னரே புத்தகங்களை வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்கள். வாங்கிக் கொண்டு திரும்ப இருக்கைக்கு வந்தபோது அங்கே நின்றுகொண்டிருந்தார் வலையுலகு எனக்குத் தந்த இன்னொரு நண்பர் அருண்மொழிவர்மன் (முதல் சந்திப்பு). இருவரும் கைலாகு கொடுத்து பேசிக் கொள்ள ஆரம்பிக்கவும், புத்தகங்களை வெளியிடும் விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்து வைக்கவும் சரியாக இருந்தது. சிறிதாக அறிமுகவுரை வழங்கினார் ஒரு சகோதரி (சத்யாவா?, தன்யாவா?... முதலில் சொன்னது போல முகங்களை மறந்த எனக்கு மீண்டும் ஒரு குட்டு). அதன் பின் புத்தகங்கள் பற்றிய மதிப்புரைகள் இடம்பெற்றன.

முதலில் த. அகிலனின் மரணத்தின் வாசனை பற்றி ஜெயக்குமாரி அக்கா மதிப்புரை வழங்கினார்கள். இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. கதைகளை நான் இதுவரை வாசிக்காதபடியால், ஜெயா அக்காவின் மதிப்புரையை மதிப்பிட முடியாமல் போனது துரதிர்ஷடமே. அதே போல் கௌசலா அக்கா வழங்கிய கருணாகரனின் பலி ஆடு பற்றிய மதிப்புரைக்கும் அதே கதிதான். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இருவருமே தவறாமல் செய்தார்கள். அது என்னவென்றால், இந்த நூல்களை கட்டாயம் வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்கள். ஜெயக்குமாரி அக்கா சாதாரணமான உரையாடல் தமிழிலும், கௌசலா அக்கா கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட தமிழிலும் செய்த மதிப்புரைகளை, என் போன்ற வியாபார எழுத்துக்களை வாசித்துப் பழகிய வாசகனாலும் கிரகிக்க முடிந்தது சிறப்பு.

இரு நூல்களையும் மேலோட்டமாக மேய்ந்தேன். அச்சுக்கோப்பு, பாவிக்கப்பட்ட தாள்கள், அட்டை என்பன சிறப்பாக இருந்தன. பலி ஆடு கவிதைத் தொகுப்பு அட்டையை சயந்தன் வடிவமைத்திருக்கிறார். ஒரு சிறிய சர்ச்சை மூலம் அறிமுகமான இந்த அண்ணன் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்துகிறார். நூல்களின் உள்ளடக்கம் பற்றி வாசித்து முடிந்ததும் கட்டாயம் பதிவிடுகிறேன். நூல்கள் பற்றிய மதிப்புரை முடிந்ததும் ஒரு விவாத மேடையாக நாங்கள் கூடிய இடம் உருமாறியது. சர்ச்சைக்குரிய, இதுவரை நான் போயிருக்கக் கூடிய இடங்களில் பேசப்படாத ஒரு களத்தில் விவாதித்தார்கள். அதுபற்றி, அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.

Saturday, 11 July 2009

எழுதாத விதிகள் (எழுதுபவர்களுக்கு மட்டும்)


சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலின் நாலாவது பதிப்புக்கு எழுதியிருந்த முன்னுரை எனக்குப் பிடித்திருந்தது. 18.12.2005 ல் அவர் எழுதிய யதார்த்தம், அங்கதம் எல்லாம் கலந்த அந்த முன்னுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நாவல் கூட நல்லாயிருக்கும். சிப்பாய்க் கலகத்தில் ஒரு தமிழன் கலந்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக் கதை அது. சில பல நிஜத் தகவல்களையும் கலந்து உண்மைக்கதை போலச் சொல்லியிருப்பார். சமீபத்தில் இரண்டாம் முறையும் வாசித்தேன். அப்போது கண்ணில் பட்டதுதான் இந்த முன்னுரை.

நான் இதுவரை இரண்டு சரித்திர நாவல்களை எழுதியிருக்கிறேன். ‘ரத்தம் ஒரே நிறம்’, ‘கந்தளூர் வசந்தகுமாரன் கதை’. ‘ரத்தம் ஒரே நிறம்’ கதைக்கே ஒரு சிறிய சரித்திரம் உண்டு. முதலில் அது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்ற தலைப்பில் குமுதத்தில் தொடர்கதையாக அட்டகாசமாகத் துவங்கியது, மணியம் செல்வனின் அழகான சித்திரங்களுடன். மூன்று வாரங்கள் சிறப்பாக வந்த பின் எதிர்பாராத ஓர் எதிர்ப்பு அதற்கு நாடார் இனத்தவரிடமிருந்து வந்தது. நான் அப்போது பெங்களூரில் இருந்தேன். எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் கடிதங்கள் வந்தன. தமிழில் புதுப்புது திட்டுவார்த்தைகள் எல்லாம் எனக்கு பாடமாயின. தொலைபேசியில் கொலை பேசினார்கள். குமுதம் இதழைக் கடையில் எரித்தார்கள். அதன் ஆசிரியருக்கு நாடார் சங்கத்தைச் சார்ந்தவர்கள் கதையை உடனே நிறுத்தும்படியும் மன்னிப்புக் கேட்கும்படியும் வற்புறுத்தினார்கள்.

ஆசிரியர் ஏ.எஸ்.பி. எனக்கு போன் போட்டு ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் ‘ஓர் இனத்தின் மனத்தைப் புண்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. அவர்களின் தற்போதைய கோபத்தில் கதையின் நோக்கம் அதுவல்ல, அடுத்துவரும் அத்தியாயங்களைப் படித்தால் தெரியும் என்று என்னதான் விவாதித்தாலும் உணர்ச்சிபொங்கும் இந்தக் கணத்தில் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுதவேறு பழகவேண்டும். நிறுத்திவிடுங்கள். அடம்பிடித்து மரணத்துடன் விளையாட இது ஒன்றும் பிரெஞ்சுப் புரட்சி அல்ல’ என்றேன். கதை நிறுத்தப்பட்டது.

ஆசிரியர் ஏ.எஸ்.பி ஆறுமாதம் கழித்து கோபம் அடங்கியதும் இதே கதையை தலைப்பை மாற்றி வெளியிடலாம் என்றார். ‘கருப்பு சிவப்பு வெளுப்பு’ அதேபோல் ஆற அமர ‘ரத்தம் ஒரே நிறமாக’ வெளிவந்தது. சிப்பாய்க்கலகத்தைப் பற்றிப்படித்தபின் அதில் ஒரு தமிழன் கலந்துகொண்டால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்த கதை இது.

இப்போது இதைப்படிக்கும்போது எதற்காக இதை எதிர்த்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை மறுபடி கிளற எனக்கு இஷ்டமில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் எனக்குப் பல விஷயங்கள் புலனாயின. தமிழ் சமூகத்தில் சில கதைகளை சிலர்தான் எழுதலாம் என்ற எழுதப்படாத ஓர் விதி இருக்கிறது. அதை மீறினதால் வந்த வினை என்பது இப்போது புரிகிறது. எழுத்தின் மேல் பிடிவாதம் இருப்பதோ, எழுதினது வேதவாக்கு, அதை யாராவது வழிமறித்தால் உயிருள்ளவரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு சிறுபிள்ளைத்தனம்.

எல்லாப் போராட்டங்களும் அலுத்துவிடுகின்றன. புதிய காரணங்கள் தேடப்படுகின்றன. ‘ரத்தம் ஒரே நிறம்’ மீண்டும் வந்தபோது முதலில் அதை எதிர்த்தவர்கள் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தப் புதியபதிப்பை சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தார்க்கு என் நன்றிகள்.

-சுஜாதா (18.12.2005)

Sunday, 31 May 2009

பாடமே படமாக...


நீங்கள் ஒரு கதையையோ, ஒரு நாவலையோ வாசிக்கும்போது அதில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்ப்பதுண்டா? நான் செய்வதுண்டு. இவ்வாறு நீங்கள் வாசித்த கதையோ, நாவலோ திரைப்படமாக வெளிவந்திருந்தால் அதைப் பார்ப்பதற்கு ஒரு தனி ஆவல் எற்படும். அவ்வாறு நான் வாசித்த நாவல் ஒன்றின் திரைப்பட வடிவத்தை திரைப்படமாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அது சர். ஆர்தர் கொனான் டொய்ல் (Sir. Arthur Conan Doyle) அவர்கள் எழுதிய த ஹவுண்ட் ஒஃப் த பாஸ்கெர்வில்ஸ் (The Hound of the Baskervilles) என்ற நாவலின் திரைப்பட வடிவம். உடனே ஆரம்பிச்சுட்டான்யா அடுத்த உலக சினிமா ரசிகன் என்று ஓடிவிடாதீர்கள். டொய்லும் அவரது நாவலும் எனக்கு எப்படி அறிமுகமானார்கள் என்று சொன்னால் நான் அந்தப் படத்தைப் பார்க்க ஏன் ஆவல் கொண்டிருந்தேன் என்று புரிந்து கொள்ளலாம்.

சிறீலங்காவில் நாங்கள் 11ம் வகுப்பில் நாடளாவியா ரீதியில் ஒரு பரீட்சை நடக்கும். அதற்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (General Certificate of Education, Ordinary Level) என்று பெயர். (13ம் வகுப்பில் நடப்பது க.பொ.த உயர் தரப் பரீட்சை). நான் 9ம் வகுப்புக்குப் போகும்போது என்று நினைக்கிறேன், தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும், சமயம், சமூகக் கல்வியும் வரலாறும், ஆங்கிலம், கவின்கலை (சித்திரம், சங்கீதம், நடனம் ஆகியவற்றில் ஒன்று), சுகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய 8 பாடங்களோடு (கட்டாய பாடங்களை சரியாகவே பட்டியலிட்டிருக்கிறேன் என நம்புகிறேன்), புவியியல், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வர்த்தகமும் கணக்கியலும் அல்லது இலத்திரனியல் ஆகிய தெரிவுகளிலிருந்து இரண்டு பாடங்களுமாக 10 பாடங்களைத் தெரிவுசெய்து 11ம் வகுப்புவரை படிக்க வேண்டும் என்றார்கள் அரசாங்கம். நான் தெரிவுசெய்தது வர்த்தகமும் கணக்கியலும் மற்றும் ஆங்கில இலக்கியம். (மிகச்சொற்பமே ஆங்கில இலக்கியம் படித்தோம். 15 பேரைத் தாண்டாது. 3 பேர் A எடுத்தார்கள். எனக்கு B மட்டுமே. A எடுத்த மூவருமே ஸ்பெஷலாக ரியூசன் போனார்கள். அவர்களில் ஒருவன் ரஞ்சித் அங்கே ரியூசன் வருமாறு என்னை வற்புறுத்தாத நாளே இல்லை. நான் தான் சோம்பல் பட்டு போகவே இல்லை). அப்படி ஆங்கில இலக்கியம் படித்த போதுதான் Sir. Arthur Conan Doyle மற்றும் அவரது நாவலான The Hound of the Baskervilles பற்றித் தெரிந்து கொண்டேன்.

ஆங்கில இலக்கியப் பாடத்திட்டப்படி அரசாங்கம் ஒரு பாடப் புத்தகம் தந்தார்கள். அதில் கவிதைகள் மற்றும் 5 சிறுகதைகள் அடங்கியிருக்கும். இவை தவிர அவர்கள் சிபாரிசு செய்யும் ஐந்து நாவல்களில், மூன்று நாவல்களை நாம் தெரிவு செய்து வாசிக்கவேண்டும். தெரிவைச் சுலபமாக்கவென ஒரு நாவலைக் கட்டாயத் தேர்வாக அரசாங்கமே சொல்லியிருந்தது. அந்நாவல்கள் வருமாறு:
  1. Oliver Twist by Charles Dickens (Compulsury)
  2. Mangrove Island by Martin Wickramasinghe
  3. The Mill on the Floss by George Elliott (இந்த நாவலின் பெயரை மறந்தே விட்டேன். ஞாபகப்படுத்திய நண்பன் பகீதரனுக்கு நன்றி)
  4. Swami and Friends by R. K. Narayan
  5. The Hound of the Baskervilles by Sir. Arthur Conan Doyle
என்னுடைய அப்பாவின் ஈடுபாடு காரணமாக ஐந்து நாவல்களுமே எனக்குக் கிடைத்தன. (என்னிடம் மட்டும் தான் ஐந்தும் இருந்தது. ஆசிரியர்களிடம் கூட இல்லை). அப்போது வாசித்த அந்த ஐந்து நாவல்களில் அனைத்துமே எனக்குப் பிடித்திருந்தபோதும் நான் மீண்டும் மீண்டும் வாசித்தது டொய்ல் மற்றும் ஆர். கே. நாராயண் இருவரையும் தான். Oliver Twist ஐ நாடகமாக நடித்ததால் அது கிட்டத்தட்ட எனக்கு தலைகீழ் பாடம். இப்படி என் பதின்ம வயதுகளில் என் மனம் கவர்ந்த, இலக்கியத்தரம் மிகுந்த டொய்லின் துப்பறியும் நாவலின் திரைப்பட வடிவம் சமீபத்தில் ஒரு வலைமனையில் DVD Rip ஆகக் கிடைத்தபோது அதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டதில் அதிசயம் இல்லை.

கதை:
இது டொய்லின் புகழ்பெற்ற Sherlock Holmes வரிசைக் கதை. இங்கிலாந்தின் டெவன்சயர் பிரதேசத்தில் உள்ள ஒரு நிலப்பிரபுவான சார்ள்ஸ் பாஸ்கெர்வில் மர்மமான முறையில் இறந்து போகிறார். சொத்துக்களைப் பொறுப்பேற்க கனடாவிலிருந்து சட்டபூர்வ வாரிசான ஹென்றி பாஸ்கெர்வில் இங்கிலாந்து வருகிறார். சார்ள்ஸ் பாஸ்கெர்வில்லின் குடும்ப வைத்தியர் லண்டனில் ஷெர்லக் ஹோல்ம்ஸை சந்தித்து, சார்ள்ஸ் பாஸ்கெர்வில்லின் மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாயும், புதிய வாரிசு ஹென்றிக்கும் துர்மரணம் சம்பவிக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாயும் கூறுகிறார். அத்துடன், பாஸ்கெர்வில் பரம்பரையில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஹுகோ பாஸ்கெர்வில் என்ற கொடியவன் ஒரு பெண்ணை வன்புணர முயன்றதால் பாஸ்கெர்வில் குடும்பத்துக்கு ஒரு சாபம் கிடைத்ததாயும், ஹூகோவை ஒரு வேட்டைநாய் கொன்றதாயும், அதன் பின் வந்த எல்ல பாஸ்கெர்வில்களும் ஏதாவது ஒருவகையில் துர்மரணம் அடைவதாயும் குறிப்பிடும் வைத்தியர், தான் இந்த சாபக் கதையை நம்பவில்லை என்றும், சார்ள்ஸின் மரணத்தில் வேறேதோ மர்மம் இருப்பதாயும் சொல்கிறார். ஹோல்ம்ஸின் உதவியையும் நாடி நிற்கிறார். லண்டன் வந்த ஹென்றியை டெவன்சயருக்கு வரவேண்டாம் என்று ஒரு எச்சரிக்கைக் கடிதம் வருகிறது, ஒரு மர்ம நபர் அவரையும் வைத்தியரையும் பின்தொடர்கிறார். முதலில் ஹென்றியின் புத்தம் புதிய ஸூ காணாமல் போகிறது. சிறிது நேரம் கழித்து புது ஸூ திரும்பக்கிடைத்து அவர் பாவித்த ஸூ காணாமல் போகிறது. ஹென்றியைப் பின் தொடர்ந்த மர்ம மனிதன் அவனை ஏற்றிச்சென்ற குதிரை வண்டிக்காரனிடம் தனது பெயர் ஷெர்லோக் ஹோல்ம்ஸ் என்கிறான். இந்த சம்பவங்கள் எல்லாம் நிஜ ஷெர்லோக் ஹோல்ம்ஸை இந்த சிக்கலான் வழக்கில் ஈடுபாடடைய வைக்கிறது. அதன் பின் ஹோல்ம்ஸ் என்ன செய்தார், சாபம் உண்மையா, சார்ள்ஸ் பாஸ்கர்வில்லின் மரணத்திலிருந்த மர்மங்கள் என்ன போன்றவற்றை டொய்லின் நாவலை வாங்கிப் படிப்பதன் மூலமோ, DVD மூலமோ தெரிந்து கொள்ளுங்கள்.

படம் பார்த்தபோது எனது மனதில் பட்டவை:
  • 1959ல் வந்த படம் என்பதால், நாடகத்தன்மை அதிகமாக இருந்தது. சில சீரியஸ் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு சிரிப்பூட்டியது.
  • Sherlock Holmes ஆக நடித்த Peter Cushing நான் மனதில் காட்சிப்படுத்திய ஹோல்ம்ஸைவிட கம்பீரமாக இருந்தார். (இவருக்கு முன் ஹோல்ம்ஸ் வேடங்களை Basil Rathbone என்பவர் செய்வாராம். பீற்றரால் பாசில் அளவுக்கு சோபிக்க முடியவில்லை என்பது அந்நாளைய விமர்சகர்களின் கருத்தாம்).
  • நாவலில் உள்ள சில கதாபாத்திரங்கள் படத்தில் இல்லை அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறன.
  • 75 நிமிடம் ஓடும் படம் என்பதால் நாவலாசிரியர் சொன்ன பல நுணுக்கமான விடயங்கள் விடப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக, வில்லனின் Background and Identity).
  • நாவலைவிட படத்தில் கொஞ்சம் நகைச்சுவையுணர்வு தெறித்தது.
  • படத்தில் இந்நாளைய ஆங்கிலப்படங்களில் பாவிக்கப்படும் பிரபல F@@K Word பாவிக்கப்படவில்லை. இரண்டே இரண்டு வரைமுறை மீறாத முத்தக்காட்சிகளும் படத்தில் இருந்தன.
நான் ஒன்றும் பெரிய இலக்கிய விமர்சகனோ, சினிமா விமர்சகனோ இல்லை. ஆனால் துப்பறியும் கதை எழுத்தாளர்களின் God Father ஆன டொய்லின் கதையைப் படம் பண்ணும் போது இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பண்ணியிருக்கலாம் (சுஜாதாவின் கதைகளில் வரும் கணேஷ்-வஸந்த் டொய்லின் Sherlock Holmes- Dr. Watson ஜோடி தந்த ஐடியா என்று சுஜாதா எங்கோ ஒரு பேட்டியில் குறிப்பிட்ட ஞாபகம், அந்தளவுக்கு டொய்ல் துப்பறியும் கதை எழுதுபவர்களிடம் ஆதிக்கம் செலுத்தினார். லண்டனில் ஷெர்லோக் ஹோல்ம்ஸின் அலுவலகத்தைத் தேடி அலைந்த வாசகர்கள் ஏராளமாம்). நாவல் வாசிக்கும்போது (அதுவும் மக்மில்லன் இந்தியாவால் குறுக்கிச்சொல்லப்பட்ட ஒரு Version) இருந்த பரபரப்பு, திகில், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், நிறைவு படத்தில் இல்லை. அந்தக் கதையை இன்றைக்கு ரீ-மேக் செய்தால் கூட ஓடும். ஏன், தமிழ்நாட்டில் ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடப்பதுபோலக் கூடப் படம் எடுக்கலாம், பிய்த்துக்கொண்டு ஓடும். இருந்தும் சொல்கிறேன், ஒரு கதையை எழுதிய எழுத்தாளரின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல், கதையில் இயக்குனரால் சிறு மாற்றங்கள் செய்து எடுக்கப்படும் படங்கள் நாவலைப்போலவே மகா வெற்றி பெறுமா என்று கேட்டால், எனது பதில், இல்லை, ஒரு போதும் இல்லை.