Saturday 31 October 2009

மனித உருவில் மிருகங்களாய் நாம்

பம்பலப்பிட்டிக் கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவண்ணன் சிவகுமார் என்கிற இளைஞன் பலவந்தமாகக் கடலுக்குள் தள்ளப்பட்டு, கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சரியான மொழியில் சொல்வதென்றால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரியும் சம்பந்தப்பட்டிருக்கிறார். (இது முழுமையாக காவல்துறை மட்டுமே செய்த சம்பவம் என்பதாக மிக வேகமாகத் திரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).



நடந்தது என்ன?
நடந்தது என்ன என்பதைப் பற்றி வருகின்ற செய்திகள் வழமைபோலவே முன்னுக்குப் பின் முரணாக வருகின்றன. மேற்படி இளைஞர் பம்பலப்பிட்டிப் புகையிரத நிலையத்துக்கு அண்மித்த கடற்கரைப் பகுதியில், கடற்கரை வீதியால் போகின்ற வருகின்ற வாகனங்களின் மீது கற்களை வீசி எறிந்திருக்கிறார். அப்படி அவர் எறிந்த கல் பட்ட வாகனங்களில் ஒன்று இராணுவ/காவல்துறை வாகனம் எனவும், அதிலிருந்து இறங்கிய அதிகாரிகளைக் கண்டதும் அவர் புகையிரதப் பாதையைத் தாண்டி கடலை நோக்கி ஓடினார் என்றும் சொல்லப்படுகிறது. ஓடியவர் அப்போது அங்கே வந்த புகையிரதத்தையும் பதம் பார்க்க, புகையிரதம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து இறங்கிய அல்லது அந்த இடத்தில் நின்ற இரு சாதாரணக் குடிமகன்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் இந்த இளைஞனைப் பிடிக்க முயல, இளைஞன் கடலுக்குள் செல்ல, ஆத்திரமுற்ற மற்றவர்கள் இளைஞனை மேலும் மேலும் கடலுக்குள் பலவந்தமாகத் தள்ள, கடல் அலைகள் இளைஞனைக் காவுகொண்டுவிட்டன. இப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுவிட்டார். ‘இலங்கைக் காவல்துறையின் அராஜகம்' என்பதாக செய்தி ஊடகங்கள் அலறவும் ஆரம்பித்தாயிற்று.

என்ன பிரச்சினை?
இங்கு நடந்த சம்பவம், சட்டரீதியாகக் கொலை. அதை யாரும் மறுக்கவியலாது. ஆனால் அதற்கு சிங்கள-தமிழ் இனத் துவேசம் 'மட்டும்' காரணம் என்று மேம்போக்காக வைக்கிற குற்றச்சாட்டுகளை மனித இனத்துக்கே செய்யப்படும் துரோகமாக நான் முன்வைப்பேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரோசா வசந்த் எங்கள் எல்லார் மீதும் வைத்த ‘கொலைகாரக் கும்பல்' குற்றச்சாட்டின் இன்னொரு வடிவம்தான் இது. ‘மாட்டினான் ஒருத்தன்' என்பதாகத் தங்களை பொதுநலன் காப்பவர்களாகக் காட்டிக்கொள்ள ஒரு சிலர் முயன்றதன் விளைவு, மனநிலை பிறழ்ந்த ஒரு இளைஞனின் (அப்படிக் குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது) மரணம். இந்தச் சம்பவத்தில் மனநிலை பிறழ்ந்த ஒரு ஜீவன்தான் இருந்ததா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அடித்துக் கொன்ற மூவரையும் (சிலர் ஐவரென்கிறார்கள்) மனநிலை பிறழ்ந்தவர்களாக என்னால் பார்க்கமுடிகிறது. அந்த இடத்தில் 6 காவல்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். மேலும் நான்குபேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில திறமைசாலிகள் இந்தச் சம்பவத்தை அற்புதமாக வீடியோ பிடித்திருக்கிறார்கள். சாட்சி சொல்லாமல் இன்னும் எத்தனையோ பேர் ஒளித்துமிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மனநோயாளிகள். மன நிலை பிறழ்ந்த ஒருவனை அடையாளம் காணத்தெரியாமல், அவனுக்குரிய தகுந்த வாழ்வியல் நிலமைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகள் முன்னால், அநியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டிய ஊடகக் கண்களின் பார்வையில் அந்த இளைஞன் சாகடிக்கப்பட்டதனால், நீங்கள், நான் உட்பட எல்லோரும் எங்களை மனநோயாளிகள் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறோம்.

இந்தப் பாதகத்தை தமிழ்-சிங்களத் துவேசமாக மட்டும் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ‘மாட்டினாண்டா ஒரு தமிழ் நாய்' என்கிற மாதிரியான ஒரு சிந்தனை ஓட்டம் ஓடியிருக்கலாம். ஒரு சிங்களன் எம்மவர் பகுதியில் இதேபோல் மாட்டியிருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஆனால் அப்படியான ஒரு சித்தரிப்புமூலம் இதன் அடியாழத்தில் ஒளிந்திருக்கக்கூடிய ஒரு கேவலமான மனித மன இயல்பை நாங்கள் மழுப்ப முயல்கிறோம். இதை வைத்து அரசியல் பண்ணுபவர்கள் பண்ணிவிட்டுப்போங்கள்... எனக்கு ஒன்றுமில்லை. அதற்குமுன் நவம்பர் 16, 2005 என்ற நாளை நான் திரும்ப நினைவூட்டவேண்டி இருக்கிறது.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில், யாழ் மாவட்டத்தில் நடந்த சில திருட்டுக்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட சமூக விரோதி என 'காலாச்சாரம் பேணும் இளைஞர் குழுவால்' சந்தேகத்தின் பேரில் முத்திரை குத்தப்பட்ட 20 வயதான தினேஷ் என்ற இளைஞனை, சுற்ற நின்று கதறிய அவனது தாய்க்கும் சகோதரிக்கும் முன்னால் மூன்று மணித்தியாலங்களாக விக்கெட் கொட்டன்களாலும், பொல்லுகளாலும் அடித்துக் கொன்ற மிலேச்சத் தனத்துக்கு இது இணையே அல்ல. இதுபற்றி ஈழநாதன் வலு காட்டமாக ஒரு பதிவு போட்டார் என்றும் நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க காட்டம் குறைத்து மீள்பதிவிட்டார் என்றும் கேள்விப்பட்டேன். மற்றும்படி இந்தச் சம்பவம் பற்றி யாருமே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இன்றைக்கு செத்தவன் தமிழன், கொன்றவன் சிங்களன் என்றதும் உணர்வு பொத்துக்கொண்டு வந்துவிட்டது இவர்களுக்கெல்லாம்.

இப்படியான மிலேச்சத்தனங்கள் அரசியல் அல்ல நண்பர்களே. அதையும் தாண்டி மனிதகுலத்தை வேரோடறுக்கக்கூடிய கேவலமான மனச்சிதைவுகளின் வெளிப்பாடு. என்னைக் கேட்டல், சிவகுமாரைக் கொன்ற சிங்களனும், தினேஷைக் கொன்ற தமிழனும், பெஸ்ட் பேக்கரியில் வைத்து தாண்டவம் ஆடிய காவிகளும், முஸ்லிம் நாடொன்றில் கடையில் பாண் திருடிய ஐந்து வயதுச் சிறுவனின் கைகளை வாகனத்தால் நசுக்கி முடமாக்கிய மதபிதாவும் ஒரே ஜாதி என்றே சொல்வேன். அத்தனை பேரும் மனம் பிறழ்ந்தவர்கள், செத்துப்போன சிவகுமாரைப் போலவே.

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே. நான் இப்போது இருக்கிற இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 9-1-1 என்று உங்கள் கையில் இருக்கும் தொலைபேசியில் அழுத்தி சத்தமில்லாமல் விஷயம் சொன்னால் நீங்கள் தொலைபேசி முடிக்கமுன் வந்து நிற்கும் காவல்துறை உள்ள இந்த நாட்டிலேயே, பலர் அடித்தும், வாகனங்களால் ஏற்றியும், சுட்டும், குத்தியும் கொல்லப்படுகிறார்கள், வெட்ட வெளிகளில். மிக இலகுவாக இந்தக் காட்சிகளை செல்ஃபோன் கமராவில் படம் பிடிக்கும் ஒருவருக்குக்கூட 9-1-1 ஐ அழுத்தித் தகவல் சொல்லும் நோக்கம் வருவதில்லை. இங்கேயே இப்படி என்றால், காவல்துறையே சேர்ந்து சாகடிக்கும் ஊரில் இருப்பவர்களின் மனநிலையைச் சொல்லவா வேண்டும்?

எங்கள் ஊரில் திருமணத்துக்கு வெளியேயான தொடர்பொன்றினைச் சாக்காக வைத்து ‘இருட்டடி' கொடுக்கப்பட்ட ஒருவர் இறந்து போனதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை சிலர் நியாயப்படுத்த முயன்றதும் என் மனதில் இப்படிப்பட்ட ‘குழுமப் புத்தி' அல்லது ‘பொதுப் புத்தி' பற்றிய வெறுப்பை விதைத்திருக்கிறது. தண்டனை கொடுக்க நாங்கள் யார் என்கிற ஒரு எண்ணம் வந்தாலே போதும். இப்படியான மிலேச்சத்தனங்கள் நடக்காது. அடுத்தவனை நேசிக்கப்பழகு, உலகம் பூங்காவனமாகும். ஆனால் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இன்றைய சமூகங்கள் எல்லாமே ‘காசுக்கு உழைக்கும்' இயந்திரங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன.

சுலபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள் சிங்களக் காவல்துறையின் அராஜகம் என்று. இந்த சிவகுமார் விஷயத்தில் நேரடியான குற்றவாளிகளை விட மறைமுகமான குற்றவாளிகள்தான் அதிகம். அந்த மன நலம் பிறழ்ந்த இளைஞனை இப்படிக் கண்காணிப்பு இல்லாமல் அலையவிட்ட அவன் குடும்பத்தில் இருந்து குற்றம்சாட்டிக்கொண்டு போகலாம். ஆனாலும் இதெல்லாம் அந்த இளைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தரப்போவதில்லை. தினேஷுக்கும் அவன் குடும்பத்துக்கும் நிகழ்ந்த அநீதியும் அங்ஙணமே. இன்னும் கொஞ்ச நாளில் நீங்களோ, நானோகூட இப்படிக் கொல்லப்படலாம். அந்த மரணத்தில் ஏதாவது அரசியல் இருந்தால் கண்டுகொள்ளப்படுவோம். இல்லாவிட்டால் உலகில் நாள்தோறும் நிகழும் மரணக்கணக்கில் ஒன்றாக எழுதிவைக்கப்படுவோம்.

இதை சிங்கள-தமிழ் துவேசப் பிரச்சினையாக நோக்கும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதை வெகுநிச்சயம் வரவேற்கிறேன். ஆனால், பூதாகரமான பிரச்சினை ஒன்றை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கும் மாபெரும் துரோகம் ஒன்றை அறிந்தே செய்கிறீர்கள் தோழர்காள். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

14 comments:

Mohan said...

Good Post. As mentioned in Bible if people wait just for a second, to let the first stone (or beating) come from a person who did not do any sin then these kind of behaviors in Tamil (and all) communities will go away.

Mohan

Unknown said...

True Mohan.... I guess the whole system operating all around the world is just erratic.I have no idea how this is going to change. (And I know... I'm going to get bashed for this view-point)

Subankan said...

அருமையான பார்வை. எனது மனதில் ஓடியவையும் இவைதான். அந்த இந்துக்கல்லூரி சம்பவம் போல இன்னும் எத்தனையோ நடந்திருக்கிறது. ஆறறிவு படைத்த எந்த ஒரு மனிதனாலும் முடியாத காரியங்கள் இவை.

//அந்த மரணத்தில் ஏதாவது அரசியல் இருந்தால் கண்டுகொள்ளப்படுவோம். இல்லாவிட்டால் உலகில் நாள்தோறும் நிகழும் மரணக்கணக்கில் ஒன்றாக எழுதிவைக்கப்படுவோம்.//

'அரசியல் நடாத்தமுடிந்தால்' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

vasu balaji said...

வேடிக்கை பார்த்தவர்களும் எனச் சொல்ல நினைத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். மதம், இனத்துக்கப்பாற்பட்ட மிருக வெறி இது.

மயூ மனோ (Mayoo Mano) said...

இறந்தவர் மட்டுமில்லை அங்கு அப்போதிருந்த அனைவருமே மன நலம் பாதிக்கப்பட்டவர்களே. உண்மை கிருத்திகன். நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்கள், அவற்றுக்கான நீதி எங்கே? இறந்தவன் தமிழன். சாகடித்தவன் சிங்களவன். இதற்கான நீதி எங்கே? உலகம் மிகக் கேவலமான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. அது மட்டும் எந்த விதப் பிரச்சினையும், போராட்டங்களும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போது நாம் விழிப்போம்? இதை அரசியலாக்கலாம். போராடலாம். உண்மைகள் திரிக்கப் படலாம். எல்லாம் செய்யலாம். ஆனால் அங்கு அப்போதிருந்த எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். அனைவரும் தண்டிக்கப் படவேண்டும். ஏதாவதொரு வகையில். இது சிங்கள தமிழ் படுகொலை என்பதைவிட ஒரு மனிதப் படுகொலை என்ற வகையில் உற்று நோக்கப் பட வேண்டும்.

Unknown said...

///அரசியல் நடாத்தமுடிந்தால்' என்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.///

உண்மை சுபாங்கன்... அப்படி எழுதியிருந்தால் இன்னும் வலிமையாக இருக்குமோ என்றுதான் யோசிக்கிறேன்

Unknown said...

பாலா...
வீடியோவைப் பார்த்தீர்களா... ஒரு ஐம்பது பேராவது வேடிக்கை பார்த்தார்கள். ஒருவர்கூட தடுத்து நிறுத்த முயலவில்லை.

///மதம், இனத்துக்கப்பாற்பட்ட மிருக வெறி இது///
பயமாய் இருக்கிறது பாலா.... ஒரு மார்க்கெட்டுக்குள் என்னை ஒருவன் உற்றுப் பார்த்தால்கூட பயமாய் இருக்கிறது.

Unknown said...

மயூரா...
///ஆனால் அங்கு அப்போதிருந்த எல்லோரும் பதில் சொல்ல வேண்டும். அனைவரும் தண்டிக்கப் படவேண்டும். ஏதாவதொரு வகையில்///

அந்தத் தண்டனை குறித்துத்தான் எனக்குள் குழப்பம் இருக்கிறது. எப்படித் தண்டித்தால் இப்படியான சம்பவங்கள் குறையும் என்பது என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. மரணதண்டனையை மனதார எதிர்க்கிறேன். ஆனால் மரணதண்டனைக்கு நிகராக, இந்த மனிதர்கள் மறுமுறை பிறந்து வருபவர்கள் போல் ஒரு உணர்வு வரக்கூடிய தண்டனைதான் தேவை

///இது சிங்கள தமிழ் படுகொலை என்பதைவிட ஒரு மனிதப் படுகொலை என்ற வகையில் உற்று நோக்கப் பட வேண்டும்.///
நிச்சயமாக

தமிழன்-கறுப்பி... said...

கிருத்திகன் ஒண்டும் சொல்லுறதுக்கில்லை...

:(

நிலாமதி said...

அருமையான அலசல். என்ன செய்தாலும் போனது ஒரு உயிர் ....மீள் வரவா போகிறது. எல்லாமே இருட்டடிப்பு செய்யபட்டு அந்த கொலைஞ்ன் மீண்டும் வெளியே வந்து விடுவான். குரூரமான் செயல்.

வெத்து வேட்டு said...

சிவகுமாரைக் கொன்ற சிங்களனும், தினேஷைக் கொன்ற தமிழனும், பெஸ்ட் பேக்கரியில் வைத்து தாண்டவம் ஆடிய காவிகளும், முஸ்லிம் நாடொன்றில் கடையில் பாண் திருடிய ஐந்து வயதுச் சிறுவனின் கைகளை வாகனத்தால் நசுக்கி முடமாக்கிய மதபிதாவும் ஒரே ஜாதி என்றே சொல்வேன். அத்தனை பேரும் மனம் பிறழ்ந்தவர்கள்,

I differ with you in this "செத்துப்போன சிவகுமாரைப் போலவே" statement.... above mentioned are pasycho pathic animals
...Sivakumar was not......

Unknown said...

வெத்துவேட்டு...
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.

பால்குடி said...

ஆழமான, சிந்திக்கத் தூண்டுகின்ற கருத்துக்கள்.
//அடியாழத்தில் ஒளிந்திருக்கக்கூடிய ஒரு கேவலமான மனித மன இயல்பை நாங்கள் மழுப்ப முயல்கிறோம்.

உண்மை

Unknown said...

புரிதலுக்கு நன்றி பால்குடி