Friday 2 October 2009

நான் பார்க்கும் உலகம்: செப்ரெம்பர் 27-ஒக்ரோபர் 03 2009

ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.

அரசியல்- பிறந்தகம்
என் காதுகளும் கண்களும் பொய் சொல்லவில்லை என்ற நம்பிக்கையில் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் இடைத் தங்கல் முகாம்களுக்குள் அடைபட்டிருக்கும் அகதிகளின் நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை என்றும், அவை தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார். அகதிகள் விவகாரத்தில் அனைத்துலகக் கடமைப்பாடுகளுக்கு உட்பட்டு இலங்கை நடந்துகொள்ள வேண்டும் என்று ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலின் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.


குருநாகல மாவட்டம் உடவல் பெல பகுதியில் ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட குண்டொன்று வெடித்ததில் 2 பேர் பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர். வாகன சாரதி ஒரு வீட்டின் முன்னால் தரித்து நின்ற இந்த வாகனத்தை முடுக்கி உயிர்ப்பித்த வேளையில் இந்தக் குண்டு வெடித்ததாகவும், இதன் காரணமாக அவரும், எரந்திக திஸநாயக்க என்கிற 12 வயதான பாடசாலை மாணவியும் மரணமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் 8 பேர் சிறுவர்கள் என்றும், இந்தச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் பின் விளைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்-புகுந்தகம்
வருகின்ற கிழமை கனேடியப் பாராளுமன்றில் வரவு செலவுத்திட்டத்தின் ஒரு புதிய சட்டவரைவு ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சட்டமூலம் C-51 என்று அழைக்கப்படும் இந்த வரைவு அமுலாக்கப்பட்டால், வீடுகளில் திருத்த வேலை செய்தவர்கள், புதிதாக வீடு வாங்குபவர்கள் போன்றோருக்கு, வருமான வரித் தாக்கல்களில் சில நன்மைகள் கிடைக்கும் என்பதாக ஆளும் கட்சி தெரிவித்திருக்கிறது. அநேகமாக வருகின்ற வார முற்பகுதியில் பாராளுமன்றில் இந்தச் சட்டவரைவு தாக்கல் செய்யப்படலாம்.


இதே வேளை இச்சட்டவரைவை ஆதரிக்கப் போவதாகப் புதிய ஜனநாயகக் கட்சி அறிவித்திருக்கிறது. சிறுபான்மை கொன்செர்வேற்றிவ் அரசாங்கத்துக்கு எதிராக லிபரல் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திடீரென லிபரல் கட்சியைக் கைவிட்ட மாதிரி இம்முறை கொன்செர்வேற்றிவ் அரசைக் கைவிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், லிபரல் கட்சியோடு சேர்ந்து நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு எதிரான எல்லா முஸ்தீபுகளையும் செய்துவிட்டு, ‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று லிபரல் கூறியதும் பக்கம் மாறிய ஜனநாயகக் கட்சி, சமீப காலத்தில் தேர்தல்களைச் சந்திக்காமல் இருக்க இந்தப் சிறுபான்மை அரசைக் காப்பாற்றியே ஆகவேண்டும். ஆப்பிழுத்த குரங்கு மாதிரி மாட்டிக் கொண்டு தவிக்கிறார் கட்சித் தலைவர் ஜக் லேய்ற்றன்.

அரசியல்-உலகம்


இந்த வாரம் கொஞ்சம் உயிரிழப்புகள் அதிகமான வாரமாகிவிட்டது. இந்தோனேஷியாவிலும், சமோவா, அமெரிக்கன் சமோவா மற்றும் ரொங்கா தீவுகளிலும் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. இந்தோனேஷியாவில் பூகம்பம் காரணமாக ஒரு நகரம் மொத்தமாகச் சிதிலமடைந்து போய்விட்டதாயும், அந்த நகரத்தில் 1000 பேராவது மாண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதே வேளை பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்குக் கிழக்கே ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சமோவாவில் 149 பேரும், அமெரிக்கன் சமோவாவில் 31 பேரும், ரொங்காவில் 9 பேரும் மாண்டு போயிருக்கிறார்கள். பன்னாட்டு அரசாங்கங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் துணையுடன் மீட்புப் பணிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. 2004 சுனாமியில் அத்தனை செத்தது, இதில் இத்தனை செத்தது என்ற கதைக்கே இடமில்லைஅது பற்றிய காணொளி கீழே.



வணிகம்-பொருளாதாரம்- தொழில் நுட்பம்


வருகிறேன் வருகிறேன் என்று வந்தே விட்டது Blackberryன் Macintosh மேசைத் தளக் கணனிகளுக்கான வாங்கி. பல வாக்குறுதிகள், பல பரிசோதனை முயற்சிகள், சில திருட்டுத்தனமான வெளியீடுகள் எல்லாவற்றையும் கடந்து உத்தியோகபூர்வமாக Research in Motion (RIM) நிறுவனம். இனிமேல் Mac கணனிகளுக்கும், Blackberryகளுக்கும் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடு (Synchoronization) சுலபமாகிவிடும் என்பதாக RIM தெரிவித்திருக்கிறது. இது வரை இரு கருவிகளும் ஒருங்கிணைந்து செயற்பட, வேறு சில மென்பொருள் வழங்குனர்கள் சில மென்பொருள்களை வெளிவிட்டிருந்தாலும், அவற்றைப் பாவிப்பதில் சிக்கல்கள் இருந்ததாக நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வாங்கியைப் பயன்படுத்துவதற்குரிய தொழில் நுட்ப வேட்பன வருமாறு: Macintosh OS X 10.5.5 கொண்ட கணனி, Blackberry running version 4.2 or higher, iTunes 7.2. (என்ன செய்ய பார்த்து ரசிக்க முடிந்தாலும் கையில் ஒரு smart phone இல்லையே..ம்ஹும்)

விளையாட்டு
வழமை போலவே இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம். வழமை போலவே உலகளாவிய போட்டித் தொடர் ஒன்றில் தென்னாபிரிக்கா கவிழ்ந்து போய்விட்டது. வழமை போலவே இன்னொரு இறுதியாட்டத்தில் அவுஸ்திரேலியா. வழமை போலவே நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இன்னொரு அரையிறுதி. எல்லா ஆரூடமும் பொய்த்துப் போக, நான் சொன்னதில் ஒன்றே ஒன்று மட்டும் பலித்தது. இலங்கையை இங்கிலாந்து வென்றவுடன், இந்த முறை கறுப்புக் குதிரை இங்கிலாந்து என்றேன். இலங்கையையும், தென்னாபிரிக்காவையும் தாண்டி அரையிறுதி வந்தார்கள். இன்னொரு அதிசயமாக பாகிஸ்தானைச் சந்தித்த 7 அரையிறுதிகளில் இரண்டாவது தடவையாக வென்றிருக்கிறது நியூசிலாந்து.


ஐ.சி.சி. விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாண்டுக்கான சிறந்த வீரராக மிச்செல் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெஸ்ட் வீரராக கம்பீர், ஒரு நாள் வீரராக தோனி, 20-20 சிறப்பாட்டக்காரராக டில்ஷான், வளரும் புயலாக சிடில், மகளிர் சிறந்த வீராங்கனையாக கிளாரி ரெய்லர், டெஸ்ட் அந்தஸ்து இல்லாத நாடுகளில் சிறந்த வீரராக போர்ட்டர்ஃபீல்ட், சிறந்த நடுவராக அலீம் தார் (முதல் முறையாக சைமன் ரோஃபுல் அல்லாத ஒருவர்) ஆகியோர் தெரிவு செய்து கௌரவிக்கப்பட்டார்கள். இது பற்றிய பார்வை விரைவில்.

சினிமா


பல சர்ச்சைக்குரிய விருதுகள் கவனிக்கப்பட்ட அளவுக்குக் கவனிக்கப்படாத விருது வழங்கும் வைபவம் ஒன்று நடந்தேறியிருக்கிறது. இந்த மாதம் முதலாம் திகதி சிவாஜி கணேசனின் பிறந்த நாள். அன்றைக்கு சிவாஜி-பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி விருதுகள் எஸ்.பி.பி., சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ், சிவாஜியின் ஒப்பனைக் கலைஞர் முத்தப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சின்ன அளவில் நடந்த விழாவாக இருப்பினும், தரமறிந்து விருது வழங்கியிருக்கிறார்கள் சிவாஜி குடும்பத்தினர். இதே போல் தொடர்ந்தும் செய்துவந்தால் நல்லது. எவ்வளவு சின்ன அளவில் என்று கேட்கிறீர்களா, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது நடிகர் மோகன்ராம் என்கிற அளவில் எளிமையாக நடந்திருக்கிறது விழா.

எப்புடீ?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கிரேம் ஸ்வான் மற்றும் ரவி போபாராவை ஒரு பேட்டி எடுப்பதற்கு ஒரு ஊடகவியலாளர்கள் படுகிற பாட்டைப் பாருங்கள். ஆங்கிலக் கொச்சை வார்த்தைகள் தெரிந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாது. இதற்குரிய இணைப்பை அதே இங்கிலாந்து அணியின் ஜிம்மி அண்டர்சன் அவரது Twitterல் தந்திருந்தார். (கொஞ்சம் விவகாரமான வார்த்தைகள் அடங்கிய காணொளி இது. 18+ விரும்பத்தக்கது)



சிந்திப்போமா?
சமீபத்தில் மருமகன் உயிர் மெய் எழுத்துக்களை எழுதப்பழகிக் கொண்டிருந்தான். திடீரென்று வந்து ங்+இ, ங்+ஈ, ங்+உ, ங்+ஊ ஆகியவற்றை எப்படி எழுதுவது என்று கேட்டான். ஒரு கணம் உண்மையிலேயே திக்குமுக்காடிப் போய்விட்டேன். ஙி, ஙீ, ஙு, ஙூ ஆகிய எழுத்துக்கள் தமிழ் மொழியில் எந்தளவுக்குப் பாவனையில் இருக்கின்றன? பெருமளவில் பாவிக்கப்படாத இந்த எழுத்துக்கள் உருவானதற்கான பின்னணி என்ன? எங்களிடம் 246 எழுத்துக்கள் (ஆய்தம் உட்பட 247) என்று பெருமை பேச மட்டும்தான் இந்த எழுத்துக்கள் இருக்கின்றனவா. இப்படிப் பாவனைக்கு உதவாத எழுத்துகளின் வரிவடிவம் மிக இலகுவில் அழிந்து விடும் என்பது என்னுடைய எண்ணம். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் கூறுங்கள்



6 comments:

கலையரசன் said...

இல்லையென்றால் அழியாதா கீத்..? நடைமுறையில் பாதி எழுத்துக்களை நாம பயன்படுத்துறது இல்ல.. இதுல ஏற்கனவே மரிச்சுபோன எழுத்துகளை சும்மா பாடப்புத்தகத்தில் படிக்க மட்டும் வச்சிருக்கோம்! என்னாத்த சொல்ல???

Unknown said...

உண்மை கலை... எனக்கும் சில எழுத்துக்கள் கணக்குக் காட்ட மட்டுமே பயன்படுவதாகத் தோன்றுகிறது

கிருஷ்ணா said...

“ங்” என்ற எழுத்தைத்தவிர வேறு எந்த எழுத்தும் அந்த வரிசையில் பயன்பாட்டில் இல்லை என்று என் தமிழாசான் ஒருகாலத்தில் சொன்ன ஞாபகம். (இப்போது ஙே.. என்று விழித்தான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள் என்பது வேறு.) அதனால்தான் “ங” போல் வளை என்று சொல்வார்கள் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அதாவது, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் தனியொருவனாக தாங்கிப் பிடி என்ற பொருளில்...

Unknown said...

கிருஷ்ணா
ங், ங இரண்டும்தான் பாவனையில் இருப்பதாக எனக்கும் ஞாபகம்

அருண்மொழிவர்மன் said...

தமிழில் சில நல்ல, சீர்திருத்தங்களாஇ அதன் எழுத்துக்களில், இலக்கணத்தில் கொண்டு வர முனைந்த எல்லாரையும் திட்டு திட்டென்று திட்டித் தீர்த்து விட்டார்கள் எம் “தமிழ் காவலர்கள்”. அதனால்தான் தமிழ் இன்னும் கடினமாகவே போய்க்கொண்டிருக்கிறது.

இது பற்றி நிறைய பேசவேண்டும்...

Unknown said...

அருண்மொழிவர்மரே..
‘தமிழ்க் காவலர்கள்' பற்றி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.. ஏதிலிகள் சந்திப்பில் முடிந்தால் சந்திப்போம்