Sunday 12 January 2014

அடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்

1.
நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ? அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என்கதை பேசும் ஒரு பெண்; கவனியுங்கள். இத்தால் நான் பெறும் எனக்கான சலுகைகளை மிகச்சிறியளவிலேயே ”பயன்படுத்துகிறேன்” என்பதையும் கவனியுங்கள். நான் என்கதை பேசும் ஒரு பெண்.

நான் ஈர்த்துக்கொண்ட இளைஞர்களில் நான் ஈர்ப்புகொண்ட இளைஞன் அவன். என் எண்ணங்கள் யாவும் அவன்மீதேயிருந்தன. இவ்வீர்ப்புத்துய்த்த உச்சவின்பத்தை நான் உணர்ந்திடவில்லை. நான் அவனல்லாத மற்றோருடன் சரசமொழி பேசியிருந்தேன். நான் அவனை இரசித்தபடியிருக்கவே விரும்பினேன், மகிழ்விக்க அல்ல. 

தூரத்தேயிருந்து இரசித்திருக்கிற மனத்தூய்மையிலேயே முதற்காதல்கள் மலர்வதாய் எனக்குத் தோன்றுகிறது. முதற்காதலின் சொல்லொணா இனிமை மகிழ்விப்பதற்கான உந்துதலை முளையிலேயே கருக்கிவிடுகிறது. அவனும் என்னையே இரசித்திருந்தான், மற்றாடவர்களுக்கு முரணாக, தளைப்பட்ட உள்ளொளியோடு. எனக்கும் அவனுக்குமிடையில் தீவிரமான ஏதோவொன்று ஊடாடிக்கொண்டிருந்தது. சிலநேரங்களில் என் வனப்புகளை வரவேற்கும் மற்றவர்களிலிருந்து அவன் வேறுபட்டுத்தெரியவில்லை. இருந்தும், ஒரு தீராச்சஞ்சலமாக அவனைப் பற்றியதான எண்ணங்களை என்னால் சொல்லில் வடிக்கமுடியாமலிருந்தது. என்னைப் பற்றியவையையும் அவ்வாறே.

நாங்கள் தேவாலயத்திலிருந்து வெளிவந்தோம். நான் என்னுடைய வேகத்தைக் குறைத்து மிகவும் மெதுவாக நடந்துகொண்டிருந்ததாக ஞாபகம். நான் விட்டுச்செல்லும் அவ்விடத்தையெண்ணி என் மனம் துயர்கொண்டிருந்தது. இன்னவென்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத ஏதோவொன்றை இழந்ததாக என் இதயம் அழுதது. அது எதை இழந்ததென்று இதயத்துக்குத் தெரிந்துமிருக்கலாம். ஏனென்றால், அவ்விடம்விட்டுவிலகும்போது நான் விட்டு விலகிச் செல்கிற அவனைப் பார்க்கவென நான் அடிக்கடி திரும்பியபடியிருந்தேன். அவனும் என் போலவே என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான், என்கதை பேசும் ஒரு பெண்.
(La vie de Marianne- Life of Marianne, Pierre de Marivaux)

2.
அடேலை அவள் வயது வாட்டியபடியிருக்கிறது. தோழிகள் எப்போதும் ஆண்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அவள்பால் ஈர்க்கப்பட்ட அவனோடு சேரச்சொல்லி தூண்டப்படுகிறாள். இருவரின் இசைரசனை பற்றிய ஒரு உரையாடலின் இறுதியில் “நான் இரசிப்பவையை நீ கேட்க நீயும் நானும் இணைந்திருக்க வேண்டும்” என்கிறான் அவன். அந்த இணைப்பில் ஏதோ ஒன்று இல்லாதிருப்பதாக உணர்கிற அடேல், அவனை நீங்குகிறாள். அவனுடன் முதன் முதலில் வெளியே சென்ற, “எப்படி, நேற்றைக்கு அவனோடு களித்திருந்தாயா?” என்று தோழிகள் கிண்டல் செய்த அந்த நாளில் அவள் பார்த்த நீல நிறத்தில் தலைக்கு வர்ணம் பூசியிருந்த அந்தப் பெண் தன்னைப் பாதித்திருப்பதை உணர்ந்துகொள்வதில் அடேலுக்குப் பெருஞ்சிக்கலேதுமில்லை. அவன் போன பின்னான நாளொன்றில் ஒரு சிறுகணத் தடுமாற்றத்தில் இவள் ஒருத்தியை முத்தமிட, அடுத்த நாள் அவளோ “அக்கணம் நடந்ததை நீ பெரிதாக எடுத்துக்கொள்ளாதே. அது அப்போதே முடிந்தது” என்று இவளைப் புறக்கணித்துப் போகையில் வழிகிற கண்ணீரின் வழி அடேல் தன் தேவையுணர்கிறாள்.

அடேல் எம்மா என்ற அந்த நீலச்சிகைப் பெண்ணை தன் தோழனோடு போன Gay Bar தந்த அசூயையிலிருந்து மீளமுயன்று தவறிப்போய் நுழைந்த ஒரு Lesbian Bar உள்ளே மீண்டும் சந்திக்கிறாள். உரையாடிக்கொள்கிறார்கள். 
“நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய், எம்மா?”
“நீயே சொல்”
“நீ ஒரு சிகையலங்காரம் செய்பவளா?”
என்பதாக நீள்கிற அந்த உரையாடல் அவர்களிடையே ஏதோவொன்றை விதைத்துச் செல்கிறது. நான்காம் வருட நுண்கலை மாணவியான எம்மா இன்னொரு பொழுதில் அடேலின் பாடசாலைக்கு வந்து அடேலை “அருகாமையிலிருந்தேன். ஆதலால் உன்னுடன் சேர்ந்து மதுவருந்தலாமென நினைத்தேன்” என்கிறாள். தன் சகாக்களைப் புறக்கணித்து அன்றைய மாலையை எம்மாவுடன் கழிக்கிறாள் அடேல். அடுத்தநாள் தன் சகாக்களால் பழிக்கப்பட்டாலும் எம்மா மீது தீராக்காதல் கொள்கிறாள் அடேல்.

எம்மாவினதும் அடேலினதும் கொண்டாட்டமும், குழப்பமுமான காதல் வாழ்க்கை சுற்றியிருக்கிறவர்களினால் சோதனைக்குள்ளாகிறது. எம்மாவின் குடும்பம் இருவரையும் அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களுடன் ஏற்றுக்கொள்கிறது. அவள் வாழ்க்கையின் பெரும்பேறாகக் கருதும் எம்மாவை “என்னுடைய நண்பி” என்றே அடேலால் அவளது குடும்பத்துக்குள் அழைத்துவரமுடிகிறது. எம்மா இன்னொரு பெண் நண்பியுடன் காண்பிக்கும் நெருக்கம் (அடேலின் பார்வையில்) தன்னுடைய சக ஆசான் ஒருவனுடன் அடேலை இணையத்தூண்டுகிறது. அந்த இன்னொரு பெண் நண்பியுடன் சாதாரணமான நட்பிலிருக்கும் எம்மா அடேல் தன்னை ஏமாற்றுவதைக் கண்டுகொள்கிறாள். அந்த சகாவின் வாகனத்திலிருந்து இறங்கிவரும் அடேல் எம்மா வாசலில் இறுகிய முகத்தோடிருப்பதைக் காண்கிறாள்.

என்னுடைய நண்பர்களோடு குடிக்கப்போயிருந்தேன் எம்மா. ஏன் வேலை முடிந்ததும் என்னை நீ அழைக்கவில்லை? உன்னை யாராவாது கொண்டுவந்து இறக்கிவிட்டுப்போகிறார்களா அடேல்? ம். யாரது? என்னுடன் வேலைபார்க்கும் ஒரு பெண். ஒரு பெண், ஆ? ஆம். எதற்காகப் பொய்யான முகவரியில் இறக்கிவிட்டாள்? நான் ஒரு பெண்ணுடன் வாழ்வதை அவள் தெரிந்துகொள்ள வேண்டாமென்பதாக நான் நினைக்கிறேன். உண்மையாகவா? நான் ஏன் உன்னுடன் இரகசியம் பேசிக்கொண்டிருக்கிறேன்? (மெல்லிய புன்னகை) ஆக, ஒரு லெஸ்பியனாயிருப்பது உனக்கு வெட்கம் தருவதாயிருக்கிறது? அப்படியில்லை, ஆனால் என் சகாக்களுக்கு அதைச் சொல்லவேண்டியதில்லைத்தானே? பிறகு அவர்கள் புறங்கூற ஆரம்பிப்பார்கள் அல்லவா? . நான் இதுகுறித்து வெட்கமடைவதாக நீ நினைக்கிறாயா? யாரவன்? யார்? உன்னை இறக்கிவிட்டுப் போனவன்? ஒரு சகா. என்னை முட்டாளென்கிறாயா? நான் அதைப் பார்க்கவில்லையென்கிறாயா? சொன்னேனே எம்மா, அவன் ஒரு சகா. நான் அவனைப் பார்த்தேன். ஆம், நாங்கள் ஒன்றாகப் பணிசெய்கிறோம். விரும்பினால் வந்து பார். அவன் இன்னொரு வகுப்பின் ஆசான். எப்போதிருந்து அவனைத் தெரியும் உனக்கு? ஏன், அங்கே பணிபுரிகிற காலத்திலிருந்தே தெரியும். ஏன்? உண்மையாகவா? ஏனடி பொய் சொல்கிறாய்? இல்லையே. பின்னர் ஏனடி அழுகிறாய்? நான் அழவில்லையே? பிறகேனிந்தக் கண்ணீர்? நான் களைத்திருக்கிறேன். நான் முட்டாளில்லை அடேல். எப்போதிருந்து நீ அவனோடு படுத்துவருகிறாய்? இல்லை எம்மா. நான் அவனோடு படுத்ததில்லை. எப்போதிருந்தடி நீ பொய் சொல்லத்தொடங்கினாய்? எம்மா, நான் அவனோடு படுத்ததில்லை. “......” குடிபோதையில் ஒருமுறை முத்தமிட்டோம் எம்மா. அவ்வளவுதான். பிறகேன் அழுகிறாய்? நான் வருத்தப்படுகிறேன். புழுகாதே புழுவே. நான் சத்தியம்செய்கிறேன். எப்போதிருந்தடி அவனோடு படுக்கிறாய்? இல்லை எம்மா.....சொல்லடி... எத்தனை தரமடி அவனோடு புணர்ந்திருக்கிறாய்? சொல்லடி..... எப்போதிருந்து என்னிடமே பொய் சொல்ல ஆரம்பித்தாய்? எப்போதிருந்தடி என்னை ஒரு முட்டாளென நினைத்தாய்? நான் அப்படி நினைத்ததேயில்லை எம்மா. வெளியே போடி... ஒரு புழுகி என்னோடிருக்க வேண்டியதில்லை. உன்னுடைய பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு இப்போதே வெளியே போடி. “....” தொலைந்து போ. இரண்டு மூன்று முறை அவனோடு புணர்ந்திருக்கிறேன் எம்மா. எனக்குச் சரியாக ஞாபகமில்லை. இரண்டு மூன்று தடவையா??? நான் உனக்குச் சொல்லவில்லை எம்மா. என்னால் அதை உனக்கு விளங்கப்படுத்த முடியாதென்பது எனக்குத் தெரியும். நான் செய்வது முட்டாள்தனம் என்பதும் எனக்குத் தெரியும். நான் தனிமைப்பட்டிருந்தேன் எம்மா. அவனோடு காதல்வயப்பட்டிருக்கிறாயா? இல்லவே இல்லை எம்மா. நான் தனிமைப்பட்டிருந்ததாய் உணர்ந்தேன். நான் உன்னைக் காயப்படுத்த என்றைக்குமே எண்ணியதில்லை...... என்னை மன்னித்துவிடு... அவன் வெறும் சகா மட்டுமே. அவனோடு படுத்தது ஒரு முட்டாள்தனமான தவறு. “....” நான் சத்தியம் செய்கிறேன் எம்மா. நான் உன்னைக் காயப்படுத்த என்றுமே முனையவில்லை. நான் சத்தியம் செய்கிறேன். அடேல்.... அடேல் நிறுத்து. பொறு..... நீ என்னைக் காயப்படுத்திவிட்டாயடி. இது இவ்வளவுதான். “இல்லவே இல்லை... நான் சத்தியம் செய்கிறேன். நான் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை. அதற்கெனக்குக் காரணமுமில்லை. நீ ஒரு வேசையடி... ஆம், நீ ஒரு வேசை. நீ புணரப்பட விரும்புபவள். இல்லையா? அவனுடைய வாகனத்துக்குள் அவனை ஊம்பிய வாயால் என்னை முத்தமிட்டிருக்கிறாய் இல்லையா?. என்ன துணிவடி உனக்கு. எப்படியடி நீ என்னை முத்தமிடலாம்? எப்படித் தொடலாம்? எப்படியடி நீ என்னை நேருக்கு நேர் பார்க்கலாம்? நீ பொய் சொல்பவள். நீ அசிங்கம். என்னை மன்னித்துவிடு. நீ ஒரு வேசையடி. எனக்கு எப்படி மன்னிப்புக் கேட்பதென்றே தெரியவில்லை எம்மா. உனக்கு மன்னிப்பே இல்லையடி. ஆம்... உனக்கு மன்னிப்பேயில்லை. உன்னை என் வாழ்க்கையில் இனிமேல் பார்க்கவே விரும்பவில்லை. உன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு என் மனையைவிட்டும் என்னைவிட்டும் போ... போய்விடு. உன்னை நான் எதற்குமே காயப்படுத்த விரும்பவில்லை எம்மா. என்னைப் பேசவிடு. அவன் என் வாழ்வில் ஒன்றுமேயில்லை. எனக்கு எல்லாம் நீதான்... என்னைப் பேசவிடு எம்மா. ஒரு வேசைக்கு என் வாழ்விலும், வீட்டிலும் இடமில்லையடி. போடி வெளியே... போ... போ... போய்விடு.

3.
அடேலின் வாழ்க்கை அவளது வேலையோடு நகரத்தொடங்குகிறது. தன்னிடம் கற்கும் குழந்தைகளோடான நெருக்கம் அவளுக்கு மகிழ்வைத்தருவதாயிருக்கிறது. ஆனாலும் அவளின் மனதின் ஆழத்தில் எம்மா என்கிற வடு உறுத்திக்கொண்டேயிருக்கிறது. அவளது மாலைகள் எம்மாவுடன் கழித்த பூங்கா இருக்கைகளில், தனிமையில், கண்ணீரில் கரைந்துபோயின. எம்மா அவளை முழுதும் ஆட்கொண்டிருந்தாள். இந்நிலையில் அவளது எம்மாவை, “நீ ஒரு சிகையலங்காரம் செய்பவளா?” என்று கேட்கவைத்த நீலவண்ணத் தலைமுடியில்லாத எம்மாவை, நீலம் கலந்து அவளை ஓவியமாய் வரைந்த எம்மாவை, நீல உடையணிந்த அடேல் மீளவும் சந்திக்கிறாள்.

நீண்டகாலமாயிற்றல்லவா எம்மா? அமர்ந்துகொள். ”.......” ஏதாவது அருந்துகிறாயா? நிச்சயமாக. நான் ஒரு கிண்ணம் மது அருந்திக்கொண்டிருந்தேன். ஓ..... நீயும் ருசித்துப் பார் எம்மா, உனக்கும் பிடிக்கும். இல்லை... பரவாயில்லை. நான் உன்னுடைய சிற்றப்பாவை அழைத்திருந்தேன். அவர் உனக்குப் பிடிக்குமென்று சொன்னார். (சிரிப்பு) சொல்லு, உனக்கு என்ன வேண்டும். ம்ம்ம்ம்... எனக்கு ஒரு கோப்பி போதுமானது. நன்றாயிருக்கிறாயா? ஆம்.. நீ.. நீ எப்படியிருக்கிறாய் அடேல்? இருக்கிறேன் எம்மா. உன்னுடைய தலையை நீ புதுவிதமாக வாரியிருக்கிறாய், நன்றாயிருக்கிறது. (சிரிப்பு) ஆனால், இந்தச் சிகையலங்காரம் என்னை வயது முதிர்ந்தவளாகக் காட்டிகிறது. அப்படியெல்லாமில்லை, நீ இளமையாகவே தென்படுகிறாய். நான் ஒரு சிறுமியாயில்லாமல் ஒரு பெண்ணாக என்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறேன். என்னுடைய சிகையை மாற்றுவதன் மூலம் என்னை முதிர்ந்தவளாக இச்சமூகத்தில் நிலைநாட்டலாம் என்றெண்ணினேன். அது பிழையாகிவிட்டது. இல்லையே. உனக்கிது அழகாயிருக்கிறது. வயதும் முதிர்ச்சியும் நாம் நினைப்பதைவிட வேகமாகவே எம்மால் எய்தப்பெறுகின்றன. உண்மையாகவா? நான் ஒருவர் தன்னை முதிர்ந்தவராகக் காட்டிக்கொள்ளச் செய்கிற எத்தனங்களை விரும்புவதில்லை. (பெருமூச்சும் சிறு புன்னகையும்) உன்னுடைய ஓவியக் கண்காட்சிகளெல்லாம் எப்படி? நன்றாய்த்தான் போகின்றது. இன்னும் சொல்லு. அவற்றை ஒருங்கிணைப்பதில் நிறைய இடர்கள். பத்திரிகையாளர்கள்.... பத்த்திரிகைகள்... ம்ம். வெற்றிக்கான விலை எம்மா. உன்னைப் பற்றி உன்னுடைய ரசிகர்கள் இணையத்தளங்களில் எழுதுவதை நான் வாசிப்பதுண்டு. உன்னுடைய புதிய ஓவியங்களை நான் பார்ப்பதுமுண்டு. உண்மையாகவா? ஆம். அவை என்னை வசீகரிப்பவை. புதியவை ஆனால் பழையவை....ம்ம்ம் எம்மா, என்னால் சரியாக விளக்கமுடிவதில்லை. என்னிடம் பணம் சேர்ந்ததும் அவற்றில் ஒன்றை நான் வாங்கவேண்டும். ஏ... உனக்கு நான் ஒன்றைத் தருவேன் அடேல். இல்லை எம்மா, நான் உனக்குத் தரவேண்டும். சீச்சீ... இல்லை. அது எனக்கு முக்கியம். என்னையே தரவேண்டும் உனக்கு. “.............................” சேச்சே... அது ஒரு பகடி. மிக மோசமான பகடி. இருந்தாலும் பகடி. சிரிப்பூட்டுகிறாய் நீ..... உன்னுடைய வாழ்க்கை பற்றிச் சொல் அடேல். இப்போதும் குழந்தைகளோடுதான் என் வாழ்வு. இப்போது முதல் வகுப்பு மாணவர்களோடு என் நேரம் கழிகிறது. நான் இன்னும் ஆரம்பநிலையிலிருந்தாலும் மிகப் பெருமிதமடைகிறேன். என் குழந்தைகள் சிறப்பானவர்கள். விடுமுறைக்காலங்களில் இயலாத குழந்தைகளுக்கு உதவும் ஒரு குழுவுடன் இயங்குகிறேன். அவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்கள். அவர்களுக்கு உதவுவ்து பெரும் நிம்மதி தருவதாயிருக்கிறது. என் நேரத்தில் பெரும்பகுதி என் மாணவர்களோடேயே கரைகிறது. உனக்கென்று நேரம் ஒதுக்குவதில்லையா நீ? வெளியே போவதில்லையா? போகிறேன். என் சகாக்களுடனும் அவர்களின் குழந்தைகளுடனும். ஆனாலும்.... நான் இன்னும் தனியாகத்தான் என் வீட்டுக்குப் போகிறேன். நான் தனித்திருக்கிறேன். காதலன்?காதலி? இல்லை. சில முட்டாள்தனமான அரைகுறை உறவுகள் இருந்ததுண்டு. நிரந்தரமாய் எதுவுமேயில்லை. நீண்ட உறவொன்று சிக்கலானது என்றெனக்குத் தெரியும். இன்னும் நீ அந்தப் பெண்ணோடு தான் இருக்கிறாயா? லிஸ்? ஆம். ஆம். சந்தோசமாயிருக்கிறாயா? ஆம். அவள் நல்ல பெண்தானே? ஆம். அவள் உனக்கு இரவில் நீ வீடுவரும்போது சமைத்துத் தருவதையும் காலையில் மலர்கள் தருவதையும் என்னால் எண்ணிப்பார்க்கமுடிகிறது. அது அவள் பாணி. அவளது குழந்தைக்கும் எனக்கும் நிறைய ஒத்துப்போகும். மூன்றுவயதாகும் அக்குழந்தையும் நானும் செய்கிற கோமாளித்தனங்களுக்காக லிஸ் எங்களைத் திட்டுவதுண்டு. உண்மையாகவா? இருக்காதா? ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் சும்மாவா? (மௌனம்... புன்னகை) அப்போ உடலளவில் எப்படி? திருப்தியாயிருக்கிறாயா? ம்ம்ம்ம்... அது. சிறப்பாயில்லையா? ம்ம்ம் புதுமையாயில்லையா?....ம்ம்ம்... அது வந்து... உன்னுடன் இருந்த மாதிரியில்லை அடேல். (நீண்ட மௌனம்) எம்மா, இந்நாட்களில் உன் இன்மையை நான் உணர்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் தீண்டுமின்பத்துக்காக ஏங்கியிருக்கிறேன். ஒருவரைப் பார்க்காமலிருப்பதையும், என்மூச்சும் உன் மூச்சும் கலக்காமலிருப்பதையும் எண்ணி நொந்து போயிருக்கிறேன். எனக்கு எப்பொதும் நீ வேண்டும். நீ மட்டுமே வேண்டும் எம்மா. என்னை உன்னைத் தீண்டவிடு எம்மா....நிறுத்து அடேல். இல்லை எம்மா... நான் வேண்டாம் என்று சொல்லாதே. உன்னால் அது முடியாதென எனக்குத் தெரியும். என்னை, என் யோனியைத் தொடு எம்மா... வா. இல்லை அடேல். என்னால் அது முடியாது. நீ என்னை மன்னிக்கவே மாட்டாயா எம்மா? இல்லை அடேல். உன்னை நான் எப்போதோ மன்னித்துவிட்டேன். அப்படியானால் ஏன்? என்னை இனிமேல் பார்க்கவே மாட்டாயா எம்மா? மாட்டேன். அப்படியானால் நீ என்னை மன்னிக்கவெயில்லை. இல்லையில்லை. நான் மன்னித்துவிட்டேன். அப்படியானால் என்மீது உனக்கு இப்போது காதலில்லையா எம்மா? இல்லை அடேல். உனக்கே தெரியும் நான் லிஸ்சுடன் வாழ்வது. அளவுகடந்த மென்மையான அன்பு எனக்கு என்றுமே என்மீது இருக்கும் அடேல். ஆனால், என்னால் உன்னைக் காதலிக்க முடியாது.

4.
இதமான நீலவண்ண ஆடையணிந்து எம்மாவின் ஓவியக் கண்காட்சிக்குப் போகிற அடேல் லிஸ்சைக் காண்கிறாள். எம்மாவுக்கும் லிஸ்சுக்குமான நெருக்கத்தைக் காண்கிறாள். அவள் வாழ்வின் ஒரே காதல் அடிபடக் காரணமான பழைய சகாவையும் காண்கிறாள். எம்மாவின் தூரிகை ஓவியமாய் இதமான நீலவண்ணக் கலவையோடு தன்னைக் காண்கிறாள். அந்த ஓவியக் கண்காட்சிச் சாலையை விலகி நடக்கத் தொடங்குகிறாள். Marianne தேவாலயத்தை விட்டு விலகியது போலன்று தன் நடையின் வேகத்தைக் கூட்டி நடக்கத் தொடங்குகிறாள். ஆனாலும், அவள் விட்டுச்செல்லும் அவ்விடத்தையெண்ணி அவள் மனம் துயர்கொண்டிருந்தது. இன்னவென்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத ஏதோவொன்றை இழந்ததாக அவள் இதயம் அழுதது. அது எதை இழந்ததென்று அவ்விதயம் அறிந்தேயிருந்தது.

5. 


2013 Cannes திரைப்பட விழாவில் Palme D'Or விருது பெற்ற Blue is the Warmest Colour என்கிற படம் அடேல் என்கிற இளம் பெண்ணின் வாழ்வில் வந்துபோகிற அவளின் ஒரே காதல் பற்றிய படம். தெருவில் நான்குபேரைப் போட்டு மாட்டை அடிக்கிறமாதிரி ஒருவன் அடிப்பதைப் பார்த்து உதட்டைச் சுழித்து, கிறங்கிய குரலில் “யோவ், உன்னை எனக்குப் பிடிச்சிருக்கய்யா” என்று வசனம் பேசி அடுத்த கணமே வெளிநாட்டில் அறுபது பேரோடு ஆடுவது “காதல்” என்று காட்டப்பட்ட படங்களைப் பார்த்துக்காதல் செய்பவர்களை இப்படம் ஈர்க்காது. ஒருபால் ஈர்ப்புடையவர்களை “ஒருபால் புணர்ச்சியாளர்கள்” என்று எழுதுகிற சமூகத்திடம் இப்படம் எடுபடாது. உதாரணம், ஒரு பால் ஈர்ப்புக் குற்றம் என்று நீதிமன்றம் சொல்ல அதற்கு எதிராகப் பேசுகிறேன் என்று “ஒரு பால் புணர்ச்சியளர்கள்” என்று எழுதும் முற்றுமறிந்த மூதறிஞர் அ.மார்க்ஸ் வாழும் சமூகத்தைச் சொல்லலாம்.ஒரு தமிழ்ப்பெண் ஒரு ஆபிரிக்க அமெரிக்கரோடு காதல்வயப்பட்டமையைக் குற்றமாயும் அதை அவர் பொதுவாழ்க்கையின் களங்கமாயும் பார்க்கிற படித்தசமூகமும் இன்னொரு உதாரணம். புதிதாகக் கட்டிய பாடசாலைத் தங்கும் விடுதிக்குப் பக்கத்தில் வீடொன்று வந்தால் காதலும் வரும் அதனால் களங்கமும் வரும் என்கிற மேதைச் சமூகத்தையும் சொல்லலாம். இவர்களைவிடுத்து காதல் என்கிற இயல்பான அந்த மானுட யதார்த்தத்தை, அது தரும் சுகத்தை, சேராக்காதல் தரும் வலியைக் கொஞ்சமாவது உணர்ந்தவர்களுக்கு இப்படம் ஒரு நல்ல அனுபவம். 

சினிமா ஒரு காட்சியூடகம். உரையாடல்கள் தேவைக்கேற்றபடி பயன்படுத்தப்பட வேண்டும். திரையில் ஒரு பாத்திரம் தன் நண்பனுக்கு செல்பேசவேண்டுமென்றால் செல்பேசியை வெளியே எடுத்துக் காதில் வைத்துப் பேச ஆரம்பித்தாலே போதுமானது. “எங்க, மச்சானைக் காணோம். எதுக்கும் என் செல்லை எடுத்துக் கூப்பிட்டுறுவோம்” என்ற வசனம் இக்காட்சியில் வருவது ஏதோ விளையாட்டுப்போட்டியை நேரடி வர்ணனை செய்வது போல இருக்கும். இப்படியான காட்சிகளுக்கு உரையாடல் எழுத ஒரு வசனகர்த்தா வெட்கப்படவேண்டும். Abdellatif Kechiche இன் Blue is the Warmest Colour கூர்மையான உரையாடல்களின் கொண்டாட்டம். அதுவும் கொஞ்சமாவது இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு (குறிப்பாக பிரெஞ்சு இலக்கியம்) இவ்வுரையாடல்கள் மிக நெருக்கமானதாயிருக்கும். காட்சியூடகம் ஒன்றில் உரையாடல்கள் எவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு இந்தப் படம் நல்ல எடுத்துக்காட்டு. 

படத்தில் மிகவும் அப்பட்டமான சில காட்சிகள் இருக்கின்றன. அக்காட்சிகள் வேண்டாதவர்கள் தணிக்கை செய்யப்பட்ட பதிப்புகளைப் பார்க்கலாம். அடேலும் எம்மாவும் காதல் செய்கிற ஒரு காட்சி கிட்டத்தட்ட ஏழெட்டு நிமிடம் திரையில் ஓடும். ஒலகப்பட ரசிகர்கள் “அட்லீ” “லியா” என்று அடேலையும் எம்மாவையும் சொல்கிறார்கள். அடேலாக நடித்தவர் Adele Exarchopoulos, எம்மாவாக நடித்தவர் Lea Seydoux. அந்தளவுக்குக் காட்சிகள் அவர்களைக் கதையோடு ஒன்றாமல் செய்திருக்கின்றன என்றால் பாருங்கள். குடும்பத்தோடெல்லாம் பார்க்கமுடியாத படம் இது. ஆனாலும், காதலிப்பவர்களும் காதலித்தவர்களும் தவறவிடமுடியாத காதலுக்கேயான படம் இது.