Saturday 26 November 2011

தமிழ் விக்கி ஊடகப் போட்டி: எழுத்து மட்டுமே அறிவன்று

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

குறிப்பு:பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.

Friday 18 November 2011

சமூக மாற்றத்துக்கான கல்வி- மேட்டிமைப்படுத்தலுக்கான கல்வி: முரண்கள்

சமூக ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் இல்லாமல் அழித்தொழிக்க சிறந்த ஒரே ஒரு ஆயுதமாகப் பார்க்கக்கூடியது கல்வி. கனடாவில் நடைபெற்ற குமார் மூர்த்தியின் பத்தாவது ஆண்டு நினைவு விழா அன்று பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ‘கல்வியும் சமூகநீதியும்’ என்கிற பெயரில் ஆற்றியிருந்த சிறப்புரை இதுபற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டிருந்தது. சின்னத்தம்பி அவர்களின் உரையானது பெரும்பாலும் உயர்கல்வியைச் சம்பந்தமானதாகவே இருந்தது. இருந்தபோதும், எனது அனுபவத்தில் எங்களுடைய சமூகத்தில் சமூக நீதிக்கு உதவவேண்டிய கல்வியில் ஆரம்பநிலைகளிலேயே கோளாறுகள் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னுடைய இளமைப்பருவத்தின் வளர் ஆக்கம் நாடக்கூடிய காலப்பகுதி யாழ்ப்பாணத்திலேயே கழிந்தது. வடமராட்சியில் பருத்தித்துறைப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஹாட்லிக் கல்லூரியில் ஆறாம் வகுப்புத் தொடக்கம் பதின்மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். வடமராட்சியில் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்பதென்பது பெரும் பேறாகவே கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஹாட்லிக்கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி என்றவாறே “பெரிய பள்ளிக்கூட” வரிசை அமைந்திருந்தது. அதே போல் மகளிர் கல்லூரிகளுக்கும் பருத்தித் துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பதாக அந்த வரிசை அமைந்திருந்தது. இங்கே உச்சாணிக்கொப்பாக இருக்கிற ஹாட்லிக் கல்லூரி, மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரி மற்றும் வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும், யாழ்ப்பாணத்தின் ஏனைய “பெரிய” பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் என்னைப் பொறுத்தவரை இன்றுவரைக்கும் சமூகநீதி நோக்கிய கல்வியும், சமூகநீதி தொடர்பான பார்வையும் இருந்ததில்லை என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். அதற்கான காரணங்களை வருகிற பகுதிகளில் ஆராய்வோம்.

இந்தப் பாடசாலைகளில் தமது பிள்ளைகள் கல்வி கற்பதை பெருமையாகக் கருதுகிற மனப்பாங்கு எங்கள் பிரதேச மக்களிடம் இருக்கிறது. அதற்குக் காரணம், இந்தப் பாடசாலைகளில் தரத்தில் மிகவும் உயர்ந்த கல்வி கிடைப்பதாக கட்டமைக்கப்பட்ட விம்பமேயாகும். இதை ஒரு விம்பம் என்று எப்படிக் குறிப்பிடமுடியும் என்று இங்கே கேள்வியெழுப்பல் அவசியமாகிறது. தனியார் பாடசாலைகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகிற நாடுகளில் (இந்தியா) கல்வித்தரம் பற்றிய பிரச்சினைகள் இருக்கும். ஆனால், ஒரே பாடத்திட்டம் அமுலில் இருக்கக்கூடிய இலங்கைப் பாடசாலைகளான ஹாட்லிக் கல்லூரிக்கும், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் கல்வித் தரத்தில் அப்படிப் பெரிதாக என்ன வித்தியாசத்தை எம்மால் எடுத்துச் சொல்லிவிட முடியும்? நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் வாழ்ந்த நான் தினமும் 20 கிலோ மீற்றர்கள் பயணம் செய்து ஹாட்லிக்கல்லூரிக்குச் சென்றதும், ஹாட்லிக் கல்லூரி இருக்கிற பிரதேசத்தில் இருக்கிற என் வயதொத்த இன்னொரு மாணவர் அதே இருபது கிலோ மீற்றர்கள் பயணம் செய்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்குப் படிக்க வந்ததும் மிகவும் முரண்பாடான கேள்விகளைத் தோற்றுவிப்பது தவிர்க்கமுடியாதது. மேலும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை விட ஹாட்லிக் கல்லூரியில் படித்தால் எனது பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் என பெற்றோர்கள் நம்புவதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கமுடியுமா என்று கேட்டால், காரணம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஹாட்லிக் கல்லூரியில் மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான “மேல்தட்டு” பாடசாலைகளில் இதற்கான திட்டமிடலும், செயற்பாடுகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சமூக அக்கறையோடு உற்று நோக்குகிற யாருமே விளங்கிக்கொள்ளலாம்.

இந்தப் பாடசாலைகள் பெரும்பாலும் ஆறாவது வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஒத்த நடைமுறைகளையே பயன்படுத்துகிறார்கள். தற்போதைய நிலமையில் எந்தப் பாடசாலைகள் யார் யாரை தமது பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை இவர்கள் பயன்படுத்திய அதே நடைமுறையை உத்தியோகபூர்வமாக்கியிருக்கிறது கல்வித் திணைக்களம். இன்றைய நிலையில் இப்பாடசாலைகளில் ஆறாம் வகுப்பில் சேர்கிற மாணவர்கள் அவர்களது ஐந்தம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தப் பரீட்சை ஒரு மாணவனின் எதிர்காலத்தைக் கல்வியியல் ரீதியாகத் தீர்மானிக்காவிட்டாலும், சமூகவியல் ரீதியாகத் தீர்மானிப்பதில் ஓரளவுக்காவது செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது,  இலகுவாக நல்ல பெறுதிகளைப் பெறக்கூடிய மாணவர்களை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுதல் அல்லது பெறுபேறுகளைப் பெற முடியாதவர்களை வெளியே தள்ளிவிடல் என்பது காலம் காலமாக இத்தகைய பாடசாலைகளில் நடைபெற்று வருகிறது. அதன் பின் இப்படியான பாடசாலைகளில் திறமைக்குப் புறம்பாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் சமூகத்தில் மேன்மையான நிலையில் இருக்கக்கூடிய மக்களின் பிள்ளைகள். இப்போது யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளின் அனுமதிகிடைப்பது பெற்றோர் கொடுக்கக்கூடிய நன்கொடையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்படி வடிகட்டி எடுக்கப்படுகிற மாணவர்கள், எப்படியாவது முட்டிமோதி சமூகத்தில் நல்லநிலைக்கு, செல்வாக்குள்ளவர்களாக வருகிறார்கள். அதிலும் முக்கியமாக, கல்வித்துறையில் இம்மாணவர்கள் சேவையாற்ற வரும்போதுதான் சமூகநீதிக்கான கல்வி பற்றிய கோட்பாடுகள் ஆட்டம்கண்டு போகின்றன. 

மேற்படி பாடசாலைகளுக்கு வலுவான பழைய மாணவர் சங்கங்கள் உண்டு. மேலும், கோட்டக் கல்வித் திணைக்களம், வலயக் கல்வித் திணைக்களம் போன்ற கல்வி நிருவாகவியல் சார்ந்த தளங்களிலும் இப்பாடசாலைகளின் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள் அல்லது அந்தத் தளங்களில் இருப்பவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய தளங்களில் பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இங்கேதான் சமநிலை முற்றாகக் குழம்பிப் போகிறது. நல்ல பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்கள் என வடிகட்டப்பட்ட இந்த மாணவர்களுக்கு, நல்ல ஆசிரியர்கள், நல்ல திட்டங்கள் போன்ற எல்லாமே நல்லதாகக் கிடைக்க ஆரம்பிக்கிறது. அப்படிக் கிடைக்கத் தொடங்கியதும் அவர்கள் தருகிற பெறுபேறுகளும் நல்லவையாகவே இருக்கின்றன. இதன் மூலம் இப்பாடசாலைகளின் மேட்டிமைத்தனம் மேலும் மேலும் நிரூபணமாகி வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பாடசாலைகளில் அடித்தட்டைச் சேர்ந்த சிறிய தொகையேயான மாணவர்கள் ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமாம்’ என்பது போல பயனடைகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தபோதும் இப்படியான கல்விமுறையானது திரும்பத்திரும்ப ஒரு மேட்டிமைச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலேயெ முன்னிற்கிறது என்பது வெட்ட வெளிச்சம். இதை உடைப்பதில் பெரும் தடையாக இருப்பது இந்தப் பாடசாலைகள் தம்மைச் சுற்றி எழுப்பிவைத்திருக்கிற ஒளிவட்டமும், இந்தப் பாடசாலைகளில் கற்று வெளியேறுகிற மாணவர்களின் மத்தியிலே இயல்பாகவே விதைக்கப்படும் மேட்டிமைத்தனமுமே என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், பாடசாலைகளுக்கு வளங்களை ஒதுக்குவதில், முக்கியமாக பாடசாலைகளின் முக்கிய வளமான ஆசிரியர்களை ஒதுக்கும்போது கல்வித் திணைக்களம் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வது கண்கூடு.  நண்பர் ஒருவர் ஒருமுறை பேசும்போது “வடமராட்சி கிழக்கில இருக்கிறவனுக்கு எல்லாம் என்னத்துக்கு நல்ல வாத்திமார். அவங்களைத் தூக்கி எங்கட பள்ளிக்கூடங்களில போட்டாத்தான் சரி. அப்பிடியெண்டாத்தான் கூடப்பேர் யூனிவேசிற்றி போவாங்கள்’ என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. வளங்கள் மறுக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் கூடிய வளங்களைக் கொடுப்பதில் உரிமைகள் மறுக்கப்பட்ட நாங்களே எவ்வளவு மோசமான மனோநிலையுடன் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியதும் வெட்கப்படவேண்டியதுமான ஒரு செயலே.

இன்றைக்கு ஓரளவுக்கு இந்த நிலையில் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்திருப்பதற்கு முக்கிய காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களையே (Tuition Centers) பார்க்கலாம். யாழ்ப்பாணத்தில் அதிகளவு பணம் புரள்கிற ஒரு தொழிலாக இந்தத் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் தொழில்களைப் பார்க்கலாம். அதற்காக அந்தக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் மீது முழுமையாக நாங்கள் பழிபோட்டுவிட முடியாது. இன்றைக்குக்கூட ‘குரு-சிஷ்ய’ உறவுக்கு மேலாக ‘பெற்றோர்-பிள்ளை’ உறவு போலத் தொடர்கிற இந்தத் தனியார் கல்விநிலைய ஆசிரியர்- மாணவர் உறவைக் காணமுடியும். முழுமையான அர்ப்பணிப்போடு கற்பிக்கிற அந்த ஆசிரியர்களை இந்த சமூகநீதி தொடர்பான பார்வையின்மைக்குக் காரணமான குற்றவாளிகளாகக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. கல்வி சந்தைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இருந்த முழுச் சமூகமும் இந்த விடயத்தில் குற்றவாளிகளே. கல்வியின் சந்தைத் திறலைச் சரியாக உணர்ந்துகொண்ட சில தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் வந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பற்றிக்கொண்டார்கள். இந்த நிறுவனங்கள் மேற்படி மேற்றட்டுப் பாடசாலைகள் உருவாக்கிய மாயவிம்பத்தை ஓரளவுக்குச் சரிசெய்தாலும், அவை இன்னொருவகைச் சமச்சீரற்ற தன்மையை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனிலிருக்கக்கூடிய வேறுபாடுகளை இந்தத் தனியார் நிறுவனங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதாவது நன்றாகச் சொல்லித்தரக்கூடியவராகக் கருதப்பட்ட ஆசிரியர்களை இந்நிறுவனங்கள் வடிகட்டித் தமதுடமைகளாக ஆக்கிக்கொள்ளத் தொடங்கின. இந்நிலை காரணமாக இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கூட மேலே சொன்ன ‘மேற்றட்டுப் பாடசாலைகள்’ மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கு இடையே இருந்த சமச்சீரற்ற தன்மை இக்கல்வி நிலையங்கள் மத்தியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

இந்த சமச்சீரற்ற தன்மையை மாற்றுதல் தொடர்பில் மிகச் சிலரே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக என்னோடு இதே சமூகத்தில் படித்து பொறியியலாளராக (அதாவது, எமது சமூகத்தின் மேன்மை மிகு தொழில் செய்பவராக) இருக்கிற நண்பர் ஒருவர் கல்வியின் சமூகநீதி தொடர்பான பாத்திரத்தை மறுதலிக்கக்கூடிய கல்வியியலாளர்களை நோக்கிக் காட்டமான ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார். 1985 ம் வருடம் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கான பொறியியல் பீடம் பற்றி வைத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற மோசமான குழிபறிப்புகள் பற்றியதாகவே அவரது கேள்வி அமைந்திருந்தது. அது தொடர்பில் அவர் எழுதிய பத்தியின் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம்
ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்
கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன்
அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.
 
மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.
மேற்படி துரைராசா அவர்களின் பிரேரணை ஓரளவுக்காவது கைகூடி வருவதைத் தடுப்பதில் முன்னிற்பவர்கள் யாரென்று பார்த்தால், கல்வி மூலமாகத் தம்மை மேட்டிமைப்படுத்திக்கொண்ட கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரே. நல்லவேளை, மேற்படி நண்பர் போன்ற பரந்துபட்ட பார்வையுள்ளவர் சிலரும், சமூகம் தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்கிற ஆர்வலர் சிலரும் இருப்பதாலேயே ஓரளவுக்காவது பாதிக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச நியாயமாவது கிடைக்கிற சாத்தியக்கூறுகள் பற்றிய நம்பிக்கைகள் இன்றைக்கும் குறைவின்றி இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எம்மிடையே வாழ்கிற எமது சகோதரர்களையே முறையற்ற ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வந்திருக்கிறோம். இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளை, வன்கொடுமைகளை இல்லாமலொழிக்கக்கூடிய வல்லமை மிகுந்த ஒரே ஆயுதம் கல்வி. சமூக மாற்றத்துக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட எமது இன விடுதலைக்காகவும் அனைவருக்குமான கல்வி அத்தியாவசியமாகிறது. இவ்வாறாக மனித நாகரிகத்தின் முக்கிய கூறான கல்வி சந்தைப் பொருளாவதையும், அது சரியான முறையில் கிடைக்கவேண்டியவர்களுக்குக் கிடைக்காமலிருப்பதையும் கண்டுகொள்ளாமல், கிடைக்கிற வரைக்கும் இலாபம் என சிந்திக்கும் திறணை, பகுத்தறிவைத் தன்னுள்ளே கொண்ட மனித குலம் சுரணையற்றிருப்பது மானுட குல வரலாற்றில் அழியாத கறை.