Monday 12 October 2009

பிள்ளைகளின் சுயவெளி

சென்ற செவ்வாய்க்கிழமை, மருமகனை மிருதங்க வகுப்புக்கு அழைத்துச் சென்றிருந்தேன். வகுப்பு நேரம் தொடர்பாக ஆசிரியருடன் உரையாட வேண்டியிருந்தது. உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்களைக் கடந்து போன ஒரு மாணவனைப் பார்த்து உயர்ந்த குரலில், ‘உப்பிடியெல்லாம் வகுப்புக்கு வரேலாது. எங்கை அம்மா, எங்கை அப்பா?' என்று அதட்டினார். என்னவென்று திரும்பிப் பார்த்தால், அந்த மாணவன் கொஞ்சம் ‘ஸ்ரைலாக' தலைமயிர் வெட்டியிருந்தான். ‘உப்பிடி எல்லாம் பிள்ளைகளைக் கொண்டுவரக்கூடாது பாருங்கோ. உப்பிடி பிள்ளை வளக்கிறதெண்டா காரில ஏத்தி ரவுடியளோட விடுங்கோ. இஞ்ச அனுப்பவேண்டாம்' என்று கூட்டிவந்த தாய்க்கும் ஏச்சு விழுந்தது. நான் பேசாமல் என்னுடைய காருக்குள் வந்துவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் தாயும் மகனும் வெளியே வந்தார்கள். இருவருக்கும் முகம் கறுத்திருந்தது. எங்கோ வெளியே போனார்கள். ஒரு அரை மணித்தியாலத்தில் திரும்பி வந்தார்கள். அந்த மாணவனின் தலைமயிர் ஒழுங்காகத் திருத்தி வெட்டப்பட்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. ஆசிரியர் செய்தது சரியா தவறா என்கிறமாதிரியான ஒரு விவாதம் என மனதுக்குள்ளாக எழுந்தது. அந்த ஆசிரியர் மட்டுமல்ல, பல பெற்றோர்களும் மகன்கள், மகள்களின் உடைகள் தடக்கம் பல விஷயங்களில் அவர்களின் சுயவெளிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக எனக்குப்படுகிறது.

பெற்றோர்கள் பலர், தம்முடைய பதின்ம வயதுப் பிள்ளைகளின் உடைத் தெரிவில் பயங்கரமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இங்கே பால் வேறுபாடு என்கிற கதைக்கே இடமில்லை. ஆனால் பிள்ளைகள் தம் சகபாடிகள் போல் உடை உடுத்துவதற்கு ஆசைப்படுகின்றன. காது குத்திய எல்லா ஆண் பிள்ளைகளும் ‘ரவுடி' என்கிற ஒரு பெரிய வட்டத்துக்குள் வந்துவிடுவது வழமையாகிவிட்டது. அதே நிலையில்தான் சிகையலங்காரமும். சில பெற்றோர் இதற்காகவே தலைமயிர் வெட்டும் இயந்திரங்களை வீட்டில் வாங்கிவைத்து பிள்ளைகளுக்கு தாமே சிகையலங்காரம் செய்கிறார்கள், அல்லது முடிதிருத்தும் இடத்தில் தங்களின் சிகைபோலவே வெட்டிவிடச் சொல்கிறார்கள். இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும், பிள்ளையின் சுயவெளியில் இவர்கள் நுழைவதால் வரும் பெரிய பிரச்சினைகளுக்கு இந்தச் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் காரணமாகின்றன.

இப்படியான அத்துமீறல்களுக்கு (பிள்ளைகளின் பார்வையில்) சில காரணங்களைப் பெற்றோர் முன்வைக்கிறார்கள். காது குத்தும், விதம் விதமாக தலையலங்காரம் செய்யும், வித்தியாசமாக உடையணியும் பிள்ளைகளை குழுமங்களில் சேர்ந்து நாசமாகிப் போயிருக்கும் இளைஞர்கள் தங்களவர்களாகப் பாவித்து, குழுமங்களுக்குள் இழுத்துப் போய்விடுகிற அபாயம் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஒரு பிள்ளையின் நடத்தை சமூகத்தால் தீர்மானிக்கப்படும்போது, இப்படியான உடை, சிகை மற்றும் இன்னபிற அலங்காரங்கள் குறிகாட்டிகளாகத் தொழிற்படுவதாக பல பெற்றோர் நம்புகிறார்கள். சற்றே கூர்ந்து பார்த்தோம் என்றால், அவர்களின் பயத்திலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த ஆசிரியர் அன்றைக்குச் செய்தது ஒரு வகையில் ஒரு பதின்ம வயதுப் பையனின் சுய வெளிக்குள் அத்துமீறி நுழையும் ஒரு செயலாகவும் பார்க்கப்படலாம். அதேவேளை, பெற்றோரின் கண்ணோட்டத்தில் தன்னிடம் படிக்கிற மாணவன் வழிதவறிப் போகாமல் இருக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாகக்கூட பார்க்கப்படலாம். கலாசார இடைவெளி, வயது இடைவெளி, சுவை இடைவெளி போன்ற காரணங்களை ஒரு பொதுவான பார்வையாளனாக இருக்கிற நான் முன்வைக்கலாம். எது எப்படியோ, பொதுப்புத்தியில் ஆழமாக விழுந்துவிட்ட சிலவற்றை மாற்றுவது கடினமே.

9 comments:

Anonymous said...

//ஒரு பிள்ளையின் நடத்தை சமூகத்தால் தீர்மானிக்கப்படும்போது, இப்படியான உடை, சிகை மற்றும் இன்னபிற அலங்காரங்கள் குறிகாட்டிகளாகத் தொழிற்படுவதாக பல பெற்றோர் நம்புகிறார்கள்.//

பெற்றோர்களுக்கு ஓரளவாவது உரிமை உள்ளதாகவே நினைக்கிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கை பறிபோகாத அளவுக்கும் அவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Anonymous said...

// எப்படியோ, பொதுப்புத்தியில் ஆழமாக விழுந்துவிட்ட சிலவற்றை மாற்றுவது கடினமே.//

சரியாகச்சொன்னீர்கள். இன்னும் கலாசாரக்காவலர்கள் நிறைந்துள்ள இந்த உலகத்தில் அவர்களே மற்றவர்களைப்பற்றி தீர்மானிக்கும்போது இது போன்ற விஷயங்களை மாற்றுவது கடினமே.

vasu balaji said...

இது காலம் காலமாக இருந்து வருவது தானே. காலம் செல்ல இன்று மறுக்கப்படுவது ஏற்புடையதாவதும் புதியவை மறுக்கப் படுவதும் இயல்பாகிறது.

கவி அழகன் said...

சமுகதில இதெல்லாம் நல்லா வருமா நான் யாரை சொல்கிறேன் என்று விளங்கினால் சரி

Unknown said...

//பெற்றோர்களுக்கு ஓரளவாவது உரிமை உள்ளதாகவே நினைக்கிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கை பறிபோகாத அளவுக்கும் அவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.//

உண்மைதான் சின்ன அம்மணி. என்ன உரிமை இருக்கிறது என்பதற்காக சில விடயங்களைத் திணிக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினையே..

//இன்னும் கலாசாரக்காவலர்கள் நிறைந்துள்ள இந்த உலகத்தில் அவர்களே மற்றவர்களைப்பற்றி தீர்மானிக்கும்போது இது போன்ற விஷயங்களை மாற்றுவது கடினமே.//

வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக்கொள்கிறேன்

Unknown said...

///இது காலம் காலமாக இருந்து வருவது தானே. காலம் செல்ல இன்று மறுக்கப்படுவது ஏற்புடையதாவதும் புதியவை மறுக்கப் படுவதும் இயல்பாகிறது.///

அப்படியானால் கலாசாரக் காவலர்களின் நிலை கவலைக்கிடம்தானே???

Unknown said...

புரிகிறது கவிக்கிழவரே

ARV Loshan said...

பொதுப்புத்தியில் ஆழமாக விழுந்துவிட்ட சிலவற்றை மாற்றுவது கடினமே.//

சரி தான்.. ஆனால் இதில் எனக்கு கலவையான குழப்பமான கருத்துக்களே இருக்கின்றன.
சிலவேளைகளில் என் மகன் பதின்ம வயதை அடியும் நேரம் என் மனப்பாங்கும் பொதுப் புத்தியாகலாம்.. யார் கண்டது.

Unknown said...

அதுவும் உண்மைதான் லோஷன் அண்ணா... தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்கிற மாதிரி ஒரு பெற்றவரின் மனநிலையில் இந்தப் பிரச்சினை எவ்வாறு இருக்கும் என்பது என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியாத ஒன்றாகும்