Monday, 19 October 2009

நவீன பிச்சைக்காரர்கள்-கருணாநிதி சிந்தனைகள்

நவீன பிச்சைக்காரர்கள்
பிரபல வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் நிதி மோசடியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், ராஜ் ராஜரட்ணம் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இடையில் இருந்த தொடர்பு பற்றிய செய்திகளும் வெளிவருகின்றன. இவர் விடுதலைப் புலிகளுக்கு கோடிக்கணக்கான டொலர் பணம் திரட்டிக் கொடுத்திருக்கலாம் என்கிற செய்தி கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் இந்த விஷயத்தை நான் எடுக்கிறேன் என்பது பற்றி பலர் விசனப்படலாம், ஆனால் இப்போதும் பதியாவிட்டால் அது துரோகம் ஆகிவிடலாம்.

ராஜ் ராஜரட்ணம் நிதி சேர்த்தாரா இல்லையா என்பதுபற்றி அமெரிக்கா கண்டுபிடிக்கட்டும். ஆனால், இதே நிதி திரட்டல் சம்பந்தமான இன்னொரு மோசடி எம் மக்களால் கண்டுகொள்ளப்படாமலும், இப்போது தண்டிக்கப்படாமலும் விடப்பட்டிருக்கிறது. அதை மோசடி என்பதைவிட, துரோகம் என்பேன் நான். வீடுவீடாக வந்து புலம்பெயர் நாடுகளில் நடந்த நிதி சேகரிப்பு மற்றும் அது தொடர்பான மோசடிகளைத்தான் சொல்கிறேன். நிதி சேகரிப்பதற்காக வந்த முக்கால்வாசிப் பேர், மோசடிப் பேர்வழிகள். மக்களின் துயரத்தைக் காட்டி நிதி சேர்த்து தங்களுக்கான சுகவாழ்வைத் தேடிக்கொண்டவர்கள். இன்றைக்கு இன்னும் கொஞ்சம் கவலைப்பட்டபடி இருக்கிறார்கள். ஏனென்றால் இப்போதைக்கு அவர்களின் சுகவாழ்வு பற்றி எவனும் கேள்வி எழுப்பமாட்டான் என்று இருந்தவர்களுக்கு, ராஜ் ராஜரட்ணத்தின் நிதி மோசடியே இவ்வாறான புலிகளுக்கான நிதி திரட்டல் பற்றி விசாரிக்கப்போனதில்தான் அம்பலமானது என்ற செய்தி நிச்சயமாக வயிற்றில் புளி கரைத்திருக்கும்.

இப்போதுகூட, சில நிதி திரட்டல்கள், முட்கம்பி வேலிக்குப் பின்னால் இருக்கும் மக்களுக்காக என்கிற பேரில் நடத்தப்படுகிறதாகக் கேள்விப்பட்டேன். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் மக்களிடையே இருக்கும் அவர்களின் இரத்த உறவுகளை மீட்டெடுக்க சிலபேர் எல்லா மக்களையும் சாக்காக வைத்துப் பணம் சேர்க்கிறார்களாம். சுயநலம் மிக்க ஒரு செயல் என்றாலும்கூட, ஒருவகையில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அப்படிச் சேர்க்கிற பணத்திலும் ஒரு பகுதியை தங்களின் சொந்தத் தேவைகளுக்காகப், (வீட்டுக்கடன் மாதாந்திர கட்டணம், அல்லது வீட்டுக்கடன் பெறுவதற்கான வைப்பு, வாகனக் கடன், கடனட்டை மாதாந்திரக் கட்டணம்) பயன்படுத்துகிறார்கள்.

இப்படியானவர்களை அடையாளம் காண்பது இலகு. கொஞ்சம் தெரிந்தவர் போல எடுத்துவிட்டால் தெறித்து ஓடிவிடுவதோடு, திரும்பவும் அந்த வீடுகளுக்கு வருவதில்லை (‘இதுக்கெல்லாம் இன்னார்தானே பொறுப்பு, நாங்கள் அவையளுக்கே நேரடியாக அனுப்பிறம்'). இதுவே ‘இப்ப கொஞ்சம் இறுகிப் போயிருக்கு, அடுத்த மாதம் மட்டிலை வாறியளோ தம்பிமார்' என்று பணிவாகச் சொல்லிப்பாருங்கள், அடுத்த வாரமே வந்து நிற்பார்கள். இப்படியாகப் பிழைப்பதைவிட இவர்கள் நடுத்தெருவில் வெள்ளைவேட்டி விரித்து பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.

பி.கு: உண்மையிலேயே நல்ல நோக்கத்தோடு செயற்படுகிற ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பது எம் இனத்தின் சாபம்.
*----*----*----*

கருணாநிதி சிந்தனைகள்
சென்னைப் பல்கலைக்கழகம் தம்முடைய கலைப் பட்டதாரிகளின் பாடத்திட்டத்தில் புகுத்துவதுக்கு உத்தேசித்திருக்கும் சில விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. பி.பி.சி. தமிழ்ப் பிரிவில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கலாநிதி திருவாசகம் அவர்களின் பேட்டியோடு இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது.

விஷயம் இதுதான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே எம்.ஏ மற்றும் பி.ஏ மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகளை கற்பித்து வருகிறார்களாம். இனிமேல் பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கருணாநிதி சிந்தனைகள் என்று பலவற்றைப் புதிதாகச் சேர்க்கப் போகிறார்களாம். மேற்படி தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் இல்லாமல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளோடு சேர்ந்ததாக இந்தப் பாடத்திட்டம் இருக்குமாம். அப்படியானால் ஜெயலலிதா சிந்தனைகளும் வருமா என்று பேட்டி கண்டவர் கேட்க அப்படியும் வரலாம் என்கிறார் துணைவேந்தர்.

ஆட்சியில் இருக்கிற தலைவருக்குக் காக்கா பிடிப்பது போலிருக்காதா என்றால், அப்படி இல்லையாம். அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொடுக்கலாம் என்கிறார் துணைவேந்தர். விமர்சனங்களை வைக்காமல் அவர்களை நல்லவர்களாக சித்தரிக்க விளைகிறார்கள் போல இருக்கிறது. துணைவேந்தர் என்னதான் மழுப்பினாலும் கருணாநிதி சிந்தனைகள் என்கிற பாடத்திட்டம் நிச்சயமாக அவரைக் காக்கா பிடிக்கும் முயற்சிதான். இப்படியே போனால் கருணாநிதி சிந்தனைகள், ஜெயலலிதா சிந்தனைகள் என்று பின்வரும் விஷயங்கள் கற்பிக்கப்படலாம்.

  • பொதுப்பணத்தைத் திருடி குடும்பத்தை வளர்ப்பது எப்படி?
  • ஜனநாயகக் கடமைகளை ஆற்றாமல், கொட நாட்டில் ஓய்வெடுப்பது எப்படி?
  • புரியாணி போட்டு வாக்காளர்களைக் கவிழ்ப்பது எப்படி?
  • தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காகப் பொய் சொல்வது எப்படி?
  • எடுத்ததுக்கெல்லாம் எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டுவது எப்படி?
  • ஒரு அரசை சிறுபான்மை அரசு என்று நக்கல் செய்வது எப்படி? அப்படி நக்கல் செய்பவர் எதிர்முகாமில் இருக்கும் மணமாகாதவர் என்றால் அவரைக் கேவலப்படுத்துவது எப்படி?
  • பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, பிள்ளைகளுக்குப் பதவி பெற்றுக் கொடுக்கவும், நடிக, நடிகையரின் கண்ணீர் துடைக்கவும் நடவடிக்கை எடுப்பது எப்படி?
  • கூழைக்கும்பிடு போடுவது எப்படி?
  • தனக்குத்தானே விருது வழங்கி மகிழ்வது எப்படி?
இப்படியே ராமதாசு சிந்தனைகள், அஞ்சாநெஞ்சன் சிந்தனைகள், விஜயகாந்த் சிந்தனைகள், ரஜினிகாந்த் சிந்தனைகள், நமீதா சிந்தனைகள் என்று வாழ்க தமிழ்; வாழ்க தமிழினத் தலைவர்.....
*----*----*----*

27 comments:

maruthamooran said...

////பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, பிள்ளைகளுக்குப் பதவி பெற்றுக் கொடுக்கவும், நடிக, நடிகையரின் கண்ணீர் துடைக்கவும் நடவடிக்கை எடுப்பது எப்படி?////

வாழ்க தமிழக சிந்தனைகள். வேறு என்னத்தை சொல்ல…

கிடுகுவேலி said...

மிகவும் ஒரு காட்டமான பார்வை. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படியான குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்த வண்ணமே இருக்கிறது. தரையில் அந்த மக்களோடு, அல்லது அந்த மக்கள் படும் வேதனைகளை ஒரு கணம் சிந்தித்த ‘மனச்சாட்சி’ உடையவர்கள் இப்படியான கைங்கரியத்தை செய்யமாட்டார்கள்.

மு.க வை எல்லோரும் காமெடியன் ஆக்குகிறார்கள்..ஆனாலும் அடாது மழை பெய்தாலும் விடாது எனது வேலை என்பது போல அவர் திருகுதாளங்கள் தொடர்கிறதே....! சிரிப்பதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்...!!!

vasu balaji said...

ஹ்ம்ம்ம்ம். எங்க தலையெழுத்து இவனுங்க கிட்டயெல்லாம் சிக்கி சின்னாபின்னமாவணும்னு இருக்கே கிருத்திகன். அவ்வ்வ்வ்

sanjeevan said...

///உண்மையிலேயே நல்ல நோக்கத்தோடு செயற்படுகிற ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பது எம் இனத்தின் சாபம்.///
உண்மை தான் ஒத்துக்கொள்கிறேன்..

sanjeevan said...

இலங்கை இந்து மாமன்றமும்,பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களும் அகதி முகாமிலுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.இன்னும் பலர் செய்கிறார்கள்..இவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

sanjeevan said...

ஏன் மகிந்த சிந்தனையை ஒபாமா படிக்கிறாராமே தெரியாதா.

thiru said...

University of Chennai can open a department named, "Araivekkattu Sinthanaigal" and under the department they can offer MA degrees and Ph.Ds of "all sinthanaigal"...

Romba Kevalamaa poikitturukku!!

Unknown said...

அற்புதமான பதிவு...
அற்புதமான கருத்துக்கள்...
எங்கள் மக்களீன் துயரங்களைக் காட்டி எம்மவர்களே எம் மக்களிடம் பணங்களை எமாற்றுவது தான் கொடுமை...
தமிழர்கள் திருந்தமாட்டார்கள்...

கருணாநிதி பற்றி நீங்கள் சொன்ன விடயங்கள் இப்போதெல்லாம் சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன...
பழகிவிட்டது எமக்கு...

Unknown said...

///வாழ்க தமிழக சிந்தனைகள். வேறு என்னத்தை சொல்ல///

வாழ்த்தீட்டு போகவேண்டியதுதான்... இவங்கள் செய்யிற விளையாட்டுகள்..ஸ்சப்பா

Unknown said...

கதியால்
உண்மைதான் நண்பரே.. என்னுடைய கோபம் என்னவென்றால் யுத்தகாலத்தில் ஆயுதம் வாங்கக் கேட்டீர்கள்... தந்தோம். சமாதான காலத்தில் பலப்படுத்தலுக்கும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் கேட்டீர்கள்.. தந்தோம். அந்த நிதிகளில் கையாடல் செய்தீர்கள்... பரவாயில்லை என்று விட்டுவிட்டோம். ஆனால், இதை மன்னிக்க முடியாது. ஏதோ ஒரு படத்தில் வந்த மாதிரி ‘பிணத்து வாயில் இருக்கும் அரிசியைக்கூட நோண்டி நோண்டித் தின்னும் பிணம் தின்னிகள் இவர்கள்'

//மு.க வை எல்லோரும் காமெடியன் ஆக்குகிறார்கள்..ஆனாலும் அடாது மழை பெய்தாலும் விடாது எனது வேலை என்பது போல அவர் திருகுதாளங்கள் தொடர்கிறதே....! சிரிப்பதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்...!!!//
இதத்தான் Black Humour என்பார்களோ??

Unknown said...

///ஹ்ம்ம்ம்ம். எங்க தலையெழுத்து இவனுங்க கிட்டயெல்லாம் சிக்கி சின்னாபின்னமாவணும்னு இருக்கே கிருத்திகன். அவ்வ்வ்வ்///

ஆனா பாலா தேர்தல் என்று ஒன்று வரும்போது அந்தத் தலையெழுத்தையும் மாத்தலாம்... கொஞ்சமாவது தன்மானம், சுய புரிந்துணர்வு போன்ற விஷயங்கள் இருந்தா

Unknown said...

///இலங்கை இந்து மாமன்றமும்,பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களும் அகதி முகாமிலுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.இன்னும் பலர் செய்கிறார்கள்..இவர்களுக்கு தலை வணங்குகிறேன்.///

நானும்தான்... புலம்பெயர் நாட்டு மக்கள் அவர்களைத் தேடி வீடுகளுக்கு வருகிற நபர்களிடம் பணம் கொடுப்பதற்குப் பதில் இப்படியான அமைப்புகளின் வங்கிக் கணக்கில் பணம் இடலாம்..

Unknown said...

///University of Chennai can open a department named, "Araivekkattu Sinthanaigal" and under the department they can offer MA degrees and Ph.Ds of "all sinthanaigal"...

Romba Kevalamaa poikitturukku!!///

உண்மைதான் திரு... ரொம்ப ரொம்ப ரொம்ப கேவலமா

Unknown said...

///எங்கள் மக்களீன் துயரங்களைக் காட்டி எம்மவர்களே எம் மக்களிடம் பணங்களை எமாற்றுவது தான் கொடுமை...
தமிழர்கள் திருந்தமாட்டார்கள்.///
அவர்களைத் திருத்தலாம்... தயவு தாட்சணியம் பார்க்காமல் தண்டித்தால் திருந்துவார்கள்... மற்றபடி ம்ஹும்

வந்தியத்தேவன் said...

என்ன கீத் நீ எப்படி எழுதிவிட்டாய்? அவரின் சிந்தனைகள் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வளவு விடயங்களைப் போதிக்கபோகின்றது.

1. ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைக்கவேண்டும்.
2. இவர் என் இனிய நண்பர் எனச் சொல்லிக்கொண்டே அவர்களைப் பின்பக்கத்தால் முதுகில் குத்தவேண்டும், எம்ஜீஆர், வாஜ்பேஜ் எனப் பட்டியல் தொடரும்.
3. 3 மணித்தியாலத்தில் உண்ணாவிரதம் இருப்பது எப்படி என விளக்கம் கொடுத்தவர்,
4. மக்கள் பிரச்சனை என்றால் தந்தியும் கடிதமும் போதும் குடும்ப பிரச்சனை என்றால் விசேட விமானத்தில் டெல்லி செல்லபோதித்தல்.
5. மக்கள் எல்லாம் தேர்தல் வரைதான் அதன் பின்னர் குடும்பம்தான் முக்கியம்.
6. ஓய்வான நேரங்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் பெண்களின் நடனத்தைப் பார்க்கவேண்டும்,

இப்படியான சிந்தனைகளை முளையிலே கிள்ளி எறிவது சரியில்லை. உடனடியாக சென்னைப் பல்கலைக் கழகத்திற்க்கு தந்தி அடித்து நீ எழுதியது தப்பு என அறிவிக்கவும்.

Subankan said...

என்னத்தைச் சொல்ல? எங்களுக்கு முதல் எதிரி நாங்களேதான்.

ஆதிரை said...

கருணாநிதி சிந்தனைகள் Syllabus தயாரிக்கிறது தமிழக முதல்வர் தானே...

Unknown said...

வந்தியத்தேவா...
நீ சொல்வதிலும் உண்மை இருக்கிறதடா கண்மணீ... இப்படியான சிந்தனைகளைத் டாஸ்மார்க் தண்ணீரும் புரியாணி உரமும் போட்டு வளர்த்தால் நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்... சீ நல்லா வாழ்வார்கள் என்பது எனக்கு இப்போதுதான் உறைத்தது என் செல்வமே.. (சும்மா தமிழீனத் தலைவர் பாணியில் முயன்று பார்த்தேன்)

Unknown said...

///என்னத்தைச் சொல்ல? எங்களுக்கு முதல் எதிரி நாங்களேதான்.//

அதெண்டா உண்மை சுபாங்கன்

Unknown said...

///கருணாநிதி சிந்தனைகள் Syllabus தயாரிக்கிறது தமிழக முதல்வர் தானே...///

அவராத்தான் இருக்கும்... வெகுவிரைவில் துணைமுதல்வர் சிந்தனைகள், அஞ்சா நெஞ்சன் சிந்தனைகள் எல்லாம் வரும்...கொஞ்ச நாளா சிரிச்சுச் சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாகீட்டுது

அருண்மொழிவர்மன் said...

வணக்கம் கீத்,

உங்கள் பதிவுகளில் எனக்கு ஆகப்பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று. இது போன்ற பார்வைகள் தான் எமக்கு அவசியம்.

//கதியால்
உண்மைதான் நண்பரே.. என்னுடைய கோபம் என்னவென்றால் யுத்தகாலத்தில் ஆயுதம் வாங்கக் கேட்டீர்கள்... தந்தோம். சமாதான காலத்தில் பலப்படுத்தலுக்கும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் கேட்டீர்கள்.. தந்தோம். அந்த நிதிகளில் கையாடல் செய்தீர்கள்... பரவாயில்லை என்று விட்டுவிட்டோம். ஆனால், இதை மன்னிக்க முடியாது. ஏதோ ஒரு படத்தில் வந்த மாதிரி ‘பிணத்து வாயில் இருக்கும் அரிசியைக்கூட நோண்டி நோண்டித் தின்னும் பிணம் தின்னிகள் இவர்கள்'//


இது கூட பரவாயில்லை, இவர்கள் எடுத்த முடிவுகளுக்கு ஓரளவு உடன்பட்டு (போராட்டங்களில் செயலாற்றிய விதம் பற்றி மனச்சாட்சி இடம்தராமலும்) போராட்டங்கள் நடைபெற்றும் இவர்கள் தம் மோசமான அரசியலை அதிலும் காட்டினர். கடைசியில் போராட்டங்களை தொடக்கிய மாணவர்களை எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து விட்டனர்....இப்படி எத்த்னையோ....

இதே நேரம் இதை புலம் பெயர் நாடுகளில் மட்டுமே இடம்பெற்ற முறைகேடு என்றூ பொதுவில கடந்துவிட முடியாது... இவர்கள் சொல்வதைதான் வன்னியிலும் நம்பினர். அவர்களின் பிரதிநிதிகளாய் இவர்களே செயல்பட்டனர். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றிருந்தால் அவர்களே அதை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இங்கே, பதவிகளுக்காக அரசியல் வியாபாரிகள் போலவே மோதிக்கொண்டனர், முன்பிருந்தவர் காசடித்தார் என்றூ புதிய்வர் சொல்ல, புதியவர் காசடித்தார் என்று அடுத்து வருபவர் சொல்வார்.... எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....

இது பற்றி எழுதினால் கதை கதையாய் எழுதலாம்......


என்னைப் பொறுத்தவரையில் சமுதாய உணார்வு மிகிந்திருக்கும் இந்தப் பதிவு உங்களின் மிக முக்கிய பதிவுகளில் ஒன்றே

Unknown said...

அருண்மொழிவர்மன்
///கடைசியில் போராட்டங்களை தொடக்கிய மாணவர்களை எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து விட்டனர்///
மாணவர்களுக்கு எப்போதும் இதே கதிதான். அவர்களிடம் குமுறும் இளமைத் திமிரைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போட்டுவிடுவார்கள்.

///இவர்கள் சொல்வதைதான் வன்னியிலும் நம்பினர். அவர்களின் பிரதிநிதிகளாய் இவர்களே செயல்பட்டனர்///
ஒரு திருத்தம். இப்படியாக இங்கே மோசடியில் ஈடுபட்ட சிலரது பட்டியல் ‘அங்கே' இருந்தது. இங்கே தீவிரமாக நிதி திரட்டிவிட்டு 2002-2005 காலப்பகுதியில் நொண்டிச்சாட்டுச் சொல்லி ஊருக்குத் திரும்பவராமல் பலர் ஒளித்துத் திரிந்தார்களல்லவா? அதற்கெல்லாம் காரணம் இருந்தது. முன்பிருந்த கள்ளனை அடுத்த கள்ளன் காட்டிக் கொடுத்திருந்தான்.

இதுபற்றிச் சடுதியாகப் பேசக் காரணம் வங்கியில் stop payment செய்யத் தெரியாமல், (கொஞ்சம் மொழிப்பிரச்சினையாம்) அல்லது செய்ய விரும்பாமல் மாதாமாதம் ஒருவர் 100 டொலர் அழுதுகொண்டிருந்தார் இந்தப் பிணம் தின்னிகளுக்கு. அவருக்கு உதவி செய்யவேண்டி வந்தது. அதுதான் கொஞ்சம் கிளறிவிட்டுவிட்டது??

ARV Loshan said...

என்னத்தை எழுதி என்ன?
எங்கள் தலைவிதி..
எரிகிற வீட்டிலும் பிடுங்கித் தின்னும் இழிசாதுய் எமது ஈழாத் தமிழ் சாதி..
இவர்களை தேடிப்பிடித்து சுட வேண்டும்.

ராஜின் கைதை அடுத்து இலங்கைப் பொருளாதாரமே சரியுமளவுக்கு பங்கு சந்தை தரைமட்டமாகி விட்டது.

கலைஞர் பற்றிப் பேசுவானேன்.. அவர் ஒரு காமெடிப் பீசு..

Unknown said...

///என்னத்தை எழுதி என்ன?
எங்கள் தலைவிதி..///
எழுதிறதில என்ன பிரயோசனம் இருக்கோ இல்லையோ, ஆனா தலைவிதி எண்டு சும்மா இருக்கேலாதுதானே லோஷன் அண்ணா

பால்குடி said...

நீரும் சஞ்சீவனும் குறிப்பிட்டதைப் போல, உண்மையில் நல்ல நோக்கத்துக்காக செயற்ப்டும் சிலர் இருக்கும் வரை தேவையானவர்களுக்கு உதவி கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி கையாடல் செய்பவனும் இருக்கத்தான் செய்வான். ஈழத் தமிழனுக்கு வாய்த்த பண்புகள்.

Unknown said...

வள்ளுவரின் 'நல்லார் ஒருவர் உளரேல்...' குறளை இனிமேலும் பயன்படுத்தமுடியாது போலிருக்கிறது பால்குடி. முக்கால்வாசிப்பேர் காசடிக்க மட்டுமே மக்களின் அவலத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் என் கோபம்

thamizhthesiyan said...

ஓட்டு அளிக்கும் மாக்கள் ஓட்டு அரசியலில் இருந்து விடுபட வேண்டும்..குவாட்டருக்காக கோழிபிரியாணிக்காக ஒட்டை காணிக்கையாக செலுத்தும் மாக்கள் டார்வினின் பரிணாம வளர்ச்சி விதிப்படி தன் சொந்த அக்கா தங்கையையும் கூட்டி கொடுக்க தயங்க மாட்டார்கள்.. அதை தடுத்து நிறுத்துவது தமிழ் தேசிய உணர்வாளர்களின் கடமை ஆகிறது .. அது தொடர்பான பதிவு..


ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?

...http://siruthai.wordpress.com/2009/12/01/ஈழத்தவருக்கு-ஒரு-வேண்டுக/