Friday 30 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்: 3

அனேகமாக வலையாட வருகிற தொடக்கத்தில் எல்லோருக்கும் பெரியார், சே மீதான ஈர்ப்பும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வது இயல்பு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பெரியாரின் பல கருத்துகளில் இன்னும் ஈர்ப்பிருக்கிறது. ஆனால் அவரை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் பலரது கருத்துக்களைப் பார்க்கிறபோது பெரியார் மீதான ‘அப்பழுக்கற்ற புரட்சிக்காரர்’ விம்பம் சிதைவதையும் குறிப்பிட்டாகவேண்டும். பெண்ணடிமைத்தனத்தை உடைத்தல், மூட நம்பிக்கைகளை இல்லாதொழித்தல், சாதீயக் கட்டுமானங்களை தகர்த்தல் முதற்கொண்டு பல நல்ல கொள்கைகளோடு செயற்பட்ட, தனித் துதிபாடலை எதிர்த்ததாகச் சொல்லப்பட்ட பெரியாரின் பெயர், நேர்மாறு சாதீயத்துக்கும் மாற்றுக் குறையாத தனிமனிதத் துதிபாடலுக்கும் பயன்பட்டுக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. பார்ப்பனர்கள் என்று பெரியார் மற்றும் பெரியாரியத்தைத் தொடர்பவர்கள், முற்போக்குவாதிகள் விளிப்பது யாரை என்று இப்போது யாராலேயும் சரியாக அடையாளங்கண்டுகொள்ள முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. பல ‘பெரியாரிஸ்டுகள்’ நிச்சயமாக ‘பிராமணர்’ என்கிற ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஏனைய ஆதிக்க சாதி ஒடுக்குமுறையாளர்கள் பற்றிய சத்தங்கள் வருவதில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்றதும் ‘பூநூல்’ வந்து குந்திக்கொள்கிறது. பார்ப்பனியம் என்றால் என்ன என்று பாரி அரசு என்பவர் எழுதிய ஒரு சின்னப் பதிவை வினவு தளம் மேற்கோள்காட்டி இருந்தது.

“உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!
எ.கா: 1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.
2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.
3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல். (நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)
குறிப்பு : இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!”

ஆனால், பார்ப்பனிய எதிர்ப்புப் பேசும் அத்தனை பேருமே பிராமணர்களை மட்டுமே குறிவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு. இல்லையென்றால் எங்கெல்லாம் இது பற்றிய பேச்சு எழுகிறதோ அங்கெல்லாம் பூநூலும், ‘பெயர்களும்’ வந்து குந்திக்கொள்ளாது. இத்தனைக்கும் மேற்படி விளக்கத்தை மேற்கோள்காட்டிய வினவுகூட எப்போதும் பார்ப்பனியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி என்கிற புரிதல் வரும்வண்ணமே கட்டுரைகளை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கப்போனால் நான் பிறந்து வளர்ந்த  ஊர் பார்ப்பன ஆதிக்கம் இல்லாத ஊர் என்றுதான் நான் சண்டை போடவேண்டும். ஏனெனில் பிராமணர்களுக்கு வெள்ளாளர்கள் அளவுக்கு செல்வாக்கு இருந்ததில்லை. காரணம் வெள்ளாளர்களில் அனேகம்பேர் நிலப்பிரபுக்களாக இருந்தார்கள். ஆனால் வெள்ளாளர்கள் மட்டும்தான் பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. செல்வம் அருளானந்தம் தேவகாந்தனுடனான ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிடுவார்


மேற்படி செல்வம் வாழ்ந்த ஊரில், பாரி அரசு சொன்ன வரைவிலக்கணப்படி, ஒதுக்கப்பட்ட பறையர்களின் பார்வையில், வெள்ளாளர்கள், கரையார்கள் மற்றும் பள்ளர்கள் யாவருமே ‘பார்ப்பனர்கள்’ என்கிற வகைக்குள் வரவேண்டியவர்கள் என்பது என் கருத்து.

ஆனால், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாதி மறுப்பு, தலித் உரிமைகளைப் பேசிவருகிற சிலர்கூட பார்ப்பனர் என்றால் பிராமணர்கள் என்கிற ரீதியில்தான் பேசி வருகிறார்கள். வடலி வெளியீடான ‘கொலை நிலம்: தியாகு-ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள்’ என்கிற புத்தகத்தில் சோபாசக்தி குறிப்பிட்டதாக கீழ்வருகிற வசனம் வருகிறது. ’

‘அய்ரோப்பாவில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்துவதும் அங்கே பார்ப்பனர்கள் தேவ பாசையில் மந்திரம் சொல்லிக் கொழுப்பதும் சோசலிசத்தை நோக்கியதா அல்லது சாதியத்தை நோக்கியதா?’ (பக்கம் 65, பந்தி 1, வரிகள் 8,9,10,11).

இங்கே ஷோபாசக்தியால் பார்ப்பனர் என்கிற சொல்லாடல் பிராமணரைக் குறித்தே பயன்பட்டிருக்கிறது. இலங்கையில் பிறந்த சாதாரணமான தமிழ்க் குடிமகன் ஒருவரிடம் ஒரு பிராமணனைக் காட்டி ‘உவன் ஒரு பார்ப்பான். உவனால்தான் எல்லாப் பிரச்சினையும். உவனை அடி’ என்று சொன்னால், நிச்சயம் அவ்வாறு சொல்பவர் விநோதமானவராகப் பார்க்கப்படுவார். காரணம், ஈழத்தில் பிராமணர்களாலான அடக்குமுறை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதேயளவுக்கு வெள்ளாள அடக்குமுறை இருந்துவந்திருக்கிறது. என்னுடைய கேள்வி, பாரி. அரசு சொல்கிற வரையறைக்குட்பட்டுப் பார்ப்பனியத்தைப் பார்த்தால் யாழ்ப்பாணத்து வெள்ளாளனும், பசும்பொன் தேவனும் ‘பார்ப்பனர்’ என்கிற வகைக்குள் அடக்கப்பட்டே அவர்கள் மீதான விமர்சனங்கள் வரவேண்டும். எனக்குத் தேவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் வெள்ளாளரைத் தெரியும். அவர்கள் பூநூல் போடுவது சாவு வீட்டுச் சடங்கு, அந்தியோட்டி சபண்டீகரக் கிரியைகள் மற்றும் திவசங்களின்போது. அதுவும் பிராமணர்கள் கொடுக்கும் பூநூல் போட்டுத்தான் சடங்குகள் செய்வார்கள். பிராமணர் பூநூல் போடுவதுக்கும் சடங்குகளில் பூநூல் போடுவதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளாளர்களுக்கு ‘தேவ பாசை’ தெரியாது, மாமிசம் நன்றாகவே புசிப்பார்கள். பொதுவெளியில் வைக்கப்படுகிற பார்ப்பன விம்பத்துக்கும் இவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. ஆகவே ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசுகிறவர்கள் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்தாகவேண்டும். பார்ப்பனர்கள் என்றதும் ‘பூநூல், தேவபாசை’ இரண்டும் மனதுக்கு வரும்படியாக ஒரு விம்பத்தைப் பொதுப்புத்தியில் சமைத்திருக்கிறார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆக, ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசும்போது பார்ப்பனர்கள் என்று பொதுப்படையாகப் பேசுவதில் சிக்கல்கள் இரண்டு:
  1. பெரும்பாலும் கோயிலை ஒட்டியிருக்கிற வீடுகளில், கோயிலுக்கு அர்ச்சனைக்காக வருகிற பொருட்கள், திவசக் காணிக்கைகள், குரு தட்சிணை என்று மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிற ஈழத்துப் பிராமணர்கள் மீது தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுவிடும். (பணக்காரக் கோவில் அர்ச்சகர்களை இதற்குள் உள்ளடக்க வேண்டாம்)
  2. வெள்ளாளர்களின் சாதீய அடக்குமுறை பற்றிய உண்மைகள் உறங்கிவிடும்
ஆகவே ‘பார்ப்பான்’ என்கிற சொல்லாடலைக் கேள்விக்குள்ளாக்கி அதற்குரிய சரியான வரையறையைச் சமைக்கவேண்டிய கட்டாயம் சாதி மறுப்பாளர்களுக்கு இருக்கிறது. பார்ப்பான் என்றால் பிராமணன் என்று தொடர்ந்து பொதுப்புத்தியில் பதிந்து போய்விடுவதால், பிராமணர்கள் மீதான வன்மம் வளர்ப்பதும் ஒரு வகையில் சாதீயம் என்று சொன்னால், நான் பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதாய் சொல்லுவார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆனால் அவர்களே அறியாமல், பிராமணர்கள் மீது பழியைப் போட்டு மற்ற ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைகளை மறைக்கிற வரலாற்றுத் தவறை அவர்கள் செய்துகொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. செல்வம் அருளானந்தம் வாழ்ந்த கத்தோலிக்கக் கிராமத்தில் எந்தப் பிராமணனும் செல்வாக்கோடு இருந்திருக்கவில்லை.
*----*----*----*

இதே விடயம் சம்பந்தமாகப் பெரியாரது தீவிர சாதி மறுப்பாளராக நான் பார்த்த விம்பத்தை தன்னையறியாமல் தமிழ் ஓவியா உடைத்தபோது வலித்தது. அவர் எழுதிய ‘நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு ?’ என்கிற பதிவில் கீழ்க்கண்ட வசனம் பெரியார் சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது:


பெரியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடிந்தாலும், “கீழ்மகனாக இருந்தாலும்”, “மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும்” என்கிற வார்த்தைகளைப் பெரியார் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தொழில் ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து வருணாசிரமம் சொன்னதென்று சொல்லிச் செய்யப்படுகிற அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறேன் என்று சொல்லிப் போராடிய ஒருவரின் வாயிலிருந்து ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ என்கிற வார்த்தைகள் எல்லாம் எப்படி வந்தன? எப்படி ஒரு தொழிலை ‘ஈனத் தொழில்’ என்று சொல்லலாம். ஈனத் தொழில் என்று சொல்லப்படுகிற விபசாரத்தைக்கூட (விபசாரிகளிடம் போகிற கனவான்களை விடுங்கள். அவர்கள் ஈனர்கள் அல்லர்) தொழிலாகப் பார்த்து வரவு செலவுக் கணக்கெல்லாம் கேட்டவர் என்றுதானே பெரியாரைப் பற்றிச் சொல்லித் தந்தீர்கள் பெரியாரியர்களே???

தமிழ் ஓவியா ஒரு தீவிர தனிமனிதத் துதிபாடி என்பது பலருக்குத் தெரிந்ததே. கி.வீரமணியைத் தமிழினத் தலைவராகச் சித்தரித்துப் பரப்புரையாற்றும் ஒரு தொண்டர் என்பதும் தெரியும். ஒருவேளை ‘தன் தன்னிகரில்லாத் தலைவன் வீரமணியை’ உயர்த்தவென்றே பெரியார் சொல்லாத வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்கிறாரோ என்று அடிமனம் சமாதானப்பட முயன்றது. ஆனால் “30.08.1953 இல் ஆம்பூர் முகமதலி மைதானத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: “விடுதலை” 08.09.1953” என்று வலுவான ஆதாரத்தையும் காட்டி அந்த எண்ணத்திலும் மண்போடுகிறார் தமிழ் ஓவியா . அப்படியானால் பெரியார் போராடியது தன் சாதியை விட உயர் சாதியென சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்ட ‘பிராமணர்களுக்கு’ எதிராக மட்டுமா? ஒட்டுமொத்த சாதீயக் கட்டமைப்புகளுக்கு எதிராக இல்லையா? ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ போன்ற வார்த்தைகள் பார்ப்பனியம் பற்றிய முழுப்பிரக்ஞை உள்ள ஒருவரிடமிருந்து எப்படி வந்திருக்க முடியும்? இது ஒருவகையில் நேர்மாறு சாதீயம் இல்லையா? போன்ற சந்தேகங்கள் வந்து விழத்தானே செய்கிறது. நல்லவேளை, பசும்பொன் முத்துராமலிங்கம் உட்பட பலரையும் கண்டித்திருக்கிறார். அதனால் முழுவதுமாகப் பெரியாரை மறுதலிக்காமல் இருக்கமுடிகிறது.

வருணாசிரம விதிமுறைகள் சித்தரித்த ‘ஈனத் தொழில்களை’க் கேள்விக்குள்ளாக்கிய பெரியார் எப்படி அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்? பெரியார் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் அல்லது பிராமண ஆதிக்கம் பயங்கரமாக இருந்தது அதனால் அவர்களைப் பெரியார் திட்டியதில் தவறேயில்லை என்று சொல்லிச் சப்பைக்கட்டெல்லாம் கட்டவேண்டாம். என்னுடைய கேள்வி பெரியார் யாரைத் திட்டினார் என்பதல்ல. ‘மானம் கெட்ட ஈனத் தொழில்’ என்று எதைச் சொல்கிறார்? உடனே சொல்வீர்கள் ‘பார்ப்பனர் அல்லது பிராமணர்’ செய்கிற தொழில்களைத்தான் பெரியார் ஈனத்தொழில் என்றார் என்று. ‘பார்ப்பான் முதலில் எங்கள் தொழில்களை ஈனத் தொழில் என்றான், அதனால் அவனது தொழில்களை ஈனத் தொழில் என்றோம். பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம், கண்ணுக்குக் கண்’ என்ற வீரவசனம் எல்லாம் வேண்டாம். மேற்படி வார்த்தைகளைப் பெரியாரே சொல்லியிருந்தாலும், அவர் மீது என்ன அபிமானம் இருந்தாலும், அந்த வார்த்தைகள் தவறென்ற பிரக்ஞை இல்லாமல் அந்த வார்த்தைகளைக் கொண்டாடுவதை என்னென்று சொல்லலாம்? நேர்மாறு சாதீயம் என்பதைத் தவிர!

*----*----*----*
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி- அன்றைக்குப் பெரியார் சொன்னது. இன்றைய பெரியாரியர்களைக் பார்த்தால் இன்னொன்றையும் சேர்த்திருப்பார் பெரியார்; பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி, பார்ப்பானையும் பெரியாரியனையும் கண்டால் பெரியாரியன் நின்ற இடத்தில் புல்பூண்டு முளைக்காமல் ஏதாவது குண்டு போடு என்று.

Saturday 24 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்: 2

பேராசிரியர் சிவத்தம்பியின் இந்த உரைக்கும் (நன்றி: இரமணி)



இந்தக் கவிதைக்கும்

அன்றலர்ந்த ஆச்சா மரம் போல வீழ்ந்தானோ அவன்!
போச்சா, உள்ளிழு மூச்சு விடுவெளிமுன்னே
வீச்சாய்ச் செல்களம் மாறி
ஒளிந்திருந்தம்பெய்வான் பாதம்
இன்றே போய் நன்றே புக்கிப்
புலம் தொழுது வாழ் புல்லர்.                           

மல்லாக்காய் வீழ்ந்து மாண்டான் மாநிலவேந்தன்
இராவணன் இல்லாத்தலையையும் முள்கோலிக் கொய்து
தம்படி செப்படிவித்தை செல்லுபடியாக்கும்
பொல்லாவிபீஷணர் சுருக்குவால்களிலே
வல்லான் என்னான் கல்லாலனைக் கொல்
தர்மம் எல்லாம் நியாயமென்றோதிப் பறக்கிறது
இரவினும் பகலிலும் எல்லாப்பொழுதிலும்
கிழியக் கட்டிய இரவற்பீதாம்பரம்.

பெருகு தாரை உருகிச் சபித்த இராமன்கள்ளேறு
ஆண்குறிதன் அடிமுடி சவரம் செய்யப் பெருகுவது,
மாரீசத்தூதுவேடத்தே வெஞ்சினமாய்
தம்போக்குவாழாளையும் அழுகுழவியையும்
எல்லாம் சமமென்று தீயேற்றிக் கழி
இலங்கா(த்)தகனத்து களிகொள் மாருதி வாலல்ல;
எதிர்வீடிரவு விபீஷணர்தம் சொற்சிற்பத்துச்சிப்பம்.
இழவெடுவில்லத்தே இருப்புக்காய்
ஏற்றுக்கொண்ட இராமகீதங்களை,
கால் சுற்றிவளைக்கடி க்ருதிகளை
கருணை கொள் கசட்டுநிதிதரு
வல்லோர் எல்லாம் நல்லோரென்று
எனக்குப் புகட்டமுன்னே,
இதைச்
சொல்வேன் கேளும்:

"வாய்க்கால் சிவந்த முள்ளுக்களமேனும்
கால்வாய் கடந்திழியும் பனிநிலப்புலமேனும்
பிறழாச்சொல்நீதி பொருந்தாச் செய்கடமை
கொல்லப்புல்தின்ற கும்பகர்ணன் விட்ட
கடைசிக்குசுவெனக் கொள்ல்க என்னை.

அவப்பொழுதே
மணத்திருப்பேன்
நும்மூக்கில்"

சம்பந்தம் இல்லையென்று நான் சொல்லி நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

அது சரி... எப்படி பேராசிரியர் என்ன பேசப்போகிறார் என்று கவி யாத்தவருக்கு முன்னமே தெரிந்தது??? பேராசிரியரின்  பேச்சுக்கு சில வாரங்கள் முன்னமே விமர்சனம் செய்திருக்கிறார் கவிதையில். இதைத்தான் காலத்தை வென்ற படைப்பு என்பார்களோ???

Sunday 18 July 2010

மக்கள் போராட்டம் ஒன்றின் "மகத்தான" பின்விளைவுகள்

தியனன்மென் சதுக்கத்துப் படுகொலைகள் பற்றிய ஆவணப்படம். மாணவர்கள், உழைக்கும் வர்க்கம், அறிவுஜீவிகள் என சாமன்ய மக்கள் அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த போது..............................

Saturday 17 July 2010

பதிவுலகில் நான் அப்படிப்பட்டவன் இப்படிப்பட்டவன்...

வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆரம்பத்தில் Keith Kumarasamy பின்னர் கீத் குமாரசாமி, அடுத்து கிருத்திகன் குமாரசாமி, தொடர்ந்து Kiruthikan Kumarasamy கடைசியாக கிருத்திகன்

அந்தப் பெயர்தான் உங்கள் பெயரா? இல்லை பதிவில் தோன்றும் பெயரை வைக்க என்ன காரணம்?
அந்தப் பெயர்கள் என் பெயர்கள் அல்ல. என் பெயர் பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன். என்னுடைய பதிவுகளின் ‘ஆழத்தையும்’ ‘அர்த்தத்தையும்’ புரிந்துகொண்டு படைப்புலகம் வழங்கிய சின்னப் பட்டங்கள்தான் அந்தப் பெயர்கள்.

நீங்கள் தமிழ் வலைப் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
சிறுவயதில் இருந்தே நான் நிறைய எழுதுவேன். 1989ம் வருடம் தங்கவேலின் நேர்சரியில் ‘அம்மா’ (ammaa) எழுதியதைப் பார்த்தே ஜெயமணி ரீச்சர் சொன்னார்கள் “பிற்காலத்தில் நீ பெரிய பதிவனாக வருவாய்” என்று. அப்போது விதைக்கப்பட்ட கனவு செடியாகி, விருட்சமாகி வளர்ந்தது. மூன்றாம் வகுப்பில் தேன்மதி ரீச்சர் “what is your name?" என்று கேட்க “my name is Famous Blogger Kumarasamy Kiruthikan" என்று சொன்னேனாம். வீட்டில்கூட என்னை ‘பிரபல பதிவர் குமாரசாமி கிருத்திகன்’ என்றே அழைத்தார்கள். I eat pathivulagam, I drink pathivulagam, I sleep pathivulagam, I shit pathivulagam. அதோடு சின்ன வயதிலேயே என்னிடம் எதிர்ப்புக் குணம் நிறைய இருந்தது. அய்யோ பெருமாளே.. ஏன் ஜனங்களுக்கு இவ்வளவு அலட்சியம். யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருமே rulesஐ follow பண்ணுவதில்லை என்று விசனப்பட்டபடியே இருந்தேன். ஆகவே என் மக்களை, என் நாட்டை, ஏன் இந்த உலகத்தையே உய்விக்க, நான் பதிவுலகு வருவது தவிர வேறு எந்த option அவர்களுக்கு இருக்கவில்லை. பதிவுலகத்துக்கு வருவது நான் எடுத்த முடிவில்லை. மக்களாக எடுத்த முடிவு.

உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடையவைக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?
இதற்குப் பதில் சொல்ல ஒரு வலைப்பதிவு காணுமா தெரியவில்லை. நான் எழுதிய படைப்புகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. ஏனென்றால் அவற்றை நான் தமிழ்மணம் மூலம் pdf கோப்புகளாக்கி ஐந்தாறு கணனி வன்தட்டுக்களில் சேமித்து வைத்திருக்கிறேன். அட, தமிழ் மணம் pdf என்றதும்தான் ஞாபகம் வருகிறது. திரட்டிகளில் என் பதிவை இணைத்ததன் காரணமாகவே நான் ‘மிகப் பிரபல பதிவர்’ ஆனேன். ஏன் என்னை ஒரு ஜந்து போல் பார்க்கிறீர்கள்? நான் சொல்கிற பொய் தெரிந்துவிட்டதா? அட. வலு கெட்டிக்காரர் நீங்கள். திரட்டிகளில் இணைந்தேன் பிரபலமானேன் என்பதெல்லாம் சுத்தப் பொய். பிரபலமாவதற்கு வேறுசில பிரபலமான வழிமுறைகள் இருக்கின்றன. விளக்குகிறேன் வாருங்கள்.


பிரபல பதிவர்களைத் தேடிப்பிடித்தல்
எதிர்காலப் பிரபல பதிவரான நீங்கள் நிகழ்காலப் பிரபல பதிவர்களைத் தேடிப் பிடித்து அவர்களைப் பின் தொடரவேண்டும். அவர்களுக்கு ‘அக்கா, அண்ணா’ என்றெல்லாம் விளித்துப் பின்னூட்டம் இடவேண்டும். அதுவும் யாராவது ஒரு so called பிரபல பதிவர் பின்னூட்டம் போட்டால் ‘ஜென்ம சாபல்யம் அடைந்தேனே’ என்று பணியத் தெரிய வேண்டும் (பின்னூட்டம் படிக்கவும்). ஆகக்குறைந்தது ஒரு 300 வலைப்பதிவுகளையாவது தொடரவேண்டும். முடிந்தால் யாராவது பிரபல பதிவர்களைத் தாக்க முயலலாம். இப்படித் தாக்கும்போது அந்த வலைப் பதிவர்கள் பற்றி இன்னும் கொஞ்சம் தேடுதல் நலம். ‘சுனா தீனா’ என்ற பெயரைப் பெண்ணென்று நினைத்து ‘தோழி’ என்றெல்லாம் விளித்து ‘நானும் ரவுடிதான்’ என்று காட்டினால், வால்பையன் வந்து ‘முதல்ல அவரு தோழி சுகுணா கிடையாது!சுகுணா திவாகர் என்ற புனை பெயரில் எழுதும் பத்திரிக்கை நிருபர்!அவரு எழுதும் முன் ஆயிரம் முறை யோசித்திருப்பார்! என்று மூக்குடைப்பார். கவனமாக இருக்க வேண்டும்.

பின்னூட்ட மாயம்
வலைப் பதிவுகளைத் தொடரத் தொடங்கியதும், தொடர்கிற வலைப் பதிவர்களைப் புகழ்ந்து, குழைந்து பின்னூட்டம் இடவேண்டும். உதாரணமாக ஒரு சினிமா விமர்சனத்துக்கு ‘இன்னும் படம் பார்க்கவில்லை. அருமையான விமர்சனம்’ என்கிற Template பின்னூட்டம் மிக அவசியம். படத்தையே இன்னும் பார்க்கவில்லை, அதற்குள் எப்படி விமர்சனம் அருமையா இல்லையா என்று சொல்வது என்றெல்லாம் அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நீங்கள் பிரபலமாகமுடியாது. அதே போல் நீங்கள் தொடரும் பதிவர்களுக்கு வலையுலகத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, இல்லை வலையுலகத்தில் ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினை என்றாலோ வலியப் போய் கருத்துச் சொல்லவேண்டும். கருத்துகளில் காட்டமான வார்த்தைப் பிரயோகம் இருந்தால் மட்டுமே போதும். ‘பருத்தித்துறை வீதியில் கொடிகாமச் சந்தி கடந்ததும் கோப்பாய் வருகிறது’ போன்ற பிழைகளையெல்லாம் கவனிக்காமல் எதிராளியைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கவேண்டும். ’நான் தான் பர்ஸ்டா’ 'me the first' போன்ற அர்த்தம் மிகுந்த பின்னூட்டங்கள் தீராத் தேடலும், அதன் மூலம் கிடைக்கிற ஆழ்ந்த அறிவும் உங்களைத் தொடமுடியாத உயரத்துக்குக் கொண்டுபோகலாம்.


சினிமா விமர்சனம்
நிறைய சினிமா விமர்சனம் படித்து, அவரது பதிவில் கொஞ்சம், இவரது பதிவில் கொஞ்சம் என்று திருடி, படம் பார்க்காமலே ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதத் தெரியவேண்டும். முக்கியமாக 2004ல் வந்த ஒரு ஆங்கிலப் படத்தைச் சுட்டு 1996ல் தமிழில் படம் எடுத்தார்கள் என்று ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை வைத்தேயாகவேண்டும். ஆங்கிலப் படங்களின் பெயர்களை எங்கேயாவது தேடிப்பார்த்து விக்கிபீடியாவில் கதைச் சுருக்கம் வாசிக்கப் பழகிக்கொள்ளல் நலம். கேபிள் சங்கரின் வலைப் பதிவுகளை வாசித்து சினிமாவின் technical terms கொஞ்சம் உருவிக்கொள்ளலாம். தொடர்ந்து சினிமாப் பதிவுகளில் காரசாரமாக விமர்சித்து புகழ் பெறலாம்.


சுயத்தை இழத்தல்
உங்களுடைய அடையாளங்களைத் துறந்து எழுதப் பழகவேண்டும். உங்கள் வழக்கில் இல்லாத சொற்களை எழுதப் பழகவேண்டும். ('டவுன்', '‘ஆல் சிலோன் டூர்', 'வேன்', 'ஆர்மி', 'செம பசி''ரொம்பவே', 'பூரா ரொம்பவே செக்ஸியாக குஜிலிங்க சிரிச்சது (அட, ஃபோட்டோல தாங்க). பின்னர் யாராவது கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்தத் தெரியவேண்டும். வாசிக்கிற ஒரு சாராருக்கு ஒரு நடையிலும், இன்னொரு சாராருக்கு இன்னொரு நடையிலும் எழுதத் தெரிந்திருத்தல் உத்தமம். ’என்னுடைய வாசகர்களுக்குத் தானே நான் எழுதமுடியும்?’ ‘இப்போது அங்கே இப்படித்தான் பேசுகிறார்கள். உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றெல்லாம் கேள்விகேட்டு வாயை அடைக்கவேண்டும். அப்படிக் கேள்விகேட்டால் பின்பக்கம் புண்ணாகும். அதுபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. ’மாட்டாய்ங்க, வருவாய்ங்க, போவாய்ங்க, மக்கா போன்ற வட்டாரவழக்குச் சொற்கள் இருப்பது அவசியம். (ஆஷ்-அபி ஜோடி ச்சோ க்யூட்). உதாரணம் கேட்பீர்களேயாயின் இந்த வலைப் பதிவில் சனிக்கிழமை ஆவணி 8, 2009 க்கு முன்னான அனைத்துப் பதிவுகளையும் வாசித்துப் பார்க்கலாம். (ஆள் நல்ல யாவாரி)

மொக்கை
மொக்கை என்ற பெயரில் ஏதாவது புலம்பத் தெரிய வேண்டும். அருமையான உதாரணம்.... ஹி ஹி.. இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது. (அதையும் சொல்லித்தான் தெரியோணுமே? என்ன சனமடா இது)


நானும் றவுடி
வலையுலகச் சண்டைகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தல் மிக மிக அவசியம். பார்ப்பான், நர்சிம், மூர்த்தி, போலி, முல்லை, சுந்தர் மூக்கு, பர்தா, ரோசாவசந்த் போன்ற சில வரலாறுகளை இந்தப் பதிவை வாசிக்கிற புதிய பதிவர்கள் வாசிப்பது நலம். அப்படியென்றால்தான் இன்னொரு சண்டையில் கருத்துக் குருத்துச் சொல்லலாம். கமல்ஹாசன், மணிரத்னம் படங்கள் வருகிற காலங்களில் மிகவும் விழிப்பாக இருந்தால் உங்களை றவுடியாக நிலைநிறுத்திக்கொள்ளலாம். எந்த வலைச் சண்டைபற்றியும் துணிந்து பதிவிடுங்கள், திட்டு வாங்கியோ பாராட்டு வாங்கியோ பிரபலமாகலாம்.


Template இடுகைகள் மற்றும் விருதுகள்
‘பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அ ஆ இ ஈ உ ஊ இடுகையில் இருக்கிற ‘ம்’ என்ற எழுத்து என்னை எழுதத் தூண்டியது’ என்றோ, அல்லது ‘அன்பு அண்ணன் வந்தியத்தேவனின் அழைப்பை ஏற்று’ என்றோ ஆரம்பிக்கிற இடுகைகளை எழுதத் தெரியவேண்டும். (சுதனையும், வந்தியைம் போட்ட சண்டைக்கு வரமாட்டினம் எண்ட நம்பிக்கை) ஏனென்றால், அதற்கு ஒரு வலுவான காரணமிருக்கிறது. ஓமோம், வலுவான காரணமிருக்கிறது. (நன்றி: மெ.மு.). கண்ட கண்ட பேரில் விருதுகளை உருவாக்கி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விருது கொடுத்துக்கொள்ள வேண்டும். விருது பெறும்போதெல்லாம் ‘கத்துக்குட்டிக்கெல்லாம் விருது தந்த இன்னாருக்கு நன்றி’, ‘என்னைக் கௌரவப் படுத்திய அன்னாருக்கு நன்றி’ என்றெல்லாம் அவைக்கடங்க வேண்டும். விருதுகள் அத்தனையும் உங்கள் வலைப்பூவின் sidebar ஐ அலங்கரிக்கவேண்டும். (சுள்ளான் கொடுத்தது, கொக்கா C கொடுத்தது, அவர் தந்தது, இவரிட்ட வாங்கினது). இத்தனைக்கும் ஒரு விருதை நிறுவ Google images Microsoft paint இரண்டுமே போதுமானது.


முதுகு சொறிதல், திரட்டிகள், ஓட்டு & கள்ள ஓட்டு, Hits Counter
ஒரு குழுமம் சேர்ப்பது நீங்கள் பிரபலமாக மிக அவசியம். அந்தக் குழுமம் மட்டுமே உங்களுக்கு ஓட்டுப் போட்டு திரட்டிகளில் முன்னுக்குக் கொண்டுவர அயராது உழைக்கும். முக்கியமாக தமிழ் மணத்தில் பல கள்ளப் பெயர்களில் கள்ள ஓட்டு போடத் தெரிந்திருந்தல் நீங்கள் எழுதுகிற எல்லா இடுகையும் ‘வாசகர் பரிந்துரையில்’ இடம்பெறும். அடுத்து ‘30,000 ஹிட்டுக்களை அள்ளிக்கொடுத்த், 300,000 ஹிட்டுக்களைக் கொட்டிக்கொடுத்த’ போன்ற வசனங்கள் எழுதத் தெரியவேண்டும். அப்படியென்றால்தான் வாசிக்கிறவன் எல்லாம் ‘இவன் பெரிய ஆள்’ என்று நம்புவான். ‘முலைக்கு வேலை’ என்று தேடி வந்தவனை ‘மூளைக்கு வேலை’ பக்கத்துக்கு கூகிளாண்டவர் அனுப்ப, அவன் தேடிய முலை இது இல்லை என்று அவன் 10-15 seconds மட்டுமே உலாவிவிட்டுப் போய்விடுவான். இதெல்லாம் hits counterல் one more visit தான். இந்த மாயைகளெல்லாம் யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆகவே இந்த hits பற்றிப் பீற்றிக்கொண்டாலும் உங்களைப் பிரபல பதிவராகக் காட்டிக்கொள்ளலாம்.


இப்பிடியே எழுதிக்கொண்டிருந்தால் பதிவு முடிஞ்சமாதிரித்தான். அதாலை நீங்களும் பிரபலமாவதற்குரிய குறுக்கு வழிகளை, வழிகளை உங்கள் தேடல் மூலம் கண்டறியுமாறு கேட்டுக்கொண்டு (உ-ம்: யாரும் அழைக்காமலே தொடர்பதிவு எழுதுதல்).....


வலைப்பதிவு மூலம் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்ததுண்டா?
யாரைப் பார்த்து என்ன கேள்வி. இவ்வளவு நேரமும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன். நிறைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். அவை யாரைக் காயப்படுத்தியதோ இல்லையோ என் குடும்பத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன. (மே.ப. வசனம் இந்தப் பதிவின் mood இலிருந்து மொத்தமும் விலகியது. நான் எழுதிய ஒரு பதிவுக்கு ‘கொப்பன் (கெட்டவார்த்தை) குமாரசாமி கள்ள உறுதி எழுதிற மாதிரி நீ மெய்யெண்டு புலம்புறாய் என்ற தன் பெயர் வெளியே சொல்லாக் கோழைகளின் பின்னூட்டம் காயப்படுத்தியது. என் கருத்தும் பெற்றவன் கருத்தும் ஒன்றில்லையே). Back to original mood.... முக்கால்வாசிப்பேர் நாங்கள் சொந்தக் கதைதான் எழுதுவோம். கூடப் படித்த நண்பனை சாதி காட்டிக் கொன்று போட்டுவிட்டு, சாதியை உடைக்க வசனம் பேசுவோம். Treadmill, Snooker, Cricket, Football, ARR Music, Slum dog Millionaire, Clooney, Star Movies, Star Sports, Coke, Pepsi குடிக்கிற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, ‘யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை’ என்போம். எங்கள் வீட்டுப் பெண்களை நாங்களே அடக்கிவிட்டு, ‘ஆணாதிக்க எதிர்ப்புப் பதிவு’ எழுதுவோம். ‘பெண்களை அடிமைப் படுத்தியதில் ஆண்களுக்குப் பெரும் பங்கு உண்டு’ என்பதை ஒரு ஆண் ஒப்புக்கொண்டு தன்னைச் சுய விமர்சனம் செய்ய முயன்றால் ‘பெண் விடுதலையில் ஆணுக்கென்ன அக்கறை. இது பெண்களை இன்னும் கோழையாக்கும் முயற்சி’ என்று கண்டிப்போம். மொத்தத்தில் ஒருத்தன் திருந்தினாலும் பிழை, திருந்தாவிட்டாலும் பிழை என்று உளறிக்கொட்டிக்கொண்டே...................... இருப்போம். இதெல்லாம் சொந்த அனுபவங்களைப் பகிர்தலும், பகிர்தலால் வருகிற வினைகளும்.


பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுகிறீர்களா? சம்பாதிப்பதற்கா?
சம்பாதிக்கத்தான். பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கத்தான். எப்படியாவது ஒரு நாளைக்கு பெரிய ‘இலக்கியவாதி’ ஆகி பணம் சம்பாதிக்கத்தான். (வேலை வெட்டி இல்லாமல் பொழுது போகாமல் திண்டது தினவெடுக்கத்தானே இருந்ததாலதானே வலையுலகுக்கே வந்தேன், அது தெரியாமல் கேள்வியைப் பார்)


மொத்தம் எத்தனை வலைப்பதிவுக்கு நீங்கள் சொந்தக்காரர்?
இரண்டுக்கு மேல் வைத்திருக்க வசதியில்லை. ஒரே ஒரு blogger id தான் இருக்கிறது. கண்டபடி திட்டிப் பின்னூட்டம் போட பல id களை எப்படி வேறு வேறு IP முகவரிகளைப் பயன்படுத்தி உருவாக்குவது என்றே தெரியவில்லை. ஒரு வலைப் பதிவில் நான் எழுதுவதையே சில சமயம் படிக்க முடிவதில்லை. இதுக்குள்ள எத்தனை வலைப்பதிவு என்று கேள்வி வேற....


மற்றப் பதிவர்கள்மீது கோபம் அல்லது பொறாமை உண்டா? ஆம் என்றால், யாரந்தப் பதிவர்?
யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. ஒவ்வொருவரையும் போல் எழுதவேண்டும் என்ற ஒரு ஆர்வம் மட்டும் இருக்கிறது.............. நோ நோ.. யார்மீதும் எனக்குப் பொறாமை இல்லை. என்மீதுதான் எல்லாரும் பொறாமை கொண்டே அலைகிறார்கள். என்னுடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடந்துகொண்டே இருக்கிறது. யாரும் என் பதிவுகளுக்கு ஓட்டுப் போடுவதில்லை, யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் ஒழுக்கமில்லை, யாருக்கும் அறிவேயில்லை. அதனால் எல்லாப் பதிவரிலும் கடும் கோபம்.


உங்களை முதலில் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? என்ன பாராட்டினார்?
என்னைப் பாராட்டாத ஆளே கிடையாது. என்னுடைய பல கட்டுரைகளைப் படித்துவிட்டு எர்னெஸ்டோ சே குவேரா பல தடவை தொடர்புகொண்டு பாராட்டியிருக்கிறார். தாஸ்தயேவ்ஸ்கிக்கும், மிஷெல் பூக்கோவுக்கும், நீட்ஷேயுக்கும் என்னுடைய எழுத்துக்கள் என்றால் உயிர். யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, பெரியார் போன்றோர் என்னை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இதைவிட என்ன வேண்டும் எனக்கு? (இந்தப் பெயர்களைத் தேடித்தந்த கூகிளாண்டவருக்கு நன்றி. என்னையெல்லாம் யார் பாராட்டினான்? அந்தளவுக்கு நான் கூட்டம் சேர்க்கவில்லை. சேர்த்த கொஞ்சப் பேரும் சும்மா ஒப்புக்குச் சப்பாணியாப் பாராட்டுறாங்களே ஒழிய ஒரு மசுத்துக்கும் பிரயோசனமில்லை. என்னால் தண்ணியும் வாங்கிக் கொடுக்கமுடியாது. பிறகு?) (நான் பாராட்டினேனே என்று இரமணி சொல்வது கேட்கிறது).


பதிவுலகத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
என்னத்தைச் சொல்ல. எல்லாரும் நல்லா இருங்கோ என்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கோ.. நல்லா முதுகு சொறியுங்கோ.. ஏலுமானளவுக்கு எதிர்க்கருத்து மட்டுமே சொல்லுங்கோ..... அவ்வளவுதான்.

Monday 12 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்

ஏதிலிகள் அமைப்பின் சுடரில் இருள் நிகழ்வு பல நல்ல அனுபவங்களையும் நண்பர்களையும் தரவல்லது. சென்ற சனி கூட நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். மெக்சிக்கோ தேசத்து ஏதிலி ஒருவர், பன்னாட்டு நிறுவனங்கள், மெக்சிக்கோ அரசின் ஆதரவுடன் தங்கள் பூர்வீக நிலங்களைச் சூறையாடுவது பற்றிச் சொன்னார். கனடாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளைத் துரத்தி நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மண்டபம் ஒன்றில் இன்னொரு பூர்வீகக் குடி மக்களின் நிலைபற்றி உச்சுக்கொட்டுகிறோம் என்கிற முரண்நகையை இளங்கோவிடம் சொன்னேன். ‘அதுவும் ஸ்காபுறோ உண்மையிலேயே பூர்வீகக்குடிகள் நிரம்ப வாழ்ந்த இடம்’ என்றார் இளங்கோ. அவரின் தகவலை எங்கே உறுதிப்படுத்தலாம் என்றெல்லாம் நான் தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை. சந்தேகப்படுபவர்கள் அவரிடமே கேட்டுக்கொள்ளலாம். அந்த மெக்சிக்கோ தேசத்து நண்பர் சொன்ன மாநிலத்தின் பெயர் சரியாகப் புரியவில்லை. Oaxaca வாகத்தான் இருக்கவேண்டும். Chiapas தமக்குப் பக்கத்து மாநிலம் என்று சொன்னதாக ஞாபகம், கோணேஸ் Chiapas பற்றிக்கேட்டபோது. அங்கே நடக்கிற பிரச்சினை என்ன என மேலும் அறிய கூகிளாண்டவரைக் கேட்டேன். ஓரளவு நெருங்கியதாக Mexico's Gaza என்ற இணைப்பை மட்டுமே தந்தார். கூகிளாண்டவரின் கொடுமையைப் பற்றி ட்விட்டரில் (கீச்சு என்றா அழைப்பர் இதை. இரமணிதான் சொல்லவேண்டும்) புலம்புகையில் அருண்மொழிவர்மன் “அம்படாது கீத் அனுமதிக்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளே கூகிளில் கூட இடம்பெறும்” என்றார். அதுவும் சரிதான். வழமைபோலவே தன் வாசிப்புகள் பற்றிய கட்டுரை ஒன்றுக்கான இணைப்பும் தந்தார். அவரது கட்டுரையின் மூலவிடயங்கள் மூன்றில் ஒன்றான மூன்றாம் பாலினர் பற்றிய பகுதியில் சு. சமுத்திரம் எழுதிய “வாடா மல்லி” பற்றிச் சொல்லியிருந்தார். அந்த நாவல் ஆ.வி. யில் (இல்லை குமுதத்திலா?) தொடராக வந்த போது ‘ஒளித்திருந்து” வாசித்த ஞாபகம் இருக்கிறது, இப்போது சுதந்திரமான மறுவாசிப்புச் செய்யவேண்டும் என்றேன். கனடாவில் “வாடா மல்லி” எங்கே கிடைக்கும் தெரியவில்லை. அகிலனைத் தொல்லைப்படுத்தி இந்தியாவிலிருந்துதான் வாங்க வேண்டுமோ? ரொரன்ரோ பொது நூலகத்தில் சமுத்திரத்தின் ஒன்பது புத்தகங்கள் இருக்கின்றன. அவரின் முக்கியமான படைப்பான வாடாமல்லி இல்லை. என்ன செய்வது, பொது நூலகத்துக்கு நாங்கள்தானே புத்தகம் தேர்வு செய்கிறோம். என் உறவு ஒருவரும் புத்தகம் போடுகிறார். அடுத்த கோடைகாலத்திலிருந்து அநேகமாக வாடாமல்லி பொது நூலகத்தில் கிடைக்கலாம்.
*---*----*----*

இந்த தேசத்திலே புலம் பெயர்ந்த தமிழர்கள் கோடை காலங்களில் நடத்தும் ‘கிராம ஒன்றுகூடல்கள்’ பற்றிய விமர்சனம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. இவற்றை ஒழுங்கு செய்வது அந்தந்த ‘ஊர்ச்சங்கங்கள்’. நான் அவற்றைச் சாதிச்சங்கங்கள் என்றே பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஊரிலும் யார் ஆதிக்கசாதியாக இருந்தார்களோ அவர்கள்தான் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது கண்கூடு. நேரடியாக இல்லாவிட்டாலும் ‘அவரவர் உணவு அவரவர்க்கு’ போன்ற சில விசமத்தனங்கள் மூலம் சாதிப் பெருமை கொடிகட்டிப் பறக்கிறது என்பதுதான் உண்மை. சில நாட்கள் முன்பு இந்தியா சென்றுவந்த ‘காலம்’ செல்வம் அருளானந்தத்திடம் சில நண்பர்கள் கனடாவில் சாதி கொடிகட்டிப் பறக்கிறதாம் என்று கேட்டார்களாம். உண்மை நிலவரம் என்ன என்று ஏதிலிகள் கூட்டத்தில் செல்வம் கேள்வி எழுப்பினார். ‘கொடிகட்டிப் பறக்கிறது’ என்று ஒருவரைத்தவிர மற்றபேர் ஒப்புக்கொண்டோம். அந்த ஒருவர் மட்டும் ‘காங்கேசன்துறை ஊர்ச்சங்கத்தில்’ சாதி இல்லை. அதுதான் நான் பார்த்த சங்கம். அதனால் மற்ற இடங்களிலும் சாதி இல்லை என்று வாதிட்டார். தென்னாபிரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறிய இந்தியக் குடிகளிடம் சாதி இல்லை என்று வாதிட்டார். நல்லவேளை கயானாவையும் உதாரணமாகக் காட்டி, “மொட்டைத்தலையும், முழங்காலும் ஒன்றே” என்று பிரகடனம் மட்டும் செய்யாமல் போனார். நண்பர் ஒருவர் எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர் ஒன்றுகூடல் ஒன்றுக்கு இன்னொரு நண்பரின் அழைப்பின் பேரில் போயிருந்தபோது ஏதோ ஒரு போட்டியில் இரண்டாவதாக வந்த ஆதிக்க சாதிப் பிள்ளைக்குத் தகப்பன் அடித்தாராம் ‘வேற்றுச் சாதிப் பிள்ளை முதலாவதாய் வர நீ இரண்டாவதாய் வந்தாய்’ என்று. நாங்கள் யார், “ஆதியிலும் புலையனல்ல, சாதியிலும் புலையனல்ல.. சவுதியில புலையனானேன்’ என்று கூத்துக்கட்டிய இனமல்லவா? மறப்போமா கோவணத்துப் பெருமைகளை?
*----*----*----*

IIFA விழாப் புறக்கணிப்பு பற்றிய இணையச் சண்டை ஒன்றில் நானும் வாயைக் கொடுத்து சூத்தைப் புண்ணாக்கிக்கொண்டேன். இன்னமும் மனதில் பட்டதைத் தெளிவாகச் சொல்கிற வித்தை வரவில்லை என்னிடம். தலைகீழாய் நின்று யோசித்தும் IIFA விழாவின் வெற்றியால் இலங்கைத் தமிழன், அட தமிழன் என்ன தமிழன், ஒரு சாதாரண இலங்கைப் பிரசைக்கு பொருளாதார ரீதியாக என்ன நன்மை கிடைத்திருக்கும்? இல்லை அந்த விழா தோற்ற காரணத்தால் மேற்படி இலங்கைப் பிரசைகளுக்கு பொருளாதார ரீதியாக என்ன இழப்பு? மண்ணாங்கட்டி.... 30 வருசமாக சண்டையிலை கிழியாத சட்டையா IIFA க் காற்றில் கிழியப்போகுது? அதே பிரச்சினையில் நான் எழுப்பிய இன்னொரு கேள்வி, அசினுக்குத் தடை பிசினுக்குத் தடை என்றெல்லாம் போராட்டம் நடத்துகிற சீமான் போன்றவர்கள், இலங்கை மற்றும் இலங்கை சம்பந்தப் பட்ட இடங்களிலிருந்து தமிழ்த்திரைக்கு வருகிற பெருந்தொகைப் பணத்தைப் புறக்கணிக்கத் தயாரா? ‘தம்பி’ சூர்யாவுக்காக கொள்கை தளர்த்தியவராயிற்றே நம்மவர்?

சீமானை முழுமையாகத் திட்டக்கூட விட மாட்டேன் என்கிறார் இந்தக் கருணாநிதி. வழமை போலவே சீமான் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ சொல்ல ‘வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுகிறான்’ என்று உள்ளே போட்டுவிட்டார்கள். “தமிழக மீனவர்கள் கேட்பாரின்றி கொல்லப்படும் சூழ்நிலை உருவானால் தமிழகத்தில் ஒரு சிங்களவர் கூட நடமாட முடியாது” என்பதுதான் சீமான் சொன்ன கருத்து. சீமானின் இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலை முட்டாள்தனமானது என்றாலும், இதுவே வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் என்றால், சத்தியராஜ் பேசிய பேச்சுக்கு (ஒகேனக்கால் பிரச்சினை) அவரைத் தூக்கிலல்லவா போட்டிருக்கவேண்டும். என்ன சத்தியராஜ் பாராட்டு விழாக்களில் கருணாநிதிக்கு நன்றாகப் பின்பக்கம் கழுவிவிடுவார். சீமான் அதைச் செய்வதில்லை.
*----*----*----*

சந்தேகம் ஒன்று

நிலவு பெத்த மகளும், நிலவின் அத்தை மகனும் காதல் செய்தல் Incest இல்லையா?
*----*----*----*