Sunday 21 March 2010

மேய்கிற மனம்

ரைகர் வூட்சின் போதாத காலம். நவம்பரில் வெடித்த புயலை ஒருவாறு அடக்கி மீண்டும் வருகையில் அவர் அனுப்பிய குறுந்தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது ‘வைப்பாட்டிகளில் ஒருவர்' என்று ஆங்கில ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் ஜோசலின் ஜேம்ஸ். 'உன்னுடன் இப்படிக் கூடவேண்டும், அப்படிப் புணரவேண்டும்' என்று கொஞ்சம் ஆக்ரோஷமான உடலுறவை வேண்டி நிற்கின்றன பெரும்பாலான குறுந்தகவல்கள். ‘உனக்குத் தெரிந்த, நம்பிக்கைக்குப் பாத்திரமான யாராவது பெண் இருந்தால் சொல். Threesome செய்ய ஆசையாயிருக்கிறது என்று வேண்டுகோள் வேறு. டைகர் வூட்ஸ் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியகாலகட்டத்தில் இருந்து இந்த விசித்திர உறவுகள் பற்றி சில கேள்விகள் மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தன.

வூட்சைப் போலவே பல பெண்கள் வாசம் பிடிக்கிறவர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அதாகப்பட்டது, திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் இன, மத, நிற, கலாச்சார அடையாளங்களைக் கடந்து எல்லா இடத்திலும் விஞ்சிவிரவிக் கிடக்கின்றன. இருந்தும் பலபேர் நல்லவ(ன்/ள்)களாக பொதுவெளியில் தெரிவதை ‘தப்புக்கள் கண்டுபிடிக்கப்படும்வரை எல்லோரும் நல்லோரே' என்று சுஜாதா அடிக்கடி மேற்கோள்காட்டுகிற கோட்பாட்டுக்குள் அடக்கிவிடலாம். அப்படிப் பிடிபடுகிற சாதாரணர்கள் விவாகரத்து, கொலை என்று எதன் மூலமாவது பிரச்சினையை ‘முடிக்கிறார்கள்'. இதுவே ஒரு வூட்சோ, கிளின்ரனோ, நயன்தாராவோ, ரஞ்சிதாவோ மாட்டுப்பட்டால் உலகம் முழுக்க அலறுவார்கள். வூட்ஸ் பிரச்சினை முதன் முதலாக வெடித்தபோது ‘அடப் பாவமே... எவ்வளவு அடித்தாலும் தாங்கக்கூடிய இன்னொருத்தன் மாட்டினான்' என்றொரு பரிதாபகரமான எண்ணம் தோன்றியது உண்மையே. பின்னர் பெண்கள் வரிசைகட்டி வர ஆரம்பித்ததும் பரிதாபம் வெறுப்பாக மாறியது. வூட்சின் மனைவி எலீன் தவிர மற்ற எல்லாப் பெண்கள் மீதும் அதேயளவுக்கு வெறுப்பு இருந்தது என்பதையும் இங்கே சொல்லியாகவேண்டியிருக்கிறது. வூட்ஸ் தனது மனைவிக்குச் செய்கிற துரோகத்துக்கு உடந்தையாயிருந்தவர்கள் தங்களுக்கும் வூட்ஸ் இதே துரோகத்தைச் செய்யலாம் என்று சிந்திக்கத் தவறியது விந்தை. அந்தளவுக்கு வஞ்சகம் நிறைந்தவராக வூட்ஸ் இருந்திருக்கிறார் என்பதையும் இங்கே கவனித்தாகவேண்டியிருக்கிறது.

வேறு சில கலாசாரங்களோடு ஒப்பிடுகிறபோது மேலைத்தேயக் கலாசாரங்களில் பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் இருப்பதாகப் பேசிக்கொண்டாலும் உண்மை அதுவாகவில்லை. கிட்டத்தட்ட 99 சதவீத ஆண்கள் (நான் உட்பட) பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிறோம் என்பது உண்மை. எத்தனையோ ஆங்கிலேய நண்பர்கள், என்னுடைய வேலையிட வாடிக்கையாளர்கள் பெண்களைப் போகப்பொருள் என்கிற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கண்டிருக்கிறேன். இதனால் ஆண்-பெண் உறவு பற்றிய கண்ணோட்டத்தில் எங்கள் கலாசாரத்தைவிட அவர்கள் கலாசாரம் ஒன்றும் உயர்ந்ததல்ல. எங்களிடம் இருக்கும் பெண்கள் சார்ந்து அமைந்த கெட்ட வார்த்தைகளைப் போலவே அவர்களிடமும் பெண்கள் சார்ந்தே கெட்டவார்த்தைகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். மெலிஞ்சிமுத்தன் சொல்லுவார், ‘ஒரு ஆண் எந்தப் பெண்ணை முதலில் பார்த்தாலும் அவள் அவனுடன் உடலுறவு கொள்வதற்குத் தோதானவளா என்பதையே முதலில் நோக்குகிறான். அதன் அடிப்படையில்தான் அவளுடனான அடுத்தகட்ட உறவு (சகோதரி, தோழி, ஆசை நாயகி, கனவில் கூடுபவள்; அடைப்புக்குறி என்னுடையது) தீர்மானிக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள இருவருக்கும் அரவாணி நிலை வாய்க்கப்பெறுவது நன்று' என்று (மெலிஞ்சி சொன்ன வார்த்தைகளின் வடிவம் வேறு). வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக்கொள்ளமுடியாத கருத்தாயினும், அவர் சொல்கிற தீர்வு எனக்குப் பிடித்திருக்கிறது.

எதையோ பேசவந்து எங்கெல்லாமோ போகிறோம் போலிருக்கிறது. சரி, வூட்ஸ், கிளின்ரன், கமலஹாசன், நித்தியானந்தன், ரஞ்சிதா, மொனிக்கா லூவின்ஸ்கி இவர்கள் மீதான சமூகத்தின் விமர்சனம்/கோபம் எந்த அடிப்படையில் உருவாகிறது என்கிற ஒரு கேள்வியும் இருக்கிறது. என்னுடைய சிற்றறிவுக்கு இரண்டு காரணங்கள் வந்து விழுகின்றன. ஒன்று, அளவில்லாத ஏமாற்றம். இரண்டு அளவு கடந்த வெளியே சொல்ல முடியாத பொறாமை.

அளவில்லாத ஏமாற்றம்
வூட்ஸ் என்கிற மனிதனைப் பலருக்கு மிகவும் பிடித்திருந்தது. பணக்காரர்கள் விளையாட்டில் அவன் பணக்காரன். அழகான மனைவி குழந்தைகள் பெரிய வீடு என்று வாழ்க்கை. எங்கு திரும்பினாலும் புகழ். அவன் பலருக்கு முன்மாதிரி. பல கனவான்கள்கூட அவனைப் போல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். பலர் வெளியில் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒருவன் ஒரு 'காம வெறியன்' என்பதாக அறிந்ததும் வந்த ஏமாற்றம்தான் வூட்ஸ் மீதான கோபத்துக்கு முதல் காரணம். எனக்கு சச்சினை மிகப்பிடிக்கும். சச்சின் குடும்பதோடு வாழ்கிற முறை பிடிக்கும். அடக்கம் பிடிக்கும், அது பிடிக்கும், இது பிடிக்கும் இன்னும் எத்தனையோ பிடிக்கும். சச்சின் இப்படி திருமணத்துக்கு வெளியே ஒரு பெண்ணுடன் உறவுகொண்டார் என்று செய்தி வந்தாலே நிச்சயம் உடைந்துபோவேன். அப்படியாக உடைந்துபோன வூட்சின் விசிறிகளின் ஏமாற்றம் அவர்மீதான கோபமாக மாறியது. அதனால் போகிறவன் வருபவனெல்லாம் விமர்சித்தான் அல்லது திட்டித்தீர்த்தான், தன்னுடைய தவறுகள் பிடிபடும்வரை தானும் நிரபராதி, பிடிபட்டாலும் இப்படி யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற அசட்டுத்துணிவில் மனச்சாட்சியைக் கழற்றித் தூரவைத்துவிட்டு. இது நித்தியானந்தன் பக்தர்களுக்கும் பொருந்தும்

அளவுகடந்த பொறாமை
நேற்றைக்கு அவுஸ்திரேலியா-நியூசிலாந்து போட்டியின் ஸ்கோர் விபரங்களைப் பார்க்கும்போதுதான் கவனித்தான், விக்கட் காப்பாளர் ஹாடினின் முதலெழுத்துகள் BJ. உடனே எனக்கு என்ன ஞாபகம் வந்தது தெரியுமா? வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன். ரஞ்சிதாவின் முகம்தான். ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திடிச்சு' என்று ஆடிய, பல இளசுகளின் கால்சட்டை அல்லது சாறம் நனைத்த அந்தப் பெண்ணின் BJ தான் ஞாபகம் வந்தது. அதாவது எனக்குள் இருந்த ஆணின் பொறாமை முகம் விழித்துக்கொண்டது. இதுதான் கிட்டத்தட்ட வூட்ஸ், நித்தியானந்தன், கிளின்ரன் என்று எல்லோரையும் விமர்சிக்கும் இன்னொரு பகுதியின் மனநிலையாக இருக்கமுடியும்.

ஆக, உலகமெங்கும் திருமணத்துக்குப் புறம்பான உறவுகளும், முறைதவறிய உறவுகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பெண்கள் போகப்பொருளாகப் பார்க்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். கணபதிக்குச் சேவை செய்கிற ரத்தினங்களும். இந்திரன் பொடிகொடுத்த தங்காள்களும் சத்தமில்லாமல் இதையே செய்துகொண்டிருப்பார்கள். வதனிகளை வீரமணிகள் கெஞ்சிக் கூத்தாடித் திருமணம் செய்து கொடுப்பார்கள். பிரபலங்கள் இப்படி மாட்டுப்படுவதற்குப் பயந்தாவது நிறுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன அப்படி நிறுத்திக்கொண்டால் கணபதியைப் பற்றி தங்காளைப் பற்றிப் பக்கம் பக்கமாக செய்தி போடமுடியாது. மணிக்கணக்கில் வீடியோ காட்டமுடியாது. இப்படி பதிவு போட முடியாது...ம்ஹூம்.

*----*----*----*
ஒரு கவிஞர்/எழுத்தாளர். கனடாவில் வசிப்பவர். தமிழ்நாட்டு தலித் அரசியல்வாதி ஒருவரின் பெயர்கொண்டவர். எனக்குத் தெரிந்த ஒருவருடன் ‘கவிஞர்' ஒருவரை தரங்குறைத்துப் பேசியிருக்கிறார். அவருடைய கவிதையில் இப்படியான பிழைகள் இருக்கின்றன, இன்ன காரணத்தால் அவரது கவிதைகள் இன்றைய சமூகத்துக்கு ஒத்துப்போகாது, அவருடைய தமிழ் அறிவை இன்ன இன்ன துறைகளுக்கும் பரப்பிக்கொள்ளவேண்டும் என்று விமர்சிப்பது வேறு, அவரெல்லாம் வெறும் தமிழ்ப் பண்டிதர்தான். அவருக்கும் கவிதைக்கும் வெகுதூரம் என்று மட்டம்தட்டுவது வேறு. மட்டம் தட்டியவரைப் பற்றி ‘கவிஞரிடம்' கேட்டால் எடுத்ததுக்கெல்லாம் தன்புகழ் பாடும் அவரும் இவரை மட்டம்தட்டுவார் என்பது திண்ணம். வேறுபாதையில் பயணிப்பதால் மட்டும் இன்னொரு படைப்பாளியை மட்டம்தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ.
*----*----*----*

2 comments:

அருண்மொழிவர்மன் said...

பிரபலங்கள் பற்றிய இது போன்ற செய்திகளை கண்டுபிடிப்பது, வெளியிடுவது, தொடர்ந்து துப்பு துலக்குவது என்பதன் மூலம் ஊடகங்கள் தமக்கும் பிரபலம் தேடிக்கொள்கின்றன. டைகர் வூட்ஸ், நம்ம் நித்தி போனாவர்களின் விவகாரங்களால் ஊடகங்களின் சந்தாதாரரும், லாபமும் திடுப்பென்று மேலே சென்றே இருக்கும்.

அதற்காக நான் இவர்கள் செய்வதை சரி என்று சொல்லவில்லை, ஆனால் அதை ஊடகங்கள் வெளியிடுவதன் காரணம் அவற்றிற்கு இருக்கின்ற சமூக அக்கறை என்று நினைத்து விடக்கூடாது.

கீத், நல்ல பதிவு, தெளிவாக, நிறாஇய ஆழமாக எழுதி இருக்கின்றீர்கள். உங்களின் நான் காணும் உலகத்தை சில வாரங்களாகக் காணாவில்லை, ஏனென்று கேட்கவேண்உம் என்று இருந்தேன்.

தொடர்ந்து எழுதுங்கள்

Unknown said...

அருண்மொழிவர்மரே..

நான் பார்க்கும் உலகம் எனக்கே போரடித்துவிட்டது. அதனால் நிறுத்தியாயிற்று