Thursday 26 November 2009

மாவீரர் வாரம்- பாபா- விபரீத ஆசை

மாவீரர் நாள்
மாவீரர் வாரம் என்றுமில்லாதவாறு இந்த வருடம் விமரிசையாகக் 'கொண்டாடப்படுகிறது'. கனடாவில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்ட விழா ஒன்று ‘கொண்டாடப்பட்டது'. இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. தமிழ் மக்களை ‘மச்சான்' என்று அழைத்த தமிழ் உணர்வாளர் நமீதா இன்னொரு மாவீரர் நாளில் கலந்துகொண்டு சிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேலையிடத்திலும் பொது இடங்களில் நேரடியாகவும், சிலர் தொலைபேசி வழியாகவும் கேட்ட கேள்வி ‘தம்பி இந்த முறை மாவீரர் நாளுக்கு சீமான் வாறாராம். நீங்கள் போகேல்லையோ?' என்பதாக இருந்தது எரிச்சலூட்டியது.

சீமானின் தமிழுணர்வை நான் மறுக்கவோ, குறுக்கவோ இல்லை. எங்களுக்காக செத்தவர்கள், எங்களை விட எத்தனையோ மடங்கு நெஞ்சுரமும், தியாகக் குணமும் கொண்டவர்களுக்காக அனுட்டிக்கப்படும் நினைவுநாட்களில் கலந்து கொள்ளப் பின்நிற்கக்கூடாதுதான். ஆனால், ‘மாவீரர்களை நினைவுகூரும் பொருட்டு சேர்வோம்' என்கிற ஒரு எண்ண ஓட்டத்தைவிட, ‘சீமான் வாறாராம்' என்கிற வேடிக்கை உணர்வே இங்கே விஞ்சி நிற்கிறது. அதாவது, விழா ஏற்பாட்டாளர்கள் ‘சீமான்' என்கிற எலும்புத்துண்டை வீசினால் இந்த ‘விலங்குகள்' ஓடி வரும் என்று நினைத்திருக்கிறார்கள், அல்லது அப்படி நினைக்கும்படி நாங்கள் நடந்துகொண்டிருக்கிறோம். இப்படியே போனால் ஒரு நாள் நான் மேலே சொன்னபடி ‘தனத் தலைவி'... சீச்சீ... ‘தானைத் தலைவி நமீதா கலந்து சிறப்பிக்கும் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் என்பதாக ஒரு விளம்பரம் வரும் நாள் தூரத்தில் இல்லை.

இதே வேளை இயக்குனர் சீமானை கனேடிய சட்டத்துக்குப் புறம்பாக உரையாற்றியமைக்காக கனேடியப் போலீசார் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.

பாபா
சென்ற வார இறுதி முழுதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. 'பாபாவுக்குப் பிறந்த நாள் கொண்டாடினமாம், போகேல்லையோ?' என்று பலபேர் கேட்டார்கள். வருடாவருடம் கேட்டுக்கேட்டு அலுத்த கேள்விதான் என்றாலும் சலிக்காமல் ‘எனக்கு உதிலையெல்லாம் நம்பிக்கை இல்லை' என்பதைப் பதிலாகச் சொல்லிவருகிறேன். அம்மா பகவான் கல்யாண சீசனில் பாபா கிடப்பில் போடப்படுவார். பாபா பிறந்த நாள் சீசனில் அம்மா பகவானை மறந்துவிடுவார்கள். எப்படிப்பட்ட சனங்கள் இவர்கள்?

இங்கே சத்யசாய் பாடசாலை என்கிற பெயரில் ஆறாம் வகுப்புவரை ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மற்றைய பொதுப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது கல்வி, ஒழுக்கம் என்று எல்லாவற்றிலும் தரமான பாடசாலை. பெற்றோரின் நன்கொடையில் நடப்பது. ஆறாம் வகுப்புவரை மருமகனும் அங்கே தான் படித்தான். கிரீன்வூட் என்று ஒரு அருமையான ஆசிரியர் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் வகுப்புக்களை ஆரம்பிக்க நிதி இல்லாமல் திணறுகிறார்கள். தனியான கட்டடம் இல்லாமல் வர்த்தகக் கட்டடம் ஒன்றில் பள்ளிக்கூடம் நடக்கிறது. சாய் பாபா தியான மண்டபம் கட்ட நிலம் வாங்கிப்போட்டு ஒரு குழு சாய் பாபாவைக் குளிர்ச்சிப்படுத்துகிறது. இன்னொரு குழு பள்ளிக்கூட அபிவிருத்திக்கு நிதி இல்லாமல் தவிக்கிறது. இரண்டு குழுக்களும் கூடிப்பேசி அந்தப் பாடசாலையை அபிவிருத்தி செய்யலாம். அதைவிடுத்து ஒரே நெறியைப் பின்பற்றுகிறோம் என்கிற பேரில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் எரிச்சலாக இருக்கிறது.

இதைவிடக் கொடுமை, அந்தப் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி சாயைப் போய்ப் பார்த்து வருபவர்கள் (மருமகனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை). சாய்க்கு கடிதம் எல்லாம் விழுந்து விழுந்து எழுதுவார்கள். சாய் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கென்னவோ சாய்க்கு இப்படியான பிஞ்சுகளைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருக்குமா தெரியவில்லை. அவரும் என்னதான் செய்யமுடியும்? அவருக்குத்தான் எத்தனை வேலைகள். சாய்க்கு ஆலயம் கட்டுவதைவிட கல்விச் சாலைகள் கட்டுவது எவ்வளவோ மேல் என்று இந்த முட்டாள்ச் சனங்கள் என்றைக்குப் புரிந்துகொள்ளுமோ தெரியவில்லை.

விபரீத ஆசை
எனக்கு சமீபத்தில் வந்திருக்கும் விபரீத ஆசை இது. வேட்டைக்காரன் படத்தில் ஒரேயொரு பாடலைக் கடன்வாங்கியாவது நான் தயாரிக்க வேண்டும். எந்தப் பாடலைத் தெரியுமா? ‘புலி உறுமுது' பாட்டைத்தான். அதிலும் முக்கியாமாக ஒரு வரியை மிகவும் தத்ரூபமாக, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, படம்பிடிக்க வேண்டும். வரி இதுதான்
‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன்
அமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'.
ஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். அடப் போங்கடா.....


5 comments:

அப்பாவி தமிழன் said...

//////ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க இந்த வரியைப் படமாக்கிப்பாக்கவேண்டும். /////

எனக்கும் இதே ஆசை தான் ------- ஏற்கனவே அதை (ஆசிடுங்கோ ) விஜய் முகத்தில அடிகிறதுக்கு ஒரு கூட்டமே தயார் ஆயிட்டு இருக்கு

Mohan said...

Keith,

Good Post. The Sai group, which bought land, Do they know the monetary problem of the School(maintained by other group)?
Just curious.

Mohan

தர்ஷன் said...

சீமான் தமிழ் உணர்வாளர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்.தன எதிர்கால நோக்கங்களுக்காக

//‘அடங்க மறுத்தவனை அழிச்சுடுவான், இவன்
அமிலத்தை மொண்டு தினம் குளிச்சிடுவான்'.
ஆஹா... என்ன அருமையான வரிகள். மொண்டு குளிக்கிற அளவுக்கெல்லாம் வைக்க மாட்டேன். ஒரு பெரிய நீச்சல் குளம் முழுக்க அமிலம் நிரப்பிவிடுகிறேன். ஹீரோ, பாட்டெழுதின கவிஞர், பாட்டை ஓ.கே. சொன்ன இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் இன்னபிற வகையறாக்கள் ஒரே ஒரு முறை ஆசைதீர அதில் நீச்சலடிக்க//

ஏன் இந்தக் கொலைவெறி

Unknown said...

please dont avoid whoever supporting the tamil peoples. because of this habit only all the tamil peoples suffering throughout the world.

if u dont support also no problem dont bame others.


Thanks
vengat

Anonymous said...

அடப் போங்கடா.....